ஞாபகார்த்தத்தின்போது ‘நாம் என்னவாயிருக்கிறோம் என்று பகுத்தறிதல்’
“நாம்தாமே என்னவாக இருக்கிறோம் என்று பகுத்தறிந்தால் நாம் ஆக்கினையடையாதிருக்க . . . நியாயந்தீர்க்கப்படாதிருப்போம்.”—1 கொரிந்தியர் 11:31, 32, NW.
1. மெய்க் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாகவே எதைத் தவிர்க்க விரும்புகின்றனர்? ஏன்?
யெகோவாவால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவது என்பதை ஒரு கிறிஸ்தவன் விரும்ப மாட்டான். “சர்வலோக நியாயாதிபதி”க்குப் பிரியமாக நடக்காதிருப்பது, நாம் ‘உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதற்கும்’ இரட்சிப்பை இழப்பதற்கும் வழிநடத்தும். அது நாம் இயேசுவோடு பரலோக வாழ்க்கையை எதிர்பார்த்தவர்களாக இருந்தாலும், அல்லது ஒரு பூமிக்குரிய பரதீஸில் முடிவற்ற வாழ்க்கையை எதிர்பார்த்தவர்களாக இருந்தாலும் அப்படியிருக்கிறது.—ஆதியாகமம் 18:25; 1 கொரிந்தியர் 11:32.
2, 3. எந்த விஷயத்தில் நாம் ஆக்கினைத்தீர்ப்பைப் பெறக்கூடும்? இதைக் குறித்துப் பவுல் என்ன சொன்னான்?
2 ஒன்று கொரிந்தியர் 11-வது அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் அவருடைய நியாயத்தீர்ப்புக்குள் வரக்கூடிய ஒரு பகுதியைக் குறித்துப் பேசினான். அவனுடைய குறிப்புகள் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை நோக்கி சொல்லப்பட்டதாக இருந்தாலும், அவனுடைய புத்திமதி விசேஷமாக எல்லாருக்குமே இந்தச் சமயத்தில் அத்தியாவசிமாயிருக்கிறது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைப் பகுத்தறிவது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பதற்கும் நமக்கு உதவியாயிருக்கும். கர்த்தருடைய இராப்போஜனத்தின் வருடாந்தர ஆசரிப்பைக் குறித்து சிந்திப்பவனாய்ப் பவுல் பின்வருமாறு எழுதினான்:
3 “கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது (சரீரத்தை அர்த்தப்படுத்துகிறது, NW); என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது (புதிய உடன்படிக்கையை அர்த்தப்படுத்துகிறது, NW); நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 11:23–26.a
4. மார்ச் 30, 1991 மாலை என்ன நடைபெறும்?
4 மார்ச் 30, 1991 சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்தத்தை ஆசரிப்பார்கள். பொதுவாகக் கூடிவரும் தொகுதி ஒரு சபையாக இருக்கும், இப்படியாக இன்னும் சாட்சிகளாகாதவர்களுக்கும் அங்கே இடம் இருக்கும். அந்தக் கூட்டம் எப்படி நடைபெறும்? அங்கே ஒரு பைபிள் பேச்சு கொடுக்கப்படும். பின்பு, ஜெபத்தைத் தொடர்ந்து அப்பம் ஒவ்வொருவருக்கும் கடத்தப்படும். இன்னொரு ஜெபம் பாத்திரம் அல்லது திராட்சரசக்கோப்பை ஒவ்வொருவருக்கும் கடத்தப்படுவதற்கு அறிமுகமாக அமைகிறது. இந்தக் காரியங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட மத முறைமையாக அல்லது கண்டிப்பான வழிமுறையாக இருப்பதற்குப் பதிலாக, அப்பங்களின் அல்லது திராட்சரசக்கோப்பைகளின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றும் கடத்தப்படும் விதமும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப ஒழுங்குசெய்யப்படுகிறது. பெரும்பான்மையினர் அவற்றில் பங்கெடுக்காமல் அப்படியே அடுத்தவருக்குக் கடத்திவிட்டாலும், அங்கு வரும் எல்லாருமே அதைப் பெற்றிடச்செய்வதுதான் பிரதானமான காரியம். என்றபோதிலும் கடத்தப்படும் அந்தக் காரியங்கள் என்ன? அவை எதை அர்த்தப்படுத்துகின்றன? மேலும், நாம்தாமே என்னவாக இருக்கிறோம் என்பதைப் பகுத்தறிந்துகொள்வதற்கு நாம் முன்னதாகச் சிந்தித்துப்பார்க்கவேண்டியது என்ன?
