நீங்கள் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறீர்களா?
ஹீன்ஸ், ஓர் இளைஞன், பகையுணர்ச்சியால் தன் மாற்றாந்தந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டான். அதற்கு வேண்டிய தைரியம் அவனிடத்தில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய காரியம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தான், ஆனால் அதையும் அவனால் நிறைவேற்ற முடியவில்லை. அவன் திருட்டு மற்றும் போதை மருந்து கடத்தல் சம்பந்தப்பட்ட தொழிலிலும் ஈடுபட்டான், அதற்காக அவன் கைதுசெய்யப்பட்டான். பின்பு அவனுடைய விவாகமும் தோல்வி கண்டது.
இன்று ஹீன்ஸ் போதைமருந்துக்கு அடிமைப்பட்டவனாயில்லை. அவன் நேர்மையாக சம்பாதிக்கிறான். அவன் ஒரு மகிழ்ச்சியுள்ள விவாக வாழ்க்கையை அனுபவித்துவருவதோடு, தன்னுடைய மாற்றாந்தந்தையுடனும் ஒரு நல்ல உறவில் இருக்கிறான். இந்த வித்தியாசத்தை உண்டுபண்ணியது எது? அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தான். வாழ்க்கையின்பேரில் அவனுடைய நோக்குநிலை மெதுமெதுவாக மாறியது.
பழைய ஹீன்ஸை அறிந்திருந்தவர்கள் அவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கடந்துவிட்டிருக்கக்கூடும். அவனைப் போன்ற அநேகரைப் போல, கடவுள் மீட்புக்கு அப்பாற்பட்டவன் என்று விட்டுவிடாததற்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஏன்? காரணம்: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் பார்ப்பது முகம்; யெகோவா பார்ப்பதோ அகம்.”—1 சாமுவேல் 16:7, தி.மொ.
அந்த ஒரு காரியம் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கும் ஒரு பெரிய வித்தியாசமாகும். நாம் வெளித்தோற்றத்திலிருந்து நியாயந்தீர்க்கும் மனச்சாய்வைக் கொண்டவர்கள். “முதல் அபிப்பிராயமே நிலைத்திருக்கும் அபிப்பிராயம்,” என்றுகூட நாம் சொல்லுகிறோம். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், முதல் பிரதிபலிப்புகளின் அடிப்படையில் நாம் ஆட்களை வகுத்திடும் மனச்சாய்வைக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுள், இருதயத்தை வாசிக்க வல்லவராயிருப்பதால், நீதியுள்ளவராகவும் பாரபட்சமற்றவராகவும் இருக்கிறார். அதனால்தான் “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பூமிக்கு அனுப்பினார். (1 தீமோத்தேயு 2:4) இது சம்பந்தமாக, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அனைத்து மனிதவர்க்கத்திற்கும் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாயிருப்பதன் மூலம் “தேவனுக்கு உடன்வேலையாட்களாக” இருக்கும் சிலாக்கியத்தைக் கொண்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 3:9) இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களும் குறைபாடுள்ளவர்கள்—மக்களுடைய இருதயங்களை அவர்கள் வாசிக்க முடியாது. எனவே அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருக்க வேண்டும், மற்றும் வெளித்தோற்றத்தால் தப்பெண்ணங்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
முதல் நூற்றாண்டு சபையில் இந்த ஆபத்து இருப்பதை இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு அறிந்திருந்தான். அவன் சொன்னான்: “என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. ஏனெனில், பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும் கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கினால் . . . பேதகம்பண்ணி தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?” இதன் அடிப்படையில், நாம் சில சமயங்களில் ராஜ்ய மன்றத்திற்கு முதல் முறையாக வரும் ஆட்களைத் தவறாக நிதானிப்பவர்களாயிருக்கிறோமா?—யாக்கோபு 2:1–4.
