தன்னடக்கம்—ஏன் அவ்வளவு முக்கியம்?
“உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே ஒழுக்கத்தையும், ஒழுக்கத்தோடே அறிவையும், அறிவோடே, தன்னடக்கத்தையும் கூட்டி வழங்குங்கள்.”—2 பேதுரு 1:5, 6, NW.
1. பத்தொன்பதாவது நூற்றாண்டில், உடல் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் என்ன குறிப்பிடத்தக்க செயல் நடப்பித்துக்காட்டப்பட்டது?
சந்தேகமின்றி, உடல்கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் அதிக வியப்பூட்டும் செயல்களில் ஒன்றை பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சார்லஸ் ப்ளான்டின் செய்து காட்டினார். அறிக்கை ஒன்றின்படி அவர் நயகரா நீர்வீழ்ச்சியை பல தடவைகள் குறுக்கே கடந்து சென்றிருக்கிறார். முதல் முறையாக 1859-ல், தண்ணீருக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் 340 மீட்டர்கள் நீளமுள்ள கழைக்கூத்தாடி நடக்கும் கயிறு மீது நடந்து சென்றார். அதற்குப் பின் ஒவ்வொரு சமயமும் வித்தியாசமான தன் திறமைகளை வெளிப்படுத்தி அதைச் செய்தார்: கண்ணைக் கட்டிக்கொண்டு, ஒரு சாக்குப் பையில், ஒரு சக்கர வண்டியை உருட்டிக்கொண்டு, தாவடிக்கோல் மீது உயர்த்தப்பட்ட நிலையில், முதுகில் ஒரு மனிதனைச் சுமந்துக்கொண்டு. மற்றொரு அமைப்பில், நிலத்திலிருந்து 52 மீட்டர்கள் உயரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றின் மீது தாவடிக் கோல் மீது உயர்த்தப்பட்ட நிலையில் குட்டிக்கரணங்கள் போட்டுக் காண்பித்தார். இப்படி ஒரு சரீர சமநிலையைக் காத்து வருவதற்கு உச்சஅளவில் மிகுதியான உடல் கட்டுப்பாடு தேவையாக இருந்தது. அதற்கு ஈடாக புகழும் செல்வமும் பலனாக கிடைத்தது.
2. உடல் கட்டுப்பாட்டை தேவைப்படுத்தும் வேறு என்ன வகையான செயல்கள் இருக்கின்றன?
2 வெகு சிலரே அப்படிப்பட்ட செயல்களைச் செய்வதற்கு அருகாமையில் வரமுடிந்தாலும், வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டுள்ள திறமைகளை அப்பியாசிப்பதில் அல்லது விளையாட்டுகளில், உடல் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் நம் அனைவருக்கும் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, காலஞ்சென்ற பிரபல பியானோ இசைக்கலைஞர் வால்டிமர் ஹோரோவிட்ஸின் இசை ஞானத்தை விவரிக்கையில், ஓர் இசைப்பாடகர் இவ்வாறு சொன்னார்: “என்னை மிகவும் கவர்ந்தது அந்த முழுக்கட்டுப்பாட்டு உணர்வாகும். . . . நம்புவதற்கரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகின்ற ஓர் உணர்வு.” ஹோரோவிட்ஸைப் பற்றிய மற்றொரு அறிக்கை, “அதிவேகமாக நகரும் கைவிரல்கள் எட்டுப் பத்தாண்டுகளாக முழுநிறைவான கட்டுப்பாட்டில்” இருந்ததைப் பற்றி சொன்னது.
3. (எ) அதிகத்தை தேவைப்படுத்துகின்ற கட்டுப்பாடு என்ன? அது எவ்வாறு விளக்கப்படுகிறது? (பி) தன்னடக்கம் என்பதாக பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் பொருள் என்ன?
3 இப்படிப்பட்டத் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு மிகுதியான முயற்சி தேவைப்படுகிறது. என்றபோதிலும், தன்னடக்கம் இதைவிட அதிக முக்கியமானதாகவும் விசேஷ முயற்சியைத் தேவைப்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இது, “ஒருவருடைய சொந்த மனகிளர்ச்சிகள், உணர்ச்சிகள் அல்லது ஆசைகள் மீது அப்பியாசிக்கப்படும் ஒரு கட்டுப்பாடு” என்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், 2 பேதுரு 1:6-லும் மற்ற இடங்களிலும் “இச்சையடக்கம்” [தன்னடக்கம், NW] என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை “தன்னுடைய ஆசைகளையும், காம உணர்ச்சிகளையும், விசேஷமாக சிற்றின்ப வேட்கையையும் அடக்கி ஆளும் ஒருவருடைய ஒழுக்கம்” என்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்டவரின் தன்னடக்கம், “மனித சாதனையின் உச்சக்கட்டம்” என்பதாகவும்கூட அழைக்கப்பட்டுள்ளது.
