கடவுளிலும் கிறிஸ்துவிலும் விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுங்கள்
கொலோசெயரிலிருந்து முக்கிய குறிப்புகள்
இரட்சிப்புக்கு யெகோவா தேவனிலும் இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசம் அத்தியாவசியமாகும். ஆனால் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காத்துக்கொள்வது ஒரு சவாலாகும். இது, சிறிய ஆசியாவில் எபேசுவுக்கு கிழக்கேயிருந்த நகரமாகிய கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவ்விதமாகவே இருந்தது. ஏன்? ஏனென்றால் விருத்தசேதனம், ஒருவர் என்ன சாப்பிடுகிறார், ஒருசில சடங்குகளைக் கடைப்பிடிப்பது, ஆகியவற்றின் பேரில் இரட்சிப்பு சார்ந்திருந்ததாக அங்கிருந்த பொய்ப் போதகர்கள் தவறாக வலியுறுத்தினார்கள்.
அப்படியென்றால், அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய நலனைக் குறித்துக் கவலையுள்ளவனாக இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் கடவுளிலும் கிறிஸ்துவிலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று நிச்சயமாகவே அவன் விரும்பினான். ஆகவே ரோமில் அப்போஸ்தலன் காவலில் முதல்முறையாக வைக்கப்பட்டிருந்த சமயத்தின் முடிவில் (சுமார் பொ.ச. 60–61) தவறான கருத்துகளை எதிர்த்து தடைசெய்வதையும் அவர்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு கடிதத்தை கொலோசெயருக்கு எழுதினான். நாமும்கூட அவனுடைய அன்புள்ள வார்த்தையிலிருந்து எவ்விதமாக நன்மையடையலாம் என்பதைப் பார்ப்போமாக.
கிறிஸ்துவின் ஸ்தானத்தைப் போற்றுங்கள்
அவனுடைய கடிதத்தின் ஆரம்பத்தில், பவுல் இயேசுவின் ஸ்தானத்துக்குப் போற்றுதலை உயர்த்திக் காண்பித்தான். (1:1–2:12) கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய விசுவாசத்துக்காகவும் உடன்விசுவாசிகளிடமாக அவர்களுடைய அன்புக்காகவும் அவன் கொலோசெயரைப் பாராட்டினான். கிறிஸ்துவின் மூலமாக மற்ற சகல காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதாலும் அவர் சபையின் தலைவராகவும் மரித்தோரிலிருந்து எழும்பினவர்களில் முதற்பேரானவராக இருப்பதாலும் அவருடைய ஒப்புயர்வற்ற நிலையை பவுல் குறிப்பிட்டான். ஞானம், அறிவு என்கிற எல்லாப் பொக்கிஷங்களையும் தன்னுள் அடக்கமாய் வைத்திருக்கும் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகுதல் ஏற்படுகிறது. இவை அனைத்தையும் முன்னிட்டுப் பார்க்கையில், கிறிஸ்தவர்கள், தொடர்ந்து கிறிஸ்துவுக்குள்ளாக நடந்துகொண்டிருக்கவும் மனித தத்துவத்தின் மூலமாக எவரும் தங்களை வஞ்சித்துவிட அனுமதியாமலும் இருக்கவேண்டும்.
கிறிஸ்துவின் மூலமாக கடவுள் நியாயப்பிரமாணத்தை வழியிலிருந்து விலக்கிவிட்டார். (2:13–23) இயேசு மரித்த அந்தக் கழுமரத்தின் மீது அடையாள அர்த்தத்தில் அது ஆணியடிக்கப்பட்டுவிட்டது. நியாயப்பிரமாண கட்டளைகள் “வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது.” கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பதன் மூலம், பரலோகங்களில் சாவாமையுள்ள வாழ்க்கையின் பரிசை எந்த மனிதனும் பறித்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
கடவுளையும் கிறிஸ்துவையும் போற்றுங்கள்
பவுல் அடுத்ததாக, புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டிருக்கும்படியாக கொலோசெயரை துரிதப்படுத்தினான். (3:1–17) மேலான காரியங்களின் மீது தங்கள் மனதை வைப்பதன் மூலம் அவர்கள் ஆவிக்குரிய அக்கறைகளுக்கு வாழ்க்கையில் முதலிடத்தைக் கொடுக்கிறவர்களாக இருப்பர். இது தவறான மனநிலைகளையும் பேச்சையும் களைந்துவிடுவதை தேவைப்படுத்தியது. இரக்கம், மனத்தாழ்மை மற்றும் அன்பு போன்ற குணாதிசயங்களை அவர்கள் தரித்துக் கொள்வார்களேயானால், எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பர்! அவர்கள் எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்தில் செய்து அவர் மூலமாக கடவுளுக்கு நன்றி செலுத்துவார்களேயானால், கிறிஸ்துவின் சமாதானம் அவர்களுடைய இருதயங்களில் ஆட்சி செய்யும்.
யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்குமான போற்றுதல், மற்றவர்களோடு கிறிஸ்தவர்களின் உறவுகள் மீதும்கூட செல்வாக்கை செலுத்த வேண்டும். (3:18–4:18) மனைவிமார்களும், கணவன்மார்களும், பிள்ளைளும், அடிமைகளும், எஜமான்களும் கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தோடும் கிறிஸ்துவின் அங்கீகாரத்தோடும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஜெபத்தில் தரித்திருந்து ஞானமாக நடப்பது எத்தனை அவசியமாக இருக்கிறது!
ஜீவனாகியப் பரிசை நாம் இழந்து போகும்படிச் செய்யக்கூடிய பொய் போதகர்களைத் தவிர்ப்பதற்கு கொலோசெயருக்கு பவுல் எழுதின கடிதம் நமக்கு உதவி செய்யக்கூடும். யெகோவாவினுடைய அதிகாரத்தையும் அவருடைய குமாரனின் அதிகாரத்தையும் அங்கீகரிப்பதன் பேரில் அப்போஸ்தலன் வைக்கும் முக்கியத்துவம், மற்றவர்களோடு நம்முடைய செயல்தொடர்புகளின் மீது சிறந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். கடவுளிலும் கிறிஸ்துவிலும் நம்முடைய விசுவாசத்தை நாம் காத்துக்கொண்டோமேயானால், நிறைவான ஆசீர்வாதங்கள் உறுதியளிக்கப்படுகின்றன. (w90 11/15)
[பக்கம் 32-ன் பெட்டி/படம்]
லவோதிக்கேயாவுக்கு கடிதம்: “இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு, இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதித்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்,” என்பதாகப் பவுல் கொலோசெயருக்கு எழுதினான். (கொலோசெயர் 4:16) லவோதிக்கேயா மேற்கு சிறிய ஆசியாவிலுள்ள ஒரு செழிப்பான நகரமாகும். இது பிலதெல்பியா மற்றும் எபேசு போன்ற நகரங்களோடு சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தது. பவுல் லவோதிக்கேயாவில் ஊழியம் செய்யாதபோதிலும் அவன் எபேசுவில் செய்த வேலை அது வரையாகச் சென்றெட்டியிருக்க வேண்டும். அவன் லவோதிக்கேய கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிருபத்தை அனுப்பினான். ஒரு சில நிபுணர்கள், இதை அவன் எபேசியர்களுக்கு எழுதின கடிதத்தின் நகலே என்பதாக நம்புகிறார்கள். லவோதிக்கேயாவுக்கு எழுதின கடிதம் பைபிளில் காணப்படுவதில்லை. ஒருவேளை நமக்கு இன்று தேவைப்படும் தகவலை அது கொண்டில்லாமல் இருப்பது அல்லது ஒருவேளை மற்ற கடிதங்களில் போதிய அளவு இடம் பெற்றிருக்கும் குறிப்புகளே அதில் திரும்பக்கூறப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
[படம்]
லவோதிக்கேயாவிலுள்ள இடிபாடுகள்