நம் கண்ணை ராஜ்ய வேலையில் ‘தெளிவாக’ வைத்தல்
ஜெர்மானிய மக்களாட்சிக் குடியரசு (G.D.R. [ஜெ.ம.கு.]), அல்லது கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டிருந்தது, அதன் நடுத்தர வயதை அப்போதுதான் சென்றெட்டியது. நாற்பத்தொரு வருடங்கள் நிலைத்திருந்தது, அக்டோபர் 3, 1990 அன்று, சுமார் லைபீரியாவின் அல்லது ஐக்கிய மாகாணங்களிலுள்ள டென்னெஸீயின் அளவாக இருக்கும் அதன் எல்லைப்பரப்பு மேற்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்ட ஜெர்மானிய கூட்டாட்சிக் குடியரசுடன் இணைக்கப்பட்டபோது முடிவு பெற்றது.
இரு ஜெர்மனிகளின் மறு இணைப்பு பேரளவான சீர்திருத்தங்களை அர்த்தப்படுத்தியிருக்கிறது. இரு நாடுகளையும் பிரித்தது, வெறும் ஒரு சொல்லர்த்தமான எல்லை அல்ல, ஆனால் கருத்துக்களின் ஒரு முரண்பாடாகும். இவை யாவும் அங்கிருந்த மக்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது, மேலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு வாழ்க்கை எவ்வாறு மாறியிருக்கிறது?
மறு இணைப்பை சாத்தியமாக்கிய வென்டி என்ற நவம்பர் 1989-ன் புரட்சி, நான்கு பத்தாண்டுகளின் கடுமையான பொதுவுடைமை ஆட்சியைத் தொடர்ந்து உடனடியாக வந்தது. அந்தக் காலப்பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டன, மேலும் அவர்கள் மீதிருந்த துன்புறுத்தல் சில நேரங்களில் கடுமையாக இருந்தது.a ஜெ.ம.கு.-வுக்கு சுதந்திரம் வந்தபோது, மக்கள் மத்தியில் எங்கும் சுபிட்ச மனநிலை பெருகியது. ஆனால் அந்தக் குதூகலம் குறைந்தபோது, அநேகர் குழப்பமடைந்தவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாக, மயக்கந்தெளிந்தவர்களாகக்கூட ஆனார்கள். இரு ஜெர்மனிகளை ஒரு சமூக, அரசியல், மற்றும் பொருளாதார அமைப்பாக இணைக்கும் வேலை தடுக்கமுடியாததாக நிரூபிக்கிறது.
டேர் ஷ்பீகெலில் “162 டாகி டாய்ட்ஷி கெஷிக்டி” (ஜெர்மானிய சரித்திரத்தில் 162 நாட்கள்) என்ற விசேஷித்த அறிக்கையின்படி, மறு இணைப்பைப் பின்தொடர்ந்து, வேலையின்மை, பணவீக்கம், அதிகரிக்கும் வாடகைகள் பற்றி மிகப் பரவலான பயம் இருந்தது. “எனக்கு போதுமான ஓய்வு ஊதியம் கிடைக்குமா?” என்று முன்னாள் ஜெ.ம.கு.-விலுள்ள அநேகர் கேட்டனர். வீட்டுவசதியைக் குறித்து என்ன? “ஜெ.ம.கு. எங்கும், முழு தெருக்களும் குடியிருக்கப்பட முடியாதபடி பழைய கட்டடங்கள் சிதைவுறுகின்றன.” தூய்மைக்கேடு பயங்கரமான அளவுகளைச் சென்றெட்டியது.
இப்படிப்பட்ட சமூக மற்றும் பொருளாதார குழப்பத்தை எதிர்ப்பட்டுக்கொண்டு, முன்னாள் ஜெ.ம.கு.-வில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் எப்படிச் சமாளித்தனர்?
கண்ணைச் சரியாக ஒருமுகப்படுத்தி வைத்தல்
யெகோவாவின் சாட்சிகளுக்கு எந்தக் கருத்துப்பூர்வ முரண்பாடுகளும் கிடையாது. கிழக்கில் இருந்தாலும் மேற்கில் இருந்தாலும், அவர்களுடைய பைபிள் அடிப்படையிலான விசுவாசம் ஒரே வகையானது. அவர்கள் மாறிக்கொண்டிருக்கும் சமூக சூழலை கொண்டிருப்பினும், பெரும்பாலான சாட்சிகள், யெகோவாவைச் சேவிக்கும் முக்கிய இலக்கில் தங்கள் கண்களை ஒருமுகப்படுத்தி வைப்பதன்மூலம் ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்கின்றனர். இது ஏன் தவிர்க்க முடியாததாக இருக்கிறது?