இயேசு முன்மாதிரி வைத்தார்
இயேசு பாவிகளை மீட்புக்கு அப்பாற்பட்டவர்களாக நோக்கவில்லை, ஆனால் தேவையான உதவியும் சரியான ஊக்குவிப்பும் கொடுக்கப்பட்டால் மாறுவதற்கு மனமுள்ள உண்மைமனமுள்ள ஆட்களாக இருக்கக்கூடும் என்றே நோக்கினார். அதனால்தான் அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்”தார். (1 தீமோத்தேயு 2:6) தம்முடைய பிரசங்க வேலையில், நல்ல இருதயமுள்ள எவரையுமே தீண்டத்தகாதவர்களாக, தம்முடைய கவனத்திற்கு அபாத்திரராக நோக்கவில்லை. ஆட்களை அவர் நோக்கிய விதம், சுய-நீதி சார்ந்த அகந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திடவில்லை.—லூக்கா 5:12, 13.
நாம் வாசிக்கும் பரிசேயரிலிருந்து எவ்வளவாக வித்தியாசப்பட்டவர்: “அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்.”—மாற்கு 2:16, 17.
இந்தப் பாவிகளும் ஆயக்காரர்களும் ஈடுபட்ட நேர்மையற்ற மற்றும் தவறான பழக்கவழக்கங்களை இயேசு ஆதரித்தார் என்று இது அர்த்தப்படுத்தாது. ஆனால், மக்கள் தவறான ஒரு வாழ்க்கைமுறையில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒருவேளை அறியாமல் அல்லது தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் காரணத்தால் அப்படியிருக்கக் கூடும். எனவேதான் அவர் புரிந்துகொள்ளுகிற தன்மையுடையவராய் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகினார்.” (மாற்கு 6:34) அவர் அன்போடு அவர்களுடைய கெட்ட செயல்களுக்கும் பெரும்பாலும் அவர்களுடைய நல்ல இருதயங்களுக்குமிடையே ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணினார்.
தம்முடைய சீஷர்களைக் கையாளுகையில், இயேசு வெளித்தோற்றத்திற்கு அப்பால் பார்க்கக்கூடியவராயிருந்தார். அவர்கள் அநேக சமயங்களில் தவறிழைக்கும் பாவிகளாக இருந்தார்கள், ஆனால் இயேசுவோ நியாயமற்றவிதத்தில் பரிபூரணத்தை எதிர்பார்க்கும் ஒருவராக, சிறு சிறு மீறுதல்களுக்கெல்லாம் குற்றங்கண்டுபிடிப்பவராக இருக்கவில்லை. அவர்களுடைய எண்ணங்கள் நல்லதே அல்லது நாம் இன்று சொல்லுவதுபோல, அவர்களுடைய இருதயம் சரியான இடத்தில் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் உதவியும் உற்சாகமும்தான்; இதைக் கொடுப்பதில் இயேசு கஞ்சத்தனமாக இருக்கவில்லை. கடவுள் மக்களை எவ்விதம் நோக்கினாரோ, அவ்விதமே அவர் அவர்களை நோக்கினார் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய அற்புதமான முன்மாதிரியை நாம் பின்பற்ற முற்படுகிறோமா?
நீங்கள் “நீதியின்படி தீர்ப்புசெய்கிறீர்களா”?
இயேசு ஒருமுறை குறைகூறும் சுய-நீதி ஆட்களைக்கொண்ட ஒரு தொகுதியைச் சந்தித்தார். அவர் ஓய்வுநாளில் ஓர் அற்புதத்தைச் செய்ததால் அவர்கள் எரிச்சலடைந்தார்கள். அவர் அவர்களுக்குக் கொடுத்த அறிவுரை: “தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.” ஒரு மனிதனை “முழுவதும் சுகமாக்கினதினால்” இயேசுவில் “எரிச்சல்” அடைந்து அவரை ஓய்வுநாள் சட்டத்தை மீறியவராகப் பார்ப்பதற்கு பதிலாக, ஏன் அவரை அற்புதத்தை நடப்பிக்கும் ஒருவராக பார்த்து மகிழவில்லை? வெளித்தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்த்ததால் தங்களுடைய கெட்ட உள்ளெண்ணங்களை வெளிப்படுத்திவிட்டார்கள். தங்களுடைய தீர்ப்பு சுய-நீதியும் அதே சமயத்தில் அநியாயமானது என்பதையும் வெளிப்படுத்திவிட்டார்கள்.—யோவான் 7:23, 24.
