“பரதீஸில்” அவர்கள் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைகிறார்கள்
பரதீஸ்! இந்த வார்த்தை, ஹவாயியை நினைக்கையில் பெரும்பாலும் ஆட்களின் மனதுக்கு வருகிறது—நல்ல காரணங்களினிமித்தமே. இங்கே—பரதீஸிய நிலையென பலர் கருதக்கூடிய அம்சங்களாகிய—மிதவெப்ப சீதோஷ்ணநிலை, நீலவானங்கள், அசைந்தாடும் பனை மரங்கள், புத்துயிரளிக்கும் தென்றல்கள், மணற்பாங்கான கடற்கரைகள் ஏராளமாயுள்ளன.
இந்தத் தனிச் சிறப்பான அம்சங்கள் தூரத்திலும் அண்மையிலும் இருக்கும் ஆட்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன. அவர்கள் ஆசியாவிலிருந்தும், பசிபிக்கிலிருந்தும், அமெரிக்காக்களிலிருந்தும், கரிபியன் தீவுகள் மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களிலிருந்துங்கூட வந்திருக்கின்றனர். ஆண்டு முழுவதுமுள்ள மிதமான சீதோஷ்ணநிலைக்காக பலர் இங்கே இடம் மாற்றிக்கொண்டும் இருக்கின்றனர். மற்றவர்கள் பொருளாதார பாதுகாப்பையும்—நிச்சயமாகவே, சந்தோஷத்தையும் நாடித்தேடி வந்திருக்கின்றனர். இது, பகட்டாகத் தோன்றும் பல்வேறு அறிவு பண்பாட்டு வளர்ச்சிகளுடனும் மத அபிப்பிராயங்களுடனும், பல தேசத்தினர் மற்றும் இனத்தவர் தொகுதிகளின் நாகரிக மற்றும் சமுதாயக் கூட்டுறவு கலவையில் முடிவடைந்துள்ளது.
எனினும், இந்தச் சூழ்நிலைக் காட்சியில் மற்றொரு அம்சமும் அடங்கியுள்ளது. பூமியிலுள்ள பல அழகிய இடங்களைப்போல், ஹவாயி, குற்றச் செயல்கள், போதைப்பொருட்கள், கடமை தவறுதல், தூய்மைக்கேடு, ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் சரி மனித குடும்பத்தின்மீது தீவிரமாய் மோதித் தாக்கும் மற்ற பல பிரச்னைகள் ஆகியவற்றால் தொல்லைப்படுத்தப்படுகிறது. மனிதன் கவனித்துப் பராமரிக்கத் தவறுவதாலும் அவனுடைய தன்னலத்தாலும், ஹவாயித் தீவுகளின் இயற்கை அழகு படிப்படியாய்க் கெடுத்துப்போடப்பட்டு வருகிறது. ஜனங்களுக்குப் பரதீஸ் வேண்டும், ஆனால் இந்தத் தீவுகளை ஒரு பரதீஸாக்க அல்லது அவ்வாறு அவற்றைக் காத்துவைக்கவாவது இங்கு வாழும் பெரும்பான்மையருக்குச் சற்றேனும் அக்கறையில்லை. ஒரு பரதீஸை உண்டுபண்ண அழகிய காட்சியையும் மனதுக்குகந்த சீதோஷ்ணத்தையும் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது.
எனினும், பெருகிக்கொண்டுவரும் ஒரு மக்கள் இங்கே வாழ்கின்றனர், இவர்கள் இந்தப் பரதீஸ் போன்ற காட்சியமைவில் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்து மகிழ்கின்றனர். இவர்கள் பைபிள் சத்தியத்தை ஆர்வத்தோடு ஏற்று கடவுளுடைய இந்த அதிசயமான வாக்கை இருதயத்தில் உறுதியோடு நம்பியிருக்கின்றனர்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” இந்த ஆட்கள் அப்போஸ்தலன் பேதுருவின் பின்வரும் இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு சந்தோஷமாய் எதிர்காலத்தை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13) இந்த ஆட்கள் யார்? பைபிளில் கொடுத்துள்ள இந்த அதிசயமான நம்பிக்கையைப் பற்றி இவர்கள் எவ்வாறு அறியலானார்கள்? இவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?
மரண பயத்தை நீக்கி மேம்படுதல்
இஸபெல்லும் அவளுடைய கணவர் ஜார்ஜும் ஃபிலிப்பீனோ இனத்தவர். அவள், ஒருபோதும் பைபிளை வாசித்திராதபோதிலும், தன் பெற்றோரின் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும்படி வளர்க்கப்பட்டாள். மனித ஆத்துமா அழியாமையை உடையதென இஸபெல் கற்பிக்கப்பட்டிருந்தாள். இந்தப் பொய்க் கோட்பாட்டுக்கு அவள் எவ்வாறு பிரதிபலித்தாள்? மரிக்கும் எண்ணமே அவளுக்குத் திகிலூட்டியது, ஏனெனில், அவளுடைய ஆத்துமா தப்பிச்செல்லக் கூடாமல், பிணப்பெட்டியில் உயிருடன் என்றென்றும் புதைக்கப்பட்டிருப்பதன் எண்ணம் அவள் மனதில் இருந்தது. எனினும், 1973-ல், இஸபெல் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கத் தொடங்கினாள். மனித ஆத்துமா அழியாமையுடையதல்ல என்றும், உயிர்த்தெழுப்புவதன் மூலம் கடவுள் மரணத்தை ஒழிப்பாரெனவும் அவள் கற்றறிந்தபோது, மிகுந்த மகிழ்ச்சியடைந்து வெகுவாய் விடுபட்ட ஆறுதல் உணர்ச்சியடைந்தாள். (எசேக்கியேல் 18:4, 20; யோவான் 5:28, 29) பைபிள் சத்தியம் அவள் உள்ளத்தில் அத்தகைய ஆழ்ந்த உணர்ச்சிப்பதிவை உண்டுபண்ணியிருக்க அவள் விரைவில் முன்னேற்றமடைந்தாள்.
ஜார்ஜைப் பற்றியதென்ன? பைபிள் கலந்தாலோசிப்புகளில் அவரும் உட்கார்ந்தார், ஆனால் சாட்சிகள் தவறில் இருந்தனரென நிரூபிக்கும் எண்ணத்துடன் மாத்திரமே அவ்வாறு செய்தார். எனினும், தனக்கும் தன் மனைவிக்கும் கற்பிக்கப்படுபவற்றில் தவறான எதையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில், அவர்கள் படிக்கத்தொடங்கி சிறிது காலத்துக்குப் பின், இரத்தத்தைப் பற்றிய காரியம் எழும்பிற்று. அந்தச் சமயம் வரையில், ஜார்ஜ் இரத்தத்தோடு தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதில் விருப்பங்கொண்டிருந்தார். ஆனால் இரத்தத்தைச் சாப்பிடுவதை பைபிள் தெளிவாகக் கண்டனஞ்செய்வதை அவர் கண்டபோது, அவ்வாறு சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10-12; அப்போஸ்தலர் 15:28, 29) அவர் தொடர்ந்து பைபிள் படிப்பில் பங்குகொண்டு, தான் முடிவில் சத்தியத்தைக் கண்டடைந்தாரென பெரும் அகமகிழ்ச்சியடைந்தார். இன்று, ஜார்ஜும், இஸபெல்லும், அவர்களுடைய நான்கு பிள்ளைகளும் கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதில் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்.
உண்மையான கிறிஸ்தவத்தால் கவரப்பட்டது
ஜார்ஜ் என்ற பெயருடைய ஜப்பானியர் ஒருவரும் அவருடைய போர்ச்சுகீஸிய மனைவி லில்லியனும், தங்கள் 60-க்கு மேற்பட்ட வயதில் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஹவாயியில் பிறந்து வளர்க்கப்பட்டவர்கள். ஜார்ஜ் தன் பெற்றோரால் எந்த மதப்போதகமும் கொடுக்கப்படாததால், மதத்தை முக்கியமாக அவர் ஒருபோதும் கருதவில்லை. எனினும், அவருக்குக் கடவுளில் எப்பொழுதும் நம்பிக்கை இருந்தது. மறுபட்சத்தில், லில்லியனின் பெற்றோர் அவளை ஒரு ரோமன் கத்தோலிக்காகத் தங்கள் மதத்தில் வளர்த்தனர்.
ஜார்ஜ் ஆர்வத்துடன் பைபிள் வாசிக்கும் ஒருவராக இல்லையெனினும், ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அவர் ஆங்கில காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை வாசித்து வந்திருந்தார். இவ்வாறு அவர் பைபிளைப்பற்றி பேரளவு தெரிந்திருந்தார். எனினும், அளவுமீறிய புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் உடையவராக இருந்ததனால் தன் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதில் தாமதமாயிருந்தார். ஆண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்க, ஜார்ஜ் இந்தப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்து எப்போதாவது ராஜ்ய மன்றத்தில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் வந்துகொண்டிருந்தார். ஏன்? அவர் சொன்னதாவது, பைபிளில் கண்டனம் செய்யப்பட்ட பல கெட்ட காரியங்களைக் கண்டியாமல் அனுமதிப்பதில் “மற்ற மதங்கள் அவ்வளவு மிக பாசாங்குத்தனமுடையனவாக இருக்கின்றன.” யெகோவாவின் சாட்சிகள் வேறுபட்டிருப்பதை அவர் காண முடிந்தது.
ஜார்ஜின் உண்மையான பற்றுள்ள மனைவி லில்லியன், தன் பெற்றோரின் மதத்தால் ஆழமாய்ப் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்துக்கு அவளைக் கவர்ந்திழுத்தது எது? அவளுடைய மாம்சப்பிரகாரமான சகோதரி ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வரும்படி அவளை அழைத்தாள். “அந்தச் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையையும் அந்தச் சிநேகப்பான்மையான புன்சிரிப்புகளையும் நான் உணர்ந்து மகிழ்ந்தேன்” என லில்லியன் நினைவுபடுத்திக் கூறினாள். யெகோவாவின் ஜனங்களுக்குள் காட்டப்பட்ட, அவள் கண்ட அந்த உண்மையான அன்பு, இதுவே சத்தியம் என்று அவளை நம்பவைத்தது. (யோவான் 13:34, 35) அவள் ஒரு பைபிள் படிப்பை ஏற்று, முடிவில் யெகோவா தேவனுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அவளுடைய கணவர் முழுக்காட்டப்பட்ட சில மாதங்களுக்குப்பின் முழுக்காட்டப்பட்டாள்.
ஜார்ஜ் இனிமேலும் புகைப்பதோ குடிபோதைக்குள்ளாவதோ இல்லை, லில்லியன் தன் மத சிலைகள் யாவற்றையும் எறிந்துவிட்டாள். தாங்கள் கற்றறிந்தவற்றை அவர்கள், அன்பு நிறைந்த இருதயத்துடன், தங்கள் 25 பேரப்பிள்ளைகள் மற்றும் 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உட்பட, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களுடைய முகங்களைப் பாருங்கள், ஜார்ஜும் லில்லியனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள்!
சமாதானமும் சந்தோஷமும் கிடைத்தது
இளமை-முதுமை இடைப்பட்ட வயதினரான அயர்லாந்தியர், பாட்ரிக்கும், அவருடைய யூத மனைவி, நீனாவும், தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஹவாயிக்கு இடம் மாறி வந்தனர். முன்னால், அவர்கள், போதைப்பொருட்கள், மதப் பரிசோதனை, மற்றும் ஒழுக்கங்கெட்ட நடத்தை ஆகியவற்றில் பொறுப்பு கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை எனப்பட்ட வாழ்க்கை நடத்தினவர்கள். மேலும், போதைப்பொருட்கள், தியானம், மற்றும் தங்கள் தனித்த குருவின் மூலம் உயர் உணர்வுநிலையை அடைவதற்கு முயற்சி செய்யும் மத வழிபாட்டின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் செலவிட்டனர். காலப்போக்கில் பாட்ரிக், ‘உணர்வின் உயர்நிலை’ எட்டினவர்களாக உரிமைபாராட்டின அந்த வழிபாட்டு உறுப்பினருக்குள் இருந்துவந்த பொறாமை, போட்டி மனப்பான்மை, ஓயாத வாய்ச்சண்டை ஆகியவற்றால் சலிப்புற்றார். அவர் அந்த மதக்குழுவை விட்டு விலகி, மனசமாதானத்தைக் கண்டடைய நம்பி, தான் முன்னொரு காலத்தில் வாழ்ந்த, ஹவாயிக்குத் திரும்பினார். அதன்பின், அப்போது தன் பெண் சிநேகிதியாயிருந்த நீனாவை வரச் செய்தார். முடிவில், அவர்கள் மணம் செய்து ஹவாயியில் நிலையாகக் குடியேறினர்.
