ருமேனியாவில் நேரங்களையும் காலங்களையும் யெகோவா மாற்றுகிறார்
காலப்போக்கில் மாற்றங்கள் 1989-ல் கிழக்கு ஐரோப்பா முழுவதும் வீசியது. வெல்லமுடியாது நிலைத்துநின்ற அரண்கள் போன்ற அரசாங்கங்கள் சில மாதங்களுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் விழுந்தன. அரசியல் மாற்றங்களோடு, சமுதாய, பொருளாதார, மேலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக ஆர்வத்தைக் கொடுக்கும் மத மாற்றங்களும் வந்தன. தேசத்திற்குத் தேசம், யெகோவாவின் சாட்சிகள் அரசாங்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டனர், அவர்களுடைய மத நடவடிக்கைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு மறுபடியும் சுயாதீனம் வழங்கப்பட்டது.
ஆனால் ருமேனியாவில் காரியங்கள் வித்தியாசமாக இருக்கப்போவதுபோல் தோன்றியது. மக்கள்மீது அரசாங்கம் அவ்வளவு கடினமாக இருந்ததினால், மாற்றங்கள் சிறிதளவு பாதிப்பையே கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்பட்டது. மற்ற கிழக்கு ஐரோப்ப தேசங்களில் என்ன நடக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொண்டனர், ‘அர்மகெதோனுக்கு முன்பாக எப்போதாவது வணக்க சுயாதீனத்தை நாம் அனுபவிக்க முடியுமா?’ அவர்களுடைய இருதயங்கள், தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒன்றுகூடி வருவது, நற்செய்தியை வெளியரங்கமாகப் பிரசங்கிப்பது, மேலும் தங்களுடைய பைபிள் பிரசுரங்களை எப்பொழுதும் மறைத்துவைக்கும் தேவையில்லாமல் வெளிப்படையாகப் படிப்பது போன்றவைக்காக ஏங்கின. இவையெல்லாம் வெறும் ஒரு கனவுபோல் இருந்தது.
பின்பு அந்தக் கனவு நனவானது! இது டிசம்பர் 1989-ல் நடந்தது. ஒவ்வொருவரையும் திகைப்பிலூட்டும்படி, கெளசெஸ்க்கூ-வின் ஆட்சி திடீரென்று வீழ்ச்சியடைந்தது. திடீரென்று அந்தக் கிறிஸ்துவர்கள் விடுதலையடைந்தனர். ஏப்ரல் 9, 1990-ல், யெகோவாவின் சாட்சிகள் ருமேனியாவில் ஒரு மத அமைப்பாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார்கள். அங்குள்ள 17,000 சுறுசுறுப்பான சாட்சிகளுக்கு யெகோவா நேரங்களையும் காலங்களையும் மாற்றினார்.—தானியேல் 2:21-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
ஒரு நீண்ட வரலாறு
கேரல் சாபோ, யோசிஃப் கிஸ் என்பவர்கள், 1911-ல், தாங்கள் பைபிள் சத்தியத்தைப் படித்துத் தங்களுடைய ஜீவனை யெகோவாவின் சித்தத்தைச் செய்ய அவருக்கு ஒப்புக்கொடுத்திருந்த இடமாகிய ருமேனியாவுக்கு, ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலுள்ளவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பினர். ருமேனியாவுக்கு வந்தவுடன், அவர்கள் உடனே பிரசங்கம்பண்ண ஆரம்பித்தனர். முதல் உலக யுத்தம் ஆரம்பித்தபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். ஆனாலும், அவர்கள் விதைத்த ராஜ்ய விதைகள் பலன்தர ஆரம்பித்தன. அவர்களுடைய வேலை 1920-ல் மறுபடியும் ஒழுங்கமைக்கப்பட்டபோது, ருமேனியாவில் ஏறக்குறைய 1,800 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தனர்.
அந்தச் சமயம் வந்தபோது, பால்கன்ஸில், தீப்போல் பரவின புரட்சி ஆவி ருமேனியாவில் அதிகமதிகமாக உணரப்பட்டது, மேலும் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் போயின. கடினமான காலங்களுக்கு மத்தியிலும், நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள் வேலையைத் தொடர்ந்தனர். உவாட்ச் டவர் சங்கம், 1924-ல், கிளஜ்-நெப்போக்கா-வில் உள்ள 26 ரெஜினா மரியா தெருவில், ருமேனியா, ஹங்கேரி, பல்கேரியா, யுகோஸ்லாவியா, அல்பேனியா போன்ற நாடுகளிலுள்ள வேலையை வழிநடத்துவதற்காக ஓர் அலுவலகத்தை ஆரம்பித்தது.
