யெகோவாவின் தவறாத ஆதரவுக்கு நன்றியறிதல்
ஷாரன் காஸ்கின்ஸ் கூறியது
பூமியில் பரதீஸ்! பசும்புல்வெளிகளில் ஓடியாடிக்கொண்டு, வண்ணத்துப் பூச்சிகளைச் துரத்திக்கொண்டு, சிங்கக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டும் இருப்பவளாக என்னை நான் காண்கிறேன். அது அவ்வளவு நன்றாகத் தோன்றியது! ஆனால் சந்தேகங்கள் இருந்தன. எத்தனை முறைகள் என்னுடைய நம்பிக்கை கடைசியில் மனமுறிவில் முடிவடைந்திருக்கிறது!
என்னால் நினைவுபடுத்திப் பார்க்க முடிந்தவரை, சக்கர நாற்காலி என்னுடைய நிலையான கூட்டாளியாக இருந்தது. பிறப்பிலிருந்தே, மூளைசார்ந்த முடக்குவாதம், சிறுபிராயத்தின் சந்தோஷங்களைத் திருடிவிட்டது. மற்ற குழந்தைகள் சறுக்குகளிலும் சைக்கிள்களிலும் விளையாடிக் களித்துக்கொண்டிருக்கையில், நானோ நடக்கக்கூட முடியாமல் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆகவே ஒவ்வொரு விசுவாச சுகமளிக்கும் ஆளிடம் என்னுடைய தாய் என்னைக் கொண்டுபோகையிலும், நாங்கள் ஓர் அற்புதம் நிகழும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் எந்தச் சுகமும் அளிக்கப்படாமல், அவள் என்னைக் கொண்டுவருவாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது; ஆனால் அவளுக்கு எவ்வளவு மனமுறிவை ஏற்படுத்தியது!
ஓர் உண்மை நம்பிக்கைக்கான ஏக்கத்துடன் என் தாய், 1964-ன் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். எனக்கு அப்போது சுமார் ஆறரை வயதாக இருந்தது.
இந்த பூமியில் ஓர் அழகான பரதீஸ் ஒருகாலத்தில் இருந்தது என்று கற்றுக்கொள்வது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. வருந்தத்தக்கவிதத்தில், முதல் மனிதனாகிய ஆதாம் அதை இழந்துவிட்டான்; ஆனால் அவன் ஒருகாலத்தில் கடவுளிடம் அனுபவித்த நெருக்கத்தை நான் அனுபவிக்க விரும்பினேன். கடவுளுடன் ஓர் உறவை அனுபவிப்பது எப்படி இருந்திருக்கும்? அல்லது அவருடைய குமாரன் பூமியில் இருந்தபோது வாழ்ந்திருப்பது எப்படி இருந்திருக்கும்? என்னுடைய பகற்கனவுகள், என்னை எதிர்காலத்தில் வரும் பரதீஸுக்கும் கொண்டுச்சென்றன. அந்தச் சிறு வயதிலேயே, நாங்கள் சத்தியத்தைக் கண்டடைந்துவிட்டோம் என்பது எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது.
என் தாயார், குடும்பத்தை யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்குக் கொண்டுச்செல்ல துவங்கினாள். அவர்களுடைய கூட்டங்கள் நாங்கள் சர்ச்சுகளில் பார்த்ததற்கு எவ்வளவோ வித்தியாசமாக இருந்தன! அந்த மக்களும் அந்தச் சூழலும் என் உணர்ச்சிகளை ஆழமாகத் தொட்டன.
எங்களை ராஜ்ய மன்றத்திற்குக் கொண்டுச்செல்வது என் தாயாருக்கு ஒரு கடுஞ்சோதனையாக இருந்தது. என்னைச் சேர்க்காமல், மூன்று இளைய குழந்தைகள் இருந்தனர்; எங்களிடம் காரும் இல்லை. அவளால் முடிந்த போது நாங்கள் ஒரு டாக்ஸியில் சென்றோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவள் எப்படிக் கஷ்டப்பட்டாள் என்று எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு டாக்ஸியும் தென்படவில்லை. திடீரென்று, டிரக்கில் வந்த ஒருவர் எங்களை ஏற்றிக்கொண்டுச்சென்றார். நாங்கள் கூட்டத்திற்குத் தாமதமாகிவிட்டோம், ஆனால் அங்கு சேர்ந்துவிட்டோம். நாங்கள் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தோம்!