நாம் எப்படி அதே தவற்றைச் செய்யக்கூடும்? மனந்திரும்பிய ஒரு மனிதன் சபைக்குள் வரும்போது அல்லது அதிக உலகப்பிரகாரமான ஒரு நபர் சத்தியத்தைப் படித்து, ஆவிக்குரிய சுகப்படுத்துதலின் நன்மையை அடைய ஆரம்பிக்கும்போது மகிழ்ச்சியுறத் தவறுவதன் மூலம் அப்படி இருக்கக்கூடும். சில சமயங்களில் ஏற்கப்படாத அவர்களுடைய உடை மற்றும் சிகையலங்காரத்தைப் பார்த்து, அவர்கள் சாட்சிகளாக ஆகமாட்டார்கள் என்று நம் எண்ணத்தில் அவர்களை நீக்கிவிடக்கூடும். ஆனால் ஹிப்பிகளாகவும் ஏற்கப்படாத வாழ்க்கை முறைகளைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தவர்களில் பலர் இன்று யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாக மாறியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மாற்றங்களைச் செய்யும் பாதையில் இருக்கும்போது, அவர்களை “தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்யும்” காரியம் அவர்களுடைய நல்ல இருதய நிலைக்கு நம்மைக் குருடாக்கிப்போட நாம் அனுமதிக்கக்கூடாது.
இயேசுவின் அருமையான முன்மாதிரிக்கு இசைவாக, அவர்களுக்காக ஜெபிப்பதும், கிறிஸ்தவ முதிர்ச்சியினிடமாக முன்னேற அவர்களுக்கு நடைமுறையான உதவி அளிப்பதும் எவ்வளவு மேன்மையானது! அவர்களில் மகிழ்ந்து பாராட்டுவதற்கான ஒரு காரணத்தைப் பார்ப்பது கடினமாய்த் தோன்றக்கூடும். ஆனால் யெகோவா அவர்களைக் கிறிஸ்துவின் மூலம் தம்மிடமாக இழுத்துக்கொள்கிறார் என்றால், நம்முடைய சொந்தக் குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் அவர்களை நிராகரிப்பதற்கு நாம் யார்? (யோவான் 6:44) ஒருவருடைய இருதயத்தையோ அல்லது சூழ்நிலையையோ அறியாதிருக்கும் நாம் சுய-நீதியின் அடிப்படையில் அவரை நியாயந்தீர்ப்பது நம்மை ஆக்கினைத்தீர்ப்புக்குப் பாத்திரமாக்கிவிடும்.—மத்தேயு 7:1–5-ஐ ஒப்பிடவும்.
அப்படிப்பட்ட புதிய ஆட்களைக் கடுமையாகத் தீர்ப்பதற்கு பதிலாக, முன்மாதிரியின் மூலம் அவர்களுக்கு உற்சாகத்தையும் அறிவுரையையும் கொடுத்து நாம் உதவவேண்டும். என்றபோதிலும், தயவைக் காண்பிக்கும் நிலையில், ஒருவேளை உலகில் பிரபலமாக அறியப்பட்டவர்களாயிருக்கும் புதியவர்களை நாம் வழிபாட்டுப்பொருளாக்கிவிடக்கூடாது. அது ஒரு வகைப் பட்சபாதமாக இருக்கும். நம்முடைய பாகத்தில் அது முதிர்ச்சியின்மைக்கு அறிகுறியாக இருக்கும். அந்த நபரைக் குறித்ததில், நம்முடைய போற்றுதல் அவரை மனத்தாழ்மையுள்ளவராக ஆக்குவதற்கு உதவுமா? அல்லது, அது அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்துமா?—லேவியராகமம் 19:15.
