மனிதனின் பாவமுள்ள நிலையிலிருந்து வெளியேற வழியுண்டா?
தன்னுடைய நான்கு பருவ வயது பிள்ளைகளோடு, சிஸாக்கா தன் வீட்டிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு நகரில் பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்து வந்தாள். அவள் புரிந்துகொண்டிராத ஒரு சுலோகத்தை பாடிக்கொண்டே அதை அவள் செய்வது வழக்கமாக இருந்தது. எல்லா மதங்களினுடைய சாராம்சமும் என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாடும் ஒரு மதத் தொகுதியின் பழக்கங்களில் இது ஒன்றாக இருந்தது.
“இடைவிடாத கண்டிப்பான பயிற்சியின் மத்தியிலும், என் ஆளுமையை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் இருதயத்தின் ஆழத்தில், என்னால் மற்றவர்களை மன்னிக்கவும் கபடமில்லா உள்நோக்கத்துடன் அன்பு காண்பிக்கவும் முடியவில்லை,” என்று சிஸாக்கா நினைவுபடுத்தி சொல்கிறாள்.
பைபிளில் கற்பிக்கப்பட்டுள்ளபடி பாவத்தைப் பற்றிய எந்த ஒரு பொதுக்கருத்தையும் கொண்டில்லாத அநேகர் வாழும் கிழக்கத்திய நாடுகளிலும்கூட, சிஸாக்காவைப் போன்றே தங்கள் பாவமுள்ள மனச்சாய்வுகளைக் குறித்து மனச்சாட்சி குத்தலை அநேகர் அனுபவிக்கின்றனர். (ரோமர் 2:14, 15) பரிதாபமான நிலையிலிருந்த ஒருவருக்கு தயவு காண்பிக்காத காரணத்தால் அசெளகரியமான உணர்வுகளை அனுபவிக்காதவர் தான் யார் அல்லது பேசப்பட்டிருக்கக்கூடாத வார்த்தைகளுக்காக ஓரளவு சோர்வூட்டும் உறுத்தலை உணராதவர் தான் யார்? (யாக்கோபு 4:17) மேலும் இளைஞருக்குள்ளும் முதியவர்களுக்குள்ளும் ஒரேவிதமாக பொறாமையின் அருவருப்பான ஓர் அரக்கன் பதுங்கியில்லையா?
மக்கள் இப்படிப்பட்ட குழப்பமான உணர்ச்சிகளை கொண்டிருப்பது ஏன்? ஏனென்றால், அவர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் சரி, தவறைப் பற்றிய, பாவத்தைப் பற்றிய ஓர் உள்ளுணர்வைக் கொண்டிருக்கின்றனர். ஆம், பாவத்தைப் பற்றிய பைபிளின் போதனைகளை மக்கள் அறிந்திருந்தாலும் சரி அல்லது அறியாவிட்டாலும் சரி, அனைவருமே பாவமுள்ள மனச்சாய்வுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பொருளின் பேரில் நிபுணராக இருந்த ஒருவர் இவ்விதமாக முடிவாகச் சொன்னார்: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னோம்.—ரோமர் 3:23.
பாவம் துடைத்தழிக்கப்பட முடியுமா?
இன்று அநேக ஆட்கள், விசேஷமாக கிறிஸ்தவமண்டலத்தில், தங்கள் மனச்சாட்சிகளிலிருந்து பாவம் மற்றும் குற்ற உணர்வுகளை அகற்றிவிட முயற்சி செய்வதில் சுறுசுறுப்பாய் இருக்கின்றனர். “‘பாவம்’ என்ற வார்த்தையே . . . ஏறக்குறைய மறைந்துவிட்டிருக்கிறது,” என்பதாக பாவத்துக்கு என்ன நேரிட்டுவிட்டது? என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் கார்ல் மெனிங்கர் சொல்கிறார். என்றபோதிலும், “பாவம்” என்ற வார்த்தையை தவிர்ப்பது, முதியவர் ஒருவர் “முதுமை” என்ற வார்த்தையை தவிர்க்க விரும்புவது போல பயனற்றதாக இருக்கிறது. நமக்கு பாவமுள்ள மனச்சாய்வுகள் இருக்கின்றன, அந்தப் பரிதாபமான நிலையிலிருந்து நாம் காப்பாற்றப்படுவது அவசியம் என்ற நிஜத்தை நாம் எதிர்ப்பட வேண்டும். ஆனால் யாரால்?
கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல், தான் வேறுவிதமாக செய்ய விரும்பியபோதிலும் பாவம் செய்வதற்கு தனக்கிருந்த மனச்சாய்வுகளைப் பற்றி ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கேள்வியைக் கேட்டார்: “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” பவுல் தொடர்ந்து பதிலளிக்கிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” ஏன்? ஏனென்றால் கடவுள் இயேசுவினுடைய மீட்கும் பலியின் மூலமாக பாவ மன்னிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.—ரோமர் 7:14-25.
என்றபோதிலும், உலகிலுள்ள கிறிஸ்தவர்களல்லாதவர்களான 3,50,00,00,000 பேர் (கிறிஸ்தவர்களென அழைத்துக்கொள்பவர்களைவிட இரண்டு மடங்கு ஆட்கள்) மீட்பு என்ற கருத்தை கிரகித்துக்கொள்வதை மிகக் கடினமாக காண்கின்றனர். உதாரணமாக, ஜப்பானில் கொஞ்ச காலம் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த முகமதியர் ஒருவருக்கு மீட்கும்பொருள் பற்றிய கோட்பாடு மிகப் பெரிய இடறல் கல்லாக இருந்தது. அநேக கிழக்கத்திய நாட்டவருக்கு எல்லாருக்காகவும் ஒருவர் மரிப்பது என்ற கருத்து வழக்கத்துக்கு மாறாக உள்ளது.
கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலரும்கூட இந்த அடிப்படைக் கோட்பாட்டை புரிந்துகொள்வதை கடினமாகக் காண்பது போல இது புரிந்துகொள்ளப்படத் தக்கதே. “மீட்பு பற்றிய இறையியல் ஓரளவு அடையப்பெறாததாகவும், இறையியலில் தொடர்ந்து ஒரு பிரச்னையை முன்வைப்பதாகவும் இருக்கிறது,” என்று நியு கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா ஒப்புக்கொள்கிறது.
இந்தக் கோட்பாட்டின் பேரிலுள்ள குழப்பத்தின் அளவு சமய எழுத்தாளரான N. H. பார்பரின் வார்த்தைகளில் நன்கு விளக்கப்படுகிறது: “ஓர் ஈயின் உடலில் குண்டூசியை குத்தி அதற்கு வேதனையையும் மரணத்தையும் உண்டுபண்ணுவதை தன் பிள்ளையின் தவறான நடத்தைக்கு நியாயமான ஒரு தீர்வாக பூமிக்குரிய பெற்றோர் கருதாதிருப்பது போலவே, கிறிஸ்துவின் மரணம் மனிதனின் பாவங்களுக்கான தண்டனைக்கு தீர்வாக இல்லை.” அந்தச் சமயம் பார்பரோடு கூட்டுறவுக்கொண்டிருந்த சார்ல்ஸ் T. ரஸல் மீட்பின் போதகத்தை ஆதரிக்க வேண்டிய அவசர தேவையை உணர்ந்தார். அவர் பார்பரோடு கூட்டுறவை துண்டித்துவிட்டு, 1879-ல் நீங்கள் இப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாக பின்னால் ஆன ஒரு புதிய பத்திரிகையை பிரசுரிக்க ஆரம்பித்தார். அதன் ஆரம்பம் முதல், காவற்கோபுரம் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியை ஆதரித்து வந்திருக்கிறது.
ஆனால் “கிறிஸ்தவ” பின்னணியில்லாதவர்களுக்கு இந்தக் கோட்பாடு எப்போதாவது ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாக இருக்குமா? இதைக் கண்டுபிடிக்க, எல்லாருக்காகவும் ஒரு மனிதன் மரிப்பதைப் பற்றிய இந்தப் போதகத்தை சற்று உன்னிப்பாக நாம் கவனிப்போமாக.