பேச்சுத்தொடர்பு—வெறும் பேச்சைவிட அதிகத்தை உட்படுத்துகிறது
சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் ஒன்று ஒரு கண்ணைக்கவரும் வனப்புடைய இயற்கைக்காட்சியைக் காண்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அந்த முழு தொகுதியும் ஒரே காட்சியைக் கண்டுகொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆளும் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார். ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு தனி நபரும் ஒரு வித்தியாசமான நோக்குநிலையைக் கொண்டிருக்கிறார். எந்த இரு நபர்களும் சரியாக அதே இடத்தில் நின்றுகொண்டில்லை. மேலுமாக, எல்லாரும் காட்சியின் ஒரே பகுதிக்குக் கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு ஆளும் ஒரு வித்தியாசப்பட்ட அம்சத்தைக் குறிப்பாகக் கிளர்ச்சியூட்டுவதாகக் காண்கிறார்.
திருமணத்திற்குள்ளும் இதுவே உண்மையாக இருக்கிறது. அவர்கள் அதிகமான இசைவுப்பொருத்தத்தைக் கொண்டிருந்தாலுங்கூட, எந்த இரண்டு துணைவர்களும் காரியங்களைக்குறித்து சரியாக அதே மனநிலையைப் பகிர்ந்துகொள்வதில்லை. உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஒழுங்கமைப்பு, குழந்தைப்பருவ அனுபவம், குடும்ப செல்வாக்கு போன்ற அம்சங்களில் கணவனும் மனைவியும் வேறுபடுகின்றனர். அதனால் விளைவடையும் ஒத்திராத நோக்குகள், கசப்பான பூசலுக்குக் காரணமாகலாம். வெளிப்படையாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார்: “திருமணம் செய்பவர்கள் வேதனையையும் துயரத்தையும் கொண்டிருப்பார்கள்.”—1 கொரிந்தியர் 7:28, தி நியூ இங்கிலிஷ் பைபிள்.
இந்த வேறுபாடுகளை ஒரே-மாம்ச உறவிற்குள் ஒருங்கிணைப்பதற்கான முயற்சியைப் பேச்சுத்தொடர்பு உட்படுத்துகிறது. இது பேசுவதற்காக நேரத்தை உருவாக்குவதைத் தேவைப்படுத்துகிறது. (பக்கம் 7-லுள்ள பெட்டியைப் பாருங்கள்.) ஆனால் இன்னும் அதிகம் உட்பட்டிருக்கிறது.
உட்பார்வையைக் காண்பித்தல்
ஒரு பைபிள் பழமொழி குறிப்பிடுகிறது: “ஞானியின் இருதயம் அவன் வாய் உட்பார்வையைக் காண்பிக்கும்படிச் செய்யும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் சொல்வன்மையைக் கொடுக்கும்.” (நீதிமொழிகள் 16:23, NW) ‘உட்பார்வையைக் காண்பிக்கும்படிச் செய்யும்’ என்பதாக இங்கு மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தை, அடிப்படையாக, விவேகமாக இருப்பதை, காரியங்களை மனதில் கவனமாகச் சீர்தூக்கிப்பார்ப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே, திறம்பட்ட பேச்சுத்தொடர்புக்கான முக்கிய மையம் இருதயமாக இருக்கிறது, வாயல்ல. ஒரு நல்ல பேச்சுத்தொடர்பாளராக இருப்பது ஒரு பேச்சாளராக இருப்பதைவிட அதிகத்தைக் குறிக்கும்; அவர் ஓர் ஒற்றுணர்வுள்ள செவிகொடுத்துக் கேட்பவராக இருக்கவேண்டும். (யாக்கோபு 1:19) துணையின் மேலோட்டமான நடத்தையின்கீழ் புதைந்திருக்கும் உணர்வுகளையும் பிரச்னைகளையும் அவர் பகுத்துணர வேண்டும்.—நீதிமொழிகள் 20:5.
