விசுவாசிப்போரை ரட்சிக்க “மடமையை” யெகோவா பயன்படுத்துதல்
“உலகம் தன் ஞானத்தினால் கடவுளை அவர் ஞானத்தின்படியறிந்து கொள்ளாதிருந்தபடியால் பைத்தியமாகத் [மடமையாகத், NW] தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கக் கடவுளுக்குப் பிரியமாயிற்று.”—1 கொரிந்தியர் 1:21, தி.மொ.
1. என்ன கருத்தில் யெகோவா “மடமையைப்” பயன்படுத்துவார், இந்த உலகம் அதன் ஞானத்தில் கடவுளை அறிந்துகொள்ளவில்லையென நாம் எவ்வாறு அறிவோம்?
என்ன? யெகோவா மடமையைப் பயன்படுத்துவாரா? உண்மையில் அவ்வாறில்லை! ஆனால் இந்த உலகத்துக்கு மடமையாகத் தோன்றுகிறதை அவர் பயன்படுத்தக்கூடும், நிச்சயமாகவே பயன்படுத்துகிறார். தம்மை அறிந்து நேசிக்கிற ஆட்களை ரட்சிப்பதற்கு அவர் அவ்வாறு செய்கிறார். இந்த உலகம் தன் ஞானத்தின்மூலம் கடவுளை அறிந்துகொள்ள முடியாது. இயேசு கிறிஸ்து, தம்முடைய ஜெபத்தில் பின்வருமாறு சொன்னபோது இதைத் தெளிவாக்கினார்: “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை.”—யோவான் 17:25, தி.மொ.
2. யெகோவாவின் வழிகளும் உலகத்தின் வழிகளும் ஒன்றுக்கொன்று ஒத்தப் போக்கில் செல்வதாக எவ்வாறு தோன்றலாம், ஆனால் உண்மை என்ன?
2 யெகோவாவின் வழிகள் இவ்வுலகத்தின் வழிகளிலிருந்து வேறுபடுகின்றனவென இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. மேலீடாகக் காண்பதற்கு கடவுளுடைய நோக்கமும் இந்த உலகத்தினுடையதும் ஒன்றுக்கொன்று ஒத்தப் போக்கில் செல்வதாகத் தோன்றலாம். இந்த உலகத்தின் குறிக்கோள்கள் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பதுபோல் தோன்றலாம். உதாரணமாக, பூமியில் சமாதானத்திலும், மகிழ்ச்சியிலும், செழுமையிலும் வாழும் வாழ்வை மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவரவிருக்கும் நீதியுள்ள ஓர் அரசாங்கத்தைக் கடவுள் ஏற்படுத்துவாரென பைபிள் சொல்லுகிறது. (ஏசாயா 9:6, 7; மத்தேயு 6:10) அவ்வாறே, இந்த உலகமும், புதிய உலக ஒழுங்கு என்று அழைக்கப்படுகிறதைக் கொண்டு ஜனங்களுக்கு சமாதானத்தையும், செழுமையையும், நல்ல அரசாங்கத்தையும் கொடுப்பதற்கான அதன் நோக்கத்தைப் பெருமையாய் அறிவிக்கிறது. ஆனால் கடவுளுடைய நோக்கங்களும் உலகத்தினுடையவையும் ஒன்றேயல்ல. யெகோவாவின் நோக்கமானது, சர்வலோகத்தின் ஈடற்ற உன்னதப் பேரரசராகத் தம்மை நியாயநிரூபணஞ் செய்வதாகும். இதை அவர், பூமிக்குரிய எல்லா அரசாங்கங்களையும் தடமில்லாமல் அழித்தொழிக்கப்போகும் பரலோக அரசாங்கம் ஒன்றைக்கொண்டு செய்வார். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 4:11; 12:10) ஆகவே இந்த உலகத்துடன் கடவுளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (யோவான் 18:36; 1 யோவான் 2:15-17) இதனிமித்தமே பைபிள் ஞானத்தின் இரண்டு வகைகளைக் குறித்துப் பேசுகிறது—“தேவஞானம்” மற்றும் “இவ்வுலகத்தின் ஞானம்.”—1 கொரிந்தியர் 1:20, 21.
உலக ஞானத்தின் அடிப்படை குறைபாடு
3. உலக ஞானம் ஆழமாய் மனதைக் கவருவதாகத் தோன்றினாலும், மனிதன் வாக்களிக்கும் புதிய உலக ஒழுங்கு ஏன் ஒருபோதும் திருப்தியளிக்காது?
