ஏன் கர்த்தருடைய இராப்போஜனம் உங்களுக்கு அர்த்தமுடையதாக இருக்கிறது
இயேசு கிறிஸ்து தம்முடைய மனித வாழ்க்கையின் கடைசி இரவு அன்று, கர்த்தருடைய இராப்போஜன நாளை நிறுவினார். அது வியாழக்கிழமை மாலை, மார்ச் 31-ஆக இருந்தது; வெள்ளிக்கிழமை பிற்பகல், ஏப்ரல் 1-ம் நாள் இயேசு மரித்தார். யூத நாட்காட்டியின்படி, நாட்கள் ஒரு நாளின் மாலையிலிருந்து அடுத்த நாள் மாலைவரையாக நீடித்தமையால், கர்த்தருடைய இராப்போஜனம் மற்றும் இயேசுவின் மரணம் ஆகிய இரண்டுமே பொ.ச. 33, நிசான் 14-ல் சம்பவித்தன.
இயேசு ஏன் இந்தப் போஜனத்தை நிறுவினார்? அவர் பயன்படுத்திய அப்பம் மற்றும் திராட்சரசத்தின் முக்கியத்துவம் என்ன? யார் பங்கெடுக்கவேண்டும்? இந்தப் போஜனம் எவ்வளவு அடிக்கடி ஆசரிக்கப்படவேண்டும்? மேலும் அது எப்படி உங்களுக்கு அர்த்தமுடையதாக இருக்கலாம்?
ஏன் நிறுவப்பட்டது?
கர்த்தருடைய இராப்போஜனத்தைக்குறித்து இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் கூறினார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” மற்றொரு மொழிபெயர்ப்பின்படி, அவர் சொன்னார்: “எனக்கு ஒரு நினைவு ஆசரிப்பாக இதைச் செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 11:24; தி நியூ இங்கிலிஷ் பைபிள்) உண்மையில், கர்த்தருடைய இராப்போஜனம், கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு ஆசரிப்பு என்றே அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.
யெகோவாவின் பேரரசுரிமையை நிலைநாட்டும் ஓர் உத்தமத்தைக் காப்பவராக இயேசு மரித்தார்; இவ்வாறாக, நேர்மையுள்ள மனிதர் தன்னல நோக்கங்களுடன் மட்டுமே கடவுளைச் சேவிக்கின்றனர் என்று குற்றப்படுத்தியதில் சாத்தானை ஒரு பொய்யான நிந்திக்கிறவனாக நிரூபித்தார். (யோபு 2:1-5) அவருடைய மரணம் கடவுளுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தியது.—நீதிமொழிகள் 27:11.
ஒரு பரிபூரண மனிதனாக மரித்ததன்மூலம், இயேசு ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனையும் கொடுத்தார்.’ (மத்தேயு 20:28) கடவுளுக்கு எதிராக பாவஞ்செய்வதன்மூலமாக, முதல் மனிதன் பரிபூரண மனித ஜீவனையும் அதன் எதிர்பார்ப்புகளையும் இழந்தான். ஆனால் “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) ஆம், “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”—ரோமர் 6:23.
‘கர்த்தரிடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டது’
கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதன்பேரில் ஒளியூட்டுவதாய் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் இருக்கின்றன: “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 11:23-26.
பொ.ச. 33, நிசான் 14-ல், இயேசுவுடனும் அவருடைய 11 அப்போஸ்தலர்களுடனும் பவுல் இல்லாததால், இந்தத் தகவல் ஏவப்பட்ட வெளிப்படுத்துதல்மூலமாக ‘கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது’ என்பதாகச் சான்றளிக்கப்படுகிறது. கிறிஸ்துவை அறையும்படியாக ரோமர்களைத் தூண்டிய யூத மத எதிரிகளிடம் யூதாஸால் “தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட [காட்டிக்கொடுக்கப்படப்போகிற, NW] அன்று இராத்திரியிலே” இயேசு அந்த நினைவு ஆசரிப்பை நிறுவினார். அந்த அடையாளப்பூர்வமான அப்பம் மற்றும் திராட்சரசத்தில் பங்கெடுக்க உரிமையுடையோர் அவருடைய நினைவாக அவ்வாறு செய்வார்கள்.
எவ்வளவு அடிக்கடி ஆசரிக்கவேண்டும்?
“நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்,” என்ற பவுலின் இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன? உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அவர்கள் மரித்து, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும்வரையாக ‘அடிக்கடி’ இந்த நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுப்பார்கள். இவ்வாறாக, கடவுளுக்கும் உலகத்திற்கும் முன்பாக, இயேசுவின் பலியாலான யெகோவாவின் ஏற்பாட்டில் அவர்களுடைய விசுவாசத்தை அடிக்கடி அறிவிப்பார்கள். எவ்வளவு காலத்திற்கு? “கர்த்தர் வருமளவும்” என்று பவுல் கூறுகிறார்; அவருடைய ‘வந்திருத்தலின்’போது, இயேசு வந்து தம்மைப் பின்பற்றும் அபிஷேகம்செய்யப்பட்டோரை ஓர் உயிர்த்தெழுதல் மூலமாக பரலோகத்திற்குக் கொண்டுச்செல்லும்வரையாக இந்த ஆசரிப்புகள் தொடரும் என்று அவர் அர்த்தப்படுத்தி இருக்கவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 4:14-17) இது 11 உண்மைத்தவறாத அப்போஸ்தலர்களிடம் சொல்லப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு இசைவாக இருக்கிறது: “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”—யோவான் 14:3.
தினமும் அல்லது வாரந்தோறும் கிறிஸ்துவின் மரணம் நினைவுகூரப்பட வேண்டுமா? இயேசு கர்த்தருடைய இராப்போஜனத்தை நிறுவினார்; மேலும், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் பஸ்கா அன்று அவர் கொல்லப்பட்டார். உண்மையில், அவர் கிறிஸ்தவர்களுக்காகப் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருப்பதால் “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து” என்று அழைக்கப்படுகிறார். (1 கொரிந்தியர் 5:7) வருடத்திற்கு ஒரு முறையே, நிசான் 14-ம் நாள் பஸ்கா ஆசரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 12:6, 14; லேவியராகமம் 23:5) பஸ்கா எவ்வளவு அடிக்கடி நினைவுகூரப்பட்டதோ அத்தனை முறைகள் இயேசுவின் மரணமும் நினைவுகூரப்படவேண்டும்—தினசரி அல்லது வாராந்தரமாக அல்ல, வருடாந்தரமாக என்று இது குறிப்பிடுகிறது.
பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டியவர்கள் இயேசுவின் மரணத்தை வருடத்திற்கு ஒருமுறைதான் நினைவுகூர்ந்தனர். அவர்கள் நிசான் 14 அன்று அவ்வாறு செய்ததால், “பதினான்கவர்கள்” என்று அர்த்தப்படும் குவார்டோடெசெமென்ஸ் என்று அழைக்கப்பட்டனர். அவர்களைக்குறித்து, சரித்திராசிரியராகிய J. L. ஃபான் மாஷிம் எழுதினார்: “யூதர்கள் பஸ்காவின் ஆட்டுக்குட்டியைச் சாப்பிட்ட அதே நேரத்தில், அதாவது முதல் மாதம் [நிசான்] பதினான்காம் நாள் மாலையில், சின்ன ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், கர்த்தருடைய இராப்போஜனம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் நினைவுகூருதலாக இந்தப் பரிசுத்த விருந்தைக் கொண்டாடுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். . . . அவர்கள் கிறிஸ்துவின் உதாரணத்தை, ஒரு சட்டத்தைப் பின்பற்றக் கடமைப்பட்டிருப்பதுபோல் பின்பற்றவேண்டும் என்பதாகக் கருதினர்.”
சின்னங்களின் முக்கியத்துவம்
இயேசு “அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு,” என்பதாக பவுல் சொல்கிறார். மாவு மற்றும் தண்ணீரால், புளிப்பு (அல்லது, ஈஸ்ட்) இல்லாமல் சுடப்பட்ட உடையும்தன்மையுள்ள அந்த அப்பம் உட்கொள்ளப்படுவதற்கு பிட்கப்படவேண்டியதாய் இருந்தது. பைபிள் அடையாளப்படுத்துகிறபடி, பாவம் அல்லது அழிவுள்ளதன்மையை புளிப்பு குறிப்பிடுகிறது. சபையிலிருந்து ஓர் ஒழுக்கங்கெட்ட கிறிஸ்தவனை நீக்குவதற்காக கொரிந்து கிறிஸ்தவர்களை உந்துவிக்கையில், பவுல் சொன்னார்: “கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” (1 கொரிந்தியர் 5:6-8) சிறிதளவு புளித்தமா, பிசைந்தமா முழுவதையும் அல்லது அந்தத் தொகுதியிலடங்கிய ரொட்டியை புளிப்பாக்குவதுபோல, பாவமுள்ள மனிதனின் கறைபடுத்தும் செல்வாக்கு நீக்கப்படாவிட்டால், கடவுளுடைய கண்களில் அந்தச் சபை அசுத்தமானதாகிவிடும். பஸ்காவைத் தொடர்ந்த புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போது தங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பானதையும் இஸ்ரவேலர் வைத்திருக்க முடியாததைப்போலவே, அந்தப் “புளித்த”தையும் தங்கள் மத்தியிலிருந்து அவர்கள் நீக்கவேண்டியது அவசியமாக இருந்தது.