எப்படி? சிலநேரங்களில் ஒரு சண்டையைச் சூழ்ந்திருக்கும் சூழ்நிலைகளைக் கவனிப்பதன்மூலம் இது நிறைவேற்றப்படலாம். உங்களுடைய துணை கடும் உணர்ச்சிப்பூர்வ அல்லது சரீரப்பிரகாரமான அழுத்தத்தில் இருக்கிறாரா? ஒரு நோய் உங்கள் துணையின் மனநிலைக்குக் காரணமாய் இருக்கிறதா? “சரியான நேரத்திற்கு ஏற்ற சரியான வார்த்தையைக் கண்டுபிடிப்பது என்னே ஒரு சந்தோஷகரமானது!” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:23, டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்) எனவே சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வது அதற்கேற்றபடி பிரதிபலிக்க உங்களுக்கு உதவிசெய்யும்.—நீதிமொழிகள் 25:11.
இருந்தாலும், அடிக்கடி, தற்போதைய சூழ்நிலைகளுக்குப் புறம்பான காரியங்களில் சண்டைக்கான காரணம் வேரூன்றப்பட்டிருக்கிறது.
கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ளுதல்
வயதுவந்தப் பருவத்தில் நாம் கொண்டிருக்கும் சிந்தனைகளை உருவமைப்பதற்குக் குழந்தைப்பருவ அனுபவங்கள் அதிகத்தைச் செய்கின்றன. திருமணத் துணைகள் வித்தியாசமான குடும்பங்களிலிருந்து வருவதால், முரணான கருத்துக்கள் தவிர்க்கமுடியாதவை.
பைபிளில் பதிவு செய்யப்பட்ட ஒரு சம்பவம் இதை எடுத்துக்காட்டுகிறது. உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டபோது, தாவீது வெளிப்படையாகத் தன்னுடைய உணர்ச்சியார்வத்தை வெளிக்காட்டினார். ஆனால் அவருடைய மனைவியாகிய மீகாளைப் பற்றியதென்ன? பைபிள் விவரிக்கிறது: “சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.”—2 சாமுவேல் 6:14-16.
மீகாள் தன்னுடைய அநீதியான தகப்பன் சவுலின் விசுவாசமற்ற மனநிலையை வெளிக்காட்டினாள். இதன் காரணமாகவே, 16-ஆம் வசனத்தில் மீகாள் தாவீதின் மனைவி என்று சொல்லப்படுவதற்கு மாறாக “சவுலின் குமாரத்தி” என்று குறிப்பிடப்படுகிறாள் என C. F. கைல் மற்றும் F. டீலிட்ஷ் என்னும் பைபிள் கருத்துரையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும், இந்தச் சந்தோஷமான நிகழ்ச்சியைக்குறித்து தாவீதும் மீகாளும் ஒரே நோக்குநிலையைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதைப் பின்நிகழ்ந்த வாதம் தெளிவாகக் காட்டுகிறது.—2 சாமுவேல் 6:20-23.
வளர்ப்புமுறையின் மறைமுகமான செல்வாக்குகள், ஒரு கணவனும் மனைவியும், காரியங்களை முற்றிலும் வித்தியாசமாக நோக்கும்படி செய்யலாம் என்று இந்த உதாரணம் விளக்குகிறது. இருவரும் யெகோவாவை ஐக்கியப்பட்டு சேவிக்கிறவர்களாய் இருந்தாலும் இது உண்மையாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தையாய் இருக்கையில் போதுமான உணர்ச்சிப்பூர்வ ஆதரவு கொடுக்கப்படாத ஒரு மனைவி, அங்கீகாரத்திற்கும் மறுபடியும் உறுதியளிக்கப்படுவதற்கும் ஓர் அளவிற்கதிகமான தேவையை வெளிக்காட்டக்கூடும். இது அவளுடைய கணவனைக் குழப்பமடையச் செய்யலாம். “நான் அவளை நேசிக்கிறேன் என்று நூறு முறை சொல்லலாம், ஆயினும் அது போதாததாக இருக்கிறது!” என்று அவர் வியந்துரைக்கக்கூடும்.
