உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாய் கடவுளுடைய புதிய உலகுக்குள் கொண்டுசெல்ல உழையுங்கள்
“கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்வீர்.”—சங்கீதம் 12:7.
1, 2. (எ) கடைசிநாட்களின் அழுத்தங்களை சில குடும்பங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன? (பி) கிறிஸ்தவ குடும்பங்கள் தப்பிப்பிழைக்க எவ்வாறு உழைக்கலாம்?
“இன்று என்னுடைய இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது,” என்று ஜான் என்ற பெயரையுடைய ஒரு கிறிஸ்தவ மூப்பர் உணர்ச்சி பொங்கக் கூறினார். இப்பெரு மகிழ்ச்சிக்குக் காரணம்? “என்னுடைய 14 வயது மகனும் 12 வயது மகளும் முழுக்காட்டப்பட்டனர்,” என்று அவர் கூறுகிறார். ஆனால் அவருடைய மகிழ்ச்சி அதோடு முடிந்துவிடவில்லை. “என்னுடைய 17 வயது மகனும், 16 வயது மகளும் கடந்த வருடம் துணைப்பயனியர்களாக இருந்திருக்கின்றனர்” என்று அவர் கூடுதலாக சொல்கிறார்.
2 நம் மத்தியில் இருக்கும் அநேக குடும்பங்கள் பைபிள் நியமங்களைப் பொருத்துகையில் அதே போன்ற சிறந்த விளைவுகளை கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் பிரச்னைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். “எங்களுக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களை கையாளுவது படிப்படியாக அதிக கடினமாகிக் கொண்டேயிருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே ஒரு பிள்ளையை இந்தப் பழைய ஒழுங்குமுறையின் காரணமாக இழந்துவிட்டிருக்கிறோம். எங்களுடைய இளம் பருவவயதினர் சாத்தானின் முக்கியமான தாக்குதலின் இலக்காக இப்போது இருக்கின்றனர்,” என ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் எழுதுகின்றனர். திருமணம் சம்பந்தமான கடும் சச்சரவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் தம்பதிகளும்கூட இருக்கின்றனர். சில சமயங்களில் அவை பிரிந்து வாழ்தல் அல்லது விவாகரத்தில் விளைவடைகின்றன. எனினும், கிறிஸ்தவ குணங்களை விருத்தி செய்யும் குடும்பங்கள் “மிகுந்த உபத்திரவத்தை” தப்பி வரப்போகும் கடவுளுடைய புதிய உலகுக்குள் பாதுகாக்கப்படலாம். (மத்தேயு 24:21; 2 பேதுரு 3:13) அப்படியென்றால், உங்களுடைய குடும்பம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
பேச்சுத்தொடர்பை மேம்படுத்துதல்
3, 4. (எ) குடும்ப வாழ்க்கையில் பேச்சுத்தொடர்பு எவ்வளவு முக்கியமானது, அதோடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏன் அடிக்கடி எழும்புகின்றன? (பி) கணவர்கள் நல்ல செவிகொடுத்துக் கேட்பவர்களாக இருக்க ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
3 நல்ல பேச்சுத்தொடர்பு ஓர் ஆரோக்கியமான குடும்பத்தின் ஜீவஇரத்தமாயிருக்கிறது; அது குறைவுபடும்போது அழுத்தமும் மனஇறுக்கமும் அதிகரிக்கிறது. “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்” என்று நீதிமொழிகள் 15:22 சொல்கிறது. அக்கறைக்குரியவிதமாக ஒரு திருமண ஆலோசகர் இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “நான் ஆலோசனை கொடுக்கும் மனைவிகளிடமிருந்து நான் கேட்கும் அதிக வழக்கமான மனக்குறை என்னவென்றால், ‘அவர் என்னோடு பேசுவதில்லை,’ ‘அவர் நான் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதில்லை.’ திருமண ஆலோசகராகிய நான் இக்குறையை அவர்களுடைய கணவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, அக்கணவர்கள் எனக்கும் செவிகொடுத்துக் கேட்பதில்லை.”
