உங்கள் தன்னடக்கம் உயிருள்ளதாயும் ததும்பியும் இருப்பதாக
‘உங்கள் விசுவாசத்தோடே தன்னடக்கத்தையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1. எந்த ஓர் அசாதாரண சூழ்நிலையில் ஒரு கிறிஸ்தவன் சாட்சிக்கொடுக்கக்கூடும்?
இயேசு சொன்னார்: ‘அவர்களுக்குச் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.’ (மத்தேயு 10:18) ஓர் ஆளுநருக்கு, நீதிபதிக்கு, அல்லது ஜனாதிபதிக்கு முன்பாக நீங்கள் அழைக்கப்பட்டால், எதைப்பற்றி நீங்கள் பேசுவீர்கள்? ஒருவேளை, நீங்கள் ஏன் அங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை, உங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைச் சொல்வீர்கள். கடவுளுடைய ஆவி அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உதவிசெய்யும். (லூக்கா 12:11, 12) ஆனால் தன்னடக்கத்தைப்பற்றி பேசுவதை உங்களால் கற்பனை செய்யமுடியுமா? நம்முடைய கிறிஸ்தவச் செய்தியின் முக்கிய பாகமாக நீங்கள் அதைக் கருதுகிறீர்களா?
2, 3. (அ) பவுல், பேலிக்ஸ்-க்கும், துருசில்லாவுக்கும் சாட்சிக்கொடுக்கும் நிலைமை எப்படி ஏற்பட்டது? (ஆ) அந்தச் சூழ்நிலைமையில், பவுல் தன்னடக்கம் என்ற பொருளில் பேசியது ஏன் பொருத்தமானதாக இருந்தது?
2 நிஜ வாழ்க்கை மாதிரியைக் கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார். பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டபோது, ஒரு கிறிஸ்தவராக, ஒரு சாட்சியாக, அவருடைய நம்பிக்கைகளைக்குறித்து விளக்குவதற்கு அவர் விரும்பினார். பதிவை நீங்களே ஆராய்ந்துபார்க்கலாம்; அவர், ‘நீதியையும், இச்சையடக்கத்தையும் (தன்னடக்கத்தையும், NW), இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்த’ வழக்குமன்ற சாட்சியைக் கொடுத்தார் என்று நீங்கள் காண்பீர்கள். செசரியாவிலுள்ள அப்போஸ்தலர் பவுலின் அனுபவத்தைக்குறித்து நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அங்கு முதல் விசாரணை இருந்தது. “சில நாள்கள் கடந்த பின்பு, யூத ஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாவுடன் பேலிக்ஸ் வந்திருந்து, பவுலை அழைத்துவரும்படிச் செய்து, கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தைப்பற்றி அவர் சொல்வதைக் கேட்டார்.” (அப்போஸ்தலர் 24:24) பேலிக்ஸ், “அடிமைகளின் இயல்பான உணர்வுகளுக்கு எதிராக ராஜ அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொடுமை மற்றும் சிற்றின்ப நாட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்,” என்று வரலாறு அறிக்கையிடுகிறது. துருசில்லா தன்னுடைய கணவனை (கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமாக) மணவிலக்குச் செய்துவிடும்படித் தூண்டிவிட்டு, அவனுடைய மூன்றாவது மனைவியாகும்படிச் செய்தபோது, அவன் இரண்டு முறை திருமணம் செய்தவனாக இருந்தான். ஒருவேளை, அந்தப் புதிய மதமாகிய, கிறிஸ்தவத்தைப் பற்றி கேட்க அவள் விரும்பியிருக்கலாம்.