சீக்கிரத்தில், கார்களைக் கொண்டிருந்த நம் பிரியமான சகோதர சகோதரிகள் அன்புடன் முறையாக எங்களைக் கூட்டிக்கொண்டுச் சென்றனர். இது உண்மையான கிறிஸ்தவ அன்பு. உண்மையிலேயே உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலொழிய கூட்டங்களைத் தவறவிடக்கூடாது என்ற என் தாயின் உற்சாகம், ‘சபை கூடிவருதலின்’ முக்கியத்துவத்தை என் இளம் மனதில் பதிய வைத்தது. (எபிரெயர் 10:24, 25) என் தாய் கற்றுக்கொண்ட காரியங்களால் உந்துவிக்கப்பட்டு, தன் வாழ்க்கையை யெகோவாவுக்காக ஒப்புக்கொடுத்து, 1965-ல் முழுக்காட்டப்பட்டாள்.
அந்தச் சமயத்தில் கூட்டங்களுக்கு அதிக முழுமையான போற்றுதல் காண்பிக்கும் வயதை நான் அடைந்தேன். நியூ யார்க்கிலுள்ள புரூக்லினின் சைப்ரஸ் ஹில்ஸ் சபையில், ஐரோப்பியர், கறுப்பர், ஹிஸ்பேனிக்கியர், இன்னும் மற்றவர்கள் ஒருமித்து வணக்கம் செலுத்தினர். கடவுள் பயமுள்ள மக்கள் அத்தகைய உண்மையான சகோதரத்துவத்துடனேதான் வாழவேண்டும் என்பது அவ்வளவு சரியாகத் தோன்றியது.—சங்கீதம் 133:1.
கூட்டங்களுக்கு எப்படித் தயாரிக்க வேண்டும் என்று என் தாய் எனக்குக் கற்றுக்கொடுத்தாள். இது மனரீதியில் எந்தப் பிரச்னையாகவும் இருக்கவில்லை, ஆனால் உடல்ரீதியில் பிரச்னையாக இருந்தது. மூளைசார்ந்த முடக்குவாதம் எளிய வேலைகளைப் பெரிய திட்டங்களாக மாற்றுகிறது. நம்முடைய பைபிள் பிரசுரங்களில் விடைகளைக் குறிப்பதற்கு ஒரு நேரான கோடு வரைவது அன்றும் இன்றும் என்னால் முடியாத காரியமாக இருக்கிறது. ஆயினும், பழக்கத்தில், நான் கோடிடுவதில் முன்னேற்றம் அடைந்தேன்.
என்னுடைய மனது, காரியங்களைச் சொல்வதற்குத் ததும்பிக்கொண்டு இருந்தது. ஆனால் அவை என்னுடைய வாயிலிருந்து வெளியே வரும்போது, வார்த்தைகள் குழறும். என்னுடைய தசைகள் விறைத்துவிடாதபடிக்கு ஓய்வெடுப்பது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் முடிந்த அளவிற்குத் தெளிவாக உச்சரிப்பதிலும் நான் கவனம் செலுத்த வேண்டியதாய் இருந்தது. குறிப்பு சரியாக வெளிவராமல் அல்லது ஆட்களால் என்னுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எனக்குத் தெரிந்தபோது வருத்தம் மேலோங்கி நிற்கும். இருந்தாலும், என்னைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு, சபையிலுள்ள சகோதர சகோதரிகளால் என்னுடைய பேச்சை அதிகமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும், இந்தப் பிரச்னையால் இன்னும் நல்ல நாட்களையும் கடினமான நாட்களையும் கொண்டிருக்கிறேன்.