கடவுள் எதிர்பார்ப்பதற்கு மிஞ்சி எதிர்பார்க்காதீர்கள்
இருதயத்தை வாசிக்கும் யெகோவா தேவனோடு ஒப்பிடுகையில் மற்றவர்களைப்பற்றிய நம்முடைய எண்ணம் வெகுவாய் வரம்புடையது. (1 நாளாகமம் 28:9) இதை மதித்துணர்வதுதானே நவீன நாளைய சுய-நீதிப் பரிசேயர்களாவதிலிருந்து, அதாவது சரியானது எது என்ற நம்முடைய எண்ணத்திற்குள் அவர்கள் பொருந்தத்தக்கதாக நம்முடைய சொந்த, மனிதன் அமைத்த நீதி என்னும் வார்ப்புக்குள் மக்களை அழுத்துவதிலிருந்து நம்மைத் தடை செய்யும். அவர்களைக் கடவுள் நோக்கும் விதத்தில் நாம் நோக்க முயன்றால், அவர் எதிர்பார்ப்பதைவிட அதிகத்தை எதிர்பார்க்கமாட்டோம். நாம் “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணமாட்டோம்.” (1 கொரிந்தியர் 4:6) கிறிஸ்தவ மூப்பர்கள் இதைத் தங்களுடைய இருதயத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.—1 பேதுரு 5:2, 3.
இதனை உடை விஷயத்தில் விளக்கலாம். தகுதியானது என்று பைபிள் சொல்வது—கடவுள் சொல்வது—கிறிஸ்தவ உடை நேர்த்தியானதும், சுத்தமானதும், ஒழுங்கானதுமாயிருக்க வேண்டும், “அடக்கமும் தெளிந்தபுத்தியும்” குறைவுபட்டதாய் இருக்கக்கூடாது. (1 தீமோத்தேயு 2:9; 3:2) ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சபையிலுள்ள மூப்பர்கள் தங்களுடைய சபையில் பொதுபேச்சு கொடுக்கிறவர்கள் எல்லாருமே வெள்ளை ஷர்ட் அணிய வேண்டும் என்று “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணி”னர். அந்த நாட்டில் தணிந்த வண்ணங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அப்படிச் செய்தனர். அவ்விதம் தணிந்த வண்ண ஷர்ட் அணிந்துவரும் விருந்தினர் பேச்சாளர்கள், அதற்குப் பதிலாக ராஜ்ய மன்றத்தில் அப்படிப்பட்ட அவசரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பல வெள்ளை நிற ஷர்ட்டுகளிலிருந்து ஒன்றை அணிந்துகொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். நம்முடைய சொந்த விருப்புவெறுப்புகளை மற்றவர்கள் மீது திணிக்காதிருக்க எவ்வளவு கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும்! பவுலின் புத்திமதி எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது: “உங்கள் நியாயமானதன்மை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக”!—பிலிப்பியர் 4:5, NW.
வெளித்தோற்றங்களுக்கு அப்பால் நோக்குவதன் நற்பலன்கள்
நாம் மக்களுடைய இருதயங்களை வாசிக்க முடியாது என்பதை மதித்துணர்வது, கிறிஸ்தவ சபைக்குள்ளும் சபைக்கு வெளியிலும் நம்மைச் சூழ இருக்கும் ஆட்களுடன் மேன்மையான உறவைக் காத்துக்கொள்ள உதவும். இது மற்றவர்களுடைய உள்ளெண்ணங்களைச் சந்தேகிக்காமல், அவர்களை ஓர் உடன்பாடான உணர்வோடு எண்ணிட உதவும், “ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களுமாயிருந்தோம்.” (தீத்து 3:3) இதை உணர்ந்தவர்களாக நாம் எல்லாருக்கும், புறத்தில் தகுதியற்றவர்களாகத் தோன்றுகிறவர்களுக்கும் பிரசங்கிக்க மனமுள்ளவர்களாயிருப்போம். பார்க்கப்போனால், சத்தியத்தை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது என்பது அவர்களுடையதே. எல்லாருக்கும் பிரசங்கிக்கும் பொறுப்பு நம்முடையது.
