மனிதனுக்கு அல்ல, கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்?
“மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை (யெகோவாவை, NW) நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.” (நீதிமொழிகள் 29:25) இந்த வார்த்தைகளோடு அந்தப் புராதன நீதிமொழி, உண்மையில் மனதின் நஞ்சாக இருக்கும் அந்தவித பயத்தைப் பற்றி எச்சரிக்கிறது—மனுஷனுக்கு பயப்படுகிற பயம். அது ஒரு கண்ணியோடு ஒப்பிடப்படுகிறது. ஏன்? ஏனென்றால், முயலைப் போன்ற சிறு மிருகம் ஒரு கண்ணியில் பிடிபடும்போது செயல்பட முடியாததாகிவிடுகிறது. அது ஓட விரும்புகிறது; ஆனால் அந்தக் கண்ணியோ விட்டுவிடாமல் பிடித்திருக்கிறது. அகப்பட்ட அந்தப் பிராணி செயலிழந்து இருக்கிறது.
மனித பயத்தினால் நாம் பிடிக்கப்பட்டிருப்போமானால், அந்த முயலைப் போன்றவர்களாகவே நாமும் இருப்போம். என்ன செய்ய வேண்டும் என்று நாம் அறிந்திருக்கலாம். அதை செய்யவும்கூட நாம் விரும்பலாம். ஆனால் பயம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் செயலிழந்தவர்களாக, செயல்படமுடியாதவர்களாக்கப்பட்டிருக்கிறோம்.
மனுஷ பயமாகிய கண்ணி
பைபிள் காலங்களில் பயமாகிய கண்ணியினுள் பிடிக்கப்பட்டவர்கள் பற்றிய சில உதாரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள். யோசுவாவின் நாட்களில், இஸ்ரவேலரின் திட்டமிடப்பட்ட படையெடுப்புக்கு முன்னால் 12 மனிதர்கள் கானான் தேசத்தை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். அந்த ஒற்றர்கள் திரும்பி வந்து தேவன் சொல்லியிருந்தபடியே, அந்தத் தேசமானது செழிப்பாக செல்வமுள்ளதாக இருந்தது என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த வேவுகாரரில் 10 பேர் அங்கு வாழ்ந்திருந்த குடிமக்களின் பலத்தைக் கண்டு பயந்துவிட்டிருந்தனர். இவ்வாறாக, மனித பயத்தினால் பிடிக்கப்பட்டவர்களாக இந்தப் பலத்தைப் பற்றிய ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையை இஸ்ரவேலருக்குக் கொடுத்து அந்த முழு தேசமுமே பயத்தினால் பற்றிக்கொள்ளப்படும்படிச் செய்தனர். கானானுக்குள் அணிவகுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும்படி கொடுக்கப்பட்ட கடவுளுடைய கட்டளைக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிய மறுத்துவிட்டனர். அதன் விளைவாக அடுத்துவந்த 40 வருடங்களில் ஒருசிலரைத் தவிர முழு வளர்ச்சியடைந்த ஆண்கள் எல்லாரும் வனாந்தரத்திலேயே இறந்துவிட்டனர்.—எண்ணாகமம் 13:21–14:38.
யோனா மனித பயத்திற்குப் பலியான இன்னொருவர். நினிவே என்ற பெரிய பட்டணத்தில் பிரசங்கிக்க நியமிக்கப்பட்ட போது, அவன் “கர்த்தருடைய (யெகோவாவுடைய NW) சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து” போனான். (யோனா 1:3) ஏன்? நினிவேயைச் சேர்ந்தவர்கள் இரக்கமற்ற வன்முறையாளர்கள் என்று பொதுவாக அறியப்பட்டிருந்தார்கள். யோனா நிச்சயமாகவே அதை அறிந்திருந்தான். மனிதபயம், நினிவேயிலிருந்து விலகி வேறு திசையில் ஓடும்படி அவனைச் செய்தது. முடிவில் தனக்குக் கொடுக்கப்பட்ட நியமிப்பை அவன் ஏற்றுக்கொண்டான் என்பது உண்மைதான். ஆனால், யெகோவாவிடமிருந்து அசாதாரணமான சிட்சையைப் பெற்றுக் கொண்டபிறகுதான் அப்படிச் செய்தான்.—யோனா 1:4, 17.