“இது என் சரீரத்தை அர்த்தப்படுத்துகிறது”
5, 6. (எ) இயேசு அப்பத்தைக்கொண்டு என்ன செய்தார்? (பி) அவர் எப்படிப்பட்ட அப்பத்தைப் பயன்படுத்தினார்?
5 ஞாகார்த்தத்தைக் குறித்ததில் பவுல் “கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டது” என்ன என்பதை நாம் வாசித்தோம். அதேசமயத்தில் மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களின் பதிவுகளும் இருக்கின்றன, அவர்களில் ஒருவர் இந்த ஆசரிப்பை இயேசு ஆரம்பித்துவைத்தபோது அங்கு இருந்தவர். (1 கொரிந்தியர் 11:23; மத்தேயு 26:26–29; மாற்கு 14:22–25; லூக்கா 22:19, 20) இயேசு முதலாவது ஓர் அப்பத்தை எடுத்து, ஜெபித்து, அதைப் பிட்டு, பின்பு பரிமாறினார் என்று பதிவு காண்பிக்கிறது. அந்த அப்பம் என்னவாயிருந்தது? அதற்கு ஈடாக, இன்று என்ன பயன்படுத்தப்படுகிறது? அது எதை அர்த்தப்படுத்துகிறது அல்லது பிரதிநிதித்துவஞ்செய்கிறது?
6 அந்தச் சமயத்தில் யூதரின் பஸ்கா போஜனத்தின் பொருட்கள் அங்கு இருந்தன, அவற்றில் ஒன்று “சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பம்” என்று மோசே குறிப்பிட்ட புளிப்பில்லாத அப்பம். (உபாகமம் 16:3; யாத்திராகமம் 12:8) இந்த அப்பம் புளிப்பு, உப்பு, அல்லது சுவையூட்டப்படாமல் கோதுமை மாவால் செய்யப்பட்டது. புளிப்பில்லாது (எபிரெயு, மாட்ஸ்·ட்ஸாʹ) இருந்ததால், அது தட்டையாகவும் உடையும் தன்மை கொண்டதாயும் இருந்தது; அது புசிக்கப்படும் அளவுக்கு பிட்கப்படவேண்டியிருந்தது.—மாற்கு 6:41; 8:6; அப்போஸ்தலர் 27:35.
7. ஞாபகார்த்தத்தின்போது யெகோவாவின் சாட்சிகள் அப்பமாக உபயோகிப்பது என்ன?
7 கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் இயேசு புளிப்பில்லாத அப்பத்தைப் பயன்படுத்தினார், யெகோவாவின் சாட்சிகளும் இன்று அப்படியே செய்கின்றனர். சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் யூதரின் மாட்ஸாத் அல்லது புளிப்பில்லாத அப்பம் மாவூறல், வெங்காயம் அல்லது முட்டை போன்ற பொருட்கள் சேர்க்கப்படாமல் இருந்தால் இதற்குத் தகுந்ததாகும். (அந்தப் பொருட்கள் சேர்ந்த மாட்ஸாத் “சிறுமையின் அப்பம்” என்ற விவரிப்புக்குப் பொருந்தாது.) அல்லது யாரேனும் ஒருவரை கோதுமை மாவும் தண்ணீரும் கொண்டு புளிப்பில்லாத அப்பம் செய்யும்படி சபை மூப்பர்கள் கேட்டுக்கொள்ளலாம். கோதுமை மாவு கிடைக்காத இடங்களில் புளிப்பில்லாத அப்பம் பார்லி, அரிசி, சோளம் அல்லது வேறு தானியங்களின் மாவினால் செய்யப்படலாம். பிசைந்த மாவு மெல்லியதாகத் திரட்டப்பட்டு இலேசாக எண்ணெயிடப்பட்ட ஒரு தவாவில் வேகவைக்கப்படலாம்.