புளிப்பில்லாத நினைவு ஆசரிப்பு அப்பத்தைக்குறித்து இயேசு சொன்னார்: “இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 11:24) அந்த அப்பம் இயேசுவின் பரிபூரண மனித சரீரத்தைக் குறிக்கிறது; இதைக்குறித்து பவுல் எழுதினார்: “அவர் [இயேசு] உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். . . . இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.” (எபிரெயர் 10:5-10) இயேசுவின் பரிபூரண மனித சரீரம் பாவமற்றதாக இருந்து, மனிதவர்க்கத்திற்கு ஒரு மீட்பின் கிரய பலியாக சேவித்தது.—எபிரெயர் 7:26.
கலப்படம் செய்யப்படாத சிவப்பு திராட்சரசத்தையுடைய பாத்திரத்தின்பேரில் ஜெபித்தபின், இயேசு சொன்னார்: “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 11:25) மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்லுகிறது: “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினால் உறுதிசெய்யப்பட்ட புதிய உடன்படிக்கையை அர்த்தப்படுத்துகிறது.” (மொஃபட்) கடவுளுக்கும் இஸ்ரவேல் ஜனத்துக்கும் மத்தியிலுள்ள நியாயப்பிரமாண உடன்படிக்கையை பலியிடப்பட்ட காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம் உறுதிசெய்ததுபோல, மரணத்தில் இயேசுவின் இரத்தம் ஊற்றப்பட்டது புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது. புதிய உடன்படிக்கை என்று சொல்லப்பட்டிருப்பது, நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்க உரிமையுள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவி செய்கிறது.
யார் பங்கெடுக்கவேண்டும்?
இயேசுவைப் பின்பற்றும் புதிய உடன்படிக்கையிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்டோர், சரியாகவே நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்கின்றனர். இந்த உடன்படிக்கை கடவுளுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் மத்தியில் செய்யப்பட்டிருக்கிறது. (எரேமியா 31:31-34; கலாத்தியர் 6:16) ஆனால் முடிவில் அந்தப் புதிய உடன்படிக்கை கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதவர்க்கத்திற்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்; அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுப்பவர்கள், இயேசு ராஜ்யத்திற்காக செய்த தனிப்பட்ட உடன்படிக்கையில் இருக்கவேண்டும். இந்தப் போஜனத்தை நிறுவும்போது, இயேசு தம்முடைய உண்மைத்தவறாத அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: “என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” (லூக்கா 22:29) கடவுளால் தாவீது ராஜாவிடம் செய்யப்பட்ட ராஜ்ய உடன்படிக்கை, என்றென்றுமாக பரலோக ராஜ்யத்தில் ஆட்சிசெய்ய வரப்போகிறவராயிருந்த இயேசுவை முன்குறித்துக்காட்டியது. அவரோடு அரசாட்சியைப் பகிர்ந்துகொள்ளப்போகும் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய 1,44,000 பேர், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுடன் பரலோக சீனாய் மலையில் நிற்பதாக விவரிக்கப்படுகின்றனர். உயிர்த்தெழுப்பப்பட்டதும், அவர்கள் கிறிஸ்துவுடன் கூட்டரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆளுவார்கள். (2 சாமுவேல் 7:11-16; வெளிப்படுத்துதல் 7:4; 14:1-4; 20:6) புதிய உடன்படிக்கையிலும் இயேசுவோடான தனிப்பட்ட உடன்படிக்கையிலும் இருப்பவர்கள் மட்டுமே, சரியாக கர்த்தருடைய இராப்போஜனத்தின் சின்னங்களில் பங்கெடுக்கின்றனர்.
அவர்கள் அவருடைய பிள்ளைகள் என்றும் கிறிஸ்துவின் உடன்சுதந்தரரென்றும் கடவுளுடைய ஆவி அபிஷேகம்செய்யப்பட்டோரின் ஆவியுடனே சாட்சி கொடுக்கிறது. பவுல் எழுதினார்: “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [ஆவிதானே, NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார் [கொடுக்கிறது, NW]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (ரோமர் 8:16, 17) கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது செயல்நடப்பிக்கும் சக்தி, பரலோக வாழ்க்கைக்காக அவர்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உறுதியை அபிஷேகம்செய்யப்பட்டவர்களினுள் உண்டாக்குகிறது. வேதவார்த்தைகளில் பரலோக வாழ்க்கையைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும் எல்லாம் தங்களுக்கென்று நேரடியாக எழுதப்பட்டதாக அவர்கள் நோக்குகின்றனர்; மேலும், மனித வாழ்க்கை உட்பட எல்லா பூமிக்குரிய காரியங்களையும் தியாகம்செய்ய அவர்கள் மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர். பூமிக்குரிய பரதீஸில் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்குமென்றாலும் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை. (லூக்கா 23:43) பொய் மத கருத்துகளில் சார்ந்திராத ஒரு நிச்சயமான, மாற்றமுடியாத பரலோக நம்பிக்கை, அவர்கள் நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்க உரிமையளிக்கிறது.
ஒரு பரலோக அரசனாக அல்லது ஆசாரியனாக அழைப்பைப் பெறாத ஒருவர் அவ்விதமான அழைப்பைப் பெற்றதாக தன்னைப் பிரதிநிதித்துவம் செய்தால், அது யெகோவாவுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கும். (ரோமர் 9:16; வெளிப்படுத்துதல் 22:5) ஆசாரியத்துவத்தை மேட்டிமையுடன் தேடியதற்காக கடவுள் கோராகை அழித்தார். (யாத்திராகமம் 28:1; எண்ணாகமம் 16:4-11, 31-35) ஆக, பலமான உணர்ச்சிகள் அல்லது முந்திய மத கருத்துகள் தவறாக ஒருவரை நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்கச் செய்தால் என்ன செய்வது? அப்படியானால், அவன் அல்லது அவள் பங்கெடுப்பதை நிறுத்திவிட்டு கடவுளுடைய மன்னிப்பிற்காக மனத்தாழ்மையுடன் ஜெபிக்கவேண்டும்.—சங்கீதம் 19:13.
நீங்கள் பாதிக்கப்படுவது எப்படி
இயேசுவின் மீட்பின் கிரய பலியிலிருந்து பயனடைவதற்கும் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவதற்கும் ஒருவர் நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்கெடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், போவாஸ், ரூத், தாவீது போன்ற கடவுள்-பயமுள்ள ஆட்கள் இந்தச் சின்னங்களில் எப்போதேனும் பங்கெடுப்பார்கள் என்பதாக பைபிள் எந்தக் குறிப்பும் தருவதில்லை. ஆனால், அவர்களும் இந்தப் பூகோளத்தில் முடிவில்லாத வாழ்க்கையை விரும்பும் மற்ற எல்லாரும் கடவுள், கிறிஸ்து மற்றும் யெகோவாவின் ஏற்பாடாகிய இயேசுவின் மீட்பின் கிரய பலியில் விசுவாசம் வைக்கவேண்டும். (யோவான் 3:36; 14:1) கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றிய வருடாந்தர ஆசரிப்பு, அந்த மேன்மையான பலிக்கு ஒரு நினைப்பூட்டுதலாகச் சேவிக்கிறது.
இயேசுவின் பலியின் முக்கியத்துவம் அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு சொன்னபோது காண்பிக்கப்பட்டது: “நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல; சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:1, 2) இயேசு அவர்களுடைய “பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார பலி” என்று அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சொல்ல முடியும். இருந்தாலும், சர்வலோகத்தின் பாவங்களுக்கும் அவரே ஒரு பலியாக இருக்கிறார்; இவ்வாறாக இப்பொழுது வெகு அருகாமையில் இருக்கும் பரதீஸிய பூமியில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு நித்திய ஜீவன் கிடைக்கும்படிச் செய்கிறார்.
கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்காக ஆஜராய் இருப்பதன்மூலம், நீங்கள் ஒரு சிந்தனையைத் தூண்டும் பைபிள் பேச்சால் பயனடைவீர்கள். யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்கு எவ்வளவு செய்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு நினைப்பூட்டப்படும். கடவுள், கிறிஸ்து மற்றும் இயேசுவின் மீட்பின் கிரய பலிக்கு ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்களுடன் கூடுவது ஆவிக்குரியவிதத்தில் வெகுமதியளிப்பதாய் இருக்கும். நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் கடவுளுடைய தகுதியற்ற தயவைப் பெறுபவர்களில் ஒருவராகும் உங்கள் விருப்பத்தை இந்த நிகழ்ச்சி நன்கு பலப்படுத்தக்கூடும். இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்காக, ஏப்ரல் 6, 1993 அன்று, சூரிய அஸ்தமனத்திற்குப்பின் யெகோவாவின் சாட்சிகளுடன் கூடும்படி உங்களை உளமார அழைக்கிறோம், ஏனென்றால் கர்த்தருடைய இராப்போஜனம் உங்களுக்கு அதிக அர்த்தமுடையதாய் இருக்கக்கூடும். (w93 3/15)