4 எது பேச்சுத்தொடர்பு இல்லாமல் போகச்செய்கிறது? ஒரு காரணம், ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். தெளிவாக கவனிக்கத்தக்க அளவுக்கு அவர்கள் வித்தியாசமான பேச்சுத்தொடர்பு நடைகளை கொண்டிருக்கின்றனர். ஒரு கணவர் தன் சம்பாஷணைகளில் “நேரடியாகவும் நடைமுறையாகவும் இருக்கும் இயல்புடையவராயிருக்கிறார்.” ஆனால் “எல்லாவற்றைக் காட்டிலும் கரிசனையோடு செவிகொடுத்துக் கேட்பவரை [ஒரு மனைவி] விரும்புகிறாள்” என்று ஒரு கட்டுரை குறிப்பிட்டது. இது உங்களுடைய திருமணத்தில் பிரச்னையாக இருக்குமேயென்றால், காரியங்களை மேம்படுத்துவதற்கு உழையுங்கள். ஒரு சிறந்த செவிகொடுப்பவராக இருப்பதற்கு கிறிஸ்தவ கணவர் கடினமாக உழைக்கவேண்டியிருக்கும். “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருக்கக்கடவர்கள்” என்று யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 1:19) உங்களுடைய மனைவி வெறுமென “இரக்கத்தைக்” கேட்கையில் கட்டளையிடுவதையும், போதிப்பதையும், பெரிய பேச்சுக் கொடுப்பதையும் தவிர்க்க கற்றுக்கொள்ளுங்கள். (1 பேதுரு 3:8) “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்,” என்று நீதிமொழிகள் 17:27 சொல்கிறது.
5. கணவர்கள் தங்கள் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் முன்னேற்றம் செய்வதற்கு சில வழிகள் யாவை?
5 மறுபட்சத்தில், “பேச ஒரு காலமுண்டு.” உங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அதிக விளக்கமாக வெளிப்படுத்துவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். (பிரசங்கி 3:7) உதாரணமாக, உங்களுடைய மனைவியின் சாதனைகளை நீங்கள் தாராளமாக புகழுகிறீர்களா? (நீதிமொழிகள் 31:28) வீட்டை கவனித்துக்கொள்வதற்காகவும், உங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும் அவள் செய்யும் கடினமான வேலைக்கு நீங்கள் உங்களை நன்றியுள்ளவர்களாய் காண்பிக்கிறீர்களா? (கொலோசெயர் 3:15 ஒப்பிடவும்.) அல்லது “நேசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை” சொல்வதில் நீங்கள் ஒருவேளை முன்னேற வேண்டியிருக்கலாம். (உன்னதப்பாட்டு 1:2, NW) அவ்வாறு செய்வது முதலில் சங்கடமாக தோன்றலாம். ஆனால் உங்கள் மனைவியின் பேரில் நீங்கள் கொண்டிருக்கும் அன்பில் அவள் பாதுகாப்பாக உணரச்செய்வதற்கு அது உதவியாயிருக்கும்.
6. குடும்ப பேச்சுத்தொடர்பை மேம்படுத்த மனைவிகள் என்ன செய்யலாம்?
6 கிறிஸ்தவ மனைவிகளைப் பற்றியென்ன? அவள் தன் கணவனைப் போற்றுகிறாள் என்பதை அவர் அறிந்திருப்பதால், அதை அவள் அவரிடம் சொல்வதற்கு அவசியமில்லை என்று ஒரு மனைவி சொன்னாள். ஆனால், போற்றுதல், பாராட்டு, புகழ் ஆகியவை ஆண்களுக்கும் தேவை. (நீதிமொழிகள் 12:8) இந்த விஷயத்தைக் குறித்ததில் நீங்கள் அதிக தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா? மறுபட்சத்தில், நீங்கள் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கிறீர்கள் என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கக்கூடும். உங்களுடைய கணவன் தன் பிரச்னைகள், பயங்கள் அல்லது கவலைகள் ஆகியவற்றை வெளிப்படையாக கலந்தாலோசிப்பதை கடினமாக கருதினால், உங்களோடு தாராளமாக பேச்சுத்தொடர்பு கொள்ள அவரை தயவாயும், சாதுரியமாயும் உந்துவிப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?
7. திருமணம் சம்பந்தமான பிரச்னைகளை எது உண்டாக்கக்கூடும், அவை எவ்வாறு தவிர்க்கப்படலாம்?
