நமிபியாவில் புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்தளித்தல்
நீங்கள் எத்தனை மொழிகளில், “எனக்குத் தெரியாது” என்ற கூற்றைக் கேட்டிருக்கிறீர்கள்? அவளுடைய பாரம்பரிய நீண்ட உடையையும் ஒரு கொம்பு வடிவான தலைமூடலையும் கொண்டிருந்த அந்த ஹெரெரோ பெண் “ஹீ நாக்குதூவா” என்றாள். “இங்கீ உடீற்றெ கா” என்று ஒரு புன்முறுவலுடன் அந்த க்வான்யாமா பெண் பிரதிபலித்தாள். தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, “கான்டூவீற்றெ கா” என்று டோங்காவின் கிராமத்துவாசி பதிலளித்தான். ஒரு க்வாங்காலி ஆடுமேய்ப்பன் “காப்பீ நா குஸூவா” என்று குறிப்பிட்டான்.
இந்த எல்லா தனிநபர்களும், “எனக்குத் தெரியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சுமார் 8,24,000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இந்தப் பெரிய பிராந்தியத்தில் குடியிருக்கும் 13,70,000 பேரைச் சென்றெட்ட முயற்சிசெய்தபோது, நமிபியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கமுடியாத மொழி பிரச்னைகளை எதிர்ப்பட்டார்கள் என்பதை இது எவ்வளவு நன்றாகச் சித்தரித்துக்காட்டுகிறது!
இது ஆச்சரியமல்ல! ஹெரெரோ மற்றும் நாமா மக்கள் மட்டுமல்ல, ஆனால் ஒவம்போ, கவங்கோ, ட்ஸ்வானா, காப்ரீவீயன், ஹீம்பா, புஷ்மான், மற்றும் டாமாரா என்னும் நமிபியா மக்கள் தங்கள் சொந்த மொழிகளைக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மாறாக, சாட்சிகள் ஆங்கிலம் மற்றும் ஆப்பிரிக்கான்ஸ் மொழிகளில் மட்டுமே பைபிள் பிரசுரங்களுடன் தயாராக இருந்தனர். தெளிவாகவே, சத்தியம் இன்னும் அதிகமான மக்களால் புரிந்துகொள்ளப்படுவதற்கு மொழிபெயர்ப்பு வேலை அத்தியாவசியமாய் இருந்தது. இது பல ஆண்டுகளுக்குமுன், மிகச்சிறிய முறையில், அப்போதைய தென்மேற்கு ஆப்பிரிக்காவின் தலைநகராய் இருந்த வின்ட்ஹுக்கில் துவங்கியது.
“அப்போது வின்ட்ஹுக்கில், சர்ச்சிலிருந்தும் போலீஸிலிருந்தும் நம்முடைய சாட்சிபகரும் வேலைக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது,” என்பதாக டிக் உவால்ட்ரன் நினைவுபடுத்தி கூறுகிறார். கிலியெட் என்னும் காவற்கோபுர பைபிள் பள்ளியின் ஒரு பட்டதாரியாக, இவர் தன்னுடைய மனைவியாகிய காரலீயுடன் இந்த நாட்டிற்கு 1953-ல் வந்தார். “கறுப்பர்கள் வாழ்ந்த பகுதிகளில் எங்களை அனுமதிக்கவில்லை; மேலும், கறுப்பு மக்களிடம் பேசும்போது சிலவேளைகளில் தாக்கப்பட்டோம். கடைசியாக, எங்களைத் தொந்தரவின்றி விடும் ஓர் இடத்தைக் கண்டுபிடித்தோம்—காமன்ஸ் ஆற்றின் வறண்ட அடிப்பரப்பு! இது நகரத்திற்கு வெளிப்புறத்தில் இருந்தது. வேலமரப்புதர்களில் காட்சியிலிருந்து மறைந்துகொண்டு, நாங்கள் பைபிள் படிப்புகள் நடத்தினோம்.”
அங்குதானே உவாட்ச் டவர் பிரசுரங்கள் உள்ளூர் மொழிகளில் முதலாவதாக மொழிபெயர்க்கப்பட்டன. அவை க்வான்யாமாவில் சில துண்டுப்பிரதிகளையும் நாமாவில் “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி” என்ற சிறுபுத்தகத்தையும் உட்படுத்தின. ஓர் அக்கறை காண்பித்த ஆள் மொழிபெயர்க்க உதவிய இந்தச் சிறு புத்தகம் சம்பந்தமாக, சகோதரர் உவால்ட்ரன் ஒரு வேடிக்கையான அனுபவத்தை நினைவுகூருகிறார். “ஆதாம் ஒரு பரிபூரண மனிதன்,” என்பதற்குச் சமமான நாமா வாக்கியத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எனவே அந்த அக்கறை காண்பித்த ஆள் சொன்னார்: “வெறுமனே ஆதாம் ஒரு பழுத்த பீச்பழம்போல இருந்தான் என்று எழுதுங்கள். அவன் பரிபூரணமாக இருந்தான் என்று நாமா மக்கள் புரிந்துகொள்வார்கள்.” ஆக, இவ்விதமாகத்தானே நமிபியாவிலுள்ள உள்நாட்டு மக்களில் பலருக்கு வேதவாக்கியங்களைக்குறித்த புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்தளிப்பதற்கான ஆரம்பம் செய்யப்பட்டது.—தானியேல் 11:33-ஐ ஒப்பிடவும்.
ஒரு மைல்கல்லைச் சென்றெட்டுதல்
ஆரம்ப 1970-களில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகம் டோங்கா மற்றும் க்வான்யாமா மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது, ஒரு மைல்கல் சென்றெட்டப்பட்டது. வின்ட்ஹுக்கிற்கு சுமார் 700 கிலோமீட்டர் வடக்கில், ஒவம்போலாந்தில் உள்ள அதிகப்படியான நமிபியர் தொகுதிகளில் பேசப்பட்ட இரண்டு முக்கியமான மொழிகள் இவைகளே. ஒவம்போலாந்தின் ஒரு குடியேற்றமாகிய ஒன்டாங்வாவில் ஒரு பயனியர் வீடு நிறுவப்பட்டது. காவற்கோபுரம் பத்திரிகையை அடிப்படையாகக் கொண்ட வாராந்தர பைபிள் கலந்தாலோசிப்புகளில், இந்தப் பகுதியிலுள்ள அக்கறையுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, ஒவம்போலாந்தில் விசேஷித்த பயனியர்களாக சேவிப்பவர்கள், ஆங்கிலத்திலுள்ள படிப்புக் கட்டுரைகளின் சுருக்கத்தை டோங்காவிலும் க்வான்யாமாவிலும் மொழிபெயர்க்கும்படி நியமிக்கப்பட்டனர்.
வாகனங்கள் நிறுத்துமிடத்தின் ஒரு தடுக்கப்பட்ட மூலைதான் மொழிபெயர்ப்பு “அலுவலகம்”; அங்கு மொழிபெயர்க்கப்பட்ட காவற்கோபுரம் பத்திரிகையின் விஷயங்களின் நகல்கள் ஒரு பழைய பகர்ப்புப்பொறியைக் கொண்டு வெளியிடப்பட்டன. அதிகத்தைக் கேட்கும் இந்த வேலையில் கவனம் செலுத்துவது எளிதாக இருக்கவில்லை; ஏனென்றால் அங்கு நிலைமைகளோ வசதியாக இல்லை. மேலும் கோடைகால சராசரி வெப்பம் 38-லிருந்து 44 டிகிரி செல்சியஸாக இருந்தது. இருப்பினும், இங்கேதான் புதிய சிற்றேடுகளும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகமும் மொழிபெயர்க்கப்பட்டது.
ஒவம்போலாந்திலும் நமிபியாவிலுள்ள மற்ற இடங்களிலும் சபைகள் உருவாக்கப்படுகையில், இன்னும் பெரிய மற்றும் நல்ல இடம் தேவைப்பட்டது என்பதை பிரதிபலிப்பு காட்டியது. கூடுதலாக, அந்த நாட்டிலுள்ள மற்ற பாகங்களின் தேவைகளுக்கும் கவனம் செலுத்தும்படியாக இன்னுமதிகமாக மையப்படுத்தப்பட்ட இடம் ஒன்று விரும்பத்தக்கதாய் இருந்தது. இதற்கிடையில், ராஜ்ய பிரசங்க வேலைக்கு எதிரான தப்பெண்ணம் குறைந்துவிட்டிருந்தது. ஆகவே, வின்ட்ஹுக்கிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சியால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய நிலப்பரப்பில் ஒரு கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டது. சீக்கிரத்தில், 40-ற்கும் அதிகமான தொண்டர்களை அந்தக் கட்டுமிடம் கொண்டிருந்தது; மேலும், டிசம்பர் 1990-ல் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள் முடிக்கப்பட்டன.
இப்போது, இந்த நவீன கட்டடத்தில் வசதியான அலுவலகங்களிலும் அறைகளிலும், அநேகருக்கு புரிந்துகொள்ளுதலைக் கொண்டுவரும் வேலை விரைவாக நடந்தேறுகிறது. புதிய பிரசுரங்கள் தொடர்ச்சியாக ஹெரெரோ மற்றும் க்வாங்காலியில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஒரே பத்திரிகையில் டோங்கா மற்றும் க்வான்யாமா என்னும் இரண்டு மொழிகளிலும் கட்டுரைகள் வெளிவரும் காவற்கோபுரம் பத்திரிகையின் மாதாந்தர பதிப்பு இப்போது வண்ணங்களில் வருகிறது. அது எல்லா படிப்புக் கட்டுரைகளையும் மற்ற கட்டுரைகளையும் கொண்டிருக்கிறது. இது உண்மையிலேயே, பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வறண்ட ஆற்றுஅடிப்பரப்பில் துவங்கப்பட்ட சிறிய ஆரம்பத்திலிருந்து மிக வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது.
“எனக்குத் தெரியாது” என்ற கூற்று இப்போது அரிதாகவே கேட்கிறது. பதிலாக, நமிபியாவிலுள்ள 600-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பரலோக தந்தைக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர்; “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்,” என்று அவர்களால் இப்போது சொல்ல முடியும்.—சங்கீதம் 119:130.
[பக்கம் 25-ன் படங்கள்]
ஹெரெரோ மக்கள் மத்தியில் நற்செய்தியை அறிவித்தல்
நமிபியா மக்களின் நன்மைக்காக கிறிஸ்தவ பிரசுரங்களை மொழிபெயர்த்தல்
நமிபியாவில் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள்