‘நான் முழுக்காட்டுதல் பெறவேண்டுமா?’
வாழ்க்கையில் நாம் செய்யும்படியாக கேட்கப்படும் எல்லா தீர்மானங்களிலும், ஒருவேளை இதைவிட அதிக முக்கியமானது வேறு எதுவும் இல்லை: ‘நான் முழுக்காட்டுதல் பெறவேண்டுமா?’ இது ஏன் அத்தனை முக்கியமாக இருக்கிறது? ஏனென்றால் இந்தக் கேள்வியின் சம்பந்தமாக நம்முடைய தீர்மானம், நம்முடைய வாழ்க்கைப் போக்கின்மீது இப்பொழுது மட்டுமல்லாமல் நம்முடைய நித்திய நலனின்மீதும் நேரடியான பாதிப்புடையதாக இருக்கிறது.
இந்தத் தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்படுகிறீர்களா? ஒருவேளை கொஞ்ச காலமாக நீங்கள் பைபிளை யெகோவாவின் சாட்சிகளோடு படித்துக்கொண்டுவரலாம். அல்லது உங்கள் பெற்றோர் சிறுபிராயம் முதற்கொண்டு வேதவசனங்களை உங்களுக்குப் போதித்து வந்திருக்கலாம். இப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் முடிவுசெய்யவேண்டிய ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறீர்கள். நீங்கள் சரியான தீர்மானத்தைச் செய்வதற்கு, முழுக்காட்டுதல் எதை உட்படுத்துகிறது என்பதையும் யார் முழுக்காட்டுதல் பெறவேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
முழுக்காட்டுதல் எதை உட்படுத்துகிறது?
ஏறக்குறைய ஒரு திருமணத்தைப் போலவே, முழுக்காட்டுதல் என்பது ஓர் உறவை முறைப்படி கொண்டாடும் வைபவமாக இருக்கிறது. ஒரு திருமண விஷயத்தில், இதில் உட்படும் மனிதனும் ஒரு பெண்ணும் ஏற்கெனவே நெருக்கமான ஓர் உறவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். திருமண வைபவம் என்பது, தனிமையில் ஒப்புக்கொண்டுவிட்ட காரியத்தை வெறுமென வெளிப்படையாக தெரிவிப்பதாகவே இருக்கிறது, அதாவது அவர்கள் இருவரும் இப்பொழுது உண்மையான விவாக ஐக்கியத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். தம்பதிகள் அனுபவிக்கப்போகின்ற சிலாக்கியங்களையும்கூட அது திறந்துவைக்கிறது. மேலும் ஒன்றாக இணைந்த அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய உத்தரவாதங்களை அது கொண்டுவருகிறது.
முழுக்காட்டுதல் விஷயத்தில் நிலைமை வெகுவாக அதே போலவே இருக்கிறது. நாம் பைபிளைப் படிக்கையில், யெகோவா நமக்காகச் செய்திருக்கும் அன்பான காரியங்களைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். அவர் ஜீவனையும் அதைக் காத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் நமக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், பாவமுள்ள மனிதவர்க்கம் தம்மோடு ஓர் உறவுக்குள் வந்து ஒரு பரதீஸிய பூமியின்மீது நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக வழியைத் திறந்து வைப்பதற்கு தம்முடைய ஒரே பேறான குமாரனையும்கூட கொடுத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் பற்றி நாம் சிந்திக்கும்போது, நாம் செயல்பட தூண்டப்படுகிறோம் அல்லவா?
