போலந்தில் “அருமையானவைகளைக்” கூட்டிச்சேர்த்தல்
போலந்து கத்தோலிக்க நாடெனச் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜனத்தொகையில் 93 சதவீதம் கத்தோலிக்க சர்ச்சைச் சேர்ந்தவர்கள். எனினும், அங்கே சமீபத்தில் ஏற்படும் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்கள், அந்த ஜனங்கள்மீதும் அவர்களுடைய மத வாழ்க்கையின்மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளைக் கொண்டிருக்கின்றன. தேர்தல் வாக்களித்தோரில் ஏறக்குறைய 50 சதவீதமே கத்தோலிக்க மதத்தை அனுசரிப்போராகத் தங்களைக் கருதுகின்றனரென பொது மதிப்பீடுகள் காட்டுகின்றன.
மே 1989-ல், யெகோவாவின் சாட்சிகள் போலந்தில் ஒரு மத அமைப்பாகச் சட்டப்படி அங்கீகாரமளிக்கப்பட்டனர். அப்போதிருந்து, ஏறக்குறைய புதியவர்கள் 11,000 பேர், ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசுரிப்போராக அவர்களுடைய அணிவரிசைகளைச் சேர்ந்துள்ளனர். இப்பொழுது 1,06,000-க்கு மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகள் 1,300-க்கு மேற்பட்ட சபைகளில் கூட்டப்பட்டுள்ளனர், மேலும் 1991-ல் கிறிஸ்துவின் மரண நினைவுகூருதல் ஆசரிப்புக்கு 2,00,422 ஆட்கள் வந்திருந்தனர். இவ்வாறு, முன்னறிவிக்கப்பட்ட, ‘ஜாதியாரின் அருமையானவைகள்’ கூட்டிச்சேர்க்கப்படுவது போலந்தில் நடைபெறுகிறது. (ஆகாய் 2:7) சமீபத்தில், முதன்மை சிறப்பு விளம்பரத்தை உண்டாக்கின, யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச மாநாடுகள் போலந்தில் நடத்தப்பட்டன. ஆனால் அந்நாட்டிலுள்ள சிறிய பட்டணங்கள் சிலவற்றிற்குச் சற்றுப் பார்வை செலுத்துவது அந்நாட்டில் இந்தக் கூட்டிச் சேர்த்தல் வேலை எவ்வாறு முன்னேறுகிறதென்பதை முக்கியமாய்க் காட்டும்.
பயனியர்கள் வழிதிறக்கின்றனர்
ஷ்டூம் ஏறக்குறைய 10,000 ஆட்களைக்கொண்ட ஒரு பட்டணம், விஸ்டுலா நதி பால்டிக் கடலுக்குள் ஓடி விழும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. பிரசங்க வேலையைக் குறித்தவரையில் இந்தப் பட்டணம் கடினமான பிராந்தியமென வெகுகாலம் கருதப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில், 1987-ல் எட்டு பிரஸ்தாபிகளே இருந்தனர். எனினும், பயனியர்கள், அல்லது முழு-நேர ராஜ்ய பிரஸ்தாபிகள் வந்துசேர்ந்தபோது காரியங்கள் மாறத் தொடங்கின. இயங்கு திரைப்பட கொட்டகையில் நடத்தப்பட்ட ஐந்தாவது கூட்டத்தில், அக்கறைகாட்டின 100 ஆட்கள் ஆஜராயிருந்தனர்! இரண்டு ஆண்டுகள் ஊக்கமாய் முயற்சியெடுத்து உழைத்தப்பின் ஒரு சபை அமைக்கப்பட்டது. இப்பொழுது இந்த 90 பிரஸ்தாபிகள் தங்கள் சொந்த ராஜ்ய மன்றத்தை உடையோராக இருக்கின்றனர், 150 ஆட்கள் தவறாமல் அவர்கள் கூட்டங்களுக்கு ஆஜராகின்றனர்.
