எகிப்திய குப்பைக் குவியலில் புதையல்
ஒரு குப்பைக் குவியலில் விலைமதிப்புள்ள பைபிள் கையெழுத்துப் பிரதிகளை கண்டுபிடிக்க நீங்கள் எதிர்பார்ப்பீர்களா? எகிப்தினுடைய மணலிற்குள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் இது தானே கிடைத்தது. எவ்வாறு?
1778 முதல்கொண்டு 19-வது நூற்றாண்டின் முடிவு வரையாக, தற்செயலாக மிகப் பல நாணற்புல் தாளில் எழுதப்பட்ட வாசகங்கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டன. என்றபோதிலும், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் வரையாக அத்தனை முறைப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்குள் எகிப்திய விவசாயிகள் பண்டைய காலத்துக்குரிய பத்திரங்களை ஒரே வேகத்தில் கண்டுபிடித்த வண்ணமாகவே இருந்தனர். பிரிட்டிஷ்-ஆதரவு பெற்ற எகிப்து ஆய்வுப் பயண நிதித்துறை, மிகவும் பிந்திவிடுவதற்கு முன்பாக ஆய்வுக்குழு ஒன்று அனுப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. அவர்கள் இரண்டு ஆக்ஸ்போர்ட் கல்விமான்கள், பெர்னார்ட் P. கிரென்ஃபெல் மற்றும் ஆர்த்தர் S. ஹன்டை அனுப்பினர். இவர்கள் ஃபேயம் மாவட்டத்தில் (மேலே காண்பிக்கப்பட்டிருக்கிறது) விவசாய நிலத்துக்கு தெற்கேயுள்ள பகுதியை ஆய்வு செய்ய அனுமதி பெற்றனர்.
பெனிசி என்றழைக்கப்பட்ட ஓரிடம் அதனுடைய பண்டைய கிரேக்க பெயரான ஆக்ஸிரின்கஸ்-ன் காரணமாக கிரென்ஃபெல்லுக்கு நம்பிக்கையூட்டுவதாகத் தோன்றியது. எகிப்திய கிறிஸ்தவத்தின் மையமாக, ஆக்ஸிரின்கஸ் பொ.ச. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளின் போது முக்கியமான ஓரிடமாக இருந்தது. முற்காலத்திய துறவிமடங்கள் பல அருகில் இருந்தன, இந்த மாகாண நகரின் இடிபாடுகள் பரவலாக இருந்தன. கிரென்ஃபெல் கிறிஸ்தவ இலக்கியங்களில் முறிந்த துண்டுகளை கண்டுபிடிக்க எதிர்பார்த்திருந்தார், ஆனால் கல்லறைத் தோட்டங்களையும் பாழடைந்த வீடுகளையும் தோதனையிட்ட போது அதுவும் கிடைக்கவில்லை. நகரின் குப்பைக் குவியல்கள் மாத்திரம் ஒரு சிலவை 9 மீட்டர் உயரத்துக்கு நின்று கொண்டிருந்தன. நாணற்புல் தாளுக்காக அவ்விடத்தை தோண்டுவது ஏறக்குறைய தோல்வியை ஒப்புக்கொள்வதாகவே தோன்றியது; இருந்தபோதிலும் ஆய்வாளர்கள் முயற்சி செய்ய தீர்மானித்தனர்.
அரும் பொருள் புதையல்
ஜனவரி 1897-ல் சோதனைமுறை அகழி ஒன்று வெட்டப்பட்டது, ஒரு சில மணிநேரங்களுக்குள் பண்டைய நாணற்புல் தாளில் எழுதப்பட்ட தகவல்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் கடிதங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பொதுப்பணித் துறை பத்திரங்கள் இருந்தன. காற்றினால் அடித்துச் செல்லப்படும் மண் அவைகளை மூடியிருந்தன, வறட்சியான சீதோஷண நிலை அவைகளை சுமார் 2,000 வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தன.
மூன்றே மாதங்களில், சுமார் 2 டன்கள் நாணற்புல் தாள்கள் ஆக்ஸிரின்கஸிலிருந்து மீட்கப்பட்டது. இருபத்து-ஐந்து பெரிய பெட்டிகள் நிரப்பப்பட்டு இங்கிலாந்துக்கு கடல் மார்க்கமாய் அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு பனிக்காலத்திலும் இந்த இரண்டு துணிச்சல் மிக்க கல்விமான்களும் தாங்கள் சேகரித்த பொருட்களைக் கூட்ட எகிப்துக்கு திரும்பி வந்தனர்.
