கடவுளுடைய ராஜ்யம் பலருக்கு எதை அர்த்தப்படுத்துகிறது
இயேசு கிறிஸ்து அடிக்கடி கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசினார். இதன் சம்பந்தமாக சரித்திராசிரியர் H. G. வெல்ஸ் இவ்விதமாக எழுதினார்: “இயேசு, பரலோக ராஜ்யம் என்று அவர் அழைத்த அந்தப் போதகத்துக்கு கொடுத்த பேரளவான முக்கியத்துவமும், பெரும்பாலான கிறிஸ்தவ சர்ச்சுகளில் செயல்முறையிலும் போதனையிலும் ஒப்பிடுகையில் அது முக்கியத்துவமற்றதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இயேசுவின் முக்கிய போதனையாக இருந்ததும், கிறிஸ்தவ கோட்பாடுகளில் மிகக் குறைவான பங்கையே வகிப்பதுமான பரலோக ராஜ்யம் என்ற இந்தக் கோட்பாடு மனித சிந்தனையை எக்காலத்திலும் தூண்டி மாற்றியிருக்கும், அடிப்படையில் மிகவும் வித்தியாசமான ஒரு கோட்பாடாக நிச்சயமாகவே இருக்கிறது.”
கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து சொல்ல சர்ச்சுகளுக்கு ஏன் இவ்வளவு குறைவாகவே இருக்கிறது? ஒருவேளை ராஜ்யத்தைக் குறித்து சந்தேகமான நிலையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதைக் குறித்து என்ன கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன?
ராஜ்யம் எவ்விதமாக கருதப்பட்டு வந்திருக்கிறது
ஒரு சிலர் கடவுளுடைய ராஜ்யமும் கத்தோலிக்க சர்ச்சும் ஒன்றே என கருதியிருக்கிறார்கள். பிஷப்புகள், பேரரசன் கான்ஸ்டன்டைனை பொ.ச. 325-ம் ஆண்டு நைசீயா குழுவில் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டதற்கு பிறகு, சர்ச் அரசியலில் ஈடுபடலானது, ராஜ்யம் ஏற்கெனவே வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லப்பட்டது. அகஸ்டீனின் (பொ.ச. 354–430), இறையியலின்படி, “சர்ச் நிறுவப்பட்டதுடன் கடவுளுடைய ராஜ்யம் ஏற்கெனவே இந்த உலகில் ஆரம்பித்துவிட்டது” என்றும் “அது ஏற்கெனவே சர்ச்சின் புனித சடங்குகளில் உள்ளது” என்றும் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது.
மற்றவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை ஒரு மனித சாதனையாக கருதுகிறார்கள். அதே என்ஸைக்ளோபீடியா சொல்கிறது: “சீர்திருத்த சர்ச்சுகள் . . . சீக்கிரத்தில் நிறுவனமாக செயலாற்றும் பிராந்திய சர்ச்சுகளாயின,” கடவுளுடைய ராஜ்யம் வருவதன் சம்பந்தமாக “முடிவு கால எதிர்பார்ப்பை இவை ஒடுக்கிவிட்டன.” H. G. வெல்ஸ் எழுதினார்: “மனிதர்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய கவனத்தைக் கடவுளுடைய ராஜ்யம் மற்றும் மனிதகுலத்தின் சகோதரத்துவத்திலிருந்து அதைக் காட்டிலும் செயல்பட்டுக்கொண்டிருந்த மேலீடாக மெய்ம்மைகளாகத் தோன்றிய ஃபிரான்சு மற்றும் இங்கிலாந்து, பரிசுத்த ரஷ்யா, ஸ்பெய்ன், ப்ரஷ்யாவிடமாக திருப்பினர் . . . அவையே ஐரோப்பாவின் உண்மையான மற்றும் உயிருள்ள தெய்வங்களாக இருந்தன.”
நவீன காலங்களிலும்கூட, ராஜ்யம் மதச்சார்பற்றதாக்கப்பட்டுள்ளது. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது: “எதிர்கால பரிபூரண சமுதாயத்துக்கு மனிதன் தானே வடிவங்கொடுத்து, ஒழுங்குபடுத்த ஆயத்தஞ் செய்ய வேண்டும் என்ற அடிப்படை மனநிலை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. ‘நம்பியிருப்பது,’ ‘காத்திருப்பது’ ஆகியவற்றின் இடத்தில் மனித முன்முயற்சி வைக்கப்படுகிறது.” “சமூக சுவிசேஷம்” குறித்து அதே பார்வைக் குறிப்புநூல் இவ்விதமாக தொடர்ந்து சொல்கிறது: “இந்த இயக்கம், முக்கியமாக கடவுளுடைய ராஜ்ய நன்னெறியின் கருத்தில், சமுதாயத்தின் மதச்சார்பற்ற நிலைமைகளை மீண்டும் ஒழுங்கமைப்பதற்கான ஒரு தூண்டுதலாகவே கடவுளுடைய ராஜ்யத்தின் கிறிஸ்தவ செய்தியை கருதியது.”
அநேக யூதர்களும்கூட ராஜ்யத்தை ஒரு மனித சாதனையாக கருதியிருக்கின்றனர். 1937-ல் அ.ஐ.மா., ஒஹையோ, கொலம்பஸில் சீர்திருத்த யூத குருக்களின் மாநாடு சொன்னது: “பூமியின் மீது சர்வலோக சகோதரத்துவம், நீதி, சத்தியம் மற்றும் சமாதானத்தின் கடவுளுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதில் எல்லா மனிதர்களோடும் ஒத்துழைப்பதை நாங்கள் எங்களுடைய வரலாற்று முக்கியத்துவமுள்ள பணியாக கருதுகிறோம். இதுவே எங்கள் மேசியானிய இலக்காகும்.”
கடவுளுடைய ராஜ்யம் ஒருவருடைய இருதயத்தின் ஒரு நிலைமையே என்பது பரவலாக நம்பப்படும் மற்றொரு கருத்தாகும். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் 1925-ன் தென் பாப்பிடிஸ்டு மாநாடு இவ்விதமாக அறிவித்தது: “கடவுளுடைய ராஜ்யம் என்பது எல்லா மனித உறவிலும் ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயத்தின் எல்லா வடிவத்திலும் நிறுவனத்திலும் ஒரு தனிநபரின் இருதயத்திலும் வாழ்க்கையிலும் கடவுளுடைய ஆட்சியாக இருக்கிறது. . . . மனிதனின் ஒவ்வொரு சிந்தையும் சித்தமும் கிறிஸ்துவின் சித்தத்திற்குள் வசப்படுத்திக்கொண்டுவரப்படுகையில் கடவுளுடைய ராஜ்யம் முழுமைப்பெறும்.”
ஆகவே, சர்ச் கடவுளுடைய ராஜ்யமாக இருக்கிறதா? அந்த ராஜ்யம் மதம் சாராத வழிமுறைகளின் மூலமாக கொண்டுவரப்படுமா? அது இருதயத்தின் ஒரு நிலைமையா? கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தக்கூடும்? (w92 3/15)