எதிர்பார்க்கப்பட்டபடி, சீக்கிரத்தில் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து எதிர்ப்பு வந்தது. “நிபுணத்துவம் வாய்ந்தவர்” என சர்ச் கருதின ஒரு மாடக் கன்னி, பொய்க் கோட்பாடுகளைக் கற்பிப்போரென சாட்சிகளைக் குற்றஞ்சாட்டி, பழித்துரைக்கும் சில பேச்சுகளைக் கொடுத்தாள். ஆனால் வெகு அடிக்கடி நேரிடுவதுபோல், இது அவளையே திருப்பித் தாக்கினது. அவளுடைய பேச்சுகள் ஜனங்களைத் தாங்கள் உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவே தூண்டியது. இவர்களில் பலர் சத்தியத்தைக் கற்று இப்பொழுது ஒழுங்கான பயனியர்களாக இருக்கின்றனர்! அவர்கள் சொல்வதாவது: ‘சத்தியத்தைக் கற்றுக்கொள்கையில், ஒரு சாட்சியாயிருக்க விரும்பும் ஒவ்வொருவரும் தன் போதகரைப்போலவே இருக்கவேண்டுமென, அதாவது பயனியராகவேண்டுமென நாங்கள் நினைத்தோம்.’ ஆகவே அந்த முழு சபையிலும் பயனியர் மனப்பான்மை வியாபித்திருக்கிறது.
இதன் பலனாக, ஏறக்குறைய 180 வீட்டு பைபிள் படிப்புகள் அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்படுகின்றன. நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைக் கொண்டு, சிலர் வாசிக்கவுங்கூட கற்பிக்கப்பட்டிருக்கின்றனர். அதேசமயத்தில், அவர்கள் சத்தியத்தையும் கற்றனர். உள்ளூர் சிறைச்சாலை கைதிகள் தெருக்களைச் சுத்தம் செய்ய வெளி வருகையில் அவர்களோடு பத்து-நிமிட பைபிள் படிப்புகள் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. வழியில் செல்லும் ஒரு பெண் ஒரு சாட்சியை இழிவாகத் திட்டத் தொடங்கினபோது கைதிகளில் ஒருவன் அந்தச் சாட்சியின் தற்காப்பு சார்பாக வந்தான். அவன் அந்தச் சகோதரியினிடம் ஓடிவந்து, என்றும் வாழலாம் புத்தகத்தை அவளுடைய கைகளிலிருந்து வாங்கி, தூக்கிப் பிடித்து, திட்டும் அந்தப் பெண்ணிடம்: “உன்னால் வாசிக்க முடியவில்லையா? இங்கே என்ன எழுதியிருக்கிறது? நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்! இத்தகைய காரியத்தை நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா? நீ ஏன் கடவுளையும் அவரை வணங்குகிறவர்களையும் நிந்திக்கிறாய்?” என்று கேட்டான்.
ஊராரின் முக்கியப் பேச்சாயிற்று
குரூஷ்வீட்ஸா, புராணக்கதையின்படி போலந்தின் முன்னாள் தலைநகர், ஒரு கத்தோலிக்க அரண்போன்றது. 1990-ன் மத்திபத்திலுங்கூட அதன் 9,300 குடியிருப்பாளர்களுக்குள் சாட்சிகள் சொற்பப்பேரே இருந்தனர். ஆனால் அந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் முயற்சிகளின்பேரில் யெகோவாவின் நிறைவான ஆசீர்வாதம் இருந்தது.
மேலும் மேலுமான ஆட்கள்—முக்கியமாய் இளைஞர்கள்—தங்கள் ஆவிக்குரிய தலைவர்களின் பாசாங்குத்தனத்தைக் கவனித்து, விடைகளுக்காகச் சாட்சிகளிடம் திரும்பினர். மிகக் குறுகிய காலத்துக்குள், 20 வீட்டு பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன. அந்த வட்டார மதகுரு யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி கடும் வஞ்சகமான பிரசங்கங்களைக் கொடுத்தார், ஆனால் இது நேர்மையான மனமுள்ள ஆட்களை அவர்கள் கூட்டங்களுக்கு ஆஜராவதிலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. கடைகளிலும் பூங்காக்களிலும் சர்ச்சிலுங்கூட, சாட்சிகள் உரையாடலின் முக்கிய பேச்சுப்பொருளாயினர். அரை ஆண்டுக்குப் பின்னால், இரண்டு பெரிய புத்தகப்-படிப்பு தொகுதிகள் அமைக்கப்பட்டன. இப்பொழுது குரூஷ்வீட்ஸாவில் யெகோவாவை வணங்குவோரான ஏறக்குறைய 35 ஆட்களைக்கொண்ட, வெகு ஊக்கமாய்ச் செயல்படும் ஒரு சபை உள்ளது. இவர்கள் 75 வீட்டு-பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர், மேலும் ஒருகாலத்தில் பொய்மதத்தால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த “அருமையானவைகளைக்” கூட்டிச்சேர்த்துக் கொண்டுவருவதில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்குள் 23 வயது போக்டனும் ஒருவன், இவன் தீவிரக் கத்தோலிக்கக் குடும்பத்தின் ஓர் உறுப்பினன். இவன் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “நான் குடிப்பதும் புகைப்பதும், ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்துவதுமாக இருந்தேன். நான் விலைமகன் எனவும் புரட்சிக்காரன் எனவும் அறியப்பட்டேன், ஒருவருக்கும் என்மீது அக்கறையில்லையெனத் தோன்றிற்று. எனினும், நான் பைபிளைப் படிக்கத் தொடங்கினபோதோ, என் தாய் நஞ்சு குடித்து சாவதாக பயமுறுத்தினாள். இந்த எதிர்ப்பழுத்தத்தைத் தாங்க முடியாமல், சாட்சிகளுடன் வைத்த எல்லா தொடர்பையும் நிறுத்துக்கொண்டேன். பின்னால், விசேஷித்தப் பயனியர்களின் அன்புள்ள உதவியால், என் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுதலையாக்கிக் கொள்ள முடிந்தது. 1991-ன் ‘சுயாதீனப் பிரியர்’ மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்டிருக்க, நான் முழுநேர ஊழியத்தை என் வாழ்க்கை இலக்காகத் தெரிந்துகொண்டு, துணைப் பயனியர் ஊழியத்தை அதுமுதற்கொண்டு செய்து வருகிறேன்.”
இருபத்தோரு வயதான ஸ்வாவோமீர் ஆவியுலகத் தொடர்பிலும் சாத்தானிய வணக்கத்திலும் சிக்குண்டு இருந்தான். பைபிள் இத்தகைய பழக்கங்களைக் கண்டனம் செய்கிறதென அவன் கண்டவுடன் அவற்றை விலக்கித் தள்ளிவிட்டான். “ஆனால் சாத்தான் விடவில்லை” என அவன் சொல்லுகிறான். “ஓர் இரவு இசைப்பதிவு இயக்கும் கருவி மின்விசை தொடர்புபடுத்தாமலே தானாக இயங்கத் தொடங்கினது, பிசாசு வணக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் நான் வீட்டிலிருந்து விலக்கிவிட்டிருந்தபோதிலும், சாத்தானிய இசை என் செவியில் கேட்டது. நான் யெகோவாவிடம் ஜெபித்தேன், ஆவிக்குரிய சமநிலையை நான் திரும்பப்பெற அவர் எனக்கு உதவிசெய்தார். என் பெற்றோரின் வற்புறுத்தல்களால் நான் உதவிக்காக வழக்கமாய்ச் சென்ற உளநோய் மருத்துவர் ஒருவர் என் நிலைமையில் அடிப்படையான முன்னேற்றங்களைக் கண்டறிந்து நான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக முடிவுசெய்தார். அவர் என் விவர அட்டவணையில்: ‘யெகோவாவின் சாட்சிகளால் சுகப்படுத்தப்பட்டான்’ என்று எழுதினார்.”
உலகத்தின் ஆவியை எதிர்த்தல்
குரூஷ்வீட்ஸாவின் தென்மேற்கில் ஷ்ரோடா ஷ்லோன்ஸ்கா உள்ளது. 9,000 மக்களைக் கொண்ட இந்தச் சிறிய பட்டணத்திலும் “அருமையானவைகள்” வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், நம்முடைய ஆவிக்குரிய சகோதரிகளில் ஒரே ஒரு சகோதரியே அங்கு வாழ்ந்திருந்தாள். எனினும், இப்போது, ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 47-க்கு ஏறிவிட்டது. சாட்சிகளில் பலர் முன்னொரு காலத்தில் ஆவியுலகத்தொடர்பு, போதைப்பொருள் துர்ப்பழக்கம், ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் கண்ணிகளுக்குள் சிக்கியிருந்தனர். ஆவிக்குரிய பிரகாரம் ஜனங்களுக்கு உதவிசெய்வதற்கு அல்ல, அவர்களைக் கண்டனம் செய்யவே கூடியதாயிருக்கும் அந்தச் சர்ச்சில் இருந்துவரும் ஆவிக்குரிய வெறுமையே இதற்குப் பேரளவில் காரணமாக இருந்ததென அவர்கள் உணருகின்றனர். சாட்சிகள் உண்மையான துயர்த்தீர்ப்பு உதவியை ஜனங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றனர்.