3 பவுல் “நீதியையும், இச்சையடக்கத்தையும் (தன்னடக்கத்தையும், NW), இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்து” தொடர்ந்து பேசினார். (அப்போஸ்தலர் 24:25) இது மிகத்தெளிவாகவே, கடவுளுடைய உண்மைத்தன்மைமிக்க தராதரங்களுக்கும், கொடுமைப்படுத்துதல், அநீதி ஆகியவற்றின் பாகமாக இருந்த பேலிக்ஸ் மற்றும் துருசில்லாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தியிருக்கும். பவுல் தன்னுடைய விசாரணையில் பேலிக்ஸ் நீதிசெய்யும்படித் தூண்டப்படுவார் என்று நம்பிக்கையோடிருந்திருக்கக்கூடும். ஆனால் ஏன், ‘தன்னடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்து’ பேசினார்? இந்த ஒழுக்கங்கெட்ட ஜோடி, ‘கிறிஸ்து இயேசுவைப்பற்றிய விசுவாசம்’ எதை அவசியப்படுத்துகிறது என்பதை விசாரித்துக்கொண்டிருந்தனர். எனவே, அவரைப் பின்பற்றுவது, தன்னடக்கம் அர்த்தப்படுத்தும் ஒருவருடைய சிந்தனைகள், பேச்சுகள், செயல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதைத் தேவைப்படுத்துகிறது என்று அவர்கள் அறிய வேண்டியதிருந்தது. எல்லா மனிதர்களும் தங்களுடைய சிந்தனைக்கும், வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே, பவுலின் விஷயத்தில் பேலிக்ஸ் கொடுக்கவேண்டிய எந்த நியாயத்தீர்ப்பைவிட, அந்தத் தேசாதிபதியும் அவனுடைய மனைவியும் கடவுளிடமிருந்து எதிர்ப்பட்ட நியாயத்தீர்ப்பு அதிமுக்கியமானதாய் இருந்தது. (அப்போஸ்தலர் 17:30, 31; ரோமர் 14:10-12) புரிந்துகொள்ள முடிந்தபடியே, பவுலின் செய்தியைக் கேட்டபோது, ‘பேலிக்ஸ் பயமடைந்தான்.’
அது முக்கியமானது ஆனால் எளிதல்ல
4. உண்மை கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய அம்சமாகத் தன்னடக்கம் ஏன் இருக்கிறது?
4 கிறிஸ்தவத்தின் அடிப்படை அம்சமாகத் தன்னடக்கத்தை அப்போஸ்தலன் பவுல் புரிந்துகொண்டார். அப்போஸ்தலன் பேதுரு, இயேசுவோடு நெருங்கி வாழ்ந்தவர்களில் ஒருவர் இதை நிச்சயப்படுத்தினார். பரலோகத்திலே ‘திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாக ஆவோருக்கு’ எழுதும்போது, விசுவாசம், அன்பு, தன்னடக்கம் போன்ற அத்தியாவசியமான சில பண்புகளைக் காட்டும்படி பேதுரு தூண்டினார். எனவே, இந்த உறுதியளிப்பில் தன்னடக்கம் உள்ளடங்கியிருந்தது: “இப்பண்புகள் உங்களுக்குள் உயிருள்ளதாயிருந்து ததும்புமானால், அவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் திருத்தமான அறிவைப் பொருத்தமட்டில் செயலற்றவர்களாக அல்லது கனியற்றவர்களாக உங்களை இருக்கவிடாது.”—2 பேதுரு 1:1, 4-8, NW.
5. தன்னடக்கத்தைக்குறித்து நாம் ஏன் விசேஷமாக அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
5 ஆனாலும், தன்னடக்கத்தை உண்மையில் நம் சொந்த வாழ்விலே காட்டுவதைவிட, நாம் தன்னடக்கத்தைக் காண்பிக்கவேண்டும் என்று சொல்வது மிக எளிதாக இருக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒரு காரணம், தன்னடக்கம் பொதுவாக அரிதாகவே காணப்படுகிறது. பவுல், 2 தீமோத்தேயு 3:1-5-ல் நம் காலத்தில், “கடைசி நாட்களில்” மேலோங்கியிருக்கும் மனப்போக்குகளைக்குறித்து விளக்கினார். நம் காலத்தை விசேஷித்ததாக்கும் ஒரு பண்பு, அநேகர் ‘இச்சையடக்கமில்லாமல் (தன்னடக்கமில்லாமல், NW)’ இருப்பார்கள் என்பதாகும். நம்மைச் சுற்றிலும் இது உண்மையாய் நிரூபிக்கப்படுகிறது என்பதை நாம் காண்கிறோம், அல்லவா?
