கடவுளுடைய நற்குணத்தின் பரப்பெல்லை அதிசயமானது
கடவுள் நல்லவர்! என்ற கூற்றை நீங்கள் எத்தனை முறை கேட்டிருக்கிறீர்கள், அல்லது நீங்கள்தாமே பயன்படுத்தியிருப்பீர்கள்? ஆனால் உங்கள் சார்பாக வெளிப்படுத்தப்படும் கடவுளுடைய நற்குணத்தின் முழு பரப்பெல்லை குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப்பார்த்ததுண்டா? இப்படிப்பட்ட தியானம், நாம் வணங்கும் கடவுளுக்கு நம்முடைய போற்றுதலை ஆழப்படுத்துவதாயிருக்கிறது.
என்றபோதிலும், முதலாவது, நற்குணம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உண்மைதான், நற்குணம் என்பது துன்மார்க்கமாய் இருப்பதற்கு எதிராக நல்லவராக இருக்கும் பண்பு. ஆனால் நற்குணம் அதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. அது செயல்படும் ஒரு பண்பு. ஒரு நல்ல நபர் நல்லது செய்கிறார். கடவுள் நற்குணத்தவராய் நமக்கு ஏராளமான நல்லது செய்கிறார், இது நம்முடைய இருதயம் அவரை நேசிக்கும்படிச் செய்கிறது.
கடவுளுடைய நற்குணத்தின் பரந்த எல்லை, சீனாய் வனாந்திரத்தில் மோசேயிடம் சொல்லப்பட்ட வார்த்தைகளில் காணப்படுகிறது. அங்கே தமக்கு உண்மையுள்ள ஊழியனாயிருந்த மோசேக்கு இப்படியாக வாக்களித்தார்: “என் தயாளத்தை (நற்குணம், NW) எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுவேன்.” அந்த வாக்கை நிறைவேற்றுகிறவராயும் தம்முடைய சொந்த நாமத்தைப் பயன்படுத்தியும் கடவுள் மேலுமாகச் சொல்லுகிறார்: “யெகோவா யெகோவா, . . . உருக்கமும் இரக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்; ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று ஒருக்காலும் தீர்க்காதவர்.”—யாத்திராகமம் 33:19; 34:6, 7.
எனவே கடவுளுடைய நற்குணம் அவருடைய இரக்கம், மற்றும் அவருடைய கிருபை, அன்புடன்கூடிய தயை, அவருடைய சத்தியம் ஆகியவற்றை உட்படுத்துகிறது. மேலும் “நீடிய சாந்தமும்”, நீடிய பொறுமையுமுள்ள காரியத்திலும் அவருடைய நற்குணம் வெளிப்படுகிறது. என்றபோதிலும் அவர் பாவத்தைக் கண்டிக்காமல் அவர்களுடைய மனம்போனபோக்கில் அனுமதிக்கிற ஒரு பெற்றோரைப்போல் இருக்கிறார் என்று அர்த்தமாகாது. மனந்திரும்பாத பாவிகளைக் “குற்றமற்றவர் என்று ஒருக்காலும் தீர்க்காதவர்.” துன்மார்க்கம் கண்டிக்கப்படாமலிருப்பதை ஒரு நல்ல கடவுள் அனுமதிக்கமாட்டார்.
கடவுளுடைய மிகுந்த நற்குணம்
கடவுள் தம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தியிருக்கும் சில வழிகளைக் கவனியுங்கள். முதலாவது குறிப்பிடுவதற்கு, முதன்முதலில் பூமியைப் படைத்தபோது அவர் மனிதருக்கு நல்லவராயிருந்தார். மனித வாழ்வுக்கு அத்தியாவசிய தேவைகளை மட்டுமே அவர் அளிப்பவராயில்லை. மாறாக வாழ்க்கை உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளதாயிருப்பதற்காக நம்முடைய கோளத்தில் ஏராளமானவற்றை வைத்தார். அவர் அளித்திருக்கும் உணவிலும் பானத்திலும் என்னே வித்தியாசங்கள்! வித்தியாசமான வியந்து பாராட்டத்தக்க விலங்குகளையும் பறவைகளையும் படைத்தார், நம்முடைய சுற்றுப்புறச்சூழலுக்கு வண்ணத்தையும் எழிலையும் கூட்டிடும் பூக்களைப் படைத்தார். மேலும் பார்ப்பதற்கு இன்பமாயிருக்கும் வெவ்வேறான காட்சிகளையும் அமைத்தார். ஏன், மகத்துவம் மிகுந்த ஒரு சூரிய மறைவை அல்லது மேகங்கள் திரண்டுவரும் அற்புதக் காட்சியை நாம் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நாம் கடவுளுடைய நற்குணத்திற்கான அத்தாட்சியைப் பார்க்கிறோம்!