3 கடவுளுடைய ஞானத்தால் வழிநடத்தப்படாதவர்களுக்கு, இவ்வுலகத்தின் ஞானம் ஆழமாய் மனதைக் கவருவதாகத் தோன்றுகிறது. மனதைக் கவரும் பெருமிதமாய்த் தொனிக்கும் உலக தத்துவ ஞானங்கள் இருக்கின்றன. உயர் கல்விக்குரிய ஆயிரக்கணக்கான ஸ்தாபனங்கள், மனிதவர்க்கத்தின் மிகப்பெரிய அறிஞர்களென பலர் கருதுவோரிடமிருந்து வந்தத் தகவலைக் கொடுக்கின்றன. நெடுங்காலமாயுள்ள நூல்நிலையங்கள், பல நூற்றாண்டுகளின் மனித அனுபவத்துக்குரிய அறிவு திரட்டி வைக்கப்பட்டவையாக நிரம்பித் ததும்புகின்றன. இவை யாவும் இருந்தாலும், உலகப்பிரகாரமான அதிபதிகள் கொண்டுவரப்போவதாகக் கூறும் அந்தப் புதிய உலக ஒழுங்கு, அபூரணரும், பாவக்கறைப்பட்டோருமான சாகும் மனிதரால் ஆளப்படும் ஆட்சியாகத்தானே இருக்க முடியும். ஆகவே, அந்த ஒழுங்கு அபூரணமாயும், கடந்தகால பெரும்பிழைகள் பலவற்றைத் திரும்பச் செய்பவையாகவும், மனிதவர்க்கத்தின் தேவைகள் எல்லாவற்றையும் முழுமையாய் ஒருபோதும் தீர்க்காமலும் இருக்கும்.—ரோமர் 3:10-12; 5:12.
4 மனிதன் கொண்டுவரப்போவதாகக் கூறும் புதிய உலக ஒழுங்கு, மனித குறைபாடுகளுக்கு மாத்திரமல்ல பொல்லாத ஆவி சிருஷ்டிகள்—ஆம், பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும்—செல்வாக்குச் செலுத்துதலுக்குங்கூட உட்பட்டதாயுள்ளது. சாத்தான் ஜனங்களின் மனதைக் குருடாக்கியிருப்பதால் அவர்கள், “கிறிஸ்துவைப்பற்றிய அந்த மகிமையான நற்செய்தி”யை நம்புகிறதில்லை. (2 கொரிந்தியர் 4:3, 4; எபேசியர் 6:12) இதன் விளைவாக, இந்த உலகம் ஒன்றன்பின் மற்றொன்றாகத் தொடரும் கோளாறுகளால் அவதிப்படுகிறது. கடவுளுடைய உதவி இல்லாமலும் தெய்வீகச் சித்தத்தை மதியாமலும் தன்னை ஆண்டுகொள்ள முயற்சி செய்யும் அதன் அழிவுக்கேதுவான போராட்டத்தின் விளைவால் இந்த உலகம் கடும் வேதனையையும் தீங்கையும் அனுபவிக்கிறது. (எரேமியா 10:23; யாக்கோபு 3:15, 16) இவ்வாறு, அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, “உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்”கிறது.—1 கொரிந்தியர் 1:21.
5. இவ்வுலக ஞானத்தின் அடிப்படையான குறைபாடு என்ன?
5 அவ்வாறெனில், ஒரு புதிய உலக ஒழுங்குக்கான அதன் திட்டங்கள் உட்பட, இவ்வுலக ஞானத்தின் அடிப்படையான குறைபாடு என்ன? ஒருபோதும் வெற்றிகரமாய்ப் புறக்கணிக்க முடியாத ஒன்றை—யெகோவா தேவனின் ஈடற்ற உன்னத ஆட்சியை—இந்த உலகம் புறக்கணிப்பதேயாகும். தெய்வீக ஆட்சியை ஒப்புக்கொள்ள அது அகந்தையுடன் மறுக்கிறது. இந்த உலகம் அதன் எல்லா திட்டங்களிலும் வேண்டுமென்றே யெகோவாவை விட்டுவிட்டு தன் சொந்தத் திறமையின்மீதும் வகைத்துறைத் திட்டங்களின்மீதும் சார்ந்திருக்கிறது. (தானியேல் 4:31-34; யோவான் 18:37-ஐ ஒத்துப்பாருங்கள்.) “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்” என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. (நீதிமொழிகள் 9:10, தி.மொ.; சங்கீதம் 111:10) எனினும், ஞானத்தின் இந்த அடிப்படை தேவையை இந்த உலகம் அறிந்துகொள்ளவுமில்லை. ஆகையால், தெய்வீக ஆதரவு இல்லாமல், அது எவ்வாறு வெற்றிகாண முடியும்?—சங்கீதம் 127:1.