6. நம் மத்தியில் தன்னடக்கத்தின் குறைபாடு இன்று எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
6 பலர், “உணர்ச்சிகளைத் தங்குதடையின்றி வெளிப்படுத்திவிடுவது,” அல்லது “பலமான உணர்ச்சிகளையோ கோபத்தையோ கட்டுப்படுத்தாமல் காண்பித்துவிடுவது” அடிப்படையில் உடல்நலத்திற்கு நன்மையைக் கொண்டுவருகிறது என்று நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்து, தன்னடக்கத்தின் எந்த வடிவத்தையும் நிராகரித்து, வெறுமனே தங்களுடைய எண்ணப்படியே செயல்படும், செய்திமூலங்களில் பிரபலமான விளம்பர நடிகர்களின் (Role Models) செயல்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. உதாரணப்படுத்தி விளக்க: விளையாட்டையே தொழிலாகக் கொண்டிருப்பவர் போன்ற பலர், காட்டுத்தனமான, ஏன் வன்முறையான வெறிப்பிடித்த உணர்ச்சி வேகங்களைக் காட்டும் பழக்கத்திற்கும் அடிமையாகியிருக்கிறார்கள். விளையாட்டுப் போட்டிகளில் எழும்பிய முரட்டுத்தனமான சண்டைகள் அல்லது கோஷ்டி தாக்குதல்கள் நடந்த நிகழ்ச்சிகளை, செய்திகளிலாவது படித்திருக்கும் ஞாபகம் வருகிறதா? இருந்தபோதிலும், நம்முடைய நோக்கம் தன்னடக்கமில்லாத உதாரணங்களை ஆராய்வதற்கு அதிக நேரத்தைச் செலவழிப்பதைத் தேவைப்படுத்துவதல்ல. நாம் தன்னடக்கத்தைக் காண்பிக்கவேண்டிய அநேக பகுதிகளை ஒருவேளை நீங்கள் பட்டியலிடக்கூடும்—உணவு மற்றும் பானம் உட்கொள்ளுதல், எதிர்பாலரோடு நம்முடைய நடத்தை, பொழுதுபோக்கு விருப்பவேலைகளில் செலவழிக்கப்படும் நேரம், பணம். ஆனால் இப்படிப்பட்ட பல காரியங்களை மேலோட்டமாக ஆராய்வதைவிட, நாம் தன்னடக்கத்தைக் காட்டவேண்டிய ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஆராய்ந்து பார்க்கலாம்.
நம் உணர்ச்சிகள் சம்பந்தமான தன்னடக்கம்
7. தன்னடக்கத்தின் எந்த அம்சம் விசேஷித்த கவனத்தைப் பெற தகுதியுள்ளதாய் இருக்கிறது?
7 நம்முடைய செயல்களைக் கட்டுப்படுத்துவதில் அல்லது தடுத்துநிறுத்துவதில், நம்மில் பலர் நியாயமான அளவிற்கு வெற்றிபெற்று வருகிறோம். நாம் திருடுவதில்லை, ஒழுக்கக்கேட்டிற்கு ஆளாவதில்லை அல்லது கொலைசெய்வதில்லை; அப்படிப்பட்ட தவறுகளைப்பற்றி கடவுளுடைய சட்டம் என்ன என்று நமக்குத் தெரியும். ஆனால், நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நாம் எந்தளவிற்கு வெற்றிசிறக்கிறோம்? காலப்போக்கில், உணர்ச்சிப்பூர்வமான தன்னடக்கத்தை வளர்க்க தவறியவர்கள், தங்களுடைய செயல்கள் சார்பாக அடிக்கடி தன்னடக்கத்தை இழந்துவிடுகின்றனர். எனவே, நம்முடைய உணர்ச்சிகளின்மீது நாம் கவனத்தை ஒருமுகப்படுத்துவோமாக.
8. நம் உணர்ச்சிகளின் சம்பந்தமாக யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?
8 நாம் எந்த உணர்வுமில்லாமல், உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருக்கும் தானியங்கு இயந்திரங்களாக (ரோபோட்டுகளாக) நாம் இருக்கும்படி யெகோவா தேவன் எதிர்பார்ப்பதில்லை. லாசருவின் கல்லறையில் இயேசு, ‘ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.’ பின்பு, “இயேசு கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:32-38) ஆலயத்திலிருந்து காசுக்காரரைத் துரத்திவிட்டபோது, அவர் தம்முடைய செயல்களின் பரிபூரண கட்டுப்பாட்டுக்குள் ஒரு வித்தியாசமான உணர்ச்சியை வெளிப்படுத்தினார். (மத்தேயு 21:12, 13; யோவான் 2:14-17) அவருடைய உண்மையான சீஷர்களுங்கூட ஆழமான உணர்ச்சிகளை வெளிக்காட்டினர். (லூக்கா 10:17; 24:41; யோவான் 16:20-22; அப்போஸ்தலர் 11:23; 12:12-14; 20:36-38; 3 யோவான் 4) எனினும், அவர்களுடைய உணர்ச்சிகள் பாவத்திற்கு வழிநடத்தாதபடி இருப்பதற்கு தன்னடக்கத்தின் அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர். எபேசியர் 4:26 இதை மிகத் தெளிவாக்குகிறது: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”
9. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது ஏன் அவ்வளவு முக்கியமாய் இருக்கிறது?