இந்த இடத்தில், பேச்சுத்தொடர்பு, “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கு”வதை உட்படுத்துகிறது. (பிலிப்பியர் 2:4) பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு, ஒரு கணவன் தன்னுடைய மனைவியை, தன்னுடைய கடந்தகால அனுபவங்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கு மாறாக அவளுடைய கடந்தகால அனுபவங்களின் நோக்கிலிருந்து பார்க்கவேண்டும். நிச்சயமாகவே, ஒரு மனைவியும் தன்னுடைய கணவனிடம் அவ்விதமாகவே செய்யும்படி உந்துவிக்கப்பட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:24.
கடந்தகாலம் துர்ப்பிரயோகிக்கப்பட்டதாக இருக்கையில்
ஒரு துணை, குழந்தையாயிருந்தபோது கற்பழிக்கப்பட்டு அல்லது பாலினம் சம்பந்தமாகத் துர்ப்பிரயோகிக்கப்பட்டிருந்தால்—கவலைக்குரியவிதத்தில், இன்று வளரும் பிரச்னையாக உள்ளது—தனிப்பட்ட அக்கறை மிகவும் முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு மனைவி நெருங்கிய பாலுறவு கொள்ளும் சமயங்களில், தற்போதைய நிலையை கடந்த காலத்திலிருந்து, தன்னுடைய துணையை தீங்கிழைத்தவனிடமிருந்து, அல்லது பாலுறவை பால் சம்பந்தப்பட்ட துர்ப்பிரயோகத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாமல் இருப்பதை உணரக்கூடும். இது, இந்த உணர்ச்சிகளை உட்படுத்தும் காரியத்தை, முக்கியமாகக் கணவன் தன்னுடைய மனைவியின் நோக்குநிலையிலிருந்து எண்ணிப்பார்க்காவிட்டால் ஏமாற்றமளிப்பதாய் இருக்கலாம்.—1 பேதுரு 3:8.
கடந்தகால அனுபவத்தை அழிக்கவோ அதன் விளைவுகளை முழுமையாகக் குணப்படுத்தவோ முடியாதென்றாலும், வருத்தத்திலிருக்கும் துணையை ஆறுதல்படுத்துவதற்கு நீங்கள் அதிகத்தைச் செய்யலாம். (நீதிமொழிகள் 20:5) எப்படி? “கணவன்மாராகிய நீங்கள் சேர்ந்து வாழும் மனைவிகளைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கவேண்டும்,” என்று பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:7, பிலிப்ஸ்) உங்கள் துணையின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது பேச்சுத்தொடர்பின் ஒரு முக்கிய பாகமாகும். ஒற்றுணர்வுடைய பரிவு இல்லாவிடில் உங்கள் வார்த்தைகள் பயனற்றவையாக இருக்கும்.
இயேசு தனிப்பட்டவராக அவர்களுடைய நோய்நொடிகளை ஒருபோதும் அனுபவித்திராவிட்டாலும், நோய்வாய்ப்பட்டவர்களை எதிர்ப்பட்டபோது அவர் “மனதுருகி”னார். (மத்தேயு 14:14) அதேவிதமாக, உங்கள் மனைவி அனுபவித்ததைப்போன்ற அதே புறக்கணிக்கப்பட்ட நிலையை அல்லது துர்ப்பிரயோகத்தை நீங்கள் தனிப்பட்டவராக அனுபவித்திருக்கமாட்டீர்கள்; ஆனால் அவளுடைய கடுந்துயரைக் குறைவாக எடைபோடுவதற்குப் பதிலாக, அவளுடைய கடந்த காலத்தை ஏற்று, அவளுக்கு உங்களுடைய ஆதரவைக் கொடுங்கள். (நீதிமொழிகள் 18:13) பவுல் எழுதினார்: “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்.”—ரோமர் 15:1.
