பின்பற்றுவதற்கான மனத்தாழ்மையின் முன்மாதிரிகள்
“உம்முடைய மனத்தாழ்மைதாமே என்னைப் பெரியவனாக்கும்.”—சங்கீதம் 18:35, NW.
1. உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முன்னாள் தலைவரிடம் மனத்தாழ்மைக்கான என்ன அத்தாட்சி காணப்படக்கூடும்?
ஜோசஃப் F. ரதர்ஃபர்டு கம்பீரமான தோற்றம் உடையவராயிருந்தார். உயரத்தில் ஆறு அடிக்கு மேற்பட்டிருந்தார், எடையில் 90 கிலோகிராமுக்கும் மேற்பட்டிருந்தார். மேலும் அவருக்குக் கனத்தக் குரல் இருந்தது. இக்குரலைக்கொண்டு முன்னொருபோதும் தெரியச்செய்திராத அளவுக்கு யெகோவாவின் பெயரைத் தெரியப்படுத்த பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்களின் நயவஞ்சகத்தையும் அம்பலமாக்கினார். அவர்களுடைய மதத்தை “கண்ணி மற்றும் ஊழல்” என அவர் குறிப்பிட்டார். அவர் ஆற்றிய பேச்சுக்கள் அத்தனை பலமாக இருந்தபோதிலும், தலைமையகத்திலுள்ள பெத்தேல் குடும்பத்தினரோடு ஜெபித்தபோது, தன்னுடைய அப்பாவிடம் உரையாடக்கூடிய ஒரு சிறுவனைப்போல அவர் ஜெபித்தார். இவ்வாறு, தன்னை உண்டாக்கியவரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்புக்கும் மனத்தாழ்மைக்கும் சான்றளித்தார். ஆம், ஒரு சின்னஞ்சிறு பிள்ளையைப்போல அவர் மனத்தாழ்மை உள்ளவராயிருந்தார்.—மத்தேயு 18:3, 4.
2. குறிப்பாக எந்த அம்சத்தில் யெகோவாவின் ஊழியர்கள் உலகிலுள்ள தனிநபர்களிலிருந்து வெகு வித்தியாசப்பட்டிருக்கின்றனர்?
2 சந்தேகமின்றி, யெகோவா தேவனுடைய எல்லா உண்மையுள்ள ஊழியர்களும் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்கின்றனர். இதன் தொடர்பாக அவர்கள் இவ்வுலக மக்களிலிருந்து வெகு வித்தியாசப்பட்டிருக்கின்றனர். இன்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அது பெருமையுள்ள ஆட்களால் நிறைந்திருக்கிறது. உயர் பதவியிலுள்ளவர்களும் பலம் பொருந்திய ஆட்களும், செல்வந்தர்களும் கல்விமான்களும், மேலும் பெரும்பான்மையான ஏழை மக்களும் வேறு வழிகளில் வசதியற்ற ஆட்களும் பெருமையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
3. பெருமையின் கனிகளைப் பற்றி என்ன கூறப்படலாம்?
3 பெருமை அநேக சச்சரவுகளையும் துயரங்களையும் உண்டுபண்ணுகிறது. உண்மையில், குறிப்பிட்ட ஒரு தேவதூதன் பெருமைகொண்டதன் காரணமாகத்தான் இப்பிரபஞ்சத்தில் சகல தொல்லைகளும் தொடங்கின. இவன், படைப்பாளர், யெகோவா தேவனுக்கே உரிய வழிமுறையில் தன்னை வணங்கவேண்டுமென விரும்பினான். (மத்தேயு 4:9, 10) மேலும், பிசாசாகவும் சாத்தானாகவும் தன்னைத்தானே மாற்றிக்கொண்ட அவனே, ஏவாள் என்ற முதல் மனுஷியினுடைய பெருமையை வசப்படுத்துவதன் மூலம் அவளை வஞ்சிப்பதில் வெற்றியடைந்தான். அவள் விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்டால், நன்மையும் தீமையும் அறிந்து கடவுளைப்போல ஆவாள் என்று அவன் உறுதியளித்தான். மனத்தாழ்மையாக இருந்திருந்தால், ‘நான் என்னத்துக்குக் கடவுளைப்போல ஆகவேண்டும்?’ என அவள் கூறியிருப்பாள். (ஆதியாகமம் 3:4, 5) சரீரரீதியிலும் மனரீதியிலும் ஒழுக்கரீதியிலும் மனிதவர்க்கம் இருக்கும் பரிதாபகரமான நிலையைச் சிந்தித்துப் பார்க்கையில், மனிதர்களில் உள்ள பெருமை எவ்வளவு மன்னிக்க முடியாததாயிருக்கிறது! யெகோவா “பெருமையையும், அகந்தையையும்” வெறுக்கிறாரென வாசிப்பது நமக்கு ஆச்சரியமூட்டுவதாயில்லை! (நீதிமொழிகள் 8:13) சகல பெருமையான ஆட்களுக்கும் முற்றிலும் வேறாக, மனத்தாழ்மைக்கான முன்மாதிரிகள் கடவுளுடைய வார்த்தையில், பைபிளில் உள்ளன.
யெகோவா தேவன் மனத்தாழ்மையுள்ளவர்
4. யெகோவா மனத்தாழ்மையுள்ளவரென என்ன வசனங்கள் காட்டுகின்றன?
4 உன்னதரும் சர்வலோக பேரரசரும் நித்திய அரசருமாயிருக்கிற யெகோவா தேவன் மனத்தாழ்மையாயிருக்கிறார். (ஆதியாகமம் 14:23) அவ்வாறிருப்பது கூடியகாரியமா? ஆம், நிச்சயமாகவே! சங்கீதம் 18:35-ல் பதிவாகியுள்ளபடி, “உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் [மனத்தாழ்மை, NW] என்னைப் பெரியவனாக்கும்” எனத் தாவீது அரசன் சொன்னார். தெளிவாகவே, தாவீது அரசன் யெகோவாவுக்கிருக்கிற மனத்தாழ்மை தன்னை, அதாவது, தாவீதைப் பெரியவனாக்கியதோடு புகழ்ந்து பேசினார். மேலும், சங்கீதம் 113:6-ல், யெகோவா “வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்,” என வாசிக்கிறோம். வேறு மொழிபெயர்ப்புகள், “பார்க்கும்படி தாழ குனிகிறார்” (நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்) எனவும், “அவ்வளவு தாழ்வில் பார்க்க பணிவுள்ளவராயிருக்கிறார்” எனவும் வாசிக்கின்றன.—தி நியூ இங்கிலிஷ் பைபிள்.
5. யெகோவாவின் மனத்தாழ்மைக்கு என்ன சம்பவங்கள் சான்றுபகருகின்றன?
5 ஆபிரகாமோடு செயல்பட்ட முறையில் யெகோவா தேவன் உண்மையிலேயே தம்மைத் தாழ்த்தினார்; இங்கு, துன்மார்க்க நகரங்களாயிருந்த சோதோம் கொமோராவை அழிக்க உத்தேசிப்பதில் அவருடைய நீதியைக்குறித்து ஆபிரகாம் கேள்வி கேட்கும்படி அவர் அனுமதித்தார்.a (ஆதியாகமம் 18:23-32) மேலும் இஸ்ரவேல் தேசத்தை—ஒருமுறை விக்கிரகாராதனைக்காகவும் இன்னொரு முறை கலகத்தனத்துக்காகவும்—சங்கரிக்க யெகோவா தம்முடைய எண்ணத்தைத் தெரியப்படுத்தியபோது, மோசே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு மனிதனோடு உரையாடுவதுபோல யெகோவாவோடு விவாதஞ்செய்தார். ஒவ்வொரு முறையும் யெகோவா சாதகமாகப் பிரதிபலித்தார். தம்முடைய மக்கள், இஸ்ரவேல் தொடர்பாக மோசே பரிந்து பேசியக் காரியங்களுக்குச் சம்மதம் தெரிவித்தது மனத்தாழ்மையை எடுத்துக்காட்டியது. (யாத்திராகமம் 32:9-14; எண்ணாகமம் 14:11-20) யெகோவா மனத்தாழ்மையுடன் மனிதர்களோடு நேருக்கு நேர் பேசுவது போன்று உள்ள மற்ற உதாரணங்கள், நியாயாதிபதிகள் 6:36-40-லும் யோனா 4:9-11-லும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, கிதியோனோடும் யோனாவோடும் கொண்ட தொடர்புகளில் காணப்படுகின்றன.
