போரினால் பீடிக்கப்பட்ட லைபீரியாவில் கிறிஸ்தவ உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல்
நேரில் பார்த்த ஒருவர் சொன்னபடி
“யானைகள் சண்டைசெய்யும் போது, புல்லும்கூட பாதிப்புக்குள்ளாகிறது.” லைபீரியாவில் அண்மையில் நடைபெற்ற போரின் போது, சம்பவித்தக் காரியத்தை அந்த மேற்கு ஆப்பிரிக்க பழமொழி எத்தனை நேர்த்தியாக தொகுத்துரைக்கிறது! சுமார் 20,000 மக்கள் உயிரிழந்தனர், தேசத்தின் 26 லட்சம் மக்கள் தொகையில் பாதி பேர் நாடிழந்தனர். இழப்புக்கு ஆளானவர்களில் பெரும்பான்மையினர் ராணுவ வீரர்கள் அல்ல; அவர்கள் “புல்லாக”—அப்பாவி ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமாக இருந்தனர்.
1989 டிசம்பரில் போர் துவங்கின போது, லைபீரியாவிலுள்ள சுமார் 2,000 யெகோவாவின் சாட்சிகள், எண்ணிக்கையில் சீரான அதிகரிப்பை அனுபவித்துக்கொண்டு வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியவர்களாக இருந்தனர். அவர்கள் ‘பாதிப்புக்குள்ளான புல்லின்’ பாகமாக இருந்தது வருத்தத்திற்குரியதாகும்.
போர் பரவுதல்
போர், லைபீரியாவின் எல்லை ஓரத்தில் கோட் டி’இவாயராடு துவங்கினது, விரைவில் அகதிகள் தலைநகரமான மன்ரோவியாவுக்கு, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் வசிக்கும் அந்த நகரத்துக்கு தப்பி ஓட ஆரம்பித்தனர். 1990 மார்ச் முதல் மே வரையாக போர் தெற்கு நோக்கி முன்னேறிய போது, யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிமார்கள் முதலில் கான்டோவிலிருந்தும் பின்னர் பான்ஜோவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பட்டணங்களிலிருந்து புறப்பட்ட கடைசியானவர்களில் இவர்கள் இருந்தனர். 1990 ஜூலை 2, இராணுவம் மன்ரோவியாவுக்குள் நுழைந்த போது போர் உச்சக்கட்டத்தை எட்டியது.
தொடர்ந்து வந்த அதிர்ச்சிகளுக்கு எவரும் தயாராக இருக்கவில்லை. மூன்று வெவ்வேறு படைகள், பாரமான பீரங்கிகளோடும் ராக்கெட்டுகளோடும் எறிகுண்டு படகுகளோடும் தெருக்களில் சண்டை முடியும்வரையாக ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். வெறுக்கப்பட்ட ஒரு ஜாதியின் உறுப்பினராக இருந்த காரணத்தால், கொல்லப்படாதவர்கள் இடைவிடாத சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். ஓர் ஆகஸ்ட் மாத இரவில், சேய்ன்ட் பீட்டர்ஸ் லூதரன் சர்ச்சில் தஞ்சம் புகுந்திருந்த 600-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் போர்-வெறிகொண்ட மரண படையணியினால் கொல்லப்பட்டார்கள்.
நூற்றுக்கணக்கானோர் கட்டியிருந்த துணியோடு சண்டையிலிருந்து தப்பி ஓடினர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. அதற்குப் பின் மாதக் கணக்கில் அவர்களால் ஒன்று சேர முடியவில்லை. மன்ரோவியாவின் முழு மக்கள் தொகையும் இடம் மாறிச் சென்று விட்டது போல இருந்தது, காலியான வீடுகளில் இராணுவ வீரர்களும் நகரத்தின் மற்ற இடங்களிலிருந்து தப்பி ஓடிவந்திருந்த அகதிகளும் குடியேறினார்கள். மன்ரோவியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் நாடற்றவர்களானார்கள். பெரும்பாலானவர்கள் அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்த அனைத்தையும், குறைந்தபட்சம் ஓர் உறவினரையும் மரணத்தில் இழந்திருந்தனர். சிலர் இன்னும் அநேகரை இழந்திருந்தனர்.