கோபதாபத்தின் பிடியில் சிக்குண்டு
ஒரு திருமணம் ஒரு விலைமதிப்பற்ற பாத்திரத்தைப் போன்றதாகும். அது விபசாரத்தால் சேதப்படும்போது, கணக்கிட முடியாத கேடு ஏற்படுகிறது. (நீதிமொழிகள் 6:32) குற்றமற்ற துணை மன்னிப்பதற்குத் தீர்மானம் செய்தால், அந்தத் துண்டுகள் சமரசத்தின்மூலம் சேர்ந்து ஒன்றிணைக்கப்படும் என்பது மெய்யே. ஆனால் அந்த விரிசல்கள் நிலைத்திருக்கின்றன; ஒரு வாக்குவாதத்தின்போது, அந்தக் கீறல்களை நோக்குவதற்கும் கடந்த காலத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குமான மனச்சாய்வு இருக்கக்கூடும்.
ஒரு துணையின் உண்மையற்றத்தன்மைக்கு இயற்கையான பிரதிபலிப்பு கோபதாபப்படுதலாகும். ஆனால் நீங்கள் உங்கள் துணையை மன்னித்திருந்தால், மன்னிக்கும் செயலின் மூலமாக நீங்கள் அடைந்த நன்மையைப் பாழாக்கும்விதத்தில் கடுஞ்சினத்தை நீடித்து வைத்திருக்க அனுமதிப்பதற்கு எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். அது அமைதியாக உள்ளிருந்து கொதித்துக்கொண்டிருந்தாலும் சரி, அல்லது இரக்கமற்றவிதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் சரி, தொடர்ந்து வளரும் கோபதாபம் இரு துணைகளுக்கும் கெடுதல் செய்கிறது. ஏன்? ஒரு மருத்துவர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார்: “உங்களுடைய துணைவரால் நீங்கள் புண்படுத்தப்பட்டதாக உணருகிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் அவரில் அக்கறை கொள்வதாலே ஆகும். ஆகவே பின்வாங்குவதால் அல்லது பழிவாங்கத் தேடுவதால், உங்கள் துணையைப் புண்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களையே அழித்துக்கொண்டிருப்பீர்கள். முழுமையாக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பும் உறவை மேலுமாகச் சின்னாபின்னமாக்குகிறீர்கள்.”
ஆம், உங்களுடைய கோபத்தைச் சாந்தப்படுத்தாமல், வெறுமனே உங்கள் திருமணத்திலுள்ள வித்தியாசங்களை ஒத்திசைவிக்க முடியாது. ஆகையால், உணர்ச்சிவேகங்கள் எழுச்சியற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் உங்கள் உணர்ச்சிகளை உங்கள் துணையிடம் கலந்து பேசுங்கள். நீங்கள் ஏன் புண்பட்டவராக உணருகிறீர்கள், மறுபடியும் நம்பிக்கையூட்டப்படுவதற்கு உங்களுக்குத் தேவைப்படுவது என்ன, உறவைக் காத்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்பவற்றை விளக்குங்கள். வெறுமனே வாக்குவாதத்தில் பலமான நிலையைக் கொண்டிருப்பதற்காகக் கடந்த கால அனுபவத்தை ஓர் ஆயுதமாக ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.