நாம் என்ன செய்யக்கூடும்? கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்குச் சொல்கிறார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் சொந்தம் கைவிட்டு, தன் கழுமரத்தை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24, NW) ஆம், நாம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகி, தம்முடைய தகப்பானாகிய யெகோவாவின் அக்கறைகளை சேவிப்பதில் அவர் வைத்த முன்மாதிரியை நாம் பின்பற்றலாம். இருப்பினும் அவ்விதமாகச் செய்வது, நம்மை நாமே ‘சொந்தம் கைவிடுவதை’ அதாவது நம்முடைய சித்தத்துக்கு முன்பாக கடவுளுடைய சித்தத்தை வைக்க மனமுவந்து நாம் தீர்மானம் மேற்கொள்வதை அது தேவைப்படுத்துகிறது; இது அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்முடைய வாழ்க்கையை அளிப்பதை அல்லது ஒப்புக்கொடுப்பதை உட்படுத்துகிறது. மனமுவந்தும் தனிமையிலும் செய்யப்படும் இந்தத் தீர்மானத்தைத் தெரிவிக்க வெளிப்படையான ஒரு வைபவம் நடத்தப்படுகிறது. கடவுளுக்கு நம்முடைய ஒப்புக்கொடுத்தலை யாவரறிய அடையாளப்படுத்துவதற்கு தண்ணீர் முழுக்காட்டுதலே அந்த வைபவமாக இருக்கிறது.
யார் முழுக்காட்டப்படவேண்டும்?
இயேசு கிறிஸ்து ‘புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து (முழுக்காட்டுதல் கொடுத்து, NW) அவர் கட்டளையிட்டிருந்த யாவற்றையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசிக்கும்படியாக’ தம்மைப் பின்பற்றியவர்களுக்கு கட்டளைக் கொடுத்தார். (மத்தேயு 28:19, 20) ஓரளவு மனது மற்றும் இருதய முதிர்ச்சி முழுக்காட்டப்படவிருப்பவர்களிடம் தேவைப்படுகிறது என்பது தெளிவாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அவர்கள் தனிப்பட்டவிதமாக படிப்பதிலிருந்து, அவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கைப் போக்கிலிருந்து ‘மனந்திரும்பி குணப்பட’ வேண்டிய அவசியத்தை போற்றுகிறார்கள். (அப்போஸ்தலர் 3:19) பின்னர், இயேசு கிறிஸ்து செய்த சுவிசேஷ வேலையை எடுத்துக்கொண்டு, அவருடைய சீஷர்களாகும் அவசியத்தை உணர்ந்துகொள்கிறார்கள். இவையனைத்தும் முழுக்காட்டுதல் படிக்கு முந்தி நிகழ்ந்திருக்கின்றன.
உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் நீங்கள் இந்தக் கட்டத்துக்கு வந்துவிட்டீர்களா? அப்படியென்றால், அப்போஸ்தலர் அதிகாரம் 8-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி எத்தியோப்பிய மந்திரியைப் பற்றிய பைபிள் பதிவை ஜெபசிந்தையோடு எண்ணிப்பாருங்கள். மேசியாவாகிய இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இந்த மனிதனுக்கு விளக்கப்பட்டபோது, அவன் தன் மனதையும் இருதயத்தையும் சோதித்துப் பார்த்து, பின்னர் “நான் ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல், NW) பெறுகிறதற்குத் தடையென்ன?” என்று கேட்டான். அவனைத் தடைசெய்ய எதுவும் இருக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது; ஆகவே அவன் முழுக்காட்டப்பட்டான்.—அப்போஸ்தலர் 8:26-38.