7 பொதுவாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் தம்பதிக்கும்கூட சிற்சில சமயங்களில் பேச்சுத்தொடர்பில் முறிவு ஏற்படக்கூடும் என்பது உண்மை தான். உணர்ச்சி நல்யோசனையை மறைக்கச் செய்யலாம், அல்லது ஓர் அமைதியான கலந்தாலோசிப்பு விரைவில் ஒரு சூடான தர்க்கமாக மாறிவிடக்கூடும். (நீதிமொழிகள் 15:1) “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்”; மணவாழ்க்கையில் ஒரு சிறு சச்சரவு அத்திருமணத்தையே ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. (யாக்கோபு 3:2) ஆனால் “கூக்குரலும், தூஷணமும்” எந்த உறவுக்கும் பொருத்தமற்றதாகவும் தீங்கு உண்டாக்குகிறதாகவும் இருக்கிறது. (எபேசியர் 4:31) புண்படுத்தும் சொற்களை சொல்லியிருந்தால் விரைவில் சமாதானம் செய்துகொள்ளுங்கள். (மத்தேயு 5:23, 24) எபேசியர் 4:26-ல் இருக்கும் பவுலின் வார்த்தைகளை நீங்கள் இருவரும் பொருத்தினால், சச்சரவுகள் ஆரம்பத்திலேயே தவிர்க்கப்படலாம். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” ஆம், பிரச்னைகள் சிறியதாகவும் கையாளக்கூடியதாகவும் இருக்கும்போதே அவற்றைப் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்; உங்களுடைய உணர்ச்சிகள் திடீரென வெடிக்கும் சமயம் வரும் வரை காத்திருக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் செலவழித்து அக்கறைக்குரிய விஷயங்களை கலந்தாலோசிப்பது பேச்சுத்தொடர்பை வளர்ப்பதற்கும், தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதிகத்தைச் செய்யும்.
‘யெகோவாவிற்கேற்ப மனம் சீரமைக்கப்படுவது’
8. சில இளைஞர் ஏன் சத்தியத்தை விட்டு வெளியேறிவிடக்கூடும்?
8 சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வெகு குறைந்த வழிநடத்துதலைத் தருவதோடு திருப்தியுள்ளவர்களாக இருப்பதாக தெரிகிறது. பிள்ளைகள் கூட்டங்களுக்கு ஆஜராகி, வெளிஊழியத்தில் ஓரளவு பங்குகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளோடு தங்கள் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதில்லை. காலப்போக்கில் “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும்” இப்படிப்பட்ட இளைஞரைச் சத்தியத்தை விட்டு விலகிச் செல்ல வழிநடத்தக்கூடும். (1 யோவான் 2:16) பெற்றோர் மட்டும் அர்மகெதோனை தப்பிப்பிழைத்து, கடந்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை கவனியாது புறக்கணித்ததனால் அவர்களை இழந்து விடுவது பெற்றோருக்கு எவ்வளவு வருத்தமாய் இருக்கும்!
9, 10. (எ) பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும், மன சீரமைப்பதிலும்’ வளர்ப்பதில் எது உட்பட்டிருக்கிறது? (பி) பிள்ளைகள் தங்கள் உணர்ச்சிகளை தாராளமாக வெளிப்படுத்துவதற்கு அனுமதிப்பது ஏன் முக்கியமானது?
9 பவுல் இவ்வாறு எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் (மனம் சீரமைக்கப்படுதலில், NW) அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) அவ்வாறு செய்வதற்கு நீங்களே முதலாவது யெகோவாவின் தராதரங்களோடு முழுவதுமாக அறிமுகமாகியிருக்க வேண்டும். பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பது, தனிப்பட்ட படிப்பு, கூட்டத்துக்கு ஆஜராவது, வெளி ஊழியம் போன்ற காரியங்களில் நீங்கள் ஒரு சரியான முன்மாதிரியை வைக்க வேண்டும். ஒரு பெற்றோர் (1) தன் பிள்ளைகளை கூர்ந்து உற்றுநோக்குபவராக இருக்க வேண்டும். (2) அவர்களோடு நல்ல பேச்சுத்தொடர்பை காத்துவர வேண்டும் என்றும்கூட பவுலின் வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. அப்போது தான் அவர்களுக்கு எங்கே ‘மனம் சீரமைக்கப்படுவது’ தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
10 வளரும் இளமைப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் ஓரளவு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக முயற்சி செய்வது இயற்கையானதே. இருந்தாலும், அவர்களுடைய பேச்சு, சிந்தனை, உடை, முடி அலங்காரம், நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் உலகப்பிரகாரமான செல்வாக்கு இருப்பதாக தோன்றும் தெளிவான அடையாளங்களைக் குறித்து நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். நீதிமொழிகள் 23:26-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி ஒரு ஞானமான தகப்பன் இவ்வாறு சொன்னார்: “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா.” உங்களுடைய பிள்ளைகள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்களோடு தாராளமாக பகிர்ந்து கொள்கிறார்களா? உடனடியாக கண்டிக்கப்படுவர் என்ற பயம் பிள்ளைகளுக்கு இல்லையென்றால், ஓய்வுநேர விருப்ப வேலைகள், காதல் சந்திப்பு, உயர்கல்வி அல்லது பைபிள் சத்தியம் ஆகியவற்றைக் குறித்து அவர்கள் உண்மையிலேயே எவ்வாறு உணருகின்றனர் என்பதை வெளிப்படுத்த அவர்கள் தயக்கமற்றவர்களாக இருப்பர்.
