திரும்பி வருவதில் எடுக்கும் ஒரு படி
‘அவர் அவர்களிடம் உவமைகளைக்கொண்டு பேசினார்.’ இவ்வாறு பைபிள், இரக்கத்தைப்பற்றிய மறக்கமுடியாத, இயேசுவின் மூன்று உவமைகளை அறிமுகப்படுத்துகிறது—காணாமற்போன ஒரு செம்மறியாடு, காணாமற்போன வெள்ளிக்காசு, மற்றும் கெட்ட குமாரன்.—லூக்கா 15:3-32.
ஜனவரி 1, 1992-ன் மற்றும் பிப்ரவரி 1, 1992-ன் காவற்கோபுரங்களில் வந்த இரண்டு படிப்பு கட்டுரைகள், அந்த உவமைகளைப் பகுத்தாராய்ந்து, இன்று இரக்கம் எவ்வாறு காட்டலாமென்பதைக் காண வாசகர்கள் பலருக்கு உதவிசெய்தன. சபைநீக்கம் செய்யப்பட்டவர்களும் ஆனால் அன்பான சந்திப்புகளுக்கு நல்ல முறையில் பிரதிபலிக்கக் கூடியவர்களுமான ஆட்களைப் போய்ப் பார்க்க ஆவிக்குரிய மேய்ப்பர்கள் முன்முயற்சி எடுப்பதன்பேரில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கட்டுரைகளின் மற்றும் இந்தப் புதிய செயற்படு முறையின் பலன் என்ன?
இந்தப் பத்திரிகை பிரசுரிக்கப்பட்டவுடன், அ.ஐ.மா., வாஷிங்டன் மாகாணத்திலிருந்து ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “யெகோவாவின் மிகுதியான அன்புள்ள இரக்கத்தின் நிரூபணம் இன்று என் தபாலில் வந்து சேர்ந்தது. மகா உன்னதமானவர் அருளியிருக்கும் ஏற்பாடுகள் மற்றும் திரும்ப சரிப்படுத்தலின்பேரில் என் கண்களில் கண்ணீருடனும் என் இருதயத்தில் மகிழ்ச்சியுடனும் நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன். உண்மையில் நீதியுள்ள கடவுள் மாத்திரமே காணாமற்போன செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு உதவியை அளிக்க முடியும். . . . ஆம், நான் சபைநீக்கம் செய்யப்பட்டேன் ஆனால் திரும்ப நிலைநாட்டுவதற்கான பாதையில் இருக்கிறேன்.” அக்டோபரில் அவர் திரும்ப நிலைநாட்டப்பட்டார்.
ஆனால் சபை மூப்பர்கள் இருவர் செய்த சந்திப்புகளைப் பற்றியதென்ன? ஒரு கிறிஸ்தவ மனைவி பின்வருமாறு எழுதினாள்: “என் உணர்ச்சியைச் சொற்களால் வெளிப்படுத்திக்கூற முடியாது. என் கணவர் சபைநீக்கம் செய்யப்பட்டு ஏறக்குறைய 13 ஆண்டுகள் சென்றிருந்தன. அந்தக் கட்டுரையில் ஆலோசனை கொடுக்கப்பட்டபடி, மூப்பர்கள் அவரைச் சந்தித்தார்கள். சென்ற இரவு, பல ஆண்டுகளில் முதல் தடவையாக, கூட்டங்கள் ஒன்றுக்கு அவர் சென்றார். அவர் இப்பொழுது தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி திரும்பி வரும்படி செய்ய முயற்சி செய்கிறார்.”
பயணக் கண்காணிகள் சபை சபையாகச் சந்திக்கையில், இந்தப் பலன்களை நிச்சயமாகவே காண்கிறார்கள். வட்டார ஊழியர் ஒருவர் சமீபத்தில் பின்வருமாறு எழுதினார்:
“ஜனவரி 1, 1992 மற்றும் பிப்ரவரி 1, 1992 காவற்கோபுரங்கள் பிரசுரிக்கப்பட்டபோது, மூப்பர்கள் சந்திப்பு செய்கையில் பிரதிபலிப்பு என்னவாயிருக்குமோவென பலர் எண்ணினர். இதற்குப் பதில் மிகத் தெளிவாகிவிட்டது.
“எங்கள் வட்டாரத்தில், நான் சந்தித்த கடைசி நான்கு சபைகள் ஒன்பது ஆட்கள் ராஜ்ய மன்றங்களுக்குத் திரும்பிவந்ததைக் கண்கூடாகக் கண்டனர். ஒருவர் மட்டுமே திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறபோதிலும், மற்ற எட்டு பேர்களும் நல்ல முன்னேற்றம் செய்துகொண்டிருக்கின்றனர். மூப்பர்களும் சபைகளும் தங்கள் உழைப்பின் பலன்களையும் தேவராஜ்ய வழிநடத்துதல்களைப் பொருத்திப் பயன்படுத்துவதன் ஞானத்தையும் காண்பதில் மிகுந்த கிளர்ச்சியுற்றிருக்கின்றனர்.
“இந்த நல்ல, இரக்கமான ஏற்பாட்டில் நாங்கள் களிகூருகிறோம். திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு சகோதரி குறிப்பிட்டபடி, ‘நானே திரும்பி வருவதற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை, ஏனெனில் நான் யெகோவாவுக்கு முன்பாகக் கண்டனம் செய்யப்பட்டவளாக உணர்ந்தேன். ஆனால் மூப்பர்கள் வந்து சந்தித்தபோது, அது நான் திரும்பி வருவதற்கு எனக்குத் தேவைப்பட்ட ஊக்கமூட்டுதலாயிருந்தது.’ அவளுடைய ஆர்வம் சபைக்கு வெகுவாய் ஊக்கமூட்டியுள்ளது.”
சந்திக்கப்பட்ட பலர் நல்ல முறையில் பிரதிபலிக்காவிடினும், இந்த இரக்கமுள்ள முன்முயற்சி நிச்சயமாகவே நன்மையை நிறைவேற்றியிருக்கிறது. இவ்வாறு, செப்டம்பர் முதல் தொடங்கி ஒவ்வொரு சபையிலுமுள்ள மூப்பர்கள் அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களைத் திரும்பக் கவனித்துப்பார்த்து, இரக்கத்துக்கு நல்ல முறையில் பிரதிபலிக்கலாமென தாங்கள் உணரும் எல்லாரையும் சந்திக்க ஏற்பாடு செய்வார்கள்.