அவர் மனுஷனையும் மனுஷியையும் படைத்தபோதுங்கூட, கடவுளுடைய நற்குணம் மீண்டும் காட்சிக்குவந்தது. அவர் ஆதாம் ஏவாளுக்குப் பரிபூரண, ஆரோக்கியமான உடல்களைக் கொடுத்து, அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். பின்பு “பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்து”வதற்கான கிளர்ச்சியூட்டும் சவால்மிகுந்த ஒரு பணியையும் அவர்களுக்குக் கொடுத்தார். இப்படியாக, ஒரு பரதீஸான பூமியில் அவர்களுடைய அநேக பிள்ளைகளுடன் என்றும் வாழ்வதற்கான ஓர் எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு முன் வைத்தார். (ஆதியாகமம் 1:26–28; 2:7–9) முதல் மானிட ஜோடிக்கு என்னே அருமையான ஒரு கல்யாணப் பரிசு!
ஆதாம் ஏவாள் கலகம்செய்தபோதும்கூட கடவுள் அவர்களை முற்றிலுமாய்க் கைவிடவில்லை. அந்தச் சமயத்தில், அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனையை அளித்திருந்தாலும் அவர் நீதியைத்தானே நிறைவேற்றுகிறவராயிருந்திருப்பார். என்றபோதிலும், இப்பொழுது பாவமுள்ள மனிதராகிவிட்ட அவர்களுக்கு அவர் நன்மை செய்தார். அவர்கள் கொஞ்ச காலத்திற்கு இந்தப் பூமியில் உயிரோடிருப்பதற்கும் பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கும் அனுமதித்தார்.—ஆதியாகமம் 5:1–5.
மேலும், பாவத்தில் வீழ்ந்துவிட்ட மனிதனிடமாகக் கடவுள் தொடர்ந்து தம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்திவந்திருக்கிறார். தாவீது சொன்னதுபோல: “யெகோவா எல்லாருக்கும் நல்லவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்கள்மேலுமுள்ளது.” (சங்கீதம் 145:9, NW) அவருடைய உடைமையாகிய இந்தப் பூமியில் மனித வாழ்வு தொடர்ந்து இருப்பதற்காக அவர் அதற்கான காரியங்களை ஏராளமாக அளிக்கிறார். தம்முடைய நாட்களிலிருந்த யூதர்களிடம் இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா . . . தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) இன்றிருக்கும் பசிபட்டினியும் பற்றாக்குறையும் கடவுள் மனிதவர்க்கத்தைப் பராமரிப்பதற்கு ஒன்றும் அளிக்காதிருக்கிறார் என்பதாலல்ல. மனிதரின் ஊழலும், கொடுமையும், திறமையின்மையுமே இவற்றிற்குக் காரணம்.
பூமியின் கனிவளத்தை அளவுக்குமிஞ்சி பயன்படுத்துவதற்குக் கடவுள் மனிதனை அனுமதித்திருக்கிறார், மற்றும் நட்சத்திர விண்களையும் பொருட்களின் இயற்கை அமைப்பையும் பற்றிய ஓரளவு அறிவையும் அவர் அவனிடமிருந்து மறைத்துவைக்கவில்லை. அநேகர் வீம்புடன் கடவுள் இல்லை என்று கூறுகிறபோதிலும், இன்னும் மற்றவர்கள் தன்னலக் காரணத்துக்காக உடன் மானிடரை ஒடுக்குமளவுக்குச் சென்று அவருடைய நற்குணத்திற்கு ஊறுவிளைவிப்பவர்களாயிருந்தாலும், யெகோவா உண்மையிலேயே மனிதவர்க்கத்துக்கு நல்லவராக இருந்துவருகிறார்.—சங்கீதம் 14:1.