ஆறு கவலைக்குரிய மாதங்கள்
எட்டாவது வயதில், இன்று வரையாக என்னைப் பாதிக்கும் ஓர் ஆறு மாத அனுபவம் இருந்தது. உடல், வேலை, பேச்சு ஆகியவை சம்பந்தமாகக் குணப்படுத்தும் சிகிச்சைகள் எனக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்தாலும், மருத்துவர்கள் என்னை நியூ யார்க்கிலுள்ள மேற்கு ஹேவர்ஸ்டிராவில் இருக்கும் மறுசீரமைப்பு மருத்துவமனைக்கு அனுப்பினர். நானும் என் தாயாரும் மனம் உடைந்துபோனோம். பல வருடங்களுக்கு முன்பு, மருத்துவர்கள் என்னை மூளைவளர்ச்சி குறைவானவள் என்று என் நோயைத் தவறாக நிர்ணயம் செய்தபோது, என்னை ஒருபோதும் மருத்துவமனையில் விட்டுவிடமாட்டாள் என்று அவள் அவர்களிடம் சொன்னாள். ஆகவே, தற்காலிகமாக என்னைவிட்டுப் பிரிந்திருப்பதுகூட அவளுக்குக் கடினமானது. என்றபோதிலும், அவளையும் என் தந்தையையும் விட்டு தனிப்பட்ட ஒரு பலனளிக்கும் வாழ்க்கையை வாழ்வது என்பது கூடியவரை உடல்பிரகாரமாக ஒரு தன்னிறைவான வாழ்க்கையை வாழ்வதை அர்த்தப்படுத்தும் என்று அவள் கண்டாள்.
அந்த ஏற்பாடு நன்றாக இருந்தது, ஆனால் நான் கைவிடப்பட்டவளாக உணர்ந்தேன். அழுது அடம்பிடிப்பதும், காரணமின்றி கோபப்படுவதும், அந்த இடத்தைப்பற்றிய என்னுடைய உணர்ச்சிகளைத் தெளிவாகக் காண்பித்தது. என் பெற்றோர் என்னைச் சந்திப்பதற்கு மூன்று மணிநேரங்கள் பஸ்ஸில் பயணம் செய்து அடிக்கடி வரமுடிவதில்லை; குறிப்பாக என்னுடைய தாய் அவளுடைய ஐந்தாவது குழந்தைக்காக கருத்தரித்திருந்ததால் முடியவில்லை. அவர்கள் வந்துவிட்டுப் போகும்போது, அது என்னை மிகவும் வருத்தப்படுத்தியதால், அவ்விதமான சந்திப்புகளைக் குறைக்கும்படி மருத்துவர் கூறினார். இருமுறைதான் நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன்.
தாங்கும்சட்டங்கள் மற்றும் ஈயத்தாலான கனமுள்ள ஊன்றுகவைகளின் உதவியால் எப்படி நடப்பது என்று அந்தச் சிகிச்சை அளிப்பவர்கள் கற்றுக்கொடுத்தனர். அவை மிகவும் கனமுள்ளவையாகத் தோன்றின. இருந்தாலும், அந்தக் கனம் சமநிலையைக் காத்துக்கொள்ள எனக்கு உதவிசெய்து, நான் கீழே விழாமல் பார்த்துக்கொண்டது. இதுவே தாங்கும்சட்டங்களின்றி தனியாக நடப்பதற்கு வழிநடத்தும் முதற்படியாகும்.
உணவு பொருட்களை வெட்டுதல், பொத்தான்களைப் பொருத்துதல்—விரல்களைப் பயன்படுத்திச் செய்யும் எந்த வேலையும்—முடியாமல் இல்லையென்றாலும், கடினமாக இருந்திருக்கிறது. ஆனால் ஓரளவிற்குத் தானாகச் சாப்பிடவும் உடுத்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன். இது ஓரளவிற்கு சுதந்தரத்தைக் கொடுத்தது; இது பின்னால் கடவுளுடைய சேவையில் எனக்கு உதவியது.
