அது யோனாவை விழுங்கியதா?
யெகோவாவின் ஒரு தீர்க்கதரிசியாக பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த யோனா, நியமிப்பிலிருந்து விலகி ஓடி, ஒரு கப்பலில் பிரயாணஞ்செய்ததாகப் பைபிள் நமக்குச் சொல்கிறது. மத்தியதரைக் கடலில் புயல்காற்று நிறைந்த பிரயாணத்தைச் செய்யும்போது, கப்பலிலிருந்தவர்கள் அவரைக் கடலிலே போட்டனர். “யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.”—யோனா 1:3-17.
சிலர் சொல்கிறார்கள், ‘முடியவே முடியாது! கடலில் வாழும் எந்த உயிரினமும் ஒரு மனிதனை விழுங்க முடியாது.’ ஆனால், ஸ்பெர்ம் திமிங்கிலமோ, ஒரு மிகப் பெரிய வெள்ளை சுறாவோ விழுங்கமுடியும். நேஷனல் ஜியாகிரஃபிக் (டிசம்பர் 1992) மற்றொரு சாத்தியத்தை அளித்தது—திமிங்கிலச் சுறாமீன் வகை [ரிங்கோடன் டைப்பஸ்]. அறியப்பட்டதிலேயே மிகப் பெரிய சுறாமீன், அது நீளத்தில் 20 மீட்டர் வளரக்கூடும், எடை 70 டன்கள்.
“திமிங்கில சுறாவின் விநோதமிக்க செரிமான உடலமைப்புத்தானே, யோனாவின் கதைக்குச் சான்றுகொடுக்கிறது. நீங்கள் உங்களை அறியாமலேயே, மிகப் பெரியதாக இருக்கும் திமிங்கில சுறாவின் வாயினுள் இழுக்கப்படுவதாகக் கற்பனை செய்துபார்ப்பது எளிதானக் காரியம் . . . வளர்ந்த, சிறிய திமிங்கில சுறாவின் குகை போன்ற வாயுங்கூட, இரண்டு யோனாக்களை எளிதில் உள்ளடக்கமுடியும்.”
திமிங்கில சுறா, மிகச் சிறிய மிதக்கும் உயிரினங்களையும், நண்டு, நத்தைப் போன்ற தடித்த தோலுடைய உயிரினங்களையும் உண்கின்றன, இவை “உணவுக்குழாய் வழியாக இழுத்துச்செல்லப்பட்டு, மிகப் பெரிய, சுருங்கிவிரியும் பெருவிருந்து அறையை அடைகின்றன, அதுதான் இரைப்பை வயிறு.” எனினும், எவரும் எப்படி வெளியே வரமுடியும்? நேஷனல் ஜியாகிரஃபிக் சொல்கிறது: “சுறாக்கள் தாங்கள் விழுங்கும் செரிக்க கடினமாக இருக்கும் பெரிய பொருட்களை, சேதமில்லாமல் வெளியேற்றும் முறையைக் கொண்டிருக்கின்றன . . . ஒரு சுறா, அதை உள்ளிருந்து வெளியே திருப்பி, வாய்வழியாக அதைத் தள்ளிவிடுவதன்மூலம் தன்னுடைய இரைப்பை வயிரை மெதுவாகக் காலியாக்க முடியும். . . . ஆதலால், நீங்கள் சளியினால் போர்த்தப்பட்ட நிலையில் சரிகி வெளியே வருவீர்கள்; கொஞ்சம் மெலிந்து, ஆனால் ஒருவேளை அனுபவத்திலிருந்து எதையோ கற்றுக்கொண்டவர்களாக வருவீர்கள்.”
இன்று, மத்தியதரைக் கடல் பகுதியில் திமிங்கில சுறாக்கள் காணப்படுவதில்லை, ஆனாலும் நியூ யார்க் நகரம்வரையான வடக்குப்பகுதியில் அவை காணப்படுகின்றன. யோனாவின் காலத்தில் மத்தியதரைக் கடல் பகுதியில் அவை இருந்தனவா? யாருக்குத் தெரியும்? யெகோவா எப்படிப்பட்ட கடல் பிராணியைப் பயன்படுத்தினார் என்று பைபிள் குறிப்பாகச் சொல்வதில்லை, ஆனால் யோனாவின் பதிவு உண்மை என்று இயேசுதாமே உறுதிப்படுத்தினார்.—மத்தேயு 12:39, 40.