முரண்பாடுகளின் தேசத்தில் பிரசங்கம் செய்தல்
கங்காருகள், கோஆலாக்கள் (அடிவயிற்றுப் பையில் குட்டிகளைத் தூக்கும் பாலூட்டிகள்), கரடிகள், பிளாட்டிப்பஸ்கள், ஆயர்ஸ் பாறை மற்றும் கிரேட் பாரியர் பவழப்பாறை (கடற்கழிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் பெரிய பவழப்பாறை)—இவை ஆஸ்திரேலியாவைப் பற்றி நினைத்தவுடனே பலருக்கு மனதிற்கு வரும் பெயர்களாகும். ஆனால் திகைப்பூட்டும்வண்ணமாக, ஆஸ்திரேலியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆயர்ஸ் பாறைக்கோ பவழப்பாறைகளுக்கோ காண ஒருபோதும் போனதில்லை, உயிரியல் பூங்காவுக்கு வெளியே கோஆலாவையோ, ஆஸ்திரேலிய கரடியையோ, பிளாட்டிப்பஸையோ கண்டதில்லை. காரணம் நாட்டின் மக்கள் தொகையான 1 கோடியே 73 லட்சத்தில் 85 சதவிகிதத்தினர் நகரவாசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் கடற்கரையோரத்திலுள்ள ஐந்து பெரிய நகரங்களில் வாழ்கிறார்கள்.
கடற்கரை ஓரங்களை விட்டு, நாட்டிற்குள் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரயாணம்செய்தால், இந்தக் கண்டத்தின் பிரபலமான நாட்டுப்புறப் பகுதிகள் ஆரம்பிக்கின்றன. நிலப்பகுதி மழைதரும் அடர்த்தியான காடுகளிலிருந்தும் செழிப்பான விளைச்சல் நிலங்களிலிருந்தும் வெப்பமிக்க, வறண்ட, பரந்த காட்சியைத் தரும் நிலப்பரப்பாக மாறுகின்றன; இங்கு புதர்ச்செடிகளும் சாதாரண புல்களும் மட்டுமே வளர்கின்றன. ஆனாலும் நாட்டுப்புறங்களில் ஜீவன்கள் வாழ்கின்றன. ஆடுகள் அல்லது கால்நடை பண்ணைகள், அல்லது கொட்டகைகள் பல நூற்றுக்கணக்கான சதுர மைல் தூரத்துக்குப் பரந்திருக்கின்றன. நாட்டினுள்ளே உள்ள பகுதி பொசுக்கும் பாலைவனங்கள், அங்குச் சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால் மனிதர்கள் மரித்துவிடுகின்றனர்.
நற்செய்தி செழித்தோங்குகிறது
இப்படிப்பட்ட சூழமைவில்தான் இந்த கீழடிதேசத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் நீதியான புது உலகம் வரும் என்ற யெகோவாவின் வாக்குறுதிக்குப் பிரதிபலிக்கிறார்கள். கடந்த ஊழிய ஆண்டில், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 57,000-க்கும் மேற்பட்ட உச்சநிலையை அடைந்தது; இது பத்து வருடங்களுக்கு முன் இருந்த எண்ணிக்கையைவிட இரண்டு மடங்காகும். பல பிரஸ்தாபிகள், மக்கள் தொகையின் பெரும்பாகத்தினர் செய்வதுபோலவே, கடற்கரையோர நகரங்களில் வாழ்ந்தபோதிலும், நற்செய்தி உட்புறத்திலும் நன்கு பரவியிருக்கிறது.
இந்த முரண்பாடுகளின் பரந்த தேசத்தின் பிரசங்கவேலை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, நாம் நம்முடைய ஐந்து மாவட்ட கண்காணிகளில் ஒருவரோடும் அவருடைய மனைவியோடும் சேர்ந்துகொண்டு, இவர்கள் விஜயம்செய்யும் தொலைவிலுள்ள நாட்டுப்புறங்களுக்குப் போகலாம். அவர்களுடைய பயணம் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தையும், க்வீன்ஸ்லாந்து மாநிலத்தின் பாதிப் பகுதியையும், வட மாநிலத்தின் பகுதியையும் உள்ளடக்கிய 47 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவைக் குறிக்கிறது. முன்னாள் சோவியத் யூனியனாக இருந்த பகுதிகளைத் தவிர்த்துப்பார்த்தால், இது ஏறக்குறைய ஐரோப்பாவின் பாதிப் பகுதியாக இருக்கிறது.