6. யெகோவாவின் எந்தத் தனிப்பண்பு அவருடைய மனத்தாழ்மையை இன்னும் கூடுதலாக வெளிப்படுத்துகிறது?
6 உண்மையில், யெகோவா “நீடிய சாந்தமுள்ளவர்” எனக் குறைந்தது ஒன்பது முறைகள் கூறப்பட்டுள்ளார்.b யெகோவா ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே அபூரண மனித படைப்புகளிடம் தொடர்புகொள்வதில் நீடிய பொறுமையுள்ளவராகவும் நீடிய சாந்தமுள்ளவராகவும் இருப்பது அவர் மனத்தாழ்மையுள்ளவராக இருக்கிறார் என்பதற்குக் கூடுதலான சான்றாக இருக்கிறது. பெருமையுள்ள ஆட்கள் பொறுமையிழந்தவர்களாயும் முன்கோபமுள்ளவர்களாயும், நீடிய பொறுமை என்னும் தன்மையை அறவே அற்றவர்களாயும் இருக்கின்றனர். யெகோவாவின் மனத்தாழ்மை அபூரண மனிதர்களின் பெருமையை எப்படி அபத்தமாகத் துலங்கச்செய்கிறது! ‘பிரியமான பிள்ளைகளாகத் தேவனைப் பின்பற்ற’ கூறியிருப்பதால், அவர் மனத்தாழ்மையாயிருப்பதுபோல நாமும் மனத்தாழ்மையாக இருக்கவேண்டும்.—எபேசியர் 5:1.
மனத்தாழ்மைக்கான கிறிஸ்துவின் முன்மாதிரி
7, 8. இயேசு கிறிஸ்துவின் மனத்தாழ்மையைக் குறித்து வசனங்கள் என்ன கூறுகின்றன?
7 நாம் பின்பற்றுவதற்கு மனத்தாழ்மைக்கான இரண்டாவது மிக எடுப்பான முன்மாதிரி 1 பேதுரு 2:21-ல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” அவர் மனிதராகப் பூமிக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பு, சகரியா 9:9-ல் அவரைக் குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது: “எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் . . . ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” இயேசு கிறிஸ்து பெருமையுள்ளவராக இருந்திருந்தால், ஒரு வணக்கச் செயலுக்கு மாற்றீடாக பிசாசின் அளிப்பாகிய உலகிலுள்ள சகல ராஜ்யங்களையும் அவர் நன்றாகவே ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும். (மத்தேயு 4:9, 10) மேலும் தம்முடைய போதனைக்கான எல்லா மகிமையையும் யெகோவாவுக்குக் கொடுப்பதன் மூலம் அவர் மனத்தாழ்மையை காட்டினார். “நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்,” என அவர் கூறினார்.—யோவான் 8:28.
8 சரியாகவே, தாம் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:29) மனிதனாக தம்முடைய அப்போஸ்தலர்களோடு இருந்த அந்தக் கடைசி சாயங்காலத்தின்போது, அவர்களுடைய கால்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மைக்கான என்னே ஒரு நேர்த்தியான முன்மாதிரியை அவர் வைத்தார்! (யோவான் 13:3-15) மிக பொருத்தமாகவே, பிலிப்பியர் 2:3-8-ல் பவுல் அப்போஸ்தலன் இயேசு கிறிஸ்துவை ஓர் உதாரணமாக மேற்கோள் காட்டி “மனத்தாழ்மை” உள்ளவர்களாயிருக்க கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” வாழ்க்கையில் பெரும் இக்கட்டை எதிர்ப்பட்டபோது, அவர் “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” எனத் தம்முடைய தகப்பனிடம் மனத்தாழ்மையோடு ஜெபித்தார். (மத்தேயு 26:39) நிச்சயமாகவே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்தொடரவேண்டுமெனில், நாம் மனத்தாழ்மையாக இருக்கவேண்டும்.
பவுல் அப்போஸ்தலன், மனத்தாழ்மைக்கு நேர்த்தியான முன்மாதிரி
9-12. என்னென்ன வழிகளில் பவுல் அப்போஸ்தலன் மனத்தாழ்மைக்கு நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்?