இன்று அநேகர் “நான் முழுக்காட்டுதல் பெறுகிறதற்குத் தடையென்ன?” என்ற அதே கேள்வியைக் கேட்கின்றனர். இதன் விளைவாக, 3,00,945 புதிதாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்கள் 1991-ல் முழுக்காட்டப்பட்டார்கள். இது எல்லா யெகோவாவின் மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொண்டுவந்தது, சபைகளிலுள்ள மூப்பர்கள், மற்ற நேர்மை இருதயமுள்ள ஆட்கள் முன்னேறவும் முழுக்காட்டுதலுக்குரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யவும் உதவிசெய்ய மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இருப்பினும், உங்கள் சபையிலுள்ள மூப்பர்கள் உங்களைக் காத்திருக்கும்படியாக ஒருவேளை யோசனை சொல்லக்கூடும். அல்லது நீங்கள் ஒரு வாலிபராக இருந்தால், காத்திருக்கும்படியாக உங்கள் பெற்றோர் உங்களுக்கு அறிவுரைக் கூறலாம். அப்போது என்ன? சோர்வடைந்துவிடாதீர்கள். மகா உன்னதமானவரோடு தனிப்பட்ட ஓர் உறவுக்குள் பிரவேசிப்பது ஆழ்ந்த முக்கியத்துவமுள்ள விஷயம் என்பதை மனதில் வையுங்கள். உயர்ந்த தராதரங்கள் பூர்த்திசெய்யப்பட்டு காத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆகவே அளிக்கப்படும் ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து அவற்றை முழு இருதயத்தோடு பொருத்துங்கள். கொடுக்கப்பட்ட காரணங்களை உங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டால், வெட்கப்படாமல், நீங்கள் என்ன தயாரிப்பைச் செய்யவேண்டும் என்பதை உண்மையில் புரிந்துகொள்ளும் வரையில் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுபட்சத்தில், சில ஆட்கள் அவர்கள் அழைக்கின்றபடி இந்த மிகப்பெரிய படியை எடுக்க தயங்கக்கூடும். அவர்களில் நீங்கள் ஒருவரா? நிச்சயமாகவே, நீங்கள் ஒப்புக்கொடுத்தலையும் முழுக்காட்டுதலையும் ஏன் தள்ளிப்போடவேண்டும் என்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் தகுதிபெற்றவராயிருந்து, இன்னும் பின்வாங்கிக்கொண்டிருந்தால், உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லதாக இருக்கும்: “நான் முழுக்காட்டுதல் பெறுகிறதற்குத் தடையென்ன?” ஜெபசிந்தையோடு உங்கள் நிலைமையை அலசிப்பார்த்து, தம்மோடு தனிப்பட்ட ஓர் உறவுக்குள் பிரவேசிப்பதற்கான யெகோவாவின் அழைப்புக்குப் பிரதிபலிப்பதைத் தள்ளிப்போடுவதற்கு உண்மையில் ஒரு நியாயமான காரணம் இருக்கிறதா என்று பாருங்கள்.
‘நான் இன்னும் இளைஞனாயிருக்கிறேன்’
நீங்கள் ஓர் இளைஞராக இருந்தால், ‘நான் இன்னும் இளைஞனாயிருக்கிறேன்,’ என்பதாக நீங்கள் ஒருவேளை யோசித்துக்கொண்டிருக்கலாம். இளைஞர்கள் தங்கள் கிறிஸ்தவ பெற்றோருக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், உடனடியாகப் பிரதிபலிப்பவர்களாகவும் நிலைத்திருந்து, வேதவசனங்களைத் தங்கள் திறமைக்கு எட்டியவரை பொருத்துவார்களேயானால், யெகோவா அவர்களைப் “பரிசுத்தமாக” கருதுகிறார் என்பது பற்றி நம்பிக்கையாயிருக்கலாம். உண்மையில் நீதியுள்ள பெற்றோருக்கு கிடைக்கும் தெய்வீக அங்கீகாரம் அவர்களுடைய ஆதரவை எதிர்பார்த்து வாழும் பிள்ளைகளுக்கு அருளப்படுகிறது என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:14) என்றபோதிலும் ஆதரவை எதிர்பார்த்து வாழும் காலப்பகுதி எப்போது முடிவடைகிறது என்பதைக் குறித்து எந்த வயதுவரம்பும் பைபிளில் கொடுக்கப்பட்டில்லை. ஆகவே, கிறிஸ்தவ இளைஞர், ‘நான் முழுக்காட்டுதல் பெறவேண்டுமா?’ என்ற கேள்வியை பொறுப்புணர்ச்சியுடன் சிந்திப்பது முக்கியமாகும்.