8. புளிப்பில்லாத அப்பம் ஏன் பொருத்தமான சின்னமாக இருக்கிறது? அதில் பங்குபெறுவது எதைக் குறிக்கிறது? (எபிரெயர் 10:5–7; 1 பேதுரு 4:1)
8 அப்படிப்பட்ட அப்பம் தகுதியானதே, ஏனென்றால் பைபிளில் கலப்பு அல்லது பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் புளிப்பு (ஈஸ்ட்) இல்லை. சபையிலுள்ள ஓர் ஒழுக்கங்கெட்ட மனிதனைக்குறித்து பவுல் கொடுத்த புத்திமதி: ‘கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும். ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்க பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறார். துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.’ (1 கொரிந்தியர் 5:6–8; மத்தேயு 13:33; 16:6, 12 ஒப்பிடவும்.) புளிப்பில்லாத அப்பம் பொருத்தமாகவே இயேசுவின் சரீரத்தை அடையாளப்படுத்துகிறது, ஏனென்றால் அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாக” இருந்தார். (எபிரெயர் 7:26) இயேசு அப்போஸ்தலர்களிடம் “இதை [அப்பத்தை] வாங்கி புசியுங்கள், இது என்னுடைய சரீரத்தை அர்த்தப்படுத்துகிறது” என்று சொன்னபோது அவர் அங்கே தம்முடைய பரிபூரண மனித உடலில் இருந்தார். (மத்தேயு 26:26, ஜேம்ஸ் மொஃபட்-ன் A New Translation of the Bible) அப்பத்தில் பங்குகொள்வது என்பது ஒருவர் தன்னுடைய சார்பாகக் கொடுக்கப்பட்ட இயேசுவுடைய பலியின் நன்மையில் விசுவாசம் வைத்து அதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமாகிறது. என்றபோதிலும், இதில் அதிகம் உட்பட்டிருக்கிறது.
ஓர் அர்த்தத்தோடுகூடிய திராட்சரசம்
9. பயன்படுத்தும்படியாக இயேசு சொன்ன அந்த இன்னொரு சின்னம் என்ன?
9 இயேசு இன்னொரு சின்னத்தைப் பயன்படுத்தினார்: “அவர் ஒரு கோப்பையையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்திய பின்பு அதை அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள், இது என்னுடைய இரத்தத்தை அர்த்தப்படுத்துகிறது, அவர்களுடைய பாவங்களுக்குப் பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கை.” (மத்தேயு 26:27, 28, மொஃபட்) அவர் ஒவ்வொருவராகக் கடத்திய அந்தச் சமாதானப் பாத்திரம் அல்லது கோப்பை என்ன? நாம்தாமே என்னவாக இருக்கிறோம் என்பதைப் பகுத்தறிந்துகொள்வதற்கு முற்படும்போது அது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
10. யூதர்களின் பஸ்காவில் திராட்சரசம் எப்படி பயன்படுத்தப்பட ஆரம்பித்தது?
10 மோசே ஆரம்பத்தில் பஸ்கா போஜனத்தைப்பற்றி விவரித்தபோது, அவன் எந்தவித பானத்தையும் குறிப்பிடவில்லை. திராட்சரசம் பஸ்கா ஆசரிப்பில் வெகு பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது, ஒருவேளை பொ.ச.மு. இரண்டாவது நூற்றாண்டில்b இருக்கலாம் என்று பல அறிஞர்கள் நம்புகின்றனர். எப்படியிருப்பினும், முதல் நூற்றாண்டிலே இந்தப் போஜனத்தில் பொதுவாகத் திராட்சரசம் பயன்படுத்தப்பட்டது, இயேசு அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஞாபகார்த்த ஆசரிப்பை ஆரம்பித்தபோது அவர் பஸ்கா ஆசரிப்பின் திராட்சரசத்தைத்தான் பயன்படுத்தினார்.
11. கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது என்ன விதமான திராட்சரசம் பயன்படுத்தப்படுவது தகுந்ததாயிருக்கும்?