ராஜாக்கள்கூட மனிதர்களுக்குப் பயப்படலாம். ஒரு சமயம் ராஜாவாகிய சவுல் கடவுளுடைய வெளிப்படையான ஒரு கட்டளைக்கு நேரடியாகவே கீழ்ப்படியாமல் இருந்தான். அதற்கு அவனுடைய சாக்குபோக்கு என்னவாக இருந்தது? “நான் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும்மீறி . . . நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்களுடைய சொல்லைக் கேட்டேன்.” (1 சாமுவேல் 15:24) சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எருசலேம் பாபிலோனியரால் தாக்கப்பட்டிருந்த போது ஒரு விசுவாசமுள்ள தீர்க்கதரிசியாகிய எரேமியா ராஜாவாகிய சிதேக்கியாவை சரணடைந்து அதன் மூலம் எருசலேமை அதிக இரத்தம் சிந்துதலிலிருந்து காப்பதற்கு அறிவுரைக் கொடுத்தான். ஆனால் சிதேக்கியா மறுத்தான். ஏன்? அவன் எரேமியாவிடம் இவ்வாறு ஒப்புக்கொண்டான்: “கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம் பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன்.”—எரேமியா 38:19.
முடிவாக, அப்போஸ்தலனும்கூட பயப்படக்கூடும். இயேசு மரிக்கவிருந்த அன்று தம்மை பின்பற்றுகிறவர்களிடம், அவர்கள் எல்லாரும் தம்மை விட்டுப்போய் விடுவார்கள் என்று எச்சரித்தார். பேதுருவோ தைரியமாக இவ்வாறு அறிவித்தான்: “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்.” (லூக்கா: 22:33; மத்தேயு 26:31, 33) அந்த வார்த்தைகள் எவ்வளவு தவறானவையாக நிரூபித்தன! ஒருசில மணிநேரங்களுக்குப் பிறகு பேதுரு பயந்தவனாக இயேசுவோடு தான் இருந்ததையோ அவரை அறிந்திருந்ததையோகூட மறுதலித்துவிட்டான். மனிதபயம் அவனை வெற்றிகொண்டுவிட்டது! ஆம், மனித பயம் மெய்யாகவே மனதின் நஞ்சுதான்.
யாருக்கு நாம் பயப்படவேண்டும்?
நாம் மனித பயத்தை எவ்வாறு மேற்கொள்ளக்கூடும்? அதற்கு பதிலாக அதிக ஆரோக்கியமான பயத்தைக் கொண்டிருப்பதன் மூலமே. இந்தவிதமான பயம் அதே அப்போஸ்தலனாகிய பேதுருவின் பின்வரும் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தப்பட்டது: “தேவனுக்குப் பயந்திருங்கள்.” (1 பேதுரு 2:17) வெளிப்படுத்துதலில் யோவான் கண்ட தேவதூதன் மனிதவர்க்கத்துக்கு இவ்வாறு அழைப்புக் கொடுத்தான்: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.” (வெளிப்படுத்துதல் 14:7) ஞானவானான ராஜாவாகிய சாலொமோனும் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகையில் அப்படிப்பட்ட பயத்தை உற்சாகப்படுத்தினான்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக; தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிரசங்கி 12:13) ஆம், தேவனுக்குப் பயப்படுவது ஒரு கடமையாக இருக்கிறது.
தேவனுக்குப் பயப்படுவது அநேக பலன்களைக் கொண்டுவருகிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்த சங்கீதக்காரன் இவ்வாறு பாடினான்: “நிச்சயமாகவே அவருடைய [யெகோவாவுடைய] இரட்சிப்பு அவருக்கு பயந்தவர்களுக்கு சமீபமாயிருக்கிறது.” (சங்கீதம் 85:9) பைபிளின் ஒரு நீதிமொழியும் இவ்வாறு அழுத்திக்கூறுகிறது: “கர்த்தருக்குப் (யெகோவாவுக்கு, NW) பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும்.” (நீதிமொழிகள் 10:27) ஆம், யெகோவாவுக்குப் பயப்படுதல் ஓர் ஆரோக்கியமான பிரயோஜனமுள்ள காரியம். நீங்கள் ஒருவேளை இப்படிச் சொல்லலாம், ‘நிச்சயமாகவே யெகோவா ஓர் அன்புள்ள கடவுள். ஆனால், அன்பான ஒரு கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்?’
ஓர் அன்பான கடவுளுக்குப் பயப்படுவதா?
