யெகோவா போதித்திருக்கிறபடி நடவுங்கள்
“கர்த்தாவே, (யெகோவாவே, NW) உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.—சங்கீதம் 86:11.
1, 2. இரத்தமேற்றுதல்களை ஏற்க மறுக்கும்படிக்கு யெகோவாவின் சாட்சிகளை உந்துவிப்பது என்ன?
“இரத்தப் பொருட்களை ஏற்க மறுப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சரியாகவே இருக்கக்கூடும், ஏனென்றால் முக்கியமாக நோய் உண்டுபண்ணும் ஏஜென்டுகள் ஏற்றப்பட்ட இரத்தத்தின் மூலமாக கடத்தப்படலாம் என்பது உண்மையே.”—1987, டிசம்பர் 15, பிரெஞ்சு மருத்துவ தினசரி, லெ குவாடிடீன் டியு மெடிஸின் (Le Quotidien du Medecin).
2 அந்தக் குறிப்பை வாசிக்கும் சிலர், இரத்தமேற்றுதல் எத்தனை ஆபத்தானதாக, உயிரைப் போக்கவல்லதாகவும்கூட இருக்க முடியும் என்பது பொதுவாக அறியப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றுதலை ஏற்க மறுத்திருப்பது வெறும் குருட்டு வெற்றியே என்பதாக நினைத்திருக்கக்கூடும். ஆனால் இரத்தத்தின் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் எடுத்திருக்கும் நிலைநிற்கை வெறும் எதிர்பாரா நிகழ்ச்சியாகவோ அல்லது ஏதோ ஒரு விநோதமான மத உட்பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாக, இரத்தம் பாதுகாப்பானது இல்லை என்ற பயத்திலிருந்து தோன்றிய ஒரு நிலைநிற்கையாகவோ இல்லை. மாறாக, சாட்சிகள், தங்கள் மகத்தான போதகராகிய கடவுளுக்கு முன்னால் கீழ்ப்படிதலுடன் நடப்பதற்குத் தீர்மானமாக இருப்பதன் காரணமாக இரத்தமேற்க மறுக்கிறார்கள்.
3. (எ) யெகோவா மீது சார்ந்திருப்பதைக் குறித்து தாவீது எவ்விதமாக உணர்ந்தார்? (பி) கடவுளில் நம்பிக்கை வைத்திருந்த காரணத்தால் தாவீது என்ன விளைவை எதிர்நோக்கியவராக இருந்தார்?
3 கடவுளின் மீது தான் சார்ந்திருப்பதை உணர்ந்த தாவீது ராஜா அவரால் போதிக்கப்படவும் ‘அவருடைய சத்தியத்திலே நடக்கவும்’ தீர்மானமாயிருந்தார். (சங்கீதம் 86:11) தாவீது, ஒரு சமயம் கடவுளுடைய பார்வையில் இரத்தபழிக்குள்ளாவதை தவிர்ப்பாரேயாகில், அவருடைய ‘ஆத்துமா யெகோவாவிவிடமிருக்கிற ஜீவ பையில் சுற்றிவைக்கப்பட்டிருப்பதாய் நிருபிக்கும்,’ என்பதாக ஆலோசனை கூறப்பட்டார். (1 சாமுவேல் 25:21, 22, 25, 29, NW) மனிதர்கள் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து, காப்பாற்ற அவைகளைச் சுற்றிவைத்தது போலவே, தாவீதின் உயிரையும்கூட கடவுள் பாதுகாத்து காப்பாற்ற முடியும். ஞானமுள்ள ஆலோசனையை ஏற்றுக்கொண்டவராக, தாவீது தன்னுடைய சொந்த முயற்சிகளினால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்படாமல், தன் உயிருக்காக அவர் கடன்பட்டிருப்பவர் மீது நம்பிக்கை வைத்தார்: “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.”—சங்கீதம் 16:11.
4. தாவீது ஏன் யெகோவாவினால் போதிக்கப்பட விரும்பினார்?
4 அந்த ஒரு மனநிலையின் காரணமாக, தாவீது, தெய்வீக சட்டங்களில் எவை நியாயமானவை அல்லது கீழ்ப்படிய வேண்டிய அவசியமானவை என்பதை தனிப்பட்டவிதமாக தான் தெரிவு செய்து கொள்ள முடியும் என்பதாக நினைக்கவில்லை. அவனுடைய மனநிலை இவ்விதமாக இருந்தது: “கர்த்தாவே, [யெகோவாவே, NW] உமது வழியை எனக்குப் போதித்து, . . . செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.” “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து . . . மகிமைப்படுத்துவேன்.” (சங்கீதம் 27:11; 86:11, 12) சில சமயங்களில் கடவுளுக்கு முன்பாக சத்தியத்தில் நடப்பது அசெளகரியமாகத் தோன்றக்கூடும் அல்லது மிகுதியான தியாகத்தை அர்த்தப்படுத்தக்கூடும், ஆனால் தாவீது சரியான வழியில் போதிக்கப்படவும் அதில் நடந்திடவும் விரும்பினார்.
இரத்தத்தைப் பற்றி போதிக்கப்பட்டிருத்தல்
5. இரத்தத்தின் சம்பந்தமாக கடவுளுடைய நிலைநிற்கையைப் பற்றி தாவீது என்ன அறிந்திருப்பார்?
5 சிறு வயது முதற்கொண்டு, தாவீது மதசம்பந்தமான ஒரு புரியா புதிராக இல்லாத இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய எண்ணம் கற்பிக்கப்பட்டிருந்தார். நியாயப்பிரமாணம் ஜனங்களுக்கு வாசிக்கப்பட்ட போது, தாவீது இதை கேட்டிருப்பார்: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்க வேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்க வேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.”—லேவியராகமம் 17:11, 12; உபாகமம் 4:10; 31:11.
6. இரத்தத்தைப் பற்றி, கடவுளுடைய ஊழியர்கள் போதிக்கப்படுவதற்கு எவ்விதம் தொடர்ச்சியாக ஒரு தேவை இருந்து வந்தது?
6 கடவுள் இஸ்ரவேலைத் தம்முடைய சபையாக பயன்படுத்திய வரையில், அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் இரத்தத்தைப் பற்றி போதிக்கப்படுவது அவசியமாக இருந்தது. தலைமுறைத் தலைமுறையாக இஸ்ரவேல பையன்களும் பெண்களும் இவ்விதமாகப் போதிக்கப்பட்டார்கள். ஆனால் கடவுள் கிறிஸ்தவ சபையை “தேவனுடைய இஸ்ரவேலாக” ஏற்படுத்தி, அதை ஏற்றுக்கொண்டதற்கு பிற்பாடு இப்படிப்பட்ட போதனை தொடர்ந்து கொடுக்கப்படுமா? (கலாத்தியர் 6:16) ஆம், நிச்சயமாகவே. இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்கு மாறிவிடவில்லை. (மல்கியா 3:6) இரத்தம் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்த அவருடைய நிலைநிற்கை நியாயப்பிரமாணம் அமலுக்கு வருவதற்கு முன்பே இருந்தது, நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்த பின்பும் அது தொடர்ந்திருக்கிறது.—ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29.
7. இரத்தத்தைப் பற்றி கடவுளால் போதிக்கப்படுதல் ஏன் நமக்கு முக்கியமாக இருக்கிறது?
7 இரத்தத்திற்கான மரியாதை கிறிஸ்தவத்துக்கு மையாக இருக்கிறது. ‘அது மிகைப்பட கூறுவதாக இருக்காதா?’ என்பதாக சிலர் கேட்கக்கூடும். என்றபோதிலும் அது இயேசுவின் பலியாக இல்லாவிடில் கிறிஸ்தவத்துக்கு எது மையமாக இருக்கக்கூடும்? அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.” (எபேசியர் 1:7) ஃப்ராங்க் C. லாபக் மொழிபெயர்த்திருக்கும் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட கடிதங்கள் வசனத்தை இவ்வாறு மொழியாக்கம் செய்கிறது: “கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு விலையை செலுத்தியிருக்க, இப்பொழுது நாம் அவருடையவர்களாயிருக்கிறோம்.”
8. “திரள் கூட்டத்தார்” எவ்விதமாக உயிருக்காக இரத்தத்தின் மீது சார்ந்திருக்கிறார்கள்?
8 வரவிருக்கும் “மகா உபத்திரவத்தை” தப்பிப் பிழைத்து பரதீஸிய பூமியில் கடவுளுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் நம்பிக்கையுடைய அனைவரும், இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மீது சார்ந்திருக்கிறார்கள். வெளிப்படுத்துதல் 7:9-14 அவர்களைப் பற்றி விவரித்து கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து சொல்வதாவது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” மொழி நடையை இங்கு கவனியுங்கள். மகா உபத்திரவத்தினூடாக காப்பாற்றப்பட்டவர்கள், ‘இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள்’ அல்லது ‘அவரில் விசுவாசம் வைத்தவர்கள்’ என்றோ அது சொல்லவில்லை. இவை நிச்சயமாகவே அத்தியாவசியமான அம்சங்களாக இருந்தபோதிலும் அப்படிச் சொல்வதில்லை. அது ஒரு படி மேலேச் சென்று, அவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய [இயேசுவுடைய] இரத்தத்திலே தோய்த்து வெளு”த்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. இது ஏனென்றால் அவருடைய இரத்தத்துக்கு மீட்டுக்கொள்ளக்கூடிய மதிப்பு இருக்கிறது.