சபையிலுள்ள இளைஞர்கள் பள்ளிக்கூடத்தைப் பிரசங்க வேலைக்குரிய தங்கள் சொந்த பிராந்தியமாக்கியுள்ளனர். “‘நீ உன் இளமையை வீணாக்குகிறாய்’ என்று என் பள்ளித்தோழர்கள் என்னிடம் அடிக்கடி சொல்கின்றனர்” என 18 வயது காஸா அறிவிக்கிறாள். “ஆனால் நான் பல தொந்தரவுகளைத் தவிர்த்திருக்கிறேன், என் வாழ்க்கை நோக்கமுள்ளதாகியிருக்கிறது. பள்ளியில் நான் பல பைபிள் படிப்புகளை நடத்துகிறேன், வீட்டில் செய்ய வேண்டிய பள்ளிப்பாட வேலையையாயினும் என் தனிப்பட்ட படிப்பையாயினும் நான் புறக்கணிக்கிறதில்லை. நான் ‘என் இளமையை வீணாக்குகிறேன்’ என்று சொல்லும் பெண்கள் ஏற்கெனவே தாய்மாராக இருக்கிறார்கள், பெரும் பிரச்னைகளின் சுமைகளோடு மல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.”
உள்ளூர் பள்ளிக்கூடங்களில் உவாட்ச் டவர் பிரசுரங்கள் பொதுவாய் மிக விரும்பத்தக்கவையாகிவிட்டன. உதாரணமாக, போலிஷ் மொழியைக் கற்பிக்கும் உபாத்தினி ஒருவர் தன் மாணாக்கர்களிடம், அவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதுவதில் நம்முடைய அவேக்! பத்திரிகையின் தெளிவான எளிய மொழியைப் பின்பற்றும்படி கூறினாள். துணை பயனியரான ஈவா, பள்ளிக்கூடமும் யெகோவாவின் சாட்சிகளும் என்ற புரொஷூரை வெகு பயனுள்ளதாகக் காண்கிறாள். “நான் இந்தப் புரொஷூரை உண்மையில் நன்றியோடு மதிக்கிறேன். என் உபாத்தியாயர்கள் அதை நன்றாய் அறிந்திருக்கிறார்கள். பெரிய மாநாடுகளுக்கு ஆஜராவதற்காக வகுப்புகளுக்கு வரத் தவறுவதை மன்னிக்கும்படி அனுமதி பெறுவதில் எனக்கு ஒருபோதும் எவ்வித பிரச்னையும் இருந்ததில்லை.” இளைஞர் இத்தகைய சிறந்த மனப்பான்மையுடனிருப்பது யெகோவாவின் இருதயத்தை மகிழச் செய்கிறது.—நீதிமொழிகள் 27:11.
இருதயம் கடினப்பட்டுப்போன தண்டக் கைதிகள் மாறினர்
ஷ்ரோடா ஷ்லோன்ஸ்காவின் கிழக்கே ஸ்கெல்ட்ஸா ஒப்பொல்ஸ்கியா உள்ளது, அங்கே இரண்டு சிறைச்சாலைகள் உள்ளன. ஒன்று சீர்ப்படுத்தமுடியாதக் குற்றவாளிகளுக்கான கடுங்காவல் சிறைச்சாலை. இந்தக் கைதிகளுக்குச் சத்தியத்தைக் கொண்டுவரும்படி சாட்சிகள் இந்த இரண்டு சிறைக்காவல் நிலையங்களுக்குத் தவறாமல் சென்று கைதிகளைச் சந்திக்கின்றனர். இவர்களில் பலர் பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கும் சிறைப்பட்டிருந்தனர்.—வெளிப்படுத்துதல் 18:1-5.
சிறையிலிருக்கும் தனி ஆட்களுடனும் கைதிகளைக் கொண்ட சிறு தொகுதிகளுடனும் சாட்சிகள் பைபிள் படிக்கின்றனர், இவர்களில் சிலர் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் தண்டனைத்தீர்ப்புக்குரிய கால முடிவுவரை சிறையிருப்பில் இருக்கவேண்டுமெனினும், உடனிருக்கும் மற்ற கைதிகளுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகின்றனர். முழுக்காட்டப்படுவதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்த கைதி ஒருவர் குறிப்பிடத்தக்க அத்தகைய மாற்றங்களைச் செய்ததால், சிறைச்சாலை அதிகாரிகள் அவனை வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்குச் சென்றுவரும்படி அனுமதித்தனர். மற்றவர்கள் குற்றவாளிகளாக அல்ல, யெகோவாவின் சாட்சிகளாக சிறைச்சாலையை விட்டு வெளிவரும்படியான தங்கள் தீர்மானத்தை வெளிப்படுத்தித் தங்கள் குடும்பங்களுக்கு எழுதியுள்ளனர்.
கத்தோலிக்க குருக்கள் வருவதுண்டு ஆனால் ஒன்றும் நிறைவேற்றவில்லையென இந்தச் சிறைச்சாலைகளில் ஒன்றின் தலைமை அதிகாரி குறைகூறினார். அவர் சாட்சிகளிடம் பின்வருமாறு கேட்டார்: “இந்த ஆட்களை மாற்றவும் சீர்ப்படுத்தி முன்னிலைக்குக் கொண்டுவரவும் உங்களைக் கூடியதாக்குவது எது?” ஒரு கைதி தன் குடும்பத்துக்கு எழுதின ஒரு கடிதம் இதற்குப் பதிலளிக்கிறது: “இங்கே சிறைச்சாலையில், யெகோவாவின் சாட்சிகள், சீக்கிரத்தில் பூமியின்மீது அரசாளவிருக்கிற யெகோவாவின் ராஜ்யமாகிய, அந்தப் புதிய அரசாங்கத்தைக் குறித்த கடவுளுடைய அதிசயமான வாக்கைப்பற்றி எனக்குச் சொன்னார்கள். இங்கே பைபிளின் நோக்குநிலையிலிருந்து என் முந்தின வாழ்க்கை முறையைப் பகுத்தாராய்ந்து பார்க்க எனக்கு நேரமிருந்தது. மனக்கசப்பான முடிவுகளுக்கு வந்திருக்க, நான் சுயாதீன மனிதனாகவும் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமகனாக என்னைக் காணவும் வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறேன். இன்று நான் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறேன்.”
அந்த மற்றச் சிறைச்சாலையில், கொலைக் குற்றத்துக்காகப் பலர் 25-ஆண்டு சிறை தண்டனைக் காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அங்கே 12 ஆட்களோடு ஒழுங்கான பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் ஒருவன் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டான், மற்றவர்கள் இந்தப் படிகளை ஏற்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தும் இந்தக் கல்விபயிற்றுவிப்பு முறைகளின் நல்ல பலன்களை மதித்துணர்ந்து, சிறைச்சாலையின் தலைமை அதிகாரி பின்வருமாறு கூறினார்: “என்னிடம் 12 குற்றவாளிகள் இல்லை. என்னிடம் 600 பேர் இருக்கின்றனர். அவர்களைச் சீர்ப்படுத்தி முன்னிலைக்குக் கொண்டுவர தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் நான் உங்களுக்கு அளிப்பேன், ஆனால் தயவுசெய்து அதற்குரிய செயல்திட்டத்தைத் தயாரியுங்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்!”
சரியாய் இதையே சகோதரர் செய்தார்கள். வாழ்க்கையின் நோக்கம், எதிர்காலத்துக்கான நம்பிக்கை, மற்றும் தவறான பழக்கச் செயல்களை விட்டுவிடுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கையாளும் பைபிள் நிகழ்ச்சிநிரல் ஒன்றை அவர்கள் அளித்தனர். மேலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகி காலப்போக்கில் சபை மூப்பராக நியமிக்கப்பட்ட முன்னாள் கைதி ஒருவரின் அனுபவத்தையும் அவர்கள் கூறினார்கள். மேலும் சத்தியத்தைக் கற்றறிந்த வைரக்கல் திருடனின் மற்றும் போதைப்பொருள் துர்ப்பழக்கக்காரன் ஒருவனின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து சிறப்புப் பகுதிகளையும் எடுத்துக் கூறினார்கள்.a அங்கு ஆஜராயிருந்த 20 கைதிகள் அந்த நிகழ்ச்சிநிரலை மிக அதிக அக்கறையூட்டினதாகக் கண்டு பல கேள்விகளைக் கேட்டனர், சிலர் பைபிள் படிப்புகள் வேண்டுமெனவும் கேட்டனர்.