விசுவாசிகளிடமாகக் கடவுள் வெளிப்படுத்தும் நற்குணம்
கடவுள் பொதுவாக மனிதவர்க்கத்தினிடமாக நல்லவராயிருந்தபோதிலும், தம்முடைய விசுவாசிகளுடன் அவருடைய தொடர்புகள் உண்மையிலேயே இருதயத்திற்கு இதமளிப்பதாயிருக்கிறது. முதலாவதாக, ஆதாம் ஏவாள் கலகம்செய்தபோது, பாவத்தின் கெட்ட பாதிப்புகளை மேற்கொள்ளும் ஒரு “வித்து” தோன்றும் என்று கடவுள் முன்னறிவித்தார். (ஆதியாகமம் 3:15) காலங்கள் கடந்திட, ஆதாமின் சந்ததியாரில் அநேகர் தங்களுடைய அபூரணத்தின் மத்தியிலும் கடவுளை உண்மையோடு வணங்கினார்கள், மற்றும் இந்த ஆரம்ப தீர்க்கதரிசனம் ஒரு மேன்மையான எதிர்கால நம்பிக்கையை அவர்களுக்கு அளித்தது. இந்த உண்மையுள்ள வணக்கத்தாரில் ஒருவனாகிய ஆபிரகாம் “யெகோவாவின் நண்பன்” என்றும்கூட அழைக்கப்பட்டான்.—யாக்கோபு 2:23, NW.
ஆபிரகாமின் சந்ததி அநேக ஜாதிகளாக வளரும் என்றும், அவனுடைய வம்சாவரிசையில் வருகிறவர்கள் கானான் தேசத்தைச் சுதந்தரிப்பர் என்றும் கடவுள் அவனிடம் வாக்களித்தார். இதன் நிறைவேற்றமாக, இஸ்ரவேலர், ஆபிரகாமின் சந்ததியார், பின்னர் ஒரு தேசமாக ஒழுங்கமைக்கப்பட்டனர். (ஆதியாகமம் 17:3–8; யாத்திராகமம் 19:6) அவர்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வனாந்திரத்தில் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு சட்டத்தொகுப்பையும் ஓர் ஆசாரியத்துவத்தையும் அளித்து, கடைசியாகச் செழிப்பான கானான் தேசத்தை அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்து, இவ்விதமாய்க் கடவுள் மீண்டும் இந்தப் புதிய தேசத்துக்கு நல்லவராய் நிரூபித்தார்.
கடைசியில் இஸ்ரவேல் ஒரு ராஜ்யமாக ஆனது. அதன் மூன்றாவது மனித அரசனாகிய சாலொமோனைத் தம்மடைய வணக்கத்திற்கு ஓர் உலக மையமாக அமைய எருசலேமில் ஓர் ஆலயத்தைக் கட்டும்படியாகப் பணித்தார். ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதும் ஒரு சிறப்பான பிரதிஷ்டை நிகழ்ச்சியும் மகிழ்ச்சியான ஒரு பண்டிகையும் ஆசரிக்கப்பட்டது. அதற்குப் பின்பு, பதிவு கூறுவதாவது, இஸ்ரவேலர் “ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் (யெகோவா, தி.மொ.) . . . செய்த எல்லா நன்மைக்காகவும் (நற்குணத்திற்காகவும், NW) சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.” (1 இராஜாக்கள் 8:66) தங்களிடமாகக் கடவுள் காண்பித்த நற்குணத்தால் இஸ்ரவேலரின் இருதயங்கள் பொங்கிவழிந்த மற்ற சந்தர்ப்பங்களும் இருந்தன.
என்றபோதிலும், வருத்தத்துக்குரிய காரியம், அவர்கள் ஒரே உண்மையான கடவுளை வணங்கும் சிலாக்கியத்தை எல்லாச் சமயங்களிலும் போற்றவில்லை. இதன்விளைவாக, இஸ்ரவேலர் மொத்தமாக உண்மையற்றவர்களாகிவிட்டார்கள். பொ.ச.மு. 607-ல் பாபிலோனுக்குச் சிறைபட்டுச்செல்வதை யெகோவா அனுமதித்தார். கடவுள் மோசேயிடம் சொல்லியிருந்ததுபோல, தம்முடைய நற்குணத்தின் காரணத்தால் அவர் “குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று ஒருக்காலும் தீர்க்காதவர்.”—யாத்திராகமம் 34:7, தி.மொ.