9 ஒரு கிறிஸ்தவன் உண்மையில் தன்னுடைய உணர்ச்சிகள் கட்டுப்பாடின்றிப் போனபோதும், தன்னடக்கத்தை வெளிக்காட்டுவதுபோல தோன்றும் ஓர் அபாயமும் இருக்கிறது. கடவுள் ஆபேலின் பலியை அங்கீகரித்தபோது பிரதிபலிப்பை மனதிற்குகொண்டுவந்து பாருங்கள்: ‘காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியிலே படுத்திருக்கும்; அதன் தீராத ஆசை உன்மேல் இருக்கும்.’ (ஆதியாகமம் 4:5-7) காயீன் அவனுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறினான்; இது அவன் ஆபேலைக் கொலைசெய்யும்படி வழிநடத்தியது. கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகள் ஒரு கட்டுப்படுத்தப்படாத செயலுக்கு வழிநடத்தின.
10. ஆமானின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
10 மொர்தெகாய், எஸ்தர் ஆகியோரின் நாள்களில் நடந்த ஓர் உதாரணத்தையுங்கூட சிந்தித்துப்பாருங்கள். மொர்தெகாய் எழுந்து மரியாதைக் கொடுக்காததால், ஆமான் என்ற பெயருடைய அதிகாரி கோபம் அடைந்தான். பின்பு ஆமான் மரியாதைச் செலுத்தப்படுவான் என்று தவறாக நினைத்தான். ‘அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரகம் நிறைந்தவனானான். ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்தான்.’ (எஸ்தர் 5:9, 10) அவன் சந்தோஷ உணர்ச்சியை சீக்கிரத்திலே அடைந்தான். எனினும், தான் கசப்புணர்ச்சி கொண்டிருந்த ஒருவனை வெறுமனே கண்டவுடன் சீக்கிரத்திலேயே அவன் கடுங்கோபமும் அடைந்தான். ஆமான் ‘அதை அடக்கிக்கொண்டு’ போனான் என்று பைபிள் சொல்வதால், தன்னடக்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக அவன் இருந்தான் என அர்த்தப்படுத்துகிறதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாகவே இல்லை. ஆமான் அவனுடைய செயல்களையும் உணர்ச்சிகளின் எந்தவித வெளிப்பாட்டையும் அப்போதைக்குக் கட்டுப்படுத்தினான், ஆனால் அவன் அவனுடைய பொறாமைப் பிடித்த கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்த தவறினான். அவனுடைய உணர்ச்சிகள், கொலைசெய்ய சதிசெய்யும்படி அவனை வழிநடத்தின.
11. பிலிப்பு சபையில், என்ன பிரச்னை இருந்தது, இதற்குக் காரணம் என்ன?
11 இதைப்போலவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறுவது இன்று கிறிஸ்தவர்களுக்கு அதிகமாகவே தீங்கிழைக்கும். சிலர் உணரலாம், ‘ஓ, சபையில் அந்தப் பிரச்னை இருக்காது.’ ஆனால் அது இருந்து வருகிறது. பிலிப்புவில் இரண்டு அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குள் வினைமையான முரண்பாடு இருந்தது; அது என்னவென்று பைபிள் சொல்வதில்லை. ஒருவேளை இதாக இருக்கக்கூடும் என்று கற்பனைசெய்யலாம்: ஒரு விருந்திற்கு அல்லது மகிழ்ச்சியான கூடிவருதலுக்கு எயோதியாள், சில சகோதரர்களையும் சகோதரிகளையும் வரும்படி அழைப்புக்கொடுத்தாள். சிந்திகேயாள் அழைக்கப்படவில்லை, எனவே அவள் வருந்தினாள். ஒருவேளை அவள் மற்றொரு சமயத்தில் எயோதியாளை அழைக்காமல் இருப்பதன்மூலம் இதற்குப் பிரதிபலித்திருப்பாள். பின்பு, இருவரும் ஒருவருக்கொருவர் குறைகளைக் காண ஆரம்பித்தனர்; காலப்போக்கில், பேசுவதையும் நிறுத்திவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு விருந்துக்கு அழைக்கப்படவில்லையென்ற உணர்வுதானே அடிப்படை பிரச்னையாக இருக்கக்கூடுமா? இல்லை. அது வெறும் ஓர் ஆரம்பத் தீப்பொறிதான். இந்த இரண்டு அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரிகள் தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறியபோது, அந்த ஆரம்பத் தீப்பொறி ஒரு காட்டுத் தீயாக மாறியது. பிரச்னை தொடர்ந்து இருந்தது; ஓர் அப்போஸ்தலன் தலையிடும்வரை அது நீடித்தது.—பிலிப்பியர் 4:2, 3.
