ரோமர்கள் செய்திகளில் மிகச்சிறந்ததைப் பெறுகிறார்கள்
பாவத்தன்மையுள்ள ஒரு மனிதன் கடவுளின் கண்களில் நீதிமானாயிருந்து நித்திய ஜீவனை எப்படிப் பெற்றுக்கொள்ளக்கூடும்? நம்முடைய பொது சகாப்தத்தில் இந்தக் கேள்வி கடும் விவாதங்களுக்குக் காரணமாய் இருந்தது. உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா? உங்களுக்குத் தெரியுமோ அல்லது தெரியாதோ, அந்தப் பிரச்னையைப் பற்றிய பவுலின் திறம்பட்ட விவாதத்தை பைபிளில் ரோமர் புத்தகத்தில் வாசிக்கக் கடன்பட்டிருக்கிறீர்கள். அவ்விதம் செய்வது, விசுவாசம், கிரியைகள், நீதி இவற்றுக்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே நிலவும் முக்கியமான உறவைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
பவுலும் ரோமரும்
ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பொ.ச. 56-ல் பவுல் எழுதிய ஒரு கடிதமே ரோமர் புத்தகமாகும். அவன் ஏன் அக்கடிதத்தை எழுதினான்? பொ.ச. 56-ல் இதுவரை பவுல் ரோமிற்குச் செல்லவில்லையென்றாலும், அவன் அங்கிருந்தப் பல கிறிஸ்தவர்களை அறிந்திருந்தான் என்பது தெளிவாக இருக்கிறது, ஏனெனில், தனது கடிதத்தில் அவர்களில் பலரைப் பெயரால் குறிப்பிட்டான். கூடுதலாக, அங்கிருந்த கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பொருட்டு பவுல் ரோமிற்குப் போக மிகவும் விரும்பினான். மேலும், தன்னுடைய ஸ்பெய்ன் தேச மிஷனரி சுற்றுமுறை பயணத்தின்போது வழியில் தங்குமிடமாக ரோம் நகரை வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.—ரோமர் 1:11, 12; 15:22-24.
ஆகிலும், இந்தக் கடிதத்தை எழுதுவதில் பவுலின் முக்கிய நோக்கம் யாதெனில், ஜீவனுக்கு வழிநடத்தும் நீதியை ஜனங்கள் எவ்விதம் பெறக்கூடும்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் பொருட்டாக இருந்தது. அந்த விடை, செய்திகளில் மிகச்சிறந்ததாக ஆகியிருக்கிறது. நீதியானது விசுவாசத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பவுல் இக்குறிப்பை விளங்கப்பண்ணுகிறான், மேலும் அவன் பின்வருமாறு எழுதும் தனது கடிதத்தின் பொருளாகவே இக்குறிப்பை வைக்கிறான்: “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.”—ரோமர் 1:16, 17.
விசுவாசமும் நியாயப்பிரமாணமும்
விசுவாசத்தின் அடிப்படையில் நீதியென கருதப்பட்டது என்பதை முதல் நூற்றாண்டில் எல்லாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அதிகம் தேவைப்பட்டதாக சிலர் குரல் எழுப்பினர். மோசேயின் நியாயப்பிரமாணத்தை யெகோவா ஏற்பாடுசெய்யவில்லையா? ஏவப்பட்ட அந்த ஏற்பாட்டிற்குக் கீழ்ப்பட்டிராத எவரும் எப்படி நீதிமானாயிருக்கக்கூடும்? (கலாத்தியர் 4:9-11, 21; 5:2-ஐப் பாருங்கள்.) பொ.ச. 49-ம் ஆண்டில், நியாயப்பிரமாணத்துக்கு இசைவாய் இருப்பதைப் பற்றிய கேள்வி எருசலேமில் இருந்த ஆளும் குழுவால் விவாதிக்கப்பட்டது. அவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட புறஜாதியார் விருத்தசேதனம் செய்யப்படவும், யூதர்களின் நியாயப்பிரமாண ஒழுங்குமுறைகளுக்குக் கீழ்ப்பட்டு இருக்கவும் தேவையில்லை என முடிவெடுத்தனர்.—அப்போஸ்தலர் 15:1, 2, 28, 29.
சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு, பிரபலமான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ரோமருக்குப் பவுல் தன்னுடைய கடிதத்தை எழுதினான். நிச்சயமாகவே, அவன் அதற்கு மேலும் சென்றான். புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு நியாயப்பிரமாணம் தேவையற்றது மட்டுமல்ல, ஆனால் அதற்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்திருந்த யூதர்களும் ஜீவனுக்கென்று நீதிமான்களாக அறிவிக்கப்படபோவதில்லை.
விசுவாசத்தின் மூலம் நீதி
ரோமர் புத்தகத்தை நீங்கள் வாசிக்கையில், எபிரெய வேதாகமங்களிலிருந்து பல மேற்கோள்களுடன் தன் கூற்றை ஆதரிப்பவனாய் பவுல் தன் விவாதத்தைக் கவனத்துடன் கட்டுவதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தனது ஏவப்பட்ட போதனைகளை ஏற்றுக்கொள்வதை ஒருவேளை கடினமாக உணர்ந்திருக்கும் யூதர்களிடம் பேசுகையில், அவன் பாசத்தையும் சிரத்தையையும் காட்டுகிறான். (ரோமர் 3:1, 2; 9:1-3) இருந்தபோதிலும், அவன் தெளிவாக அறிந்துகொள்ளும்படியும், கலகத்திற்கப்பாற்பட்ட தர்க்கரீதியாகவும் தனது விவாதத்தை அளிக்கிறான்.
ரோமர் முதல் அதிகாரத்திலிருந்து நான்காம் அதிகாரம் வரையிலும் அனைவரும் பாவக் குற்றமுள்ளவர்கள் என்ற சத்தியத்துடன் பவுல் ஆரம்பிக்கிறான். எனவே, விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே மனிதர் நீதிமான்களென அறிவிக்கப்படக்கூடும். மெய்தான், யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதன் மூலம் நீதிமான்களாக இருக்க முயற்சிசெய்தனர். ஆனால் அவர்கள் தவறினர். எனவே, பவுல் தைரியமாகச் சொல்கிறான்: “யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள்.” அவன் பிரபலமாகாத இந்தச் சத்தியத்தைப் பல வேதவாக்கிய மேற்கோள்களைக் கொண்டு நிரூபிக்கிறான்.—ரோமர் 3:9.
“நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை”யென்றால் என்ன நம்பிக்கை இருக்கிறது? இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவின் மீட்பு பலியின் அடிப்படையில் மனிதரை நீதிமான்களாகக் கடவுள் கருதுவார். (ரோமர் 3:20, 24) தாங்கள் இதைப் பெற்றுக்கொள்ள, அவர்கள் அந்தப் பலியின் மீது விசுவாசம் வைக்க வேண்டும். விசுவாசத்தின் அடிப்படையில் மனிதர் நீதிமான்களாக்கப்படுகின்றனர் என்ற இந்தப் போதனை ஏதோ புதுமையான ஒன்றா? இல்லவே இல்லை. ஆபிரகாமுங்கூட நியாயப்பிரமாணம் தொடங்கி வைக்கப்படும் முன்பே தனது விசுவாசத்தினால் நீதிமானாகக் கருதப்பட்டான்.—ரோமர் 4:3.
விசுவாசத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்திருக்கையில், 5-ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையைப் பற்றி பவுல் பேசுகிறான். இந்த இயேசுவின் நீதியான நடவடிக்கை, அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு, ஆதாமின் பாவத்தின் தீய விளைவுகளை ரத்து செய்கிறது. இவ்விதமாக, மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதனால் அல்ல, “ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.”—ரோமர் 5:18.