ராஜ்ய பிரசங்கிப்பு —மடமையா, நடைமுறையில் பயனுடையதா?
6, 7. (எ) தேவ ஞானத்தால் வழிநடத்தப்படுகிறவர்கள் எதைப் பிரசங்கிக்கின்றனர், ஆனால் இந்த உலகம் அவர்களை எவ்வாறு கருதுகிறது? (பி) கிறிஸ்தவமண்டல குருமார் யாருடைய ஞானத்தின்படி பிரசங்கிக்கின்றனர், அதன் விளைவென்ன?
6 மறுபட்சத்தில், கடவுளை அறிந்திருக்கிறவர்கள் தேவஞானத்தை வெளிப்படுத்தி அதால் வழிநடத்தப்பட தெரிந்துகொள்கின்றனர். இயேசு முன்னறிவித்தபடி, அவர்கள் “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி[யை] குடியிருப்புள்ள பூமியெங்கும்” பிரசங்கிக்கின்றனர். (மத்தேயு 24:14, தி.மொ.; 28:19, 20) சண்டை, தூய்மைக்கேடு, வறுமை, மற்றும் மனிதர் துன்பமனுபவித்தல் ஆகியவற்றால் நம்முடைய பூமி நிரம்பியிருக்கிற காலமான இப்பொழுது இத்தகைய பிரசங்கிப்பு நடைமுறையில் பயனுடையதா? உலகப்பிரகாரமான ஞானிகளுக்கு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இத்தகைய பிரசங்கிப்பு நடைமுறைக்குகந்ததாயிராமல் முற்றிலும் மடமையானதெனத் தோன்றுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்போரை, அரசாங்கக் கப்பலைப் பாரத்தால் அழுத்தி, முழுநலம் வாய்ந்த அரசியல் அரசாங்கத்தை நோக்கிய அதன் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் கடற்சிப்பிவகை உயிரினங்கள் போன்ற தொல்லை தருவோரென அவர்கள் கருதுகின்றனர். இதில், அவர்கள் கிறிஸ்தவமண்டல குருமார்களால் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் குருக்கள் இவ்வுலகத்தின் ஞானத்தின்படி பிரசங்கிக்கின்றனர், கடவுளுடைய புதிய உலகமும் அதன் ராஜ்ய அரசாங்கமும் கிறிஸ்துவின் முதன்மையான போதகமாக இருந்தபோதிலும், அவற்றைப்பற்றி ஜனங்கள் அறிய வேண்டியதை அவர்களுக்குச் சொல்லுகிறதில்லை.—மத்தேயு 4:17; மாற்கு 1:14, 15.
7 கிறிஸ்தவமண்டல குருமார் இவ்வாறு செய்யத் தவறினதைச் சரித்திராசிரியரான H. G. உவெல்ஸ், கவனத்துக்குக் கொண்டுவந்தார். அவர் எழுதினதாவது: “பரலோக ராஜ்யம் என்று தாம் அழைத்ததைப் பற்றிய போதகத்துக்கு இயேசு கொடுத்த மிகப்பேரளவான முக்கியத்துவமும், அதோடு ஒப்பிட, கிறிஸ்தவ சர்ச்சுகள் பெரும்பான்மையானவற்றின் செயற்படுமுறையிலும் போதகத்திலும் அதற்கிருக்கும் மிகச்சொற்ப நிலையும் கவனிக்கத்தக்கது.” எனினும், இந்தச் சந்ததியின் மக்கள் ஜீவனடைய வேண்டுமென்றால், அவர்கள் முதலாவது கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப்பற்றி கேள்விப்பட வேண்டும், இதை நிறைவேற்றுவதற்கு, அதைப் பற்றிய நற்செய்தியை எவராவது பிரசங்கிக்க வேண்டும்.—ரோமர் 10:14, 15.