நம்முடைய பயணம் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமாகிய பெர்த்-லிருந்து ஆரம்பிக்கிறது. 12 லட்சம் மக்களைக்கொண்ட இந்த முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட நகரத்தில், யெகோவாவின் சாட்சிகளின் 49 சபைகள் இப்போது இருக்கின்றன. ஆங்கில சபையோடு, அங்கு கிரேக்க, இத்தாலிய, போர்ச்சுக்கீசிய, ஸ்பானிய சபைகளும் இருக்கின்றன, மற்ற மொழிகளில் சிறுசிறு தொகுதிகளும் இருக்கின்றன. ஆதிவாசிகளாகிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் மட்டுமே உள்ள ஒரு சபையும் இருக்கிறது. இவர்கள் கண்டத்தின் உள்நாட்டு மக்களிடம் பிரசங்கம் செய்வதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றனர். இந்த மனத்தாழ்மையுள்ள மக்களில் பலர் இப்போது ராஜ்ய செய்திக்கு பிரதிபலிக்கின்றனர். ஆனால் பெரிய நகரங்களுக்கு புறம்பே காரியங்கள் எப்படி நடக்கின்றன?
பெர்த்திலிருந்து 1,800 கிலோமீட்டர் வடக்கே பயணம்செய்து போர்ட் ஹெட்லாண்ட்-ஐ அடைகிறோம்; அங்கு ஒரு வட்டார அசெம்பிளி நடக்கப்போகிறது. வந்திருந்த 289 பேரில் பெரும்பான்மையினர் இங்கு வருவதற்காக 200-லிருந்து 700 கிலோமீட்டர் வரை பயணம் செய்திருக்கின்றனர். அவர்கள் தனிப் பிராந்திய பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்களுடைய வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள ராஜ்ய மன்றம், கார் டயர்களை அடிக்கடி துளைத்துவிடும் கூர்மையான கற்களால் மூடப்பட்டுள்ள கரடுமுரடான சாலைகளில் பயணம் செய்யவேண்டிய ஒருவேளை 250 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கலாம். இந்தப் பகுதியிலுள்ள மூன்று சபைகள் சமீபத்தில் விரைவான கட்டுதல் முறையைப் பயன்படுத்தி ராஜ்ய மன்றங்களைக் கட்டியிருக்கின்றன.
தனிப் பிராந்திய பகுதிகளில் விரைவாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள்
இந்தப் பிராந்தியங்களில் ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கும், நகரங்களிலும் பெரிய பட்டணங்களிலும் ஒன்றைக் கட்டுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்! பல கட்டுமான சாமான்கள் பெர்த்திலிருந்து தெற்கே 1,600 கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். நூற்றுக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் இந்தத் தொலைவையோ அதற்கு மேலோ பிரயாணம் செய்து, குறிப்பிட்ட வார இறுதி நாள்களில் இங்கு வந்து, 40 டிகிரியிலிருந்து 45 டிகிரி சென்டிகிரேட் வரை சூட்டில், ராஜ்ய மன்றத்தைக் கட்டுகிறார்கள். சிறிய தனி ஜனசமூகத்திற்குள் இப்படிப்பட்டவர்களின் வருகைதானேயும் ஒரு தலைசிறந்த சாட்சியாக இருக்கிறது. ஒரு சிறிய இரும்பு-தாது சுரங்க பட்டணமாகிய டாம் பிரைஸ்-ல் ராஜ்ய மன்றம் கட்டப்பட்டபோது, உள்ளூர் செய்தித்தாளின் முதல் பக்கம் இவ்வாறு அறிவித்தது: “டாம் பிரைஸில் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய மன்றத்தை மூன்று நாள்களில் ‘விரைவாகக் கட்டுதல்’ என்ற பணியில் ஈடுபடும் தொழிலாள தொண்டர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அனலான நல்வரவு.”
