திரளான தண்ணீர்களுள்ள கிராமத்தில் சத்தியம் எங்கும் ஊடுருவிப் பரவுகிறது
எவ்வளவு விசித்திரமாய் இருக்கிறது! தனது திரளான தண்ணீர்களுக்கு பேர்போன ஒரு தேசம் தாகத்தோடு இருக்கிறது! நீர்வளமிக்க நிலப்பகுதி வறண்டும் வளமிழந்தும் காணப்பட்டது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து வரும் சத்திய தண்ணீர்களைக் கொண்டு மட்டும்தான் அத்தாகத்தை தணிக்கமுடியும். அது பெய்ரூட்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு லெபனனில் இருக்கும் மலைகளில் மறைவான இடத்தில் 2,200 பேர் குடிவாழும் ராபே என்ற ஒரு சிறு கிராமத்தின் கதையாகும்.
அரபு மொழியில் ராபே என்ற பெயர் “விரிந்தகன்ற இடம்” என்று பொருள்படுகிறது. “விரிவான, படர்ந்த” என்று அர்த்தங்கொள்ளும் செமிட்டிக் மொழி சொல்லிலிருந்து அது வருகிறது. பொருத்தமாகவே இக்கிராமம் கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 600 மீட்டர் உயரத்தில் இரண்டு பெரிய மலைகளின் மீது பரந்து இருக்கிறது. இளவேனிற்காலத்திலும் பனிக்காலத்திலும் கிழக்கே இருக்கும் மலை உச்சிகளின் மீது வெண்பனியைக் காணலாம். அது மினுமினுக்கும் பிரகாசத்தைக் கூட்டுகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, ராபே திரளான தண்ணீர்களுள்ள ஒரு கிராமமாக இருக்கிறது. அங்கு 360 பெரிய, சிறிய ஊற்றுகள் இருக்கின்றன. அவை அதைச் சுற்றியிருக்கும் பள்ளத்தாக்குகளில் இருக்கும் கோதுமை, வாதுமை, பேரிக்காய், பீச், திராட்சை போன்றவை விளையும் செழிப்பான நிலங்களுக்கு அருமையான தண்ணீரை கொடுக்கின்றன.
ராபேயில் கடந்தகாலமும் நிகழ்காலமும் சந்திக்கின்றன
ராபேயில் அநேக அம்சங்களில் காரியங்கள் பைபிள் காலம் முதற்கொண்டு அநேகமாக அதேவிதமாகவே இருக்கின்றன. கிராமத்தில் இருக்கும் வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளன. தெருக்கள் இடுக்கமாயும், வளைந்து வளைந்து செல்வதாயும், போக்குவரவு நடமாட்டம்—கழுதைகளும் பசுக்களும்—நிறைந்ததாயும் இருக்கின்றன. மோட்டார் வண்டிகள் சில இருந்தபோதிலும், இங்கு மிருகங்கள் தான் முதலில் செல்வதற்கு உரிமைகொண்டிருக்கின்றன. அம்மிருகங்களின் எஜமான்கள் நிலத்தில் விளைந்த பொருள்களை ஏற்றி, அவையாகவே வீட்டுக்குச் செல்லும்படி அனுப்பிவிடுகின்றனர். அவைகள் இடுக்கமான தெருக்களினூடே நெரிசலான இடங்களை கடந்து தங்கள் வீட்டுக்குச் செல்கின்றன. ஏசாயா இதை சொன்னபோது தன் மனதில் கொண்டிருந்தவற்றுக்கு இது ஒத்ததாக இருக்குமா? “மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்.”—ஏசாயா 1:3.
