விசுவாசம் எவ்விதமாக வியாதியிலிருப்பவர்களுக்கு உதவக்கூடும்
பைபிளிலுள்ள அற்புத சுகப்படுத்துதல்களைப் பற்றிய பதிவுகள், கடவுள் நம்முடைய சுக-நலத்தைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை நமக்கு மீண்டும் உறுதிசெய்து, சுகப்படுத்துவதற்கு அவருக்கிருக்கும் வல்லமையை அவை காண்பிக்கின்றன. இந்த அற்புதமான சுகப்படுத்துதல்கள் தேவனை மகிமைப்படுத்தி இத்தனை சந்தோஷத்தைக் கொண்டு வந்த காரணத்தால், பரிசுத்த ஆவியின் மூலமாக சுகப்படுத்தும் ஈவு இன்னும் செயல்படுகிறதா? என்று கேட்பது நியாயமாகவே இருக்கிறது.
அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை என்பதாகும்—காரணம் அநேகருக்கு ஆச்சரியமளிப்பதாய் இருக்கக்கூடும். முதல் நூற்றாண்டில் இந்த அற்புதமான சுகப்படுத்துதல்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டன. படங்களையுடைய பைபிள் அகராதி சரியாக குறிப்பிடுகிறது: “சுகப்படுத்தும் அற்புதங்களின் நோக்கம் மதசம்பந்தப்பட்டதாக இருந்தது, மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இல்லை.” அந்த அற்புதங்கள் நிறைவேற்றிய மத சம்பந்தமான நோக்கங்கள் சில யாவை?
ஒரு காரியமானது, இயேசுவின் சுகப்படுத்தும் அற்புதங்கள் மேசியாவாக அவரை அடையாளங் கண்டுகொள்ளும் நோக்கத்தை சேவித்தது. அவருடைய மரணத்துக்குப் பின்பு, அவை கடவுளுடைய ஆசீர்வாதம் புதிய கிறிஸ்தவ சபையின் மீது இருந்ததை உறுதிப்படுத்துவதற்கு உதவின. (மத்தேயு 11:2-6; எபிரெயர் 2:3, 4) மேலுமாக, அவை புதிய உலகில் மனிதகுலத்தை சுகப்படுத்துவதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்கு நிறைவேற்றமடையும் என்பதை காண்பித்தன. “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கப்,”போகும் அந்தக் காலம் உண்மையில் வரும் என்ற நம்முடைய விசுவாசத்தை அவை உறுதிசெய்கின்றன. (ஏசாயா 33:24) இந்த முதல்-நூற்றாண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பு, அற்புதங்கள் இனிமேலும் அவசியமாயிருக்கவில்லை.
இயேசுவின் முதல்-நூற்றாண்டு சீஷர்கள் தாமேயும்கூட அற்புதமாக சுகப்படுத்தப்படாத குறைகளினால் வேதனை அனுபவித்தார்கள் என்பது கவனிக்கப்படத்தக்கதாகும். இயேசுவின் அற்புதமான சுகப்படுத்தும் நடவடிக்கைகளும், அவருடைய அப்போஸ்தலர்களுடையதும், மருத்துவ சேவையை அளிப்பதற்காக இல்லாமல் முக்கியமான சத்தியங்களைக் கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதற்கு இது கூடுதலான அத்தாட்சியாகும். தீமோத்தேயுவுக்கு அடிக்கடி ஏற்பட்ட வியாதிக்காக மருத்துவ சிகிச்சையை பவுல் சிபாரிசு செய்கையில், விசுவாச சுகப்படுத்துதலை அல்ல, ஆனால் திராட்சரசத்தின் மருத்துவ உபயோகத்தையே அவர் பரிந்துரைத்தார். அற்புதமான சுகப்படுத்துதல்களை நடப்பித்த பவுல், அவரைக் “குட்டிக்”கொண்டே இருந்த “மாம்சத்திலே ஒரு முள்”ளிலிருந்து எந்த நிவாரணத்தையும் பெறவில்லை.—2 கொரிந்தியர் 12:7; 1 தீமோத்தேயு 5:23.