விசுவாசமும் சகிப்புத்தன்மையும் சோதிக்கப்பட்டன
லூபாக்குஃப் 12,000 மக்களைக்கொண்ட ஒரு சிறிய பட்டணம், யூக்ரேனின் எல்லைக்கருகில் உள்ளது. உள்ளூர் பிரஸ்தாபிகள் 12 பேருக்கு உதவிசெய்ய 1988-ல் பயனியர்கள் இடம் மாறி அங்கு சென்றபோது சுவிசேஷ வேலை அங்கே வளர்ச்சியடைந்து முன்னேறியது. இப்பொழுது செயல்படும் ராஜ்ய பிரஸ்தாபிகள் 72 பேர் இருக்கின்றனர், மேலும் புதிதாய்க் கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தில், 1991-ல் நினைவுகூரும் ஆசரிப்புக்கு 150 ஆட்கள் வந்திருந்தனர்.
ஜூன் 1991-ல், போப் ஜாண் பால் II லூபாக்குஃபுக்கு வந்திருந்தார். ஆனால் அது ஜனங்களுக்குள் உண்மையான விசுவாசத்தை உறுதிப்படுத்த ஒன்றும் செய்யவில்லை. வாழ்க்கையின் நோக்கத்தையும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் பற்றி அவர்களில் பலர் சந்தேகங்களாலும் கேள்விகளாலும் மனக்கலக்கமடைந்திருக்கின்றனர். பாதிரிமாரிடமிருந்து திருப்திதரும் பதில்கள் தங்களுக்குக் கிடைக்காதபோது, அவர்கள் யெகோவாவின் சாட்சிகளிடம் திரும்புகின்றனர். ஜனங்கள் தங்கள் மதத்தை விட்டுவிடுவதனால் முதன்முதல் அவர்களுடைய மனச்சாட்சி வாதிக்கிறபோதிலும், அவர்கள் கற்கும் பைபிள் சத்தியம் தாங்கள் சரியான தீர்மானத்தைச் செய்தனரெனக் காணும்படி அவர்களுக்கு உதவிசெய்கிறது.
இப்பொழுது ஒழுங்கான பயனியராயிருக்கும் ஆனரேட்டாவின் அனுபவம் ஒரு மாதிரியாயிருக்கிறது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்னால், பாதிரியிடம் பாவ அறிக்கை செய்கையில், கடவுளுடைய பெயர் என்னவென அவள் அவரைக் கேட்டாள். “தேவன் அன்பாகவே இருக்கிறார்—அதுவே அவருடைய மிக அதிக அழகிய பெயர்” என்று அந்தப் பாதிரி பதிலளித்தார். சிறிது நேரத்துக்குப் பின், அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்: “பளிங்குபோன்று தெளிந்த ஒரு தொட்டித் தண்ணீரில் எவரோ மையைக் கொட்டிவிட்டதுபோல் நீ இருக்கிறாய். அதன் விளைவுகள் மாற்றமுடியாதவை.” இவ்வாறு அவளுக்கு வேண்டிய பதில் கிடைத்தது. ஆனரேட்டா பின்வருமாறு சொல்கிறாள்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாவேன் என அப்பொழுதே தீர்மானித்தேன். அதுவும் மாற்றமுடியாதது.”
லூபாக்குஃபில் சத்தியத்தைக் கற்ற ஏறக்குறைய எல்லாரும் கடுமையான, வெறியார்ந்த எதிர்ப்பையும் சகிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது பைபிள் சத்தியத்தை ஆர்வத்துடன் ஏற்று யெகோவாவின் சார்பாகத் தங்கள் நிலைநிற்கையைக் கொள்வதிலிருந்து அவர்களைத் தயங்கிப் பின்வாங்கச் செய்யவில்லை.