என்றபோதிலும், 70 ஆண்டுகளுக்குப் பின்பு, கடவுள் தயைக்கூர்ந்து இஸ்ரவேலரில் விசுவாசமுள்ள மீதியானவர்களை அவர்களுடைய சொந்த தேசத்துக்குக் கொண்டுவந்தார். அப்படிச் செய்வதற்கு அவரைத் தூண்டியது என்ன? அவருடைய நற்குணம். பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர் திரும்பிவருவதைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசனமாகப் பின்வருமாறு எழுதினான்: “அவர்கள் வந்து சீயோன் மலையிலே கெம்பீரிப்பார்கள்; யெகோவாவின் நற்குணத்தில் அவர்கள் பிரகாசமடைவார்கள்.” தீர்க்கதரிசி தொடர்ந்து சொன்னான்: “என் சொந்த மக்கள் என்னுடைய நற்குணத்தால் திருப்தியடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.”—எரேமியா 31:12, 14, NW.
கடைசியில், இயேசு பூமிக்கு வந்து, ஏதேன் தோட்டத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் “வித்து” என தம்மை நிரூபித்தார். (ஆதியாகமம் 3:15) பைபிள் சொல்லுகிறது: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசுவின் மரணம் மனிதரைப் பாவத்திலிருந்து கிரயத்திற்கு வாங்கிடவும் அவர்களைப் பரிபூரண நிலைக்குத் திரும்ப கொண்டுவரவும் ஒரு மீட்கும்பொருளை அளிப்பதாயிருந்தது. இவ்விதமாக ஆதாமின் பாவத்தினுடைய மோசமான பாதிப்புகள் கடைசியாக மேற்கொள்ளப்பட்டுவிடும். பவுல் ரோமருக்கு எழுதினான்: “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோமர் 5:19) கடவுளுடைய நற்குணத்திற்கு நன்றி, இப்பொழுது சரியான இருதயநிலை கொண்டவர்களுக்கு நித்திய ஜீவன் அடைவதற்குரிய நம்பிக்கை இருந்தது. ஆபிரகாமைப்போல அவர்கள் கடவுளுடைய நண்பராகவும் ஆகக்கூடும்.
இன்றுங்கூட தம்மைத் தொழுதுகொள்கிறவர்களுக்குக் கடவுள் தம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்திவருகிறார். தங்களுடைய பிரச்னைகளைக் கையாளுவதற்காக பைபிள் மூலம் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். (சங்கீதம் 119:105) தம்முடைய நீதியுள்ள தராதரங்களைப் பூர்த்திசெய்வதற்கு அவர் தம்முடைய இலவச ஈவாகிய ஆவியை அளிக்கிறார். தம்முடைய நோக்கங்களையும் வெளிப்படுத்துகிறார், எனவே உண்மையான கிறிஸ்தவர்கள் இந்தப் பழைய உலகம் ஒழிந்துபோனபின்பு நீதியுள்ள ஒரு புதிய உலகம் வருவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 4:18; 2 பேதுரு 3:13) அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து கிறிஸ்தவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் தம்முடைய நற்குணத்தின் அடிப்படையில் அவற்றைத் தம்முடைய குறையில்லா வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:16.
ஆம், கடவுளுடைய நற்குணத்தைக் குறித்து கலந்தாராய்வது நிச்சயமாகவே, அவரிடமாக நம்முடைய இருதயங்களுக்கு இதமளிக்கிறது. ஆனால் இது ஒரு கேள்வியையும் எழுப்புகிறது:
கடவுளுடைய நற்குணத்திலிருந்து நீங்கள் எந்தளவுக்கு நன்மை பெறுவீர்கள்?
உண்மை என்னவெனில், நீங்கள் யாராக இருந்தாலும் நீங்கள் ஏற்கெனவே கடவுளுடைய நற்குணத்திலிருந்து நன்மை பெறுகிறீர்கள். நீங்கள் சுவாசிக்கிறீர்கள், புசிக்கிறீர்கள், குடிக்கிறீர்கள், வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்—எல்லாமே கடவுளுடைய ஈவுகள். ஆனால் நீங்கள் கூடுமானவரை முழுஅளவில் நன்மையடைகிறீர்களா? ஆதாம் ஏவாள் பாவம் செய்தப்பிறகு அவர்களிடமாகக் கடவுளுடைய நற்குணம் ஓரளவாகக் குறைந்துவிட்டது. அதுபோல, அவருடைய தயவுக்கு நாம் சரியான விதத்தில் பிரதிபலித்தாலொழிய அவர் நம்மிடமாகத் தாராளமாக இருக்கமாட்டார். இதை நாம் எவ்விதம் செய்யலாம்?