அப்போஸ்தலர்கள் மரித்த போது, சுகப்படுத்தும் வரம் ஒழிந்துபோனது. இது சம்பவிக்கும் என்பதாக பவுல்தானேயும்கூட குறிப்பிட்டார். கிறிஸ்தவ சபையை ஒரு குழந்தைக்கு ஒப்பிட்டு, பவுல் சொன்னார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன், நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” ஆவியின் அற்புதமான ஈவுகள் கிறிஸ்தவ சபையின் குழந்தைப் பருவத்தின் பாகமாக இருந்தது என்பதே உதாரணத்தின் குறிப்பாகும். அவை “குழந்தைக்கேற்றவையாக,” இருந்தன. ஆகவே அவர் சொன்னார்: “அவை [அற்புதமான வரங்கள்] ஒழிந்துபோம்.”—1 கொரிந்தியர் 13:8-11.
நமக்கு வியாதி வரும்போது விசுவாசம் உதவக்கூடுமா?
இருப்பினும், விசுவாச சுகப்படுத்துதல்களை நாம் நம்பாவிட்டாலும்கூட, வியாதி நமக்கு வரும்போது உதவிக்காக கடவுளிடம் ஜெபிப்பது நிச்சயமாகவே பொருத்தமானதாக இருக்கிறது. நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பதிலும்கூட நிச்சயமாகவே எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஜெபங்கள் நடைமுறைக்கு ஏற்றதாயும் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாகவும் இருக்க வேண்டும். (1 யோவான் 5:14, 15) விசுவாச சுகப்படுத்துதலுக்காக ஜெபிக்கும்படி பைபிள் எந்த இடத்திலும் நமக்குக் கட்டளையிடவில்லை.a மாறாக, வியாதியினால் ஏற்படும் சோதனைகளில் யெகோவாவின் அன்புள்ள ஆதரவுக்காக நாம் ஜெபிக்கிறோம்.
பைபிள் பின்வருமாறு சொல்லும்போது உண்மையுள்ளவர்கள் வியாதியிலிருக்கையில் எதற்காக ஜெபிக்கலாம் என்பதைக் காட்டுகிறது: “படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.” (சங்கீதம் 41:3) உணர்ச்சிப்பூர்வமான வியாதியில் அவதியுறுகிறவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைத் தியானிப்பது உதவிசெய்யும். சங்கீதக்காரன் எழுதினார்: “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.”—சங்கீதம் 94:18, 19; 63:6-8-ஐ கூட பார்க்கவும்.
மேலுமாக, உடல் ஆரோக்கிய விஷயங்களில் நல்லுணர்வை நாம் காண்பிப்பது அவசியமாகும், பைபிள் இதைக் குறித்து நமக்கு ஆலோசனைத் தருகிறது. போதை வஸ்து துர்ப்பிரயோகம், புகைத்தல், அதிகமாக குடித்தல், அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு, பின்னர் இதன் விளைவாக வியாதி வரும் போது நம்பிக்கையிழந்து விசுவாச சுகப்படுத்துதலிடமாகச் செல்வதைக் காட்டிலும் பைபிள் நியமங்களின்படி வாழ்வதே மிக மேலானது. சத்துள்ள உணவு கிடைக்குமானால் அதை உண்பது அல்லது கூடுமானால் தகுதிபெற்ற மருத்துவ உதவியை நாடுவது போன்றவற்றின் மூலமாக தவிர்க்கப்படக்கூடிய நோய்களைத் தவிர்த்துவிடும் ஞானமான நடத்தைக்கு, ஒருவர் நோயினால் தாக்கப்படும் போது, அற்புதத்துக்காக ஜெபிப்பது மாற்றீடாக இல்லை.
நம்முடைய சரீர ஆரோக்கியத்துக்கு பிரயோஜனமாயிருக்கும் ஆரோக்கியமான மனநிலைகளை வளர்த்துக்கொள்ளும்படியாகவும்கூட கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் புத்தகம் ஆலோசனைக் கொடுக்கிறது: “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” (நீதிமொழிகள் 14:30; 17:22) நம்மில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும்படியாக பரிசுத்த ஆவிக்காக ஜெபிப்பது நம்முடைய சரீர ஆரோக்கியத்தின் மீது நன்மையான பாதிப்புகளையே கொண்டுவர முடியும்.—பிலிப்பியர் 4:6, 7.