பட்டணத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒத்துழைக்கத் தயாராய் இருப்பதுபோல் இருந்தது. பொதுவாக, 50 டன் பொருள்களைக் கொண்டுவர $11,000 (ஆஸ்திரேலியன் டாலர்) செலவாகும். ஆனால் ஒரு தயாள குணமுள்ள லாரி ஓட்டுநர் சகோதரர்களிடம் வெறுமனே எரிபொருள் செலவை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உள்ளூர் பெயின்ட் கான்ட்ராக்டர்கள் 100 லிட்டர் பெயின்ட்டை நன்கொடையாகக் கொடுத்தார்கள். கட்டடங்களுக்காக நிலத்தைத் தோண்டுபவர்கள் கருவிகளுக்கு ஏற்பாடுசெய்தனர்; சுரங்கத் தொழிற்சாலை ஒரு பாரந்தாங்கியை இலவசமாகப் பயன்படுத்த ஏற்பாடுசெய்து கொடுத்தது. வந்திருந்த 300 பேர்களுக்கு தங்கும் வசதி ஒரு பிரச்னையை எழுப்பியது. ஆனால் பட்டணத்து மக்கள் ஆதரவு ஒப்பற்றதாக இருந்தது. தங்கும் வசதிகளை ஏற்பாடுசெய்கிறோம் என்று சிலர் தொலைபேசியின் மூலமும் கேட்டு ஏற்பாடுசெய்தனர். ஒரு மனிதன் தான் வார இறுதியில் வீட்டில் இருக்க மாட்டேன், ஆனால் தன்னுடைய வீட்டின் பின் கதவைப் பூட்டாமல் திறந்துவைத்துப் போகிறேன் என்று சொல்வதற்காக ஃபோன் செய்தார். அவர் சொன்னார்: “கட்டட வேலையின்போது, இந்த வீடு உங்களுடையது.”
சில சகோதரர்கள் ஒரு முகவரி கொடுக்கப்பட்டு, உள்ளூர் வட்டாரத்திற்கு சொந்தமான அங்கிருந்த இழு வண்டியை எடுத்துவரும்படி சொல்லப்பட்டபோது, ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்தது. நுழைவாயிலில், “மத சந்திப்பாளர்களுக்கு அனுமதி கிடையாது,” என்று அறிவித்த ஒரு வாசகத்தைக் கண்டு திகைத்துப்போனார்கள். ஆனால் இழு வண்டி அங்குதான் இருந்தது. எனவே, அவர்கள் அந்த வீட்டின் பெண்மணியிடம், குப்பைகளால் நிறைந்து வழிந்த அந்த இழு வண்டியை தாங்கள் எடுத்துக்கொண்டுப் போகப் போவதாக சொன்னார்கள். அவர்கள் அதைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, இது வட்டார இழு வண்டியல்ல என்று திடீரென்று அவர்கள் உணர்ந்தனர்! இழு வண்டியின் சொந்தக்காரர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அவருடைய இழு வண்டியை எடுத்துப்போயிருப்பதாக அவருடைய மனைவி அவரிடம் சொன்னாள். சகோதரர்கள் சீக்கிரத்தில் இப்பொழுது காலி இழு வண்டியோடு திரும்பி வந்து, தவறை எடுத்துச்சொன்னார்கள். ஒரு நல்ல உரையாடல் பின்தொடர்ந்தது. முன்பு எதிர்ப்பவர்களாக இருந்த இவர்கள் இப்போது நம்மைப் பற்றியும் நம் வேலையைப் பற்றியும் அதிகமான கேள்விகளைக் கேட்டனர். இப்போது அவர்கள் புதிய ராஜ்ய மன்றத்தை வந்து பார்க்க ஆவல் உள்ளவர்களாய் இருந்தனர்.
இந்தப் பிராந்தியத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க சகிப்புத்தன்மை தேவை. முதலாம் காரணம், நீண்ட தூரங்கள் செல்லவேண்டியிருந்தது. ஒரு பயனியர் சகோதரியும் அவளுடைய கணவனும், போர்ட் ஹெட்லாண்டிலிருந்து மார்பள் பார் வரை 350 கிலோமீட்டருக்கு மேலான பயணத்தை கரடுமுரடான, புழுதி நிறைந்த சாலைகளில், மறுசந்திப்புகள் செய்யவும் வேத படிப்புகள் நடத்தவும் இடைவிடாது செய்யவேண்டியதிருந்தது. ஆஸ்திரேலியாவிலேயே அதிகச் சூடான இடங்களில் மார்பள் பாரும் ஒன்று; அக்டோபரிலிருந்து மார்ச் வரை 50 டிகிரி சென்டிகிரேடிற்கு மேலாக அடிக்கடி வெப்பம் இருக்கும்.