11, 12. (எ) குடும்ப பேச்சுத்தொடர்பை மேம்படுத்துவதற்கு உணவருந்தும் நேரங்கள் எவ்வாறு உபயோகப்படுத்தப்படலாம்? (பி) பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு பேச்சுத்தொடர்பை மேம்படுத்துவதற்கு எடுக்கும் விடாமுயற்சிகளிலிருந்து என்ன விளைவடையலாம்?
11 அநேக தேசங்களில் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து உண்பது வழக்கமாயிருக்கிறது. குடும்ப அங்கத்தினர்கள் கட்டியெழுப்பும் சம்பாஷணையை பகிர்ந்துகொள்வதற்கு உணவு உண்ணும் சமயம் ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை அளிக்கலாம். ஆனால், டிவியும், கவனத்தைத் திருப்பும் மற்ற காரியங்களும் சாப்பிடும் நேரத்தை பெரும்பாலும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பலமணிநேரங்களாக இடைவெளியின்றி உங்களுடைய பிள்ளைகள் பள்ளியில் உண்மையில் பிணை கைதிகளைப் போன்ற ஒரு நிலையில் இருக்கின்றனர். மேலும் உலகப்பிரகாரமான சிந்தனைகளுக்கு நேரடியாக வெளிப்படுத்தப்படுகின்றனர். உங்களுடைய பிள்ளைகளோடு பேச்சுத்தொடர்பு கொள்ள உணவுநேரங்கள் நல்ல சமயங்களாய் இருக்கின்றன. “அந்நாளில் நடந்த காரியங்களைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் உணவுநேரத்தை பயன்படுத்துகிறோம்,” என்று ஒரு பெற்றோர் சொல்கிறார்கள். இருப்பினும், சிட்சை கொடுக்கும் பகுதிகளாகவோ அல்லது குறுக்குவிசாரணை செய்யும் நேரமாகவோ உணவுநேரங்கள் ஆகிவிடக்கூடாது. அந்நேரத்தை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதற்குரிய நேரமாக வையுங்கள்!
12 உங்களோடு பிள்ளைகளை தாராளமாகப் பேச வைப்பது ஒரு சவாலாக இருக்கிறது. அது எல்லையற்ற பொறுமையை தேவைப்படுத்தலாம். இருந்தாலும், காலப்போக்கில் நீங்கள் இருதயத்துக்கு அனலூட்டும் விளைவுகளை காண்பீர்கள். “எங்களுடைய 14 வயது மகன் வருத்தமாகவும் சோர்வுற்றும் இருந்தான்,” என்று ஓர் அக்கறையுள்ள தாய் நினைவுபடுத்திக் கூறுகிறாள். “எங்களுடைய ஜெபங்கள், விடாமுயற்சி ஆகியவற்றின் காரணமாக அவன் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறான்!”
கட்டியெழுப்பும் குடும்ப படிப்பு
13. பிள்ளைகளை சிறுவயதிலேயே பயிற்றுவிப்பது ஏன் அதிமுக்கியமானது, அது எவ்வாறு நிறைவேற்றப்படலாம்?
13 கடவுளுடைய வார்த்தையில் முறைப்படியான போதனை கொடுப்பதும் “மனம் சீரமைத்தலில்” அடங்கியிருக்கிறது. தீமோத்தேயுவுக்கு கொடுக்கப்பட்டது போல், அப்படிப்பட்ட பயிற்சி “சிறுவயது முதல்” ஆரம்பிக்கப்பட வேண்டும். (2 தீமோத்தேயு 3:15) பள்ளி ஆண்டுகளின் போது வரக்கூடிய விசுவாசப் பரீட்சைகளை—பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நாட்டுப்பற்று சடங்குகள் அல்லது மதசம்பந்தமான விடுமுறைகள்—எதிர்ப்படுவதற்கு சிறுவயது பயிற்சி பிள்ளைகளைப் பலப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பரீட்சைகளுக்கு தயாராக இல்லையென்றால், ஒரு பிள்ளையின் விசுவாசம் நொறுங்கி விடும். ஆகையால் சிறு பிள்ளைகளுக்காக உவாட்ச்டவர் சங்கம் தயாரித்திருக்கும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், என்னுடைய பைபிள் கதை புத்தகம் போன்ற புத்தகங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.a
14. குடும்ப படிப்பு எவ்வாறு ஒழுங்காக நடத்தப்படமுடியும், ஒழுங்கான குடும்ப படிப்பை கொண்டிருக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?
