உயிர்த்தெழுதல்—யாருக்கு மேலும் எப்பொழுது?
அது பொ.ச. 32-ம் ஆண்டில், லாசரு தன்னுடைய இரண்டு சகோதரிகளான மார்த்தாளோடும் மரியாளோடும் வாழ்ந்து வந்த இடமாகிய பெத்தானியாவில் சம்பவித்தது. லாசரு வியாதிப்பட்டிருக்கும் செய்தியை அந்தச் சகோதரிகள் இயேசுவுக்குச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். இயேசு லாசருவையும் அவனுடைய சகோதரிகளையும் நேசித்ததன் காரணமாக, அவர் பெத்தானியாவுக்குப் புறப்பட்டு வருகிறார். வழியில், இயேசு தம்முடைய சீஷர்களிடம்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.” இயேசு சொல்லர்த்தமான நித்திரையை அர்த்தப்படுத்தினார் என்பதாகச் சீஷர்கள் நினைத்தார்கள். ஆகவே இயேசு நேரடியாகவே, “லாசரு மரித்துப்போனான்” என்றார்.—யோவான் 11:1–15.
இவர்கள் லாசரு மரித்து நான்கு நாட்களானப் பின்பு வந்து சேர்ந்தார்கள். மரியாளும் மற்றவர்களும் அழுவதை இயேசு பார்த்த போது தம்முடைய ஆழமான அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறவராய், அவர் “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:17, 35) லாசருவின் உடல் ஒரு குகைக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது. கல்லறையின் வாயிலை மூடிக்கொண்டிருந்த கல்லை எடுத்துப்போடும்படியாக இயேசு கட்டளையிட்டார். அவர் தம்முடைய பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணிவிட்டுப் பின்னர், “லாசருவே, வெளியே வா” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். லாசரு வெளியே வந்தான். இது அவனுடைய சகோதரிகளுக்கு என்னே சந்தோஷத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும்!—யோவான் 11:38–45.
இந்தச் சம்பவம் உயிர்த்தெழுதலின் மெய்யான நம்பிக்கையை அளிக்கிறது. என்றபோதிலும், பொதுவாக மரணம் என்பது நமக்கு நேசமானவர்களைப் பறித்துக்கொள்ளும் பயங்கரமான ஒரு சத்துருவாக இருக்கிறது. மேலும் இயேசு உடனடியாக அவர்களை உயிர்த்தெழுப்பும் எதிர்பார்ப்பு இல்லாமலிருக்கிறது. நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறபடி, இந்த அருமையானவர்களில் அநேகர் நல்லவர்களாகவும் மிகவும் தயவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே வெளிப்படையாக எழும்பும் கேள்வி . . .
மக்கள் ஏன் மரிக்கவேண்டும்?
திருத்தமான நம்பத்தக்க ஒரு பதிலை நாம் விரும்பினால், நாம் ஏதேன் தோட்டத்தில் மனிதவர்க்கத்தின் ஆரம்பத்துக்குப் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும். ஆதாமின் கீழ்ப்படிதலைச் சோதிப்பவராய், கடவுள் அங்கே குறிப்பிட்ட ஒரு விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று கட்டளையிட்டார். அவனும் ஏவாளும் கனியைப் புசிப்பார்களேயானால் அவர்கள் ‘சாகவே சாவார்கள்’ என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:17) சாத்தானால் சோதிக்கப்பட்டபோது அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அந்த மிக முக்கியமான சோதனையில் தவறிவிட்டார்கள். மரணம் விளைவடைந்தது.
