யெகோவா எங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்!
“இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் ஜெபம் செய்ததுண்டு,” என்று சொன்னார் ஒருவர். மற்றொருவர் தினமும் காலை நான்கு மணிக்கு ஜெபம்செய்ய விழித்துக்கொள்வார். எதற்காக? “யெகோவாவை வெளிப்படையாக வணங்க என்றாவது ஒருநாள் எங்களுக்குச் சுயாதீனம் இருக்கவேண்டுமென்பதற்காக,” என்றார் அவர். எத்தியோப்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் 1992 ஜனவரியில் அடிஸ் அபாபாவில் தங்களுடைய “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டிற்காகக் கூடிவந்தபோது, இந்தத் தாழ்மையான, உண்மையான ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது.
ஆப்பிரிக்காவில் காரியங்கள் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த எத்தியோப்பிய மாநாடு ஓர் அறிகுறியாக இருந்தது. சமீப காலங்களில் அவர்கள் தடைசெய்யப்பட்டிருந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருந்த இங்குள்ள 13 தேசங்களில் சட்டப்பூர்வமான சுயாதீனத்தைப் பெறுவதில் யெகோவாவின் மக்கள் களிகூர்ந்திருக்கின்றனர். எத்தியோப்பியாவில், நவம்பர் 11, 1991-ல் அரசாங்க அதிகாரிகள் அங்கீகாரத்தை அளித்து மறுபதிவு நிகழ்ந்தபோது 34 வருட அதிகாரப்பூர்வமான தடை முடிவுக்கு வந்தது. உடனடியாக, சாட்சிகள் சர்வதேச மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்தனர். இருப்பினும், அடிஸ் அபாபா நகர அரங்கத்தில் 7,573 பேர்கொண்ட ஒரு கூட்டத்தைப் பார்ப்பது எல்லாருடைய விருப்பமான கற்பனைக்கும் மிஞ்சியதாக இருந்தது. அங்கே ஆஜராகியிருந்தவர்கள் அநேகருக்கு, அவர்கள் கனவு காண்பதைப் போலிருந்தது. மீண்டும், மீண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு சொல்லிக்கொண்டனர்: “சகோதரரே, நமது கடவுளாகிய யெகோவா நமக்குச் செய்திருப்பதைப் பாருங்கள்!”—ஒப்பிட்டுப் பாருங்கள்: சங்கீதம் 66:1-5; 126:1.
அவர்கள் 34 வருடங்களாக தடையின்கீழ் இருந்தது, சில எதிர்பாரா பிரச்னைகளை அவர்களுக்கு உருவாக்கியிருந்தது. அநேகர் செவிக்கினிய ராஜ்ய பாடல்களில் பழக்கமற்றிருந்தனர். மாநாட்டிற்கு முன்பு அவற்றைப் பாடுவதற்கு அவர்கள் எப்படி கற்றுக்கொள்வர்? மாநாட்டு நிகழ்ச்சிகளில் உபயோகப்படுத்தப்பட்ட 17 பாடல்கள் உட்பட, 40 பாடல்கள் அம்ஹாரிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்பு, ஒலிப்பதிவு நாடாக்களில் அவற்றைப் பதிவுசெய்ய ஒரு விசேஷித்த பாடகர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தலைநகரில் உள்ள ஒவ்வொரு சபையும், இந்த நாடாவின் ஒரு நகலைப்பெற்றது. பாடல்களைப் பழகிக்கொள்ள முழு சபையும், கூட்டங்களுக்கு முன்பும், பின்பும் 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர். விளைவு? மாநாட்டின்போது இருதயப்பூர்வமான மற்றும் சந்தோஷமான பாட்டினால் அரங்கம் நிரம்பினது.
தேசத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த கலவரத்தின் காரணமாக, டிரேடவா மற்றும் ஹராரிலிருந்து தலைநகரத்துக்கு வரும் வழி அடைக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து பயணம்செய்ய ஒரே வழி விமானம் மூலமாகும். விமானப்பயணத்துக்கான கட்டணத்தைக் கொடுக்க இயலாத, ஆனால் மாநாட்டிலிருக்க தீர்மானமாயிருந்த ஹராரிலிருக்கும் எட்டு சகோதரர்கள், ஓர் இராணுவதளத்திற்குச் சென்று இராணுவ விமானத்தில் அங்கு செல்ல வேண்டினர். அவர்களுடைய கோரிக்கை அளிக்கப்பட்டது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்கு ஓர் இலவச பயணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டனர்!