நிலைமை அத்தனை நெருக்கடியான ஒரு கட்டத்தை எட்டியதால் மற்ற ஐந்து மேற்கு ஆப்பிரிக்க தேசங்கள் சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சியில் இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தனர். அக்டோபர் 1990-ன் முடிவுக்குள் ஏறக்குறைய சண்டை படிப்படியாக முடிந்துவிட்டிருந்தது. ஆனால் பின்னர் பஞ்சத்தின் கோரக்காட்சி எரிந்து போன நகரத்தின் மீது ஒரு பிண முக்காடு போல வந்து தங்கியது. ஒரு கட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட மன்ரோவியாவின் பிள்ளைகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஊட்டமில்லாதவர்களாக, நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் ஒவ்வொரு நாளும் மரித்துக்கொண்டிருப்பதாக நிவாரண ஏஜென்ஸிக்கள் தெரிவித்தன. நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெறுகிறவர்கள், காரியங்களை எவ்வகையிலும் எளிதாக்கிவிடவில்லை; அநேகர் நிவாரணத்துக்கான அரிசியைத் திருடி அதை ஒரு கோப்பையை 20 டாலர்கள் அல்லது அதற்கும் அதிகமாக விற்றனர். நகரின் தண்ணீர், சுகாதாரம் மற்றும் மின்சாரப் பணிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதால், நோய் விசேஷமாக காலரா எப்போதும் இருந்தது.
மன்ரோவியாவில் வாழ்ந்து வந்த சுமார் ஓராயிரம் யெகோவாவின் சாட்சிகளும்கூட பயங்கரமாகக் கஷ்டப்பட்டனர். பெரும்பாலானவர்கள் நகரத்தை விட்டு கிராமப்புறங்களுக்கு ஓடினர், மற்றவர்கள் கானா மற்றும் நைஜீரியாவுக்குக் கப்பல் வழியாகவும், கோட் டி’இவாயர் அல்லது சியர்ரா லியோனுக்கு சாலைவழியாகவும் புறப்பட்டனர். 1990 ஜூலை முதல் டிசம்பர் வரையாக 30-க்கும் மேற்பட்ட சாட்சிகள் உயிரிழந்தனர். சிலர் துப்பாக்கி வெடிப்பினால் கொல்லப்பட்டார்கள், மற்றவர்கள் வியாதி மற்றும் பசியின் விளைவுகளால் மரித்தனர். ஊழிய பயிற்சி பள்ளியின் அமெரிக்க மிஷனரி பட்டதாரிகளான ஆலன் பாட்டேவும் ஆர்தர் லாசனும்கூட கொல்லப்பட்டதாக தெரிகிறது. ஆம், அந்தப் பயங்கரமான சமயத்தின் போது உறவினர்கள் அல்லது நண்பர்களை இழந்தவர்களுக்கு பைபிள்-ஆதாரமுடைய உயிர்த்தெழுதல் நம்பிக்கை எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கிறது!—அப்போஸ்தலர் 24:15.
செயலிலே கிறிஸ்தவ சகோதரத்துவம்
போர் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், நாடிழந்த சாட்சிகள் நகரின் மறுபக்கத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக்காரியாலயத்துக்கும் மிஷனரி இல்லத்திற்கும் புகலிடம் நாடி ஓடினர். அப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் உறுப்பினர்களை இராணுவ வீரர்கள் கொன்றுக்கொண்டிருந்த காரணத்தால் சிலர் பாதுகாப்பை நாடினர். பெரும்பாலானவர்களுக்கு கிளைக்காரியாலயத்தில் வேலைகள் கொடுக்கப்பட்டன, அவர்கள் சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தலில் பெரும் உதவியாக இருந்தனர். மற்றவர்கள் வெளியே நிலைமைகள் அனுமதிக்கையில் அருகாமையிலிருந்த சதுப்பு நிலங்களில் உணவாகக் கொள்ளத்தக்க கீரை வகைகளைத் தேடி கண்டுபிடிக்க அனுப்பப்பட்டனர்.