அரசியல் நிலை மிகவும் கடினமானது, ஆனாலும், அதிகாரங்களின் பிரச்னைகளுக்கு மத்தியிலும், அமைப்புக்குள்ளும் பிரச்னை இருந்தது. வருடாந்தர புத்தகம் 1930 சொல்கிறது: “சங்கம் அங்கு அனுப்பின ஒருவரின் உண்மையற்றத் தன்மையினால், நண்பர்கள் பிரிக்கப்பட்டனர், அவர்களுடைய நம்பிக்கை பெரும் அளவிற்கு ஆட்டங்கண்டது. அந்த நாட்டில் எப்படியாவது மறுபடியும் வேலையைத் தொடங்கிவிடவேண்டுமென்று சங்கம் வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தது, ஆனால் உள்ளூர் அதிகாரங்கள் அனைத்தையும் தடைசெய்திருந்தன. கர்த்தர் நல்லவழி காண்பிக்கும்வரை நாம் காத்திருப்போம்.” பிறகு, 1930-ல், மாட்டின் மெஜிரோஷி, 1922-ல் முழுக்காட்டப்பட்ட ஒரு ருமேனிய சாட்சி, புதிய கிளை அலுவலக ஊழியராக நியமிக்கப்பட்டார்; மேலும் அலுவலகம், பின்பு, 33 கிரிஷனா தெரு, புகாரெஸ்ட் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின், இறுதியில் சங்கம் 1933-ல் ருமேனியாவில் சட்டப்பூர்வமான ஒரு குழுவாகப் பதிவுசெய்யப்பட்டது.
கஷ்டங்கள் தொடர்ந்தன
ருமேனியாவில் உள்ள சாட்சிகளுக்குக் கடும்சோதனைகள் வர ஆரம்பித்தன. வருடாந்தர புத்தகம் 1936 அறிக்கையிடுகிறது: “ருமேனியாவைவிட பூமியில் வேறெங்கும் சகோதரத்துவம் அவ்வளவு கஷ்டங்களைப் பெறவில்லை என்பதில் சந்தேகமில்லை.” எல்லா கஷ்டங்களின் மத்தியிலும், 1937 ஊழிய அறிக்கை, ருமேனியாவில் 856 பிரஸ்தாபிகளோடு 75 சபைகள் என்று காட்டியது. நினைவு ஆசரிப்பு நாளுக்கு 2,608 பேர் வந்திருந்தனர்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, ருமேனியா பாதிக்கப்படாமல் இல்லை. செப்டம்பர் 1940-ல், தளபதி யான் ஆன்டெனஸ்க்கூ அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி, ஹிட்லரைப்போல ஆட்சிசெய்ய ஆரம்பித்தார். திகிலூட்டும் செயல்கள் அன்றாட விஷயமாகியது. நூற்றுக்கணக்கான நம் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர். சகோதரர் மேக்யாரோசி செப்டம்பர் 1942-ல் கைதுசெய்யப்பட்டார், ஆனால் அவர் இன்னும் டிரான்ஸில்வேனியாவின் நடவடிக்கைகளைச் சிறையிலிருந்துகொண்டே மேற்பார்வையிட முடிந்தது.
ஹிட்லருடைய படைகள், நாட்டை அமோகவெற்றியோடு 1944-ல் கைப்பற்றியபோது துன்புறுத்தல் தொடர்ந்தது. புகாரெஸ்ட்டிலிருந்து வந்த ஓர் அறிக்கை நாசி ஆட்சியின்கீழ் இருந்த நிலைமைகளைப்பற்றி விளக்கியது: “இந்த நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் மிகக்கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டனர். ஹிட்லருக்கு ஆதரவு தந்த மதகுருக்களால் கம்யூனிஸ்ட்காரர்களைவிட இவர்கள் அதிக மோசம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, கம்யூனிஸ்ட்காரர்களோடு சிறையில் அடைக்கப்பட்டனர், இவர்களில் பலர் 25 வருட சிறைவாசத்திற்கோ, ஆயுள் தண்டனைக்கோ, மரணத்திற்கோ தீர்ப்பளிக்கப்பட்டனர்.”
ஜூன் 1, 1945-ல், இறுதியாக யுத்தம் முடிவுற்றது. புகாரெஸ்ட்டில் இருந்த சங்கத்தின் அலுவலகம் நடவடிக்கையை மீண்டும் தொடர்ந்தது. அச்சுத்தாள்கள் தட்டுப்பாடு இருந்தபோதிலும், பற்றுறுதிகொண்ட ஊழியர்கள் 8,60,000-க்கு மேற்பட்ட சிறுபுத்தகங்களையும், 85,000 பிரதிகளுக்கு மேற்பட்ட தி உவாட்ச்டவர் பத்திரிகைகளையும் ருமேனிய, ஹங்கேரிய மொழிகளில் அச்சடித்தனர். யெகோவா அவர்களுடைய கடினவேலையை அபரிமிதமாக ஆசீர்வதித்தார். ஏறக்குறைய 1,630 புதியவர்கள் 1946-க்குள் முழுக்காட்டப்பட்டனர். அந்த வருடத்தின் முக்கிய நிகழ்ச்சி, செப்டம்பர் 28, 29-ல் நடந்த தேசிய மாநாடு ஆகும். மதகுருக்கள் தங்களால் இயன்ற அளவு இந்த மாநாட்டிற்கு இடையூறுசெய்து தடுத்துநிறுத்த முயற்சித்தனர், ஆனால் அவர்கள் வெற்றியடையவில்லை. மேலுமாக, சுமார் 15,000 நபர்கள் பொதுப்பேச்சுக்கு வந்திருந்தனர். இப்பேர்பட்ட ஒரு மாநாட்டை நடத்த முடிந்தது, ருமேனியாவிலுள்ள சகோதரர்களுக்கு இதுதான் முதல் தடவை.
சங்கம், சகோதரர் ஆல்ஃபிரட் ரூட்டிமேன் என்பவரை சுவிஸ் கிளை அலுவலகத்திலிருந்து ருமேனியாவுக்கு அனுப்பியிருந்தது. ஆகஸ்ட் 1947-ல், 4,500-க்கு மேற்பட்ட சகோதரர்களிடம் 16 இடங்களில் பேசி, அவர்களைச் சீக்கிரத்தில் நடக்கப் போகிறவற்றைக்குறித்து உற்சாகப்படுத்தினார். விரைவிலேயே, சாட்சிகளுக்கு அழுத்தங்கள் வரவிருந்தன, இந்த முறையோ கம்யூனிஸ்ட் ஆட்சியினால் வந்தது. பிப்ரவரி 1948-ல், அதிகாரங்கள் நம்முடைய அச்சடிப்பு, பிரசங்கம் போன்ற நடவடிக்கைகளைத் தடைசெய்தனர். பின்பு, 1949-ல், 38, ஏல்யான் தெருவிலுள்ள அலுவலகம் திடீர் சோதனையிடப்பட்டது. இதன்விளைவாக, மேக்யாரோசி உட்பட அநேக சகோதரர்கள், கைதுசெய்யப்பட்டனர். இந்த முறை, அவர்கள் ஏகாதிபத்தியத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, சிறைச்சாலைகளுக்கு அல்லது அடிமை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அடுத்த 40 வருடங்களுக்கு, வேலை தடைசெய்யப்பட்டது, யெகோவாவின் சாட்சிகள் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அமைப்புக்குள் எதிரிகளால் தூண்டப்பட்ட பிரச்னைகள், துயரத்தை அதிகரித்தது. முடிவாக, கெளசெஸ்க்கூ-வின் ஆட்சி 1989-ல் கவிழ்க்கப்பட்டது, அவர்கள் விடுதலையடைந்தனர்! அவர்களுடைய இந்தச் சுயாதீனத்தைக்கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
மறுபடியும் வெளியரங்கமாகப் பிரசங்கித்தல்
சாட்சிகள் எந்த நேரத்தையும் வீணாக்கவில்லை. அவர்கள் உடனே வீட்டுக்கு வீடு பிரசங்கம்பண்ண ஆரம்பித்தார்கள். ஆனால், பல வருடங்கள் தைரியத்தோடு மறைமுக சந்தர்ப்பச் சாட்சிகொடுத்தல்மூலம் வேலையைச் செய்துகொண்டு வந்த இவர்களுக்கு இது எளிதாக இல்லை. வெளியரங்கமாகப் பிரசங்கஞ்செய்ய முடியும் என்பதைக்குறித்து அவர்கள் இப்போது கொஞ்சம் கூச்சப்படுகிறார்கள். அவர்களில் பலர், இதை இதற்குமுன் ஒருபோதும் இல்லை, கடந்த முறை அவர்களில் எவரும் வீட்டுக்கு வீடு பிரசங்கத்தை செய்தது 1940-ன் இறுதி பாகத்தில்தான். எப்படிப்பட்ட பலன்களை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்? நாம் இப்போது பார்க்கலாம்.
ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல, பொருத்தமான இடம், 25 லட்சம்பேர் வசிக்கிற, தலைநகரமாகிய புகாரெஸ்ட். இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு நான்கே சபைகள் தான் இருந்தன. இப்பொழுது அங்குப் பத்துச் சபைகள் இருக்கின்றன, 2,100-க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் 1992 நினைவு ஆசரிப்புக்கு வந்தனர். அநேக முன்னேற்றமடையும் வீட்டுப் பைபிள் படிப்புகள் நடத்தப்படுவதால், சீக்கிரத்தில் சில புதிய சபைகள் உண்டாக்கப்படலாம்.
க்ரையோவ, நாட்டின் தென்மேற்குப் பகுதியில், சுமார் 3,00,000 பேர் வசிப்பவர்களை உடைய ஒரு நகரம். முழு நகரத்திலும், 1990 வரை, சுமார் 80 சாட்சிகள் மட்டுமே இருந்தனர். பின்பு பயனியர் ஆர்வம் பிடித்துக்கொண்டது, வேலை வெகுவிரைவாக முன்னேறியது. முழுக்காட்டப்பட்டவர்கள், 1992-ல் மட்டுமே 74 பேர், மேலும் பைபிள் படிப்புகள் 150-க்கும் மேலாக நடத்தப்பட்டுவருகின்றன. அவர்கள், 200-க்கு மேற்பட்ட பிரஸ்தாபிகளை உடையவர்களாக, ராஜ்ய மன்றத்திற்கு ஒரு பொருத்தமான இடத்தை, ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
திர்கு-மூர்ஸ் என்ற இடத்தில் ஒரு சாட்சி சகோதரியும், இரண்டு சகோதரர்களும், அவளுடைய பெயரைச் சர்ச் பதிவிலிருந்து நீக்குவதற்கு ஓர் ஆர்த்தடாக்ஸ் பாதிரியிடம் சென்றார்கள். அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை அறிந்தவராக அந்தப் பாதிரி, அவர்களை உள்ளே அழைத்தார். ஒரு நல்ல கலந்தாலோசிப்பு நடந்தது. பின்பு, பாதிரி சொன்னார்: “எனக்கு உங்கள்மேல் பொறாமையாயிருக்கிறது, ஆனால் கெட்டநோக்கத்தில் அல்ல. நீங்கள் செய்கிற வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கவேண்டும். ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஓர் உறங்கும் அரக்கன் என்பது மிகவும் வருந்தத்தக்கது”! அவர் நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேடையும் தி உவாட்ச்டவர் பிரதி ஒன்றையும் எடுத்துக்கொண்டார். இனிமேல் ‘உறங்கும் அரக்கனைச்’ சேர்ந்தவளாக ஒருபோதும் இந்தச் சகோதரி இருக்கமாட்டாள் என்பதால் அவள் அதிக சந்தோஷப்பட்டாள்.—வெளிப்படுத்துதல் 18:4.
இன்று சத்தியத்தைக் கற்றுக்கொள்பவர்களில் அநேகர் இளைஞராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? தெளிவாகவே அரசாங்க மாற்றத்தினால் அதிகத்தை எதிர்பார்த்தவர்கள் இவர்களே; ஆனால் இவர்கள் குழப்பமடைந்திருந்தனர். யெகோவாவின் ராஜ்யம் மட்டுமே நம் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் கொண்டுவர முடியும் என்பதை அறிவதில் அதிகச் சந்தோஷப்படுகிறார்கள்.—சங்கீதம் 146:3-5.
சிறிய இடங்களில் பெரிய காரியங்கள் நிகழ்தல்
ஓகோலீஷ், வட ருமேனியாவிலுள்ள ஒரு சிறிய கிராமம். பின்ட்டே மாய்ஸ என்னும் பெயருடைய ஒரு மனிதர், 1920-ல், ரஷ்ய யுத்தமுனையிலிருந்து திரும்பிவந்தவர், அங்கு இவர் ஒரு யுத்தக் கைதியாகக் கொண்டுபோகப்பட்டிருந்தார். அவர் ஒரு காலத்தில் கத்தோலிக்கராக இருந்தவர், அவர் திரும்பிவருவதற்கு முன் ஒரு பேப்டிஸ்ட்-ஆக மாறியிருந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, பைபிள் மாணாக்கர்கள், யெகோவாவின் சாட்சிகள் அப்போது இப்படித்தான் அறியப்பட்டிருந்தார்கள், அவரைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்பு, அவர் சொன்னார்: “இப்பொழுது நான் கடவுளைப்பற்றிய சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!” ஓகோலீஷ்-ல், 1924-க்குள், 35 பேர்கொண்ட ஒரு தொகுதி அங்கு இருந்தது.