பாட்ரிக்கும் நீனாவும் மனசமாதானத்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நாடித்தேடினது முடிவில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதற்கு வழிநடத்துமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தன் வாழ்நாளெல்லாம் நாத்திகக் கொள்கையில் உறுதியாயிருந்த நீனா, தீமை இருந்துகொண்டிருப்பது ஏன் மற்றும் நல்ல ஆட்களுக்குக் கெட்ட காரியங்கள் நேரிடுவது ஏன் என்பவற்றைப்போன்ற சிக்கலான கேள்விகளுக்கு பைபிள் கொடுக்கும் திருப்திதரும் பதில்களைக் கண்டடையத் தொடங்கினாள். பாட்ரிக் பத்து ஆண்டுகள் சத்தியத்துக்காக நாடித்தேடினது அவ்வாறே சந்தோஷமான முடிவை அடைந்தது. அவரும் நீனாவும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டிருந்தவை சீக்கிரத்தில் அவர்களுடைய ஒழுக்கநெறி மனப்போக்கை மாற்றத் தொடங்கினது. நீடித்தக் கடும் போராட்டத்துக்குப் பின், பாட்ரிக் தன்னுடைய ஆழமாய் வேரூன்றியிருந்த புகைக்கும் துர்ப்பழக்கத்தை வென்று ஒழிக்க முடிந்தது. இப்பொழுது ஏறக்குறைய பத்தாண்டுகளாக, அவரும் அவருடைய மனைவியும், கடவுளுடைய தராதரங்களின்படி சுத்தமான, ஒழுக்கமுள்ள வாழ்க்கை நடத்தியிருக்கின்றனர். நேர்மையான இருதயத்துடனும் சுத்தமான மனச்சாட்சியுடனும், அவர்கள் தாங்கள் நாடித்தேடின சமாதானத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்.
தியாகங்களும் பலன்களும்
“இடுக்கமான வாசல்வழியாய் உட்செல்லப் பிரயாசப்படுங்கள்; அநேகர் உட்செல்ல வகை தேடுவார்கள், ஆயினும் அவர்களால் முடியாமற்போகுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 13:24, தி.மொ.) கடவுளைச் சேவிப்பதும் வேதவார்த்தைகளின் தராதரங்களின்படி வாழ்வதும் எளிதல்லவென இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அவ்வாறு செய்யும்படி விரும்பும் ஒவ்வொருவரும், தேவைப்படும் முயற்சியை எடுக்க வேண்டியது மட்டுமல்லாமல் அவசியமான தியாகங்களையும் செய்ய வேண்டும். இந்த விவரத்தில் குறிப்பிட்ட நபர்களின் காரியத்தில் இது நிச்சயமாகவே அவ்வாறு இருந்தது. ஆனால் எவ்வளவு அதிசயமாய் அவர்கள் பலனளிக்கப்பட்டார்கள்!
உதாரணமாக, இப்போதுதான் குறிப்பிட்ட, பாட்ரிக்கையும் நீனாவையும் கவனியுங்கள். அவர்கள் பெருந்தொகையான பணத்தைச் சம்பாதித்த வாழ்க்கை-நடைமுறையை விட்டு, தங்களை ஆதரிக்க உலகப்பிரகாரமான பகுதிநேர வேலை செய்து, முழுநேர கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும் தீவிரமான மாற்றஞ் செய்தனர். எனினும், ஆவிக்குரிய பலன்கள், அவர்கள் செய்த எந்தப் பொருளாதார தியாகங்களுக்கும் மேலாக வெகுவாய் மதிப்பில் மேம்படுகின்றனவென அவர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அவர்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்கின்றனர்.