உங்கள் உணர்ச்சிகளும் உங்கள் சகோதரர்களும்
12. பிரசங்கி 7:9-ல் உள்ள புத்திமதியைக் கடவுள் ஏன் நமக்குக் கொடுக்கிறார்?
12 ஒருவர் அவமதிக்கப்பட்டதாக, புண்படுத்தப்பட்டதாக, அல்லது தப்பெண்ணத்தோடு நடத்தப்பட்டதாக உணரும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பது ஒத்துக்கொள்ளப்படத்தக்கதே. யெகோவாவுக்கு அது தெரியும்; ஏனென்றால் அவர் மனிதனின் ஆரம்பத்திலிருந்து மனித உறவுகளைக் கண்டுவந்திருக்கிறார். கடவுள் நமக்குப் புத்திசொல்லுகிறார்: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” (பிரசங்கி 7:9) கடவுள் முதலில் உணர்ச்சிகளுக்குக் கவனஞ்செலுத்துகிறார், செயல்களுக்கு அல்ல என்பதை மனதில் வையுங்கள். (நீதிமொழிகள் 14:17; 16:32; யாக்கோபு 1:19) உங்களை நீங்களே கேளுங்கள், ‘என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு நான் அதிகக் கவனம் செலுத்தவேண்டுமா?’
13, 14. (அ) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறுவதால் உலகத்தில் பொதுவாக என்ன வளர்கிறது? (ஆ) கிறிஸ்தவர்கள் பகையுணர்வுகளைக் கொண்டிருப்பதற்கு என்ன காரியங்கள் வழிநடத்தக்கூடும்?
13 உலகத்தில், தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறுகிற அநேக மக்கள், பகையுணர்வை—தங்களுக்கு அல்லது உறவினருக்கு எதிரான உண்மை அல்லது கற்பனைசெய்யப்பட்ட தவறைக்குறித்து, வெறுப்புணர்வும் வன்முறைத்தனமும் உடைய ஓயாத சண்டை சச்சரவுகளை—வளர்க்கின்றனர். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்ட பின்பு, அந்தக் கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகள் கெடுதலான ஆதிக்கத்தை நீண்ட காலமாகச் செலுத்தலாம். (ஆதியாகமம் 34:1-7, 25-27; 49:5-7; 2 சாமுவேல் 2:17-23; 3:23-30; நீதிமொழிகள் 26:24-26-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) தேச அல்லது பண்பாட்டுப் பின்னணி என்னவாக இருந்தாலும், கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே, வெறுப்புணர்வுகளும் பகையுணர்வுகளும் தவறானவை, மோசமானவை, தவிர்க்கப்படவேண்டியவை என்று உணரவேண்டும். (லேவியராகமம் 19:17) பகையுணர்வுகளைத் தவிர்ப்பது உங்களுடைய உணர்ச்சிகளின் சம்பந்தமான தன்னடக்கத்தின் ஒரு பாகம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
14 எயோதியாள் சிந்திகேயாள் விஷயத்தில் இருந்ததுபோலவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறுவது இப்பொழுது பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும். ஒரு திருமண விருந்துக்கு அழைக்கப்படாததால் ஒரு சகோதரி அவமதிக்கப்பட்டதாக உணரக்கூடும். அல்லது அவளுடைய பிள்ளையோ அவளுடைய உடன்பிறந்தார் பிள்ளையோ அழைப்பில் உட்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது ஒருவேளை ஒரு சகோதரர், உடன் கிறிஸ்தவரிடமிருந்து ஒரு பழைய மோட்டார் வண்டியை வாங்கியிருக்கலாம்; சிறிது காலத்திற்குள் அது உதவாக்கரையாகியிருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும், இது வேதனையான உணர்வுகளை உண்டாக்கியது; உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படவில்லை; அதில் உட்பட்டவர்கள் மன அமைதி இழந்தனர். பின்பு என்ன நடக்கக்கூடும்?