9. இரத்தத்தின் சம்பந்தமாக யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது ஏன் அத்தனை முக்கியமாக இருக்கிறது?
9 இந்த மதிப்புக்கான போற்றுதல், இரத்தமேற்றுதல் அத்தியாவசியமாக இருப்பதாக மருத்துவர் உண்மை மனதுடன் தெரிவித்தாலும்கூட இரத்தத்தை தவறாக பயன்படுத்தாதிருக்க தீர்மானமாயிருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவி செய்கிறது. இரத்தமேற்றுதலினால் ஏற்படக் கூடிய நன்மைகள், இரத்தம்தானே விளைவிக்கக்கூடிய உடல் ஆரோக்கிய ஆபத்துகளைவிட அதிகமாயிருப்பதாக அவர் நம்பக்கூடும். ஆனால் கிறிஸ்தவன் இரத்தத்தை தவறாக பயன்படுத்த ஒப்புக்கொள்வதன் மூலம் கடவுளுடைய அங்கீகாரத்தை இழந்து போகும் அபாயமான, பயங்கரமான அபாயத்தை அசட்டை செய்ய முடியாது. பவுல் ஒரு சமயம், “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிற”வர்களைப் பற்றி பேசினார். அத்தகைய எந்த ஒரு பாவமும் ஏன் அவ்வளவு வினைமையானதாக இருக்கிறது? ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு மனிதன் “தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று” எண்ணுகிறான்.—எபிரெயர் 9:16-24; 10:26-29.
மற்றவர்கள் போதிக்கப்படுவதற்கு உதவுங்கள்
10. இரத்தத்திலிருந்து விலகியிருப்பதற்கு நம்முடைய தீர்மானத்துக்குப் பின்னால் இருப்பது என்ன?
10 இயேசுவின் மீட்பின் பலியை போற்றுகின்ற நாம், பாவத்தை அப்பியாசித்து, அவருடைய இரத்தத்தின் உயிரைக் காக்கும் மதிப்பைத் தள்ளிவிடாதபடி கவனமுள்ளவர்களாக இருக்கிறோம். விஷயத்தை முற்றிலுமாக ஆலோசித்துவிட்டிருக்கையில், உயிருக்காக கடவுளுக்கு நம்முடைய பணிவான நன்றியுணர்வு, இருதயத்தில் நம்முடைய சிறந்த அக்கறைகளைக் கொண்டு—நம்முடைய நீண்ட-கால சிறந்த அக்கறைகளைக் கொண்டு—கொடுக்கப்பட்டிருப்பதாக நாம் உறுதியாக நம்புகிற அவருடைய நீதியான சட்டங்களை விட்டுக்கொடுப்பதை மறுத்திட நம்மை உந்துவிக்க வேண்டும். (உபாகமம் 6:24; நீதிமொழிகள் 14:27; பிரசங்கி 8:12) ஆனால் நம்முடைய பிள்ளைகளைப் பற்றி என்ன?
11–13. ஒரு சில கிறிஸ்தவர்கள், தங்கள் பிள்ளைகளையும் இரத்தத்தையும் பற்றிய என்ன தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? ஏன்?
11 நம்முடைய பிள்ளைகள் குழந்தைகளாக அல்லது புரிந்துகொள்வதற்கு மிகவும் இளமையாக இருக்கையில், யெகோவா தேவன், நம்முடைய பக்தியின் அடிப்படையில் அவர்களை சுத்தமானவர்களாகவும் ஏற்கத்தகுந்தவர்களாகவும் கருதலாம். (1 கொரிந்தியர் 7:14) ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள சிறு குழந்தைகள், இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்தை புரிந்துகொண்டு அதைக் குறித்து இன்னும் தெரிவு செய்யாதிருக்கக்கூடும் என்பது உண்மையே. என்றபோதிலும் நாம் இந்த அத்தியாவசியமான விஷயத்தில் அவர்களுக்குப் போதிக்க நாம் நம்முடைய மிகச் சிறந்ததைச் செய்கிறோமா? கிறிஸ்தவ பெற்றோர்கள் அதைப் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஏனென்றால் ஒரு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் இரத்தத்தையும் பற்றி தவறான மனநிலைகளைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. சிலர், உரிமை வயது வராத தங்கள் பிள்ளைகளுக்கு இரத்தமேற்றுதல்கள் கொடுக்கப்படும் விஷயத்தில் தங்களுக்கு உண்மையில் அதிகமாக அதிகாரம் ஏதுமில்லை என்பதாக நினைப்பதாகத் தோன்றுகிறது. ஏன் இந்தத் தவறான கருத்து?
12 அநேக தேசங்களில், புறக்கணிக்கப்பட்ட மற்றும் தவறாக நடத்தப்படும் பிள்ளைகளைப் பாதுகாக்க சட்டங்கள் அல்லது அரசாங்க ஏஜென்ஸிக்கள் இருக்கின்றன. பெற்றோர் தங்கள் அன்பான மகனுக்கு அல்லது மகளுக்கு இரத்தமேற்றப்பட அனுமதிப்பதற்கு எதிராக தீர்மானித்து, ஆனால் அதே சமயம் நவீன மருத்துவம் அளிக்கக்கூடிய மாற்றுவகை சிகிச்சைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளும் போது யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் புறக்கணிக்கப்படுவதோ அல்லது தவறாக நடத்தப்படுவதோ இல்லை. மருத்துவ நோக்குநிலையிலிருந்தும்கூட இரத்தமேற்றும் சிகிச்சையிலுள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட ஆபத்துகளைச் சிந்திக்கையில் இது புறக்கணிப்பாகவோ அல்லது தவறாக நடத்துவதாகவோ இல்லை. இது உட்பட்டிருக்கும் அபாயங்களை மதிப்பிட்டு பின்னர் சிகிச்சை முறையை தெரிந்துகொள்ளும் உரிமையை அப்பியாசிப்பதாகும்.a என்றபோதிலும், விரும்பப்படாத ஒரு இரத்தமேற்றுதலை வற்புறுத்துவதற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு சில மருத்துவ துறையினர் சட்டமுறை ஏற்பாடுகளின் உதவியை நாடியிருக்கின்றனர்.
13 சில பெற்றோர்கள், உரிமை வயதுவராத ஒரு பிள்ளைக்கு இரத்தமேற்ற நீதிமன்ற ஆதரவை பெறுவது மருத்துவ துறையினருக்கு சுலபமாக இருக்கக்கூடும் என்பதை அறிந்தவர்களாய், விஷயம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை, பெற்றோர் செய்யக்கூடியது அல்லது செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்பதாக நினைக்கக்கூடும். அந்தக் கருத்து எத்தனை தவறானது!—நீதிமொழிகள் 22:3.
14. தாவீதும் தீமோத்தேயுவும் தங்கள் இளமைப் பருவத்தில் எவ்விதமாக போதிக்கப்பட்டிருந்தார்கள்?
14 தாவீது அவருடைய சிறு வயது முதல் கடவுளுடைய வழியில் போதிக்கப்பட்டிருந்தார் என்பதாக நாம் கவனித்தோம். அது, உயிரைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் ஈவாக கருதவும் இரத்தம் உயிரை பிரதிநிதித்துவம் செய்வதை அறிந்துகொள்ளவும் அவருக்கு உதவியது. (2 சாமுவேல் 23:14-17 ஒப்பிடவும்.) தீமோத்தேயு “சிறு வயது முதல்” கடவுளுடைய சிந்தனையில் போதிக்கப்பட்டிருந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15) தாவீதும் தீமோத்தேயுவும், இன்று முழு வளர்ச்சியடைந்தவர்களுக்குரிய சட்டப்பூர்வ வயதுக்கும் கீழிருந்த போதே, கடவுளுடைய சித்தத்தை உட்படுத்திய விஷயங்களின் பேரில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கக் கூடியவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? அதேவிதமாகவே, உரிமை வயதடைவதற்கு வெகு முன்பேயும்கூட இளம் கிறிஸ்தவர்கள் இன்று கடவுளுடைய வழியில் போதிக்கப்பட வேண்டும்.
15, 16. (எ) உரிமை வயது வராதவர்களின் உரிமைகளைப் பற்றி சில இடங்களிலுள்ள கருத்து என்ன? (பி) உரிமை வயது வராத ஒருவருக்கு இரத்தம் கொடுக்கப்படுவதற்கு எது வழிநடத்தியிருக்கிறது?
15 ஒரு சில இடங்களில், முதிர்ச்சியடைந்தவராக கருதப்படும் உரிமை வயதடையாதவருக்கு பெரியவர்களைப் போன்றே உரிமைகள் வழங்கப்படுகின்றன. வயது அல்லது முதிர்ச்சியான சிந்தனையின் அடிப்படையில் அல்லது இரண்டின் அடிப்படையிலும் ஓர் இளைஞன் மருத்துவ சிகிச்சையில் தன்னுடைய சொந்த தீர்மானங்களைச் செய்ய போதிய அளவு முதிர்ச்சியுள்ளவனாக கருதப்படலாம். இது சட்டமாக இல்லாத இடத்திலும்கூட, இரத்தத்தைப் பற்றி தன்னுடைய உறுதியான தீர்மானத்தை தெளிவாக வெளியிடக்கூடிய ஓர் இளைஞனின் விருப்பங்களுக்கு நீதிபதிகள் அல்லது அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடும். நேர்மாறாக, ஓர் இளைஞனால் தன்னுடைய நம்பிக்கைகளை தெளிவாகவும் முதிர்ச்சியாகவும் விளக்கமுடியாத போது, ஒரு குழந்தைக்குச் செய்வது போல, எது சிறந்ததாகத் தோன்றுகிறதோ அதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும்.
16 ஓர் இளைஞன் பல ஆண்டுகளாக பைபிளை விட்டு விட்டு படித்துக்கொண்டிருந்தான், ஆனால் முழுக்காட்டுதல் பெறவில்லை. “மருத்துவ சிகிச்சையை மறுத்திட உரிமை வயதடைய” இன்னும் ஏழே வாரங்கள் மட்டுமே இருந்தபோதிலும், புற்றுநோய்க்காக அவனுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவமனை, அவனுடைய மற்றும் அவனுடைய பெற்றோருடைய விருப்பங்களுக்கு எதிராக இரத்தமேற்ற நீதிமன்ற ஆதரவை நாடினது. கடமையுணர்ச்சியுள்ள நீதிபதி இரத்தத்தைப் பற்றிய அவனுடைய நம்பிக்கைகளைக் குறித்து குறுக்கு வினாக்களைக் கேட்டு, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களின் பெயர்கள் போன்ற அடிப்படைக் கேள்விகளைக் கேட்டார். அந்த இளைஞன் பெயர்களைக் குறிப்பிடவோ அல்லது அவன் ஏன் இரத்தம் ஏற்க மறுத்தான் என்பதை புரிந்துகொண்டதற்கு நம்பத்தக்க அத்தாட்சியை கொடுக்கவோ முடியாதவனாக இருந்தான். வருந்தத்தக்கவிதமாக, நீதிபதி இரத்தமேற்றுதலுக்கு இசைவாணைக் கொடுத்து இவ்விதமாகச் சொன்னார்: “இரத்தமேற்றுதலுக்கு உடன்பட அவனுடைய மறுப்பு, அவனுடைய சொந்த மத நம்பிக்கைகளைப் பற்றிய முதிர்ச்சியான புரிந்துகொள்ளுதலின் மீது சார்ந்ததாக இல்லை.”
17. இரத்தம் கொடுக்கப்படுவதைக் குறித்து 14 வயது பெண் என்ன நிலைநிற்கையை எடுத்தாள்? என்ன விளைவோடு?
17 கடவுளுடைய வழிகளில் நன்றாக போதிக்கப்பட்டும் அவருடைய சத்தியத்தில் சுறுசுறுப்பாக நடந்துக்கொண்டுமிருக்கும் உரிமை வயது வராத பிள்ளைக்கு காரியங்கள் வித்தியாசமாக இருக்கக்கூடும். ஓர் இளம் கிறிஸ்தவ பெண்ணுக்கு அபூர்வமான ஒரு வகையான புற்றுநோய் இருந்தது. அந்தப் பெண்ணும் அவளுடைய பெற்றோரும் பெயர் பெற்ற ஒரு மருத்துவமனையில் நிபுணர் ஒருவரிடம் கடுமைக் குறைவான ஒரு வேதியல் சிகிச்சை முறையைப் பற்றி தெரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இருந்தபோதிலும், வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீதிபதி எழுதினார்: “D. P., தன்னால் முடிந்த எந்த வகையிலும் தனக்கு இரத்தமேற்றப்படுவதை எதிர்க்கப் போவதாக தெரியப்படுத்தியிருக்கிறாள். இரத்தமேற்றுதலை தன் உடலின் மீது செய்யப்படும் ஒரு தாக்குதலாக கருதி அதை கற்பழிப்புக்கு அவள் ஒப்பிடுகிறாள். அவள் தன்னுடைய தெரிவுக்கு மதிப்புக் காண்பித்து, இரத்தமேற்ற நீதிமன்ற உத்தரவு இல்லாமல் [மருத்துவ மனையில்] தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.” இந்தக் கடினமான சமயத்தில் அவள் பெற்றுக்கொண்டிருந்த கிறிஸ்தவ போதனை உதவிக்கு வந்தது.—பெட்டியைப் பார்க்கவும்.
18. (எ) நோயுற்ற ஒரு பெண் இரத்தத்தை ஏற்றுக்கொள்வதைக் குறித்து என்ன உறுதியான நிலைநிற்கையை எடுத்தாள்? (பி) நீதிபதி அவளுடைய சிகிச்சையைப் பற்றி என்ன முடிவு செய்தார்?
18 இரத்த வெள்ளை நுண்மப் பெருக்க கோளாறுக்காக 12 வயது பெண் ஒருத்தி சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தாள். ஒரு குழந்தை-நல ஏஜென்ஸி இரத்தம் அவளுக்கு வற்புறுத்தி செலுத்தப்படுவதற்காக வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. நீதிபதி இவ்விதமாக முடிவு செய்தார்: “தனக்கு இரத்தமேற்ற முயற்சி செய்யப்படுமானால், தன்னுடைய எல்லா பெலத்தையும் திரட்டிக் கொண்டு, தான் அந்த இரத்தமேற்றுதலை எதிர்த்துப் போராட போவதாக L. இந்த நீதிமன்றத்திடம் தெளிவாகவும் எந்த சந்தேகத்திற்கிடமில்லாமலும் தெரிவித்திருக்கிறாள். அவள் கத்தி கூச்சலிட்டு போராட போவதாகவும், இரத்தம் உட்செலுத்த பயன்படுத்தப்படும் அந்தக் கருவியை தன் கையிலிருந்து பிடுங்கி எறிந்து தன் படுக்கைக்கு மேலே பையிலிருக்கும் இரத்தத்தை வீணாக்கிவிட போவதாகவும் சொல்லியிருக்கிறாள், அதை நான் நம்புகிறேன். இந்தப் பிள்ளையை அந்தச் சோதனைக்கு உட்படுத்தக்கூடிய எந்த உத்தரவையும் நான் போட மறுக்கிறேன் . . . இந்த நோயாளியின் சம்பந்தமாக, மருத்துவமனை திட்டமிட்டிருக்கும் சிகிச்சை முறை உடலை மாத்திரமே கருத்தில் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அது அவளுடைய உணர்ச்சி சம்பந்தமான தேவைகளையும் அவளுடைய மத நம்பிக்கைகளையும் கருத்தில் கொள்ள தவறிவிட்டிருக்கிறது.”
பெற்றோர்களே—நன்றாக போதியுங்கள்
19. என்ன விசேஷமான கடமையை பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமாக நிறைவேற்ற வேண்டும்?
19 இப்படிப்பட்ட அனுபவங்கள், தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்துக்கு இசைவாக வாழவேண்டும் என்று விரும்புகிற பெற்றோருக்கு ஆற்றல் மிகுந்த ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. ஆபிரகாம் கடவுளுடைய சிநேகிதனாக இருந்ததற்கு ஒரு காரணம், இந்தக் கோத்திர தகப்பன் தன் பின்ளைகளுக்கும் தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்து அவருடைய [யெகோவாவுடைய, NW] வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்” என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். (ஆதியாகமம் 18:19) இது இன்று கிறிஸ்தவ பெற்றோரின் விஷயத்தில் உண்மையாக இருக்க வேண்டுமல்லவா? நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் அருமையான பிள்ளைகள் “[அவர்களிலிருக்கிற] நம்பிக்கையைக் குறித்து . . . விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருக்”கும் பொருட்டு யெகோவாவின் வழியில் நடக்க நீங்கள் அவர்களுக்குப் போதிக்கிறீர்களா?—1 பேதுரு 3:15.
20. இரத்தத்தைப் பற்றி நம்முடைய பிள்ளைகள் அடிப்படையில் எதை அறிந்தவர்களாகவும் நம்புகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்? (தானியேல் 1:3-14)
20 நம்முடைய பிள்ளைகள் இரத்தமேற்றுதலில் உள்ள நோய் ஆபத்துகளையும் மற்ற அபாயங்களையும் குறித்து தகவலறிந்தவர்களாயிருப்பது நல்லதாக இருந்தாலும், இரத்தத்தின் மீதான கடவுளுடைய பரிபூரண சட்டத்தில் நம்முடைய பிள்ளைகளைப் போதிப்பது, அடிப்படையில் இரத்தத்தைப் பற்றிய பயத்தை மனதில் பதிய செய்ய முயற்சிப்பதை அர்த்தப்படுத்துவதாக இருக்காது. உதாரணமாக ஒரு நீதிபதி, ஒரு பெண்ணிடம் அவள் ஏன் இரத்தம் கொடுக்கப்பட விரும்புவது இல்லை என்று கேட்கையில், இரத்தம் அதிக ஆபத்தானது அல்லது பீதியை ஏற்படுத்துகிறது என்று அவள் நினைப்பது முக்கியமாக அவளுடைய பதிலாக இருக்குமேயானால் பாதிப்பு எப்படி இருக்கக்கூடும்? நீதிபதி அவள் வெறுமென முதிர்ச்சியற்றவளாக, அளவுக்கு அதிகமாக மிரண்டு போய் இருப்பதாக முடிவு செய்துவிடலாம். குடல்முளை அகற்றும் ஓர் அறுவை சிகிச்சையைக் குறித்து அவ்வளவு பயந்து போய், அவளுடைய பெற்றோரும்கூட அவளுக்குச் சிறந்தது என்பதாக கருதும் இந்த அறுவை சிகிச்சைக்காக அழுது அதை எதிர்ப்பது போல இது இருப்பதாக அவர் முடிவு செய்துவிடலாம். மேலுமாக, கிறிஸ்தவர்கள் இரத்தமேற்றுதலை ஆட்சேபிப்பதற்குரிய அடிப்படை காரணம் அது மாசுபட்டது என்பதால் அல்ல, ஆனால் நம்முடைய கடவுளும், உயிரளிப்பவருமானவருக்கு அது விலைமதிப்புள்ளது என்பதாலே என்று நாம் முன்பு கவனித்தோம். நம்முடைய பிள்ளைகள் அதை அறிந்தவர்களாயிருக்க வேண்டும், இரத்தத்தின் சாத்தியமான மருத்துவ ஆபத்துகள், நம்முடைய மதசம்பந்தமான நிலைநிற்கைக்கு கூடுதலான முக்கியத்துவத்தை அளிக்கின்றது.
21. (எ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் இரத்தத்தைப் பற்றிய பைபிளின் கருத்தையும் பற்றி என்ன அறிந்துகொள்ள வேண்டும்? (பி) இரத்தத்தின் சம்பந்தமாக பெற்றோர் எவ்விதமாக தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்?
21 உங்களுக்குப் பிள்ளைகள் இருக்குமானால், இரத்தமேற்றுதல்கள் பற்றிய பைபிள் ஆதாரமுள்ள நிலைநிற்கையை அவர்கள் ஏற்றுக்கொள்வதையும் அதை விளக்க முடிவதையும் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா? இந்த நிலைநிற்கை கடவுளுடைய சித்தமாயிருப்பதை அவர்கள் உண்மையில் நம்புகிறார்களா? கடவுளுடைய சட்டத்தை மீறுவது அத்தனை வினைமையானதாக இருப்பதன் காரணமாக, அது நித்திய ஜீவனுக்கான ஒரு கிறிஸ்தவனின் எதிர்பார்ப்பை ஆபத்திற்குள்ளாக்கக்கூடும் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்களா? ஞானமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மிகச் சிறியவர்களாக இருந்தாலும் ஏறக்குறைய வயதுவந்தவர்களாக இருந்தாலும் அவர்களோடு இந்த விஷயங்களை மறுஆய்வு செய்வர். ஒவ்வொரு இளைஞரும் ஒரு நீதிபதி அல்லது மருத்துவ அதிகாரி கேட்கக்கூடிய கேள்விகளை எதிர்படுகின்றது போன்ற பயிற்சி நேரங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். குருட்டுப் பாடமாக தெரிந்தெடுக்கப்பட்ட உண்மைகளை அல்லது பதில்களை இளைஞரை மறுபடியும் சொல்ல வைப்பது இலக்காக இல்லை. அவர்கள் என்ன நம்புகிறார்கள், மற்றும் ஏன் என்பதை அவர்கள் தெரிந்திருப்பது அதிமுக்கியமாகும். நிச்சயமாகவே ஒரு நீதிமன்ற விசாரணையின் சமயத்தில் பெற்றோரோ அல்லது மற்றவர்களோ இரத்தத்தின் அபாயங்களையும், மாற்றுவகைச் சிகிச்சைகளையும் பற்றிய தகவலை கொடுக்கக்கூடும். ஆனால் ஒரு நீதிபதியோ அல்லது அதிகாரியோ நம்முடைய பிள்ளைகளோடு பேசுவதன் மூலம் ஒருவேளை அறிய விரும்பும் காரியமானது, அவர்கள் தங்கள் நிலைமையையும் தேர்ந்தெடுக்கும் உரிமைகளையும் பூரணமாக புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர்கள் சொந்தமான மதிப்பீடுகளையும் உறுதியான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதே ஆகும்.—2 இராஜாக்கள் 5:1-4 ஒப்பிடவும்.
22. இரத்தத்தைப் பற்றி நாம் கடவுளால் போதிக்கப்பட்டிருப்பதனுடைய நிரந்தரமான விளைவு என்னவாக இருக்கக்கூடும்?
