மூப்பர்களே—உங்கள் பொறுப்பைக் காத்துக்கொள்ளுங்கள்
“உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.”—அப்போஸ்தலர் 20:28, NW.
1. கிறிஸ்தவ பொறுப்பு எதை உட்படுத்துகிறது?
யெகோவா தேவன் தம்முடைய பூமிக்குரிய அமைப்பிலுள்ளவர்களுக்கு மகத்தான ஒரு பொறுப்பை அளித்திருக்கிறார். ஆனால் ஒரு பொறுப்பு என்பது என்ன? இது ஒரு நபரிடமாக ஒப்படைக்கப்படும் மதிப்புள்ள ஒரு காரியமாக இருக்கிறது, இவர் இதற்கு கணக்கு கொடுக்க வேண்டும். கிறிஸ்தவ பொறுப்பு என்பது வேதாகமத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டு, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனால்” “ஏற்ற வேளையிலே உணவாக” அளிக்கப்படும் சத்தியமாகிய “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” உட்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 1:13, 14; மத்தேயு 24:45–47) இந்தப் பொறுப்பு சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரசங்கிக்கப்பட வேண்டிய சத்தியத்தோடு சம்பந்தப்பட்ட ஊழியத்தை உட்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 4:1–5) ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட மூப்பர்கள் உட்பட, ராஜ்ய பிரஸ்தாபிகள் இந்தப் பொறுப்பை மிக உயர்ந்த மதிப்புள்ள ஒன்றாகக் கருத வேண்டும்.
2. மூப்பர்களுக்கு என்ன கூடுதலான பொறுப்பு இருக்கிறது? பேதுரு அதைக் குறித்து என்ன சொன்னான்?
2 கிறிஸ்தவ மூப்பர்களுக்குக் கூடுதலான ஒரு பொறுப்பு இருக்கிறது—கடவுளுடைய மந்தையை மேய்க்கும் உத்தரவாதம். இந்த விஷயத்தின் பேரில் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினான்: “உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.”—1 பேதுரு 5:1–4.
3. கிறிஸ்தவ மூப்பர்கள் எதற்கு மூலகாரணமாக இருக்க வேண்டும்?
3 கிறிஸ்தவ மூப்பர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்க வேண்டும். (ஏசாயா 32:1, 2) அப்படியென்றால், மூப்பர்கள், கடவுளுடைய செம்மறியாடுகளைப் போன்ற ஊழியர்களின் மந்தையின் பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும், தளரா உறுதிக்கும் மூலகாரணமாக இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. மூப்பர்களிடம் அல்லது மந்தையின் உதவி மேய்ப்பர்களிடம் “அதிகமாய்” கேட்கப்படுகிறது, ஏனென்றால் அவர்களிடத்தில் “அதிகமாய் ஒப்புவிக்கப்”பட்டிருக்கிறது. (லூக்கா 12:48) மேலும் நிச்சயமாகவே காத்துக்கொள்ளப்பட வேண்டிய விலைமதிப்புள்ள ஒரு பொறுப்பை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
ஏன் உங்களிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது?
4. ஏன் இத்தனை அநேக மூப்பர்கள் தேவைப்படுகிறார்கள்?
4 உலகம் முழுவதிலும் 63,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இருப்பது, கடவுளுடைய மந்தையைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான ஆவிக்குரிய தகுதிப்பெற்ற ஆண்களை தேவைப்படுத்துகிறது. ஒவ்வொரு தேசத்திலும் அநேக மூப்பர்கள் இருக்கின்றனர், இது சந்தோஷத்துக்கு ஒரு காரணமாயிருக்கிறது. உலகம் முழுவதிலும் சராசரியாக ஒவ்வொரு சபையிலும் சுமார் 60 ராஜ்ய அறிவிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆகவே, மூப்பர்களுக்குச் செய்வதற்கு அதிகமான வேலை இருக்கிறது.—1 கொரிந்தியர் 15:58.
5. ஒரு மூப்பராக சேவிக்கும் சிலாக்கியம் ஒரு மனிதனுக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?
