‘உயிர்த்தெழுதலில் அவர்கள் எழும்பிவருவார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்’
சர்வ வல்லமையுள்ள கடவுள் மனிதவர்க்கத்துக்கு ஜீவனைக் கொடுத்தார். மரித்துவிட்ட ஆட்களுக்கு அதை அவரால் மீட்டுத்தரவும் முடியும். அவரிடமிருந்தே, ஜீவனையும் மரணத்தையும் பற்றிய மிக அதிக நம்பத்தக்கத் தகவலை நாம் கொண்டிருக்கிறோம்: பைபிளின் இரண்டு பகுதிகளாகிய எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமத்தில், இது மரித்தவர்களில் பெரும்பாலானோர் திரும்ப வரமுடியும், வருவார்கள் என்ற உண்மையை ஆதாரமாகக் கொண்ட செய்தியைக் கொண்டிருக்கிறது.—யோவான் 5:28, 29.
இதை விளக்குவதற்கு, இயேசு கிறிஸ்துவுக்கு நன்கு அறியப்பட்டவனாயிருந்த, பெத்தானியாவிலிருந்து வந்த லாசருவைப் பற்றிய சரித்திரப் பதிவை கவனியுங்கள். லாசரு நோய்வாய்ப்பட்டு பின்னர் இறந்து போனான். அதன்பிறகு, இயேசு லாசருவின் சகோதரி மார்த்தாளிடம்: “உன் [மரித்த] சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று சொன்னார். அதற்கு அவள், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்று பதிலளித்தாள். (யோவான் 11:23, 24) ஆம் அதை அவள் அறிந்திருந்தாள். நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், தன் அன்பு சகோதரன் லாசரு “கடைசி நாளிலே” திரும்ப வருவான் என்பதைப் பற்றியதில் அவளுக்குச் சந்தேகமிருக்கவில்லை.
யோவான் 11-ம் அதிகாரத்திலுள்ள சரித்திரப் பதிவை நீங்கள் முழுவதுமாக வாசிக்கையில், அப்போது என்ன நடந்தது என்பதைப் பற்றிய விவரங்களை நீங்கள் காண்பீர்கள். லாசரு மரித்து நான்கு நாட்கள் ஆனபோதிலும்கூட இயேசு அந்த மனிதனை உயிர்த்தெழுப்பினார். அந்த உயிர்த்தெழுதல், மரித்தோரை “கடைசி நாளில்” உயிருக்குக் கொண்டுவருவதாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றக்கூடும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. ஆனால் மார்த்தாள் லாசருவை மறுபடியும் எங்கே பார்க்க எதிர்ப்பார்த்திருந்தாள்? வரபோகிற உயிர்த்தெழுதல் எங்கே நடைபெறும் என்பதாக மற்ற உண்மையுள்ள யூதர்கள் கற்பனை செய்திருந்தார்கள்?
‘திரும்பி வரமுடியாத தேசமா?’
பூமியானது மனிதனின் இயற்கையான இருப்பிடமாக இருப்பதற்காக கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டது. சங்கீதக்காரன் அதைப் பின்வரும் இந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறான்: “வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” (சங்கீதம் 115:16, NW) ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்களேயானால், பூமியைத் தவிர வேறு ஏதோ ஓரிடத்தில் நித்திய ஜீவனை அடைந்திருப்பார்கள் என்பதாகப் பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுவதில்லை. உண்மையில், முதல் மனித தம்பதி கடவுளுக்குக் கீழ்ப்படியாதப் போக்கினுள் வீழ்ந்துவிடுவதற்கு முன்பாக, இங்கு பூமியில்தானே, அவர்கள் அனுபவித்து மகிழ்ந்த பரதீஸில்தானே, “ஜீவ விருட்சம்” இருந்ததல்லவா? (ஆதியாகமம் 2:9; 3:22) இதற்கு மாறாக, கடவுளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததன் காரணமாக, ஏதேனுக்கு வெளியே அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் (ஆதாமின் கடவுள் பயமுள்ள குமாரன் ஆபேல் முதற்கொண்டு) மனிதனுக்குரியதாக அவர்கள் அறிந்திருந்த ஒரே வீடாகிய பூமியோடுதானே உயிர்த்தெழுதலை சம்பந்தப்படுத்தியிருக்க வேண்டும்.