மக்கள், மிஷனரிகளின் படுக்கை அறைகளில், நடைகூடங்களில், பிரசுரங்கள் அனுப்பிவைக்கப்படும் இலாக்காவில், அலுவலகங்களில், எல்லா இடங்களிலும் உறங்கிக்கொண்டிருந்தனர். நாங்கள் நிலத்தைத் தோண்டி கழிவறைகளை உண்டுபண்ணி அதை பராமரித்தோம். பெண்கள் தாதிமார்களாக சேவிக்க நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் மலேரியா மற்றும் காய்ச்சலுள்ள அநேகரை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். வயிற்றுபோக்கு அடிக்கடி ஒரு பிரச்னையாக இருந்தது.
வெடிகுண்டு உறைவிடங்கள் உட்பட விசேஷமான புகலிட முறைகளை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். போர் செய்கின்ற படையினர் கனமான பீரங்கி குண்டுகளை வெடித்த போது, கிளைக்காரியாலயத்தில் பாதுகாப்பான பகுதிகளுக்குள் விரைந்து செல்ல நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம். எங்களுடைய மூன்றரை மீட்டர் உயர மதில் ஓரளவு பாதுகாப்பளித்த போதிலும், தத்திப்பாயும் துப்பாக்கி குண்டுகளை அணுகவிடாது தடுக்க அது போதுமானதாக இருக்கவில்லை. எங்கள் கூரையின் மீது ஏற்பட்ட எல்லா துளைகளினாலும் அது ஒரு மிளகுதூள் டப்பாவின் வடிவத்தை ஏற்றுக்கொண்டது!
வெறுக்கப்பட்ட ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்த காரணத்தால் அவர்களைக் கொல்ல வகை தேடிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து உடன் சாட்சிகளைக் காப்பாற்ற அநேகர் தங்கள் உயிரை ஆபத்துக்குள்ளாக்கிக் கொண்டனர். ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ சகோதரி இரண்டு வார குழந்தையோடும் தப்பித்துக்கொண்ட தன் பிள்ளைகளோடும் கிளைக்காரியாலயத்துக்கு கண்ணீரோடு வந்து சேர்ந்தாள். அவளுடைய கணவனும், பருவ வயது மகனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். கொலையாளிகள் இவர்களைத் தேடிய போது மற்றொரு சாட்சியால் இவளும் இவளுடைய மற்ற பிள்ளைகளும் ஒளித்துவைக்கப்பட்டார்கள்.
மற்றொரு குடும்பம், முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியினுடைய ஜாதி மக்களால் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டு, அவளோடு கிளைக்காரியாலயத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் நிலைமை மாறி முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியின் உயிர் ஆபத்திலிருந்த போது, குடும்பம் அவளை அவர்களுடைய ஜாதிமக்களிடமிருந்து காப்பாற்றியது.
அடிக்கடி, மிஷனரிமார்கள் கிளைக்காரியாலயத்தின் வாயிலில் ஆயுதந்தரித்து நிற்கும் மனிதர்களோடு பேச்சு கொடுத்துக் கொண்டிருப்பர். கட்டிடத்தை அவர்கள் சோதனை செய்வதை அல்லது கொள்ளையடிப்பதை தவிர்ப்பதற்காக இதைச் செய்தனர். ஒரு சமயம் ஆக்ரோஷத்துடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி குறிப்பிட்ட ஒரு ஜாதியை சேர்ந்த ஆட்களை நாங்கள் ஒளித்து வைத்திருப்பதாக அடித்துக் கூறினர். உள்ளூர் சாட்சிகள் எத்தனை சாந்தமாக நடந்து கொண்டார்கள், அமைதியாக உட்கார்ந்து கொண்டு நாங்கள் கொண்டிருந்த கிறிஸ்தவ கூட்டத்தில் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர்கள் வீட்டை சோதனை போட்டார்கள். அவர்கள் தேடிக் கொண்டிருந்த எதையும் காணவில்லை. அவர்களுடைய எந்த விரோதிகளையும் நாங்கள் மறைத்து வைக்கவில்லை என்பதை, பலாத்காரமாக உள்ளே நுழைந்தவர்களிடம் எங்களால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. கிறிஸ்தவர்களாக நாங்கள் நடுநிலை வகித்தோம்.