ராபே நேர் எதிரிடையான நிலைமைகளை உடைய இடமாகவும்கூட இருக்கிறது. இங்கே நீங்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளையும், பட்டணத்துக்கே சென்றிராத எளிய உழவர்களையும் காண்பீர்கள். அங்கு தோட்டம் சூழ்ந்த மாளிகைகளும், வீட்டு மிருகங்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் சிறு குடிசைகளும் இருக்கின்றன. அநேகமாக ஒவ்வொரு வீட்டிலும் மின்சக்தி சாதனங்கள் காணப்படுகின்றன, ஆனால் மின்சக்தி எப்போதுமே கிடைப்பதில்லை. இதன் காரணமாக அநேக வீடுகள் மின் ஆக்கிகளைக் (ஜெனரேட்டர்) கொண்டிருக்கின்றன. கிராமத்தில் இருக்கும் முக்கிய தெருக்கள் தாரினால் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் வயல்களுக்குச் செல்லும் பாதைகள் சமனற்றும், கரடுமுரடானதாகவும் இருக்கின்றன. ஆகையால் வயல்களிலிருந்து வரும் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கான ஒரே வழி வீட்டு மிருகங்களின் மூலமே ஆகும். பண்ணை இயந்திரங்களை இயக்குவிப்பதற்கு மின் ஆக்கியை ஒரு கழுதை வயலுக்கு எடுத்துச் செல்வதையும்கூட நீங்கள் காணலாம். அவை சுமை சுமக்கும் மிருகங்களோடுகூட வயல்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
அதேபோன்று கிராம வாழ்க்கை அதிகமாக மாறிவிடவில்லை. நீங்கள் கிராமத்தில் ஓர் இரவு தங்கினால், காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு சேவல்களின் கூவலினால் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வீர்கள். அன்றாடக வேலை விடியற்காலையிலேயே ஆரம்பிக்கிறது, மிருகங்களை ஆயத்தப்படுத்தும் சமயத்தில் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்டால் ஆச்சரியமடையாதீர்கள். விடியற்காலையில் கிராமவாசிகள் அநேகர் தங்கள் மிருகங்களின் மீது சுமையேற்றிக்கொண்டு வயல்களை நோக்கிச் செல்வதையோ அல்லது தங்கள் விற்பனைப் பொருள்களை விற்பதற்காக சந்தைக்குச் செல்வதையோ நீங்கள் காணலாம்.
நேரம் ஆக ஆக, சிறு பையன்களும் பெண்களும் தெருக்களிலும் பொது இடங்களிலும் விளையாடுவதற்கு வெளியே வருகின்றனர். அவர்களுடைய கூப்பாடுகளும் சிரிப்புகளும் எதிரொலிக்கின்றன. பண்டைய எருசலேமில் இருந்த நிலைமையை சகரியா தீர்க்கதரிசி விவரித்தது போலவே அது இருக்கிறது: “நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்.” (சகரியா 8:5) கிராமத்தார் சிநேகப்பான்மையாகவும், பிறர் விஷயங்களை அறியும் அவாமிக்கவர்களாகவும் இருப்பதையும்கூட நீங்கள் காண்பீர்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிக்கும் வணக்கம் தெரிவிக்க நீங்கள் எதிர்பார்க்கப்படுகிறீர்கள். நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள், நீங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள் ஆகியவற்றை அவர்கள் அறிய விரும்புகின்றனர். ஜனங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்கின்றனர்.
சத்திய தண்ணீர்கள் ராபேவை எட்டுகின்றன
இப்படி நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் செய்திகள் விரைவாக பரவிவிடுகின்றன. 1923-ல் ஐக்கிய மாகாணங்களிலிருந்து அசாத் யூனிஸ் என்பவர் ராபே வந்தபோது இது தான் நடந்தது. அசாத் அமெரிக்காவில் செல்வந்தராக ஆகியிருப்பாரோ என்று எண்ணிக்கொண்டு அவருடைய நண்பர் அப்தல்லா பிலால் அவரைக் காணச் சென்றார். பணத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, அசாத் அவரிடம் தி ஹார்ப் ஆப் காட் என்ற புத்தகத்தை கொடுத்து, “இதோ இங்கே மெய்யான செல்வங்கள்” என்றார். முன்பு புராட்டஸ்டன்ட் ஆக இருந்த அப்தல்லா, பைபிளை அடிப்படையாகக்கொண்ட இந்தப் பிரசுரத்தை வாசித்தார். அது அவருடைய மனதில் ஆழப்பதிந்தது. அசாத் அந்தத் தகவலைக் குறித்து அதிகம் செய்யாமல் இருந்தபோதிலும், அப்தல்லா தான் கற்றறிந்த விஷயங்களைக் குறித்து கிளர்ச்சியடைந்து, தான் சத்தியத்தை கண்டுபிடித்திருப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
சில காலத்துக்குப் பிறகு, அப்தல்லா வட லெபனனில் இருந்த டிரிப்போலி என்ற பெரிய பட்டணத்துக்குச் சென்றார். அங்கே அவர் அநேக பைபிள் மாணாக்கர்களோடு தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போது யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு தான் அறியப்பட்டிருந்தனர். அங்கே அவர் தன் பைபிள் படிப்புகளில் கூடுதலான முன்னேற்றம் செய்தார். பிறகு அவர் தான் கற்றறிந்த நற்செய்தியை பரப்புவதற்கு மறுபடியும் ராபே திரும்பி வந்தார். திரித்துவம், அழியாத ஆத்துமாவை மனிதன் கொண்டிருக்கிறானா, நரக அக்கினி, மதகுருமார் அமைப்பு, பூசை, உருவச்சிலைகளை உபயோகித்தல் போன்ற பொருள்களின் பேரில் தன் சக கிராமத்தாரோடு அவர் கலந்தாலோசித்துக் கொண்டிருப்பார். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை அவர்களோடு பகிர்ந்துகொள்வார்.