9 பவுல் அப்போஸ்தலன் எழுதினார்: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.” (1 கொரிந்தியர் 11:1) பவுல் அப்போஸ்தலன், மனத்தாழ்மையாக இருப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி இவ்வாறு நாம் பின்பற்றுவதற்கு மனத்தாழ்மைக்கான இன்னொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தாரா? அதிநிச்சயமாகவே. முதலாவதாக, தான் இயேசு கிறிஸ்துவின் அடிமையென அவர் மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டார். (பிலிப்பியர் 1:1, NW) அவர் ‘வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் தனக்கு நேரிட்ட சோதனைகளோடும், கர்த்தருக்குக் கஷ்டப்பட்டு அடிமைபோல வேலைசெய்வதை’ குறித்து எபேசு மூப்பர்களிடம் கூறினார். (அப்போஸ்தலர் 20:17-19) அவர் மனத்தாழ்மை இல்லாதவராக இருந்திருந்தால், ரோமர் 7:18, 19-ல் உள்ள இவ்வார்த்தைகளை அவர் ஒருக்காலும் எழுதியிருக்கமாட்டார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; . . . ஆதலால், நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.”
10 கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதியதுங்கூட, அவருடைய மனத்தாழ்மையை எடுத்துக்காட்டுகிறது. இது 1 கொரிந்தியர் 2:3-ல் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது: “நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.” கிறிஸ்தவராவதற்கு முன்பு தன்னுடைய கடந்த கால வாழ்க்கைப்போக்கை மனத்தாழ்மையோடு குறிப்பிடுபவராய், “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; . . . பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் . . . அவர்களில் பிரதான பாவி நான்” என அவர் எழுதினார்.—1 தீமோத்தேயு 1:13, 15.
11 தன்னுடைய மனத்தாழ்மையை மேலுமாக வெளிப்படுத்துபவராய், தன்னுடைய முயற்சிகளில் கிடைத்த சகல வெற்றிக்கும் யெகோவா தேவனுக்குப் புகழ்சேர்க்கிறார். தன்னுடைய ஊழியத்தைக் குறித்து அவர் எழுதினார்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.” (1 கொரிந்தியர் 3:6, 7) நற்சாட்சி பகரும்படி தன்னுடைய சகோதரர்களிடம் தன் சார்பாக ஜெபிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். ‘நான் சுவிசேஷத்தின் இரகசியத்தைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காக ஜெபம்பண்ணுங்கள்,’ என நாம் எபேசியர் 6:18-20-ல் வாசிக்கிறோம்.
12 மற்ற அப்போஸ்தலர்களோடு ஒத்துழைப்புக் கொடுத்த முறையிலுங்கூட பவுல் தன் மனத்தாழ்மையைக் காண்பித்தார்: “யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்”தனர். (கலாத்தியர் 2:9) அவர் நான்கு இளம் மனிதர்களோடு ஆலயத்திற்கு சென்று, நேர்ந்துகொண்ட பொருத்தனையை அவர்கள் நிறைவேற்றுவதற்கு உண்மையான செலவுகளைப் பார்ப்பதன் மூலமும் எருசலேம் சபையின் மூப்பர்களோடு ஒத்துழைக்கச் சித்தமாயிருப்பதை காட்டினார்.—அப்போஸ்தலர் 21:23-26.
13. பவுலின் மனத்தாழ்மையை எது தனிச்சிறப்புள்ளதாக்கியது?
13 யெகோவா தேவன் அவரை எந்தளவுக்கு உபயோகித்தார் என்பதைக் கவனிக்கும்போது பவுலின் மனத்தாழ்மை இன்னும் முனைப்பாக விளங்குகிறது. உதாரணமாக, “பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்” என நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 19:11, 12) அதைவிட மேலாக, அவருக்குத் தெய்வீக தரிசனங்களும் வெளிப்படுத்தல்களும் அருளப்பட்டது. (2 கொரிந்தியர் 12:1-7) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள 27 புத்தகங்களில் (உண்மையில் கடிதங்கள்) 14-ஐ எழுதும்படி அவர் ஏவப்பட்டார் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இவை யாவுமே, சொல்லப்போனால், அகங்காரத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மனத்தாழ்மையாகவே இருந்தார்.