கடந்த மூன்று பத்தாண்டுகளாக கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும், சகித்து, விசுவாசத்துக்காகத் தங்களுடைய நண்பர்கள் கொல்லப்படுவதையும் கண்ணால் பார்த்திருந்த இந்த எத்தியோப்பிய சகோதரர்களுக்கு தங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதைக் காண்பது ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. மாநாட்டுப் பிரதிநிதி ஒருவர் சொன்னார்: “மாநாடு தொடங்கியதிலிருந்து நான் அழுதேன்.” மற்றொருவர்: “இருதயங்களை அறியும் திறமை உங்களுக்கிருந்தால், நான் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன் என்பதை நீங்கள் காணக்கூடும்.” ஆம், இந்த உண்மையுள்ள சாட்சிகளுக்காக யெகோவா என்னே அதிசயமான காரியத்தைச் செய்திருக்கிறார்!—சங்கீதம் 66:16, 19.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அதிகப்படியான சுயாதீனம்
சமீபத்தில் யெகோவாவின் ஜனங்களின் வேலையானது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகளில் பெனினும் ஒன்று. இதைக் குறித்து சாட்சிகள் எவ்விதம் உணருகின்றனர்? அங்கே ஒரு கிறிஸ்தவக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் இதை ஒப்புக்கொண்டார்: “இந்தத் தேசத்தில் வணக்க சுயாதீனம் உண்மையிலேயே யெகோவாவிடமிருந்து வரும் ஒரு பரிசு.” ஆம், வணக்கத்தில் ஒன்றுகூடி வருவதற்கும், அயலாரிடம் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கும் கட்டுப்பாடில்லாத சுயாதீனத்தை இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருப்பதற்காக இங்குள்ள யெகோவாவின் ஊழியர்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்—நம்மில் அநேகர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுயாதீனம்.
அவர்கள் தங்கள் சந்தோஷத்தை எவ்விதம் காண்பிப்பார்கள்? மேலே குறிப்பிடப்பட்ட பேச்சாளர் பின்வருமாறு சொன்னபோது ஒரு வழியைக் குறிப்பிட்டார்: “பிரசங்க வேலையில் நாம் பங்கேற்பது—குறிப்பாக நாம் நற்செய்தியுடன் வீட்டுக்கு வீடு செல்வது—இந்தச் சுயாதீனத்தை நாம் போற்றுவதைக் காண்பிக்கிறது.” பெனினில் நிச்சயமாகவே இது இவ்வாறு இருக்கிறது. சான்றாக, பயனியர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். பதிநான்கு வருட தடையுத்தரவு நீக்கப்பட்ட மாதமான ஜனவரி 1990-ல், 77 பிரஸ்தாபிகள் ஒழுங்கான முழுநேர சேவையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு வருடங்கள் கழித்து 244-என்று அது மும்மடங்கானது!
இது தடை நீக்கப்படுவதற்கு முன் பெனினிலிருந்த சாட்சிகள் சுறுசுறுப்பாயில்லை என்பதை குறிப்பிடாது. உண்மையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டபோது கொண்டுசெல்லப்பட்ட தளத்திற்கு பொறுப்புள்ளவராயிருந்த ஓர் இராணுவ அதிகாரியின்மீது அவர்களுடைய சகிப்புத்தன்மை ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. யெகோவாவைச் சேவிப்பதில் அவர்களுடைய தீர்மானம் அடிக்கடி கைதுசெய்யப்பட வழிநடத்தியதால், அவர் அடிக்கடி அவர்களைச் சந்திப்பதைக் கண்டார். ஆனால் முன்பு சட்டப்பூர்வமான சுயாதீனத்தை அவர்கள் அனுபவித்தபோது தான் அவர்களுடன் கொண்டிருந்த சந்தோஷமான பைபிள் கலந்துரையாடல்களை அவருக்கு நினைவுபடுத்தவே இது உதவியது.