8. ஏன் கடவுளுடைய நற்செய்தியைப் பிரசங்கிப்பதே இன்று செய்யவேண்டிய மிக அதிக நடைமுறை பயனுள்ள காரியம், ஆனால் எந்த நடத்தைப் போக்கு நிலையான பயனற்றதாயிருக்கும்?
8 அவ்வாறெனில், கடவுளுடைய நற்செய்தியைப் பிரசங்கிப்பதே இன்று செய்யவேண்டிய மிக அதிக நடைமுறை பயனுடைய காரியமாகும். இது இவ்வாறிருப்பது ஏனெனில், ‘கையாளுவதற்குக் கடினமாயுள்ள இந்தக் கொடிய காலங்களான’ இந்தக் கடைசி நாட்களின்போது, மனித இருதயங்களைக் களிகூருதலினால் நிரப்புகிற உண்மையான நம்பிக்கையை இந்த ராஜ்ய செய்தி அளிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5; ரோமர் 12:12; தீத்து 2:13) இந்த உலகத்தில் வாழ்க்கை நிச்சயமற்றதும் குறுகியதுமாக இருக்கையில், கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்க்கை, இங்கே பூமியிலேயே மகிழ்ச்சியும், நிறைவும், சமாதானமும் ஆனவற்றின் மத்தியில் நித்தியமானதாக இருக்கும். (சங்கீதம் 37:3, 4, 11) இயேசு கிறிஸ்து சொன்னதுபோல், “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்வதற்கான உரிமையை ஒருவன் இழந்துவிட்டால், ஒழிந்துபோய்க்கொண்டிருக்கும் இந்த உலகத்தால் லாபம் என்ன? இத்தகைய ஓர் ஆளின் தற்போதைய பொருளாதார மகிழ்ச்சி அனுபவம் பயனற்றதும், வீணானதும், விரைவில் சென்றொழிவதுமாயிருக்கும்.—மத்தேயு 16:26; பிரசங்கி 1:14; மாற்கு 10:29, 30.
9. (எ) இயேசுவைப் பின்பற்றுவோனாகும்படி அழைக்கப்பட்ட ஒரு மனிதன், அவ்வாறு செய்ய காலந்தள்ளிவைப்புக்குக் கேட்டபோது, என்ன செய்யும்படி இயேசு அவனுக்கு அறிவுரை கூறினார்? (பி) இயேசுவின் பதில் நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
9 தம்மைப் பின்பற்றுவோனாகும்படி இயேசு அழைத்த ஒரு மனிதன் பின்வருமாறு கூறினான்: “ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்.” என்ன செய்யும்படி இயேசு அவனுக்கு அறிவுரை கூறினார்? அவன் தன் பெற்றோர் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து மரணம் அடையும் வரை வெறுமென காத்திருக்கும்படி மிக அதிக இன்றியமையாத வேலையை காலந்தாழ்த்தித் தள்ளிவைப்பானென அறிந்து, இயேசு பின்வருமாறு பதிலளித்தார்: “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி.” (லூக்கா 9:59, 60) கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் ஞானத்தைக் காட்டுவோர், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதான தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை பொறுப்பை நிறைவேற்றுவதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இந்த உலகமும் அதன் அதிபதிகளும் அழிவுக்குரிய தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றனரென தெய்வீக ஞானம் அவர்களை அறியச் செய்கிறது. (1 கொரிந்தியர் 2:6; 1 யோவான் 2:17) மனிதவர்க்கத்துக்கு இருக்கும் ஒரே உண்மையான நம்பிக்கை தெய்வீகத் தலையிடுதலிலும் ஆட்சியிலுமே தங்கியிருக்கிறதென, கடவுளுடைய ஆட்சியை ஆதரிப்போர் அறிந்திருக்கின்றனர். (சகரியா 9:10) இவ்வுலகத்தின் ஞானத்தை உடையவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்காமலும் அந்தப் பரலோக அரசாங்கம் தங்களுக்கு வேண்டாமென்றும் இருக்கையில், தெய்வீக ஞானத்தால் நடத்தப்படுகிற ஆட்கள் தங்கள் உடன் மானிடருக்கு உண்மையான நன்மை கொண்டுவருவதைச் செய்து, யெகோவாவின் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்தில் நித்திய ஜீவனடைவதற்காக அவர்களை ஆயத்தம் செய்கின்றனர்.—யோவான் 3:16; 2 பேதுரு 3:13.