ஒரு சமயம் டெப்டியூனில் ஓர் இடுகாட்டை தோண்டியெடுக்கையில் அவர்கள் பதனம் செய்யப்பட்ட முதலைகளின் உடல்களை மாத்திரமே தோண்டியெடுத்தனர். வேலை செய்து கொண்டிருந்த ஒரு மனிதன் ஏமாற்றத்தில் ஒன்றை எடுத்து தூள் தூளாக உடைத்தான். அவனுக்கு ஆச்சரியமுண்டாக, நாணற்புல் தாளினால் அது சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவர்கள் கண்டுபிடித்த மற்ற முதலைகளும் அதேவிதமாகவே பதனம் செய்யப்பட்டிருந்தன, ஒரு சில வற்றில் நாணற்புல் தாள் சுருள்கள் அவைகளின் தொண்டைகளிலும்கூட அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பண்டைய இலக்கிய எழுத்துக்கள், அரசமுறை கட்டளைகள் மற்றும் ஒப்பந்தங்களும் வியாபார கணக்குகளும் தனிப்பட்டவர்களுடைய கடிதங்களும் முறிந்த துண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த எல்லாப் பத்திரங்களும் எவ்விதமாக மதிப்புள்ளதாக இருந்தன? அவை வெகுவாக அக்கறைக்குரியவையாக இருந்தன, ஏனென்றால் பெரும்பாலும் அவை அந்நாளின் பொது மொழியான கொயினே கிரேக்குவில் சாதாரணமான மக்களால் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்திய அநேக வார்த்தைகள், “புதிய ஏற்பாடாக” இருக்கும் பைபிளின் கிரேக்க வேதாகமத்திலும்கூட காணப்படுவதால் வேதாகமத்திலுள்ள மொழி, ஒரு சில கல்விமான்கள் கருத்து தெரிவித்திருந்தது போல விசேஷமான பைபிள் கிரேக்கு அல்ல, ஆனால் அது சாதாரண மனிதன் பேசிய சாதாரண மொழியாகவே இருந்தது என்பது உடனடியாக தெளிவானது. ஆகவே அன்றாட சூழ்நிலைமைகளில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட விதத்தை ஒப்பிடுவதன் மூலம், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அவற்றின் தெளிவான புரிந்து கொள்ளுதல் வெளிப்படலானது.
பைபிள் கையெழுத்துப் பிரதிகள்
பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் முறிந்த துண்டுகளும்கூட மீட்கப்பட்டன. அநேகமாக அதிக அலங்காரங்கள் இல்லாமல் குறைந்த தரமுள்ள பொருளில் கரடுமுரடான கையெழுத்துப் படிவத்தில் எழுதப்பட்டிருந்த இவை சாதாரண மனிதனின் பைபிளை பிரதிநிதித்துவம் செய்தது. கண்டுபிடிப்புகளில் சிலவற்றை நாம் ஆராய்வோமாக.
மத்தேயு சுவிசேஷம் முதல் அதிகாரம் வசனங்கள் 1 முதல் 9, 12, 14 முதல் 20 வரையாக பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நகலை ஹன்ட் கண்டுபிடித்தார். பல்வேறு இடங்களிலிருந்து வரும் நாணற்புல் தாள் வாசகங்களின் பட்டியலில் முதல் உருபடியாக அது P1 ஆக இருந்தது, இப்பொழுது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதிகளும் கையெழுத்துப் பிரதிகளின் சில பகுதிகளும் சுமார் நூறாக இருக்கின்றது. ஹன்ட் கண்டுபிடித்த ஒரு சில வசனங்களின் பயன் என்ன? எழுத்தின் வடிவம், அது பொ.ச. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை தெளிவாக்குகிறது. அதை வாசித்து சரிபார்த்த போது, வெஸ்காட்டும் ஹார்ட்டும் அப்போது சிறிது காலத்துக்கு முன்தானே வரிசைப்படுத்தி அமைத்திருந்த வாசகத்தோடு ஒத்திருந்ததைக் காண்பித்தது. P1 இப்பொழுது அ.ஐ.மா.-வில் பென்சில்வேனியாவிலுள்ள பிலதெல்பியா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
ஒரு கையெழுத்துச் சுவடி அல்லது புத்தகத்திலுள்ள ஒரு நாணற்புல் தாள், இடது-பக்க தாளில் யோவான் 1-ம் அதிகாரத்தின் சில பகுதிகளையும், வலது-கை பக்க தாளில் யோவான் 20-ம் அதிகாரத்தின் சில பகுதிகளையும் கொண்டிருக்கிறது. காணப்படாத பகுதிகளை மீண்டும் இணைத்து உருவாக்கிப் பார்க்கும் போது, முழு சுவிசேஷத்துக்கும் ஆரம்பத்தில் 25 தாள்கள் இருந்ததும் முற்காலத்திலிருந்தே இவை அதிகாரம் 21-ஐ கொண்டிருந்ததும் தெரிய வருகிறது. அது பொ.ச. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக P5 என்று எண்ணிடப்பட்டு, இப்பொழுது இங்கிலாந்து, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ரோமர் 1:1-7-ஐ கொண்ட ஒரு முறிந்த துண்டு, பெரிதாக ஏறுமாறாக எழுதப்பட்டிருந்ததால், அது ஒருவேளை ஒரு பள்ளிச்சிறுவனின் பயிற்சி என்று சில கல்விமான்கள் நினைத்திருக்கிறார்கள். பொ.ச. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இது இப்பொழுது P10 என்று எண்ணிடப்பட்டிருக்கிறது.