ஏனென்றால் “இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31) ஒரு கிறிஸ்தவ மூப்பர் குறிப்பிடுகிறார், வென்டிக்கு முன் தடையுத்தரவின்கீழ் பிரசங்கிப்பது தைரியத்தைத் தேவைப்படுத்தியது; அது சாட்சிகளுக்கு யெகோவாவில் சார்ந்திருப்பதற்குக் கற்றுக்கொடுத்து, பைபிளைக் கையாளுவதில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது. இருப்பினும், இப்போது, “பொருளாசையாலும் வாழ்க்கையின் கவலைகளாலும் திசைதிருப்பப்படாதபடி நாங்கள் அதிக கவனமாய் இருக்கவேண்டும்.”
சுதந்திரமும் முன்னேற்றமும் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அளவிடப்படுகின்றன. இந்தப் பகுதியிலுள்ள அநேகர் இழந்துவிட்ட நேரத்திற்காக அல்லது ஒருவேளை இழந்துவிட்ட இன்பங்களுக்காக ஈடுசெய்ய வேண்டிய தேவை இருப்பதாக உணருகின்றனர். தெற்கில் துரின்ஜியா மற்றும் சாக்ஸனியின் நகரங்கள், கிராமங்களின் கூழாங்கல் சாலைகள் வழியாக ஓட்டிச்செல்கையில் இது தெளிவாகிறது. சாலைகள் பழுதுபார்க்கப்பட வேண்டியவையாயும், குடியிருப்புகள் எளியவையாயும் இருக்கக்கூடும்; ஆனால் அங்கு செயற்கைகோள் தொலைகாட்சி ஒளிப்பரப்பைப் பெற எத்தனை ஏராள டிஷ் ஆன்டெனாக்கள்! கண் காணக்கூடிய யாவற்றையும் கொண்டிருப்பதால் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் விளைவடையும் என்று நம்பும்படி ஓர் ஆள் ஏமாற்றப்படுவது எளிது. அது எவ்வளவு ஆபத்தான ஒரு கண்ணியாக இருக்கிறது!
மலைப்பிரசங்கத்தில், பொருள் சம்பந்தமான காரியங்களுக்கும் வாழ்வின் கவலைகளுக்கும் தேவைக்கதிகமான கவனத்தைச் செலுத்துவதன் ஆபத்துக்களைப்பற்றி இயேசு பேசினார். “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்,” என்று அவர் எச்சரித்தார். அவர் மேலுமாகச் சொன்னார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” (மத்தேயு 6:19, 22) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? ஒரு தெளிவான கண் என்பது, ஒருமுகப்படுத்தப்பட்டு, தெளிவான காட்சிகளை மனதிற்கு கடத்தும் ஒன்றாக இருக்கிறது. தெளிவாக இருக்கும் ஓர் ஆவிக்குரிய கண் கடவுளுடைய ராஜ்யத்தின் காட்சியைத் தெளிவாக வைக்கிறது. ஆகவே கடவுளுடைய ராஜ்யத்தில் ஒருமுகப்படுத்தி, கவலைகளைப் பின்னணிக்கு தள்ளிவிட்டு, தன்னுடைய கண்ணைத் தெளிவாக வைப்பதற்கான ஒரு கிறிஸ்தவரின் தீர்மானம் அவரை ஆவிக்குரிய சமநிலையில் வைக்க உதவுகிறது.
வென்டியின் சமயத்தில் பைபிளில் அக்கறை காண்பித்த சாக்ஸனியின் ஸ்விக்காய்யுவிலுள்ள ஒரு தம்பதியின் அனுபவத்தால் இது விளக்கப்படலாம். அவர்களுடைய வியாபாரம் அதிக நேரம்பிடிப்பதாக இருந்தது; இருந்தாலும் அவர்கள் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஆஜராகி, ஆவிக்குரிய அக்கறைகளை முதலிடத்தில் வைத்தனர். “எங்களுடைய வியாபாரத்தின் நோக்கிலிருந்து பார்த்தால், அந்த நேரத்தை எங்களால் செலவிட முடியாது, ஆனால் ஆவிக்குரியவிதத்தில் அது எங்களுக்குத் தேவைப்படுகிறது,” என்று அவர்கள் ஒத்துக்கொண்டனர். எவ்வளவு ஞானமான தீர்மானம்!