ஏனென்றால், தேவனுக்குப் பயப்படுதல் என்பதானது, சில ஆட்களை சில நிலைமைகளில் பற்றிக்கொள்ளும், கீழ்த்தரமான உறைந்திடச் செய்யும் பயம் அல்ல. அது, ஒரு சிறுபிள்ளை தான் தகப்பனை நேசித்தப்போதும் தன் தகப்பன் தன்னை நேசிக்கிறார் என்று அறிந்திருந்தும் தன் தகப்பனிடம் கொண்டிருக்கும் அந்தவித பயமாக இருக்கிறது.
உண்மையில் தேவனுக்குப் பயப்படுதல் என்பதானது, சிருஷ்டிகர், நியாயம், நீதி, ஞானம் மற்றும் அன்பு ஆகியவற்றின் முழுமையான உருவமாகவே இருக்கிறார் என்பதை அறிந்து உணருவதிலிருந்து எழும்புகிற ஓர் ஆழமான, மரியாதையும் பக்தியும் கலந்த பயம் ஆகும். மகா உன்னத நியாயாதிபதியாக வெகுமதியளிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான ஆற்றலையும் ஆட்சியுரிமையையும் உடையவராயிருப்பதால் அவரை வெறுப்படையச் செய்யக்கூடாது என்ற ஆரோக்கியமான அச்சத்தை அது உட்படுத்துகிறது. “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். (எபிரெயர் 10:31) தேவனுடைய அன்பை நாம் அர்ப்பமான ஒன்றாக எண்ணக்கூடாது; அவருடைய நியாயத்தீர்ப்பும் குறைவாக மதிப்பிடப்படவேண்டிய ஒன்று அல்ல. அதனால்தான் பைபிள் இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறது: “கர்த்தருக்குப் (யெகோவாவுக்கு, NW) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”—நீதிமொழிகள் 9:10.
இருப்பினும், தமக்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிப்பதற்கு வேண்டிய அதிகாரத்தை யெகோவா கொண்டிருந்தாலும்—பல தடவைகள் அவ்வாறே தண்டித்துமிருக்கிறார்—அவர் எவ்விதத்திலும் இரத்ததாகம் உடையவராகவோ கொடூரமானவராகவோ இல்லை என்பதை நாம் நினைவுகூரவேண்டும். அவர் உண்மையில் ஓர் அன்பான கடவுளாகவே இருக்கிறார். சில சமயங்களில் அன்பான ஒரு பெற்றோரைப் போல நியாயமான விதத்தில் கோபமடைகிறார். (1 யோவான் 4:8) அதனால்தான் அவருக்குப் பயப்படுதல் ஆரோக்கியமானதாக இருக்கிறது. அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க அது நம்மை வழிநடத்துகிறது. அவை நம்முடைய நன்மைக்காகவே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஆனால் அவைகளுக்கு கீழ்ப்படியாமலிருப்பது எப்பொழுதுமே கெட்ட விளைவுகளைக் கொண்டுவருகிறது. (கலாத்தியர் 6:7,8) சங்கீதக்காரன் இவ்விதமாக அறிவிக்கும்படி ஏவப்பட்டான்: “கர்த்தருடைய (யெகோவாவுடைய NW) பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.”—சங்கீதம் 34:9.
யாருக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள்?
தேவனுக்குப் பயப்படுவது, எவ்வாறு மனிதபயத்தை வென்றுவிட நமக்கு உதவிசெய்கிறது? நாம் சரியானதைச் செய்வதினால், மனிதர்கள் நம்மை பரிகசிக்கலாம் அல்லது நம்மைத் துன்புறுத்தவும் செய்யலாம். அது நம்பேரில் அழுத்தத்தை வைக்கிறது. ஆனால் மரியாதையோடுகூடிய தேவபயம் சரியான மார்க்கத்தைப் பற்றிக்கொண்டிருக்கும்படியான அழுத்தத்தை நம்பேரில் வைக்கும். அது ஏனென்றால் நாம் அவர் வருத்தமடையும்படிச் செய்ய விரும்புவதில்லை. மேலுமாக, தேவ அன்பானது அவருடைய இருதயத்திற்கு எது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறதோ அதைச் செய்யும்படி நம்மைத் துரிதப்படுத்தும். கூடுதலாக சரியானதைச் செய்கிறதற்காக கடவுள் நமக்கு மிகுதியாக பலனளிக்கிறார் என்று நாம் நினைவிற்கொண்டிருப்பதனாலும் மேலுமதிகமாக அவரை நேசிக்கச் செய்து அவர் விரும்புவதைச் செய்ய நாம் விரும்பும்படி நம்மை செய்விக்கிறது. ஆதலால், கடவுளைப் பற்றிய சமநிலையான ஒரு நோக்குநிலை மனிதருக்காக நாம் ஏதாவது பயம்கொண்டிருப்போமானால் அதை வெற்றிக்கொள்ள நமக்கு உதவுகிறது.