விசுவாச சுகப்படுத்துதலைப் பற்றி என்ன?
நிச்சயமாகவே, ஒரு நபர் தன்னுடைய நிலைமை அனுமதிக்கும் அளவு ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாலும்கூட வியாதி இன்னும் வரக்கூடும். அப்போது என்ன? சுகப்படுத்தப்படும் நம்பிக்கையோடு நவீன விசுவாச சுகப்படுத்துவோரிடமாகச் செல்வதில் தீங்கேதும் உண்டா? ஆம். தீங்கு இருக்கிறது. நவீன விசுவாச சுகப்படுத்துவோர் கட்டணமின்றி இதைச் செய்வது அரிதாகும். மருத்துவ உதவிக்காக செலவிடப்படக்கூடிய அந்தப் பணத்தை ஒரு விசுவாச சுகப்படுத்துவோருக்காக செலவழிப்பது துன்பத்திலும் இழப்பிலும் விளைவடையக்கூடும். தவிர, எதையும் எளிதில் நம்பிவிடும் மக்களின் குணத்தை அனுகூலப்படுத்திக் கொள்பவர்களுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்?
சிலர் ஒருவேளை விவாதிக்கலாம்: ‘“சுகப்படுத்துவோரிடம்,” செல்பவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் சுகப்படுத்தப்பட்டாலும்கூட விசுவாச சுகப்படுத்துதல் ஓரளவு மதிப்புள்ளதாக இருக்க வேண்டும்.’ ஆனால் விசுவாச சுகப்படுத்துவோர் எவரையாவது நிரந்தரமாக உண்மையில் சுகப்படுத்துகின்றனரா என்பது விவாதத்துக்குரியதாகும். என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஒப்புக்கொள்கிறது: “ஒப்பிடுகையில் விசுவாச சுகப்படுத்துதலில் இருக்கும் அநேக அறியப்படாத காரணக்கூறுகளின் பேரில் நிலையான செயல்முறைக்கு இசைவாக வெகு குறைவான ஆராய்ச்சியே செய்யப்பட்டிருக்கிறது.”
குறைவான எண்ணிக்கையானோரே சுகப்படுத்தப்படுவதாகத் தோன்றினாலும்கூட, இது பரிசுத்த ஆவியின் கிரியைக்கு அத்தாட்சியாக இல்லை. மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னார்: “அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22, 23) ஒரு சிலர், கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவர்களும்கூட, அடையாளங்களின் மூலமாக தங்களிடமாக கவனத்தைக் கவர்ந்துகொள்வார்கள் என்றும்கூட இயேசு சொன்னார்: “ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” (மத்தேயு 24:24) நிச்சயமாகவே, நவீன விசுவாச சுகப்படுத்துவோர், நாடகபாணியில் செயல்படுவதாலும், இடைவிடாமல் பணம் கேட்பதாலும், அற்புதமாக சுகப்படுத்துவதாக உரிமைப்பாராட்டுவதாலும் அவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துவதாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக்கொண்டில்லை. அப்படியென்றால் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னபோது ஒரு குறிப்பைத் தருகிறார்: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.” (2 கொரிந்தியர் 11:14, 15) விசுவாச சுகப்படுத்துவோர் அவர்கள் உரிமைப்பாராட்டும் சுகப்படுத்துதல்களைச் செய்ய முடியாமல் போனால், அப்பொழுது அவர்கள் வஞ்சிக்கிறவர்களாக, “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற,” சாத்தானின் வழியைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9) ஆனால், சிறுபான்மையானோரின் விஷயத்தில் அவர்கள் உண்மையாகவே சுகப்படுத்துதல்களைச் செய்தால் அப்போது என்ன? அவர்களுடைய “அற்புதங்கள்,” சாத்தான் மற்றும் பேய்களின் வல்லமையினால் நடப்பிக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமல்லவா? ஆம், அது அப்படித்தான் இருக்கவேண்டும்!