சங்கீதக்காரன் ஜெபித்தான்: “உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.” (சங்கீதம் 119:66) நம்முடைய ஜெபமும் அதுவாகவே இருக்க வேண்டும். கடவுள் நல்லவராக இருப்பதால், நாமும் அவரைப்போலவே நல்லவர்களாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பவுல் பின்வருமாறு துரிதப்படுத்தினான்: “ஆதலால் நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.”—எபேசியர் 5:1.
நற்குணம் என்பது என்ன என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முதலாவது பைபிளைப் படிப்பதன்மூலம் இதைச் செய்கிறோம். பின்பு இந்தப் பண்பை வளர்ப்பதற்கு நாம் கடவுளுடைய உதவியைக் கேட்கிறோம். நற்குணம் என்ற பண்பு, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, . . . விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய ஆவியின் கனிகளுடன் சேர்ந்தது. (கலாத்தியர் 5:22, 23) நாம் கடவுளுடைய ஆவியில் சார்ந்திருப்பதன்மூலமும், கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிளைப் படிப்பதன்மூலமும், உதவிக்காக அவரிடம் ஜெபிப்பதன் மூலமும், ஒத்த சிந்தையுள்ள கிறிஸ்தவர்களோடு கூட்டுறவுகொள்வதன் மூலமும் நாம் இந்த எல்லாப் பண்புகளையும் விருத்திசெய்திட முடியும்.—சங்கீதம் 1:1–3; 1 தெசலோனிக்கேயர் 5:17; எபிரெயர் 10:24, 25.
பைபிள் மேலும் கூறுகிறது: “அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.” (சங்கீதம் 145:7) ஆம், தம்முடைய நற்குணத்தைக் குறித்து மற்றவர்களிடம் சொல்லும்படிக் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நம்முடைய பரம பிதாவைப் பற்றி நாம் தாராளமாகப் பேசவேண்டும்.
கடைசியாக, நாம் கடவுளுடைய நற்குணத்தை நமக்குச் சாதகமாக ஊகித்துவிடக்கூடாது. உண்மைதான், யெகோவா பாவிகளை மன்னிக்கிறார். தாவீது இப்படியாக ஜெபிக்கையில் ஒரு சாதகமான பதில் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தான்: “என் வாலிபப் பருவத்தின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; யெகோவா, உமது காருண்யத்தின் (நற்குணம், NW) நிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.” (சங்கீதம் 25:7, தி.மொ.) அப்படியென்றால், கடவுள் மன்னிப்பார் என்ற உறுதியான எதிர்பார்ப்பில் நாம் பாவங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கலாமா? எக்காரணத்தினிமித்தமும் அவ்விதம் செய்யக்கூடாது. கடவுளுடைய நற்குணம் என்பது, மனந்திரும்பாத “குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று ஒருக்காலும் தீர்க்காதவர்” என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
கடவுளுடைய நற்குணத்தை அனுபவித்து மகிழ்தல்
நாம் கடவுளுடைய நற்குணத்தை முழுமையாக ஒருமுறை அனுபவிக்கையில் நம்முடைய இருதயங்கள் அவரிடமாக எவ்வளவாக அனல்கொள்கின்றன! அப்போஸ்தலனாகிய பவுலின் அருமையான புத்திமதியைப் பின்பற்றும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்: “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.”—எபேசியர் 5:8, 9.
கடவுள் நம்மிடமாகக் காண்பிக்கும் அன்புடன்கூடிய அக்கறையைக் குறித்து நாம் ஒவ்வொரு நாளும் உணர்வுள்ளவர்களாயிருக்கிறோம். மிகவும் கடுமையான சூழ்நிலைகளிலுங்கூட, தம்மை நேசிக்கிறவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆம், சங்கீதக்காரனின் மேன்மையான மன சமாதானத்தை நாம் அனுபவிக்கிறோம்: “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவின் வீட்டிலே சதாக்காலமும் நிலைத்திருப்பேன்.”—சங்கீதம் 23:6, தி.மொ. (w89 12/1)