எதிர்ப்புகளுக்கு விடையளித்தல்
கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இராவிட்டால், கடவுளுடைய தகுதியற்ற தயவின் காரணமாக எப்படியும் நீதிமான்களாக எண்ணப்படுவார்கள் என்று எண்ணி அவர்கள் முன்சென்று பாவங்களைச் செய்யலாமல்லவா, அவர்களைத் தடுப்பதற்கு என்ன இருக்கிறது? பவுல் ரோமர் 6-வது அதிகாரத்தில் இந்த எதிர்ப்புக்கான விடையை அளிக்கிறான். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பழைய பாவத்தன்மையுள்ள வாழ்க்கைக்கு மரித்திருக்கின்றனர். இயேசுவுக்குள் அவர்களுடைய புதிய வாழ்க்கை தங்களுடைய மாம்ச பலவீனங்களை எதிர்த்துப் போரிடும் கடமையை வலியுறுத்துகிறது. அவன் கூறுகிறான்: “நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.”—ரோமர் 6:12.
ஆனால் யூதர்களாவது மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு இன்னும் இசைவாக இருக்கக்கூடாதா? 7-ம் அதிகாரத்தில், காரியம் அதுவல்ல என்பதாகப் பவுல் கவனத்துடன் விளக்குகிறான். திருமணமான ஒரு பெண் தன் கணவன் மரிக்கையில் அவனுடைய பிரமாணத்தின் கீழிருந்து எப்படி விடுவிக்கப்படுகிறாளோ அதே விதமாக இயேசுவின் மரணம் விசுவாசிக்கும் யூதர்களை நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருப்பதிலிருந்து விடுவித்தது. பவுல் கூறுகிறான்: “கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.”—ரோமர் 7:4.
நியாயப்பிரமாணத்தில் ஏதோ தவறு இருந்தது என்பதாக இது அர்த்தப்படுத்துகிறதா? ஒருபோதுமில்லை. நியாயப்பிரமாணம் பரிபூரமானதாக இருந்தது. பிரச்னை என்னவென்றால் அபூரண மனிதர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க முடியாது. பவுல் எழுதினான்: “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாய் இருக்கிறது. நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு மாம்சத்துக்குரியவனாய் இருக்கிறேன்.” கடவுளுடைய பரிபூரணப் பிரமாணத்தை ஓர் அபூரண மனிதன் கைக்கொள்ள முடியாததால் அவன் ஆக்கினைத்தீர்ப்பின்கீழ் வருகிறான். அப்படியானால், “இயேசு கிறிஸ்துவுக்குள் ஐக்கியப்பட்டிருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” என்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய குமாரர்களாக ஆவியால் சுவீகாரம் பெற்றிருக்கிறார்கள். யெகோவாவின் ஆவி அவர்கள் மாம்சத்தின் அபூரணங்களுடன் போராடும்படி அவர்களுக்கு உதவுகிறது. “தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.” (ரோமர் 7:14; 8:1, 33) கடவுளின் அன்பை விட்டு அவர்களை எதுவும் பிரிக்கமுடியாது.
நீதியும் மாம்சப்பிரகாரமான யூதர்களும்
நியாயப்பிரமாணம் இனிமேலும் தேவையற்றது என்றால், இஸ்ரவேலரை இது எங்கே விடுகிறது? இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டுவதை வாக்களிக்கும் எல்லா வேத வாக்கியங்களைப் பற்றியதென்ன? இக்கேள்விகள் ரோமர் 9 முதல் 11 அதிகாரங்களில் கையாளப்படுகின்றன. இஸ்ரவேலரில் வெறும் ஒரு சிறுபான்மையினரே இரட்சிக்கப்படுவர் என்றும், கடவுள் தம் கவனத்தை புறஜாதிகளிடம் திருப்பிடுவார் என்றும் எபிரெய வேத வாக்கியங்கள் முன்கூறின. இதற்கு ஒத்திசைவாக, இஸ்ரவேலரின் இரட்சிப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலர்களால் அல்ல, ஆனால் விசுவாசமுள்ள மாம்சப் பிரகாரமான யூதர்களை மையமாகக் கொண்டும் நேர்மை இருதயமுள்ள புறஜாதியினரால் பூர்த்தி செய்யப்பட்டதுமான கிறிஸ்தவ சபையால் நிறைவேற்றப்படுகிறது.—ரோமர் 10:19-21; 11:1, 5, 17-24.