பைபிள் வாலிபர்களை, ‘வாலிபப் பிராயத்திலே அவர்களுடைய சிருஷ்டிகரை நினைக்கும்’படியாக உற்சாகப்படுத்துகிறது. (பிரசங்கி 12:1) இதன் சம்பந்தமாக, சிறு பையனாக “கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடைசெய்த” இளம் சாமுவேலின் முன்மாதிரி நமக்கிருக்கிறது. சிறுபிராயம் முதற்கொண்டு தன் தாயும் தன் பாட்டியும் தனக்குக் கற்பித்த சத்தியத்தைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்ட தீமோத்தேயுவின் முன்மாதிரியும்கூட இருக்கிறது.—1 சாமுவேல் 2:18; 2 தீமோத்தேயு 1:5; 3:14, 15.
அதேவிதமாகவே இன்று அநேக இளைஞர் யெகோவாவை சேவிக்க தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 15 வயது நிரம்பிய அக்கிஃயூசா, ஊழியக் கூட்டத்தின் ஒரு பகுதி, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற தனக்கு உதவியது என்று சொல்கிறான். அயூமி 10 வயதாக இருக்கும்போது முழுக்காட்டுதல் பெற்றாள். அவள் யெகோவாவை உண்மையில் நேசிக்க ஆரம்பித்ததால் அவரைச் சேவிக்க விரும்பினாள். இப்பொழுது அவளுக்கு வயது 13, சமீபத்தில் அவளைப் போலவே யெகோவாவை நேசித்த அவளுடைய பைபிள் மாணாக்கர் 12 வயதில் முழுக்காட்டுதல் பெறுவதைக் காணும் அனுபவத்தைப் பெற்றாள். அயூமின் தம்பி ஹிக்காருவும்கூட பத்து வயதில் முழுக்காட்டப்பட்டான். “சிலர் நான் மிகவும் இளைஞன் என்பதாகச் சொன்னார்கள், ஆனால் நான் எவ்விதமாக உணர்ந்தேன் என்பதை யெகோவா அறிந்திருந்தார். எனக்கிருந்த அனைத்தையும் கொண்டு அவரைச் சேவிப்பதற்கு என்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நான் முடிவுசெய்த பிறகு முழுக்காட்டுதல் பெற தீர்மானமாயிருந்தேன்,” என்பதாக அவன் நினைவுபடுத்தி சொல்கிறான்.
ஓர் இளம் சகோதரியின் அனுபவத்திலிருந்து காணமுடிகிறபடி, பெற்றோரின் முன்மாதிரியும்கூட ஒரு காரணகூறாக இருக்கிறது. அவளுடைய தந்தை, அவளோடும் அவள் தம்பியோடும் அவள் தங்கையோடும் அவளுடைய தாய் பைபிளை படிப்பதை தடைசெய்தார். அவர் அவர்களை அடித்து, அவர்களுடைய புத்தகங்களை எரித்துவிடுவார். ஆனால் தாயின் சகிப்புத்தன்மை மற்றும் விசுவாசத்தின் காரணமாக, யெகோவா தேவனை சேவிப்பதனுடைய முக்கியத்துவத்தை பிள்ளைகளால் காணமுடிந்தது. இந்த இளம் பெண் 13 வயதில் முழுக்காட்டுதல் பெற்றாள், அவளுடைய தம்பியும் தங்கையும் அவளுடைய முன்மாதிரியை பின்பற்றினார்கள்.
‘எனக்கு அதிக வயதாகிவிட்டது’
சங்கீதக்காரன் சொன்னார்: “முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.” (சங்கீதம் 148:12, 13) ஆம், வயதானவர்களும்கூட யெகோவாவின் பக்கமாக தங்கள் நிலைநிற்கையை எடுக்கவேண்டிய அவசியத்தை உணரவேண்டும். இருப்பினும் ஒரு சில வயதானவர்கள் மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்கும் பாங்குடையவர்களாக இருக்கின்றனர். “வயதாகிவிட்ட நாய்க்கு புதிய சாகசங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது,” என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், உண்மையுள்ள ஆபிரகாமிடம் யெகோவா, “உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப்புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா” என்பதாக சொன்னபோது அவர் 75 வயதுள்ளவராயிருந்தார் என்பதை நினைவுபடுத்திப்பாருங்கள். (அப்போஸ்தலர் 7:3; ஆதியாகமம் 12:1, 4) யெகோவா மோசேயிடம், “என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வா” என்று சொன்னபோது அவர் 80 வயதுள்ளவராக இருந்தார். (யாத்திராகமம் 3:10) இந்த மனிதர்களும் மற்றவர்களும் அவரிடமாக அவர்களுடைய அன்பையும் பக்தியையும் வெளிக்காட்டும்படி யெகோவா கேட்டுக்கொண்ட சமயத்தில் அவர்கள் நிலையாக குடி அமைத்து வாழ்ந்துகொண்டிருந்தனர். யெகோவாவின் அழைப்புக்குப் பிரதிபலிக்க அவர்கள் தயங்கவில்லை.