தன்னடக்கம் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது
4. தன்னடக்கமின்மை, என்ன மோசமான கனிகளை அறுவடை செய்திருக்கிறது?
4 தன்னடக்கமின்மை, என்னே விளைவுகளை அறுவடை செய்திருக்கிறது! இன்று உலகில் அநேக தொந்தரவுகளுக்கு காரணம் தன்னடக்கமின்மையே. நிச்சயமாகவே “கையாளுவதற்கு கடினமான காலங்களாக இருக்கும்” “கடைசி நாட்களில்” நாம் இருக்கிறோம். மனிதர்கள் பேராசையின் காரணமாக “இச்சையடக்கமில்லாதவர்களாய்” [தன்னடக்கமில்லாதவர்களாய், NW] இருக்கிறார்கள். இதில் ஒருவகை, “தேவபிரியராயிராமல் சுகபோகபிரியராய்” இருப்பதாகும். (2 தீமோத்தேயு 3:1–5) பெரும்பாலும் மிக மோசமான தவறான நடத்தையின் காரணமாகவே, கடந்த ஊழிய ஆண்டில் 40,000-க்கும் மேற்பட்ட ஆட்கள், கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பது, மிகைப்படுத்தப்படாத இந்த உண்மையை நமக்கு வலிமையாக தெளிவுபடுத்துகிறது. பெரும்பாலும் பால் சம்பந்தப்பட்ட ஒழுக்கங் கெட்ட நடத்தைக்காக, கடிந்து கொள்ளப்பட்ட அநேகரையும் இவர்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்துக்கும் காரணம் தன்னடக்கத்தை அப்பியாசிக்கத் தவறியதே ஆகும். நீண்ட காலமாக மூப்பர்களாக இருந்திருக்கும் சிலர் அதே காரணத்துக்காகவே தங்களுடைய எல்லா சிலாக்கியங்களையும் இழந்திருக்கின்றனர்.
5. தன்னடக்கத்தின் முக்கியத்துவம் எவ்வாறு விளக்கப்படலாம்?
5 தன்னடக்கத்தின் முக்கியத்துவம் ஒரு மோட்டார் வண்டியின் உதாரணம் கொண்டு விளக்கப்படலாம். அதற்கு, அதனை இடம் பெயர்ந்து செல்ல வைக்கும் நான்கு சக்கரங்களும், அந்தச் சக்கரங்களை அதிவேகமாக திருப்பக்கூடிய ஓர் ஆற்றல்மிக்க என்ஜினும், அவைகளை நிறுத்தக்கூடிய சக்கரத்தடுக்குகளும் இருக்கின்றன. என்றபோதிலும், இந்தச் சக்கரங்கள் எங்கே போகும், அவை எத்தனை வேகமாக திரும்பும், எப்போது நிற்கும் போன்றவற்றை வழித்திருப்பும் இயக்குபிடி, முடுக்குப்பொறி மற்றும் சக்கரத்தடுக்குகளின் கட்டுப்படுத்தப்பட்ட உபயோகம் மூலம் தீர்மானிப்பதற்கு ஓட்டுநரின் இருக்கையில் எவராவது ஒருவர் இல்லாவிடில் விபத்து ஏற்படலாம்.
6. (எ) அன்பைப் பற்றிய என்ன தராதரம் தன்னடக்கத்துக்கும்கூட பொருந்தும்? (பி) மேலுமான என்ன புத்திமதியை நாம் மனதில் வைக்க வேண்டும்?