இன்று, உள்ளூர் மக்கள்தொகையான 473 பேரில், 170 ராஜ்ய பிரஸ்தாபிகள் அங்கு இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரஸ்தாபிக்கும் சுமார் இரண்டு வீடுகள் தான் அவருடைய பிராந்தியமாக நியமிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஊழியம் செய்கிறார்கள். ஆனாலும், அவர்கள் நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். சமீபத்தில் அவர்கள், 400 பேர் அமரக்கூடிய ஓர் அழகிய ராஜ்ய மன்றத்தைக் கட்டினர். எல்லா வேலையும் உள்ளூர் சாட்சிகளால் செய்யப்பட்டது.
வாலிய லார்கா என்ற இடத்தில்தான், சகோதரர்கள் சாபோ-வும், கிஸ்-ம் 1914-ல், தங்கியிருந்தனர். இங்கு, வசிக்கும் 3,700 பேர் மத்தியில், 1991-ல், எட்டுச் சபைகளும் 582 ராஜ்ய பிரஸ்தாபிகளும் இருந்தனர். அங்கு, 1992-ன் நினைவு ஆசரிப்பில், 1,082 பேர் ஆஜராயிருந்தார்கள்—இது இந்தப் பள்ளத்தாக்கிலுள்ளவர்களில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவராகும்.
விசேஷித்தப் பயனியர்கள் வழியைத் தயார்செய்கின்றனர்
விசேஷித்தப் பயனியர்கள் நற்செய்தியை அதிக ஒதுக்கமாயுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதில் பெரிய பங்கை வகிக்கின்றனர். பிரசங்கிப்பதற்கான சுயாதீனம் கொடுக்கப்பட்டவுடன், யோன்யெல் ஆல்பன், இரண்டு நகரங்களில் வேலையை ஆரம்பித்து, ஒவ்வொரு வாரத்தின் இரண்டு நாட்களை ஆர்ஷோவாவிலும், ஐந்து நாட்களை டர்னு செவரின்னிலும் கழித்துக்கொண்டிருந்தார்.
யோன்யெல், ஆர்ஷோவாவுக்கு வந்தபோது அங்குச் சாட்சிகளே இல்லை. முதல் வாரம், அவர் ஒரு 14 வயது பையனோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அந்தச் சிறு பையன் இரண்டு மாதங்களுக்குள் அவ்வளவு அநேக மாற்றங்கள் செய்ததால், ஒரு நண்பனும் ஓர் அடுத்த வீட்டுக்காரருங்கூட படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த வீட்டுக்காரர் ரொலெண்ட் என்பவர் ஒரு கத்தோலிக்கர், வியப்பூட்டும்விதத்தில் முன்னேறினார். ஒன்றரை மாதம் கழிந்தபின்பே, யோன்யெலோடு பிரசங்கவேலையில் உடன்சேர்ந்துபோனார், ஐந்தே மாதங்களில் அவர் முழுக்காட்டப்பட்டார். அதுமுதல், அவர் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டார். அவருடைய தாயும் படிக்க ஆரம்பித்து, 1992 “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்டார். இப்போது ஆர்ஷோவாவில் பத்துப் பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், அவர்கள் 30 வீட்டுப் பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள்.
டர்னு செவரின்னில் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட முதல் நபர், யோன்யெல் தங்கியிருந்த தங்கும்விடுதியில் வரவேற்பாளராக இருந்தவர். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த மனிதர் ஒரு முழுக்காட்டப்பட்டிராத பிரஸ்தாபியானார், மூன்று மாதங்களில் முழுக்காட்டப்பட்டார். இப்போது மொத்தமாக 84 வீட்டுப் பைபிள் படிப்புகளை நடத்தும் அங்குள்ள 32 பிரஸ்தாபிகளில் இவர் ஒருவர்.