என்னுடைய பயிற்சி முடிவு பெற்றது; மீண்டும் வீட்டில். என் தாய் என்னுடைய புதிய திறமைகளைப் பயன்படுத்தச் செய்தாள். அவ்வாறு செய்வது ஓர் உணர்ச்சி சம்பந்தமான போராட்டமாக இருந்தது; ஏனென்றால், நான் தானாகவே காரியங்களைச் செய்ய விரும்பினாலும், அவற்றை செய்து முடிப்பது வருத்தம் தருவதாயும், நேரம் எடுப்பதாயும், களைப்பூட்டுவதாயும் இருந்தது. ஏன், கூட்டங்களுக்குச் செல்வதற்காக உடுத்துவது, ஓர் இரண்டு மணிநேர திட்டமாக இருந்தது!
ராஜ்ய மன்றத்திற்கு எதிரில் உள்ள தெருவிற்கு நாங்கள் குடிபெயர்ந்தபோது, நான் உண்மையில் தானாகவே நடந்து சென்றேன். இது ஒரு பெரிய வெற்றியாக இருந்தது!
என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள்
எங்கள் குடும்பம் ஒரு சமநிலையான ஆவிக்குரிய உணவைக் கொண்டிருப்பதை என் தாய் நிச்சயப்படுத்திக்கொண்டாள். அவள் என்னோடு படித்தாள்; நான் நம்முடைய காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு வெளியீட்டையும் வாசிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். கூட்டங்களுக்குத் தயார் செய்யவும் செல்லவும் வேண்டியிருந்தது. இந்த அறிவில் என்னுடைய மனதும் இருதயமும் மூழ்கி இருந்தாலும், என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து இதைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துவதைப்பற்றிய ஆழ்ந்த எண்ணங்கள் பின்னணியில் இருந்தன. என்னுடைய இயலாமையின் மத்தியிலும், கடவுள் என்னுடைய ஆவிக்குரிய தன்மைக்கு என்னையே பொறுப்பாளியாகக் கருதுகிறார் என்பதை நான் உணருவதற்கு என் தாய் உதவினாள். அவளைச் சார்ந்துகொண்டு நான் புதிய உலகிற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்க முடியாது.
நான் கடவுளை நேசித்தேன்; ஆனால் என்னுடைய நிலைமை என்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி வைத்தது—இது ஒரு பருவவயதுடையவளுக்கு வருந்தத்தக்க உணர்ச்சியாகும். என்னுடைய வரையறைகளை ஏற்றுக்கொள்வது எனக்குக் கடினமாக இருந்தது. அடிக்கடி கோபம் என்னை மேற்கொண்டுவிடும்; இது முழுக்காட்டுதலுக்கு முன்னர் கட்டுப்படுத்தப்பட வேண்டும். (கலாத்தியர் 5:19, 20) யெகோவாவிடம் ஒப்புக்கொடுத்ததற்கு இசைவாக என்னால் வாழ முடியாவிட்டால் என்ன செய்வது?
என் தாயின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு சபை மூப்பர் என்னுடன் பேசினார். இஸ்ரவேலரிடம் எலியா தீர்க்கதரிசி கேட்ட கேள்வியை என்னிடம் சுட்டிக் காண்பித்தார்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்?” (1 இராஜாக்கள் 18:21) தெளிவாகவே, என்னுடைய சந்தேகமான போக்கில் யெகோவா சந்தோஷப்படவில்லை.
நான் ஆவிக்குரிய விதத்தில் விழித்து, யெகோவாவின் உதவிக்காகவும் என்னுடைய வாழ்க்கையை அவருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கும் ஆர்வத்துடன் ஜெபித்தேன். சபையில் உள்ள ஒரு சகோதரி என்னுடன் படித்தாள். அவள் என்னைவிட இளையவள்; தன் தாயை சிறு வயதிலேயே இழந்திருந்தாள். இருந்தாலும், அவள் இளவயதிலேயே கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தாள்.
எனக்கு 17 வயதானபோது, என்னுடைய மனதில் தீர்மானித்துவிட்டேன். எனக்கு இருக்கும் திறமைகளுடன் மிகச்சிறந்த வகையில் யெகோவாவைச் சேவிக்க விரும்பினேன். ஆகஸ்ட் 9, 1974—நான் முழுக்காட்டப்பட்டபோது—என்னுடைய வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாளாக இருந்தது.