14 கவனிக்கவேண்டிய மற்றொரு அம்சம், குடும்ப படிப்பு. அது எளிதில் ஒழுங்கற்று ஆகிவிடலாம். அல்லது சலிப்பூட்டும், உயிரற்ற தன்மையுடையதாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு சோதனையை போன்று ஆகிவிடக்கூடும். நீங்கள் காரியங்களை எவ்வாறு மேம்படுத்தலாம்? முதலாவது, படிப்புக்காக நீங்கள் ‘நேரத்தை வாங்க வேண்டும்.’ டிவி காட்சிகள் அல்லது மற்ற கவனத்தைத் திருப்பும் காரியங்கள் அந்த நேரத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. (எபேசியர் 5:15-17) “எங்களுடைய குடும்ப படிப்பை ஒழுங்காக நடத்துவது எங்களுக்கு கடினமாக இருந்தது,” என்று ஒரு குடும்பத் தலைவர் ஒத்துக்கொள்கிறார். “நாங்கள் வித்தியாசமான நேரங்களை முயற்சி செய்து பார்த்தோம். இறுதியில் மாலையின் பிற்பகுதியை நாங்கள் கண்டுபிடித்தோம். அது எங்களுக்கு நடைமுறையானதாக இருந்தது. இப்போது எங்களுடைய குடும்ப படிப்பு ஒழுங்காக நடைபெறுகிறது.”
15. உங்களுடைய குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப உங்களுடைய குடும்ப படிப்பை நீங்கள் எவ்வாறு அமைக்கலாம்?
15 அடுத்து, உங்களுடைய குடும்பத்தின் குறிப்பிட்ட தேவைகளை சிந்தித்துப் பாருங்கள். அநேக குடும்பங்கள் தங்கள் வாராந்தர காவற்கோபுரம் பாடத்தை ஒன்றுசேர்ந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் பள்ளியில் எதிர்ப்படும் பிரச்னைகள் உட்பட கலந்தாலோசிக்க வேண்டிய திட்டவட்டமான விஷயங்கள் உங்களுடைய குடும்பத்துக்கு அவ்வப்போது இருக்கலாம். இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன்தரும் விடைகளும் என்ற புத்தகமும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகளும் இத்தேவையை பூர்த்தி செய்யக்கூடும். “திருத்தவேண்டிய ஏதாவது மனநிலைகள் எங்களுடைய மகன்களுக்கு இருந்தால், இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தில் அதைப் பற்றி சிந்திக்கும் குறிப்பிட்ட அதிகாரத்துக்கு அவர்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவோம்” என்று ஒரு தகப்பன் சொல்கிறார். அவருடைய மனைவி கூடுதலாக சொல்கிறார்கள்: “நாங்கள் வளைந்துகொடுக்கும் தன்மையுடையவர்களாக இருக்க முயற்சி செய்கிறோம். நாங்கள் படிப்புக்காக ஏதோவொன்றை திட்டமிட்டிருப்போம். ஆனால் வேறு ஏதோவொன்றை கலந்தாலோசிப்பதற்கு தேவை எழும்புமேயானால், அப்போது தேவைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வோம்.”
16. (எ) உங்களுடைய பிள்ளைகள் தாங்கள் கற்றுக்கொள்வதை புரிந்துகொள்கின்றனர் என்று நீங்கள் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்? (பி) ஒரு குடும்ப படிப்பை நடத்துவதில் எது சாதாரணமாக தவிர்க்கப்பட வேண்டும்?