தீவிரமாக சண்டை நடந்து கொண்டிருந்த ஒரு சமயம், சாட்சிகளின் ஒரு தொகுதி புற்றுநோயில் கடைசி கட்டத்திலிருந்த ஒரு சகோதரரை சுமந்து கொண்டு கிளைக்காரியாலயத்துக்கு வந்தார்கள். விசனகரமாக விரைவில் அதற்குப் பிற்பாடு அவர் மரித்துப் போனார். வெளி முற்றத்தில் ஒரு குழி தோண்டப்பட்டது. என்னே ஒரு நெகிழச் செய்யும் சவ அடக்க ஆராதனையை நாங்கள் கொண்டிருந்தோம்! சகோதரர் எங்களுடைய மிகச் சிறந்த உள்ளூர் மூப்பர்களில் ஒருவராக அநேக வருடங்களாக உண்மையுடன் சேவித்து வந்தவர். நாடிழந்த சுமார் 100 பேர் துப்பாக்கி வெடி சத்தத்தின் பின்னணியில் ஞாபகார்த்த பேச்சுக்காக முகப்புக்கூடத்தில் கூடிவந்தனர்.
உணவையும் தண்ணீரையும் பெற்றுக்கொள்வது
உணவு பொருட்கள் மிகக் குறைவாக இருந்தன. போர் ஆரம்பிப்பதற்கு முன்பே கூட வியாபாரிகள் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டிருந்தார்கள். இதன் காரணமாக மிகக்குறைவான உணவே நகரத்தில் மிஞ்சியிருந்தது. கிளைக்காரியாலயத்தில் 12 குடும்ப அங்கத்தினர்களையுடைய எங்களுக்கு இருந்த உணவு அநேக மாதங்களுக்கு இருந்திருக்கும். ஆனால் சில சமயங்களில், சாட்சியாக இல்லாதவர்களும் வெகுவாக உதவி தேவைப்பட்டவர்களுமாக இருந்த எங்கள் அயலகத்தார் உட்பட 200 பேர் எங்களோடு இருந்தார்கள். அனைவருக்குமே ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாடு மாத்திரமே இருந்தது. பல மாதங்களுக்கு இப்படிப்பட்ட அளவு சாப்பாட்டில் நாங்கள் உயிர்வாழ்ந்தோம். அனைவரும் பசியாயிருந்தோம். குழந்தைகள் எலும்பும் தோலுமாக தங்கள் பெற்றோரின் கைகளில் பலகீனமாக தொங்கிக் கொண்டிருந்தன.
விரைவில் எங்கள் உணவு தீர்ந்து போய் கொண்டிருந்தது. நாங்கள் எங்கே அதிகம் பெற முடியும்? மன்ரோவியாவில் கடைகள் திறந்தில்லை. ஒருவர் எங்கு பார்த்தாலும் ஆட்கள் பட்டினியில் உணவுக்காக தெருக்களில் அலைந்து கொண்டிருந்தனர். மக்கள் எதையும் சாப்பிட்டார்கள்—நாய்கள், பூனைகள் மற்றும் எலிகள் உட்பட. கிளைக்காரியாலயத்திலிருந்து இரண்டு மிஷனரிமார்கள், சண்டை நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு பட்டணமாகிய கக்காட்டாவுக்குச் செல்ல தீர்மானித்தார்கள்.
