உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 7/15 பக். 3-5
  • யெகோவா யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எகிப்திய கடவுட்களைவிட மேலானவர்
  • தம்முடைய மக்களைப் பாதுகாப்பவர்
  • அனுபவம் கற்பித்த பாடங்கள்
  • ‘யெகோவா எனக்கு இரட்சிப்புமானவர்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பகுதி 3: பொ.ச.மு. 1942–1513 எகிப்து தெய்வங்களின் போர்க்களம்
    விழித்தெழு!—1990
  • முதல் மூன்று தண்டனைகள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 7/15 பக். 3-5

யெகோவா யார்?

“யெகோவா யார்?” அந்தக் கேள்வி 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தின் ராஜாவாகிய பெருமைப்பிடித்த பார்வோனால் கேட்கப்பட்டது. எதிர்ப்பு அவனை இவ்வாறும் சொல்லச்செய்தது: “நான் யெகோவாவை அறியேன்.” பார்வோனுக்கு முன்பாக அப்போது நின்றுகொண்டிருந்த இரண்டு மனிதர்கள் யெகோவா யார் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் இஸ்ரவேலரின் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த, உடன்பிறந்த சகோதரர்களாகிய மோசேயும் ஆரோனும் ஆவர். ஒரு மதப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இஸ்ரவேலர்களை வனாந்தரத்திற்கு அனுப்பும்படி எகிப்திய ஆட்சியாளனை வற்புறுத்துவதற்கு இவர்களை யெகோவா அனுப்பியிருந்தார்.—யாத்திராகமம் 5:1, 2, NW.

பார்வோன், தான் கேட்ட கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கவில்லை. நூற்றுக்கணக்கான பொய்த் தெய்வங்களின் வழிபாட்டை அவனுடைய அதிகாரத்தின்கீழ் ஆசாரியர்கள் பரப்பிவந்தனர். ஏன், பார்வோன்தானே ஒரு கடவுளாகக் கருதப்பட்டானே! எகிப்திய புராணங்களின்படி, ரா என்ற சூரியக் கடவுளின் ஒரு மகனாகவும், வல்லூறு தலையுடைய ஹோரஸ் தெய்வத்தின் அவதாரமாகவும் அவன் இருந்தான். பார்வோன் “வல்லமையுள்ள தெய்வம்,” “நித்தியம்,” போன்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டான். எனவே, அவன் இகழ்ச்சியோடு இவ்வாறு கேட்பது ஓர் ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல: “நான் அவருடைய சப்தத்திற்கு கீழ்ப்படிய, யெகோவா யார்?”

மோசேயும் ஆரோனும் அந்தக் கேள்விக்குப் பதில் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அப்போது எகிப்திய அடிமைத்தனத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களால் வணங்கப்பட்ட கடவுள்தான் யெகோவா என்று பார்வோனுக்குத் தெரியும். ஆனால் பார்வோனும் முழு எகிப்தும் சீக்கிரத்தில், யெகோவா உண்மையான கடவுள் என்பதை அறிந்துகொள்வர். இதைப்போலவே இன்று, யெகோவா தம்முடைய நாமத்தையும் தெய்வத்தன்மையையும் பூமியிலுள்ள அனைவரும் அறிந்துகொள்ளும்படிச் செய்வார். (எசேக்கியேல் 36:23) ஆதலால், யெகோவா தேவன் எப்படித் தம்முடைய நாமத்தைப் பூர்வீக எகிப்தில் மேன்மைப்படுத்தினார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதன்மூலம் நாம் பயனடையலாம்.

எகிப்திய கடவுட்களைவிட மேலானவர்

பார்வோன், யெகோவா யார் என்று அகந்தையுடன் கேட்டபோது, அவன் அனுபவித்தப் பாடுகளை அவன் எதிர்பார்க்கவில்லை. யெகோவாதாமே எகிப்தின்மீது பத்து வாதைகளைக் கொண்டுவருவதன்மூலம் பதிலளித்தார். அந்தப் பத்து வாதைகள் தேசத்திற்கு எதிராக வந்த பலத்த அடிகள் மட்டுமல்ல. அவை, எகிப்துக் கடவுட்களுக்கு எதிரான பலத்த அடிகளாகும்.