தங்கள் வயதின் காரணமாக, ஜார்ஜுக்கும் நீனாவுக்கும் மாற்றங்கள் செய்வது எளிதாக இருக்கவில்லை. கிறிஸ்தவக் கூட்டங்களிலும் ஊழியத்திலும் பங்குகொள்வதற்கு நேரம், கவனிப்பு, மற்றும் உடல் சம்பந்தமான முயற்சி தேவைப்படுகிறது. எனினும், அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியுண்டாக, அவர்களுடைய உடல்நலம் முன்னேற்றமடைந்திருக்கிறது, மேலும் அவர்கள் இப்பொழுது நடத்தும் வாழ்க்கையைச் சுறுசுறுப்பான ஊக்கமும், நிறைவும் சந்தோஷமுமுள்ள ஒன்றென மாத்திரமே விவரிக்க முடியும்.
ஜார்ஜையும் இஸபெல்லையும் குறித்ததில், அவர்களுடைய மிகப் பெரிய சவால், தங்கள் பிள்ளைகளை ஜீவ பாதையில் சென்றுகொண்டிருப்பதற்குப் பயிற்றுவிப்பதிலும் உதவிசெய்வதிலுமே உள்ளது. நான்கு சிறுவர்களைக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அல்லது கிறிஸ்தவ ஊழியத்தில் தங்களுடன் செல்வதற்கு ஆயத்தம் செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகின்றன. ஒரு நிலையில் இந்த இடைவிடாத வேலைநெருக்கடி ஜார்ஜும் இஸபெல்லும் பெற்றோருக்குரிய தங்கள் பொறுப்புகளைக் கவனிப்பதில் தளர்வுறும்படி செய்வித்தது. ஆனால் “தன்னலத்தியாக ஆவியைத் திரும்பப் புதுப்பித்தல்” என்ற தலைப்பைக்கொண்ட பைபிள் பேச்சு ஒன்று, தங்கள் நான்கு பிள்ளைகளையும் ‘யெகோவாவின் சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டு முறையிலும் வளர்க்கும்படி’ அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா கவனத்தையும் பயிற்றுவிப்பையும் கொடுப்பதற்குத் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பான அளவாய்ப் புதுப்பிக்க அவர்களைத் தூண்டிச் செய்வித்தது. நிச்சயமாகவே, இத்தகைய முயற்சிகள் நிறைவாய்ப் பலனளிக்கப்பட்டிருக்கின்றன.—எபேசியர் 6:4, NW.
இந்த ஆட்களுக்கும் மற்றும் பலருக்கும் உண்மையான சந்தோஷத்தைக் கொண்டுவருவது அந்த அழகிய இயற்கைக் காட்சியோ, மனதுக்குகந்த சீதோஷ்ண நிலையோ, வாழ்க்கையின் தக்க ஓய்வமைவான வேகமோ அல்ல. அதைப் பார்க்கிலும், கடவுளுடைய சித்தத்தின்படி தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் பயன்படுத்துகிறார்களென்றும், அவருடைய வார்த்தையாகிய பைபிளின் தராதரத்தின்படி தாங்கள் வாழ்கிறார்களென்றும் அறிந்திருக்கும் அறிவே அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. (பிரசங்கி 12:13) மேலும், பூமிக்குரிய ஒரு பரதீஸ் பூமியெங்கும் திரும்பக் கொண்டுவரப்படுகையில் இருக்கப்போகும் அந்த மகிழ்ச்சிநிறைந்த காலத்தை அவர்கள் சிந்தித்துப் பார்க்கையில் உண்மையான சந்தோஷம் அவர்கள் இருதயத்தில் பொங்கி வழிகிறது.—லூக்கா 23:43.
[பக்கம் 24-ன் படம்]
ஜார்ஜும், இஸபெல்லும், அவர்களுடைய பிள்ளைகளும் பைபிளை வாசிப்பதில் இன்பத்தைக் கண்டடைகிறார்கள்
[பக்கம் 25-ன் படம்]
ஜார்ஜும் லில்லியனும் கிறிஸ்தவ ஊழியத்தில் சந்தோஷத்தைக் காண்கிறார்கள்
[பக்கம் 26-ன் படம்]
பாட்ரிக்கும் நீனாவும் யெகோவாவின் சேவையில் உண்மையான சமாதானத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்