உண்மையான சுகப்படுத்துதலின் காலம்
இயேசு செய்த அற்புதமான சுகப்படுத்துதல்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியோடு நடப்பிக்கப்பட்டன. குறிக்கப்பட்ட நேரத்தில் மனிதருடைய எல்லா உடல்நலப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காக அவர் நோக்கங்கொண்டிருப்பதை அவை காண்பித்தன. “ஜனங்கள் ஆரோக்கியமடை”வார்கள் என்று யெகோவா வாக்களிக்கிறார். (வெளிப்படுத்துதல் 22:2) அவர் வியாதியை சுகப்படுத்துவது மாத்திரமல்லாமல் மரணத்தையும் ஒழித்துவிடுவார். அவரை “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,” இயேசு வந்தார் என்று யோவான் விளக்குகிறார். (யோவான் 3:16) அது என்னே ஒரு நேர்த்தியான சுகப்படுத்துதலாக இருக்கும்! பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது போன்ற குணப்படுத்தல்களை இயேசு மறுபடியும் நடப்பிப்பார் ஆனால் அதிக மகத்தான அளவில் அதைச் செய்வார். அவர் மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்புவார்! (யோவான் 5:28, 29) இது எப்போது நடந்தேறும்?
எல்லா அத்தாட்சியின்படியும் மிகவும் சமீபத்திலிருக்கும் கடவுளுடைய புதிய உலகில். இந்தக் காரிய ஒழுங்கின் துன்மார்க்கம் என்றுமாக நீக்கப்பட்ட பின்பு வரவிருக்கின்ற அந்தப் புதிய உலகம் நேர்மையான இருதயமுள்ள மனிதகுலத்துக்கு உண்மையான ஆசீர்வாதமாக இருக்கும். அது துயரமில்லா ஓர் உலகமாக இருக்கும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) நம்மைச் சுற்றி இன்று நாம் காண்பவற்றுக்கு எத்தனை நேர் எதிர்மாறாக இருக்கும்!
ஆகவே, வியாதியிலிருக்கையில், ஆதரவுக்காக கடவுளிடம் ஜெபியுங்கள். வியாதியில் இருந்தாலும் அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, வியாதி இல்லாத நித்திய ஜீவன் எவ்வாறு கூடிய காரியமாக இருக்கும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். பைபிளில் அதைப்பற்றிய அநேக குறிப்புரைகளைப் படிப்பதன் மூலம் கடவுளுடைய இந்த நம்பத்தக்க வாக்குறுதியில் உங்கள் விசுவாசத்தைக் கட்டி அமைத்துக்கொள்ளுங்கள். இதன் சம்பந்தமாக கடவுளுடைய நோக்கங்கள் எவ்வாறு அவருடைய சொந்த கால அட்டவணையின்படி நிறைவேற்றத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு உறுதியளிப்பதன் காரணமாக எந்தச் சந்தேகமுமின்றி இருங்கள்: “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடை”ப்பார்.—ஏசாயா 25:8.
[அடிக்குறிப்புகள்]
a யாக்கோபு 5:14, 15-லுள்ள வார்த்தைகள், விசுவாச சுகப்படுத்துதலோடு சம்பந்தப்பட்டவை என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் யாக்கோபு இங்கே ஆவிக்குரிய வியாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை சூழமைவு காட்டுகிறது. (யாக்கோபு 5:15பி, 16, 19, 20) விசுவாசத்தில் பலவீனராகிவிட்டவர்களை உதவிக்காக மூப்பர்களை அழைக்கும்படியாக அவர் புத்திமதி கொடுக்கிறார்.
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் அற்புதமான சுகப்படுத்துதல்கள் அவைகளின் நோக்கத்தை நிறைவேற்றின
[பக்கம் 8-ன் படம்]
இயேசு சுகப்படுத்தும் அற்புதங்களை மீண்டும் மீண்டும் பன்மடங்காகச் செய்வார்