“உச்சி முனை” நோக்கி
தொலைதூர வடக்கே 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டார்வின் என்ற இடம், வட்டார அசெம்பிளிக்கான மற்றொரு நகரம் ஆகும். மாவட்ட கண்காணியும் அவருடைய மனைவியும் நீண்ட மணிநேர பயணங்களைத் தங்களுடைய தனிப்பட்ட படிப்பிற்கு பயன்படுத்துகிறார்கள். முதலில் அவர்கள் தின வாக்கியத்தை வாசித்து, கலந்தாலோசிப்பர். பின்பு டேப்பில் பதிவுசெய்யப்பட்ட பைபிள் வாசிப்புகளுக்குச் செவிசாய்ப்பர். அவர்கள் மாறி மாறி ஓட்டும்போது, தி உவாட்ச்டவர் மற்றும் அவேக்! பத்திரிகைகளை வாசிப்பதையும் மாறி மாறி செய்கின்றனர்.
ஒரு சாலை அடையாளம், “சாலை ரயில்களை” குறித்து அவர்களை எச்சரிக்கிறது. அவை பிரமாண்டமான பாரவண்டிகள் (ட்ரக்குகள்) எல்லா சக்கரங்களிலும் கட்டுப்பாட்டை கொண்டிருந்து, மூன்று அல்லது நான்கு இழு வண்டிகளை (டிரேய்லர்ஸ்) இழுத்துச் செல்பவையாக இருக்கின்றன; மொத்த நீளம் கிட்டத்தட்ட 55 மீட்டர் இருக்கும். எனவே அவற்றை முந்திக்கொண்டு போவதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. அவை கால்நடைகளையும் மற்ற பொருள்களையும் தனிப் பிராந்தியங்களாக இருக்கும் நகரங்களுக்கு எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
தட்பவெப்பநிலை எப்போதும் வெப்பமானதாகவும், நாட்டுப்புறப் பகுதி தொடர்ந்து வறண்டும் காணப்படுகிறது. வறண்ட காட்சி ஒருவேளை பரந்த சுடுகாடு என்று தவறாகக் கருதப்படலாம். ஏனென்றால் நிலப்பகுதி சரியான இடைவெளிகளையுடைய எறும்பு புற்றுகளால் மூடப்பட்டிருக்கிறது. இந்த எறும்புப் புற்றுகள் எறும்புகள் பயன்படுத்தும் மண்ணிற்கு ஏற்றாற்போல நிறங்களில் வேறுபடுகின்றன. அவை 1-லிருந்து 2.5 மீட்டருக்கு இடைப்பட்ட ஏதேனும் உயரமுடையதாக இருக்கக்கூடும். பின்பு, விக்டோரியா நதியை நம்முடைய பயணிகள் கடந்துசெல்லும்போது, வீடுகளில் தயாரிக்கப்பட்ட வாசகங்கள் பல, அவர்கள் கவனத்தை ஈர்க்கின்றன. “அபாயம்: நீந்துவதற்கு அனுமதி கிடையாது. மனிதரைச் சாப்பிடும் முதலைகள் இந்த நதிகளில் இருக்கின்றன!” என்று ஒன்று சொல்கிறது. அவர்களோ, குளிக்கவும் குளிராக வைத்துக்கொள்ளவும் ஞானமாய் வேறு வழிகளைக் கண்டுபிடிக்க தீர்மானித்துவிடுகின்றனர்!
இறுதியில், அவர்கள் ஆஸ்திரேலியாவின் வடமுனையை அடைகிறார்கள். இது பொதுவாக “உச்சி முனை” என்று அறியப்படுகிறது. வட மாநிலத்தின் தலைநகரமாகிய டார்வின் இரண்டு பெரிய, யெகோவாவின் சாட்சிகளின் சபைகள் உள்ள இடம். வட்டார அசெம்பிளிக்கு ஆஜராகும்போது, டார்வினின் பல கலாச்சார பாங்கு தெளிவாகவே தெரிகிறது. யுத்தத்தால் பீடிக்கப்பட்ட இந்தோனீஷியாவின் கிழக்கு டிமோர்-லிருந்து முன்பு வந்த 30 வயது சார்லஸ்-ஐ சந்தியுங்கள். சீன நாட்டைச் சேர்ந்த அவருடைய பெற்றோர், மூதாதையர் வணக்கத்தில் அவரை வளர்த்துவந்தனர். போர்க் கலைகளிலும் அவர் அதிகமாக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். ஆவிக்கொள்கையோடு வலுவான தொடர்பு கொண்டிருந்ததால் அதை தவிர்ப்பது அதிகக் கடினமாக இருந்தது. ஆனாலும், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” என்ற இயேசுவின் வாக்குறுதியை மனதில் கொண்டவராக, இப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டார். (யோவான் 8:32) “இன்று,” அவர் சொல்கிறார், “யெகோவாவுக்கு முன்பாக நான் சுத்தமான மனச்சாட்சி உடையவனாக இருக்கிறேன். நான் இப்போது உதவி ஊழியராகச் சேவைசெய்கிறேன். என் இலட்சியம் ஊழிய பயிற்சி பள்ளிக்குப் போகவேண்டும் என்பதே.”