“அழிந்துபோகிறவர்களுக்கு மடமையாக இருக்கிறது”
10. (எ) தர்சு பட்டணத்து சவுல் மதம்மாற்றப்பட்டபோது, என்ன வேலையை அவர் ஏற்றார், அதை அவர் எவ்வாறு கருதினார்? (பி) பூர்வ கிரேக்கர் எதற்குக் கீர்த்திப் பெற்றவர்கள், ஆனால் அவர்களுடைய ஞானத்தைக் கடவுள் எவ்வாறு கருதினார்?
10 பவுல் எனப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான தர்சு பட்டணத்து சவுல், இந்த உயிரைக்காக்கும் வேலையை ஏற்றார். இயேசு கிறிஸ்து சவுலை மதம் மாறச் செய்தபோது, மடமையான ஒரு நடவடிக்கையில் ஈடுபடும்படி அவர் சவுலுக்குப் பொறுப்பளித்தாரென நினைப்பது நியாயமானதாக இருக்கிறதா? பவுல் அவ்வாறு நினைக்கவில்லை. (பிலிப்பியர் 2:16) அந்தக் காலத்தில் கிரேக்கர்களே உலகத்தில் மிக அதிக அறிவாளிகளெனக் கருதப்பட்டனர். அவர்கள் தங்கள் பெரும் தத்துவஞானிகளையும் ஞானவான்களையும் பற்றி பெருமையாய்ப் பேசினர். பவுல் கிரேக்கு பேசினபோதிலும், அவர் கிரேக்கத் தத்துவஞானத்தையும் கல்வியையும் பின்பற்றவில்லை. ஏன்? ஏனெனில் கடவுளைக் குறித்ததில் இவ்வுலகத்தின் அத்தகைய ஞானம் மடமையாக இருக்கிறது.a பவுல் தெய்வீக ஞானத்தைத் தேடினார், இது நற்செய்தியை வீடுவீடாகப் பிரசங்கிக்கும்படி அவரைத் தூண்டி நடத்தினது. எக்காலத்துக்கும் மிகப் பெரிய போதகரான இயேசு கிறிஸ்து, அந்த முன்மாதிரியை வைத்திருந்தார், மேலும் அதே வேலையைச் செய்யும்படி பவுலுக்கும் கட்டளையிட்டார்.—லூக்கா 4:43; அப்போஸ்தலர் 20:20, 21; 26:15-20; 1 கொரிந்தியர் 9:16.
11. அடிப்படையாக, பவுல் தனக்கு அளிக்கப்பட்ட பிரசங்கவேலைப் பொறுப்பையும் உலக ஞானத்தையும் பற்றி என்ன சொன்னார்?
11 பிரசங்கிப்பதற்குத் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றி பவுல் பின்வருமாறு சொல்லுகிறார்: “கிறிஸ்து என்னை அனுப்பினது . . . சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே; கிறிஸ்துவின் சிலுவை வியர்த்தமாகாதபடி சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப் [இயேசுவின் மீட்கும் பலியைப்] பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியம் [மடமை], இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தெய்வ வல்லமை. ஞானிகளின் ஞானத்தை நான் அழிப்பேன், விவேகிகளின் விவேகத்தை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. [தத்துவஞானியைப் போன்ற] ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே? உலக ஞானத்தைக் கடவுள் பைத்தியமாக்கவில்லையா? உலகம் தன் ஞானத்தினால் கடவுளை அவர் ஞானத்தின்படியறிந்து கொள்ளாதிருந்தபடியால் பைத்தியமாகத் [மடமையாகத், NW] தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கக் கடவுளுக்குப் பிரியமாயிற்று.”—1 கொரிந்தியர் 1:17-21, தி.மொ.
12. ‘மடமையாகத் தோன்றுகிற பிரசங்கத்தின்’ மூலம் யெகோவா எதை நிறைவேற்றுகிறார், “பரத்திலிருந்து வரும் ஞானத்தை” விரும்புவோர் எவ்வாறு பிரதிபலிப்பர்?