வெளித்தோற்றத்துக்கு அப்பால் நோக்கியவர்களும் முதல் அபிப்பிராயத்தின்படி நியாயந்தீர்க்காதவர்களுமாயிருந்த சகோதர சகோதிரிகளால் கிறிஸ்தவ சபைக்குள் வரவேற்கப்பட்டதற்காக யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் ஹீன்ஸ் போன்று மகிழ்ச்சியடைகிறார்கள்.
தெற்கு ஜெர்மனியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு வந்திருந்த ஃப்ராங்கை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு வந்திருந்தவர்கள் என்ன பார்த்தார்கள்? ஒழுங்கற்ற தாடியும் தோள்மட்டும் நீண்டு வளர்ந்த தலைமுடியும், அழுக்கு உடையும் அணிந்தவனும், உள்ளூர் மதுகடைக்கு அடிக்கடி சென்றவனாயும், ஏராளமாகப் புகைபிடிப்பவனுமாய் அறியப்பட்டிருந்த ஓர் இளம் மனிதன்—தன்னுடைய காதலியையும் இரட்டைக் குழந்தைகளையும் கவனியாது அசட்டை செய்த ஒருவன். இருந்தபோதிலும், அவன் கூட்டங்களில் அன்போடு வரவேற்கப்பட்டான். அவன் அவ்வளவு கவர்ந்திழுக்கப்பட்டதால், திரும்ப மறு வாரமும் வந்தான். அப்பொழுது அவர்கள் பார்த்தது என்ன? நேர்த்தியாகத் தலை சீவி, சுத்தமான உடைகளில் வந்த ஓர் இளம் மனிதன். மூன்றாவது வாரம் புகைபிடிப்பதை நிறுத்திவிட்ட ஓர் இளம் மனிதனைப் பார்த்தார்கள், இம்முறை அவனுடன் அவனுடைய காதலியும் இரண்டு பிள்ளைகளும் வந்தார்கள். நான்காவது ஞாயிறு, தங்களுடைய விவாகத்தை சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்துகொண்ட ஓர் இளம் ஆணும் பெண்ணும். ஐந்தாவது ஞாயிறு பொய் மதத்துடனிருந்த தன்னுடைய எல்லாத் தொடர்பையும் முறித்துக்கொண்ட ஓர் இளம் மனிதன். இன்று, ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் காண்பது, ஒரு சாட்சி அறிக்கைசெய்கிறபடி, “அவர்கள் அநேக வருடங்களாக நம்முடைய சகோதரர்களாக இருந்துவந்திருக்கிறார்கள் என்று எண்ணுமளவுக்கு ஓர் அருமையான அபிப்பிராயத்தை உண்டுபண்ணியிருக்கும் ஒரு குடும்பத்தை.”
ஒரு புத்தகத்தின் தரம் அதன் அட்டையில் பிரதிபலிப்பதில்லை, ஒரு கட்டிடத்தின் தரமும் அதின் முகப்பில் வெளிப்படுவதில்லை. அதுபோல, ஒரு நபரின் உண்மையான தரம், வெளித்தோற்றங்களில் பிரதிபலிக்கவேண்டிய அவசியமில்லை. கடவுள் நோக்கும் விதத்தில் மக்களைப் பார்க்க முயலும் கிறிஸ்தவர்கள் ஆரம்ப அபிப்பிராயத்தின் அடிப்படையில் நியாயந்தீர்க்க மாட்டார்கள். கடவுள் “இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்திற்கே” கவனம்செலுத்துகிறார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கலாம்.—1 பேதுரு 3:3, 4. (w89 11/1)