அடுத்ததாக, பாப்புவா நியூ கினீ-லிருந்து வந்த பிவெர்லீயைச் சந்தியுங்கள். “இந்தோ-ஐரோப்பியரிடம் போய் பிரசங்கம் செய்வதில் முதலில் எனக்கு சிறிது தயக்கம் இருந்தது,” என்று ஒத்துக்கொள்கிறாள் பிவெர்லீ. “ஏனென்றால், ஆங்கிலம் என் இரண்டாவது மொழி, சில வார்த்தைகள் ஆஸ்திரேலிய உச்சரிப்பு பாணியில் இருந்ததால், புரிந்துகொள்வதற்கு எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள், அவர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்று பைபிள் சொல்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நான் முழு நேர பயனியர் ஊழியத்தை ஜனவரி 1991-ல் ஆரம்பித்தேன். என்னுடைய முதல் பைபிள் மாணாக்கர், இப்போது ஒரு பயனியராக இருக்கிறாள். அவளுடைய இரண்டு மகள்களுங்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி தன்னுடைய கணவனோடு சேர்ந்து பயனியர் சேவை செய்துகொண்டிருக்கிறாள்.”
டார்வினைவிட்டுப் புறப்படுவதற்கு முன், கிழக்கே 250 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கேகேடு தேசிய பூங்காவிற்கு ஒரு குறுகிய விஜயம் செய்து வரலாம்; இது ஏராளமான பறவை வாழ்விற்கு புகழ்பெற்றது. இங்கு நாம் டெபீ-ஐ சந்திக்கிறோம்; இந்த முழுப் பிராந்தியத்திற்கும் அவள் ஒருத்தியே ராஜ்ய செய்தியின் தனிப்பட்ட பிரசங்கி. இப்படிப்பட்ட தனிமையில் அவள் எப்படித் தன்னை ஆவிக்குரிய வகையில் பலமாக வைத்துக்கொள்கிறாள் என்று நாம் அவளைக் கேட்டதற்கு, அவள் சொல்கிறாள்: “முதலாவது ஜெபத்தின்மூலம். . . . மேலும் நான் ஏசாயா 41:10 போன்ற வசனங்கள்மூலம் ஆறுதலை அடைகிறேன். அது இவ்வாறு சொல்கிறது: ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் நான் உன்னைத் தாங்குவேன்.’”
டார்வினுக்கு தெற்கே 450 கிலோமீட்டர் தூரத்தில் ஜில்க்மிங்கன் என்ற இடத்தில், நாம் ஒரு சிறிய ஆதிவாசிகள் தொகுதியைச் சந்திக்கிறோம். இந்த ஆதிவாசிகள் வகுப்பு, யெகோவாவின் சாட்சிகளின் வகுப்பு என்று பல வருடங்களாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் அவர்களில் பலர் இடைவிடாது மாநாடுகளுக்கும் அசெம்பிளிகளுக்கும் வந்தனர். அவர்களில் ஒருவருமே முழுக்காட்டப்பட்டில்லை என்றாலும் அவர்கள் அவ்வாறு செய்தனர். இந்த வகுப்பினர் அவர்களின் சுத்தத்திற்காகப் போற்றப்படுகின்றனர். சந்தோஷகரமாக, சிலர் இப்போது சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுத்து முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டுப்புறப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளில் முதன்முதலாக அவ்வாறு நிலைநிற்கை எடுத்தவர்கள். அப்படிப்பட்ட மனத்தாழ்மையுள்ள பழங்குடியினர் தங்களுடைய கோத்திர மக்களின் நூற்றுக்கணக்கான வருட பழமையான பாரம்பரியங்களையும் ஆவிக்கொள்கை ஈடுபாடுகளையும் தவிர்த்துவிட்டு வருவது உண்மையிலேயே தைரியத்தையும் யெகோவாவின் பரிசுத்த ஆவியின்மீது நம்பிக்கையையும் உட்படுத்துகிறது.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்-க்குப் போவதும், நாட்டுப்புறத்தைவிட்டு வெளியேறுதலும்
“உச்சியை” விட்டு வெளியேறி, 1,600 கிலோமீட்டர் தெற்கே, பிரபலமான ஆயர்ஸ் பாறைக்கு அருகே கண்டத்தின் ‘சிவப்பு மையப்பகுதியில்’ உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸை நோக்கிச் செல்ல நேரமாகிவிட்டது. இங்கே காற்றுக் கட்டுப்பாடுடைய (air-conditioned) ராஜ்ய மன்றத்தில், ஓர் அசெம்பிளி நடத்துவதற்குரிய சொகுசான இருக்கைகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள இரண்டு சபைகளிலிருந்து 130 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இங்கே கூடிவருகின்றனர். பாலீனிஷியர்கள், ஐரோப்பியர்கள், ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் அனைவரும் கிறிஸ்தவக் கூட்டுறவில் ஒன்றுபட்டிருக்கும் மகிழ்ச்சியான காட்சியை நாம் மீண்டும் காணமுடிகிறது.