நவீன-கால முன்மாதிரிகள்
14-16. (அ) உவாட்ச் டவர் சங்கத்தின் முதல் தலைவர் எப்படி மனத்தாழ்மைக்கான நேர்த்தியான முன்மாதிரியாயிருந்தார்? (ஆ) யாருடைய முன்மாதிரிக்கு நேர் மாறாக அவருடையது திகழ்கிறது?
14 எபிரெயர் 13:7-ல் பவுல் அப்போஸ்தலனின் புத்திமதியை நாம் வாசிக்கிறோம்: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” இந்நியமத்துக்கிணங்க, நவீன-கால முன்மாதிரியாக, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் முதல் தலைவர், சார்ல்ஸ் டேஸ் ரஸலைக் குறித்துச் சிந்திப்போம். இவருடைய விசுவாசத்தை நாம் பின்பற்றலாம். இவர் மனத்தாழ்மையுள்ள மனிதராக இருந்தாரா? நிச்சயமாகவே! அவர் எழுதிய வேதாகமத்தின் பேரில் ஆராய்வுகள் (Studies in the Scriptures) புத்தகத்திலுள்ள பொருளுரையில் நன்கு கவனிக்கப்பட்டிருக்கிறபடி, சுமார் 3,000 பக்கங்களடங்கிய ஆறு தொகுதிகளில், ஒரு முறையுங்கூட தன்னைக் குறித்து அவர் பேசியில்லை. இன்று, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் பிரசுரங்கள், கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்களுடைய பெயர்களைத் தெரியப்படுத்தி, மனிதர்களிடம் கவனத்தை ஈர்க்காமலிருப்பதில் இந்நியமத்தைப் பின்பற்றுகின்றன.
15 “ரஸலத்துவம்” மேலும் “ரஸலேயர்” போன்ற ஒரு காரியத்தைக் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது என ரஸல் உவாட்ச் டவரில் ஒருமுறை எழுதினார். இப்பதங்களை அவருடைய விரோதிகள் பயன்படுத்தினர், ஆனால் அவர் அப்பட்டமாக எதிர்த்தார். அவர் எழுதினார்: “எங்களுடைய வேலை . . . நீண்ட காலமாகச் சிதறிக்கிடக்கும் சத்தியக் கூறுகளை ஒன்றுதிரட்டி கர்த்தருடைய மக்களுக்கு அளிப்பதாகும்—புதியதாக அல்ல, எங்களுடைய சொந்தமானதாக அல்ல, ஆனால் கர்த்தருடையதாக. . . . எங்களுடைய தாழ்மையான திறமையைப் பயன்படுத்துவதற்கு கர்த்தர் பிரியப்பட்ட வேலை, மறுகட்டுவித்தலான, சீர்திருத்தலான, ஒருங்கிணைத்தலான வேலையைத் தவிர ஆரம்ப வேலையாக இல்லை.” உண்மையில், 1 கொரிந்தியர் 3:5-7-ல் காணப்படும் பவுல் அப்போஸ்தலனின் உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தினார்.
16 சார்ல்ஸ் டார்வின் கொண்டிருந்த மனப்பான்மைக்கு நேர்மாறாக அவருடைய மனநிலை இருந்தது. உயிரின மலர்ச்சி (The Origin of Species), 1859-ல் டார்வின் எழுதிய முதல் பதிப்பில், அவர் திரும்பத் திரும்ப “என்னுடைய” கொள்கையெனக் குறிப்பிட்டுக் காட்டி, பரிணாமத்தைக் குறித்து மற்றவர்கள் அவருக்கு முன்பு கூறியிருந்ததை அவர் புறக்கணித்தார். அந்நூற்றாண்டில் வாழ்ந்த சாமுவேல் பட்லர் என்ற பேர்போன எழுத்தாளர், முன்னமே பரிணாமக் கொள்கையை வேறுபலரும் குறிப்பிட்டிருக்கின்றனர் என்றும் அது டார்வின் இயற்றிய கொள்கையல்ல என்றும் டார்வினை இடித்துரைத்துப் பேசினார்.
17. சகோதரர் ரதர்ஃபர்டின் மனத்தாழ்மைக்கு கூடுதலான உதாரணங்கள் யாவை?