ஊழியத்தில் சந்தோஷம்
ஊழியத்தில் பங்கெடுப்பது சில மலைபோன்ற தடங்கல்களை அளித்தது. என்னைப் புரிந்துகொள்ள வைப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னால் முடிந்தவரை தெளிவாக நான் பேசுவேன். பின்னர், தேவைப்படும்போதெல்லாம், வெளி ஊழியத்தில் உள்ள என் சகஊழியர் அந்த வீட்டுக்காரருக்கு என்னுடைய குறிப்புகளைத் திரும்ப சொல்வார். சாட்சிகளின் தன்னல நோக்கங்களுக்குப் பலியான ஒருவராக என்னைக் கருதி, சிலர் எதிர்மறையாகப் பிரதிபலித்தனர். ஆனால் பிரசங்கித்தல் என்னுடைய உரிமையாகவும், என்னுடைய இருதயப்பூர்வமான ஆசையாகவும் இருக்கிறது.
ஒரு கட்டட தொகுதியில் வீட்டுக்கு வீடு நடப்பதுகூட முழுமையாக களைப்பூட்டுவதாக இருக்கலாம். எங்களுடைய சாட்சிகொடுக்கும் பிராந்தியத்தில் அநேக வீடுகள், நான் சென்றெட்ட முடியாதபடி படிகளைக் கொண்டிருக்கின்றன. குளிர் காலத்தில், பனிக்கட்டிகள் நிறைந்த தெருக்கள், எனக்கு வீட்டுக்கு வீடு ஊழியத்தை முற்றிலும் கூடாதகாரியமாக்கிவிடுகின்றன. (அப்போஸ்தலர் 20:20) இருந்தாலும், ஆவிக்குரிய சகோதரர்கள் மிகப்பெரிய அளவில் உதவி செய்திருக்கின்றனர்; இப்போது, ஓர் இயந்திரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியால் யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார்; அது ஊழியத்தை மிகவும் எளிதாக்குகிறது.
காலப்போக்கில், நான் கடிதம் மூலமாக சாட்சிபகர துவங்கினேன். கையால் கடிதம் எழுதுவது முடியாது, ஏனென்றால் என்னுடைய எழுத்துக்கள் பெரும்பாலான மக்களுக்கு வாசிக்க முடியாததாகவே இருக்கும். ஆகவே மின் தட்டச்சுப் பொறி என்னுடைய எழுத்தாளனாக ஆனது. என்னுடைய கையின் குறைந்த ஒத்திசைவால், என்னுடைய டைப் அடிக்கும் வேகம் மிகக்குறைவாக இருக்கிறது. பாதி நேரம், நான் ஓர் எழுத்தை தட்ட முயன்று வேறொரு எழுத்தைத் தட்டிவிடுகிறேன். வெறும் ஒரு பக்கத்தை டைப் செய்வதற்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேலாகிவிடுகிறது.
தாங்கும் சக்தி குறைவு இருந்தபோதிலும், நான் அவ்வப்போது, ஒரு மாதம் ஊழியத்தில் 60 அல்லது அதற்கு மேலான மணிநேரங்களைச் செலவிட்டு, ஒரு துணைப் பயனியராக சேவிக்கிறேன். இது ஒரு நல்ல அட்டவணையையும், கூடுதலான முயற்சியையும், உடன் விசுவாசிகளின் ஆதரவையும் கேட்கிறது. அவர்களுடைய பயனியர் ஆவி என்னை உற்சாகப்படுத்துகிறது. என் தாயாரும், கஷ்டங்களை எதிர்ப்படுதல், உடல்நலக் குறைவு, மதசார்பாக பிளவுப்பட்ட ஒரு குடும்பத்தில் ஏழு பிள்ளைகளை வளர்க்கும் சவால் ஆகியவற்றின் மத்தியில் ஓர் ஒழுங்கான அல்லது துணைப் பயனியராக சேவிப்பதன்மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வகித்திருக்கிறாள்.