நாம் இறுதியாக ஆலிஸ் ஸ்பிரிங்ஸை விட்டு, பயணம்செய்யும் நம்முடைய மாவட்ட கண்காணியோடும் அவர் மனைவியோடும் சென்றுகொண்டிருக்கும் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வருகிறோம். கண்டத்தின் ஊடே, வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிச் செல்லும் சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவிற்கு நம்மை இந்தப் பயணம் கொண்டுசெல்கிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, நாம் நம்முடைய நாட்டுப்புறத்திற்கு பிரியாவிடை கூறி, இறுதியில் க்வீன்ஸ்லாந்தின் செழிப்பான வெப்ப மண்டல மழைதரும் காடுகள் பகுதியை வந்தடைகிறோம். இங்கு, வட க்வீன்ஸ்லாந்தின் கடற்கரையோரப் பகுதியில்—கிரேட் பாரியர் பவழப்பாறை தேசத்தில்—சாட்சிகள்-மக்கள்தொகை விகிதத்தில் அதிகத்தைக் கொண்டிருக்கும் பல சபைகள் இருக்கின்றன.
எனினும், நாம் மற்றொரு வட்டார அசெம்பிளிக்கு ஆஜராகாமல் நம்முடைய பயணம் முற்றுப்பெறுவதில்லை. கைர்ன்ஸ்-ல்—க்வீன்ஸ்லாந்தின் பாரியர் பவழப்பாறையின் புகழான வெப்ப மண்டல நகரத்தில்—ஒரு விமானத்தில் ஏறி, ஆஸ்திரேலியாவின் முக்கிய தேசப்பகுதியிலிருந்து யார்க் முனை தீபகற்பத்தின் வட உச்சியின் மேலே, டாரெஸ் ஜலசந்தி வழியாக வியாழன் தீவை அடைகிறோம். இங்கு வெறும் 23 பிரஸ்தாபிகளையே உடைய ஒரு சிறிய சபை இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது நடந்த இறுதி அசெம்பிளிக்கு 63 பேர் வந்திருந்தது எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது!
இந்த முரண்பாடுகளின் தேசத்தில் செய்யப்படும் ராஜ்ய பிரசங்க வேலையின் இந்தக் கணநேர பார்வையிடுதலை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் ஒரு நாள் இந்த அக்கறையைத் தூண்டும் கீழடியிலுள்ள (ஆஸ்திரேலியா) தேசத்தை பார்வையிட வந்து, எங்களைச் சந்தித்து, தங்களுடைய பிரத்யேகமான நியமிப்புகளில் தங்களுடைய ஊழியத்தை உண்மையோடு நிறைவேற்றிவரும் சகோதர சகோதரிகளையும் நேருக்குநேராக சந்திக்கக்கூடும்.
[பக்கம் 23-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வியாழன் தீவு
டார்வின்
கேதரின்
கைர்ன்ஸ்
போர்ட் ஹெட்லாண்ட்
மார்பள் பார்
டாம் பிரைஸ்
நியூமேன்
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்
ஆயர்ஸ் பாறை
பிரிஸ்பேன்
பெர்த்
அடிலெய்ட்
சிட்னி
கேன்பரா
மெல்போர்ன்
ஹோபர்ட்
[பக்கம் 24-ன் படம்]
பெர்த், மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம்
[பக்கம் 25-ன் படம்]
தெரு ஊழியம் நல்ல பலன்களைத் தருகிறது