கெட்டப்பழக்கத்திற்கு அடிமையாயிருத்தல் பேச்சுத்தொடர்பை பாதிக்கிறது
ஒரு துணை மதுபானத்தை அல்லது போதைப்பொருட்களைத் துர்ப்பிரயோகிக்கும்போது, ஒரு திருமணம் கடுமையான இக்கட்டை அனுபவிக்கிறது. கெட்டப்பழக்கத்திற்கு அடிமையாகாத துணை, பைபிளில் பதிவுசெய்யப்பட்ட அபிகாயிலுக்கு ஒத்த சூழ்நிலையில் இருக்கக்கூடும். அபிகாயில் தன்னுடைய கணவனாகிய நாபால் ‘மிகவும் வெறித்திருந்தபோது,’ அவனுடைய ஞானமற்ற நடத்தையின் விளைவுகளைத் திருப்புவதற்காகத் தளராமல் ஊக்கமாக முயற்சி செய்துகொண்டிருந்தாள். (1 சாமுவேல் 25:18-31, 36) ஒரு துணை கெட்டப்பழக்கத்திற்கு அடிமையான குழப்பத்தில் இருக்கையில் மற்ற துணை அவ்வாறு அடிமையாயிருப்பவரின் நடத்தையை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் திருமணங்கள், பெரும்பாலும் நாபால் மற்றும் அபிகாயிலின் குடும்பத்தை ஒத்ததாக இருக்கின்றன.a
புரிந்துகொள்ளக்கூடியவிதமாக, ஒரு கெட்டப்பழக்கத்திற்கு அடிமையானவர் பழைய நிலைக்குத் திரும்பிவரத் துவங்குகையில், பெரும் விடுதலை உணரப்படுகிறது. ஆனால் இது வெறும் துவக்கமே. ஒரு சிறிய நகரின்மீது தாக்கும் கடும்புயலால் ஏற்படுத்தப்படும் பேரழிவைக் கற்பனை செய்துபாருங்கள். வீடுகள் இடிந்துவிடுகின்றன, மரங்கள் வேரோடு பிடுங்கப்படுகின்றன, தொலைபேசி கம்பிகள் கீழே விழுகின்றன. புயல் நின்றதும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இப்போது விரிவான பழுதுபார்க்கும் வேலை தேவைப்படுகிறது. ஒரு துணை பழைய நிலைக்குத் திரும்பிவரத் துவங்குகையிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. முறிந்துபோன உறவுகள் திரும்பக் கட்டப்படவேண்டும். நம்பிக்கையும் உத்தமமும் திரும்ப நிலைநாட்டப்படவேண்டும். பேச்சுத்தொடர்பு கம்பிகள் திரும்பக் கட்டப்படவேண்டும். ஒரு திருந்திக்கொண்டிருக்கும் கெட்டப்பழக்க அடிமைக்கு, இந்தப் படிப்படியான மறுகட்டமைப்பு, கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ளும்படியாக பைபிள் தேவைப்படுத்துகிற ‘புதிய ஆளுமையின்’ பாகமாக இருக்கிறது. இந்தப் புதிய ஆளுமை, ‘உங்கள் மனதை உந்துவிக்கும் சக்தியை’ உட்படுத்த வேண்டும்.—எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:9, 10.
லியனார்ட் மற்றும் இலேன் போதைமருந்துகளின் துர்ப்பிரயோகத்தை நிறுத்துவதற்கு ஒரு பைபிள் படிப்பு உதவியது; ஆனால் மனதை உந்துவிக்கும் சக்தி முழுமையாகச் செயல்பட்டுக்கொண்டில்லை.b சீக்கிரத்தில் மற்ற கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகுதல் மேலெழும்பியது. “நாங்கள் பைபிள் நியமங்களைப் பொருத்திப்பிரயோகித்து ஒரு திருப்தியான திருமண வாழ்க்கையைக் கொண்டிருக்க 20 வருடங்களாக முயன்றோம், ஆனால் அது எப்போதுமே எங்களை விட்டு அகன்று சென்றது,” என்று இலேன் சொல்கிறாள். “எங்களுடைய கெட்ட பழக்கங்களுக்கான அடிமைத்தனம் ஆழமாக வேரூன்றப்பட்டிருந்தது. படிப்பு மற்றும் ஜெபத்தின் மூலமாக அவற்றை எங்களால் நீக்கிப்போட முடியவில்லை.”
தங்களுடைய கெட்ட பழக்கங்களுக்கான அடிமைத்தனத்தின் காரணங்களைப் புரிந்துகொள்ளும்படி லியனார்டும் இலேனும் ஆலோசனையை நாடினர். ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’யிடமிருந்து குழந்தை துர்ப்பிரயோகம், குடிவெறி பழக்கம், மற்றும் பெண்களுக்கான மரியாதைபற்றிய சமயோசிதமான கட்டுரைகள் குறிப்பான உதவிகளாக இருந்திருக்கின்றன.c (மத்தேயு 24:45-47) “சேதத்தைப் பழுதுபார்த்து எங்களுடைய உறவைத் திரும்ப நிலைநாட்ட நாங்கள் உதவிசெய்யப்பட்டோம்,” என்று இலேன் சொல்கிறாள்.
பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல்
ரெபெக்காள் தன்னுடைய மகனாகிய ஏசாவின் மனைவிகளைக் குறித்து தாங்கமுடியாத வேதனையை உணர்ந்தாள். தன்னுடைய மற்ற மகனாகிய யாக்கோபும் ஏசாவின் மாதிரியைப் பின்பற்றிவிடுவானோ என்ற பயத்துடன், ரெபெக்காள் இவ்வாறு தன்னுடைய கணவன் ஈசாக்கிடம் சொல்வதன்மூலம் தான் அடக்கி வைத்திருந்த கவலையை வெளிப்படுத்தினாள்: “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன.”—ஆதியாகமம் 27:46.
ரெபெக்காள் தன் உணர்ச்சிகளைப்பற்றி உறுதியாகக் கூறினபோதிலும், ஈசாக்கைத் தனிப்பட்ட விதமாக அவள் தாக்கவில்லை. “எல்லாம் உங்கள் தவறுதான்!” அல்லது, “நீங்கள் இதைவிட அந்தச் சூழ்நிலையை நல்லபடி கையாண்டிருக்கவேண்டும்!” என்று அவள் சொல்லவில்லை. மாறாக, ரெபெக்காள் தன்னை அந்தப் பிரச்னை எப்படிப் பாதித்தது என்று விவரிப்பதற்கு “என்” என்ற சுட்டுப்பெயரைப் பயன்படுத்தினாள். இந்த அணுகுமுறை ஈசாக்கின் தன்மதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அல்ல, ஆனால் அவருடைய ஒற்றுணர்வை வரவழைத்தது. தனிப்பட்டவராக தாக்கப்பட்டதாக உணராதவராய், ரெபெக்காளின் வேண்டுகோளுக்கு ஈசாக்கின் பிரதிபலிப்பு உடனடியானதாகவே இருந்தது.—ஆதியாகமம் 28:1, 2.
கணவன்மாரும் மனைவிமாரும் ரெபெக்காளின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். ஒரு சண்டை எழும்போது, ஒருவரையொருவர் தாக்குவதற்கு மாறாகப் பிரச்னையைத் தாக்குங்கள். ரெபெக்காளைப்போல், உங்கள் மனக்கவலை உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற நோக்குநிலையிலிருந்து அதை வெளிப்படுத்துங்கள். “நான் ஏன் கவலையாக இருக்கிறேன் என்றால் . . .” அல்லது, “நான் ஏன் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக உணருகிறேன் என்றால் . . .” என்பவை “நீங்கள் என்னைக் கவலைக்குள்ளாகச் செய்கிறீர்கள்!” அல்லது, “நீங்கள் என்னை ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை!” என்பவற்றைவிட அதிக பலனுள்ளவையாக இருக்கின்றன.
நிலைத்திருப்பதைவிட அதிகமானது
முதல் மனித தம்பதியாகிய ஆதாம் ஏவாளின் திருமணம், மகன்களையும் மகள்களையும் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கி, நூற்றாண்டுகளாக நிலைத்திருந்தது. (ஆதியாகமம் 5:3-5) ஆனால் இது அவர்களுடைய திருமணம், பின்பற்றத்தக்க தகுதிபெற்றது என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. தொடக்கத்தில், சுதந்திர உணர்வும், சிருஷ்டிகரின் நீதியான சட்டங்களுக்கு அவமதிப்பும் அவர்களுடைய ஒரே-மாம்ச பிணைப்பை அழித்துவிட்டது.
