நீங்கள் பாவத்தை எவ்வாறு கருதுகிறீர்கள்?
“அவள் ஏன் ஜெபத்தில் எங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறாள்?” என யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தலைவி முணுமுணுத்துக்கொண்டாள். “நான் ஒரு குற்றவாளி என்பதுபோல் அது தொனிக்கிறது.” இந்தப் பெண்ணைப்போன்றே, பலர் இன்று தாங்கள் ஒரு குற்றச்செயலைப் புரிந்தாலன்றி தங்கள் பாவங்களை உணராதிருக்கிறார்கள்.
யூதேய-கிறிஸ்தவ மதங்களில் கற்பிக்கப்பட்டது போல சுதந்தரிக்கப்பட்ட பாவத்தைப் பற்றி பாரம்பரியமான கருத்தைக் கொண்டிராத கிழக்கத்திய நாடுகளில் இது விசேஷமாய் உண்மையாய் இருக்கிறது. (ஆதியாகமம் 3:1-5, 16-19; ரோமர் 5:12) உதாரணமாக, ஷின்டோ மதத்தைச் சேர்ந்தவர்கள் பாவத்தை, நுனியிலே காகிதம் அல்லது சணல்நார் இணைக்கப்பட்ட ஒரு மதகுருவினுடைய கோலின் ஒரு வீச்சால் எளிதாகத் துடைக்கப்பட முடிகின்ற குப்பையாக கருதுகின்றனர். இந்தச் செயல்முறையில் செய்த குற்றத்துக்கு மனந்திரும்புதல் தேவைப்படுவதில்லை. ஏன்? “தீயச் செயல்கள் மட்டுமன்றி, கட்டுப்படுத்தமுடியாத இயற்கை ஆபத்துக்களும் டிசூமி [பாவம்] என குறிப்பிடப்பட்டன,” என்று கோடன்ஷா என்ஸைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. மனிதர்களின் காரணமாயிராத டிசூமி, இயற்கை சேதங்கள், சுத்திகரிக்கும் சடங்குகளால் இல்லாமற்போகும்படி செய்யப்படும் பாவங்களாக கருதப்பட்டன.
இது, எந்தப் பாவமும், வேண்டுமென்றே செய்யப்பட்ட தீயச் செயல்களும்கூட (சட்டத்தால் தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல்களைத் தவிர) சுத்திகரிக்கும் சடங்குகளால் துடைக்கப்படலாம் என்ற எண்ணத்துக்கு வழிநடத்தியது. “ஜப்பானில் அரசியல் சுத்திகரிப்பின் சடங்கு” என்னும் தலைப்பின் கீழ், தி நியூ யார்க் டைம்ஸ், இத்தகைய மனநிலையைக் குறிப்பிட்டு, ஐப்பானில் சட்டவிரோதமான குற்றங்களில் உட்பட்டிருந்த அரசியல்வாதிகள், வாக்காளர்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும்போது தங்களைச் “சுத்திகரிக்கப்பட்டவர்களாகக்” கருதுகின்றனர். இதன் காரணமாக உண்மையான திருத்தம் செய்யப்படுவதில்லை, மேலும் இதைப்போன்ற சட்டவிரோதமான குற்றங்கள் மீண்டும் நிகழலாம்.
சம்சாரா அல்லது மறுபிறப்பு மற்றும் முன்வினைப்பயன் கோட்பாட்டில் நம்பிக்கைக்கொண்ட புத்தமதத்தினர் வேறுபட்ட ஒரு கருத்தைக் கொண்டுள்ளனர். தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விவரிக்கிறது: “கர்மம் (முன்வினைப்பயன்) கோட்பாட்டின்படி, நல்நடத்தை ஓர் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான விளைவைக் கொண்டுவருகிறது. மேலும் அதைப்போன்ற நற்செயல்களிடமாய் ஒரு மனச்சாய்வை உருவாக்குகிறது. அவ்வாறிருக்க, கெட்ட நடத்தை தீய விளைவைக் கொண்டுவருகிறது. மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் தீயச்செயல்களிடமாய் ஒரு மனச்சாய்வை உருவாக்குகிறது.” வேறு சொற்களில், பாவமான நடத்தை கெட்ட கனியைக் கொடுக்கிறது. சில முன்வினைகள் அந்தச் செயல் செய்யப்பட்ட வாழ்க்கையினின்று வெகு காலத்துக்குப் பின், எதிர்கால வாழ்க்கையில் கனிகொடுப்பதாகக் கூறப்படுவதால், முன்வினைப்பயன் போதனை மறுபிறப்பு போதனையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் போதனை அதன் விசுவாசிகளை எப்படி பாதிக்கிறது? முன்வினைப்பயனை மனதார நம்பிய ஒரு புத்த பெண்மணி கூறினாள்: “என்னோடு பிறந்த ஆனால் நான் ஒன்றுமே அறிந்திராத ஏதோவொன்றிற்காக வேதனைப்படுவது அர்த்தமற்றதாயிருந்தது என நான் எண்ணினேன். அதை என் விதியாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சூத்திரங்களை ஓதுவதும், ஒரு நல்ல வாழ்க்கையை வாழக் கடினமாக முயற்சிசெய்வதும் என் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. நான் சிடுசிடுப்பாகவும், திருப்தியற்றவளாகவும், எப்போதும் குறைகூறுபவளாகவும் ஆனேன்.” தீய நடத்தையைப் பற்றிய புத்தமத போதனை பயனற்றிருக்கும் ஓர் உணர்வை அவளுக்குத் தந்தது.