15. (அ) கிறிஸ்தவர்கள் மத்தியில் பகையுணர்வு தோன்றியதால், என்ன வருந்தத்தக்க விளைவுகள் உண்டாகியிருக்கின்றன? (ஆ) பகையுணர்வுகளைக் கொண்டிருக்கும் பழக்கத்தைப்பற்றி சொல்கிற பைபிள் ஆலோசனை என்ன?
15 மன அமைதி இழந்த ஆள், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி தன் சகோதரர்களோடு சமாதானமடைய உழைக்கவில்லையென்றால், ஒரு பகையுணர்ச்சி உண்டாக்கக்கூடும். சிலருடைய விஷயங்களில், ஒரு சாட்சி ஒரு குறிப்பிட்ட புத்தகப்படிப்பு மையத்திற்கு நியமிக்கப்படவேண்டாம், ஏனென்றால், அவர் சில கிறிஸ்தவர்களை அல்லது அங்கு ஆஜராகும் குடும்பத்தை “விரும்புவதில்லை,” என்று கேட்கும் ஆட்கள் இருக்கிறார்கள். எவ்வளவு வருந்தத்தக்கது! கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் உலகப்பிரகாரமான நீதிமன்றங்களுக்கு எடுத்துச்செல்வது ஒரு தோல்வியைக் குறிக்கிறது என்று பைபிள் சொல்கிறது, ஆனால் இதைப்போலவே, நமக்கோ நம் உறவினருக்கோ முன்பு எப்போதோ செய்யப்பட்ட அவமதிப்பின் காரணமாக நாம் ஒரு சகோதரரை தவிர்த்தால் அதே அளவுக்கு ஒரு தோல்வியைக் குறிக்காதா? நம் சகோதர மற்றும் சகோதரிகளோடு சமாதானத்தை நாடுவதைவிட இரத்த பந்தங்களை முன்வைக்கிறோம் என்பதை நம்முடைய உணர்ச்சிப்போக்குகள் காண்பிக்கின்றனவா? நாம் நம்முடைய சகோதரிக்காகச் சாவதற்கும் மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஆனால் இப்பொழுதோ அவளோடு ஒருபோதும் பேசாமலும் இருக்கும் அளவிற்கு நம் உணர்ச்சிகளை நாம் அனுமதிக்கிறோமா? (யோவான் 15:13-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) கடவுள் தெளிவாக நமக்குச் சொல்கிறார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். . . . நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17-19; 1 கொரிந்தியர் 6:7.
16. உணர்ச்சிகளைக் கையாளுவதைக்குறித்து ஆபிரகாம் என்ன நல்ல முன்மாதிரியை வைத்தார்?
16 கடுமையான வெறுப்புணர்ச்சிகள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, நம்முடைய உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கு எடுக்கப்படவேண்டிய படியானது, சமாதானஞ்செய்வது அல்லது குறைக்குரிய காரணத்தைச் சரிசெய்வதாகும். நிலப்பகுதி, ஆபிரகாமின் பெரிய மந்தைகளோடு லோத்தினுடையதையும் சமாளிக்க முடியாதிருந்ததால், அவர்களின் கூலியாட்கள் சண்டைபோட ஆரம்பித்ததை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆபிரகாம் தன் உணர்ச்சிகள் தன்னை மேற்கொள்ளும்படி அனுமதித்தாரா? அல்லது அவர் தன்னடக்கத்தைக் காண்பித்தாரா? தொழில் சார்ந்த பிரச்னைக்குப் போற்றத்தக்கவகையில் ஒரு சமாதானமான தீர்வை, அதாவது ஆபிரகாமும் லோத்தும் வெவ்வேறுபட்ட இடங்களைக் கொண்டிருப்பது என்று அவர் சிபாரிசுசெய்தார். மேலுமாக லோத்துவுக்கு முதல் வாய்ப்பைத் தந்தார். ஆபிரகாம் எந்தவித பகையுணர்வையும் வைத்திருக்கவில்லை, வெறுப்புணர்வையும் கொண்டில்லை என்பதை, பின்னர் லோத்தின் சார்பில் யுத்தத்திற்குப் போவதன்மூலம் நிரூபித்தார்.—ஆதியாகமம் 13:5-12; 14:13-16.