வாதைகள் எகிப்திய கடவுட்களைவிட மேலான யெகோவாவின் உன்னதத் தன்மையை வெளிப்படுத்தின. (யாத்திராகமம் 12:12; எண்ணாகமம் 33:4) யெகோவா, நைல் நதியையும் எகிப்தின் தண்ணீர்கள் அனைத்தையும் இரத்தமாக மாற்றியபோது, உண்டான கூக்குரலைக் கற்பனை செய்துபாருங்களேன்! இந்த அற்புதத்தின் காரணமாக, பார்வோனும் அவனுடைய மக்களும், நைல்-தெய்வமாகிய ஹாப்பி-ஐவிட யெகோவா மேலானவர் என்பதைக் கற்றுக்கொண்டனர். நைலில் மீன்கள் இறந்ததுங்கூட, எகிப்திய மதத்திற்கு ஒரு பலத்த அடியாக இருந்தது, ஏனென்றால் சில வகையான மீன்கள் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டன.—யாத்திராகமம் 7:19-21.

அடுத்து யெகோவா, தவளைகளின் வாதையை எகிப்தின்மீது கொண்டுவந்தார். இது எகிப்திய தவளை-பெண் தெய்வமாகிய ஹெக்ட்-ஐ அவமானப்படுத்தியது. (யாத்திராகமம் 8:5-14) மூன்றாவது வாதை, மந்திரவித்தை செய்யும் ஆசாரியர்களைத் தோற்கடிக்கச் செய்தது, புழுதியைப் பேன்களாக மாற்றிய யெகோவாவின் அற்புதத்தை அவர்களால் செய்து காட்ட முடியவில்லை. “இது தேவனுடைய விரல்”! என்று அவர்கள் சப்தமிட்டார்கள். (யாத்திராகமம் 8:16-19) மந்திரக்கலையைக் கண்டுபிடித்த பேர்பெற்ற எகிப்திய கடவுளாகிய தோத் அந்தப் போலி ஞானிகளுக்கு உதவ முடியவில்லை.

யெகோவா யார் என்பதைப் பார்வோன் கற்றுக்கொண்டிருந்தான். தம்முடைய நோக்கத்தை மோசேயின் மூலமாக அறிவித்து, பின்பு அற்புத வாதைகளை எகிப்தின்மேல் கொண்டுவருவதன்மூலம் அதை நிறைவேற்றும் கடவுளாக இருந்தார் யெகோவா. யெகோவா, பலத்த அடிகளை ஆரம்பிப்பதையும், முடிவிற்கு கொண்டுவருவதையும் தம்முடைய விருப்பப்படியும் செய்ய முடியும். ஆனாலும், இந்த அறிவு பார்வோனை யெகோவாவிற்கு கீழ்ப்படிந்திருக்கும்படி உந்துவிக்கவில்லை. பதிலாக, எகிப்தின் தலைக்கனமிக்க ஆட்சியாளன் பிடிவாதமாக யெகோவாவைத் தொடர்ந்து எதிர்த்தான்.

நான்காவது வாதையின்போது, வண்டுகள் தேசத்தைச் சேதப்படுத்தின, வீடுகளுக்குள் நுழைந்தன, மேலும் ஒருவேளை காற்றில் திரள்திரளாக இயங்கியிருக்கலாம், இதுவும் ஷூ கடவுளில் அல்லது சொர்க்க ராணியாகிய ஐசிஸ் தெய்வத்தில் உருவகமாக்கப்படும் வணக்கப் பொருளாகும். இந்தப் பூச்சிக்குரிய எபிரெய வார்த்தை, “வண்டு,” “உண்ணி,” “விட்டில்,” என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (நியூ உவர்ல்ட் டிரான்ஸ்லேஷன்; செப்டுவஜின்ட்; யங்) அது ஸ்கேராப் வண்டாக இருந்தால், எகிப்தியர்கள் தெய்வத்தன்மை உடையதென்று கருதின பூச்சிகளால் வாதிக்கப்பட்டிருந்தனர், மேலும் காலால் அவற்றை மிதிக்காமல் அவர்கள் எங்கும் நடந்திருக்க முடியாது. எதுவாயினும், இந்த வாதை பார்வோனுக்கு யெகோவாவைப்பற்றிய புதியதொன்றைக் கற்பித்தது. எகிப்திய தெய்வங்கள் தங்களுடைய வணக்கத்தார்களை வண்டுகளிலிருந்து காப்பாற்ற முடியாதிருந்தபோதிலும், யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற முடிந்தது. இந்த வாதையும், இதற்குப் பின்வந்த மற்ற எல்லா வாதைகளும் எகிப்தியர்களை மட்டும்தான் பாதித்தன, இஸ்ரவேலர்களைப் பாதிக்கவில்லை.—யாத்திராகமம் 8:20-24.