கன்பூசியஸ் நெறி என்ற மற்றொரு கிழக்கத்திய மதம் மனித தீமைகளைக் கையாள வித்தியாசமான வழியைக் கற்பித்தது. முப்பெரு கன்பூசிய தத்துவஞானிகளில் ஒருவரான ஷுன்டஸுவின் பிரகாரம், மனித இயல்பு தீயதாயும் தன்னலச்சாய்வுடையதாயும் இருக்கிறது. பாவம்நிறைந்த மனச்சாய்வுள்ள மனிதர் மத்தியில் சமூக ஒழுங்கைக் காத்துக்கொள்ள ஒழுக்கம், மரியாதை மற்றும் காரியங்களின் ஒழுங்கு என்று பொருள்படும் லி-யின் முக்கியத்துவத்தை அவர் அழுத்திக்கூறினார். மற்றொரு கன்பூசிய தத்துவஞானியான மெக்-டியுசு, மனித இயல்பு பற்றி இதற்கு எதிர்மாறான கருத்தை வெளிப்படுத்தினாலும், சமூக தீமைகள் இருப்பதை உணர்ந்தார்; மனிதரின் இயல்பு நல்லதென்று நம்பி, தீர்வுக்காக சுய-முன்னேற்றத்தின் மேல் சார்ந்திருந்தார். இருவழியிலும், கன்பூசிய தத்துவஞானிகள், உலகில் பாவத்தை எதிர்த்துபோரிட கல்வி மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தைக் கற்பித்தனர். அவர்கள் போதனை லி-யின் தேவையின் மீது ஒத்திசைவாக இருந்தாலும், பாவம் மற்றும் தீமை ஆகியவற்றைப் பற்றிய அவர்களுடைய கருத்து மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது.—ஒப்பிடவும்: சங்கீதம் 14:3; 51:5.
மேற்கில் பாவத்தைப்பற்றிய மறைந்துகொண்டிருக்கும் கருத்து
மேற்கில், பாவத்தைப் பற்றிய கருத்துக்கள் பாரம்பரியமாய் தெளிவானதாக இருந்திருக்கின்றன. மேலும் அநேகர் பாவம் இருக்கிறதெனவும், அது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் ஒத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், பாவத்தினிடமாக மேற்கத்திய கருத்துக்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. மனச்சாட்சியின் குரலைத் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு “குற்றத்தன்மைப் பயணம்” என குறிப்பிடுகிறவர்களாக, பலர் பாவத்தைப் பற்றிய எல்லா உணர்வுகளையும் நிராகரித்துவிடுகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கும் முன்பாக, போப் பயஸ் XII இவ்விதமாக வருத்தப்பட்டுக்கொண்டார்: “பாவத்தைப் பற்றிய எல்லா உணர்வுகளையும் இழந்துவிட்டிருப்பதே இந்நூற்றாண்டின் பாவமாகும்.” கத்தோலிக்க வாரப் பத்திரிகையான லி பெலிரின்-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, பெரும்பாலானோர் ரோமன் கத்தோலிக்கர்கள் என உரிமைபாராட்டும் பிரான்ஸின் மக்கள்தொகையின் வியத்தகு 90 சதவீதத்தினர் இப்போது பாவத்தை நம்புவதில்லை.
ஆம், கிழக்கிலும் மேற்கிலும் பாவத்தைப் பற்றிய உணர்வால் தொல்லைப்படுத்தப்படாத, வசதியான மனநிறைவில் பெரும்பாலானோர் இப்போது வாழ்ந்துவருவதுபோல் தோன்றுகிறது. இருப்பினும் பாவம் என்பது இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? பாதுகாப்பாக நாம் அதை புறக்கணித்துவிடமுடியுமா? பாவம் எப்போதாவது மறைந்துவிடுமா?