தனிமையில்
என்னுடைய 24-ஆம் வயதில், நான் தனியாக குடிபெயர்ந்து செல்ல தீர்மானித்தேன். நான் புரூக்லினின் பென்ஸன்ஹர்ஸ்ட் பகுதிக்குச் சென்றது ஓர் ஆசீர்வாதமாக நிரூபித்தது. மார்ல்பரோ சபை ஒரு நெருங்க கட்டியமைக்கப்பட்ட குடும்பத்தைப் போன்றது. அவர்களுடன் இருப்பது எவ்வளவு விசுவாசத்தைப் பலப்படுத்துவதாக இருந்தது! சபையில் இரண்டு அல்லது மூன்று கார்களே இருந்தபோதிலும், ஆவிக்குரிய சகோதரர்கள் என்னை எல்லா கூட்டங்களுக்கும் கொண்டுச்சென்றனர். இருந்தாலும் நான் அங்கு அதிக காலம் தங்கவில்லை.
ஒரு முழுமையான தோல்வியாக உணர்ந்து, என்னுடைய குடும்பத்துக்குத் திரும்பி, மூன்று வருட கால ஆழ்ந்த மனமுறிவிற்கு உள்ளானேன். திரும்பவும் கோபாவேசப்பட்டேன். தற்கொலை பற்றிய எண்ணங்களும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான பல முயற்சிகளும் ஏற்பட்டன. மரணம் ஓர் இருண்ட எதிர்பார்ப்பைப்போல் அச்சுறுத்திக்கொண்டிருந்தது. ஆனால், நான் கடவுள்மேல் சார்ந்திருந்து, அவருடைய பரிசாகிய உயிருக்குப் போற்றுதல் காண்பிப்பதாக வாக்களித்தேன். ஆறுதலும் ஆலோசனையும் மூப்பர்களிடமிருந்து வந்தது. இதோடுகூட, ஜெபம், தனிப்பட்ட படிப்பு, என்னுடைய குடும்பத்தின் பாகத்தில் பொறுமை, ஓரளவு மருத்துவ உதவி ஆகிய அனைத்தும் என்னுடைய எண்ணத்தைச் சரிசெய்தது.
காவற்கோபுரம் மூலமாக, கடுமையான மனச்சோர்வுக்கு யெகோவா மென்மையான உட்பார்வையைக் கொடுத்தார். ஆம், அவர் உண்மையிலே அவருடைய மக்களிடம் அக்கறை கொள்கிறார்; நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார். (1 பேதுரு 5:6, 7) காலப்போக்கில் அந்த ஆழ்ந்த மனச்சோர்வு மறைந்துவிட்டது. பத்து வருடங்களுக்குப் பின், இன்னும் வருத்தத்துடனும் மனமுறிவுடனும் சமாளிக்க யெகோவா எனக்கு உதவுகிறார். சில நேரங்களில், பயனற்றதாக இருப்பதுபோன்ற உணர்ச்சிகள் என்னை ஏறக்குறைய மூழ்கடிக்கின்றன. இருந்தபோதிலும், ஜெபம், பைபிள் படிப்பு, என்னுடைய ஆவிக்குரிய குடும்பம் ஆகியவை சிறந்த தப்பிப்பிழைக்கும் உதவிகள் ஆகும்.
இன்னொரு வீட்டிற்காக ஒரு பயனற்ற தேடுதலுக்குப்பின், நான் என்னுடைய மீதி வாழ்க்கையை என்னுடைய குடும்பத்துடன் வாழ்வதாக அரைகுறை மனதுடன் தீர்மானித்தேன். பின்னர் யெகோவா என்னுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார். புரூக்லினிலுள்ள பெட்ஃபோர்ட்-ஸ்டைவசென்ட் பகுதியில் ஓர் இடம் கிடைத்தது. நான் 1984-ன் கோடைக்கால இறுதியில் அங்குச் சென்றேன்; அதுமுதல் அங்குதான் இருக்கிறேன்.