தங்களை யெகோவாவின் சட்சிகள் என்று அடையாளங் காட்டிக்கொள்ள அவர்கள் காரின் ஜன்னலில் காவற்கோபுரம் பத்திரிகைகளையும் அறிவிப்புக் குறிப்புகளையும் ஒட்டினார்கள். பல்வேறு சோதனை இடங்களையும் கடந்த பிறகு மார்பில் எறிகுண்டுகளையும் ஒரு பக்கத்தில் சுழல் துப்பாக்கியையும் தொங்கவிட்டுக்கொண்டிருந்த வாட்டசாட்டமான, தடித்த ஒரு மனிதன் இவர்களை நிறுத்தி விசாரித்தார். அவர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகள் என அடையாளப்படுத்தி, உணவு பெறுவதற்காக அவர்கள் கக்காட்டா செல்ல விரும்புவதாக அவரிடம் சொன்னார்கள்.
“என் பின்னே வாருங்கள். நான் இங்குள்ள போர் படைத்தலைவன்,” என்று அவர் சொன்னார். அவர் தன்னுடைய தலைமைக்காரியாலயத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். நாடிழந்த ஆட்களுக்கு அவர்கள் புகலிடம் அளித்துக் கொண்டிருந்ததை அறிய வந்தபோது, ஒவ்வொன்றும் 45 கிலோகிராம் எடையுள்ள 20 அரிசி மூட்டைகளை நம்முடைய கிளைக்கு அனுப்பி வைக்கும்படியாக தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிட்டார்.
கக்காட்டாவில் அவர்கள் சொந்தமாக ஒரு கடை வைத்திருந்த நம்முடைய கிறிஸ்தவ சகோதரர் ஆபிரகாமைக் கண்டார்கள். பவுடர் பால், சர்க்கரை, பெட்டியில் அடைத்த காய்கறிகள் இன்னும் மற்ற அவசியமான பொருட்கள் உட்பட அவர் நமக்காக உணவு பொருட்களை பெட்டிகளில் சேகரித்து வைத்திருந்தார். தங்கள் பயணத்தின் போது சகோதரர்கள் கவனித்துக் கொள்ளப்பட்ட விதத்தைக் காண்பது உண்மையில் அதிசயமாக இருக்கிறது. எங்களுடைய நண்பர்களோடும் அயலகத்தாரோடும் எங்களுடைய உணவைப் பகிர்ந்து கொண்டதற்காக யெகோவா எங்கள் மீது பிரியமாயிருந்திருக்க வேண்டும், ஏனென்றால் எங்கள் குறை இப்பொழுது நிரப்பப்பட்டு வந்தது.—நீதிமொழிகள் 11:25.
மன்ரோவியாவின் அடுத்த பக்கத்தில் மிஷனரி இல்லத்திலிருந்த மிஷனரிமார்களும்கூட நாடிழந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களும்கூட எதிர்பாரா இடங்களிலிருந்து உதவி பெற்றுக் கொண்டனர். உதாரணமாக, சுமார் 16 வருடங்களுக்கு முன்பு தன் பிராந்தியத்தில் ஊழியஞ்செய்த அந்த மிஷனரியை நினைவுகூர்ந்த ஓர் இராணுவ வீரனிடமிருந்து அவர் மூன்று அரிசி மூட்டைகளைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு மிஷனரி சண்டைப்போட்டுக் கொண்டிருந்த கும்பல்களின் ஒரு தலைவரிடம் ஒரு நேர்முக பேட்டிக்குப் பின், நான்கு மூட்டைகளைப் பெற்றுக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நாங்கள் கிளைக்காரியாலயத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது போல தோன்றியது. அவ்விடத்திலுள்ள அநேகருக்கு எங்களுடைய கிணறே குடிநீர் வழங்கிய ஒரே இடமாக இருந்தது. என்றபோதிலும், எங்களுடைய நீர்வாங்கு குழாய்க்கு மின் சக்தி வழங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலைக்கு எரிபொருள் வழங்கீடு தீர்ந்து போக ஆரம்பித்தது. சண்டை நடந்து கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் கிளைக்காரியாலயத்தில் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு மனிதன் எங்களுடைய பிரச்னையைக் குறித்து கேள்விப்பட்ட போது நாங்கள் அவருக்கு செய்தவற்றிற்குப் போற்றுதல் உணர்வின் காரணமாக எரிபொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆகவே எங்கள் தண்ணீர் சப்ளை ஒருபோதும் தீர்ந்து போகவில்லை.