12 நம்பமுடியாததுபோல் தோன்றுகிறபோதிலும், மடமையானவர்களென இந்த உலகம் அழைப்போரையே யெகோவா தம்முடைய பிரசங்கிகளாகப் பயன்படுத்துகிறார். ஆம், இந்தப் பிரசங்கிகளின் ஊழியத்தின் மடமையின் மூலம், விசுவாசிப்போரைக் கடவுள் இரட்சிக்கிறார். இந்த “மடமையின்” பிரசங்கிகள் தங்களை மகிமைப்படுத்திக்கொள்ள முடியாதபடி யெகோவா காரியங்களை ஏற்பாடு செய்கிறார், மற்றவர்களும் தாங்கள் நற்செய்தியை எவர்கள் மூலம் கேள்விப்பட்டார்களோ அவர்களைச் சரியானபடி மகிமைப்படுத்த முடியாது. “மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு” இவ்வாறுள்ளது. (1 கொரிந்தியர் 1:28-31; 3:6, 7) பிரசங்கிப்பவர் முக்கியமான ஒரு பாகத்தை வகிக்கிறாரென்பது மெய்யே, ஆனால் பிரசங்கிக்கும்படி அவர் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிற அந்தச் செய்தியே, அதை ஒருவன் நம்பினால், அவனுடைய இரட்சிப்புக்கேதுவாகச் செயல்படுகிறது. “பரத்திலிருந்த வருகிற ஞான”த்தை விரும்புகிறவர்கள், பிரசங்கிப்பவர் மடமையாக மற்றும் தாழ்ந்தவராகத் தோன்றுவதனாலும், துன்புறுத்தப்படுவதனாலும், வீடுவீடாகச் செல்வதனாலும் அந்தச் செய்தியை புறக்கணிக்கமாட்டார்கள். அதற்கு மாறாக, சாந்தகுணமுள்ளவர்கள், ராஜ்ய அறிவிப்பாளரை, யெகோவா பொறுப்பளித்து அனுப்பினவராகவும் கடவுளின் பெயரில் வருபவராகவும் மதிப்பார்கள். அந்தப் பிரசங்கிப்பவர் வாயின் வார்த்தையின்மூலமும் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் மூலமும் கொண்டுவரும் அந்தச் செய்திக்கு அவர்கள் பெரும்படியான முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள்.—யாக்கோபு 3:17; 1 தெசலோனிக்கேயர் 2:13.
13. (எ) கழுமரத்தில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கித்ததை யூதர்களும் கிரேக்கர்களும் எவ்வாறு கருதினர்? (பி) இயேசுவைப் பின்பற்றுவோராகும்படி எந்த ஜனத்தொகுதிகளிலிருந்து பலர் அழைக்கப்படவில்லை, ஏன்?
13 கடவுளுடைய வழிகளைப்பற்றிய தன் உரையாடலைத் தொடர்ந்து, பவுல் பின்வருமாறு சொல்லுகிறார்: “யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் [கழுமரத்தில், NW] அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகனை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.”—1 கொரிந்தியர் 1:22-27; ஏசாயா 55:8, 9-ஐ ஒத்துப்பாருங்கள்.
14. (எ) தங்களுடைய ஆதாரச் சான்றுகளைப்பற்றிக் கேட்கப்பட்டால், யெகோவாவின் சாட்சிகள் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்? (பி) கிரேக்கரைப் பிரியப்படுத்துவதற்காக உலக ஞானத்தை எவ்வாறாயினும் வெளிப்படுத்திக் காட்டுவதற்குப் பவுல் ஏன் மறுத்துவிட்டார்?
14 இயேசு பூமியில் இருந்தபோது, யூதர்கள் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்படி கேட்டார்கள். (மத்தேயு 12:38, 39; 16:1) ஆனால் எந்த அடையாளத்தையும் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வாறே, இன்று யெகோவாவின் சாட்சிகள் அடையாளத்தைப்போன்ற எந்த ஆதாரச் சான்றுகளையும் பகட்டாகக் காட்டுவதில்லை. அதைப் பார்க்கிலும், ஏசாயா 61:1, 2; மாற்கு 13:10; மற்றும் வெளிப்படுத்துதல் 22:17 போன்ற பைபிள் வசனங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிற தங்கள் பொறுப்பை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். பண்டையகால கிரேக்கர்கள் இவ்வுலகக் காரியங்களில் ஞானத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் நாடித்தேடினர். பவுல் இந்த உலகத்தின் ஞானத்தில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டிருந்த போதிலும், அதை எவ்வாறாயினும் காட்டுவதால் கிரேக்கரைப் பிரியப்படுத்த மறுத்துவிட்டார். (அப்போஸ்தலர் 22:3) அவர் இலக்கிய கிரேக்கில் அல்ல, பொதுமக்களின் பேச்சு வழக்கிலிருந்த கிரேக்கில் பேசி எழுதினார். பவுல் கொரிந்தியர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “சகோதரரே, நான் உங்களிடம் வந்தபோதோ கடவுளைப்பற்றிய சாட்சியத்தைச் சிறந்த வசனிப்போடாவது சிறந்த ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. . . . உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்திலல்ல தெய்வ வல்லமையில் நிற்கும்படி என் பேச்சும் என் பிரசங்கமும் வசப்படுத்தும்படியான ஞானவார்த்தைகளாகவல்ல, ஆவியும் வல்லமையும் விளங்கினவைகளாகவேயிருந்தன.”—1 கொரிந்தியர் 2:1-5, தி.மொ.