11 யூதரின் பஸ்கா திராட்சப்பழங்களின் அறுவடைக்கு வெகு காலத்துக்குப் பின்னரே இருந்ததால், இயேசு புளிக்கவைக்கப்படாத திராட்சப்பழ ரசத்தைப் பயன்படுத்தியிருக்க மாட்டார், ஆனால் தம்முடைய இரத்தத்தை எளிதில் பிரதிநிதித்துவஞ்செய்யும் வகையில் சிவப்பு திராட்சரசத்தையே பயன்படுத்தியிருப்பார். (வெளிப்படுத்துதல் 14:20 ஒப்பிடவும்.) இயேசுவின் இரத்தம் பெருக்கப்படவேண்டிய அவசியமிருக்கவில்லையாதலால், (போர்ச்சுகல் திராட்சைத்தேறல், முந்திரி அல்லது கொடிமுந்திரித்தேறல் போன்று) பிராந்தி கலந்த திராட்சரசத்துக்குப் பதிலாக, (பல்வேறு மதுவகை) சேர்க்கப்பட்ட அல்லது நறுமணச் சுவையூட்டப்பட்ட அல்லது மூலிகைகள் சேர்க்கப்பட்ட திராட்சரசத்துக்குப் பதிலாகத் ,தெளிவான திராட்சரசம் தகுந்ததாயிருக்கிறது. என்றபோதிலும் ஒரு திராட்சரசம் எப்படி செய்யப்பட்டது, அதற்கு சராசரி சுவை கொடுப்பதற்காக புளிக்கும் தருவாயில் சற்றே சர்க்கரை அல்லது வெறியம் அல்லது கெட்டுப்போவதைத் தடுப்பதற்காகச்c சற்றே கந்தகக்காடி சேர்க்கப்பட்டதா என்பது குறித்து நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அநேக சபைகள் கடைகளில் கிடைக்கும் (ஷியான்டி, பர்கண்டி, போஷொலே, அல்லது க்ளாரட் போன்ற) சிவப்பு திராட்சரசத்தை அல்லது வீட்டில் எளியமுறையில் தயாரிக்கப்படும் சிவப்பு திராட்சரசத்தைப் பயன்படுத்துகின்றனர். திராட்சரசம் அல்லது அப்பம் வெறுமென சின்னங்கள்தான், அல்லது அடையாளப்படுத்தும் காரியங்கள்தான், எனவே பயன்படுத்தப்படாத திராட்சரசம் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் சாதாரண உணவாகவோ, அல்லது பானமாகவோ பயன்படுத்தப்படலாம்.
12. திராட்சரசம் என்ன அடையாள அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்று இயேசு விளக்கினார்?
12 பஸ்கா இரவின்போது இயேசு தம்முடைய இரத்தத்தைக் குறித்துப் பேசினார் என்ற உண்மைதானே ஆட்டுக்குட்டியின் இரத்தம் எகிப்தில் பயன்படுத்தப்பட்டதை நினைவுக்குக் கொண்டுவந்திருக்கக்கூடும். ஆனால் இயேசு எவ்விதம் ஒரு வித்தியாசமான ஒப்பீட்டைச் செய்தார் என்பதைக் கவனியுங்கள்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” (புதிய உடன்படிக்கையை அர்த்தப்படுத்துகிறது, NW) (லூக்கா 22:20) கடவுள் இதற்கு முன்பாக மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருடன் ஓர் உடன்படிக்கை செய்திருந்தார், அது மிருக பலிகளின் இரத்தத்தால் பிரதிஷ்டைப்பண்ணப்பட்டது. அந்தப் பலிகளின் இரத்தத்திற்கும் இயேசுவின் இரத்தத்திற்கும் தொடர்பு இருந்தது. கடவுள் தம்முடைய மக்களின் ஒரு தேசத்துடன் செய்த ஓர் உடன்படிக்கையின் பிரதிஷ்டையில் இரண்டுமே உட்பட்டிருந்தன. (யாத்திராகமம் 24:3–8; எபிரெயர் 9:17–20) நியாயப்பிரமாண உடன்படிக்கையின் ஓர் அம்சம் என்னவென்றால், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ராஜா-ஆசாரியர்களைக் கொண்ட தேசமாக ஆவதற்கான வாய்ப்பு இருந்தது. (யாத்திராகமம் 19:5, 6) என்றபோதிலும், இஸ்ரவேல் யெகோவாவின் உடன்படிக்கையைப் பின்பற்றத் தவறியபோது, தாம் “முதலாம் உடன்படிக்கை”யினிடத்தில் “ஒரு புதிய உடன்படிக்கையை” ஏற்படுத்துவார் என்று அவர் சொன்னார். (எபிரெயர் 9:1, 15; எரேமியா 31:31–34) தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு இயேசு இப்பொழுது கடத்திய திராட்சரசப் பாத்திரம் இந்தப் புதிய உடன்படிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்தது.
13, 14. (எ) புதிய உடன்படிக்கைக்குள் இருப்பது என்பதன் அர்த்தம் என்ன? (பி) ஒருவர் சின்னங்களில் பங்குபெறுவது என்ன காரியத்தை அர்த்தப்படுத்துகிறது?