முடிவில், அவர்களுடைய உறுதியான விசுவாசம், அவரிலிருந்த ஆவிக்குரிய பசியை எழுப்பியது. அவர் பல்வேறு சர்ச்சுகளுக்கும் பிரிவுகளுக்கும் சென்று பார்த்தார், ஆனால் அந்தப் பசி தீரவில்லை. ஜனவரி 1990-ல் தடை நீக்கப்பட்டபின்தான் அவர் சாட்சிகளுடன் பைபிளை சுயாதீனத்தோடு கலந்தாலோசிக்க முடிந்தது. அவருடைய ஆவிக்குரிய தேவைக்குப் பதில் கிடைத்தது. அவர் இப்போது முழுக்காட்டப்பட்டு பயனியராக சேவிக்கிறார். ஒரு விதத்தில், அவருடைய மாற்றம் பெனினிலுள்ள சகோதரர்களுக்கு தர்சு பட்டணத்து சவுலுக்கு நிகழ்ந்ததை நினைவுபடுத்துகிறது: “முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, . . . விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான்.”—கலாத்தியர் 1:23.
மற்றொரு மேற்கு ஆப்பிரிக்க தேசத்தில், 1991 டிசம்பரில், நைகர் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமான குழுவாகப் பதிவுசெய்யப்பட்டு, அவர்களின் வேலை மீதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இங்கேயும்கூட சந்தோஷமான பிரதிபலிப்பு இருந்தது. நைகரைக் கவனிக்கும், நைஜீரியா கிளை, ஒரு மாநாட்டிலிருந்த பிரதிபலிப்பைக் குறித்து அறிவிக்கிறது: “வெள்ளிக்கிழமை மிராடி மாநாட்டில் முக்கியப் பேச்சுக்குப்பின், நைகரில் இப்போது நாம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று சகோதரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, பல நிமிடங்கள் கைத்தட்டினர். அந்த நிகழ்ச்சிநிரல் முடிந்தப்பின், சகோதரர்கள், ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அத்தகைய நற்செய்தியில் களிகூருவதை வெளிப்படுத்தினர்.” நாம் அக்காட்சியைக் கற்பனை செய்யக்கூடும், நாமும் அவர்களுடன் களிகூருகிறோம்.
புதிதாகத் தங்களுக்குக் கிடைத்த சுயாதீனத்தை இங்குள்ள சகோதரர்கள் எவ்விதம் பயன்படுத்துவர்? இந்தக் கேள்விக்கான பதிலைக் குறித்ததில் நைகரிலுள்ள ஒரு பயனியர் சகோதரிக்கு எந்தவித சந்தேகமுமில்லை. அவள் எழுதுகிறாள்: “நைகரிலுள்ள எங்கள் பிராந்தியத்தில் முடிவுக்கு முன் மகா பாபிலோனைவிட்டு வெளியேறுபவர்கள் அநேகர் என்று உண்மைகள் காட்டுகின்றன. இதற்கு சான்றாக, ஒவ்வொரு மாதமும் 80-லிருந்து 85 வரையான மறுசந்திப்புகளை என்னால் அறிக்கை செய்ய முடிகின்றது, மேலும் என்னுடைய சந்திப்புகளில் பலவற்றை மற்ற பிரஸ்தாபிகளுக்குக் கொடுத்தும்கூட, 13 அல்லது 14 பைபிள் படிப்புகளை நடத்துகிறேன்.” இந்த உண்மையுள்ள சகோதரி மேலும் சொல்கிறாள்: “என்னுடைய உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால், வெளி ஊழியத்தில் நான் விரும்புமளவு அதிகம் செய்ய முடியவில்லை, ஆனால் அவரவர் தங்களால் எவ்வளவு முடிகின்றதோ, அதைச் செய்கின்றனர்.”