17. ஒரு சமயத்தில் பவுலும், பர்னபாவும் எப்படித் தவறினர், ஆனால் அதற்குப்பின்பாக என்ன நடந்தது?
17 பவுலும் பர்னபாவும் உட்பட்டிருந்த விஷயத்திலிருந்தும் நாம் தன்னடக்கத்தைப்பற்றி கற்றுக்கொள்ளலாம். வருஷக்கணக்காக ஒருவருக்கொருவர் துணையாக இருந்தவர்கள், ஒரு பிரயாணத்தின்போது மாற்குவைக் கூட்டிக்கொண்டு போவதா வேண்டாமா என்பதைப்பற்றிய கருத்தில் முரண்பட்டனர். “இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.” (அப்போஸ்தலர் 15:39) இந்த முதிர்ந்த மனிதர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறியது, நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களுக்கே இது நேரிடக்கூடும் என்றால், நமக்கும் இது நேரிடக்கூடும். இருந்தபோதிலும், அவர்கள் நீடித்திருக்கும் பிளவை வளர்த்திருக்கவில்லை அல்லது பகையுணர்வை வளர விடவில்லை. பதிவு காண்பிக்கிறதுபோல, உட்பட்டிருந்த சகோதரர்கள் தங்களுடைய உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை மறுபடியும் பெற்று, சமாதானத்தோடே இருவரும் கூடி ஊழியஞ்செய்தனர்.—கொலோசெயர் 4:10; 2 தீமோத்தேயு 4:11.
18. உணர்ச்சிகள் புண்படுமானால் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவன் என்ன செய்யலாம்?
18 புண்படுத்தும் உணர்ச்சிகள், பகையுங்கூட, கடவுளுடைய மக்களின் மத்தியில் நாம் எதிர்பார்க்கலாம். அவை எபிரெய காலங்களிலும், அப்போஸ்தலர்களின் நாள்களிலும் இருந்தன. அவை நம்முடைய காலங்களிலுள்ள யெகோவாவின் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றன; ஏனென்றால் நாம் அனைவரும் அபூரணராய் இருக்கிறோம். (யாக்கோபு 3:2) இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம், சகோதரர்கள் மத்தியில் இருக்கும் இப்படிப்பட்ட பிரச்னைகளைச் சீக்கிரத்தில் தீர்க்கும்படி தூண்டினர். (மத்தேயு 5:23-25) ஆனால் நம்முடைய தன்னடக்கத்தை அதிகரிப்பதன்மூலம் அவற்றை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது, அதிக மேலானது. உங்களுடைய சகோதரரோ சகோதரியோ சொன்ன அல்லது செய்த சிறுசிறு காரியங்களினால், நீங்கள் அவமதிக்கப்பட்டதாக அல்லது புண்படுத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், ஏன் நீங்கள் உங்களுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வெறுமனே அதை மறக்கக் கூடாது? அந்த நபர் தவறை ஒத்துக்கொள்ளும்வரை நீங்கள் திருப்தியடையப் போவதில்லை என்பதுபோல், அவருக்கு எதிராக செயல்படுவது உண்மையிலேயே அவசியமா? உங்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் எந்தளவிற்கு கட்டுப்படுத்துகிறீர்கள்?
அது சாத்தியம்!
19. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கவனத்தைத் தருவதாக நம்முடைய கலந்தாலோசிப்பு இருந்தது ஏன் பொருத்தமானது?
19 உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் என்ற தன்னடக்கத்தின் ஓர் அம்சத்தை நாம் விசேஷமாக ஆராய்ந்துபார்த்தோம். மேலும் இது அடிப்படையான அம்சமாக இருக்கிறது; ஏனென்றால், நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறுவது, நம்முடைய நாக்கு, நம்முடைய பால் சம்பந்தப்பட்ட உணர்ச்சித் தூண்டுதல்கள், நம்முடைய உணவு உட்கொள்ளும் பழக்கங்கள், மேலும் நம்முடைய வாழ்க்கையில் தன்னடக்கத்தைக் காண்பிக்கவேண்டிய மற்ற பல அம்சங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டை இழப்பதற்கு வழிநடத்தக்கூடும். (1 கொரிந்தியர் 7:8, 9; யாக்கோபு 3:5-10) இருந்தாலும், தைரியமாயிருங்கள், தன்னடக்கத்தை காத்துக்கொள்வதில் நீங்கள் முன்னேற முடியும்.