16 உங்களுடைய பிள்ளைகள் தாங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களை உண்மையிலேயே புரிந்துகொள்கின்றனர் என்பதை நீங்கள் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? தேர்ச்சிபெற்ற போதகராகிய இயேசு “உனக்கு எப்படித் தோன்றுகிறது?” போன்ற நோக்குநிலை கேள்விகளைக் கேட்டார். (மத்தேயு 17:25) அதேபோன்று நீங்களும் செய்வதன் மூலம், உங்களுடைய பிள்ளைகள் உண்மையிலேயே என்ன நினைக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு பிள்ளையையும் தன் சொந்த வார்த்தைகளிலேயே பதில் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் சொல்லும் உண்மையான காரியங்களுக்கு நீங்கள் கோபத்தோடோ அல்லது அதிர்ச்சியோடோ அளவுக்குமீறி பிரதிபலித்தால், அவர்கள் மறுபடியும் உங்களோடு தாராளமாக பேசுவதற்கு இருமுறை யோசிப்பார்கள். ஆகையால் அமைதியாய் இருங்கள். குடும்ப படிப்பு நேரத்தை கண்டித்துத் திருத்தும் சமயமாக மாற்றுவதை தவிருங்கள். அது மகிழ்ச்சியானதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்க வேண்டும். “என்னுடைய பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு பிரச்னை இருந்தால், அதை நான் வேறொரு சமயம் கையாளுவேன்,” என்று ஒரு தகப்பன் சொல்கிறார். “குடும்ப படிப்பின் போது புத்திமதி கொடுப்பதைவிட அப்பிள்ளையை தனியாக வைத்து கையாளும்போது, பிள்ளை சங்கடமாக உணராமல், அதிக மனம் விட்டு பேசும்” என்று ஒரு தாய் கூடுதலாக சொல்கிறார்கள்.
17. குடும்ப படிப்பை உற்சாகமுள்ளதாக ஆக்க என்ன செய்யப்படலாம், உங்களுடைய குடும்ப படிப்புக்கு எது நல்ல பலனை அளித்திருக்கிறது?
17 குடும்ப படிப்பில் பிள்ளைகளை பங்கெடுக்க வைப்பது ஒரு சவாலாக இருக்கக்கூடும், விசேஷமாக வித்தியாசமான வயதுகளை உடைய பிள்ளைகளை நீங்கள் கையாளும்போது அவ்வாறு இருக்கலாம். மிகவும் சிறிய பிள்ளைகள் தொல்லை கொடுத்து கொண்டு அமைதியாக இல்லாமல் இருக்கலாம், அல்லது சிறிது நேரமே கவனம் செலுத்தக்கூடிய தன்மையை வெளிக்காட்டக்கூடும். நீங்கள் என்ன செய்யலாம்? படிப்பு சூழமைவை தளர்த்தப்பட்ட நிலையில் வைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பிள்ளைகள் சிறிது நேரம் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாயிருந்தால், சுருக்கமான படிப்புகளாக பலமுறை நடத்த முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் ஆர்வத்தோடு உற்சாகமாக படிப்பு நடத்தினால் அதுவும்கூட உதவியாயிருக்கும். “போதிக்கிறவன் போதிக்கிறதில் தரித்திருக்கக்கடவன்.” (ரோமர் 12:8) ஒவ்வொருவரையும் படிப்பில் உட்படுத்துங்கள். சிறு பிள்ளைகள் படங்களின் பேரில் குறிப்பு சொல்லலாம். அல்லது எளிய கேள்விகளுக்கு பதில்கள் சொல்லலாம். கூடுதலான ஆராய்ச்சி செய்யும்படி பருவ வயதினர்களிடம் சொல்லலாம். அல்லது சிந்திக்கும் விஷயங்களை நடைமுறையான விதத்தில் பொருத்தி விளக்கும்படி சொல்லலாம்.
18. ஒவ்வொரு சமயத்திலும் பெற்றோர் எவ்வாறு கடவுளுடைய வார்த்தையை படிப்படியாக பதியவைக்கலாம், என்ன விளைவுகளோடு?
18 வாரத்துக்கு ஒரு மணிநேரம் மட்டும் ஆவிக்குரிய போதனை கொடுப்பதோடு நிறுத்திவிடாதீர்கள். ஒவ்வொரு சமயத்திலும் கடவுளுடைய வார்த்தையை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிய வையுங்கள். (உபாகமம் 6:7) அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். தேவை ஏற்படும்போது அறிவுரை கூறி அவர்களை தேற்றுங்கள். (1 தெசலோனிக்கேயர் 2:11 ஒப்பிடவும்.) பரிவும் இரக்கமும் காட்டுங்கள். (சங்கீதம் 103:13; மல்கியா 3:17) அவ்வாறு செய்யும்போது உங்களுடைய பிள்ளைகள் உங்களுக்கு ‘ஆனந்தத்தை உண்டாக்குவார்கள்.’ கடவுளுடைய புதிய உலகுக்குள் அவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள்.—நீதிமொழிகள் 29:17.
“நகைக்க ஒரு காலமுண்டு”
19, 20. (எ) குடும்ப வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்ன பங்கை வகிக்கிறது? (பி) தங்கள் குடும்பத்தின் பொழுதுபோக்குக்காக பெற்றோர் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?