இன்றைய நாளைப் பற்றியதென்ன? ஷிஸ்மு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது 78 ஆண்டுகளாக புத்தமதத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவருடைய குடும்பத்தார் அதை ஆட்சேபித்து, அவருடைய சொந்த வீட்டில் படிப்பதற்கும்கூட அவரை அனுமதிக்கவில்லை. ஒரே ஆண்டுக்குப் பின் அவர் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து முழுக்காட்டப்பட்டார். அவர் ஏன் மாற்றத்தைச் செய்தார்? அவர் சொன்னார்: “அநேக ஆண்டுகளாக நான் பொய் மதத்தினால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறேன், யெகோவாவிடமிருந்து என்றென்றுமாக சத்தியத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள நாம் விரும்பினேன்.”
‘அது இப்பொழுது உங்களை இரட்சிக்கிறது’
காலம் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. உங்களுடையது உட்பட ஜீவன்கள் ஆபத்திலிருக்கின்றன. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து அதைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக அடையாளப்படுத்தும் விஷயத்தைக் குறித்து நீங்கள் கருத்தூன்றி சிந்திப்பது அவசரமானதாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு சொல்வதன் மூலம் அதை அழுத்திக் காண்பித்தார்: “அது . . . உங்களை இப்போதும் இரட்சிக்கிறது, அதாவது முழுக்காட்டுதல்.” முழுக்காட்டுதல் என்பது, “மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், (முழுக்காட்டப்பட தகுதியுள்ளவராக ஆவதற்கு முன்பு ஏற்கெனவே ஒரு நபர் அதை செய்திருப்பார்) தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை”யாயிருக்கிறது என்பதாக மேலுமாக அவர் விளக்கினார்.—1 பேதுரு 3:21, NW.
யெகோவாவின் தராதரங்களைப் பூர்த்தி செய்திருக்கும் காரணத்தால், முழுக்காட்டப்பட்ட சீஷன் ஒரு நல்ல மனச்சாட்சியுடையவனாகிறான். அவன் யெகோவாவை சேவிப்பதில் தன்னாலான மிகச் சிறந்ததை தொடர்ந்து செய்வதன் மூலம் அவன் மன சமாதானத்தையும் மனநிறைவையும் அனுபவிக்கிறான். (யாக்கோபு 1:25) எல்லாவற்றுக்கும் மேலாக, வரவிருக்கும் புதிய ஒழுங்குமுறையில் யெகோவாவிடமிருந்து வரும் முடிவில்லா ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கலாம். ‘நான் முழுக்காட்டுதல் பெறவேண்டுமா?’ என்ற கேள்விக்கு உடன்பாடாக நீங்கள் பிரதிபலிக்கையில், அதுவே உங்களுக்கு கிடைக்கட்டும்.
[பக்கம் 25-ன் படம்]
ஒரு சிறுபையனாக, சாமுவேல் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடைசெய்தான்
[பக்கம் 26-ன் படம்]
யெகோவா மோசேயை அனுப்பியபோது அவர் 80 வயதுள்ளவராக இருந்தார்
[பக்கம் 27-ன் படம்]
இன்று முழுக்காட்டுதல் பெறும் இளைஞரும் முதியோரும் ஆகிய இருசாராருமே கடவுளுடைய புதிய ஒழுங்கில் முடிவில்லாத ஆசீர்வாதங்களை எதிர்நோக்கியிருக்கலாம்