நீதியின் நியமங்கள்
ரோமர் 12 முதல் 15 அதிகாரங்களில், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் தாங்கள் நீதிமான்கள் என அறிவிக்கப்படுவதற்கு ஒத்திசைவாக வாழத் தேவையான சில நடைமுறையான வழிகளைப் பவுல் தொடர்ந்து விவரிக்கிறான். உதாரணமாக, அவன் கூறுகிறான்: “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று . . . நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், . . . உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:1, 2) நன்மையின் வல்லமையில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தீமையைத் தீமையால் வெல்லக்கூடாது. “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு,” என்று அப்போஸ்தலன் எழுதினான்.—ரோமர் 12:21.
பவுலின் காலத்தில் ரோம் அரசியல் ஆட்சியின் மையமாக இருந்தது. எனவே, பவுல் கிறிஸ்தவர்களுக்கு ஞானமான ஆலோசனை கூறினான்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை.” (ரோமர் 13:1) கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் கொண்டுள்ள நடவடிக்கைகளும் நீதிக்கு இசைய வாழ்வதன் பாகமாக இருக்கின்றன. பவுல் கூறுகிறான்: “ஒருவரிடத்திலொருவர் அன்பு கூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்பு கூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.”—ரோமர் 13:8.
மேலுமாக கிறிஸ்தவர்கள் ஒருவர் மற்றொருவரின் மனச்சாட்சியைக் குறித்து கரிசனையுள்ளவர்களாக இருக்கவேண்டும், மற்றும் நியாயந்தீர்க்கிறவர்களாய் இருக்கக்கூடாது. பவுல் கூறினான்: “ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும்; அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.” (ரோமர் 14:19) ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் எல்லாக் காரியத்திலும் பொருத்திக்கொள்ள வேண்டிய எப்பேர்ப்பட்ட நேர்த்தியான புத்திமதி! பிறகு, 16-ம் அதிகாரத்தில், தனிப்பட்ட வாழ்த்துக்களையும் உற்சாகமான கடைசி வார்த்தைகளுடனும் புத்திமதியுடனும் பவுல் முடிக்கிறான்.
அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்கும்
ரோமர் புத்தகத்தில் சிந்திக்கப்பட்ட பொருள், முதல் நூற்றாண்டில் முக்கியமானதாய் இருந்தது, இன்று நம்முடைய நாளிலும் முக்கியமானதாக இருக்கிறது. நீதியும் நித்திய ஜீவனும் யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாகவே அக்கறைக்குரியதாய் இருக்கின்றன. மெய்தான், ரோமர் பத்தகம் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு சபைக்கு எழுதப்பட்டது. ஆனால் இன்று, யெகோவாவின் சாட்சிகளின் மிகப் பெரும்பான்மையோர் “திரள் கூட்டத்தாராய்” பூமிக்குரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். (வெளிப்படுத்துதல் 7:9) இருந்தபோதிலும், அவர்களுக்கும் இந்தக் கடிதம் ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டிருக்கிறது. அது என்ன?