உதாரணமாக, ஒத்தவயதிலுள்ள ஆட்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தினால், எது தவறானதோ அதைச் செய்திடும்படிக்கு அநேகர் அழுத்தப்பட்டிருக்கிறார்கள். பள்ளியில் இருக்கும் இளைஞர்கள் புகைபிடிக்கலாம்; கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கலாம்; பாலுறவு அனுபவத்தைப் பற்றி (மெய்யானதோ அல்லது கற்பனையோ) வீண்பெருமைப் பாராட்டலாம்; சாராயம் மற்றும் போதை தரும் வஸ்துக்களையும்கூட சோதித்துப் பார்த்திருக்கலாம். ஏன்? எப்போதுமே அவர்கள் விரும்புவதனால் அல்ல, ஆனால் தாங்கள் வித்தியாசமாக நடந்துகொண்டால், தங்களுடன்கூட இருக்கும் ஒத்தவயதினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருப்பதனாலேயே அவர்கள் அவ்விதமாகச் செய்துவிடுகிறார்கள். பருவ வயதிற்குள் உள்ள ஒரு வாலிபனுக்கு ஏளனமாக, கேலியாகப் பரிகசிக்கப்படுவது, சகித்துக்கொள்வதற்கு சரீரப்பிரகாரமான துன்புறுத்தலைப் போல அவ்வளவு கடினமாக இருக்கலாம்.
வயதுவந்த ஒருவரும்கூட தவறு செய்வதற்கான அழுத்தத்தை உணரலாம். ஒருவேளை வேலைசெய்யுமிடத்தில் எஜமானர் தன் கீழ் வேலைசெய்பவரிடம் ஒரு வாடிக்கையாளரின் விலைவிவரச் சீட்டில் தொகையை உயர்த்திக் காட்டும்படியாகவோ அல்லது ஒரு நிறுவனத்தின் வரிக்கான நமுனாவை, வரிவிதிப்பைக் குறைத்துப்போடும்படிக்கு நேர்மையற்ற விதத்தில் பூர்த்திசெய்யும்படியோ சொல்லலாம். அந்தக் கிறிஸ்தவன் இதற்குத் தான் கீழ்ப்படியாவிட்டால் தான் வேலையை இழந்துவிடுவோம் என்று உணரலாம். இவ்வாறாக, மனிதபயம் தவறான ஒன்றைச் செய்யும்படிக்கு அவர்மேல் அழுத்தம் கொண்டுவரலாம்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் ஓர் ஆரோக்கியமான தேவபயமும் அவருடைய கட்டளைகளுக்கான மரியாதையும், அந்தக் கிறிஸ்தவன் மனிதபயத்தினால் சரியாகச் செயல்படமுடியாமல் உறைந்து போகச் செய்துவிடாதபடி தடுத்திடும். தேவஅன்பானது தேவன் தடைசெய்துவிட்டிருக்கிற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்தி வைக்கும். (நீதிமொழிகள் 8:13) மேலுமாக பைபிள் பயிற்சி பெற்ற மனசாட்சிக்கு இசைவாக அவன் நடப்பானேயானால் விளைவு என்னவாக இருந்தாலும், கடவுள் தனக்கு ஆதரவளிப்பார் என்று கடவுள்பேரில் உள்ள அவனுடைய விசுவாசம் அவனுக்கு உறுதியளிக்கும். அப்போஸ்தலனாகிய பவுல் தன் விசுவாசத்தை இந்த வார்த்தைகளில் தெரிவித்தான்: “என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:13.