எல்ஸ்பியேட்டா பின்வருமாறு கூறுகிறாள்: “முதன்முதல் அவர்கள் [என் பெற்றோர்] என்னை வீட்டில் அடித்தார்கள். பின்பு என் குடும்பத்தார் ராஜ்ய மன்றத்துக்குள் திடீரென்று நுழைந்தனர். . . . அவர்கள் என்னை வீட்டுக்குக் கொண்டுசென்று கணுக்கள் நிரம்பிய கோலைக்கொண்டு ‘நீதி நிறைவேற்றத்’ தொடங்கினர். சாட்சிகளோடு கூட்டுறவுகொண்ட அந்த வெறும் காரணத்தினிமித்தமே நான் தலையிலிருந்து விரல்வரையாக உடல்முழுவதும் அடித்து, உதைக்கப்பட்டேன். நான் அவ்வளவு கடுமையாக அடிக்கப்பட்டதால் உடனடியான அவசர மருத்துவ சிகிச்சை எனக்குத் தேவைப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். யெகோவா எனக்கு உதவிசெய்தார், நான் திரும்ப சுகமானேன். என் குடும்பத்தார் என்னைத் தள்ளிவிட்டனர். இதை நான் பாதிரியினிடம் சொன்னபோது, அவர்: ‘ஒருசில அறைகள் கொடுத்ததற்காகத்தானே என்னிடம் முறையிடுவதற்கு நீ வந்துவிட்டாயா?’ என்று கூறி என்னை இகழ்ந்தார்.”
மற்றொரு சகோதரி பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறுகிறாள்: “ஒவ்வொரு ஆண்டும் நான் சிலுவையின் வழியில் [முழங்காலில்] நடப்பதற்கு செஸ்டெக்கோவாவுக்குச் செல்வது வழக்கம், இதை நான் உண்மையான ஒவ்வொரு கத்தோலிக்கருக்குமுரிய கடமையெனக் கருதினேன். என் முழுங்கால்களில் இன்னும் தழும்புகள் இருக்கின்றன.” அவள் 18 வயதாயிருக்கையில் சத்தியத்தைக் கற்று பாதிரியினிடமும் அவளுடைய குடும்பத்தாரிடமும் தான் சர்ச்சுக்குத் திரும்ப வருவதில்லையெனக் கூறினாள். அவளைக் கடுமையாய் அடித்தார்கள்—“அவ்வளவு மோசமாய் அடித்ததால் எனக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது” என அவள் அறிவிக்கிறாள். “ஆனால், ‘சுயாதீனப் பிரியர்’ மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதற்குப் போதியளவாக நான் மருத்துவமனையில் திரும்ப சுகம்பெற்றேன். மதவெறி மனப்பான்மையில்லாமல் ஆட்கள் மத்தியில்—செஸ்டெக்கோவாவில் நான் ஒருபோதும் கண்டிராதக் காரியங்களான—உண்மையான ஒற்றுமையையும் அன்பையும் நான் கண்டபோது மகிழ்ச்சிமீதூர அழுதேன். யெகோவாவின் நற்குணத்தை நான் அனுபவித்து அவரை நம்புவதற்கு நான் கற்றுக்கொண்டதனால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன்.” தங்கள் பாரங்களை யெகோவாவின்மீது போட்டுவிடுவோரை அவர் பலப்படுத்தித் தாங்குகிறார்.—சங்கீதம் 55:22.
மற்ற இடங்களில் நடப்பதைப்போலவே இந்தக் கத்தோலிக்க நாட்டிலும் மகா பாபிலோனுக்குச் சிறைப்பட்டிருப்போர் பலர் “அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்ற அழைப்புக்குச் செவிகொடுத்துக்கொண்டிருக்கின்றனர். யெகோவாவின் சித்தமானால், அவருடைய தைரியமுள்ள ஜனங்கள், போலந்து முழுவதிலும் சிதறியிருக்கிற “அருமையானவைகளின்” இன்னும் மிகுதியானோரைக் கூட்டிச்சேர்ப்பதில் தொடர்ந்து செயல்படுவார்கள். நிச்சயமாகவே, பலர் பின்வரும் இந்த அழைப்புக்கு இன்னும் செவிகொடுப்பார்கள்: “வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 18:4; 22:17.
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 8, 1983-ன் ஆங்கில அவேக்! பத்திரிகை, பக்கங்கள் 16-19-ஐயும், நவம்பர் 22, 1987, பக்கங்கள் 21-3-ஐயும் பாருங்கள்.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஷ்டூம்
குரூஷ்வீட்ஸா
போஸ்னன்
வார்ஸா
போ ல ந் து
ஷ்ரோடா ஷ்லோன்ஸ்கா
செஸ்டெக்கோவா
ஸ்கெல்ட்ஸா ஒப்பொல்ஸ்கியா
லூபாக்குஃப்
[பக்கம் 26-ன் படம்]
போலந்திலுள்ள குரூஷ்வீட்ஸாவில் ராஜ்ய செய்தி பிரசங்கித்தல்