20. முன்னேற்றம் சாத்தியமானதே என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
20 யெகோவா நமக்கு உதவிசெய்ய தயாராயிருக்கிறார். நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்? சரியாகவே, தன்னடக்கம் அவருடைய ஆவியின் கனிகளில் ஒன்றாகும். (கலாத்தியர் 5:22, 23) எனவே, நாம் யெகோவாவிடமிருந்து பரிசுத்த ஆவியைப் பெறும் தகுதிக்காகவும், அதைப் பெறவும், அதனுடைய கனியை வெளிப்படுத்தவும் நாம் எந்தளவிற்கு உழைக்கிறோமோ அவ்வளவு தூரத்திற்கு அதிகமாகத் தன்னடக்கமுடையவர்களாக நாம் இருக்க எதிர்பார்க்கலாம். இயேசுவின் உறுதிகூறுதலை நாம் ஒருபோதும் மறக்காது இருப்போமாக: ‘பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை நிச்சயமாகக் கொடுப்பார்!’—லூக்கா 11:13; 1 யோவான் 5:14, 15.
21. தன்னடக்கம், உங்களுடைய உணர்ச்சிகள் இவற்றைப்பற்றி எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய தீர்மானித்திருக்கிறீர்கள்?
21 அது எளிதாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். கட்டுப்படுத்தாமல் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள் மத்தியில் வளர்ந்த சிலருக்கு, சீக்கிரத்தில் கோபப்படும் சுபாவமுள்ள சிலருக்கு, அல்லது தன்னடக்கத்தைக் காண்பிக்கவேண்டும் என்று வெறுமனே ஒருபோதும் முயற்சிசெய்யாத சிலருக்கு இது அதிகக் கடினமாக இருக்கலாம். இப்படிப்பட்ட கிறிஸ்தவனுக்கு, தன்னடக்கத்தை உயிருள்ளதாயும் ததும்பியும் இருக்கச்செய்வது ஓர் உண்மையான சவாலாக இருக்கும். ஆனாலும் அது சாத்தியமே. (1 கொரிந்தியர் 9:24-27) இன்றைய காரிய ஒழுங்குமுறையின் முடிவை நோக்கி நாம் அதிகமதிகமாக நெருங்கிவரும்போது, பிரச்னைகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும். நாம் குறைவான அளவில் தன்னடக்கம் தேவைப்படுகிறவர்களாக அல்ல, அதற்கு மாறாக, அதிகமதிகமான அளவில், தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் அளவில் தன்னடக்கம் உடையவர்களாக இருக்கவேண்டிய தேவையிருக்கிறது! உங்களுடைய தன்னடக்கத்தைப்பற்றி உங்களையே சோதித்துப்பாருங்கள். நீங்கள் முன்னேற்றம் செய்யவேண்டிய பகுதிகளை நீங்கள் கண்டால், அதில் கடினமாக உழையுங்கள். (சங்கீதம் 139:23, 24) கடவுளிடம் அதிகமான அவருடைய ஆவிக்காகக் கேளுங்கள். அவர் உங்களுக்குச் செவிகொடுத்து, உதவிசெய்வார்; அப்போது உங்களுடைய தன்னடக்கம் உயிருள்ளதாயும், ததும்பியும் இருக்கும்.—2 பேதுரு 1:5-8.
சிந்திப்பதற்குக் குறிப்புகள்
◻ உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது ஏன் அவ்வளவு முக்கியம்?
◻ ஆமான், எயோதியாள் சிந்திகேயாள் ஆகியோரின் உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?
◻ புண்படுத்தப்படும்போது நீங்கள் உண்மையில் என்ன செய்ய முயற்சிசெய்வீர்கள்?
◻ எந்தப் பகையுணர்வையும் தவிர்ப்பதற்குத் தன்னடக்கம் எப்படி உதவிசெய்யும்?
[பக்கம் 18-ன் படம்]
பேலிக்ஸ், துருசில்லா ஆகியோருக்கு முன்னிலையில் பவுல் நீதியையும் தன்னடக்கத்தையும் பற்றிப் பேசினார்