ஆவிக்குரிய பலத்தைக் காத்துக்கொள்ளுதல்
அக்டோபர் 1990-ல் மிஷனரிகள் கடைசியாக லைபீரியாவைவிட்டு வெளியேறும்படி துரிதப்படுத்தப்பட்ட போது எங்கள் மனங்களில் முக்கியமாக இருந்தது, நம்முடைய சகோதர சகோதரிகள் எப்படி சமாளிப்பார்கள் என்பதே. அந்தச் சமயம் முதற்கொண்டு நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அறிக்கைகளிலிருந்து ஊழியத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
போருக்கு முன்னதாக ஊழியத்தில் ஒவ்வொரு சாட்சியும் செலவிட்ட சராசரி மணிநேரம் ஒவ்வொரு மாதமும் 17மணிநேரமாக இருந்தது. என்றபோதிலும் போரின் சமயத்தில் உணவுக்காக எப்போதும் குறுங்காடுகளில் தேடி அலைய வேண்டியிருந்த போதிலும், சில சபைகளில் சாட்சிகள் சராசரியாக ஒவ்வொரு பிரஸ்தாபியும் 20-க்கு மேலான மணிநேரங்களை செலவிட்டார்கள்! மேலுமாக காவற்கோபுரம் பத்திரிகையின் பற்றாக்குறையின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை படிப்புக்குப் பல பிரதிகளைக் கொண்டிருப்பதற்காக நம்முடைய சகோதரிகளில் அநேகர் படிப்பு கட்டுரைகளை பார்த்து கையால் எழுதினார்கள்.
மன்ரோவியாவுக்கு அருகாமையிலிருந்த நான்கு சபைகளும், நகரத்தில் சண்டையிலிருந்து தப்பி ஓடி வந்த சாட்சிகளால் நிறைந்து வழிந்தது. இந்த நண்பர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பி போய் எதையும் எடுத்து வர இயலாதவர்களாக இருந்தபடியால் அவர்கள் உடைமையாகப் பெற்றிருந்த அனைத்தையும் இழந்து போனார்கள். உண்மையில் பல மாதங்களாக அநேகர் தங்களுடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இருந்த பக்கத்துக்குப் போர் எல்லையின் எதிர்பக்கத்திலும்கூட இருந்தனர். மார்ச் 30-ம் தேதி இயேசுவின் மரண ஞாபகார்த்தத்துக்கு இந்த நான்கு சபைகளும் மொத்தமாக 1,473 ஆஜர் எண்ணிக்கையைக் கொண்டிருந்தன.
மன்ரோவியாவில் தங்கியிருந்த 300 சாட்சிகள், ஞாபகார்த்த மாதத்தின் போது துணைப்பயனியர் செய்ய விசேஷித்த முயற்சியை எடுத்தனர். ஒரு சில வாரங்களுக்கு முன்புதானே பசியினால் அவ்வளவு சரீரப்பிரகாரமாய்ப் பலவீனமாக இருந்து நடக்கவும்கூட கஷ்டப்படுகிறவர்களாக இருந்தபோதிலும் அவ்விதமாகச் செய்தனர். ஞாபகார்த்த ஆசரிப்புக்கு ஆட்களை அழைக்க அவர்கள் கடினமாக உழைத்தனர், 1,116 பேர் ஆஜராயிருந்தனர்.
மன்ரோவியாவின் ஒரு கிறிஸ்தவ மூப்பர் விளக்கினார்: “நாங்கள் டிசம்பர் 1990 முதற்கொண்டு மறுபடியுமாக எங்களுடைய ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களைக் கொண்டிருக்க தீர்மானித்தோம். ஆஜராயிருந்தவர்கள் முதலில் 17 பேராக இருந்தனர். பின்னர் அது 40-ஆக உயர்ந்தது. கொஞ்ச காலம் அது 40-ஆகவே இருந்தது. பின்னர் பிப்ரவரி 24-ம் தேதி எங்களுடைய ஆஜர் எண்ணிக்கை 65-ஆகவும், ஒரு வாரத்துக்கும் பின்பு 85-ஆகவும் உயர்ந்தது. மேலுமாக மார்ச் மாதம் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு சபையிலுள்ள அனைவருமே பிரதிபலித்தனர்.