சிறியதாகத் தோன்றும் குற்றச்செயலுக்கு ஏன் இப்பேர்ப்பட்ட ஒரு தண்டனை? அவர்களின் செயல் சிறியதாக இருந்தது, ஆனால் குற்றச்செயல் சாவுக்கேதுவாக வினைமையானதாகும்—தங்களின் சிருஷ்டிகருக்கு எதிராகப் பரிபூரணமான மக்களாகிய ஆதாம் மற்றும் ஏவாளின் கலகம். அவர்கள் இனிமேலும் பரிபூரணராக இல்லை, கடவுள் மரணத்தீர்ப்பை வழங்கினார். என்றபோதிலும் நியாயமான அந்தத் தீர்ப்பு ஆதாமின் சந்ததியாருக்கு எதிர்விளைவுடையதாயிருப்பதற்குக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். எவ்விதமாக? “கிறிஸ்து இயேசு . . . எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்” என்று பவுல் எழுதினான்.—1 தீமோத்தேயு 2:5, 6, NW; ரோமர் 5:17.
மரித்தோரின் நிலை என்ன?
லாசரு நான்கு நாட்கள் மரித்தவனாய் இருந்தான். நீங்கள் மரித்து நான்கு நாட்களுக்கு ஆவி மண்டலத்தில் உண்மையில் உயிரோடிருந்து, பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தால், மற்றவர்களுக்கு அதைக்குறித்து நீங்கள் சொல்ல விரும்ப மாட்டீர்களா? ஆனால் வேறு மண்டலத்தில் தான் உயிரோடிருந்தது குறித்து லாசரு எதையும் சொல்லவில்லை. பைபிள் சொல்கிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”—பிரசங்கி 9:5; சங்கீதம் 146:3, 4.
அது குறிப்பாக உணர்த்துவதைச் சிந்தித்துப் பாருங்கள். உத்தரிக்கும் ஸ்தலம் என்ற வார்த்தை பைபிளில் காணப்படாவிட்டாலும் இலட்சக்கணக்கான ஆட்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இன்னும் அநேகர், அக்கினி எரிகிற நரகம் இருப்பதாக நம்புகிறார்கள். என்றபோதிலும், ஒரு விரோதியைக்கூட நீங்கள் அக்கினியில் நித்தியத்துக்குமாக எரித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். இப்பேர்ப்பட்ட கொடூரமான ஒரு காரியத்தைச் செய்ய நீங்கள் மறுப்பீர்களேயானால், நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகர் தனி ஆட்கள் நரக அக்கினியில் வேதனையை அனுபவிக்கும்படிச் செய்வதன் மூலம் அவ்விதமாகச் செய்வாரா? ஆனால் மேலே கூறப்பட்ட ஆறுதலளிக்கும் பைபிளின் உறுதிமொழியைப் பற்றி தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்—மரித்தோர் “ஒன்றும் அறியார்கள்.”
வேதாகமத்தின்படி, கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்கள் ஒப்பிடும்போது சிறிய எண்ணிக்கையாகவே இருக்கின்றனர். இயேசு அவர்களை “சிறு மந்தை” என்பதாக விவரித்தார். (லூக்கா 12:32) அப்போஸ்தலனாகிய யோவான், “[பரலோக] சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரையும் [இயேசு கிறிஸ்து] அவரோடேகூட . . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்” கண்டான். இவர்கள் “பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட”வர்கள். (வெளிப்படுத்துதல் 14:1–3) அப்படியென்றால், இப்படிப்பட்ட ஆட்கள் மனிதர்களாக இருந்து, மரித்து, பின்னால் கிறிஸ்துவோடு பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.
உங்களால் கற்பனை செய்ய முடிகிறபடி, மக்கள் இந்த பைபிள் சத்தியங்களை புரிந்துகொள்வதன் மூலம் உதவப்பட்டிருக்கிறார்கள். ஓர் உத்தரிக்கும் ஸ்தலமோ அல்லது எரிகிற நரகமோ இல்லை, மேலும் மரித்தவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்பவை பைபிள் சத்தியங்களாகும். என்றபோதிலும், பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் ஒருசிலராகவே இருந்தால், மற்றவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
பூமிக்குரிய உயிர்த்தெழுதல்
பரலோக ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்குரிய வழியை இயேசு கிறிஸ்து திறந்து அல்லது தொடங்கி வைத்தார். (எபிரெயர் 9:24; 10:19, 20) இதன் காரணமாகவே, இயேசு மரித்து பின்னர் பரலோக வாழ்க்கைக்கு வழியைத் திறந்து வைப்பதற்கு முன்னர் யோவான் ஸ்நானன் கொலைசெய்யப்பட்டதன் நிமித்தமாக, அவன் பரலோக உயிர்த்தெழுதலில் பங்குபெற மாட்டான். இயேசு சொன்னார்: “யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான்.” (மத்தேயு 11:11) இந்த உண்மையுள்ள மனிதனுக்கும் மரித்துவிட்டிருக்கும் அவனைப் போன்ற மற்றவர்களுக்கும் என்ன வெகுமதியைக் கடவுள் அளிக்கிறார்?
உங்கள் பைபிளை லூக்கா 23-க்குத் திருப்பி வசனங்கள் 39-லிருந்து 43 வரை வாசியுங்கள். இயேசுவுக்குப் பக்கத்தில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் சொன்னதாவது: “ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.” இயேசு அவன் பரதீஸிலிருப்பான் என்பதாக அவனுக்கு உறுதியளித்தார். அது பரலோகம் அல்ல, ஆனால் முதல் பரதீஸ் இருந்தது போலவே ஒரு பூமிக்குரிய பரதீஸாகும்.
உயிர்த்தெழுதல்—ஆறுதலின் ஓர் ஊற்றுமூலம்
ஆதாரமுள்ள பைபிள் அளிக்கும் அந்த எதிர்பார்ப்பு மிகவும் ஆறுதலளிப்பதாக இருக்கவேண்டும். ஏனென்றால் அதை எதிர்ப்பார்ப்பதற்கு நமக்கு காரணமிருக்கிறது. ஏன்? ஏனென்றால் யெகோவா அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8) தம்முடைய குமாரன் வெட்கக்கேடான ஒரு மரணத்தை அடைய அவர் அனுமதித்தபோது, கடவுள் உண்மையில் தம்முடைய மகத்தான குணாதிசயமான அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். கொஞ்ச காலத்திற்கு முன்பு இயேசு இவ்விதமாகச் சொல்லியிருந்தார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் [மனிதவர்க்கத்தில்] அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.
இயேசுவும்கூட விசுவாசிக்கிற மனிதவர்க்கத்துக்குத் தம்முடைய உயிரை மீட்பின் கிரயமாக அளிப்பதில் தனிச்சிறந்த அன்பைக் காண்பித்தார். அவர்தாமே சொன்னதாவது: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”—மத்தேயு 20:28.
பயங்கரமான ஒரு விபத்தில் தனக்கு அருமையானவர்கள் பலரை இழந்ததாக முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கரோலேன், அதற்குப் பின்பு ஸ்தம்பித்துப் போனாள். ஆனால் மரித்துப்போன இந்த அன்பானவர்கள் துன்பமனுபவித்துக் கொண்டில்லை என்பதை அறிவதன் மூலம் ஆறுதலடைந்தாள். கூடுதலாக சமாளிப்பதற்கு அவளுக்கு உதவியது என்ன? யெகோவாவின் சாட்சிகளான அவளுடைய ஆவிக்குரிய சகோதரர்களால் காண்பிக்கப்பட்ட அன்பும் மெய்யான அனுதாபங்களும் மிகவும் பிரயோஜனமாக இருந்தன.—சங்கீதம் 34:18.
யெகோவாவிடம் ஜெபித்ததும்கூட வெகுவாக உதவியாக இருந்தது. பல இரவுகள் அவள் விழித்துக்கொண்டு அவை அனைத்தும் ஒரு கெட்ட கனவு என்பதாக நினைத்துக்கொள்வாள். ஆனால் பின்னர் உண்மை அவளை உணர்வு கொள்ளச் செய்யும். யெகோவாவிடம் வேண்டுதல் செய்வது அவளை அமைதிப்படுத்தும். பவுல் எழுதிய விஷயத்தை அவள் அதிக ஆழமாகப் போற்றுகிறவளானாள்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை, ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கக்கூடும் என்பதற்கு ஷர்லி மற்றொரு உதாரணத்தை அளிக்கிறாள். அவளுடைய இளம் மகன் ரிக்காடோ, கடினமான ஒரு காரைத்துண்டு அவன் மார்பின் மீது விழுந்து அவனுடைய சின்னஞ்சிறு இதயத்தைப் பிளந்தபோது உடனடியாகக் கொல்லப்பட்டான். ஜனவரி 1986-ல் ஏற்பட்ட இந்தச் சோக சம்பவத்துக்குப் பின்பு ஷர்லி அவளுடைய நண்பர்களிடம், “அது ஒரு கொடுங்கனவு போல இருந்தது” என்று சொன்னாள். கத்தோலிக்கச் சர்ச்சில் பின்வரும் இந்த வார்த்தைகளை அவள் கேட்டிருந்தாள்: “கடவுள் உயிரோடிருப்பவர்களையும் மரித்தோரையும் நியாயந்தீர்ப்பார்.” ஷர்லி, ‘கடவுள் உயிரோடிருப்பவர்களையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கப்போகிறாரென்றால், மரணத்துக்குப் பின்பு, மக்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை ஒருவர் எவ்விதமாக தெரிந்துகொள்ள முடியும்? அவர்கள் பரலேகத்திலிருக்கிறார்களென்றால், நியாயந்தீர்ப்பதற்கு ஏன் அவர்களைப் பின்னால் உயிர்த்தெழுப்ப வேண்டும்? மேலுமாக, பரலோகத்தில் அவர்கள் உயிரோடிருக்கிறார்களென்றால் அவர்கள் எவ்விதமாக உயிர்த்தெழுப்பப்பட முடியும்?’ என்பதாக யோசிக்க ஆரம்பித்தாள். மரித்தோரின் உயிர்த்தெழுதலே அல்லாமல் உயிரோடிருப்பவர்களின் உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை.
ஷர்லி இந்தப் பிரச்னைக் குறித்து அவளுடைய கணவனிடம் கேட்டாள். ஏனென்றால் அவன் பைபிளோடு பழக்கப்பட்டவனாக இருந்தான். இப்பொருளின் பேரில் வேதவசனங்கள் என்ன சொல்லுகின்றன என்பதில் கொஞ்சத்தை அவள் புரிந்துகொண்ட மாத்திரத்தில் ஷர்லி, ஒருபோதும் திரும்ப சர்ச்சுக்குப் போகவில்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஓர் உறவினர் பைபிளை ஷர்லியோடும் அவளுடைய கணவனோடும் மார்ச் 1986-ல் படிக்க ஆரம்பித்தார். விரைவிலேயே அவர்கள் முழுக்காட்டப்பட்டார்கள். இப்பொழுது அவள் முடிவாகச் சொல்வது: “சத்தியத்தை அறிவது, உயிர்த்தெழுதலைப் பற்றி அறிவது மற்றும் யெகோவா எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒருவர் என்பதையும் அறிவது எத்தனை அற்புதமாக இருக்கிறது.”
உயிர்த்தெழுதல்—எப்போது?
ஒரு காட்சியில் அப்போஸ்தலனாகிய யோவான் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்” நிற்கக் கண்டான். (வெளிப்படுத்துதல் 7:9) திரள் கூட்டத்தார், ‘தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறார்கள்’ என்பது அவர்கள் பூமியின் மீது வாழ இருக்கிறார்கள் என்ற உண்மையோடு ஒத்திருக்கிறது. (ஏசாயா 66:1) அவர்களில் சிலர் இப்போது மரித்தால், அவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? பைபிள் ஒரு தேதியைக் கொடுப்பதில்லை. ஆனால் கடவுள் அவருடைய நீதியான தராதரங்களின்படி வாழ மனமில்லாதவர்களாக இருக்கும் அனைவரையும் இந்தப் பூமியிலிருந்து அகற்றிவிடப் போகும், நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த யுத்தத்திற்குப் பின் இருக்கும். (2 தெசலோனிக்கேயர் 1:6–9) இது நியாயத்தீர்ப்பு நாளுக்கும் பூமிக்குரிய ஓர் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியுள்ளவர்களாகக் கடவுள் கருதும் அனைவருடைய உயிர்த்தெழுதலுக்கும் வழியைத் திறந்துவைக்கும். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றம், கிளர்ச்சியூட்டும் மற்றும் மகத்தான இந்தச் சம்பவங்கள் வெகு விரையில் சம்பவிக்கும் என்பதை நிரூபிக்கிறது!—வெளிப்படுத்துதல் 16:14–16.
இயேசுவின் சீஷர்கள் ஒரு சமயம் அவரை இவ்விதமாகக் கேட்டார்கள்: “உம்முடைய வந்திருத்தலுக்கும், காரிய ஒழுங்கின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” பதிலளிப்பவராய் இயேசு போர்களையும், உணவு பற்றாக் குறைகளையும், நில நடுக்கங்களையும், கொள்ளைநோய்களையும், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியின் உலகளாவிய பிரசங்கிப்பையும் குறிப்பிட்டார்.—மத்தேயு 24:3–14, NW; லூக்கா 21:7–11.
குறிப்படத்தக்க இந்தத் தீர்க்கதரிசனம், முதல் உலகப் போர் ஆரம்பமான ஆண்டான 1914 முதற்கொண்டு நிறைவேறிக்கொண்டு வருகிறது. இது இலட்சக்கணக்கானோரைக் கொன்று பல நாடுகளில் பஞ்சங்களையும் உணவுபற்றாக்குறையையும் உண்டுபண்ணியது. இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்பும் உலக நிலைமை இன்னும் அதிக மோசமாக ஆனது.
கொள்ளைநோய்களைப் பற்றியதில், மிக மோசமான உதாரணம் எய்ட்ஸ் என்பதாக அநேகர் நினைக்கின்றனர். “கொள்ளைநோய் அத்தனை பரவலாகவும் அத்தனை உயிர்களைப் போக்கவல்லதாயும் இருப்பதால், பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கை கொன்ற கருப்பு மரணத்துக்கு அதை நிபுணர்கள் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.—ரீடர்ஸ் டைஜஸ்ட், ஜூன் 1987.
தற்போதைய பேரச்சத்தை முன்னிட்டுப் பார்க்கையில், உயிர்த்தெழுதல் எத்தனை மகத்தான சம்பவமாக இருக்கும்! கரோலேன் மற்றும் ஷர்லி போன்று, மரணத்தால் பிரிக்கப்பட்டக் குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேர்க்கப்படும்போது, அது அடக்கிவைக்கப்பட முடியாத சந்தோஷத்துக்குரிய ஒரு சமயமாக இருக்கும்! கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இப்பொழுது வாழ்க்கை நடத்தி இவ்விதமாக உயிர்த்தெழுதல் நடைபெறும் போது அங்கேயிருக்க தகுதியுள்ளவர்களாக்கிக்கொள்வதே நம் ஒவ்வொருவருக்கும் அறிவுள்ள போக்காக இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. (w89 10/15)
[பக்கம் 4-ன் படம்]
மரமானது வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்விடுவது போலவே, கடவுள் தம்முடைய ஞாபகத்திலிருப்பவர்களை மரித்தோரிலிருந்து எழுப்ப முடியும் என்பதாக பைபிள் சொல்லுகிறது.—யோபு 14:7–9, 14, 15