ஐந்தாவது வாதை, எகிப்திய வீட்டு விலங்குகள்மீது ஒரு கொள்ளைநோயைக் கொண்டுவந்தது. இந்தப் பலத்த அடி ஹாத்தார், ஏப்பிஸ், பசு உடம்புடைய வான தேவதையாகிய நட் ஆகியவற்றை அவமானப்படுத்தியது. (யாத்திராகமம் 9:1-7) ஆறாவது வாதை, மனிதர்மேலும் மிருகம்மேலும் கொப்புளங்களைக் கொண்டுவந்தது, சுகப்படுத்தும் ஆற்றலுடையவை என்று தவறாக புகழ் மாலை சூட்டப்பட்ட தோத், ஐசிஸ், ப்டா போன்ற தெய்வங்களைத் தாழ்த்தியது.—யாத்திராகமம் 9:8-11.

ஏழாவது வாதை பலத்தக் கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியுமாய் இருந்தது. இந்தப் பலத்த அடி, மின்னல்களின் எஜமானாக கருதப்பட்ட ரெஷ்பு தெய்வத்தையும், மழையையும் இடிமுழக்கத்தையும் கட்டுப்படுத்துவதாக உரிமைபாராட்டும் தோத் தெய்வத்தையும் அவமானப்படுத்தியது. (யாத்திராகமம் 9:22-26) எட்டாவது பலத்த அடி, வெட்டுக்கிளி வாதை, பயிர்களைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்ட அறுவடைத் தெய்வம் மின்-ஐவிட யெகோவாவின் உன்னதத்தன்மையை வெளிக்காட்டியது. (யாத்திராகமம் 10:12-15) ஒன்பதாவது பலத்த அடி, எகிப்தில் மூன்று நாள் காரிருள், சூரிய தெய்வங்களாகிய ரா, ஹோரஸ் போன்ற எகிப்திய தெய்வங்களின்மீது அவமதிப்பைக் கொண்டுவந்தது.—யாத்திராகமம் 10:21-23.

பேரழிவு தந்த ஒன்பது வாதைகளுக்கு மத்தியிலும், பார்வோன் இஸ்ரவேலரை விடுதலையாக்கிவிட இன்னும் மறுத்தான். அவனுடைய மேட்டிமையான இருதயம், கடவுள் இறுதியான பத்தாவது வாதை—மனிதர் மற்றும் மிருகத்தின் முதற்பேறானவற்றிற்கு மரணத்தைக்—கொண்டுவந்தபோது, எகிப்திற்கு மிகப்பெரிய சேதத்தை வரவழைத்தது. பார்வோன் ஒரு கடவுளாக கருதப்பட்டு வந்திருந்தாலும், அவனுடைய முதல் மகனும் செத்தான். இப்படித்தான், யெகோவா ‘எகிப்தின் கடவுட்கள் அனைத்தின்மீதும் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றினார்.’—யாத்திராகமம் 12:12, 29.

இப்போது பார்வோன், மோசேயையும் ஆரோனையும் ஆணையிட்டு அழைத்து, பின்வருமாறு சொன்னான்: “நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள்.”—யாத்திராகமம் 12:31, 32.

தம்முடைய மக்களைப் பாதுகாப்பவர்

இஸ்ரவேலர் புறப்பட்டுப்போயினர், ஆனால் சீக்கிரத்தில் பார்வோனுக்கு அவர்கள் வனாந்தரத்திலே நோக்கமற்று அலைந்துதிரிவதுபோலத் தோன்றியது. அவனும் அவனுடைய வேலையாட்களும் இப்போது இவ்வாறு கேட்டுக்கொண்டார்கள்: “நமக்கு வேலைசெய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டதில் நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்”? (யாத்திராகமம் 14:3-5) இந்த அடிமை மக்களை இழந்தது, எகிப்திற்கு ஒரு பலத்த பொருளாதார பாதிப்பைக் கொண்டுவந்திருக்கும்.

பார்வோன் தன் படையைப் பூட்டி, ஈரோத் என்னும் இடம்வரை இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்தான். (யாத்திராகமம் 14:6-9) இராணுவத்தைப் பொருத்தவரை, எகிப்தியர்களுக்குச் சாதகமாகச் சூழ்நிலை இருந்தது, ஏனென்றால், இஸ்ரவேலர் கடலுக்கும் மலைகளுக்கும் இடையே ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். ஆனால் யெகோவா, இஸ்ரவேலர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையே ஒரு மேகத்தை வைப்பதன்மூலம் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். எகிப்தியர்களின் பக்கத்தில், “அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது,” இதனால் தாக்குதல் தடைசெய்யப்பட்டது. மறுபக்கத்திலோ, இஸ்ரவேலருக்கு அந்த மேகம் பிரகாசமாயிருந்து, “இரவை வெளிச்சமாக்கிற்று.”—யாத்திராகமம் 14:10-20.