6 தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தை அதிகமாக அழுத்திக்கூறுவது கடினமாக இருக்கும். அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 13:1–3-ல் சொன்ன காரியம் தன்னடக்கத்தைப் பற்றியும் சொல்லப்படலாம். பொது பேச்சாளர்களாக நாம் எவ்வளவு சரளமாகப் பேசுகிறவர்களாய் இருந்தபோதிலும், நல்ல படிப்பு பழக்கங்களின் மூலமாக நாம் எவ்வளவு அறிவையும் விசுவாசத்தையும் பெற்றுக்கொண்டிருந்த போதிலும் மற்றவர்களுக்கு பிரயோஜனமுண்டாக நாம் என்ன கிரியைகளைச் செய்துகொண்டிருந்த போதிலும் நாம் தன்னடக்கத்தை அப்பியாசிக்காவிட்டால், அவை அனைத்தும் வீணே. பவுலின் வார்த்தைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.” [தன்னடக்கமாயிருப்பார்கள், NW] (1 கொரிந்தியர் 9:24, 25) 1 கொரிந்தியர் 10:12-லுள்ள பவுலின் எச்சரிப்பு, எல்லா காரியங்களிலும் தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்கிறது: “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன்.”
எச்சரிப்பான முன்மாதிரிகள்
7. (எ) தன்னடக்கமின்மை எவ்விதமாக மனிதகுலத்தை அதன் கீழ்முகமான போக்கில் ஆரம்பித்து வைத்தது? (பி) தன்னடக்கமின்மைக்கு வேறு என்ன பூர்வ நாளைய உதாரணங்களை வேதாகமம் கொடுக்கிறது?
7 விவேகத்துக்குப் பதிலாக உணர்ச்சி தன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்த அனுமதித்ததன் மூலம், ஆதாம் தன்னடக்கத்தை அப்பியாசிக்கத் தவறினான். இதன் விளைவாக, “பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது.” (ரோமர் 5:12) தன்னடக்கமின்மையின் காரணமாகவே முதல் கொலையும்கூட நிகழ்ந்தது. ஏனென்றால், காயீனை யெகோவா தேவன் இவ்விதமாக எச்சரித்திருந்தார்: ‘உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? பாவம் வாசற்படியில் படுத்திருக்கும், நீ அதை அடக்கி ஆளுவாயோ?’ காயீன் பாவத்தை அடக்கி ஆளாத காரணத்தால், அவன் தன் சகோதரன் ஆபேலை கொலை செய்தான். (ஆதியாகமம் 4:6–12) லோத்துவின் மனைவியும் தன்னடக்கத்தை அப்பியாசிக்கத் தவறினாள். திரும்பிப் பார்ப்பதற்கிருந்த சோதனையை அவளால் எதிர்க்க முடியவில்லை. தன்னடக்கமின்மை அவளுக்கு என்ன இழப்பை ஏற்படுத்தியது? ஏன், அவளுடைய ஜீவனையே!—ஆதியாகமம் 19:17, 26.
8யாக்கோபின் முதற்பேறான குமாரன் ரூபன், தன்னடக்கமின்மையின் காரணமாக தன் சேஷ்ட புத்திர சுதந்தரத்தை இழந்தான். யாக்கோபின் மறுமனையாட்டிகளில் ஒருத்தியோடு உடலுறவு கொள்வதன் மூலம் அவன் தன் தகப்பனின் மஞ்சத்தை தீட்டுப்படுத்தினான். (ஆதியாகமம் 35:22; 49:3, 4; 1 நாளாகமம் 5:1) இஸ்ரவேலர் முறுமுறுத்து, முறையிட்டு, கலகஞ்செய்து மோசேயின் பொறுமையைச் சோதித்த போது, அவர் கோபங்கொண்டதால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கும் வெகுவாக வாஞ்சிக்கப்பட்ட அந்தச் சிலாக்கியம் மறுக்கப்பட்டார். (எண்ணாகமம் 20:1–13; உபாகமம் 32:50–52) ‘கடவுளுடைய சொந்த இருதயத்துக்கு ஏற்ற’ மனிதனாக இருந்த உண்மையுள்ள தாவீது ராஜாவும்கூட, ஒருசமயம் தன்னடக்கமின்மையின் காரணமாக வினைமையான தொந்தரவுக்குள் சிக்கிக்கொண்டார். (1 சாமுவேல் 13:14; 2 சாமுவேல் 12:7–14) இப்படிப்பட்ட உதாரணங்கள் நாம் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது அவசியம் என்ற பயனுள்ள எச்சரிப்புகளைக் கொடுக்கின்றன.
நாம் எதை அடக்குவது அவசியம்
9. தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பிக்கும் சில வேதவசனங்கள் யாவை?