அதேவிதமாக, இப்போதும் ஒரு திருமணம் நிலைத்திருக்கக்கூடும், ஆனால் பேச்சுத்தொடர்பின் முக்கிய அம்சங்களில் குறைவுபடக்கூடும். பலமான அரண்போல வேரூன்றப்பட்டிருக்கும் வாதங்களும் பொருத்தமற்ற ஆளுமை பண்புகளும் வேரோடு பிடுங்கப்பட வேண்டியிருக்கக்கூடும். (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ ஒப்பிடுங்கள்.) இது ஒரு தொடர்ச்சியான கல்வி முறை. ஆனால் அந்த முயற்சி பயனுடையது. யெகோவா தேவன் திருமண ஏற்பாட்டின் சிருஷ்டிகராக இருப்பதால் அதில் ஆழ்ந்த அக்கறை உடையவராக இருக்கிறார். (மல்கியா 2:14-16; எபிரெயர் 13:4) ஆகையால், நாம் நம்முடைய பாகத்தைச் செய்தால், அவர் நம்முடைய முயற்சிகளை ஏற்று, திருமண உறவில் பேச்சுத்தொடர்பில் ஏற்பட்டிருக்கும் எந்த முறிவையும் குணப்படுத்துவதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் தருவார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—ஒப்பிடுங்கள்: சங்கீதம் 25:4, 5; 119:34.
[அடிக்குறிப்புகள்]
a குடிப்பழக்கமுடையோரின் குடும்பங்களுக்கு உதவி, விழித்தெழு! மே 22, 1992, (ஆங்கிலம்) வெளியீட்டில் பக்கங்கள் 3-7-ல் கலந்தாலோசிக்கப்படுகிறது.
b பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
c அக்டோபர் 8, 1991, மே 22, 1992, மற்றும் ஜூலை 8, 1992 விழித்தெழு! (ஆங்கிலம்) பத்திரிகைகளைப் பாருங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“குப்பைக்கு அதிக நேரம் கிடைத்தது!”
திருமணத்தில் பிரச்னைகளை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு கணவனும் மனைவியும், ஒவ்வொரு வாரமும் குப்பையை வெளியேக்கொண்டு கொட்டுவதற்கு எவ்வளவு நேரத்தைச் செலவு செய்தனர் என்று கணக்கிடும்படி கேட்கப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் சுமார் 35 நிமிடங்கள் அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் 5 நிமிடங்கள் என்பது அவர்களுடைய பதிலாக இருந்தது. அவர்கள் சேர்ந்து சம்பாஷணை செய்வதற்கு எவ்வளவு நேரத்தைச் செலவு செய்தனர் என்று அடுத்ததாகக் கேட்கப்பட்டனர். அந்தக் கணவர் திடுக்கிட்டார். “குப்பைக்கு அதிக நேரம் கிடைத்தது” என்று அறிவித்துவிட்டு, “ஒரு திருமணத்தைக் காத்துக்கொள்வதற்கு ஒரு நாளில் ஐந்து நிமிடங்கள் போதுமான நேரம் என்று நாம் நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நிச்சயமாக ஒரு திருமணத்தை வளரச்செய்வதற்கு அது போதுமான நேரம் அல்ல,” என்று தொடர்ந்து கூறினார்.
[பக்கம் 7-ன் பெட்டி]
அடிப்படை சட்டங்களை ஏற்படுத்துங்கள்
◻ ஒரு முறை ஒரு பொருளின்பேரில் கலந்துபேசுங்கள் (1 கொரிந்தியர் 14:33, 40)
◻ உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்; குற்றச்சாட்டுகளைச் செய்யாதிருங்கள் (ஆதியாகமம் 27:46)
◻ தாக்குதல் கூடாது (எபேசியர் 5:28, 29)
◻ அவதூறாகப் பேசக்கூடாது (நீதிமொழிகள் 26:20)
◻ தீர்வுகாண முயலுங்கள், வெற்றியடைவதற்கு அல்ல (ஆதியாகமம் 13:8, 9)
[பக்கம் 4-ன் படம்]
ஒரு சண்டை எழும்போது, ஒருவரையொருவர் தாக்குவதற்கு மாறாகப் பிரச்னையைத் தாக்குங்கள்
[பக்கம் 8-ன் படம்]
உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்; குற்றச்சாட்டுகளைச் செய்யாதிருங்கள்