எகிப்தியர்கள் கொள்ளையாடுவோம், சங்கரிப்போம் என்று தீர்மானமாய் முயற்சிசெய்தனர், ஆனால் மேகத்தால் தடுக்கப்பட்டனர். (யாத்திராகமம் 15:9) அந்த மேகம் மேலெடுக்கப்பட்டபோது, என்னே ஓர் அதிசயம்! செங்கடலின் தண்ணீர்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இஸ்ரவேலர் உலர்ந்த தரைவழியாய் மறுபக்கத்திற்கு கடந்துபோய்க் கொண்டிருந்தனர்! பார்வோனும் அவனுடைய சேனைகளும், அவர்களுடைய முன்னாள் அடிமைகளைப் பிடித்து, கொள்ளையடிக்க தீர்மானித்தவர்களாய் பெரு முழக்கங்களோடு கடற்தரையில் சென்றனர். ஆனால், எகிப்தின் தலைக்கனமிக்க அரசன் எபிரெயர்களின் கடவுளின் ஈடுபாட்டை எதிர்பாராதவனாக இருந்தான். யெகோவா, எகிப்தியர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி, அவர்களின் இரதங்களின் சக்கரங்களைக் கழலச்செய்தார்.—யாத்திராகமம் 14:21-25அ.

எகிப்தியர்களின் பலசாலிகள், “இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்,” என்று சப்தமிட்டார்கள். இந்த உணர்வு பார்வோனுக்கும் அவனுடைய மனிதர்களுக்கும் அதிக தாமதமாக வந்தது. அக்கரையிலே பாதுகாப்பாயிருந்த மோசே, தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினார், தண்ணீர்கள் பலமாய் திரும்பிவந்து பார்வோனையும் அவனுடைய சேனையையும் கொன்றுபோட்டது.—யாத்திராகமம் 14:25ஆ-28.

அனுபவம் கற்பித்த பாடங்கள்

எனவே, இதன்படி, யெகோவா யார்? பெருமைபிடித்த பார்வோன் அந்தக் கேள்விக்குப் பதிலைப் பெற்றான். எகிப்தில் நடந்த சம்பவங்கள், யெகோவா ஒருவரே உண்மைக் கடவுள், ஜனங்களின் ‘மதிப்பற்ற கடவுட்கள்’ போலில்லாமல், முற்றிலும் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தின. (சங்கீதம் 96:4, 5) அவருடைய ஆச்சரியமூட்டும் வல்லமையால், யெகோவா “வானத்தையும் பூமியையும்” உண்டாக்கினார். அவரே பெரிய விடுவிப்பாளராக இருக்கிறார், ‘இஸ்ரவேலாகிய தமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்படிச்’ செய்தவர். (எரேமியா 32:17-21) யெகோவா தம்முடைய மக்களைப் பாதுகாப்பார் என்பதை இது எவ்வளவு தெளிவாக நிரூபித்தது!

பார்வோன் அந்தப் பாடங்களைக் கசப்பான அனுபவங்கள்மூலம் கற்றுக்கொண்டான். சொல்லப்போனால், இறுதிப் பாடம் அவனுடைய உயிரையே பலியாக்கியது. (சங்கீதம் 136:1, 15) அவன், “யெகோவா யார்?” என்று கேட்டபோது, மனத்தாழ்மையைக் கடைப்பிடித்திருந்தால் அவன் அதிக ஞானமுள்ளவனாய் இருந்திருப்பான். பின்பு, அந்த அரசன் பெற்றப் பதிலிற்கு இசைவாக நடந்திருப்பான். சந்தோஷகரமாகவே, யெகோவா யார் என்பதை இன்று அநேக மனத்தாழ்மைமிக்க மக்கள் கற்றுவருகிறார்கள். மேலும், அவர் எப்படிப்பட்ட ஆளுமையை உடையவராக இருக்கிறார்? நம்மிடமிருந்து அவர் எதைக் கேட்கிறார்? யெகோவா என்ற பெயரை உடைய ஒருவரேயாகிய அவருக்கு, உங்களுடைய போற்றுதலை, அடுத்தக் கட்டுரை அதிகரிப்பதாக.—சங்கீதம் 83:17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்