9 முதலாவதாக, தன்னடக்கம், நம்முடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் உட்படுத்துகிறது. இவை அடிக்கடி வேதாகமத்தில் “இருதயம்,” “உள்ளந்திரியங்கள்” போன்ற அடையாள அர்த்தமுள்ள வார்த்தைகளினால் குறிப்பிடப்படுகின்றன. நாம் நம்முடைய மனங்களை எதில் தரித்திருக்க அனுமதிக்கிறோமோ அதுவே யெகோவாவைப் பிரியப்படுத்தும் முயற்சியில் நமக்கு உதவியாகவோ அல்லது இடைஞ்சலாகவோ இருக்கிறது. உண்மையுள்ளவைகளையும், ஒழுக்கமுள்ளவைகளையும், கற்புள்ளவைகளையும் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும்படியாக பிலிப்பியர் 4:8-ல் காணப்படும் புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டுமானால் தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது ஜெபத்தில் இதுபோன்ற விருப்பத்தை வெளியிட்டார்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, [யெகோவாவே, NW] . . . என் இருதயத்தின் தியானம் உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” (சங்கீதம் 19:14) பத்தாவது கற்பனை—பிறனுக்குரிய எதையும் இச்சியாதிருப்பது—ஒருவரின் சிந்தனைகளை அடக்குவதைத் தேவைப்படுத்தியது. (யாத்திராகமம் 20:17) இயேசு பின்வருமாறு சொன்ன போது நம்முடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் அடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பித்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”—மத்தேயு 5:28.
10. நம்முடைய பேச்சை அடக்குவதனுடைய முக்கியத்துவத்தை என்ன பைபிள் வசனங்கள் அழுத்திக்கூறுகின்றன?
10 தன்னடக்கம் நம்முடைய வார்த்தைகளையும், நம்முடைய பேச்சையும் கூட உட்படுத்துகிறது. உண்மையில் நம்முடைய நாவைக் கட்டுப்படுத்துமாறு நமக்கு புத்திமதிக் கூறும் வசனங்கள் மிகப் பலவாகும். உதாரணமாக: “தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.” (பிரசங்கி 5:2) “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” (நீதிமொழிகள் 10:19) “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். . . . சகலவிதமான கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” புத்தியீனமான பேச்சையும் பரியாசத்தையும் விட்டுவிலகும்படி பவுல் தொடர்ந்து புத்திமதி கூறுகிறார்.—எபேசியர் 4:29, 31; 5:3, 4.
11. நாவைக் கட்டுப்படுத்தும் பிரச்னையை யாக்கோபு எவ்வாறு கையாளுகிறார்?
11 இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு கட்டுப்படுத்தப்படாத பேச்சை கண்டனம் செய்து, நாவை அடக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் காண்பிக்கிறார். அவர் சொல்கிறார்: “அப்படியே, நாவானது சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் [கெஹன்னாவினால், NW] கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.”—யாக்கோபு 3:5–10.
12, 13. நம்முடைய செயல்களையும் நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காண்பிக்கும் சில வேதவசனங்கள் யாவை?
12 நிச்சயமாகவே தன்னடக்கம் நம்முடைய செயல்களை உட்படுத்துகிறது. தன்னடக்கம் வெகுவாக தேவைப்படும் ஒரு பகுதி எதிர் பாலாரோடு கொள்ளும் நம்முடைய உறவுகள் சம்பந்தப்பட்டவையாகும். கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை: “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.” (1 கொரிந்தியர் 6:18, புதிய சர்வதேசீய மொழிபெயர்ப்பு) கணவன்மார்கள் பால் சம்பந்தப்பட்ட விருப்பங்களைத் தங்களுடைய மனைவிமார்களிடம் மாத்திரமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் இவ்விதமாகச் சொல்லப்படுகிறார்கள்: “உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம் பண்ணு.” (நீதிமொழிகள் 5:15–20) “வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” என்று நாம் நேரடியாகச் சொல்லப்படுகிறோம். (எபிரெயர் 13:4) விவாகமில்லாதிருக்கும் வரத்தை வளர்த்துக் கொள்பவர்களுக்குத் தன்னடக்கம் விசேஷமாக தேவைப்படுகிறது.—மத்தேயு 19:11, 12; 1 கொரிந்தியர் 7:37.