17 நவீன காலங்களில் யெகோவா தேவன் அதிகளவு பயன்படுத்திய இன்னொரு உண்மையுள்ள ஊழியர், ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜோசஃப் F. ரதர்ஃபர்டு ஆவார். இவர் பைபிள் சத்தியத்தை, குறிப்பாக யெகோவாவுடைய பெயரைத் தைரியமாகப் பிரகடனப்படுத்தினார். அவரைப் பலர் நீதிபதி ரதர்ஃபர்டு என்றறிந்தபோதிலும், உள்ளூர அவர் ஒரு மனத்தாழ்மையுள்ள நபராயிருந்தார். உதாரணமாக, ஒரு முறை, கிறிஸ்தவர்கள் 1925-ல் என்ன எதிர்பார்க்கலாம் என்பதன் தொடர்பாக ஆணித்தரமாகப் பேசினார். அவர் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடக்காதபோது, தான் நிதானியாமல் செயல்பட்டதைக் குறித்து அவர் புரூக்லின் பெத்தேல் குடும்பத்திடம் மனத்தாழ்மையோடு கூறினார். ஒரு சக கிறிஸ்தவனை ஏதோவொரு அறிவீன கூற்றினால் புண்படுத்தியதைக் குறித்து எல்லாருக்கு முன்பாகவும் தனிப்பட்ட விதமாகவும் மத்தேயு 5:23, 24-ல் உள்ள மனநிலையில், சகோதரர் ரதர்ஃபர்டு அடிக்கொருதரம் மன்னிப்புக் கேட்டதைக் குறித்து, அவரோடு நெருங்கிய சகவாசம் கொண்டிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர் ஒருவர் சான்றளித்தார். அதிகார நிலையில் உள்ள ஒருவர் தனக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு மனத்தாழ்மை அவசியமாயிருக்கிறது. சபையிலோ பயண ஊழியத்திலோ சொஸையிட்டியின் கிளை அலுவலகங்களிலோ இருக்கும் எல்லா கண்காணிகளுக்கும் சகோதரர் ரதர்ஃபர்டு ஒரு நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்.
18. சங்கத்தின் மூன்றாம் தலைவர் ஒரு தாழ்மையான சிந்தையை வெளிக்காட்டும் என்ன கூற்றைச் சொன்னார்?
18 உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் மூன்றாம் தலைவர், நேதன் H. நாருங்கூட யெகோவாவின் மக்களில் பிரபலம் வாய்ந்தவராக இருந்தபோதிலும், தன்னுடைய ஸ்தானத்தைக் குறித்து அவர் செருக்கடையவில்லை. ஒழுங்கமைக்கும் திறனிலும் பொதுப் பேச்சு ஆற்றுவதிலும் அவர் சிறந்து விளங்கியபோதிலும், மற்ற ஆட்கள் செய்த காரியங்களை அவர் மிகவும் மதித்தார். கூறியதற்கு இசைவாக, ஒரு முறை தன் அலுவலகத்திலுள்ள, எழுத்து ஆலோசனை இலாக்காவின் (Writing Department) உறுப்பினர் ஒருவரைக் கண்டு, அவர் சொன்னார்: “இங்கேயே அதிமுக்கியமான அதிகடினமான பணி நடக்கிறது. ஆகையால்தான் நான் இதில் மிகக் கொஞ்சம் வேலையையே செய்கிறேன்.” ஆம், ‘மனத்தாழ்மையினாலே ஒரு நபர், மற்றவர்கள் தன்னிலும் மேன்மையானவர்களென எண்ணவேண்டும்’ எனப் பிலிப்பியர் 2:3-ல் உள்ள புத்திமதியை மனத்தாழ்மையோடே பொருத்திக் காட்டினார். சங்கத்தின் தலைவராகச் சேவிப்பது முக்கியமானதாயிருந்தாலும், இதர வேலைகளுங்கூட முக்கியமானவையென அவர் மதித்துப் போற்றினார். அவ்வாறு உணருவதற்கும் அதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்வதற்கும் அவருடைய பங்கில் மனத்தாழ்மை தேவைப்பட்டது. அவர் எல்லாருக்குமே, விசேஷமாக கண்காணிக்கக்கூடிய உயர் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு, பின்பற்றத்தக்க மற்றொரு நேர்த்தியான முன்மாதிரியாக இருந்தார்.