மிகக் கடுமையான சோதனைகளின் கீழும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்த புருஷர்களையும் ஸ்திரீகளையும் பற்றிய எராளமான உதாரணங்களை பைபிள் அளிக்கிறது. அவர்கள் “நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள்; வாளால் அறுப்புண்டார்கள்; பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள்; பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள்.” (எபிரெயர் 11:36, 37) ஆனால் தங்கள் மனங்கள் மனிதபயத்தினால் கட்டுப்படுத்தப்பட அவர்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு எதிர்மாறாக, பின்னால் இயேசுவானவர் தம்முடைய சீஷர்களிடத்தில் கூறிய அதே ஞானமான போக்கை அவர்கள் பின்பற்றினார்கள்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னா, NW] அழிக்க வல்லவருக்கே [கடவுள்] பயப்படுங்கள்.”—மத்தேயு 10:28.
மனிதருக்குப் பயப்படுவதைப் பார்க்கிலும் தேவனுக்கே பயப்படவேண்டும் என்ற இயேசுவின் இந்த அறிவுரையைப் பின்பற்றுவது, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எல்லாவிதமான கொடுமைகளை, சோதனைகளை, துன்புறுத்தல்களையெல்லாம் “சுவிசேஷத்தினிமித்தம்” சகித்துக்கொள்ள இயலும்படிகூடச் செய்தது. (பிலேமோன் 13) இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக அப்போஸ்தலனாகிய பவுல் இருக்கிறான். கொரிந்தியருக்கு அவன் எழுதிய இரண்டாவது நிருபத்தில் தான் கடவுளுக்குப் பயந்திருந்ததானது தன்னை காவல்களில் வைக்கப்பட்டபோதும், அடிபட்டபோதும், கல்லெறியுண்டபோதும், கப்பற்சேதத்தின்போதும், பாதைகளில் அநேக ஆபத்துக்களின்போதும், அநேக முறை கண்விழிப்புகளின்போதும், பசி, தாகம், குளிர், நிர்வாணத்தின்போதும், சகித்திருக்கும்படி எப்படி தைரியம் ஊட்டியது என்று அவன் காட்டுகிறான்.—2 கொரிந்தியர் 11:23–27.
அந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களை ரோமப் பேரரசின் கீழ், மிகக் கடுமையான துன்புறுத்தலின் கீழும் அவர்கள் அரங்கங்களில் கொடிய மிருகங்கள் மத்தியில் எறியப்பட்டபோதும், தாக்குப் பிடிக்க தேவபயம் அவர்களைப் பலப்படுத்திற்று. வரலாற்றின் இடைநிலைக்காலப் பகுதியில் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டக் காரணத்தால் தைரியமுள்ள விசுவாசிகள் வெளிப்படையாகவே எரிக்கப்பட்டனர். கடந்த உலகயுத்தத்தின்போது கிறிஸ்தவர்கள் கான்சன்ரேஷன் முகாம்களில் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்வதைவிட, துன்பம் அனுபவித்து மரிப்பதையே தெரிந்துகொண்டார்கள். தெய்வீக பயம் எவ்வளவு வல்லமையுள்ள சக்தியாக இருக்கிறது! நிச்சயமாகவே, மனித பயத்தை, அப்படிப்பட்ட சோதனையான சந்தர்ப்பங்களை மேற்கொள்வதற்கு கிறிஸ்தவர்களை பலப்படுத்தியதென்றால் எப்படிப்பட்ட நிலைமையில் நாமிருந்தாலும் நம்மையும் அது பலப்படுத்தக்கூடும்.
இன்று பிசாசாகிய சாத்தான் கடவுளுக்குப் பிரியமற்ற வகையில் நடப்பதற்காக நம்மை அழுத்தும்படிக்கு தன்னால் முடிந்ததையெல்லாம் செய்கிறான். ஆகையால், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதியபோது அறிவித்த அதே திடதீர்மானத்தை உண்மையான கிறிஸ்தவர்கள் உடையவர்களாயிருக்க வேண்டும்: “நாமோ கெட்டுப் போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” (எபிரெயர் 10:39) யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் பலத்தின் ஓர் உண்மையான ஊற்றுமூலமாக இருக்கிறது. அதன் உதவியுடன் “நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் (யெகோவா NW) எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்” என்று சொல்வோமாக.—எபிரெயர் 13:6. (w89 6/1)
[பக்கம் 7-ன் படம்]
தேவபயம் அப்போஸ்தலனாகிய பவுலை, அடிகள், காவல் மற்றும் கப்பற்சேதம் உட்பட அனைத்துக் காரியங்களையும் சகித்துக் கொள்ள திடப்படுத்தியது.—2 கொரிந்தியர் 11:23–27