கிராமத்தாரில் சிலர் அக்கறை காண்பித்தனர். அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் பிரசங்க வேலையில் அப்தல்லாவோடு சேர்ந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். அவற்றில் கிராமபோன் ஒலிப்பதிவு செய்யும் தட்டில் பதிவுசெய்து வைக்கப்பட்டிருந்த சிறு சொற்பொழிவை கேட்பர் அல்லது பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பர். அதைத் தொடர்ந்து, அவர்கள் கேட்ட விஷயங்களைக் குறித்து ஒரு கலந்தாலோசிப்பு இருக்கும். பின்னர் தி ஹார்ப் ஆப் காட், ரிச்சஸ், லெட் காட் பி ட்ரு போன்ற பைபிள் படிப்பு உதவி புத்தகங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. கூட்டங்களுக்கு பத்து நபர்களுக்கு மேல் ஆஜராகவில்லை. அவர்களில் அநேகர் ஆர்வம் காட்டுவதைவிட என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று தான் வந்தனர். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அளிக்கப்பட்ட உணவுக்காக மட்டுமே சிலர் வந்ததாக தோன்றியது.
ராபேவில் இருந்த தொகுதியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அப்தல்லா பிலாலுக்கு 1940-களில் கொடுக்கப்பட்டது. அவர் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்து யெகோவாவின் உண்மையான, வைராக்கியமுள்ள ஊழியனாக நிரூபித்தார். அவர்களில் ஒருவரான சகோதரர் மாட்டர், அவர்கள் எவ்வாறு தங்கள் பிரசங்க வேலையை செய்தனர் என்று நினைவுபடுத்தி சொல்கிறார்: “அந்நாட்களில் கார்கள் இல்லாததனால், சகோதரர் பிலாலும் நானும் சாட்சி கொடுப்பதற்காக அருகாமையில் இருந்த கிராமங்களுக்கு நடந்தே சென்றோம். நான் கிராமபோன் பெட்டியை எடுத்துச் சென்றேன். சகோதரர் பிலால் முன்சென்று பேசினார். நாங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டுச் சென்றோம்.” சகோதரர் பிலால் 98 வயதுள்ளவராய் 1979-ல் தன் மரணம் வரை யெகோவாவை உண்மையோடு சேவித்தார்.
முன்னேற்றம் எதிர்ப்பைக் கொண்டுவருகிறது
வேலை முன்னேற்றமடைந்து வருகையில், சகோதரர்கள் எதிர்ப்பை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். கிராம குரு பின்னின்று தூண்டி விட்டதால் 1950-ல் சகோதரர்களுக்கு விரோதமாக ராபேயில் துன்புறுத்தல் தொடர்ந்து வர ஆரம்பித்தது. புனித இடத்தையும், சர்ச்சின் புனித நிலையையும் சகோதரர்கள் அவமதித்ததாக குரு குற்றஞ்சாட்டினார். சில கிராமத்தார் அவ்வளவு கோபமடைந்ததனால் சகோதரர்கள் மீது கல்லெறிந்தனர். சில சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். என்றாலும், அதைப் பின்தொடர்ந்து நடந்த விசாரணை குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபித்தது. அப்படியிருந்தாலும், சகோதரர்கள் சிறையில் பல நாட்கள் வைக்கப்பட்டனர்.