15. நற்செய்தியை ஏளனஞ்செய்யும் பரியாசக்காரருக்குப் பேதுரு எதைக் குறித்து நினைப்பூட்டுகிறார், தற்போதைய சூழ்நிலைமை எவ்வாறு நோவாவின் நாளுக்கு ஒத்திருக்கிறது?
15 இந்தக் கடைசி நாட்களில், வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகத்தைப் பற்றிய நற்செய்தியையும் இந்த உலகத்தின் நெருங்கிவந்துகொண்டிருக்கும் முடிவையும் பற்றி ஏளனஞ்செய்யும் பரியாசக்காரரை, அப்போஸ்தலன் பேதுரு, நோவாவின் நாளிலிருந்த அந்த உலகம் “ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதைக்” குறித்து நினைப்பூட்டுகிறார். (2 பேதுரு 3:3-7) அந்தப் பெரும் ஜலப்பிரளயத்தை எதிர்ப்பட்டபோது நோவா என்ன செய்தார்? பலர் அவரைப் பேழைக் கட்டினவரென்று மாத்திரமே கருதுகின்றனர். ஆனால் அந்தப் பூர்வ உலகத்தின்மீது கடவுள் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவாவுட்பட எட்டுப்பேரைக் காப்பாற்றி”னாரென பேதுரு சொல்கிறார். (2 பேதுரு 2:5, தி.மொ.) ஜலப்பிரளயத்திற்கு முன்னால் வாழ்ந்த தேவபக்தியற்ற அந்த ஜனங்கள், நோவா பிரசங்கித்தக் காரியத்தைச் சந்தேகமில்லாமல், தங்கள் உலகப்பிரகாரமான ஞானத்தினால் பரியாசம்பண்ணி, அவரை மடமையானவரெனவும், மெய்யியல்புக்கு மாறானவரெனவும், நடைமுறைக்கு மாறானவரெனவும் அழைத்தார்கள். இயேசு நம்முடைய சந்ததியை நோவாவின் நாளுக்கு ஒப்பிட்டதனால், இன்று உண்மையான கிறிஸ்தவர்கள் அதற்கொப்பான சூழ்நிலைமையை எதிர்ப்படுகின்றனர். எனினும், பரியாசக்காரர் இருக்கிறபோதிலும், ராஜ்ய நற்சய்தியைப் பிரசங்கிப்பது வெறும் பேச்சுக்கு மேம்பட்டது. நோவா பிரசங்கித்ததைப் போலவே, பிரசங்கிப்பவருக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கும் இரட்சிப்பைக் குறிக்கிறது!—மத்தேயு 24:37-39; 1 தீமோத்தேயு 4:16.
‘ஞானிகளாவதற்கு மடமையானோராவது’
16. அர்மகெதோனில் இந்த உலக ஞானத்துக்கு என்ன நேரிடும், கடவுளுடைய புதிய உலகத்துக்குள் யார் தப்பிப்பிழைப்பார்கள்?
16 சீக்கிரத்தில், அர்மகெதோனில், யெகோவா தேவன் ‘ஞானிகளுடைய எல்லா ஞானமும்’ அழியும்படி செய்வார். தங்கள் புதிய உலக ஒழுங்கு எவ்வாறு மேம்பட்ட நிலைமைகளை மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவருமென முன்னறிவிப்புகள் செய்த ‘புத்திசாலிகளுடைய எல்லா புத்தியையும்’ அவர் தள்ளி ஒதுக்கிப்போடுவார். “சர்வவல்லமையுள்ள கடவுளின் அந்த மகா நாளின் போர்” இந்த உலகத்தின் எல்லா போலி விவாதப் பேச்சு, தத்துவஞானம், ஞானம் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிப்போடும். (1 கொரிந்தியர் 1:19; வெளிப்படுத்துதல் 16:14-16) மடமையென இந்த உலகம் அழைப்பதற்கு—ஆம், யெகோவாவின் மகிமையான ராஜ்ய நற்செய்திக்குக்—கீழ்ப்படிவோர் மாத்திரமே அந்தப் போரைத் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகத்தில் ஜீவனை அடைவோராக இருப்பர்.
17. யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ‘மடமையானோராக’ ஆகியிருக்கின்றனர், நற்செய்தியைப் பிரசங்கிக்கும் கடவுளுடைய பிரசங்கிகள் என்ன செய்யும்படி உறுதியாய்த் தீர்மானித்திருக்கின்றனர்?
17 யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்பட்ட, யெகோவாவின் சாட்சிகள், இந்த உலகம் மடமையென அழைப்பதைப் பிரசங்கிப்பதற்கு வெட்கப்படுகிறதில்லை. உலகப்பிரகாரமான ஞானிகளாயிருக்கப் பிரயாசப்படுவதற்கு மாறாக, அவர்கள் ‘மடமையானோராயினர்.’ எவ்வாறு? பவுல் பின்வருமாறு எழுதினபடி, தாங்கள் ஞானமுள்ளோராயிருக்கும்படி ராஜ்ய-பிரசங்க வேலையைச் செய்வதன்மூலமே: “இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன் [மடமையானவனாகக்கடவன், NW].” (1 கொரிந்தியர் 3:8-20) யெகோவாவின் நற்செய்தியைப் பிரசங்கிப்போர் தங்கள் செய்தியின் உயிரைக் காக்கும் மதிப்பை அறிந்திருக்கின்றனர், அர்மகெதோனின் போரில் இந்த உலகமும் அதன் ஞானமும் முடிவடையும் வரையில் தளராமல் விடாது தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருப்பர். சீக்கிரத்தில், யெகோவா தேவன் தம்முடைய சர்வலோக அரசாட்சியை நியாயநிரூபணஞ் செய்து, “மடமையாகத் தோன்றும் பிரசங்கத்தை” இப்பொழுது விசுவாசித்து, அதன்படி செயல்படுவோர் யாவருக்கும் நித்திய ஜீவனைக் கொண்டுவருவார்.
[அடிக்குறிப்புகள்]
a பூர்வ கிரேக்க ஞானிகளின் இந்த எல்லா தத்துவஞான வாக்குவாதங்களும் ஆராய்ச்சிகளும் இருந்தபோதிலும், நம்பிக்கைக்கான உண்மையான ஆதாரம் ஒன்றையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லையென அவர்களுடைய எழுத்துக்கள் காட்டுகின்றன. பேராசிரியர்கள் J. R. S. ஸ்டெரெட் மற்றும் சாம்யல் அங்கஸ் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்: “வாழ்க்கையின் துயரங்கள், அன்பு முடிவுறுதல், நம்பிக்கையின் ஏமாற்றம், மரணத்தின் கொடுமை ஆகியவற்றின்பேரில் இதைப் பார்க்கிலும் அதிக சோகமான புலம்பல்கள் வேறு எந்த இலக்கியங்களிலும் அடங்கியில்லை.”—ஃபங்க் அண்ட் உவாக்னல்ஸ் நியூ “ஸ்டான்டர்ட்” பைபிள் டிக்ஷனரி (Funk and Wagnalls New ‘‘Standard’’ Bible Dictionary), 1936, பக்கம் 313.
உங்கள் பதில்கள் என்ன?
◻ ஞானத்தின் இரு வகைகள் யாவை?
◻ உலக ஞானத்தின் அடிப்படையான குறைபாடு என்ன?
◻ நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஏன் செய்ய வேண்டிய மிக அதிக நடைமுறை பயனுள்ள காரியம்?
◻ இந்த உலக ஞானம் முழுவதற்கும் சீக்கிரத்தில் என்ன நேரிடும்?
◻ உலகம் பேதமை என்று அழைப்பதைப் பிரசங்கிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஏன் வெட்கப்படுவதில்லை?
4. மனிதன் கொண்டுவரப்போவதாகக் கூறும் புதிய ஒழுங்கு எதற்குக் கீழ்ப்பட்டதாயிருக்கிறது, அதன் விளைவு என்னவாகும்?
[பக்கம் 23-ன் படம்]
கிரேக்கர் உலக ஞானத்துக்காக நாடித்தேடினர் பவுலின் பிரசங்கிப்பை மடமையென அடிக்கடிக் கருதினர்