19 “நகைக்க ஒரு காலமுண்டு; . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:4) “நகைப்பு” என்ற சொல்லுக்கு எபிரெய சொல் “கொண்டாடு,” “விளையாடு,” “கேலி செய்,” அல்லது “நல்ல நேரத்தைக் கொண்டிரு” போன்ற சொற்றொடர்களாகவும்கூட மொழிபெயர்க்கப்படலாம். (2 சாமுவேல் 6:21; யோபு 41:5; நியாயாதிபதிகள் 16:25; யாத்திராகமம் 32:6; ஆதியாகமம் 26:8) விளையாட்டு ஒரு பயனுள்ள நோக்கத்தை சேவிக்கக்கூடும். அது பிள்ளைகளுக்கும் இளைஞருக்கும் முக்கியமானதாய் இருக்கிறது. பைபிள் காலங்களில் பெற்றோர் தங்கள் குடும்பங்களுக்கு பொழுதுபோக்கு, மகிழ்வளிக்கும் விளையாட்டு ஆகியவற்றுக்காக ஏற்பாடு செய்தனர். (லூக்கா 15:25 ஒப்பிடுக.) நீங்களும் அதையே செய்கிறீர்களா?
20 “பொது பூங்காக்களை நாங்கள் உபயோகப்படுத்திக்கொள்வோம்,” என்று ஒரு கிறிஸ்தவ கணவர் சொல்கிறார். “சில இளம் சகோதரர்களை நாங்கள் வரவழைத்து பந்து விளையாட்டு, விருந்துகுழு போன்றவற்றை ஏற்பாடு செய்வோம். அவர்கள் நல்ல நேரத்தைப் பயனுள்ள கூட்டுறவை அனுபவித்து மகிழ்வர்.” மற்றொரு பெற்றோர் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “எங்களுடைய பையன்களோடு காரியங்களை செய்ய நாங்கள் திட்டமிடுவோம். நீந்துவதற்காக செல்வோம், பந்து விளையாடுவோம், விடுமுறை எடுத்துக்கொள்வோம். ஆனால் நாங்கள் பொழுதுபோக்கை அதனுடைய சரியான இடத்தில் வைப்போம். சமநிலையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நான் அழுத்திக் காண்பிப்பேன்.” ஒன்றாக கூடிவருவது அல்லது மிருகக்காட்சிச்சாலை, பொருட்காட்சிச்சாலை ஆகியவற்றுக்குச் செல்வது போன்ற பயனுள்ள மகிழ்வளிக்கும் காரியங்கள் இவ்வுலகத்தின் இன்பங்களிடமாக ஒரு பிள்ளை கவர்ந்திழுக்கப்படுவதை தவிர்க்க அதிகத்தைச் செய்யக்கூடும்.
21. உலகப்பிரகாரமான விடுமுறைநாட்களை கொண்டாடுவதில்லை என்ற காரணத்தினால் ஏதோவொன்றை இழந்துவிட்ட உணர்ச்சியை பிள்ளைகள் கொண்டிருப்பதை பெற்றோர் எவ்வாறு தவிர்க்கலாம்?
21 பிறந்த நாட்களையோ அல்லது கிறிஸ்தவமற்ற விடுமுறைகளையோ தாங்கள் கொண்டாடாமல் இருப்பதன் காரணமாக எதையோ இழந்து விடுவதாக உங்களுடைய பிள்ளைகள் உணராமல் இருப்பதும்கூட முக்கியமானதாயிருக்கிறது. காரியங்களை ஓரளவு நீங்கள் ஒழுங்கமைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் அவர்கள், அனுபவித்து மகிழவேண்டிய நேரங்களை எதிர்நோக்கியிருப்பர். நல்ல பெற்றோர் தங்கள் அன்பை பொருள்சம்பந்தமான விதத்தில் காண்பிக்க ஏதோவொரு விடுமுறை நாளை சாக்காக கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ‘தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல வெகுமதிகளை எவ்வாறு கொடுப்பது என்பதை அறிந்திருக்கும்’ தம் பரலோக தகப்பனைப் போல் தானாகவே விரும்பி எச்சமயமும் கொடுப்பார்கள்.—மத்தேயு 7:11.
உங்களுடைய குடும்பத்துக்கு ஒரு நித்திய எதிர்காலத்தை உறுதிசெய்வது
22, 23. (எ) மிகுந்த உபத்திரவம் நெருங்கி வருகையில், கடவுள் பயமுள்ள குடும்பங்கள் எதைக் குறித்து உறுதியாயிருக்கலாம்? (பி) கடவுளுடைய புதிய உலகில் பாதுகாக்கப்படுவதற்காக உழைக்கையில் குடும்பங்கள் என்ன செய்யலாம்?