லாஃபீயெட் சபையின் அன்பான அங்கத்தினர் தயவாக என்னைக் கூட்டங்களுக்குக் கொண்டுச்சென்றனர். நான் ஆஜராயிருந்த முதல் சபை புத்தக படிப்பு என்னுடைய மனதில் இன்னும் வாடாமல் இருக்கிறது. அது நான்காம் மாடியில் நடத்தப்பட்டது—லிஃப்டும் இல்லை! யெகோவாவின் உதவியால் மட்டுமே நான் அந்தப் படிகளின் மேலேறி கீழே இறங்கினேன். சிறிது காலத்தில், நான் அதைவிட எளிதாகச் சென்றடையக்கூடிய ஓர் இடம் கொடுக்கப்பட்டது. இப்பொழுது என்னுடைய வீட்டில் ஒரு சபை புத்தக படிப்பைக் கொண்டிருக்கும் சிலாக்கியத்தால் யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
ஒரு சிறந்த பயனியர் ஆவி சபையினூடே நிலவுகிறது. நான் இங்கு வந்தபோது, சுமார் 30 பயனியர்கள் இருந்தனர்; அவர்களில் சிலர் என்னை விசேஷித்த அக்கறையுடன் கவனித்தனர். அந்த வைராக்கியமான சூழல், அடிக்கடி என்னை ஒரு துணைப்பயனியராகச் சேவிக்க தூண்டியது.
ஏப்ரல் 1989-ல் லாஃபீயெட் மற்றும் பிராட் சபைகள் என்னுடைய வீடிருக்கும் அதே தெருவில் ஒரு புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டின. அது எனக்குத் தேவைப்பட்ட சரியான நேரத்தில் நிகழ்ந்தது; ஏனென்றால் என்னுடைய உடல்நிலை மேலும் மோசமாகிக்கொண்டு போனதால், நடப்பது திரும்பவும் ஒரு பிரச்னையாகி இருக்கிறது. இருப்பினும், என்னுடைய இயந்திரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரின் உதவியுடனும் மற்றும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் உதவியுடனும், கூட்டங்களுக்குச் சென்று வரும் பயணங்கள் களிப்பூட்டுபவையாக இருக்கின்றன. அத்தகைய அன்பான உதவியை நான் எவ்வளவு ஆழமாகப் போற்றுகிறேன்!
கடவுளின் ஆதரவிற்கு நன்றியறிதல்
என்னுடைய கால்கள் உறுதியற்றவையாக இருந்தாலும், என்னுடைய இருதயம் உறுதியாக இருக்கிறது. ஒரு நல்ல கல்வி என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் எளிதாக்கியது என்றாலும், கடவுள் என்னை தளராமல் நிலைத்திருக்க உதவி செய்திருக்கிறார். சில நேரங்களில் அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று நான் அறியாதவளாக இருந்தேன்; ஆனால் யெகோவா என்னை ஆதரித்து, ஓர் உண்மையான கவனிப்பாளராய் இருந்திருக்கிறார். உண்மையிலே, தாவீதின் வார்த்தைகள் எனக்கு அருமையானவையாக இருக்கின்றன: “நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.”—சங்கீதம் 37:23-25.
அறுவை சிகிச்சையின்போது இரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஒரு வேதப்பூர்வ நிலைநிற்கையைக் காத்துக்கொள்ள பல முறை யெகோவா எனக்கு உதவி செய்திருக்கிறார். (அப்போஸ்தலர் 15:28, 29) சமீபத்தில் என் தந்தை மரணமடைந்தார். அவ்வளவு நெருக்கமான ஒருவரை மரணத்தில் இழப்பது உண்மையிலே ஒரு பெரிய அடியாக இருந்தது. யெகோவாவிடமிருந்து கிடைத்த பலம் மட்டுமே என்னை இதனூடேயும் மற்ற சோதனைகளினூடேயும் கொண்டுச்சென்றிருக்கிறது.
என்னுடைய உடல்நலம் தொடர்ந்து குன்றிப்போகக்கூடும்; ஆனால் கடவுள் மேலுள்ள என்னுடைய நம்பிக்கையும் அவரோடுள்ள என்னுடைய உறவும் என்னுடைய உயிர்நாடியாக இருக்கின்றன. யெகோவாவின் மக்களுடைய மத்தியில் இருப்பதற்கும் அவருடைய தவறாத ஆதரவைக் கொண்டிருப்பதற்கும் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்!