பெரிதான ஒரு கண்டுபிடிப்பு, எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டிருக்கிறது. சுருளின் முதல் பக்கத்தில் ரோம சரித்திராசிரியர் லிவியின் இலக்கிய எழுத்துக்கள் இருக்க, அதன் பின்புறத்தில் இது எழுதப்பட்டுள்ளது. முதல் பக்கத்திலும் பின்புறத்திலும் ஏன் இத்தனை வித்தியாசமான விஷயங்கள்? அந்நாட்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலையின் காரணமாக, பழைய நாணற்புல் தாள்கள் வீணாக்கப்பட முடியாது. பொ.ச. மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இது இப்பொழுது P13 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ரோமர் அதிகாரங்கள் 8 மற்றும் 9-ன் சில பகுதிகளைக் கொண்ட ஒரு நாணற்புல் தாள், சுமார் 11 1/2 சென்டிமீட்டர்கள் உயரமும் 5 சென்டிமீட்டர்கள் அகலமுமுள்ள ஒரு புத்தகத்திலிருந்து கிடைத்தது. பொ.ச. மூன்றாவது நூற்றாண்டில் பாக்கட் அளவு பதிப்புகள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது P15 ஆனது, இது பொதுவாக கோடெக்ஸ் வாட்டிகானஸோடு ஒத்திருக்கிறது.
கிரேக்க செப்டுவஜின்ட் கோடெக்ஸிலிருந்து நான்கு தாள்களின் சில பகுதிகள், ஆதியாகமத்தின் ஆறு அதிகாரங்களடங்கிய பாகங்களை கொண்டிருக்கின்றன. இந்தக் கோடெக்ஸ், பொ.ச. இரண்டாவது அல்லது மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருப்பதாலும் இந்த அதிகாரங்கள் கோடெக்ஸ் வாட்டிகானசில் இல்லாதிருப்பதாலும், கோடெக்ஸ் சீனாய்ச் சுவடியில் உருகுலைந்திருப்பதாலும் இது முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. நாணற்புல் தாள் 656 என்று எண்ணிடப்பட்ட இந்தத் தாள்கள் இப்பொழுது இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில் பாட்லியன் நூலகத்தில் இருக்கின்றது.
இந்த எல்லா முறிந்த துண்டுகளுமே, இப்பொழுது உள்ள முற்காலத்திய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெரிய வேறுபாடுகளைக் காண்பிப்பதில்லை. ஆகவே பூர்வகாலத்தில் எகிப்தின் நெடுந்தொலைவான பகுதியில் சாதாரண மக்கள் மத்தியில் பைபிள் வாசகம் புழக்கத்தில் இருந்ததை இவை உறுதிசெய்கின்றன. அவை கடவுளுடைய வார்த்தையின் நம்பத்தக்கதன்மையிலும் திருத்தமானத் தன்மையிலும் நம்முடைய விசுவாசத்தை உறுதி செய்கின்றன. (w92 2/15)
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
ஃபேயத்திலிருந்து யோவான் அதிகாரம் 1-ன் சிலப் பகுதிகளைக் கொண்ட நாணற்புல் தாள்