22 “கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்,” என்று சங்கீதக்காரன் ஜெபித்தார். (சங்கீதம் 12:7) சாத்தானிடமிருந்து அழுத்தம் விசேஷமாக, யெகோவாவின் சாட்சிகளின் குடும்பத்துக்கு எதிராக நிச்சயமாய் அதிகரிக்கும். இருந்தபோதிலும், எப்போதும் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்தத் தாக்குதலை தாங்கி நிற்பது கூடியகாரியமாயிருக்கிறது. கணவர்கள், மனைவிகள், பிள்ளைகள் ஆகியோரின் பங்கில் யெகோவாவின் உதவி, வைராக்கியமான உறுதி, கடின உழைப்பு ஆகியவை இருக்குமேயென்றால், உங்களுடைய குடும்பம் உட்பட இப்படிப்பட்ட குடும்பங்கள் மிகுந்த உபத்திரவத்தின் போது உயிரோடு பாதுகாக்கப்படும் நம்பிக்கையை கொண்டிருக்கலாம்.
23 கணவர்களே மனைவிகளே, கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் உங்கள் பாகங்களை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுடைய திருமணத்துக்குள் சமாதானமும் ஒத்திசைவும் கொண்டு வாருங்கள். பெற்றோர்களே, தொடர்ந்து உங்களுடைய பிள்ளைகளுக்கு சரியான முன்மாதிரியை வையுங்கள். பிள்ளைகளுக்கு அதிக தேவையாயிருக்கும் பயிற்சியையும் சிட்சையையும் கொடுப்பதற்கு நேரத்தை வாங்குங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் பேசுவதை செவிகொடுத்துக் கேளுங்கள். அவர்களுடைய உயிர்கள் அபாயத்தில் இருக்கின்றன. பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு செவிகொடுங்கள். கீழ்ப்படியுங்கள். யெகோவாவின் உதவியோடு நீங்கள் வெற்றியடைவீர்கள். வரப்போகும் கடவுளுடைய புதிய உலகில் ஒரு நித்திய எதிர்காலத்தை நீங்கள் உங்களுக்கு உறுதிசெய்து கொள்வீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a சில பாஷைகளில் ஒலிப்பதிவு கேசட்டுகளும் கிடைக்கும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கணவர்களும் மனைவிகளும் தங்கள் பேச்சுத்தொடர்பை எவ்வாறு மேம்படுத்தலாம்?
◻ ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மன சீரமைப்பதிலும்’ பெற்றோர் எவ்வாறு பிள்ளைகளை வளர்க்கலாம்? (எபேசியர் 6:4)
◻ குடும்ப படிப்பை கட்டியெழுப்புவதாகவும் அதிக ஆர்வமுள்ளதாகவும் ஆக்குவதற்கு சில வழிகள் யாவை?
◻ தங்கள் குடும்பங்களின் பொழுதுபோக்குக்காகவும் மகிழ்வளிக்கும் காரியங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதில் பெற்றோர் என்ன செய்யலாம்?
[பக்கம் 16-ன் பெட்டி]
இசை—ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு
பிள்ளை வளர்ப்பு பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “அவையோர் முன் நின்றுகொண்டு . . . கோகெய்ன், பாட், அல்லது மற்றெந்த மனதை மாற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டு உச்ச அளவுக்கு செல்லும் சிற்றின்பக் கூத்தாட்டத்தை ஆதரித்து பேசினால், அதிர்ச்சியூட்டும் வியப்போடு அவர்கள் என்னை பார்ப்பார்கள். . . . [இருந்தாலும்], அப்படிப்பட்ட காரியங்களை வெளியரங்கமாக ஆதரிக்கும் இசைத்தட்டுக்களை அல்லது கேசட் பதிவுகளை வாங்குவதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கின்றனர்.” (ரெய்சிங் பாசிட்டிவ் கிட்ஸ் இன் எ நெகட்டிவ் வோர்ல்ட், சிக் சிக்லர் எழுதியது) உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் பாலுறவு சம்பந்தமான விஷயங்களை தெளிவாக விளக்கும் கொட்டொலி உணர்ச்சிப் பாடல்கள் அநேக இளைஞரின் உதடுகளில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொல்லாத ஆவிகளின் கண்ணிகளை உங்களுடைய பிள்ளைகள் தவிர்ப்பதற்காக, இசையை நன்கு தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
குடும்ப ஒற்றுமையையும் பேச்சுத்தொடர்பையும் மேம்படுத்துவதற்கு உணவருந்தும் நேரங்கள் மகிழ்ச்சியான சமயங்களாக இருக்கக்கூடும்