13 இந்தப் புதிய உடன்படிக்கைக்குள் வந்த கிறிஸ்தவர்கள் ராஜா-ஆசாரியர்களாலான ஓர் ஆவிக்குரிய தேசமாக ஆகின்றனர். (கலாத்தியர் 6:16) அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு எழுதினான்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) அவர்கள் என்ன இரட்சிப்பைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது—இயேசுவோடு உடன் அரசர்களாக பரலோக வாழ்க்கை. வெளிப்படுத்துதல் 20:6 இதை உறுதிப்படுத்துகிறது: “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; . . . இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”
14 உண்மை என்னவெனில், சின்னமாக அமைந்த அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்ளும்படியாகத் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் சொன்ன பின்பு, இயேசு அவர்கள் ‘தம்முடைய ராஜ்யத்திலே தம்முடைய பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவார்கள்’ என்று சொன்னார். (லூக்கா 22:28–30) எனவே, ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்வது என்பது இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் நித்திய ஜீவனை எங்கு பெற்றுக்கொள்கிறவனாய் இருந்தாலும், அவன் மீட்கும்பொருளை ஏற்று அதில் விசுவாசம் வைக்க வேண்டும். (மத்தேயு 20:28; யோவான் 6:51) ஆனால் சின்னங்களில் பங்குகொள்வது ஒருவர் புதிய உடன்படிக்கைக்குள் இருக்கிறார், இயேசுவோடு அவருடைய ராஜ்யத்தில் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
ஞாபகார்த்தத்தின்போது பகுத்தறிந்துகொள்ளுதல் அவசியம்
15. கடவுளுடைய ஊழியர்களுக்கு இயேசு எவ்விதம் ஒரு புதிய நம்பிக்கையை அறிமுகப்படுத்தினார்?
15 முந்திய கட்டுரை விளக்கியதுபோல, இயேசுவின் காலத்திற்கு முன்பு கடவுளுடைய உத்தம ஊழியர்கள் பரலோகத்திற்குச் செல்லும் நம்பிக்கை உடையவர்களாயில்லை. ஆதியிலிருந்து மனிதவர்க்கத்தின் வீடாக இருந்துவரும் பூமியில் அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். ஆவியில் உயிர்த்தெழுப்பப்படுவதில் முதல் நபராக இருந்தது இயேசு கிறிஸ்து. அவர்தாமே மனிதவர்க்கத்திலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரில் முதல் நபரானார். (எபேசியர் 1:20–22; 1 பேதுரு 3:18, 22) பின்வருமாறு எழுதுவதன் மூலம் பவுல் இதை உறுதிப்படுத்தினார்: “நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு . . . அவருடைய [இயேசுவானவருடைய] இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது.” (எபிரெயர் 10:19, 20) இயேசு அந்த வழியைத் திறந்த பின்பு பின்தொடர்வது யார்?
16. அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்கிறவர்களுக்கு எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது?
16 கர்த்தருடைய இராப்போஜனத்தை இயேசு ஆரம்பித்துவைத்த அன்று இராத்திரியிலே, தம்முடைய உத்தம அப்போஸ்தலர்களுக்காகப் பரலோகத்திலே ஓர் இடத்தை ஆயத்தம்பண்ணுவதாக அவர்களிடம் சொன்னார். (யோவான் 14:2, 3) என்றபோதிலும் அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்ளுகிறவர்கள் தம்முடைய ராஜ்யத்தில் நியாயந்தீர்ப்பதற்காக சிங்காசனங்களில் உட்காருவார்கள் என்றும் இயேசு சொன்னதை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். அவர்கள் அந்த அப்போஸ்தலர்களாக மட்டுமே இருப்பார்களா? இல்லை, பின்னர் மற்ற கிறிஸ்தவர்களுங்கூட ஜெயங்கொண்டு ‘சிங்காசனத்தில் இயேசுவோடேகூட உட்காருவார்கள்’ என்றும் ‘பூமியின்மேல் அரசாள ஒரு ராஜ்யமாகவும் ஆசாரியர்களாகவும்’ ஆவார்கள் என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் அறிந்துகொண்டான். (வெளிப்படுத்துதல் 3:21; 5:10) மேலும் “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்” கிறிஸ்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் யோவான் அறிந்துகொண்டான்—1,44,000. (வெளிப்படுத்துதல் 14:1–3) காலாகாலமாகக் கடவுளைத் தொழுதுகொண்டுவந்திருக்கும் அனைவருடனும் ஒப்பிடுகையில், இது ஒரு சிறு தொகுதியாக, இது ஒரு “சிறு மந்தை”யாக இருப்பதால், ஞாபகார்த்தத்தின்போது விசேஷமாக பகுத்தறிந்துகொள்ளுதல் அவசியமாயிருக்கிறது.—லூக்கா 12:32.