சாக்ஸனியிலேயே ப்ளாயெனிலுள்ள ஒரு குடும்பத்தையும் கவனியுங்கள். கணவன் கடிகாரம் செய்பவர்; தன் சொந்த வியாபாரத்தைக் கொண்டிருந்து, தொழிலில் கைதேர்ந்தவராகவும் இருந்தார். வென்டிக்குப்பின் அவருடைய இடத்திற்குரிய வாடகை மிகவும் அதிகரித்தது. அவர் என்ன செய்யவேண்டும்? “எனக்கு அதிக பணம் செலவாகும், ஆனால் நான் சத்தியத்திற்காகவே வாழவேண்டும் என்று சத்தியத்தைக் கற்றேன்.” ஆகவே அவர் அவ்வளவு வசதியான இடத்தில் இல்லாத, ஆனால் குறைந்த வாடகையை உடைய ஓர் இடத்திற்கு மாறிச்சென்றார். ஆம், அந்தக் கடிகாரம் செய்பவர் வெகு சீக்கிரத்தில் தன் கண்ணைத் தெளிவாக வைப்பதைப்பற்றிக் கற்றுக்கொண்டார்.
எனினும் சிலர், மிகவும் தாமதமாகவே கற்றுக்கொண்டனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரம்புகளற்ற சந்தை பொருளாதாரம், அதிக வாய்ப்பு வள நம்பிக்கையூட்டுவதாக எண்ணி, ஒரு கிறிஸ்தவ மூப்பர் வியாபாரத்தில் இறங்கினார். வியாபார பொறுப்புகள் ஆவிக்குரிய தன்மையை நெருக்கிவிட அனுமதித்துவிடக் கூடாதென ஒரு பயணக் கண்காணி அவருக்குத் தயவாக எடுத்துரைத்தார். எனினும் கவலைக்குரிய விதத்தில், அதுவே சம்பவித்தது. சில மாதங்களுக்குப்பின் அந்தச் சகோதரர் ஒரு மூப்பராய் இருப்பதிலிருந்து விலகினார். அவர் பின்னர் எழுதினார்: “என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து, நான் சொல்வதென்னவென்றால், ஊழிய சிலாக்கியங்களுக்குத் தகுதிபெற நாடும் எந்தச் சகோதரனும் சொந்த வியாபாரம் செய்வதில் நுழையக் கூடாது.” ஒரு கிறிஸ்தவன் சுய வேலைவாய்ப்பைக் கொண்டிருப்பது தவறு என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் நாம் நம்முடைய சொந்த வியாபாரத்தைக் கொண்டிருக்கிறோமோ இல்லையோ, பொருளாதார கவலைகளுக்கு நாம் அதிக கவனத்தைச் செலுத்துவது நம்மையறியாமலேயே நம்மைச் செல்வத்திற்கு அடிமைகளாக்குகிறது. இயேசு அதன் விளைவைக் காண்பித்தார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்.” (மத்தேயு 6:24) ஜெர்மானிய கவிஞரான கெதே குறிப்பிட்டார்: “தாங்கள் விடுதலையாய் இருப்பதாகப் பொய்யாக நம்பிக் கொண்டிருப்பவர்களைவிட வேறு எவரும் அதிக நம்பிக்கையற்றவிதத்தில் அடிமைப்பட்டவர்களாய் இல்லை.”
ஒரு சொல்லர்த்தமான புயலில் சிக்குண்டிருத்தல், நம்முடைய இலக்கைச் சரியாகப் பார்ப்பதற்கு, சாய்வாக ஓரக்கண்ணால் பார்ப்பதை அல்லது நம் கண்களைச் சுற்றி கைகளை வைத்து உற்றுநோக்குவதைத் தேவைப்படுத்தக்கூடும். அரசியல், பொருளாதார, அல்லது சமூக குழப்பத்தால் சூழப்பட்டிருக்கையில், நம் ஆவிக்குரிய இலக்கைக் காட்சியில் வைப்பதற்குக் கருத்தூன்றிய கவனம் தேவை. தங்கள் கண்ணை ராஜ்ய வேலையில் தெளிவாக வைப்பதற்கு சில கிறிஸ்தவர்கள் என்ன செய்கின்றனர்?
அதிகரிக்கப்பட்ட ராஜ்ய நடவடிக்கை
முன்னாள் ஜெ.ம.கு. எங்கும், சாட்சிகள் முன்னொருபோதும் இராதவிதத்தில், அதிக நேரத்தைப் பிரசங்கத்திற்காக ஒதுக்குகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில், வெளி ஊழியத்தில் செலவிடப்பட்ட சராசரி நேரம் 21 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவு, வீட்டு பைபிள் படிப்புகளில் 34 சதவீத திடீர் திருப்ப அதிகரிப்பாகும். மேலுமாக, ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை, வெறும் இரு ஆண்டுகளுக்குமுன் இருந்ததைவிட தற்போது நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது! மற்றவர்கள் கவலைப்பட்டும் குறைகூறிக்கொண்டும் இருக்கையில், இதுவரை ஜெ.ம.கு.-வாக இருந்ததில் 23,000-ற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், தங்கள் கண்ணைத் தெளிவாக வைத்துக்கொண்டு அந்த நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருக்கின்றனர். இது ராஜ்ய நடவடிக்கையின் அதிசயிக்கச்செய்யும் அதிகரிப்பிற்கு உதவியளித்திருக்கிறது.—ஒப்பிடவும் யோசுவா 6:15.
விரிவாக்கப்பட்ட நடவடிக்கை என்பது, அந்தப் பிராந்தியம் பெரும்பாலான சாட்சிகள் வசிக்கும் தெற்கில் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறதை அர்த்தப்படுத்துகிறது. அநேக இடப்பெயர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. நீங்கள் மென்மையான பீங்கான் பாத்திர பிரியராய் இருந்தால், டரெஸ்டன்னுக்கு அருகிலுள்ள மைஸன் என்ற நகரை, உலகின் மிக மென்மையான பீங்கான் சிலவற்றின் துவக்கமூலமாக அடையாளம் கண்டுகொள்வீர்கள். மைஸன் இப்போது சுமார் 130 ராஜ்ய பிரஸ்தாபிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அல்லது “ஜெர்மனியின் இலக்கிய தலைநகர்” வைமாரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நகர மையத்திலுள்ள கெதே-ஷில்லர் நினைவுச்சின்னம், அந்த இரு எழுத்தாளர்களுடன் வைமாருக்குள்ள மதிப்புவாய்ந்த தொடர்புகளுக்குச் சான்றளிக்கிறது; அங்குள்ள அநேகருக்கு அது ஒரு பெருமைக்குரிய காரணமாக இருக்கிறது. இன்று வைமார், அதன் 150-க்கு மேற்பட்ட நற்செய்தியின் பிரஸ்தாபிகளைக்குறித்துப் பெருமைப்படலாம்.
எனினும், வடக்கில், குறைந்தளவு பிரஸ்தாபிகளுடனும் சபைகளுக்கிடையில் அதிக தூரங்களுடனும் காரியங்கள் மிக வித்தியாசமாய் இருக்கின்றன. குறிப்பாக வேலைகளின் தட்டுப்பாடு உள்ளது. வேலைகளைக் கொண்டிருக்கும் அநேகரும் தங்கள் வேலைகளைக் காத்துக்கொள்வதற்காக மிகைநேரங்களைச் செய்வதற்கான அழுத்தத்தில் உள்ளனர். வடக்கில் ஒரு முழுநேர பிரசங்கியாகச் சேவிக்கும் ஒரு சகோதரர் விவரிக்கிறார்: “தடையுத்தரவின்கீழ் ஒவ்வொரு சகோதரருக்கும் வெளி ஊழியத்தில் யெகோவாவின் பாதுகாப்புத் தேவைப்பட்டது; ஆனால் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கவில்லை. இப்போது அது நேர்மாறாக இருக்கிறது. எங்களுக்குப் பிரசங்கிப்பதற்குச் சுதந்திரம் இருக்கிறது, ஆனால் வேலையைக் குறித்ததில் அவருடைய வழிநடத்துதல் தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு மாற்றம் அதற்குப் பழகிக்கொள்வதை உட்படுத்துகிறது.”
இன்னும் அடிக்கடி பிரசங்கிக்க முடிவது பிரஸ்தாபிகளுக்கு விரும்பத்தக்கதாய் இருக்கிறதா? வல்ஃப்கேங்கின் கருத்து இவ்வாறு இருக்கிறது: “அதே பிராந்தியத்தில் அதே பிரஸ்தாபி திரும்பவும் திரும்பவுமாக ஊழியம் செய்வது மிகவும் நல்லது. மக்கள் அவரை நம்பத் துவங்குகின்றனர்; மேலும் அவரிடம் அதிக பேச்சுத்தொடர்பு கொள்பவர்களாகவும் ஆகின்றனர்.” அது மட்டுமல்லாமல், வீட்டுக்காரர்கள் “வழிப்போக்கர்கள் கேட்கும் தூரத்திற்குள் இருந்தாலும்கூட, கதவண்டையில் மதத்தைப்பற்றிப் பேசுவதற்கு இனிமேலும் சங்கடப்படுவதில்லை. மதம் ஒரு விலக்கப்பட்ட பொருளாக இனிமேலும் இல்லை.” ரால்ஃபும் மார்டீனாவும் ஒப்புக்கொள்கின்றனர். “எங்களுடைய பிராந்தியத்தில் அடிக்கடி வேலைசெய்வதை நாங்கள் அனுபவித்துக் களிக்கிறோம். மக்களைத் தனிப்பட்டவர்களாக அறிய முடிகிறது; மேலும் கிடைக்கக்கூடிய பல்வகைப்பட்ட பிரசுரங்களைப்பற்றியும் கிளர்ச்சி அடைகிறோம்.”
நம்முடைய பிரசுரங்களுக்கான போற்றுதல்
ரால்ஃபும் மார்டீனாவும் குறிப்பாக உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? (Life—How Did It Get Here? By Evolution or by Creation?) என்ற புத்தகத்திற்குப் போற்றுதல் காண்பித்தனர். முன்னாள் ஜெ.ம.கு.-வில் நாத்திகத்தைப் பின்பற்றிய அநேகருக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த பைபிள் படிப்பு உதவியாக நிரூபிக்கிறது. அதேவிதமான பொருளை உடைய ஒரு சிறிய பிரசுரத்தையும் அவர்கள் விரும்பினர். “டரெஸ்டனில் 1992 ‘ஒளி கொண்டுச்செல்வோர்’ மாநாட்டில் கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேடு வெளியிடப்பட்டபோது நாங்கள் எவ்வளவு கிளர்ச்சி அடைந்தோம். அது எங்களுடைய ஜெபங்களுக்கு ஒரு பதிலாக இருந்தது.”
சாட்சிகளல்லாத அநேகர் உவாட்ச் டவர் பிரசுரங்களை வியந்து பாராட்ட துவங்கியிருக்கின்றனர். ஜூலை 1992-ல், ஒரு சமூக கல்வியின் விரிவுரையாளர், தன்னுடைய விரிவுரைகளைத் தயாரிக்க அவள் பயன்படுத்தும் பிரசுரங்களுக்காகத் தன் “உயர்ந்த மரியாதையையும் மிகவும் மனமார்ந்த நன்றி”யையும் தெரிவித்து எழுதினாள். ஜனவரி 1992-ல் ராஸ்டாக்கிலுள்ள ஒரு பெண் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை தன் கதவண்டை வந்த இரு சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அவள் ஜெர்மனியின் கிளை அலுவலகத்திற்கு எழுதினாள்: “நான் லூத்தரன் சர்ச்சைச் சேர்ந்தவள். யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு நான் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். கடவுளுடைய வழிநடத்துதலின்றி மனிதன் இனிமேலும் நிலைத்திருக்க முடியாது என்று அவர்கள் உறுதியாகக் குறிப்பிடுகின்றனர்.”
கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் அவற்றின் அங்கத்தினருக்கு எவ்வளவு ஆவிக்குரிய வழிநடத்துதலைக் கொடுத்திருக்கின்றன? பிரபல செய்தித்தாள் டீ ட்ஸைட், டிசம்பர் 1991-ல், லூத்தரன் சர்ச் ‘சிறிது காலத்திற்குச் சமாதான புரட்சியின் தாயாக மகிமையின் ஒளியில் திளைத்திருந்தபோதிலும், அதன் பிரபலம் மிக விரைவாகக் குறைந்துகொண்டு வருவதாகத் தோன்றுகிறது,’ என்று குறிப்புத் தெரிவித்தது. உண்மையில், லூத்தரன் சர்ச்சின் ஒரு பிரதிநிதி, “மக்கள், வரம்புகளற்ற சந்தை அமைப்பில் வாழும் வாழ்க்கையை பரதீஸுடன் குழப்பினர்” என்று வருந்தினார். மாக்டிபர்க்கிலுள்ள ஒரு சர்ச் அங்கத்தினர் தகவல் கேட்டு எழுதினார். ஏன்? “பல வருடங்கள் அவநம்பிக்கையின் புன்சிரிப்புக்குப்பின், இந்த உலகம் அதன் கடைசி நாட்களில் இருக்கிறது என்றும் வெகு அருகாமையில் பெரிய தொந்தரவுகளை நாம் எதிர்ப்படுவோம் என்றும் இப்போது உறுதியாக நம்பவைக்கப்பட்டுள்ளேன்,” என்று அந்தப் பெரியவர் எழுதினார்.—2 தீமோத்தேயு 3:1-5.
விஸ்தரிப்பிற்காகக் கட்டுதல்
வென்டிக்கு முன்னர், ஜெ.ம.கு.-வில் ராஜ்ய மன்றங்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது அவை அவசரமாகத் தேவைப்படுகின்றன; அவற்றைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது உண்மை வணக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவித்திருக்கும் மற்றொரு அம்சமாகும். இந்த மாற்றம் எவ்வளவு விரைவில் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒரு சகோதரரின் அனுபவம் சித்தரிக்கிறது.
மார்ச் 1990-ல், ஜெ.ம.கு.-வில் யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று சில மணிநேரங்களுக்குள், தன் வாழ்க்கையில் முதல்முறையாக ஓர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி சாட்சிகளின் ஒரு தொகுதியுடன் பேசும்படி ஒரு சகோதரர் அழைக்கப்பட்டார். இரண்டரை வருடங்களுக்குப்பின், அவர் கூட்டுறவு கொள்ளும் சபை ஒரு புத்தம்புதிய ராஜ்ய மன்றத்தைப் பிரதிஷ்டை செய்தது. 1992-ன் கடைசியில், 16 சபைகளால் ஏழு ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்னும் 30-க்கும் மேற்பட்டவையும், ஒரு கவர்ச்சிகரமான அசெம்பிளி மன்றமும், திட்டமிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
கடவுளுடைய ராஜ்யத்தின்மேல் கண்ணைப் பதிய வைத்தல்
“அநேக மக்கள் வென்டிக்கு சில காலத்திற்குப்பின் பைபிளை நிராகரித்தனர். கடைசியாக மேம்பட்ட நிலைமைகளைக்குறித்து வாக்களித்த ஒரு புதிய அரசாங்கத்தின்மீது அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்தனர்,” என்று ஒரு கிறிஸ்தவ மூப்பர் குறிப்பிட்டார். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேற்றப்பட்டதா? “இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் தங்கள் மனதை மாற்றினர். மனித அரசாங்கங்கள் ஒருபோதும் சமாதானத்தையும் நீதியையும் கொண்டுவர முடியாது என்று மக்கள் இப்போது எங்களுடன் ஒத்துக்கொள்கின்றனர்.”
ஜெ.ம.கு.-வில் கடுமையான பொதுவுடைமை ஆட்சியின் மறைவால் திரளானோர் சந்தோஷப்பட்டனர்; மேற்கத்திய கருத்துப்போக்கின் பொற்கால விடியல் என்று அவர்கள் கருதியதை அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். எந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கண்ணைத் தெளிவாக வைத்து, வானத்தில் ஒரு நட்சத்திரத்தைப் போல பிரகாசிக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின்மேல் உறுதியாகப் பதியவைக்கின்றனர். அப்படிப்பட்ட நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது.—ரோமர் 5:5.
[அடிக்குறிப்புகள்]
a “தடையுத்தரவின்கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார்,” பகுதிகள் 1-3, கட்டுரைகளை காவற்கோபுரம் ஜூலை 15, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 15, 1992 வெளியீடுகளில் பார்க்கவும்.
[பக்கம் 26-ன் படங்கள்]
ஜெர்மனியிலுள்ள சாட்சிகள் அதிகமதிகமானோரை ராஜ்ய நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்