பொரூண்டியில் துன்புறுத்தல் தொடருகிறது
1989-ம் ஆண்டின் முற்பகுதியில், பொரூண்டி என்ற மத்திய ஆப்பிரிக்க தேசத்தின் ஆளுநர்கள் யெகோவாவின் சாட்சிகளின் மீது துன்புறுத்தலின் ஓர் அலையை கட்டவிழ்த்துவிட்டார்கள். 1989, அக்டோபர் 1, காவற்கோபுரம் பிரதியில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, தொல்லைகொடுத்தல், கைது செய்தல், அடித்தல் மற்றும் கொடூரமான மற்ற நடவடிக்கைகளையும் பயன்படுத்தி அதிகாரிகள் சாட்சிகளை தங்களுடைய விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்த முயற்சி செய்தனர். அப்போதிருந்து நிலைமை என்னவாக இருந்துவருகிறது.
கினின்யா மற்றும் கிட்டிகா என்ற இடங்களுக்கு மாவட்ட கண்காணி சென்றிருந்த சமயத்தில், கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, சபையின் அங்கத்தினர்களைக் கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்ததாக பொரூண்டியிலிருந்து வெளியான மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. மாவட்ட மற்றும் வட்டார கண்காணிகள் தப்பித்துக் கொண்டனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் தொடக்கப் பள்ளியிலிருந்த ஒரு சிறு பெண்ணும் அடங்குவர். அடுத்த நாள், கைது செய்யப்பட்ட சாட்சிகள் ஆளுநரின் முன்வந்து தாங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கமுடியாது என்பதை விரிவாக விளக்கினர். மறுபடியுமாக அவர்கள் அடிக்கப்பட்டார்கள். மற்ற அறிக்கைகள் இதேப் போன்ற சம்பவங்களைத் தெரிவிக்கின்றன.
பொரூண்டியிலுள்ள பொறுப்புள்ள கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் எழுதுகிறார்: “எந்த ஒரு யெகோவாவின் சாட்சியும் திருடு, கொலை அல்லது கலகம் செய்ததற்காக கைது செய்யப்படவில்லை. சாட்சிகளைத் தண்டிக்க அதிகாரிகளுக்கு உண்மையான ஆதாரமிருக்குமானால், சமாதானமுள்ள குடிமக்களை, அவர்களுடைய உடைமைகளைப் பறித்து, காட்டு மிருகங்களைப்போல துரத்தி வேதனைக்குட்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை பொதுமக்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கட்டும். உட்புறப் பகுதியிலுள்ள அநேக சகோதரர்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, அகதிகள்போல வாழுகிறார்கள். தற்போது சிறையில் இருக்கும் தன் கணவனை விடுவித்துக் கொண்டுவரும் முயற்சியில் ஒரு சகோதரி பல அதிகாரிகளைச் சென்று பார்த்திருக்கிறாள். ‘எங்களுடைய தேசத்தின் வலிமையைக் .குறைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து நீங்கள் பணம் பெற்றுக் கொண்டிருக்கையில், எங்களால் ஒருபோதும் உன் கணவனை விடுதலை செய்ய முடியாது’ என்ற பதிலோடு அவள் வெளியே அனுப்பிவிடப்பட்டிருக்கிறாள். என்னே பொய்க் குற்றச்சாட்டு!” என்றபோதிலும், பொரூண்டியிலிருந்து நற்செய்தி வெளிவந்திருக்கிறது. அங்குள்ள சாட்சிகளை அச்சுறுத்தி அடக்கவோ அல்லது மிரட்டி அடக்கவோ முடியவில்லை. விவேகமாக, ஆனால் நிச்சயமாகவே நற்செய்தியின் பிரசங்கிப்பு விரிவாகி வருகிறது. யெகோவாவில் முழு நம்பிக்கையோடு தங்களால் நிலைநிற்க முடியும் என்பதாக சகோதர சகோதரிகள் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கடுந்துயரத்தை வெளிப்படுத்தும் அநேக கடிதங்கள் பொரூண்டிக்கு எழுதப்பட்டுவிட்டன. பொரூண்டி யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக இரக்கமற்ற துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது இன்னும் பல கடிதங்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
[பக்கம் 15-ன் பெட்டி]
பொரூண்டி ஜனாதிபதியின் விலாசம்:
His Excellency
Major Pierre Buyoya
President of the
Republic of Burundi
Bujumbura
REPUBLIC OF BURUNDI