17, 18. (எ) கொரிந்துவிலுள்ள சில கிறிஸ்தவர்கள் என்ன பழக்கத்திற்குள் வந்துவிட்டார்கள்? (பி) உணவையும் பானத்தையும் மிதமிஞ்சி அருந்துவது ஏன் அவ்வளவு வினைமையானது? (எபிரெயர் 10:28–31)
17 அப்போஸ்தலரில் சிலர் இன்னும் உயிருடனிருந்த அந்தச் சமயத்தில், கிறிஸ்தவர்களைப் “பரிசுத்தவான்களாகும்படி” அழைத்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குறிப்பைக் கொண்டுவந்தான். அங்கே சின்னங்களில் பங்குகொள்ளக் கடமைப்பட்டவர்களின் மத்தியில் ஒரு கெட்ட பழக்கம் உருவாகிவிட்டது என்று பவுல் சொன்னான். சிலர் முன்னதாகவே போஜனத்தை அருந்தினார்கள், அப்பொழுது அவர்கள் அளவுக்கு மிஞ்சி புசித்ததாலும் அல்லது குடித்ததாலும் அது அவர்களை அரைதூக்க நிலைக்குள்ளாக்கி, உணர்வுகளை மந்தப்படுத்தியது. இதன் விளைவாக, அவர்கள் “சரீரம் இன்னதென்று பகுத்தறியக்”கூடாதவர்களாக, இயேசுவின் மாம்ச சரீரம் அப்பத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்பதை பகுத்தறிந்துகொள்ளக்கூடாதவர்களாக இருந்தார்கள். அது அந்தளவுக்கு வினைமையானதா? ஆம்! அபாத்திரராய்ப் பங்குகொள்வதனால், அவர்கள் “கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவர்க”ளானார்கள். அவர்கள் மனதிலும் ஆவியிலும் கவனமுள்ளவர்களாக இருந்தால், ‘தாங்கள் என்னவாயிருக்கிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்ளக்கூடும், மற்றும் நியாயந்தீர்க்கப்படமாட்டார்கள்.’—1 கொரிந்தியர் 1:2; 11:20–22, 27–31.
18 அந்தக் கிறிஸ்தவர்கள் எதைப் பகுத்தறிந்துகொள்ள வேண்டும், எப்படி? முக்கியமாக, பரலோக வாழ்க்கைக்குரிய 1,44,000 சுதந்தரவாளிகளில் ஒருவராக இருக்கும் அந்த அழைப்பைத் தங்களுடைய இருதயத்திலும் மனதிலும் போற்றிட வேண்டும். இதை அவர்கள் எப்படி நிதானித்தறிந்தார்கள்? அப்போஸ்தலர் காலத்திலிருந்து கடவுள் தெரிந்துகொண்டுவரும் இந்தச் சிறிய தொகுதியின் பாகமாக இருப்பதாக இன்றுள்ள அநேகர் நம்பவேண்டுமா?
19. 1990 ஞாபகார்த்தத்தின்போது வெளிப்பட்ட நிலை என்ன?
19 உண்மையில் பார்க்கப்போனால், இன்றுள்ள கிறிஸ்தவர்களில் மிகவும் சொற்பமான ஒரு சிறுபான்மையினரே தங்களைக் குறித்து இவ்விதம் நிதானித்து அறிந்தவர்களாய் இருக்கின்றனர். 1990-ன் கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் பூமி முழுவதும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் 94,79,000 பேர் கூடிவந்திருந்தனர். ஏறக்குறைய 8,700 பேர் ‘பரமராஜ்யத்தை அடையும்படி இரட்சிக்கப்படும்’ நம்பிக்கையுடையவர்களாக வெளிப்படத்தெரிவித்தனர். (2 தீமோத்தேயு 4:18) பெரும்பான்மையினர்—ஆம், கூடியிருந்த இலட்சக்கணக்கான உத்தமமுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட மற்ற கிறிஸ்தவர்கள்—தங்களுடைய உறுதியான நம்பிக்கை பூமியில் என்றும் வாழ்வது என்பதை பகுத்தறிந்தவர்களாயிருந்தனர்.