மற்றவர்கள்பேரில் அக்கறை
“போரின் சமயத்தில் எங்களுடைய சர்ச் சகோதரர்கள் ஒருவரையொருவர் [எதிர் ஜாதியிலிருப்பவர்களை] கொலை செய்வதில் சுறுசுறுப்பாயிருந்தார்கள்,” என்பதாக சாட்சியாக இல்லாத ஓர் உறவினர் ஒரு சாட்சியிடம் சொன்னார். “உடன் விசுவாசிகளுக்காக அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.” ஆனால் யெகோவாவின் மக்களுடைய விஷயத்தில் நிலைமை எத்தனை வித்தியாசமாக இருந்தது!
உதாரணமாக, சுற்றுப்புறத்து நிவாரண குழுவின் தலைவர் 1991 பிப்ரவரியில், கிளைக்காரியாலயத்தைப் பராமரித்து வந்த சகோதரர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எங்களுடைய ஜனங்களுக்கு உணவு விநியோக சமயத்தில் எங்களுக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் சரக்கு சேமிப்பிட வசதிக்காக உங்களுக்கும் உங்களுடைய நிறுவனத்துக்கும் நன்றியையும் போற்றுதலையும் இக்கடிதம் தெரிவித்துக் கொள்கிறது. உங்கள் மனிதாபிமான செயல் ஒரு சமுதாயமாக சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் கொண்டுவர உங்களுடைய மனவிருப்பத்தைக் காண்பிக்கிறது. உங்கள் நற்பணிகளை தயவு செய்து தொடர்ந்து செய்து வாருங்கள்.”
மற்ற தேசங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்கள் லைபீரிய சகோதரர்களின் தேவைகளுக்கு வேகமாக பிரதிபலித்தனர். மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியர்ரா லியோன் மற்றும் கோட் டி’இவாயரிலிருந்தும் ஐரோப்பாவிலுள்ள நெதர்லாந்து மற்றும் இத்தாலியிலிருந்தும் ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வெறுக்கப்பட்ட ஒரு ஜாதியை சேர்ந்தவளாக இருந்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு தாயின் சிறு பெண், அவள் பெற்றுக்கொண்ட உதவிக்காக தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாள். அவள் எழுதினாள்: “நீங்கள் எனக்கு அனுப்பிய எல்லா பொருட்களுக்கும் மிகவும் நன்றி. என் அம்மா என் அருகில் இருப்பது போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். நான் அவர்களையும் என் தம்பியையும் போரில் இழந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கும்படி நான் யெகோவாவிடம் கேட்கிறேன். எனக்கு 11 வயதாகிறது.”
மேலுமாக ஆறு பேருள்ள ஒரு குடும்பத்தைக் கொண்ட ஒரு சகோதரர் தான் பெற்றுக்கொண்ட உதவிக்காக நன்றியைத் தெரிவித்து எழுதினார். தன்னுடைய ஜாதியின் காரணமாக அவருடைய மனைவி பல மாதங்களாக ஒளிந்துகொண்டிருக்க வேண்டியிருந்தது. “கொள்ளை அடித்து அவர்கள் சொத்துக்களை விற்பதற்காக நாங்கள் ஜனங்களின் வீடுகளை உடைத்துக் கொண்டு செல்லவில்லை. எங்களுடைய அயலகத்தாரைப் போல் இல்லாமல் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சாப்பிட ஏதாவது இருக்கிறது, ஏனென்றால் எங்களுக்கிருக்கும் கொஞ்சத்தை எவ்வாறு ஞானமாக உபயோகிப்பது என்பது எங்களுக்குத் தெரியும். இதை நாங்கள் யெகோவாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்.”