மற்றொரு விசேஷித்தப் பயனியர் காபரியெல்லா ஜெக்கா, தடையின் மத்தியிலும் ஒழுங்கான பயனியராகச் சேவைசெய்தவள். அவருடைய ஆசை, தேவை எங்கு அதிகமோ அங்கு வேலைசெய்வது. அவளுக்குப் பெரிய பிராந்தியம் கொடுக்கப்பட்டது. சிலசமயங்களில் அக்கறையுள்ளவர்களைச் சந்திக்க, அவள் 100 முதல் 160 கிலோமீட்டர் தூரம்வரை பயணஞ்செய்தாள். இவள் ஊழியம்செய்த மாட்ரு நகரில், நான்கே சாட்சிகள்தான் இருந்தார்கள். “மாட்ருவில் வேலை அதிகரிக்கப்பட்டதால் பாதிரிகளும், மற்ற மதத் தொகுதிகளும் எங்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள்,” என்று அவள் சொல்கிறாள். “அவர்கள், என்னைத் தங்க அனுமதிக்கும் எல்லா குடும்பங்களையும் வற்புறுத்தும்படி, மேயர், போலீஸ் போன்றவர்களைத் தூண்டினர். என்னை அவர்கள் வெளியே துரத்திவிட்டனர். எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தங்குவதற்கான இடத்தை நான் தேட வேண்டியதாயிருந்தது.”
காபரியெல்லா, ஆர்ஷோவாவில், மதம் அல்லது பைபிளில் அக்கறையே காண்பிக்காத ஒரு நாத்திகரோடு படிப்பை ஆரம்பித்தாள். படிப்பின் நான்கு மாதங்களிலேயே, இந்தப் பெண்மணி பைபிளின் சார்பாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய கணவர் இரவில் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றி, அவளைத் திருமண விலக்குச்செய்யவோ அல்லது கொலை செய்யவோ போவதாகப் பயமுறுத்தினாலும், அவள் அவளுடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொண்டாள். அவள் முழுக்காட்டப்படுவதற்கு முன்பே, பத்துப் பைபிள் படிப்புகளை நடத்தினாள்.
மகத்தான எதிர்பார்ப்புகள் மிக அருகில்
ஆகஸ்ட் 1992-ல், ருமேனியா, 286 சபைகளில், 24,752 பிரஸ்தாபிகள் என்ற ஓர் உச்சநிலையை எட்டியது. நினைவு ஆசரிப்பின் வருகை எண்ணிக்கை, 66,000-க்கும் மேல். புகாரெஸ்ட்டில் உள்ள சிறிய கிளை அலுவலகத்தில், 17 பணியாளர்கள், தங்களுடைய சகோதரர்களை ஆவிக்குரிய வகையில் கவனித்துக்கொள்வதற்காகத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருகிறார்கள். ஒரு பெரிய கிளை அலுவலகத்தைச் சீக்கிரத்தில் கட்டுவதற்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக நடக்கும் விரைவான மாற்றங்களைக் கண்டு ருமேனியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளால் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. யெகோவாவினுடைய பெயரைத் தாங்கிநின்று, அவரைப்பற்றிய திருத்தமான அறிவுக்கும், மாறாத நோக்கத்திற்கும் மக்களை வழிநடத்தும் சர்வதேசச் சபையின் பாகமாக அவர்கள் இருப்பதற்காக யெகோவா தேவனுக்கு அதிக நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். இன்னல்கள், துன்புறுத்தல்கள் நிறைந்த அவ்வளவு அநேக வருடங்களுக்குப் பிறகு, ருமேனியாவில் நேரங்களையும் காலங்களையும் யெகோவா உண்மையில் மாற்றியிருப்பதற்கு அவர்கள் யெகோவாவிற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்!
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ருமேனியா
ஹங்கேரி
பல்கேரியா
புகாரெஸ்ட்
கிளஜ்-நெப்போக்கா
க்ரையோவ
திர்கு-மூர்ஸ்
ஆர்ஷோவா
டர்னு செவரின்
மாட்ரு
துர்தா
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
1. ஏறக்குறைய 700 சாட்சிகள் ஒரு காட்டுப்பகுதியில் 1947-ல் கூடியிருந்தனர்
2. ஒரு பொதுப் பேச்சின் அழைப்பிதழ் 1946-ல்
3. ஆல்பா ஈலுயாவில் 1992-ல் அசெம்பிளி
4. கிளஜ்-நெப்போக்காவில் இன்று சாட்சிக்கொடுத்தல்
5. துர்தாவுக்கு அருகில் ராஜ்ய மன்றம்
6. புகாரெஸ்ட்-ல் பெத்தேல் குடும்பம்