விடாமல் தொடர்ந்து ஜனங்களுடைய வீடுகளுக்கு வந்து அவர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும், சகோதரர்கள் மீது இன்னும் அநேக காரியங்களைக் குறித்து குற்றச்சாட்டுகளையும் ஒரு தாளில் எழுதி, கிராமவாசிகள் அதில் கையொப்பமிடும்படி மற்றொரு எதிராளி முயற்சி செய்தான். அக்கிராமத்தில் சிலருக்கு நன்றாக வாசிக்க தெரியாது. ஒரு வேலையாளை கிராமத்துக்கு மறுபடியும் மாற்றுவதற்கான வேண்டுகோள் அது என்று இன்னும் அநேக ஜனங்களை தாளில் கையொப்பமிடும்படி செய்வதற்கு அவன் அவர்களிடம் அவ்வாறு சொன்னான். அது உண்மையில் சாட்சிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு என்று ஜனங்கள் கண்டுபிடித்தபோது, அவர்கள் தங்கள் கையொப்பங்களை அடித்துவிட்டனர். அவ்விடத்தில் இருந்த அநேக அதிகாரிகளுக்கு நல்ல சாட்சி கொடுப்பதற்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் உதவின.
இப்படிப்பட்ட நேரடியான எதிர்ப்பை கையாளுவது மட்டுமல்லாமல், சகோதரர்கள் மற்றொரு இடையூறை எதிர்ப்பட்டனர். ஒரு சிறு கிராமத்தில் எல்லாரும் எல்லாரையும் அறிந்திருப்பதால், “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கிறது” என்று நீதிமொழிகள் 29:25-ல் பைபிள் குறிப்பிட்டுக் காட்டுவது உண்மையாக இருந்தது. எப்போதும் குற்றங் கண்டுபிடித்துக்கொண்டும், ஏளனமாகப் பேசிக்கொண்டும் இருக்கும் அயலார், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் பேசுவதற்கு சகோதரர்களுக்கு தைரியம் தேவைப்படுகிறது. இவ்வாறு மத்தேயு 10:36-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளுக்கு மெய்யான அர்த்தம் கொடுக்கப்படுகிறது: “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” ஆயினும், அந்த நீதிமொழி சொல்வது போல் “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.” சகோதரர்களின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் மிகச்சிறந்த பலன்களைக் கொடுத்திருக்கிறது.
சத்தியம் ராபேயில் எங்கும் ஊடுருவி பரவுகிறது
யெகோவாவின் சாட்சிகளின் சிறந்த நடத்தையை கிராமத்தார் பல வருடங்களாக போற்றி வந்திருக்கின்றனர். அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ராபேயில் 1969-ல் இரண்டாவது சபை ஏற்படுத்தப்பட்டபோது சகோதரர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் தொடர்ந்து அதிக கடினமாக வேலை செய்தனர். அநேகர் முழுநேர ஊழியத்தை எடுத்துக்கொண்டனர். பெய்ரூட் நகரம் உட்பட மற்ற பிராந்தியங்களில் சேவை செய்வதற்கு சிலர் சென்றிருக்கின்றனர். யெகோவா அவர்களுடைய கடினமான வேலையை ஆசீர்வதித்தார். ராபேயில் 1983-ல் மூன்றாவது சபை ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையில் அநேக சகோதரர்கள் நகரங்களில் வாழ்வதற்காக அங்கிருந்து சென்றுவிட்டனர். இருந்தாலும், வளர்ச்சி தொடர்ந்து இருந்தது. ராபேயில் 1989-ல் நான்காவது சபையும், 1990-ல் ஐந்தாவது சபையும் ஏற்படுத்தப்பட்டது.