20. 1,44,000 பேரைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு எப்படி உணர்த்தப்படுகிறது? (1 யோவான் 2:27)
20 பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று கடவுள் பரலோக வாழ்க்கைக்கான 1,44,000 பேரைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். இந்த நம்பிக்கை இயேசுவின் காலத்திற்கு முன் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் கொண்டிராத புதிய நம்பிக்கையாயிருந்ததால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்த நம்பிக்கையை எப்படி அறிந்துகொள்வார்கள், அல்லது நிச்சயப்படுத்திக்கொள்வார்கள்? கடவுளுடைய பரிசுத்த ஆவியால் இதற்கான சாட்சியைப் பெறுவதன் மூலம் இதை அவர்கள் நிதானித்தறிந்துகொள்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியை உண்மையில் பார்க்கிறார்கள் (அது ஓர் ஆள் அல்ல) அல்லது ஆவி தங்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்வதாக ஒரு மனக்காட்சியை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது ஆவிப் பிரதேசத்திலிருந்து குரல்களைக் கேட்கிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. பவுல் விளக்குகிறான்: “நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று ஆவி நம்முடைய ஆவியுடனேகூட சாட்சி கொடுக்கிறது . . . நாம் சுதந்தரருமாமே: கடவுளுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுடைய உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.”—ரோமர் 8:16, 17, NW.
21. (எ) தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருக்கிறது என்பது அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுக்கு எப்படித் தெரியும்? (1 கொரிந்தியர் 10:15–17) (பி) அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள்? அவர்கள் எப்படி அடக்கத்தோடு தங்களுடைய நம்பிக்கைக்கு சான்றளிக்கிறார்கள்?
21 இந்தச் சாட்சியம், அல்லது மெய்யுணர்வு, அவர்களுடைய எண்ணத்திலும் நம்பிக்கையிலும் ஒரு திசைத்திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இன்னும் மனிதர்களாக இருக்கின்றனர், யெகோவாவின் பூமிக்குரிய சிருஷ்டிப்பின் நல்ல காரியங்களை அனுபவித்து மகிழுகிறார்கள், என்றபோதிலும் அவர்களுடைய வாழ்க்கையின் பிரதான வழியும் அக்கறைகளும் கிறிஸ்துவோடு உடன்சுதந்தரவாளிகளாக இருப்பதாகும். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இந்த நோக்குநிலைக்குள் வரவில்லை. அவர்கள் எல்லாரைப்போலவும் தனிப்பட்ட ஆட்கள், தங்களுடைய நோக்குநிலைகளிலும் நடத்தையிலும் சமநிலையுடன் இருப்பார்கள். என்றபோதிலும், கடவுளுடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய்த் தங்களுடைய அழைப்பைக் குறித்து நிச்சயமாயிருக்கிறார்கள், அதன்பேரில் அவர்களுக்கு எந்தவித தனிப்பட்ட சந்தேகமும் தொடருவதில்லை. உண்மையுள்ளவர்களாய் நிரூபித்தால், தங்களுடைய இரட்சிப்பு பரலோகத்துக்குரியதாய் இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாயிருக்கிறார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 2:10–12) இயேசுவின் பலி தங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் புரிந்தவர்களாயும், தாங்கள் ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்பதை பகுத்தறிந்துகொண்டவர்களாயும் அவர்கள் ஞாபகார்த்த சின்னங்களில் அடக்கத்தோடு பங்குகொள்கிறார்கள்.
22. கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு வருகைதரும் பெரும்பான்மையினர் எதைப் பகுத்தறிந்துகொள்கிறவர்களாக இருப்பார்கள்?
22 கீழ்ப்படிதலுள்ளவர்களாக மார்ச் 30 அன்று கூடிவருகிறவர்களில் பெரும்பான்மையினருக்கு அந்த நம்பிக்கை கிடையாது, ஏனென்றால் பரலோக வாழ்க்கைக்கு அழைப்பவராக கடவுள் அவர்களைத் தம்முடைய ஆவியால் அபிஷேகம் செய்யவில்லை. நாம் கவனித்ததுபோல, கடவுள் இந்த 1,44,000 பேரை அப்போஸ்தலரின் நாட்களில் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். ஆனால் அந்த அழைப்பு நிறைவுபெறுகையில், அவரைத் தொழுதுகொள்ள வரும் மற்றவர்கள், பரலோகத்தில் ஜீவனுக்கான வழியை இயேசு திறந்தது வைப்பதற்கு முன்பாக மரித்த மோசே, தாவீது, முழுக்காட்டுபவனாகிய யோவான் ஆகியவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை உடையவர்களாயிருப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்படவேண்டியதே. இப்படியாக, இன்றிருக்கும் உத்தமமான, வைராக்கியமுள்ள இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்வதில்லை. அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுடைய முறையான நம்பிக்கையை மனத்தால் உணர்கின்றனர் என்ற கருத்தில் கடவுளுடைய முன்னிலையில் தாங்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை பகுத்தறிந்துகொள்கிறார்கள். தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்று, பின்னர் பூமியில் முடிவில்லா வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் இயேசுவின் இரத்தத்திலிருந்தும் சரீரத்திலிருந்தும் நன்மை அடைகிறார்கள்.—1 பேதுரு 1:19; 2:24; வெளிப்படுத்துதல் 7:9, 15.