13 பொதுவாக “பொன்விதி” என்றழைக்கப்படும் விதியை இயேசு கொடுக்கையில், உடன் மானிடரிடமாக நம்முடைய செயல்களைப் பற்றிய இந்த முழு விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12) நம்முடைய தன்னல மனச்சாய்வுகளோ அல்லது புறம்பேயிருந்து வரும் அழுத்தங்களோ அல்லது சோதனைகளோ, மற்றவர்கள் நம்மை நடத்த விரும்பும் விதத்திலிருந்து வித்தியாசமாக மற்றவர்களை நடத்துவதற்கு அனுமதியாமலிருப்பதற்கு தன்னடக்கம் அவசியமாயிருக்கிறது.
14. உணவையும் பானத்தையும் குறித்து கடவுளுடைய வார்த்தை என்ன புத்திமதியைக் கொடுக்கிறது?
14 அடுத்து, உணவையும் பானத்தையும் பற்றிய விஷயத்தில் தன்னடக்கம் வருகிறது. கடவுளுடைய வார்த்தை ஞானமாக நமக்கு புத்திமதி கூறுவதாவது: “மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.” (நீதிமொழிகள் 23:20) குறிப்பாக நம்முடைய நாளைக் குறித்து இயேசு இவ்விதமாக எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும் நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34, 35) ஆம், தன்னடக்கம், நம்முடைய சிந்தனைகளையும் நம்முடைய உணர்ச்சிகளையும், நம்முடைய வார்த்தைகளையும், நம்முடைய செயல்களையும் உட்படுத்துகிறது.
தன்னடக்கம் ஏன் இப்பேர்ப்பட்ட ஒரு சவாலாக இருக்கிறது
15. கிறிஸ்தவர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதற்கு எதிராக சாத்தானின் எதிர்ப்பு மெய்யானது என்பதை வேதவசனங்கள் எவ்வாறு காண்பிக்கின்றன?
15 தன்னடக்கம் எளிதில் வருவதில்லை, ஏனென்றால் எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்த வண்ணமாகவே, நாம் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதற்கு எதிராக நமக்கு மூன்று ஆற்றல்வாய்ந்த சக்திகள் அணிவகுத்து நிற்கின்றன. முதலாவதாக, சாத்தானும் அவனுடைய பேய்களும் இருக்கின்றார்கள். அவை மெய்யாக இருப்பதைக் குறித்ததில் எந்த சந்தேகத்தையும் வேதவசனங்கள் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாகவே, யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்கப்புறப்பட்டுச் செல்லுமுன் “சாத்தான் அவனுக்குள் புகுந்தான்” என்பதாக நாம் வாசிக்கிறோம். (யோவான் 13:27) அப்போஸ்தலனாகிய பேதுரு அனனியாவை இவ்விதமாகக் கேட்டார்: “பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?” (அப்போஸ்தலர் 5:3) வெகு பொருத்தமாகவே, பேதுருவும்கூட இவ்வாறு எச்சரித்தார்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”—1 பேதுரு 5:8.
16. இந்த உலகத்தின் சம்பந்தமாக, கிறிஸ்தவர்கள் ஏன் தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டும்?
16 தன்னடக்கத்தை வெளிப்படுத்தும் தங்களுடைய முயற்சியில் கிறிஸ்தவர்கள் “பொல்லாங்கனுக்குள் (பிசாசாகிய சாத்தான்) கிடக்கும்” இந்த உலகத்தோடு போராட வேண்டும். இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” நாம் தன்னடக்கத்தை அப்பியாசித்து, உலகத்தை நேசிப்பதற்கு நமக்கு இருக்கும் எந்த ஒரு மனச்சாய்வையும் நாம் பலமாக எதிர்த்தாலொழிய, நாம் அதனுடைய செல்வாக்குக்கு இணங்கிவிடுவோம், இதுவே பவுலோடு ஒரு சமயம் உடன்வேலையாளாக இருந்த தேமாவுக்கு சம்பவித்தது.—1 யோவான் 2:15–17; 5:19; 2 தீமோத்தேயு 4:10.
17. தன்னடக்கம் சம்பந்தமாக என்ன பிரச்னையோடு நாம் பிறக்கிறோம்?
17 கிறிஸ்தவர்களாக, நாம் நம்முடைய சொந்த சுதந்தரிக்கப்பட்ட மாம்ச பலவீனங்களோடும் குறைபாடுகளோடும் வெற்றிகரமாக போராட வேண்டுமாயின் தன்னடக்கம் நமக்கு அவசியம். “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்ற உண்மையை நாம் தட்டிக்கழித்துவிட முடியாது. (ஆதியாகமம் 8:21) தாவீதைப் போல ‘நாம் துர்க்குணத்தில் உருவானோம், நம் தாய் நம்மைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.’ (சங்கீதம் 51:5) புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தன்னடக்கத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அதற்கு ஏதாவது தேவைப்படும்போது, அதைப் பெற்றுக்கொள்ளும்வரையில் அது அழுதுகொண்டே இருக்கிறது. பிள்ளை வளர்ப்பு பற்றிய ஓர் அறிக்கை இவ்விதமாகச் சொல்லுகிறது: “பிள்ளைகள் பெரியவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு வழியில் சிந்திக்கிறார்கள். பிள்ளைகள் தன்னலம் கருதுகிறவர்களாகவும் மற்றொருவரின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்க இயலாதவர்களாயும்” இருப்பதன் காரணமாக மிகவும் நியாயமான தூண்டுதலையும் ஏற்கும் பக்குவமில்லாதவர்களாக இருக்கின்றனர். மெய்யாகவே, “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்றாலும் “தன்டனையின் பிரம்பு” பயன்படுத்தப்படும்போது, அவன் கட்டாயமாக கீழ்ப்படிய வேண்டிய விதிமுறைகள் உண்டு என்பதையும் சுயநலம் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் படிப்படியாக கற்றறிகிறான்.—நீதிமொழிகள் 22:15.
18 ஆம், தன்னடக்கத்தை அப்பியாசிப்பது என்பது வருகையில், நம்முடைய உடன்பிறந்த தன்னல மனச்சாய்வுகள் நமக்கு ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது. அந்த மனச்சாய்வுகள் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தில் தங்கியிருக்கின்றன, இதைக் குறித்து இயேசு சொன்னதாவது: “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.” (மத்தேயு 15:19) இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” (ரோமர் 7:19, 20) என்றபோதிலும் இது நம்பிக்கையற்ற ஒரு நிலைமையாக இருக்கவில்லை. ஏனென்றால் பவுல் இவ்விதமாகவும்கூட எழுதினார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவது தன்னடக்கத்தை அப்பியாசிப்பதைத் தேவைப்படுத்தியது.—1 கொரிந்தியர் 9:27.
19. பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தியதாக ஏன் சொல்லமுடியும்?
19 தன்னடக்கத்தை அப்பியாசிப்பது உயர் இரத்த அழுத்தம், மோசமான நரம்புகள், தூக்கமின்மை, தலைவலிகள், செரிமானமின்மை போன்ற அநேக சரீர நிலைமைகளால் சிக்கலாக்கப்படுவதன் காரணமாக, பவுல் சரியாகவே தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தியாகச் சொல்லமுடியும். அடுத்தக் கட்டுரையில், தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவக்கூடிய பண்புகளையும் உதவிகளையும் நாம் சிந்திப்போம். (w91 11/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻தன்னடக்கம் ஏன் முக்கியமாயிருக்கிறது?
◻தன்னடக்கமின்மையின் காரணமாக, இழப்பை அனுபவித்த சிலருடைய உதாரணங்கள் யாவை?
◻நாம் என்ன பகுதிகளில் தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டும்?
◻என்ன மூன்று சத்துருக்கள், தன்னடக்கத்தை அப்பியாசிப்பதை நமக்குக் கடினமாக்கிவிடுகின்றன?
8. தன்னடக்கத்தின் அவசியத்தின் சம்பந்தமாக பூர்வ காலங்களில் வாழ்ந்த எந்த மூன்று மனிதர்களின் அனுபவங்கள் நமக்கு எச்சரிப்புகளை கொடுக்கின்றது?
18. (எ) இயேசுவின் பிரகாரம், அடையாள அர்த்தமுள்ள இருதயத்தில் என்ன மனச்சாய்வுகள் தங்கியிருக்கின்றன? (பி) பவுல் தன்னடக்கத்தை அப்பியாசிக்கும் பிரச்னையைக் குறித்து உணர்வுள்ளவராக இருந்தார் என்பதை அவருடைய எந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன?
[பக்கம் 8-ன் படத்தில் சார்லஸ் ப்ளான்டின்]
[படத்திற்கான நன்றி]
Historical Pictures Service
[பக்கம் 10-ன் படம்]
உணவு மற்றும் பானத்தின் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது அவசியம்
[பக்கம் 11-ன் படம்]
தன்னடக்கம், தீங்கிழைக்கும் வீண்பேச்சிலிருந்து விலகியிருக்க நமக்கு உதவிசெய்யும்