இக்காலத்துக்குள்ளாக கிராமத்தில் இருந்த ஒவ்வொரு குடும்பமும் சாட்சியாக இருந்த ஒரு நண்பரையோ அல்லது உறவினரையோ கொண்டிருந்தது. ஒருக்காலத்தில் இருந்த பகைமை படிப்படியாக தணிந்துவிட்டது. ஜனங்கள் சாட்சிகளோடு நன்றாக அறிமுகமாகிவிட்டனர். “மூப்பர்,” “பயனியர்,” “வட்டாரக் கண்காணி,” “மாநாடு,” “அர்மகெதோன்” போன்ற சொற்கள் கிராமவாசிகளின் சொற்களஞ்சியத்தின் பாகமாக ஆனது. வட்டார கண்காணியின் சந்திப்பு அல்லது நினைவு ஆசரிப்பு நாள் போன்ற விசேஷித்த சமயங்களில் தெருக்கள் காலியாகவும், ராஜ்ய மன்றங்கள் நிரம்பியும் இருக்கும். அயலாரின் வசதிக்கென சில சபைகள் மாடி முகப்பின் மீது ஒலிபெருக்கிகளையும்கூட வைக்கின்றன.
இப்போது ராபேயில் 250 ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு மேல் இருக்கின்றனர். அப்படியென்றால் கிராமத்தில் இருக்கும் 8 நபர்களுக்கு 1 சாட்சி என்று இது அர்த்தமாகிறது. 51 பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு சபை 76 வீடுகளைக் கொண்ட பிராந்தியத்தைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதை ஒவ்வொரு வாரமும் செய்து முடித்துவிடுகின்றனர். சென்ற வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களின் போது 250 பிரஸ்தாபிகளில் 98 பிரஸ்தாபிகள் ராபேயில் இருந்த 13 ஒழுங்கான பயனியர்களோடு சேர்ந்து துணைப்பயனியர் ஊழியத்தை செய்தபோது என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். ஒவ்வொரு வாரமும் பிராந்தியம் அநேக முறைகள் செய்து முடிக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று ஜோடி பிரஸ்தாபிகள் ஒரே நாளில் அல்லது ஒரே சமயத்திலும்கூட ஒரு வீட்டை சந்திப்பது அசாதாரணமாக இருந்ததில்லை. கிராமவாசிகளில் அநேகர் அவர்களுடைய சந்திப்புகளுக்கு பழக்கமாகி விட்டிருந்தனர். ஆனால் ஒரு மனிதர் குறை கூறியபோது, ஒரு பிரஸ்தாபி இவ்வாறு பதிலளித்தார்: “ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் கொடுக்கும் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால், வாரத்துக்கு ஒருமுறை தான் நாங்கள் உங்களை சந்திப்போம்.” வயல்களில் அவர்கள் சந்திக்கும் உழவர்கள், விதை விதைப்பவர்கள், நீர்ப்பாய்ச்சுபவர்கள் அல்லது கழுதை மீது சவாரி செய்பவர்கள்—ஒவ்வொருவரிடமும் அவர்கள் பேசுகின்றனர்.
உண்மையில், அநேக தண்ணீர்களுள்ள கிராமமாகிய ராபேயில் பைபிள் சத்தியம் எங்கும் ஊடுருவி பரவியிருக்கிறது. அது மட்டுமல்ல. சுற்றியிருக்கும் அநேக கிராமங்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் அளிக்கும் ஊற்றுமூலமாய் ராபே இருப்பதுபோல, ஜீவனை-அளிக்கும் பைபிள் சத்திய தண்ணீர்களையும்கூட அது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அருகாமையில் இருக்கும் கிராமங்களில் உள்ள ஜனங்களை ராபேயில் இருக்கும் பிரஸ்தாபிகள் கால்நடையாய் சென்று சந்திக்கின்றனர். மிகவும் தொலைவில் உள்ள கிராமங்களில் பிரசங்கிப்பதற்கு கார் தொகுதிகளை ஏற்பாடு செய்து பகல் நேரம் முழுவதும் செலவழிக்கின்றனர். சில பிரஸ்தாபிகள் மற்ற நகரங்களில் சேவை செய்வதற்காக செல்கின்றனர். யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு கூடுதலான அதிகரிப்பு இருக்கும். அது பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு இன்னுமதிகமான துதியைக் கொண்டுவரும்.
[பக்கம் 26-ன் படம்]
ராபேயில் ஒரு தெருக் காட்சி