மத்திய ஆப்பிரிக்காவில், ருவாண்டாவில் யெகோவாவின் சாட்சிகளின் நிலைமை கிளர்ச்சியூட்டும் வகையில் மாறியுள்ளது. ஏப்ரல் 1992-ல் கடைசியாக அவர்கள் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு என்று அறிவித்த ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆவணம், நினைவு ஆசரிப்பு நாளின் வாரத்திலேயே பெறப்பட்டது, 6,228 பேர் அந்த நிகழ்ச்சியில் ஆஜராவதைக் காண ருவாண்டாவிலுள்ள 1,526 பிரஸ்தாபிகள் கிளர்ச்சி அடைந்தனர். இந்த அன்பான சகோதரர்கள், நற்செய்தியை அறிவிப்பதில் அதிக சுறுசுறுப்பின் மூலமாக தங்கள் சந்தோஷத்தையும் போற்றுதலையும் வெளிக்காட்டுவார்களா? நிச்சயமாகவே! அதே மாதமாகிய ஏப்ரலில், சபை பிரஸ்தாபிகள் பிரசங்க வேலையில் 27.7 சராசரி மணிநேரங்களையும், 17 மறுசந்திப்புகளையும் கொண்டிருந்து சராசரியாக 2.4 பைபிள் படிப்புகளை நடத்தினர். அவர்களில் 40 சதவீதத்தினர் ஏதோவொரு வகையான முழுநேர ஊழியத்தில் இருந்தனர்.
தெற்கு ஆப்பிரிக்காவில் சட்டப்பூர்வமாகுதல்
கீழே தெற்கு ஆப்பிரிக்காவில், இரண்டு அழகிய நாடுகளான மொசாம்பிக் மற்றும் அங்கோலாவில் புதிய சுயாதீன காற்று வீசியுள்ளது. மொசாம்பிக்கில் சட்டப்பூர்வ உரிமை பிப்ரவரி 1991-ல் வழங்கப்பட்டது. அங்கே அமைதி நிலவிய காரணத்தால், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சோஸையிட்டி உள்நாட்டுப் போரால் மிகமோசமாக பாழாக்கப்பட்டுள்ள தேசத்திற்குள் மிஷனரிகளை அனுப்பியது. மிஷனரிகள் வளமான பிராந்தியத்தைக் கண்டடைந்தார்கள். பைபிள் இலக்கியங்களுக்கு—குறிப்பாக இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்—அதிகமான தேவை இருக்கிறது. இரண்டரைக்கும் குறைவான மணிநேரங்களில் ஒரு மிஷனரி 50 புத்தகங்களை அளித்ததாக அறிக்கைசெய்கிறார்.
அக்கறையுள்ள ஜனங்கள் விரைவாக பிரதிபலிக்கின்றனர். சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு முகவரிக்கு ஒரு மிஷனரி சென்றார், அது இராணுவத்தில் இருக்கும் ஒரு மனிதரின் முகவரியாக இருந்தது. அந்த மனிதருடனும் அவருடைய உறவினர் இருவருடனும் நல்ல ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஒரு மறுசந்திப்பில் அந்த மனிதருடனும் மற்றும் ஓர் ஐந்துபேருடனும் மற்றொரு பலன்தரும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. பின்னர் பொதுப்பேச்சு மற்றும் காவற்கோபுரம் படிப்புக்கு ஆஜராக அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்—எல்லாம் நான்கு நாட்களுக்குள்.
அங்கோலாவில், ஏப்ரல் 1992-ல் சாட்சிகள் தங்களுடைய வேலை சட்டப்பூர்வமாக்கப்படுவதில் முடிவடைந்த அதிகப்படியான சுயாதீனத்தை அனுபவித்தார்கள். தங்களுடைய அதிகமான சுயாதீனத்தை அவர்கள் எவ்விதம் உபயோகிக்கின்றனர்? அவர்கள் வெளிஊழியத்தில் பங்கேற்கின்றனர்! அங்கோலாவில் சுமார் 17,000 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், இந்தப் பிரஸ்தாபிகள் கிட்டத்தட்ட 60,000 பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர். எதிர்கால அதிகரிப்புக்கு என்னே ஓர் எதிர்பார்ப்பு!