19, 20. (அ) சங்கத்தின் நான்காம் தலைவர் மனத்தாழ்மைக்கான என்ன முன்மாதிரியை வைத்தார்? (ஆ) நாம் மனத்தாழ்மையைக் காண்பிப்பதற்கு அடுத்த கட்டுரை என்ன உதவியளிக்கும்?
19 சங்கத்தின் நான்காம் தலைவர், ஃப்ரெட் W. ஃபிரான்ஸ் என்பவருங்கூட, மனத்தாழ்மையின் நேர்த்தியான முன்மாதிரியாயிருந்தார். சுமார் 32 ஆண்டுகள் சங்கத்தின் துணைத் தலைவராக, அநேக பத்திரிகைகளுக்கும் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களுக்கும் அவரே பெரும்பாலும் தயாரிப்பு வேலையைச் செய்தார். ஆனால் இதன் தொடர்பாக அவர் எப்போதும் தன்னைப் பின்னணியில் வைத்துக்கொண்டார். முன்னணியிலிருக்க அவர் ஒருக்காலும் நாடவில்லை. இதற்கொத்த பூர்வகால முன்மாதிரியை மேற்கோளாகச் சுட்டிக்காட்டலாம். ரப்பாவில் யோவாப் அம்மோனியர்களை மடங்கடித்தபோது, தாவீது அரசனுக்கு வெற்றி வாகை சூடப்படுவதை அவர் நிச்சயித்துக்கொண்டார்.—2 சாமுவேல் 12:26-28.
20 நிச்சயமாகவே, கடந்த காலத்திலும் தற்போதும், நேர்த்தியான முன்மாதிரிகள் அநேகம் இருக்கின்றன. நாம் மனத்தாழ்மையாய் இருக்கவேண்டும் என்பதற்கு அவை பலமான காரணங்களைக் கொடுக்கின்றன. ஆனால், மனத்தாழ்மை உள்ளவர்களாயிருப்பதற்கு இன்னுமநேக காரணங்கள் இருக்கின்றன. இவற்றையும் நாம் மனத்தாழ்மையாயிருப்பதற்கு உதவும் காரியங்களைக் குறித்தும் பின்வரும் கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a “தாழ்த்துதல்” என்பது “மேனிலை உணர்வு கொள்” என்ற பொருளோடு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் பிரதான பொருள்—நியூ உவர்ல்ட் டிரான்ஸ்லேஷனிலும் உள்ள அதன் பொருள்—“தளர்த்துவது,” “அந்தஸ்தான நிலைகளைத் துறப்பதாகும்.”—வெப்ஸ்டரின் ஒன்பதாவது புதிய கல்லூரிச்சார்ந்த அகராதியை (Webster’s Ninth New Collegiate Dictionary) பாருங்கள்.
b யாத்திராகமம் 34:6; எண்ணாகமம் 14:17; நெகேமியா 9:17; சங்கீதம் 86:15, தி.மொ.; 103:8; 145:8; யோவேல் 2:13; யோனா 4:2; நாகூம் 1:3.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பெருமையின் கனிகள் என்னவாய் இருந்திருக்கின்றன?
◻ மனத்தாழ்மையில் யார் மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்திருக்கிறார்?
◻ மனத்தாழ்மைக்கு இரண்டாம்பட்ச மிகச் சிறந்த முன்மாதிரி யாரென்று எது காட்டுகிறது?
◻ பவுல் அப்போஸ்தலன் மனத்தாழ்மைக்கு என்ன நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்?
◻ மனத்தாழ்மைக்கான என்ன பெயர்போன நவீனகால முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
[பக்கம் 15-ன் படம்]
இயேசு மனத்தாழ்மையை சிறந்த விதத்தில் காட்டினார்
[பக்கம் 16-ன் படம்]
பவுல் மனத்தாழ்மைக்கு நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்
[பக்கம் 17-ன் படம்]
சகோதரர் ரஸல் தான் எழுதியவற்றிற்கு தனக்குத்தானே பெயரைச் சம்பாதிக்கவில்லை