23. ஞாபகார்த்தம் ஏன் ஒரு மகிழ்ச்சியுள்ள ஆசரிப்பாக இருக்கும்? (2 நாளாகமம் 30:21-ஐ ஒப்பிடவும்.)
23 எனவே நாம் மார்ச் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் அந்த மகிழ்ச்சியுள்ள ஆசரிப்பை எதிர்நோக்கியவர்களாய் இருப்போமாக. அது நம்மைப் பகுத்தறிவதற்கு ஒரு சமயமாக இருப்பது மட்டுமின்றி, மகிழ்ச்சிக்குரிய சமயமாகவும் இருக்கும். அப்பத்திலும் திராட்சரசத்திலும் சரியாகவே கீழ்ப்படிதலுள்ளவர்களாய் பங்குகொள்ளும் பரலோக நம்பிக்கையுடைய சிறுபான்மையினருக்கு மகிழ்ச்சி. (வெளிப்படுத்துதல் 19:7) அதேசமயத்தில் அன்று மாலை ஆசரிப்பில் கலந்துகொண்டு கற்றுக்கொள்கிறவர்களும், அந்த அர்த்தமுள்ள ஆசரிப்பை இந்தப் பூமியில் என்றுமாய் நினைவில் கொண்டிருக்கும் நம்பிக்கையுடைய இலட்சக்கணக்கான சந்தோஷமுள்ள கிறிஸ்தவர்களுக்கும் மகிழ்ச்சி.—யோவான் 3:29. (w90 2/15)
[அடிக்குறிப்புகள்]
a “கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவு அன்று அப்பத்தை எடுத்தார்; நன்றி செலுத்தி, அதைப் பிட்டு அவர் சொன்னார்: ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; இதை என்னுடைய ஞாபகார்த்தமாகச் செய்யுங்கள்.’ அதுபோல போஜனம்பண்ணின பின்பு பாத்திரத்தை எடுத்து அவர் சொன்னார்: ‘இந்தப் பாத்திரம் என்னுடைய இரத்தத்தால் முத்திரை போடப்பட்ட புதிய உடன்படிக்கை; இதைப் பானம்பண்ணும்போதெல்லாம், என் ஞாபகார்த்தமாக இதைச் செய்யுங்கள்.’”—பவுல் எழுதிய நிருபங்களின் ஒரு விளக்க உரை, F.F. புரூஸ்.
b திராட்சரசம் ஏன் சேர்க்கப்பட்டது என்பதற்கு ஓர் அறிஞர் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்: “[பஸ்கா] இனிமேலும் ஆண்களைக் கொண்ட பயபக்திக்குரிய ஓர் ஆண்டு கூட்டமாக இருப்பதற்கில்லை; அது குடும்பப் பண்டிகைக்குரிய ஒரு நிகழ்ச்சியாக ஆகவிருந்தது, அதில் திராட்சரசம் பருகுதல் இயல்பான ஓர் இடத்தைப் பெற்றது.”—எபிரெயர் பஸ்கா—ஆரம்பக் காலங்களிலிருந்து கி.பி. 70 மட்டும், J.B. செகல்.
c திராட்சரசத்தை தூய்மையானதாக்க அல்லது அதன் நிறத்தையும் சுவையையும் மேன்மைப்படுத்த பூர்வக்காலங்கள் முதல் உப்பு, முட்டையின் வெள்ளைப்பகுதி, மற்றும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது, ரோமர்கள் திராட்சரசம் செய்யும்போது அது கெட்டுப்போகாதபடிக்கு கந்தகக்காடியும் பயன்படுத்தினர்.
உங்களுடைய விடைகள் என்ன?
◻ ஞாபகார்த்தத்தின்போது புளிப்பில்லாத அப்பம் ஏன் ஒவ்வொருவருக்கும் கடத்தப்படுகிறது? அது எதை அடையாளப்படுத்துகிறது?
◻ கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது ஒவ்வொருவருக்கும் கடத்தப்படும் பாத்திரம் அல்லது கோப்பை என்ன? அது எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது?
◻ ஞாபகார்த்த ஆசரிப்பு சம்பந்தமாக ஏன் பகுத்தறிந்துகொள்ளுதல் தேவைப்படுகிறது?
◻ வரும் ஞாபகார்த்தத்தை ஏன் எதிர்நோக்கியிருக்கிறீர்கள்?