‘இப்பொழுது, சற்று பொறுங்கள்,’ என்பதாக பைபிளோடு பழக்கப்பட்ட சில ஆட்கள் சொல்லக்கூடும், ‘யோபு, 16-ம் அதிகாரத்தில் 22-ம் வசனத்தில், “திரும்பி வராத வழியே” தான் “போவேன்” என்று சொல்லவில்லையா? மேலும் யோபு 7:9-ல் அவன் சொன்னதாவது: “பாதாளத்தில் [கல்லறையில்] இறங்குகிறவன் இனி ஏறிவரான்.” வசனம் 10-ல் யோபு மேலுமாக: “இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது” என்றான்.’
ஆகவே சில அறிஞர்கள் உரிமைப்பாராட்டுகிறபடி, இந்த வசனங்களும் இதுபோன்ற கூற்றுகளும், யோபு, மரணத்தை “திரும்பி வர முடியாத தேசம்” என்று கருதியதாகக் காண்பிக்கவில்லையா? இப்படிப்பட்ட கூற்றுகள், யோபு எதிர்கால உயிர்த்தெழுதலில் நம்பிக்கையுள்ளவனாக இல்லை என்பதை அர்த்தப்படுத்துகின்றனவா? விடை காண, இந்த வார்த்தைகளை அவைகளின் சந்தர்ப்பச் சூழலோடு எடுத்துக்கொண்டு, இந்த விஷயத்தின் பேரில் யோபுதானே வெளியிட்ட மற்ற கருத்துக்களோடு ஒப்பிடவும்வேண்டும்.
யோபு, தன்னுடைய வேதனைகளுக்குப் பின்னாலிருந்த காரணங்களை அறியாதவனாயிருந்தான். கொஞ்சக் காலமாக அவன், தன்னுடைய உபத்திரவங்களுக்குக் கடவுள்தாமே காரணமாக இருந்ததாகத் தவறா நினைத்துக்கொண்டிருந்தான். (யோபு 6:4; 7:17–20; 16:11–13) சோர்வுற்றவனாய், அவனுக்கு உடனடியாக விடுதலைக் கொடுக்கக்கூடிய இடம் கல்லறையாக மாத்திரமே இருக்கமுடியும் என்பதாக நினைத்தான். (யோபு 7:21; 17:1; 3:11–13 ஒப்பிடவும்.) அங்கே, அவனுடைய காலத்தில் வாழ்ந்துவந்தவர்களின் நோக்குநிலையிருந்து அவன் காணப்படமாட்டான், அவனுடைய வீட்டுக்குத் திரும்பமாட்டான், மேலுமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டான், கடவுளுடைய நியமிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகத் திரும்பி வரவோ அல்லது அவ்விதமாகச் செய்வதற்கு எந்த எதிர்பார்ப்பையோ கொண்டிருக்கமாட்டான். கடவுளுடைய குறுக்கிடுதலின்றி அவர்களாகவே விடப்படுவார்களேயானால், யோபுவும் ஆதாமின் வம்சத்தாராகிய மற்ற அனைவரும் மரித்தோரிலிருந்து எழும்பிவர வல்லமையற்றவராக இருப்பர்.a—யோபு 7:9, 10; 10:21; 14:12.
உயிர்த்தெழுதலில் நம்பிக்கை
ஆனால், யோபு தான் அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பற்றி நிச்சயமற்றவனாய் இருந்ததையும், அவனுடைய உடனடியான எதிர்காலத்தைப் பற்றிய சோர்வுதரும் கருத்துகளையும் வைத்து, அவனுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை என்பதாக நாம் விளங்கிக்கொள்ளக்கூடாது. அவன் எதிர்கால உயிர்த்தெழுதலில் நிச்சயமாகவே நம்பிக்கை வைத்திருந்தான் என்பது யோபு 14:13–15-ல் தெளிவாக இருக்கிறது. அந்தப் பகுதியில், யோபு, ‘ஷியோலில் மறைத்து’ (NW) வைக்கப்படவும் பிற்பாடு கடவுளால் ‘நினைவுகூரப்படவும்’ விரும்பியதைப் பற்றிப் பேசினான். மேலுமாக, யோபு 19:25–27-ல், உத்தமனும் விசுவாசியுமான இந்த மனிதன் தனக்கு “மீட்பர்” இருப்பதாகவும் பின்னால், ‘தேவனைப் பார்ப்பதாகவும்’ சொன்னான். ஆம், யோபு உயிர்த்தெழுதலில் நம்பிக்கையுடையவனாக இருந்தான். ‘மரித்தோரை உயிர்த்தெழுப்ப’ கடவுளின் வல்லமையைக் குறித்து ஏற்கெனவே உறுதியான நம்பிக்கையுடையவனாயிருந்த ஆபிரகாமைப் போன்றே அவன் கடவுள் தன்னை உயிர்த்தெழுப்பக்கூடும், உயிர்த்தெழுப்புவார் என்பதாக விசுவாசித்தான்.—எபிரெயர் 11:10, 16, 19, 35.
நம்முடைய நவீன காலங்கள் வரையாகவும் யூதர்கள் பூமியின் மீது வாழ்வதற்கு ஓர் எதிர்கால உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்சைக்ளோபீடியா ஜூடைக்கா (1971) கூறுவதாவது: “கடைசியாக மரித்தோர் தங்கள் சரீரங்களில் புதுப்பிக்கப்பட்டு பூமியின் மீது திரும்பவும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை” யூதேய மதத்தின் “முக்கிய கோட்பாடு” ஆகும். என்சைக்ளோப்பீடியா தொடர்ந்து சொல்வதாவது: “இந்தக் கருத்து அத்தனை முக்கியமானதாகவும் நேர்பொருள் கொண்டதாகவும் எடுத்துக் கொள்ளப்படுவதால், பக்தியுள்ள யூதர்கள் அவர்கள் புதைக்கப்படுகையில் உடுத்தியிருக்கும் ஆடையையும், எல்லா உறுப்புகளும் முழுமையாகப் புதைக்கப்படுவதையும், இஸ்ரேலில் புதைக்கப்படுவதையும் குறித்து அத்தனை அக்கறையுள்ளவர்களாயிருக்கின்றனர்.”
உயிர்த்தெழுதலில், மரித்தவர்களின் சிதைந்து போன மனித சரீரங்களைக் கடவுள் மீண்டுமாக ஒன்றுகூட்டிச் சேர்ப்பார் என்பதாக பைபிள் குறிப்பிடாதிருப்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. வெகு காலத்துக்கு முன்பாக மரித்தவர்களுடைய உண்மையான அணுக்கள் பூமி முழுதிலும் பரவிவிட்டும், அநேகமாக பிற்காலத்தில் தாவர மற்றும் மிருக உயிர்களில்—ஆம், அதற்கு பின் மரித்த மற்ற மனிதர்களுக்குள்ளும்கூட இணைந்துவிட்டுமிருக்கின்றன. உயிர்த்தெழுதலில் எழுப்பப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்களுக்கு அதே அணுக்களை பயன்படுத்த முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. மாறாக, கடவுள் மனிதர்களைப் பொருத்தமான சரீரங்களோடு அவருக்குப் பிரியமானபடி, மரணத்துக்கு முன்பாக அவர்கள் அனுபவித்த குறைகளும் அங்கயீனங்களும் இல்லாமல், உயிருக்குக் கொண்டுவருவார்.—1 கொரிந்தியர் 15:35–38 ஒப்பிடவும்.
உயிர்த்தெழுப்பப்படும் இவர்கள், உயிருக்குகொண்டு வரப்படுகிற அவர்களுடைய நண்பர்களாலும் உறவினர்களாலும் அடையாளங்கண்டு கொள்ளப்படுவார்களா? அது நியாயமாகத் தோன்றுகிறது, ஏனென்றால், உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை நாமும், அவர்கள் நம்மையும் அடையாளங்கண்டு கொள்ளவில்லையென்றால், மரித்த நம்முடைய அன்பார்ந்தவர்கள் உண்மையில் திரும்ப வந்துவிட்டதை நாம் எவ்வாறு அறிவோம்? லாசருவின் உடல் அழுகிக்கொண்டிருந்தபோதிலும், இயேசு அவனை உயிர்த்தெழுப்பிய பின்பு அவன் உறவினர்களாலும் பழக்கமானவர்களாலும் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டான். இதன் காரணமாக, யெகோவா தேவன் அன்பாக பூமியின் மீது உயிர்த்தெழுதலில் நாம் ஒருவரையொருவர் காணவும் அறிந்துகொள்ளவும் செய்வார் என்று நாமும்கூட எதிர்பார்க்கலாம்.
ஒரு சிலருக்குப் பரலோக நம்பிக்கை
நாம் கவனித்தவிதமாகவே, பூமி மனிதவர்க்கத்துக்காகக் கடவுள் கொடுத்திருக்கும் வீடாக இருக்கிறது. என்றாலும், இயேசு கிறிஸ்து மனிதவர்க்கத்தின் மத்தியிலிருந்து, தெரிந்துகொள்ளப்பட்ட எண்ணிக்கையான ஆட்கள், பரலோகங்களில் அழியாமையும் சாவாமையுமுள்ள ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையை விளக்கினார். (2 தீமோத்தேயு 1:10) இயேசு பரலோக வாழ்க்கைக்கு “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” திறந்து வைத்தப் பின்பு கொஞ்ச காலத்துக்கு, எல்லாக் கிறிஸ்தவர்களுமே அந்த நம்பிக்கையில் பங்குகொள்வதற்கு அழைக்கப்பட்டனர். (எபிரெயர் 9:24; 10:19, 20) கடைசியாக எத்தனை பேர் அந்த வெகுமதியைப் பெற்றுக் கொள்வர்? ‘சம்பவிக்கவேண்டியவைகளை தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்த’ ஆவியால் ஏவப்பட்ட வெளிப்படுத்துதல், “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட”வர்களின் எண்ணிக்கை 1,44,000 என்பதாகக் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 1:1; 7:4–8; 14:1, 3.
ஒப்பிடப்படுகையில், பரலோக வாழ்க்கைக்குப் “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” ஆட்கள் ஏன் இத்தனை சிறு தொகையினராக இருக்கின்றனர்? வரையறுக்கப்பட்ட இந்த எண்ணிக்கைக்கு காரணத்தை அதே வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்குச் சொல்லுகிறது. நாம் 20-ம் அதிகாரத்தில், வசனம் 5 மற்றும் 6-ல் பின்வருமாறு வாசிக்கிறோம்: “இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐயும் கூட பார்க்கவும்.
ராஜாவின் பூமிக்குரிய குடிமக்கள்
எல்லா மனிதர்களுமே ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆளுகை செய்ய மாட்டார்கள் என்பது வெகுத் தெளிவாக இருக்கிறது, ஏனென்றால், அனைவரும் ராஜாக்களாக இருந்தால், அவர்கள் யார் மீது “ஆளுகைச்” செய்வார்கள்? மாறாக, இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்களைச் சுற்றி கட்டப்பட்ட, விசேஷமாகத் தெரிந்தெடுக்கப்பட்ட இந்தத் தொகுதி, வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் 9–17 வசனங்களில் விவரிக்கப்பட்ட “திரள் கூட்டத்தாரால்” பகுதியளவில் குடியிருக்கப்படும் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள். இவர்களில் இலட்சக்கணக்கானோர், இப்பொழுது வேகமாக நெருங்கிவரும் “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தை” எதிர்நோக்கியவர்களாக இருக்கிறார்கள். இது இந்தப் பூமியை எல்லா அநீதிகளிலிருந்தும் சுத்திகரிக்கும். கடவுளுடைய தகுதியற்ற தயவினால், அவர்கள், எப்போதுமே மரிக்காமல், அந்த மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கக்கூடியவர்களாக இருப்பர்.—வெளிப்படுத்துதல் 16:14; 21:14; நீதிமொழிகள் 2:21, 22.
‘ஆனால் என்னுடைய அன்பார்ந்தவர்கள் போன்று மரித்துவிட்டவர்களைப் பற்றி என்ன?’ என்பதாக நீங்கள் நியாயமாகவே கேட்கலாம். மற்றவர்கள், ‘மரித்தாலும் பிழைப்பார்கள்’ என்பதாக இயேசுதாமே மார்த்தாளிடம் சொன்னார். (யோவான் 11:25) அது ஒரு பூமிக்குரிய உயிர்த்தெழுதலாக இருக்கும். இயேசு பரலோகங்களில் தம்முடைய உடன் அரசர்களும் ஆசாரியர்களுமான 1,44,000 பேரோடு ஆட்சிசெய்கையில், கடவுள் சாதகமாக நினைவுகூரும் மரித்த அநேக இலட்சக்கணக்கானோர் எழுப்பப்படுவார்கள், இவர்கள் யெகோவாவின் உண்மை வணக்கத்தைக் கற்றறிய முழுமையான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்வர். உண்மையுள்ளவர்களாக இருந்தால், பூமி முழுவதிலும் பரவியிருக்கும் பரதீஸில் நித்திய ஜீவனின் வெகுமதியைப் பெற்றுக்கொள்வர். இதுவே, மார்த்தாள் தன்னுடைய சகோதரன் லாசரு, “கடைசி நாளிலே” உயிர்த்தெழுந்திருப்பான் என்பதாக இயேசுவிடம் ஒப்புக்கொண்ட அந்தச் சமயத்தில் குறிப்பிட்ட அந்தக் கடைசி நாளாக இருக்கும்.—யோவான் 5:28, 29; 11:24; லூக்கா 23:43.
உத்தரவாதங்களின்மேல் சார்ந்திருக்கும் ஒரு நம்பிக்கை
பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிர்த்தெழுதல்கள், பரிசுத்த வேதாகமம் அளிக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை உறுதிசெய்யும் மாதிரிகளும் உத்தரவாதங்களுமாக இருக்கின்றன. இந்தப் பதிவு, பூமியில் கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில், எலியா மற்றும் எலிசா தீர்க்கதரிசிகளும், (லாசருவினுடையது உட்பட) கடவுளுடைய குமாரனும், அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும் நடப்பித்த உயிர்த்தெழுப்புதல்களைப் பற்றியும், குறிப்பாக யெகோவா தேவன் தம்முடைய குமாரனை உயிர்த்தெழுப்பியதைப் பற்றியும் நமக்குச் சொல்கிறது. நீங்கள் இந்தப் பதிவுகளை உங்கள் பைபிளில் வாசித்துப் பார்க்கலாம்: 1 இராஜாக்கள் 17:17–24; 2 இராஜாக்கள் 4:32–37; மத்தேயு 28:1–10; லூக்கா 7:11–17; 8:40–56; யோவான் 11:38–44; அப்போஸ்தலர் 9:36–42; 10:38–42; 20:7–12.b
இவ்வண்ணமாக, பலமான ஆதாரங்களையுடைய உயிர்த்தெழுதலின் நம்பிக்கையின் அடிப்படையில் பவுல் அத்தேனேப் பட்டணத்தாருக்கு பின்வருமாறு உறுதியாகக்கூற முடிந்தது: “ஒருநாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 17:30, 31.
ஆம், இயேசுவின் உயிர்த்தெழுதலே, உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் உறுதிப்பாட்டுக்கு முடிவான உத்தரவாதமாகும். ஆகவே யெகோவா தேவனின் வல்லமையையும் அன்பையும் சந்தேகமின்றி நம்புவதற்கு நமக்கும்கூட உறுதியான ஆதாரமிருக்கிறது. மார்த்தாளுக்கிருந்ததைப் போன்ற அதே நம்பிக்கையை நாமும்கூட வெளியிடலாம்: ‘உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே மரித்தவர்கள் உயிர்த்தெழுந்திருப்பார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்!’
பவுலின் அவையோர், மார்ஸ் மேடையில், “மரித்தோரின் உயிர்த்தெழுதலைப்” பற்றிய அவனுடைய சாட்சியங்களைக் கேட்டப்பிறகு, அவர்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிந்தனர்: “சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: ‘நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம்’ என்றார்கள் . . . சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள்.”—அப்போஸ்தலர் 17:32–34.
உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு உங்கள் பிரதிபலிப்பு என்ன? இலட்சக்கணக்கானோரை, கோடிக்கணக்கானோரையும்கூட மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதாக யெகோவா கொடுத்திருக்கும் வாக்கை அவர் நிறைவேற்றுவார். நீங்கள் அவர்களைத் திரும்பவும் பார்க்கவும், அவர்களால் பார்க்கப்படவும் அங்கே இருப்பீர்களா என்பது பெரும்பாலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்காக கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும் அதற்கிசைவாக வாழவும் நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் மரித்தவர்களுக்கான நம்பிக்கையைப் பற்றியும் இந்தக் காரிய ஒழுங்கின் முடிவை நீங்கள் எவ்வாறு தப்பிப்பிழைக்கலாம் என்பது பற்றியும் அதிகமான தகவலை உங்களுக்குக் கொடுக்க மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்.—யோவான் 17:3. (w89 6/15)
[அடிக்குறிப்புகள்]
a அதே கருத்தில், கடவுளுடைய எந்தக் குறுக்கிடுதலுக்கும் முன்பாக இருக்கும் நிலைமையைக் குறித்து சங்கீதக்காரன் இவ்விதமாக எழுதுகிறான்: “அவர்கள் [இஸ்ரவேலர்] மாம்சமென்றும் திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் [அல்லது கடவுளிடமிருந்து வரும் உயிர் சக்தி என்றும்] [கடவுள்] நினைவுகூர்ந்தார்.”—சங்கீதம் 78:39.
b பைபிள் காலங்களில் நடைபெற்ற உயிர்த்தெழுதல்களைப் பற்றியும் கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது நடைபெற இருக்கும் பைபிள் வாக்களிக்கும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் அதிக விவரமான கலந்தாலோசிப்பை நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் காணலாம். 20-ம் அதிகாரத்தின் தலைப்பு “உயிர்த்தெழுதல்—யாருக்கு, எங்கே?” இந்தப் புத்தகம் உங்கள் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளிடமோ அல்லது இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களிலோ கிடைக்கும்.