5 நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், இந்த ஆசீர்வாதமான சிலாக்கியம் உங்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏனென்றால் நீங்கள் ஒருசில காரியங்களைச் செய்திருக்கிறீர்கள், மேலும் ஆவிக்குரிய தகுதிகளைப் பெற்றிருக்கிறீர்கள். உதாரணமாக, நீங்கள் கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படித்திருக்க வேண்டும். (யோசுவா 1:7, 8) நீங்கள் வெளி ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொண்டு, மற்றவர்களும்கூட ராஜ்ய அறிவிப்பாளர்களாக ஆவதற்கு உதவி செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். “முன்னதாக சோதிக்கப்பட்டவர்களாக” நீங்கள் ஓர் உதவி ஊழியராக உண்மையுடன் சேவை செய்தீர்கள். கண்காணியாக இருப்பது ஒரு “நல்ல வேலை” என்பதைப் போற்றுகிறவராக நீங்கள் ஒரு மூப்பராக இருப்பதற்குத் தகுதி பெற நாடினீர்கள் அல்லது விரும்பினீர்கள். (1 தீமோத்தேயு 3:1, 10) தீமோத்தேயுவைப் போல, நீங்கள் சகோதரர்களால் “நற்சாட்சி பெற்றவர்”களாயிருந்தீர்கள். (அப்போஸ்தலர் 16:2) மூப்பராக சிபாரிசு செய்யப்பட்ட சமயத்தில் நீங்கள் ஒருவேளை பின் 20-களில் அல்லது அதைவிட வயதில் மூத்தவராகவும் வாழ்க்கையில் அனுபவமுடையவராகவும் இருந்திருப்பீர்கள். சபையார், உங்களை ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்தவரும், பயனுள்ள வேதப்பூர்வமான ஆலோசனையைக் கொடுக்கவும் இரகசியங்களைக் காத்துக் கொள்ளவும் திறமையுள்ள எளிதில் அணுக முடிகிற ஒரு சகோதரராக உங்களை மதிக்கலானார்கள்.—நீதிமொழிகள் 25:9, 10.
உங்கள் பொறுப்பை எவ்வாறு காத்துக்கொள்வது
6, 7. ஒரு மூப்பராக தன் பொறுப்பைக் காத்துக் கொள்ள ஒரு மனிதனுக்கு உதவி செய்ய முதல் தீமோத்தேயு 4:13–15 என்ன புத்திமதியை அளிக்கிறது?
6 ஆம், நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், சரியான காரணங்களுக்காகத்தானே கிறிஸ்தவ கண்காணிப்பு உங்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. எவ்வளவு சிலாக்கியம் பெற்றவராக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்! ஆனால் உங்கள் பொறுப்பை நீங்கள் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
7 ஒரு மூப்பராக உங்கள் பொறுப்பைக் காத்துக்கொள்வதற்கு ஒரு வழி, உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கையாகவும் ஊக்கமாகவும் இருப்பதாகும். யெகோவாவின் அமைப்பில் நாம் அனைவருமே பல்வேறுபட்ட உத்தரவாத நியமனங்களை உடையவர்களாக இருக்கிறோம். ஆகவே, உங்கள் நிலையைக் காத்துக் கொண்டு, ‘சிறியவராக நடத்திக் கொள்வதில்’ திருப்தியாக இருங்கள். (லூக்கா 9:46–48; நியாயாதிபதிகள் 7:21 ஒப்பிடவும்.) உங்கள் சிலாக்கியங்களை அருமையாகக் கருதி ஒருபோதும் ‘சோம்பற் கையால் வேலை செய்கிறவர்களாக’ இராதேயுங்கள். (நீதிமொழிகள் 10:4) அப்படியே நின்றுவிடாமல், ஆனால் யெகோவாவின் உதவியோடு ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் முன்னேறிக்கொண்டிருங்கள். ஆம், பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த இந்தப் புத்திமதியைப் பின்பற்றுங்கள்: “வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:13–15.
8. சரியான புத்திமதியையும் கூட்டங்களில் ஆவிக்குரிய வகையில் மதிப்புள்ளதையும் அளிக்க ஒரு மூப்பருக்கு எது உதவிசெய்யும்?
8 தனிப்பட்ட படிப்புக்கு நீங்கள் ஒரு நல்ல பயனுள்ள அட்டவணையைக் கொண்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மூப்பராக நீங்கள் சரியான வேதப்பூர்வமான புத்திமதியைக் கொடுக்க நியாயமாகவே எதிர்பார்க்கப்படுகிறீர்கள். இந்த உத்தரவாதத்துக்கு உங்களை தயார் செய்ய, முழு பைபிளையும் தியானித்தலோடுகூட ஒருவேளை அநேகந்தரம் வாசித்திருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 15:28) உங்கள் மேடை நியமனங்களைப் பற்றியதென்ன? நம்முடைய கூட்டங்களுக்கு வந்திருப்பவர்களுக்கு நீங்கள் ஆவிக்குரிய வகையில் மதிப்புள்ளதாக இருக்கும் எதையாவது அளிப்பதற்கு யெகோவாவின் உதவியை ஜெபத்தில் நாடி, அவற்றை நன்றாகத் தயாரியுங்கள். குறிப்பாக மூப்பர்கள், ‘கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி கட்டியெழுப்புவதற்கு ஏதுவாக’ பேச வேண்டும்.—எபேசியர் 4:29; ரோமர் 1:11.
9. 2 தீமோத்தேயு 4:2-ன் பிரகாரம், ஒரு மூப்பர் என்ன செய்ய வேண்டும்?
9 ஒரு மூப்பராக, பவுலின் அறிவுரைக்குக் கவனம் செலுத்துங்கள்: “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு, புத்தி சொல்லு.” (2 தீமோத்தேயு 4:2) சபையிலுள்ள சிலர், ‘வார்த்தைகளைக் குறித்து சண்டைப்பண்ணி’ ‘புத்தியீனமான வாக்குவாதங்களில் ஈடுபட்டு’ ‘சத்தியத்துக்குச் செவியை விலக்கு’கிறவர்களுமாக இருந்தபடியால், பவுல் விசுவாசதுரோகத்தைக் குறித்து கவலையுள்ளவனாக இருந்தான். (2 தீமோத்தேயு 2:14–18, 23–25; 3:8–13; 4:3, 4) என்றாலும் சபை தொந்தரவான அல்லது சாதகமான காலத்தை அனுபவித்தாலும் சரி, தீமோத்தேயு “திருவசனத்தைப் பிரசங்கள் பண்ண”வேண்டியவனாக இருந்தான். இது விசுவாசதுரோகத்தை எதிர்க்க உடன் விசுவாசிகளை பலப்படுத்துவதாக இருக்கும். அதே விதமாகவே இன்று மூப்பர்கள் இருதயத்தை சென்றெட்டி யெகோவாவின் தராதரங்களைக் கடைப்பிடிக்க உற்சாகப்படுத்தும் கடவுளின் ஊடுருவிச் செல்லும் வார்த்தையை அல்லது செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்.—எபிரெயர் 4:12.
10. ஒரு மூப்பர் ஏன் வெளி ஊழியத்தில் தன் குடும்ப அங்கத்தினர்களோடும் மற்றவர்களோடும் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்?
10 அதிகாரத்தோடு பேசுவதற்கு, ஒரு மூப்பர் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்கிறவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் வெறுமென மேடையின் மீது, சபைக்குள்ளே மாத்திரமே ‘திருவசனத்தைப் பிரசங்கிக்கிறவராக’ இருந்தால், அவர் தன்னுடைய பொறுப்பை முழுமையாகக் காத்துக் கொள்கிறவராக இருக்க மாட்டார். அதே சந்தர்ப்பத்தில்தானே பவுல் தீமோத்தேயுவை பின்வருமாறு துரிதப்படுத்தினான்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்.” ஒரு மூப்பராக உங்கள் ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு’ நீங்கள் கடவுளுடைய வார்த்தையை “பகிரங்கமாக வீட்டுக்கு வீடு” பிரசங்கம் பண்ண வேண்டும். (2 தீமோத்தேயு 4:5; அப்போஸ்தலர் 20:20, 21) ஆகவே, வெளி ஊழியத்தில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடு வேலை செய்யுங்கள். இது உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமிடையே ஆவிக்குரிய பிணைப்புக்கு உதவி செய்வதாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு பெரிதும் நன்மைபயப்பதாயும் இருக்கும். சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களோடு பிரசங்க வேலையில் பங்கு கொள்வதிலும்கூட கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். இது ஆவிக்குரிய பிணைப்புகளைப் பலப்படுத்தி சகோதர சிநேகத்தை அதிகரிக்கிறது. (யோவான் 13:34, 35) நிச்சயமாகவே, ஒரு மூப்பர், தன் குடும்பத்துக்கும் சபைக்குமிடையே விலைமதிப்புள்ள நேரத்தை பங்குபோடுவதில் சமநிலைக்காக முயற்சி எடுக்க வேண்டும். பகுத்துணர்வை பயன்படுத்துவது, மற்றொன்றை அசட்டை செய்யவும் சேதப்படுத்தவும் செய்யும்படியாக ஒன்றுக்கு அளவுக்கு அதிகமான நேரத்தை அர்ப்பணிப்பதை அவர் தவிர்க்கும்படிச் செய்யும்.
11. ஒரு மூப்பர் போதகராக தன்னுடைய திறமையை அதிகரிக்க ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?
11 ஒரு மூப்பராக உங்கள் பொறுப்பை காத்துக்கொள்ள, ஒரு போதகராக உங்கள் திறமையை அதிகரிக்கவும்கூட நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். “போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்தி செல்லுகிறவன் புத்தி சொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்” என்பதாக பவுல் சொன்னான். (ரோமர் 12:7, 8) ஒரு போதகன் மற்றவர்களுக்கு முன்பாக அறிவுரை வழங்குபவனாக நிற்பதால், அவரிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஒரு மூப்பர் தன் போதகத்தில் வினைமையான தவறிழைத்துவிட, இது உடன் விசுவாசிகளுக்கு பிரச்னைகளை உண்டுபண்ணுமேயானால், அவர் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாக இருப்பார். ஆம், போதகர்கள் “அதிக ஆக்கினையை” அடைவார்கள். (யாக்கோபு 3:1, 2; மத்தேயு 12:36, 37) ஆகவே மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தையை கருத்தூன்றி படிக்கும் மாணாக்கராக இருந்து வாழ்க்கையில் பொருத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது தனிப்பட்ட பொருத்தத்தினால் வலிமையைப் பெறும் அவர்களுடைய வேதாகம போதனை உடன்விசுவாசிகளால் வெகுவாக போற்றப்படும். விசுவாசதுரோகம் உட்பட ஆரோக்கியமற்ற செல்வாக்குகளிலிருந்தும்கூட இது சபையைப் பாதுகாக்கும்.
படுகுழிகளைத் தவிர்த்திடுங்கள்
12. இந்தப் பத்திரிகையில் ஒரு சமயம் பிரசுரிக்கப்பட்ட என்ன புத்திமதி, நாவை தவறாக உபயோகிப்பதை தவிர்க்க ஒரு மூப்பருக்கு உதவி செய்யும்?
12 ஒரு மூப்பராக, படுகுழிகளைத் தவிர்ப்பதன் மூலமாகவும் உங்கள் பொறுப்பைக் காத்துக்கொள்ளுங்கள். ஒரு போதகராக நாவைத் தவறாகப் பயன்படுத்துவது இவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம் யெகோவாவின் அமைப்பால் நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, 1897, மே மாத பிரதியில், இந்தப் பத்திரிகை, யாக்கோபு 3:1–13-ஐ கலந்தாலோசித்து, விசேஷமாக மூப்பர்களுக்கு இவ்விதமாகச் சொன்னது: “பேச்சுத்திறமையுள்ள நாவு அவர்களுக்கிருக்குமேயானால் பெரும் ஆசீர்வாதத்துக்கு அது ஒரு கருவியாக இருந்து ஆண்டவரிடமும், சத்தியத்தினிடமும், நீதியின் வார்த்தையினிடமும் அநேகரைக் கொண்டு வரும். அல்லது, மறுபட்சத்தில் பிழையினால் கறைபட்டிருக்குமேயானால், நாவு சொல்ல முடியாத தீங்கை—விசுவாசத்துக்கு, ஒழுக்கத்துக்கு, நற்கிரியைகளுக்கு சேதத்தை உண்டுபண்ணக்கூடும். நிச்சயமாகவே போதனா ஈவை பிரயோகிக்கும் எவருமே கடவுளுடைய மற்றும் மனிதருடைய பார்வையில் அதிகப்படியான உத்திரவாதத்துக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறான் என்பது மெய்யே. . . . ஆசீர்வாதத்தையும் இளைப்பாறுதலையும் பெலத்தையும் தாங்கிச் செல்லும் தெய்வீக வார்த்தை புறப்பட்டு வரும் ஓர் ஊற்றுக்கண்ணாக இருக்கும் எவரும்—கடவுளை கனவீனப்படுத்தி அவருடைய வார்த்தையைத் தவறாக வழங்கும்—ஒரு சாபத்தை, ஒரு காயத்தை ஏற்படுத்தும் கசப்பான தண்ணீர்கள், பொய் கோட்பாடுகள் தங்களிலிருந்து வெளிவராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு தலைவர்களை தெரிவு செய்வதில், இங்கு கூறப்பட்டுள்ளபடி, ‘நாவு’ தகுதி கவனியாமல் விடப்படக்கூடாது. அக்கினி நாவினர் தெரிந்து கொள்ளப்படக்கூடாது. ஆனால் தங்களுடைய நாவுகளை ‘அடக்கும்’ சாந்தகுணமுள்ள, மிதமானவர்களும் ‘கடவுளுடைய வாக்காகப் பேச’ கவனமாக முயற்சி எடுக்கிறவர்களும் மட்டுமே அவ்விதமாகத் தெரிந்துகொள்ளப்பட வேண்டும்.” ஒரு மூப்பர் தன் நாவை சரியாக பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது!
13. பொழுதுபோக்கு விஷயத்தில் மூப்பர்கள் என்ன எச்சரிக்கையை பிரயோகிப்பது அவசியமாக இருக்கிறது?
13 அளவுக்கு அதிகமான பொழுதுபோக்கும்கூட தவிர்க்கப்பட வேண்டிய ஒரு படுகுழியாகும். பொழுதுபோக்கு ஒரு கிறிஸ்தவனுக்குப் புத்துயிரளித்து கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும், சோர்வடையச் செய்து கவனத்தைத் திசை திருப்புவதாக இருக்கக்கூடாது. மேலுமாக, கண்காணிகள் ‘பழக்கவழக்கங்களில் நிதானமாக’ இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 3:2) பொழுதுபோக்கு விஷயத்தில் நீங்கள் செய்கிறவற்றை நிதானம் கட்டுப்படுத்துமேயானால், இது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து சபைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை அளிப்பதாக இருக்கும். உங்கள் உடன் விசுவாசிகள் ஊக்கமாக வெளி ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், வார இறுதி நாட்களில் அடிக்கடி பொழுதுபோக்குக்காக வெளியே சென்றுவிடுவீர்களேயானால், நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்க மாட்டீர்கள். நற்செய்தி கட்டாயமாக பிரசங்கிக்கப்பட வேண்டும், மூப்பர்கள் வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக இந்த வேலையில் முன்சென்று நடத்த வேண்டும்.—மாற்கு 13:10; தீத்து 2:14.
14. (எ) மூப்பர்கள் பாலின ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக எச்சரிக்கையாயிருக்க வேண்டியதன் அவசியத்தை என்ன வேதாகம உதாரணங்கள் உயர்த்திக் காண்பிக்கின்றன? (பி) ஆவிக்குரிய சகோதரிகளுக்கு உதவி செய்வதன் பேரில் அடிக்கடி கொடுக்கப்படும் என்ன ஆலோசனையை மூப்பர்கள் அசட்டை செய்யக்கூடாது?
14 பாலின ஒழுக்கக்கேடு தவிர்க்க வேண்டிய மற்றொரு படுகுழியாகும். கடவுளுடைய மக்களின் உத்தமத்தை முறித்துப் போடும் முயற்சியில் சாத்தான் பயன்படுத்தும் சோதனைகளை ஒரு மூப்பர் எதிர்த்து நிற்கவில்லையென்றால், அவரையும்கூட உலகின் ஒழுக்க சீர்குலைவு பாதிக்கக்கூடும். (மத்தேயு 4:1–11; 6:9, 13 ஒப்பிடவும்.) இஸ்ரவேலரை சபிக்கும் தன்னுடைய முயற்சியில் தோல்வியடைந்த பிலேயாம் தீர்க்கதரிசி, அவர்களைப் பாலின வணக்கத்தில் ஈடுபடும்படி செய்விக்கக்கூடுமானால் யெகோவாதாமே அவர்களை சபித்துவிடுவார் என்பதாக விவாதித்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆகவே “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி” மோவாபிய அரசன் பாலாக் என்பவனுக்கு பிலேயாம் கற்றுக்கொடுத்தான். அந்தப் படுகுழியை அவர்கள் தவிர்த்தார்களா? இல்லை, மோவாபிய ஸ்திரீகளோடு ஒழுக்கக்கேடான உறவுகளை வைத்துக்கொண்டு அவர்களுடைய கடவுட்களைப் பணிந்து கொண்டதன் காரணமாக யெகோவா அனுப்பிய வாதையில் 24,000 இஸ்ரவேலர் மரித்துப் போயினர். (வெளிப்படுத்துதல் 2:14; எண்ணாகமம் 25:1–9) ‘கடவுளுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகிய’ தாவீதுகூட பாலின ஒழுக்கக்கேட்டின் படுகுழியினுள் இடறிவிழுந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (1 சாமுவேல் 13:14; 2 சாமுவேல் 11:2–4) ஆகவே ஒரு மூப்பராக ஆவிக்குரிய ஒரு சகோதரிக்கு ஒருபோதும் தனியாக உதவி செய்யாமல், ஆனால் இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுகையில் மற்றொரு மூப்பரை கொண்டிருக்கும்படியாக “உண்மையுள்ள விசாரணைக்காரன்” திரும்பத் திரும்ப கூறும் ஆலோசனைக்குச் செவிகொடுங்கள்.—லூக்கா 12:42.
15. பொருளாசையின் படுகுழியை தவிர்ப்பதற்கு ஒரு மூப்பரின் குடும்பம் அவருக்கு எவ்விதமாக உதவ முடியும்?
15 பொருளாசை ஒரு மூப்பர் தவிர்க்கவேண்டிய மற்றொரு படுகுழியாக இருக்கிறது. யெகோவா, போதிய படியளப்பார் என்பதை அறிந்தவர்களாய் அத்தியாவசியமானவற்றோடு திருப்தியாக இருங்கள். (மத்தேயு 6:25–33; எபிரெயர் 13:5) சிக்கனமாயிருக்க உங்கள் குடும்பத்தைப் பயிற்றுவியுங்கள். ஏனென்றால் ஊதாரித்தனம், நேரம் மற்றும் வள ஆதாரங்களின் திருடனாக இருக்கிறது. இது குடும்பத்துக்கு உதவி செய்யவும், வெளி ஊழியத்தில் ஈடுபடவும், சபையைப் பலப்படுத்தவும், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்கவும் பயன்படுத்தப்படலாம். இந்த விஷயத்தில் குடும்பத்தின் ஒத்துழைப்பினால் ஒரு மூப்பர் பயனடைகிறார், அவர்களுக்கு உண்மையில் அவசியமில்லாத காரியங்களுக்காக அவர் மீது அழுத்தத்தைக் கொண்டுவராமல் இருப்பதற்காக அவர் நன்றியுள்ளவராக இருக்கிறார். உண்மையில் “சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் [யெகோவாவை, NW] பற்றும் பயத்தோடுகூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்.”—நீதிமொழிகள் 15:16.
“உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்”
16. எபேசுவிலிருந்த கண்காணிகளுக்கு பவுல் என்ன புத்திமதியைக் கொடுத்தான்?
16 மூப்பர்கள் தங்கள் பொறுப்பைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் எபேசுவிலிருந்த கண்காணிகளுக்குப் பவுல் கொடுத்த புத்திமதியைப் பின்பற்ற வேண்டும். அவன் அவர்களுக்குச் சொன்னான்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தினாலே (NW) சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள்.”—அப்போஸ்தலர் 20:28–31.
17, 18. எண்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட என்ன புத்திமதி இன்னும் கிறிஸ்தவ மூப்பர்களுக்குப் பொருந்துகிறது?
17 எண்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் முன்பாக, உடன் மூப்பர்களுக்குப் பவுலின் இந்த மேல் கூறப்பட்ட புத்திமதியை மேற்கோள் காண்பித்து காவற்கோபுரம் (மார்ச் 1, 1909) குறிப்பிட்டதாவது: “எல்லா இடங்களிலுமுள்ள மூப்பர்கள் விசேஷமாக கவனிப்பது அவசியமாகும்; ஏனென்றால் எல்லா சோதனைகளிலும், அதிகமாக தயவு பெற்றவர்களுக்கும் அதிக பிரபலமாக இருப்பவர்களுக்குமே மிகக் கடுமையான தாக்குதல்களும் சோதனைகளும் ஏற்படுகின்றன. ஆகவேதான் [யாக்கோபு] அறிவுறுத்துகிறான், ‘சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.’ அதேவிதமாகவே எல்லா மனிதவர்க்கத்தினிடமாகவும் அன்பையும் நல்வாழ்த்துக்களையுமேயன்றி வேறொன்றையும் கொண்டில்லாமல், அதிகமதிகமாக பரிசுத்த ஆவியின் கனிகளினாலும் கிருபையினாலும் நிறைந்தவர்களாகி மந்தைக்கு உன்னிப்பாக கவனம் செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்று இருதயத்தில் சுத்தமாயும் தன்னலமற்றவராயுமிருக்கும் எல்லா மூப்பர்களுக்கும் நாங்கள் அறிவுரை கூறுகிறோம். மந்தை தேவனுடையது என்பதையும் நீங்கள் தேவனுக்கும் அவர்களுக்கும் உத்தரவாதமுள்ளவர்களென்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பெரிய மேய்ப்பருக்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்களாக நீங்கள் அவர்கள் ஆத்துமாக்களுக்கு (அக்கறைகளுக்கு) விழிப்பாயிருக்க வேண்டும். எல்லாவற்றிலும் முக்கியமான காரியம் அன்பே என்பதை நினைவில் கொள்ளுங்கள்; கோட்பாடுகளை அசட்டை செய்யாதிருக்கையில், சரீரத்தின் பல்வேறு உறுப்பினர்களின் மத்தியிலும் கர்த்தருடைய ஆவியின் வளர்ச்சிக்கு விசேஷ கவனம் செலுத்தி, இவ்விதமாக அவர்கள் ‘சுதந்தரத்தைப் பெற்றுக் கொள்ளவும்’ தெய்வீக சித்தத்தின்படி இந்தத் தீங்கு நாளில் இடறி விழாமல், எல்லாவற்றையும் செய்து முடித்தவர்களாய் கிறிஸ்துவிலும், அவருடைய சரீரத்திலும் அவருடைய உறுப்பினர்களிலும், அவருடைய உடன்–தியாகிகளிலும், அவருடைய உடன்–சுதந்தரவாளிகளிலும் முழுமையாக நிற்கும்படிச் செய்யுங்கள்.”
18 அந்த வார்த்தைகள் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட மூப்பர்களிடமும் அந்தக் காலங்களில் யெகோவாவின் அமைப்பின் புரிந்து கொள்ளுதலோடும் சூழ்நிலைகளோடும் இசைவாக இருந்த உடன் விசுவாசிகளிடமும் சொல்லப்பட்டன. என்றபோதிலும், இன்று அந்தப் புத்திமதி எத்தனை நன்றாகப் பொருந்துகிறது! அவர்களுடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதாக இருந்தாலும் அல்லது பூமிக்குரியதாக இருந்தாலும், கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களைக் குறித்து எச்சரிப்புள்ளவர்களாக இருந்து, தங்கள் பொறுப்பைக் காத்துக் கொண்டு, கடவுளுடைய மந்தையின் அக்கறைக்கு அன்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் பொறுப்பைக் காத்துக்கொள்வதில் கிடைக்கும் சந்தோஷம்
19, 20. மூப்பர்கள் தங்கள் பொறுப்பைக் காத்துக் கொள்கையில் சந்தோஷம் விளைவடைகிறது என்று ஏன் சொல்லப்படலாம்?
19 மகிழ்ச்சி—உண்மையில் இருதப்பூர்வமான சந்தோஷம்—ஒரு கிறிஸ்தவ மூப்பராக உங்கள் பொறுப்பை காத்துக் கொள்வதினால் கிடைக்கிறது. முக்கியமான ஓர் உத்தரவாதத்தை நன்றாகச் செய்து முடிப்பதில் இன்பம் கிடைக்கிறது. ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள், ஜெப சிந்தையாயிருங்கள், கடினமாக உழைக்கிறவர்களாயிருங்கள். ஒரு மூப்பராக உங்கள் பொறுப்பைக் காத்துக் கொண்டு, கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த மனிதன், “நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன்” என்று சொன்னது போல சொல்லக்கூடிய அந்தச் சமயத்தை எதிர்நோக்கியவர்களாக இருங்கள்.—எசேக்கியேல் 9:3, 4, 11.
20 ஆம், ஒரு மூப்பராக உண்மையுடன் வேலை செய்யுங்கள், அப்பொழுது, நோவாவைக் குறித்து “அப்படியே செய்தான்” என்பதாகச் சொல்லப்பட்டது போல் உங்களைக் குறித்து சொல்லப்படலாம். (ஆதியாகமம் 6:22) இப்படிப்பட்ட ஊக்கமான சேவையிலிருந்து சபை அநேக வழிகளில் நன்மையடைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் பொறுப்பைக் காத்துக்கொள்ளும் உண்மையுள்ள மூப்பர்களால் ஊழியஞ்செய்யப்படும் பலமான சுறுசுறுப்பான சபைகளால் யெகோவா கனப்படுத்தப்படுகிறார். ஆனால், உண்மையில், “நல்லது உத்தம ஊழியக்காரனே” என்பதாக நீங்கள் சொல்லப்பட வேண்டுமானால் அதிகம் தேவைப்படுகிறது. (லூக்கா 19:17) ஒரு மூப்பராக நீங்கள் கடவுளுடைய மந்தையைக் கனிவோடும்கூட நடத்த வேண்டும். (w89 9/15)
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
◻ கிறிஸ்தவ மூப்பர்களுக்கு என்ன கூடுதலான பொறுப்பு இருக்கிறது?
◻ ஒரு மூப்பர் தன் பொறுப்பைக் காத்துக் கொள்ள, என்ன உடன்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
◻ தன் பொறுப்பைக் காத்துக்கொள்ள ஒரு மூப்பர் என்ன படுகுழிகளைத் தவிர்க்க வேண்டும்?
◻ மூப்பர்கள் தங்கள் பொறுப்பைக் காத்துக் கொள்கையில், ஏன் சந்தோஷம் கிடைக்கிறது?
[பக்கம் 14-ன் படம்]
ஒரு மூப்பராக, உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களோடும் மற்றவர்களோடும் வெளி ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்ளுங்கள்
[பக்கம் 15-ன் படம்]
ஒரு மூப்பராக உங்கள் பொறுப்பை நீங்கள் காத்துக்கொள்வீர்களானால், சபை அநேக வழிகளில் பயனடையும்