சாட்சிகொடுத்தலில் இளைஞர் பங்கேற்கின்றனர்
சமீபத்தில் பிரசங்க வேலை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள இந்தத் தேசங்களில், இளைஞரும், இன்னமும் முழுக்காட்டப்படாதவர்களும்கூட, ஊழியத்தில் சுறுசுறுப்பின் மூலம் தங்கள் போற்றுதலைக் காண்பிக்கின்றனர். நவம்பர் 1990-ல், யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள வெர்ட் முனை குடியரசில், ஒரு மாநாட்டில் 17 வயது பெண்ணொருத்தி தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிட எழுந்து நின்றாள். முழுக்காட்டுதலுக்குப் பிறகு ஒரு பார்வையாளர், அவளைச் சுற்றி ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர் அவளை வாழ்த்த அவள் அருகே சென்று, கூட்டத்தினர் யார் என்று கேட்டார். அவள் பதிலளித்தாள்: “ஓ, இவர்கள் என் பைபிள் படிப்புகள்.” அவள் ஏழு பைபிள் படிப்புகளை நடத்திவந்தாள். அவளுடைய முழுக்காட்டுதலுக்காக அவர்கள் அவளை வாழ்த்திக்கொண்டிருந்தனர். துணைப் பயனியர் சேவைக்காக அவள் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாள், முடிவில் ஓர் ஒழுங்கான பயனியராக தகுதிப்பெறுவதை எதிர்பார்த்திருக்கிறாள்.
அங்கோலாவில் ஒரு பத்து-வயது பெண்ணிடம் அவள் ஒரு பிரஸ்தாபியா என்று கேட்கப்பட்டது. அவள் “ஆம்” என்று பதிலளித்தாள். அவள் ஏதாவது பைபிள் படிப்புகளை நடத்தினாளா? “நிச்சயமாகவே.” எத்தனை? இந்தப் பத்து வயதுப் பெண் “ஏழு” என்று பதிலளித்தாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகளில், நாம் வாசிக்கிறோம், முதல் நூற்றண்டில் ஒரு கட்டத்தில், “யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்துபெருகின.” (அப்போஸ்தலர் 9:31) ஆப்பிரிக்காவிலுள்ள நம்முடைய சகோதரர்களுக்கும்கூட இது சமாதானமான காலமாக இருக்கட்டும் என்று நாம் ஜெபிக்கிறோம். அவர்கள் கட்டியெழுப்பப்படுகையில் நாம் அவர்களோடேகூட சந்தோஷப்படுகிறோம், நற்செய்தியைப் பரப்புவதற்கு தங்களுக்கிருக்கும் சுயாதீனத்தை அனுகூலப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கையில் யெகோவாவின் ஆவி அவர்கள் மீதிருக்கட்டும் என்று நாம் ஜெபிக்கிறோம்.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள அல்லது அவர்கள் மீதிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டிருக்கும் தேசங்கள்
1. கேம்பியா, டிசம்பர் 1989
2. பெனின், ஜனவரி 1990
3. வெர்ட் முனை குடியரசு, நவம்பர் 1990
4. மொசாம்பிக், பிப்ரவரி 1991
5. கானா, நவம்பர் 1991
6. எத்தியோப்பியா, நவம்பர் 1991
7. காங்கோ, நவம்பர் 1991
8. டோகோ, டிசம்பர் 1991
9. நைகர், டிசம்பர் 1991
10. சாத், ஜனவரி 1992
11. கென்யா, மார்ச் 1992
12 .அங்கோலா, ஏப்ரல் 1992
13. ருவாண்டா, ஏப்ரல் 1992
[பக்கம் 23-ன் படம்]
பெனினில் ஒரு ராஜ்ய பிரஸ்தாபி தன் பேசும் முரசில் மத்தேயு 24:14-லுள்ள வார்த்தைகளை முழங்குகிறார்
[பக்கம் 25-ன் படம்]
அநேக ஆப்பிரிக்க தேசங்களில், மெய்க் கிறிஸ்தவர்கள் புதிதாகக் கிடைத்த தங்கள் சுயாதீனத்தை நல்லவிதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
[பக்கம் 26-ன் படம்]
புதிய சாட்சிகள் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள்