நீங்கள் சொன்னபடி செய்கிறீர்களா?
ஓர் அன்பான தகப்பன் தன் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கும், பெரியவர்களாகும் போது அவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கும் அவர்களுக்கு போதிப்பார். தங்கள் பெற்றோர்களை நேசித்து மரியாதை கொடுக்கும் பிள்ளைகள் அப்படிப்பட்ட போதனைகளை ஏற்றுக்கொள்வர். ஏனென்றால் அது அவர்களுடைய சொந்த நன்மைக்கே என்பதை அவர்கள் அறிவர். அதே போன்று, நம்முடைய அன்பான பரலோக தகப்பனாகிய யெகோவா, தம் ஊழியர்களுக்கு வழிநடத்துதலை கொடுக்கிறார், அது அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றியையும் சந்தோஷத்தையும் கொண்டுவருகிறது. ஆகையால் கடவுள் அவருடைய வார்த்தையாகிய பைபிள் மூலமாகவும், அவருடைய பூமிக்குரிய அமைப்பின் மூலமாகவும் நமக்கு கொடுக்கும் போதனைகளை நாம் பின்பற்ற வேண்டியது முக்கியமானதாயிருக்கிறது.
குடும்பத்துக்குள்
பல அம்சங்களின் பேரில் நமக்கு போதனைகள் கொடுக்கப்படுகின்றன. அதில் ஒன்று குடும்ப வட்டாரத்துக்குள். விவாகமும் குடும்பமும் கடவுளால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடவுள் முதல் மானிட ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து பிள்ளைகளை கொண்டிருக்கும்படி சொன்னார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27, 28; 2:22–24) குடும்பத்தின் எல்லா அங்கத்தினர்களின் பொறுப்புகளை பற்றியும் சிருஷ்டிகர் போதனைகளை கொடுத்திருக்கிறார். உதாரணமாக, கணவனும் தகப்பனுமாயிருக்கிறவர் வீட்டின் தலைவராயிருக்கிறார். அப்படியென்றால் அவர் போதனை, உணவு, உடை, வீடு, பாதுகாப்பு, சிட்சை ஆகியவற்றை கொடுப்பதற்கு உத்தரவாதமுள்ளவராயிருக்கிறார் என்பது அதன் அர்த்தம். அவர் முக்கியமான குடும்ப தீர்மானங்களையும் செய்கிறார். கணவனாக அவர் தன் மனைவிக்கு கரிசனை காண்பிக்க வேண்டும், அவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால் அவளுக்கு கனத்தைச் செலுத்த வேண்டும். (எபேசியர் 5:22, 23; 1 தீமோத்தேயு 5:8; 1 பேதுரு 3:7) மனைவி கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும், ஆழ்ந்த மரியாதையை அவருக்கு காண்பிக்க வேண்டும், கணவனின் உதவியாளாயும் ஏற்ற துணையாயும் இருக்க வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்றும் வேதாகமம் சுட்டிக் காட்டுகிறது.—ஆதியாகமம் 2:18; எபேசியர் 6:1–3; 1 பேதுரு 3:1, 2.
இப்படிப்பட்ட போதனைகள் புறக்கணிக்கப்பட்டால் என்ன நடக்கிறது? கணவன்மார்கள் தங்கள் மனைவிகளின் பேரில் கரிசனை காண்பிக்கத் தவறும் போதும், மனைவிகள் கணவனின் தலைமை ஸ்தானத்துக்கு குறைந்த மரியாதையே காண்பிக்கும் போதும், கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் ஏற்படுகின்றன. உண்மையில், அப்படிப்பட்ட காரியங்கள் அநேக விவாகங்கள் முறிந்து போகும்படி செய்திருக்கின்றன. பிள்ளைகளின் கீழ்ப்படியாமையும், கலகத்தனமும் அநேக பெற்றோர்களுக்கு அதிக துக்கத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. பிள்ளைகளை ஒழுங்கான சிட்சையின்படி வளர்க்காமல், அவர்களை எரிச்சலூட்டுவதினால் அநேக சமயங்களில் பழி பெற்றோர்கள் மீது இருக்கிறது.—எபேசியர் 6:4.
குடும்ப பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என்பதன் பேரில் சமூக நல வேலையாட்களும், உளநூல் வல்லுநர்களும், மற்றவர்களும் பல்வேறு வகையான ஆலோசனைகளை கொடுத்திருந்த போதிலும், குடும்பத்தை சிருஷ்டித்தவரால் பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளைக் காட்டிலும் வேறு எந்த ஆலோசனையும் அவ்வளவு பயனுள்ளதாயில்லை. இவைகளை கடைப்பிடிப்பது மெய்யான சந்தோஷத்தையும், திருப்தியையும் கொண்டு வருகிறது.—சங்கீதம் 19:7–9.
சபையில்
பூமியில் கடவுளுடைய அமைப்பின் நியமிக்கப்பட்ட வழியாக இருக்கும் “உண்மையும் விவேகமுள்ள அடிமைகள்” மூலம் கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசு கிறிஸ்து கொடுக்கும் போதனைகளை நாம் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 24:45–47; எபேசியர் 5:23) சபையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கொண்டிருப்பதற்கு அதனுடைய எல்லா அங்கத்தினர்களும் கொடுக்கப்பட்ட வழிநடத்துதலுக்கு இசைவாக செயல்பட வேண்டும். உதாரணமாக, சபையில் கற்பிக்கும் வேலையிலும், மற்ற ஜனங்களுக்கு உதவி செய்வதிலும் தலைமை தாங்கி நடத்துபவர்கள், யெகோவாவின் அமைப்பிலிருந்து வரும் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். இது அவர்களுடைய வேலையின் திறம்பட்ட தன்மைக்கு உதவி செய்யும். பிரசங்க வேலையில் எவ்வாறு பங்கு கொள்வது, சபையில் இருக்கும் பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது, புத்திமதியும் உற்சாகமும் எவ்வாறு கொடுப்பது, வேதனையில் இருப்பவர்களை எவ்வாறு ஆறுதல்படுத்துவது போன்ற காரியங்களின் பேரில் போதனைகள் ஒருவேளை இருக்கலாம். கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவு கொள்ளும் அனைவருக்கும் போதனை நிறைந்த கட்டியெழுப்பும் கூட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதன் பேரிலும் கட்டளைகள் இருக்கின்றன.—அப்போஸ்தலர் 20:20; ரோமர் 12:6–8; கலாத்தியர் 6:1; 1 தெசலோனிக்கேயர் 3:1–3.
சபை மூப்பர்கள் அல்லது கண்காணிகள் விசேஷமாக இந்த விஷயத்தில் நல்ல முன்மாதிரியை வைக்க வேண்டும். ஆளும் குழு அனுப்பும் போதனைகளை மூப்பர்கள் கவனமாகவும், உண்மையாகவும் பின்பற்ற வேண்டும். உள்ளூர் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப அவர்கள் போதனைகளை மாற்றியமைத்துக் கொண்டு அவைகளை பொருத்த வேண்டும். கிறிஸ்தவ சபையை வழிநடத்துவது இயேசு கிறிஸ்து என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உலகம் முழுவதிலுமுள்ள எல்லா சபைகளின் தேவைகளையும் அவர் பரிபூரணமாக கண்டுணர்கிறார், தேவையான உற்சாகத்தையும் உதவியையும் அவர் கொடுக்கிறார். ஆகையால், கடவுளுடைய தேவராஜ்ய அமைப்பிலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் எல்லா கட்டளைகளையும் பொருத்த மூப்பர்கள் தயங்கக்கூடாது. இது ஒவ்வொரு சபையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக சேவிக்கும். இது அவர்களுக்குள்ளே ஐக்கியமாக இருப்பதற்கும், பூமி முழுவதிலுமுள்ள மீதமான கிறிஸ்தவ சகோதரத்துவத்தோடும் ஐக்கியமாக இருப்பதற்கும் அவர்களுக்கு உதவி செய்யும்.—அப்போஸ்தலர் 15:1–31; எபிரெயர் 13:7; வெளிப்படுத்துதல் 5:6.
சந்தோஷமான பலன்கள்
கட்டிடம் கட்டுபவர் ஒரு பெரிய கட்டிடத்தை எழுப்புகையில், கட்டிடம் நிலைத்திருப்பதற்காக கட்டிட கலைஞரின் திட்டங்களை கவனமாக பின்பற்றுகிறார். ஜலப்பிரளயத்துக்கு முன்பு இருந்த வன்முறையான நாட்களில், நோவா ஒரு பேழையை கட்டும்படி கட்டளை கொடுக்கப்பட்டது. வரப்போகும் ஜலப்பிரளயத்தை தப்பிப்பிழைப்பதற்கு, பேழையை எவ்வாறு கட்டுவது, எந்த மனிதர்களையும் மிருகங்களையும் அதற்குள் கொண்டு வருவது போன்ற காரியங்கள் அவருக்கு சொல்லப்பட்டது. நோவா எவ்வாறு பிரதிபலித்தார்? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” நோவாவும் அவரோடு கூட பேழையில் இருந்தவர்கள் மட்டுமே ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைத்தனர். (ஆதியாகமம் 6:5, 13–22; 7:23) இன்று, நாம் நோவாவின் நாளைப் போன்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த காரணத்துக்காக எல்லா துன்மார்க்க ஜனங்களையும் கடவுள் அழித்துவிடுவார். தப்பிப்பிழைப்பவர்களில் நாமும் இருக்க வேண்டுமென்றால் நாம் என்ன படிகளை எடுக்க வேண்டும் என்று பைபிள் நமக்கு சொல்கிறது.—மத்தேயு 24:37–39; 2 பேதுரு 3:5–7, 11.
ஆகையால், யெகோவா தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலமும், அவருடைய பூமிக்குரிய அமைப்பின் மூலமும் கொடுக்கும் போதனைகளை போற்றுதலோடு பெற்றுக்கொண்டு, அதன்படி நடப்போமாக. இதை செய்வது நமக்கு வெற்றியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரும், நம்முடைய ஜீவனையும் பாதுகாத்துக் கொள்வோம். (w90 10/1)