அந்த முந்தி எழுபவர்
மத்தியதரைக்கடல் பகுதியின் பழ மரங்களில், வாதுமைமரம் மிகவும் தனிச்சிறப்புக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஜனவரியின் இறுதியில் அல்லது பிப்ரவரியில்—பெரும்எண்ணிக்கையான மற்ற மரங்களுக்கு முந்தியே—தன்னுடைய குளிர்கால மந்தத்திலிருந்து எழுந்துவிடுகிறது. மேலும் என்னே ஓர் எழுச்சி! மென்மையான இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை மலர்களாலான ஒரு போர்வையினால் முழுமரமும் மூடிக்கொள்கிறது, பின் அது ஓரளவு முதிர்வயதினரின் நரைமுடியை ஒத்திருக்கிறது.—பிரசங்கி 12:5-ஐ ஒப்பிடுங்கள்.
பூர்வீக எபிரெயர் வாதுமை மரத்தை, அதனுடைய முந்தி மலரும் பண்பிற்காக, “எழுப்புபவர்” என்றழைத்தனர். இந்தப் பண்பு, ஒரு முக்கியமான செய்தியை விளக்குவதற்கு யெகோவாவால் பயன்படுத்தப்பட்டது. எரேமியாவுக்கு, அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், வாதுமைமரத்தின் கிளை, தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. இது எதை அர்த்தப்படுத்தியது? யெகோவா விளக்கினார்: “என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்ற விழித்திருக்கிறேன்.”—எரேமியா 1:12, NW.
வாதுமைமரம் முந்தி ‘எழுவது’ போல, கீழ்ப்படியாமையின் விளைவுகளைக் குறித்து தம்முடைய ஜனங்களை எச்சரிப்பதற்காகத் தீர்க்கதரிசிகளை அனுப்புவதற்கு யெகோவாவும் அடையாள அர்த்தத்தில் “முந்தி எழுந்”தார். (எரேமியா 7:25, NW) மேலும் அவர் ஓய்வெடுக்கப் போவதில்லை—அவர் ‘விழித்திரு’ப்பார்—அவருடைய தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும்வரை. எனவே, பொ.ச.மு. 607-ல், நியமிக்கப்பட்ட காலத்தில், விசுவாசத்துரோக யூதா தேசத்தின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வந்தபோது, இது நடந்தது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக, இதைப்போன்ற நியாயத்தீர்ப்பு வருமென கடவுளுடைய வார்த்தை முன்னறிவிக்கிறது. (சங்கீதம் 37:9, 10; 2 பேதுரு 3:10-13) இந்த நீதி விசாரணை செயலைக் குறித்து ஆபகூக் தீர்க்கதரிசி, நமக்கு நிச்சயப்படுத்துகிறார்: “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது . . . அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) அழகான வாதுமை மலர்ச்சி, யெகோவா தம் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்ற விழித்திருக்கிறார் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (w93 2/15)