கோட் டி’இவாயரிலிருந்து தன் மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் தப்பி ஓடி வந்த ஒரு சகோதரரின் மனநிலையும்கூட வெகுவாக மனதை நெகிழ வைக்கிறது. அவர் நேர்த்தியான ஒரு வீட்டை பின்னால் விட்டுவந்திருந்தார். அதன் பின் இது தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும் தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, தன் வீட்டை இழந்தது அல்ல, ஆனால் தன் தேவராஜ்ய நூலகத்தை இழந்ததே என்று சொன்னார்!
மதிப்புள்ள பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டது
பின்னோக்கிப் பார்க்கையில், யெகோவா எங்களுக்கு அநேக மதிப்புள்ள பாடங்களைக் கற்பித்ததை என்னால் போற்றமுடிகிறது. தங்கள் உத்தமத்தைக் காத்து பிழைத்த அநேகரையும் தங்கள் உத்தமத்தைக் காத்து மரித்த சிலரையும் தனிப்பட்ட வகையில் அறிந்து கொண்ட போது, பவுல் அப்போஸ்தலனின் சிந்தையைக் கொண்டிருப்பதனுடைய முக்கியத்துவத்தை நான் மதித்துணர கற்றுக்கொண்டேன். அவர் எழுதினார்: “நாம் பிழைத்தாலும் யெகோவாவுக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் யெகோவாவுக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் யெகோவாவுடையவர்களாயிருக்கிறோம்.”—ரோமர் 14:8.
மற்றொரு நீண்ட-கால மிஷனரி இவ்விதமாக குறிப்பிட்டார்: “இவை அனைத்தின் மூலமாகவும், யெகோவா ஒரு ஈடற்ற சகாயர் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். பவுல் சொன்ன வண்ணமாகவே: “நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயமாயிருந்தோம்.” (2 கொரிந்தியர் 1:9; சங்கீதம் 30:10) மேலுமாக அவர் சொன்னார்: “யெகோவாவின் மக்கள் இயேசு உயர்த்திக் காண்பித்த சுய-தியாக அன்பைத் தரித்துக் கொண்ட ஒரு சகோதரத்துவமாக இருக்கிறார்கள் என்பதை போர் எங்களுக்கு மிகத் தெளிவாக்கியது.”—யோவான் 13:35.
அக்டோபர் 1990-ல் சண்டையின் சமயத்தில் தேசத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த மிஷனரிகளாகிய எங்களுக்கு லைபீரிய சகோதரியிடமிருந்து வந்த கடிதம், நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பலத்தை விளக்குகிறது. “நீங்கள் அனைவரும் லைபீரியாவுக்கு விரைவில் திரும்பி வரவேண்டும், நாம் ஒரு அசெம்பிளியைக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் வேண்டுதலாக இருக்கிறது,” என்று எழுதினாள். “ஓ! அந்த நாளுக்காக என்னால் காத்திருக்க முடியாது. அந்த எண்ணமே என்னை சந்தோஷிக்கச் செய்கிறது.”
ஆம், லைபீரியாவில் கிறிஸ்தவ வேலை வழக்கமாக முன்போல் முழுமையாக செய்யப்படுவதைக் காண்பது ஆச்சரியமாய் இருக்கும். நம்முடைய சகோதரி சொன்னது சரியே; மிஷனரிமார்களும் மற்ற அகதிகளும் திரும்பி வந்த பிறகு மன்ரோவியாவில் முதல் அசெம்பிளி சந்தோஷமான ஒன்றாக இருக்கும். அதைக்குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை! (w92 1/1)
[பக்கம் 27-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சியர்ரா லியோன்
கினி
கோட் டி’வாயர்
லைபீரியா
கான்டோ
பான்ஜோ
கக்கட்டா
மன்ரோவியா
அட்லான்டிக் பெருங்கடல்
[பக்கம் 28-ன் படம்]
கிளைக்காரியாலயத்தில் போரின் சமயத்தில் நாடிழந்த சாட்சிகளின் பிள்ளைகள்
[பக்கம் 31-ன் படம்]
கோட் டி’இவாயரில் சாட்சிகளால் நன்கொடையாக அளிக்கப்பட்ட துணிமணிகளை லைபீரிய சாட்சிகள் வகைப்படுத்திப் பிரிக்கிறார்கள்