கிறிஸ்தவர்கள் விசுவாசத்தால் நீதிமான்களாகக் கருதப்படுகின்றனர் என்று ரோமர் புத்தகம் நிரூபிக்கிறது. அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு, இது, அவர்கள் பரலோக ராஜ்யத்தில் இயேசுவுடன் உடன் அரசர்களாகும் நோக்குநிலையைக் குறித்தது. என்றபோதிலும், திரள் கூட்டத்தைச் சேர்ந்த அங்கத்தினரும் நீதிமான்களாகக் கருதப்படுகின்றனர், ஆனால் முற்பிதாவான ஆபிரகாமைப்போல ‘தேவனுடைய சிநேகிதர்’களாகக் கருதப்படுகின்றனர். (யாக்கோபு 2:21-23) அவர்களுடைய நீதியானது அவர்கள் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிக்கும் நோக்குநிலை உடையது, மேலும் அது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் காரியத்தைப் போலவே இயேசுவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. (சங்கீதம் 37:11; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9, 14) எனவே, ரோமர் புத்தகத்தில் பவுலின் நியாய விவாதம் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு இருப்பதைப் போலவே வேறே ஆடுகளுக்கும் அதிக அக்கறைக்குரிய ஒன்றாக இருக்கிறது. நாம் நீதிமான்களாகக் அறிவிக்கப்படுவதற்கு ஒத்திசைந்து வாழ்வதற்கான அந்தப் புத்தகத்தின் நேர்த்தியான ஆலோசனை எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமானதாய் இருக்கிறது.
டாக்டர்கள் நியூட்டன் மார்ஷல் ஹால் மற்றும் இர்விங் ஃபிரான்சிஸ் வுட் என்பவர்களால் பதிப்பாக்கப்பட்ட தி புக் ஆஃப் லைஃப் என்ற புத்தகம் கூறுகிறது: “தர்க்கரீதியான மற்றும் கோட்பாட்டு ரீதியான விதத்தில் (ரோமர் புத்தகம்) பவுலின் ஏவப்பட்ட போதனையின் உச்சநிலையை அடைகிறது. அது மரியாதையானதாகவும், சாதுரியமானதாகவும் இருக்கிறது, ஆனாலும் அதிகார பாணியில் எந்த வகையிலும் குறைபாடு இல்லாததாய் இருக்கிறது. . . . இக்கடிதத்தைப் படிப்பது அதற்கென்றே ஐசுவரியமான மற்றும் ஏராளமான வெகுமானத்தைக் கொண்டு வருகிறது.” நீங்கள் தாமே அந்தப் புத்தகத்தை வாசித்து, “இரட்சிப்புக்கேதுவான தேவபெலன்” அடங்கியுள்ள “நற்செய்தியில்” ஏன் களிகூரக்கூடாது.—ரோமர் 1:16. (w90 8⁄1)
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
“தேவனாலேயன்றி ஒரு (மதச்சார்பற்ற) அதிகாரமுமில்லை.” இது, கடவுள் ஒவ்வொரு தனி நபரையும் ஆளும் ஸ்தானத்தில் வைக்கிறார் என்று பொருள்படாது, மாறாக, மதச்சார்பற்ற ஆட்சியாளர்கள் கடவுளின் அனுமதியினால் மட்டுமே இருக்கின்றனர் என்று பொருள்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், மனித ஆட்சியாளர்கள் கடவுளால் முன்காணப்பட்டும், முன்னுரைக்கப்பட்டும், இவ்விதம் “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்ட”வையாயிருந்தன.—ரோமர் 13:1.
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
கிறிஸ்தவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” இது, அவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, தங்கள் வாழ்க்கையில் மாம்ச அக்கறைகளுக்குப் பதிலாக ஆவிக்குரிய அக்கறைகளை முதலாவதாக வைப்பதன் மூலம் பின்பற்ற வேண்டும். இவ்விதம், “துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமல்” இருக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.—ரோமர் 13:14.
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
பவுல் ரோமர்களைப் “பரிசுத்த முத்தத்தோடு ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்” என்று கூறினான். என்றபோதிலும், அவன் இங்கு ஒரு புதிய கிறிஸ்தவப் பழக்கத்தை அல்லது மத ஆசாரத்தை நிறுவிக்கொண்டில்லை. பவுலின் நாளில், நெற்றியில், உதடுகளில் அல்லது கைகளில் ஒரு முத்தமிடுதல் எப்போதுமே, வாழ்த்து, பாசம் அல்லது மரியாதை இவற்றுக்கான ஓர் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. எனவே, பவுல் தன்னுடைய நாளில் இருந்த ஒரு பழக்கத்தை மட்டுமே குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டிருந்தான்.—ரோமர் 16:16.