22 நாம் அனைவருமே இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கருத்தை போற்றுகிறவர்களாயும் அதை உறுதியாக பற்றிக்கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். வெளிப்படுத்துதல் 1:6, கிறிஸ்துவை, “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி”யவராக விவரிக்கிறது. இயேசுவினுடைய இரத்தத்தின் மதிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே, நாம் நம்முடைய பாவங்களுக்கு முழுமையான மற்றும் நீடித்த மன்னிப்பைப் பெற முடியும். ரோமர் 5:9 தெளிவாகச் சொல்வதாவது: “இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” அப்படியென்றால் இந்த விஷயத்தில் நாமும் நம்முடைய பிள்ளைகளும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பதும், அவருடைய வழியிலே என்றுமாக நடப்பதற்குத் தீர்மானமாயிருப்பதும் எத்தனை ஞானமானது! (w91 6/15)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சோஸைட்டி வெளியிட்டிருக்கும் இரத்தம் உங்கள் உயிரை எப்படி காப்பாற்ற முடியும்? பக்கங்கள் 21-2, 28-31 பார்க்கவும்.
போதனையின் முக்கிய குறிப்புகள்
◻ யெகோவாவினால் போதிக்கப்படுவது குறித்து நாம் என்ன கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்?
◻ இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவது ஏன் அத்தனை முக்கியமாக இருக்கிறது?
◻ இரத்தத்தைப் பற்றிய தங்கள் நம்பிக்கைகளைக் குறித்து இளைஞர் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கமுடிகிறவர்களாய் இருப்பது ஏன் அத்தியாவசியமானது?
◻ இரத்தத்தின் மீதான யெகோவாவின் சட்டத்தில் தங்கள் பிள்ளைகள் நன்றாக போதிக்கப்பட்டிருப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோர் எவ்விதமாக உதவலாம்?
[பக்கம் 17-ன் பெட்டி]
நீதிமன்றத்தைக் கவர்ந்துவிட்டது
பாரா 17-ல் குறிப்பிடப்பட்ட D. P.,-ஐ குறித்து நீதிமன்ற தீர்ப்பு என்ன சொன்னது?
“இந்த 14 1/2 வயது இளம் பெண்ணின் புத்திக்கூர்மை, சமநிலை, பெருந்தன்மை மற்றும் மனவலிமை நீதிமன்றத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது. தனக்கு உயிரைப் போக்க வல்ல புற்றுநோய் இருப்பது குறித்து அவள் மனம் உடைந்து போயிருக்கலாம் . . . இருந்தபோதிலும், நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல ஒரு முதிர்ச்சியுள்ள பெண்ணாக வந்தாள். அவள் எதிர்ப்படும் கடினமான காரியத்தைக் குறித்து தெளிவாக புரிந்துகொண்டவளாக தோற்றமளித்தாள். அவள் எல்லா ஆலோசனை கூட்டங்களுக்கும் போயிருந்தாள், ஒரு சிகிச்சை ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டிருந்தாள், ஒரு மனுஷியாக தான் எவ்விதமாக இந்த மருத்துவ சவாலை எதிர்ப்பட போகிறாள் என்பதைக் குறித்து முரண்பாடில்லாத ஒரு மனவமைதியை வளர்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனதை நெகிழச் செய்யும் இந்த மனுவோடு நீதிமன்றத்துக்கு வந்தாள்: என்னுடைய தீர்மானத்துக்கு மரியாதை கொடுங்கள் . . .
“அவளுடைய முதிர்ச்சியோடு கூட, D. P. தன்னுடைய தீர்மானத்தை நீதிமன்றம் மதிப்பதற்கு போதிய காரணங்களைக் கொடுத்திருக்கிறாள். இரத்தமேற்றுதலை உட்படுத்தும் ஒரு சிகிச்சையினால் அவள் ஆவிக்குரிய விதமாக, மனதின் பிரகாரமாக, ஒழுக்க சம்பந்தமாக மற்றும் உணர்ச்சிபூர்வமாக தீங்கிழைக்கப்படுவாள். நீதிமன்றம் அவள் தெரிவு செய்திருக்கும் சிகிச்சைக்கு மதிப்பு கொடுக்கும்.”
[பக்கம் 16-ன் படம்]
ஒரு நீதிபதியோ அல்லது ஒரு மருத்துவமனை நிர்வாகியோ, ஒரு கிறிஸ்தவ இளைஞன் உண்மையில் என்ன நம்புகிறான் என்பதையும் ஏன் நம்புகிறான் என்பதையும் அறிந்துகொள்ள விரும்பக்கூடும்