ஒரு கணவனாக அன்பும் நன்மதிப்பும் காண்பித்தல்
“உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.”—எபேசியர் 5:33.
1, 2. (எ) இன்றைய உலகத்தில் விவாகரத்து எந்தளவுக்குப் பிரச்னையாக இருக்கிறது? (பி) அதற்கு மாறாக வேறு என்ன நிலைமையும் இருக்கிறது?
1980-களின் இடைப்பகுதியில், சைக்காலஜி டுடே (Psychology Today) பின்வருமாறு அறிக்கை செய்தது: “[அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில்] பத்து இலட்சத்திற்கும் அதிகமான தம்பதிகள் பேரின்பத்தின் எதிர்பார்ப்புகளை விவாகரத்தில் முடித்துக்கொள்கின்றனர்; ஐக்கிய மாகாணங்களில் விவாகங்களின் சராசரிக் காலம்பகுதி 9.4 வருடங்களாகும். . . . ஆம், அங்கு ஒருவருமே மகிழ்ச்சியாக விவாகமானவர்களாயிருப்பதாகத் தெரியவில்லை.” (ஜூன் 1985) பெரியவர்களையும் பிள்ளைகளையும் கவனத்திற்கொள்ளும்போது முறிவுற்ற விவாகத்தால் ஒரு தேசத்தில் மட்டும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 30,00,000 மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் விவாகரத்து ஓர் உலகப் பிரச்னை, இலட்சக்கணக்கான விவாகங்களில் அன்பும் மதிப்பும் குறைவுபட்டிருக்கிறது என்று காண்பிக்கிறது.
2 மறுபட்சத்தில் “கவனத்தைத் தப்பும் மற்றொரு தொகுதி இருக்கிறது: எப்படியோ ஒன்றாக இருந்துவிடுகிற தம்பதிகள், மரணத்தைத் தவிர வேறு எதுவும் தங்களைப் பிரிக்க அனுமதிக்காதவர்கள்,” இருக்கிறார்கள். (சைக்காலஜி டுடே) இப்படியாகத் தங்களுடைய விவாகத்தை முறியாமல் வைத்துக்கொள்ளக் கடினமாக உழைக்கும் இலட்சக்கணக்கான தம்பதிகளும் இருக்கின்றனர்.
3. நம்மை நாமே என்ன கேள்விகளை கேட்டுக் கொள்ளக்கூடும்?
3 உங்களுடைய விவாகம் எப்படிப்பட்டாயிருக்கிறது? கணவன் மனைவிக்கும் இடையில் அனல்கொண்ட அன்பும் மதிப்பும் இருக்கிறதா? உங்கள் குடும்பத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அப்படிப்பட்ட அன்பு நிலவுகிறதா? மனக்கசப்பு அல்லது அவநம்பிக்கை என்ற கயிற்றின் மேல் நடப்பவர்களாக உங்களைக் காண்கிறீர்களா? நாம் எவருமே பரிபூரணராயில்லையாதலால், எந்த ஒரு வீட்டிலும், எல்லாருமே கிறிஸ்தவர்களாக இருக்க முயற்சிக்கும் வீட்டிலும் பிரச்னையான சூழ்நிலைகள் எழும்பக்கூடும், காரணம், “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி” இருக்கிறோம்.—ரோமர் 3:23.
4. மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பத்தில் முக்கிய பாகம் யாருடையது என்பதைப் பவுலும் பேதுருவும் எவ்விதம் குறிப்பிடுகின்றனர்?
4 எந்த ஒரு வீட்டிலும் பிரச்னைகள் எழும்பக்கூடும் என்ற உண்மையைக் கவனிக்கும்போது, குடும்பத்தைச் சமாதானமாக, ஒத்திசைவான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அப்போஸ்தலர்களாகிய பவுலும் பேதுருவும் தங்களுடைய கடிதங்களில் நேரடியான புத்திமதிகள் மூலம் இதற்கான விடையைத் தருகின்றனர். பவுல் எழுதினான்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறாரென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்.” மேலும் கூறினான்: “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:21-23) அதே கருத்தில் பேதுரு எழுதினான்: “அந்தப்படி [கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி] மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”—1 பேதுரு 2:21–3:1.
கிறிஸ்து—இளைப்பாறுதலளிக்கும் முன்மாதிரி
5, 6. தலைமை ஸ்தானம் வகிப்பதில் இயேசு கிறிஸ்து எந்த விதத்தில் ஒரு முன்மாதிரியாயிருக்கிறார்?
5 மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைக்கு இசைவாக, வேதப்பூர்வமாக கணவன்தானே குடும்பத் தலைவனாக இருக்கிறான். தலைமை ஸ்தானம் எப்படி வகிக்கப்பட வேண்டும்? சில கணவன்மார்கள் ‘தாங்களே, குடும்பத்தின் தலை, பைபிள் அப்படிச் சொல்லுகிறது,’ என்று சொல்லி மரியாதையை வற்புறுத்திப் பெறக்கூடும். ஆனால் அது கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு எந்த விதத்தில் ஒப்பாயிருக்கிறது? இயேசு பெருமையோடு தம்முடைய சீஷர்களிடமிருந்து மரியாதை மதிப்பை வற்புறுத்திக் கேட்கிறவராயிருந்தாரா? அவர் அகந்தையுடன் ‘இந்த இடத்தில் தேவ குமாரன் யார்? நீங்கள் என்னைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும்!’ என்று எப்பொழுதாவது சொன்ன சமயத்தை நாம் காண்கிறோமா? மாறாக, இயேசு மதிப்பு மரியாதையைச் சம்பாதித்துக் கொண்டார். எப்படி? நடத்தை, பேச்சு, மற்றவர்களைத் தயவாய் நடத்துதல் ஆகிய காரியங்களில் தம்முடைய நல்ல முன்மாதிரியின் மூலம்.—மாற்கு 6:30-34.
6 எனவே ஒரு கணவனாகவும் தகப்பனாகவும் தலைமை ஸ்தானத்தைச் சரியான விதத்தில் வகிப்பதற்கு அடிப்படை இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதாகும். இயேசு விவாகமாகாதவராயிருந்தபோதிலும், தம்முடைய சீஷர்களை நடத்திய விதம் கணவன்மார்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. அது எந்த ஒரு கணவனுக்கும் சவாலாக இருக்கிறது, ஏனென்றால் இயேசு ஒரு பரிபூரண முன்மாதிரி. (எபிரெயர் 4:15; 12:1-3) என்றபோதிலும், ஒரு கணவன் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில் எவ்வளவு நெருங்க வருகிறானோ, அந்தளவுக்கு அவன் ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் பெறுவான். எனவே, இயேசு எப்படிப்பட்டவராயிருந்தார் என்பதை நாம் அதிக நெருங்கிப் பார்க்கலாம்.—எபேசியர் 5:25-29; 1 பேதுரு 2:21, 22.
7. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன அளித்தார்? எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
7 ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு ஒரு கூட்டத்தாரிடம் பின்வருமாறு சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” தமக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இயேசு என்ன அளித்தார். ஆவிக்குரிய இளைப்பாறுதல்! ஆனால் அந்த இளைப்பாறுதல் எந்த ஊற்றுமூலத்திலிருந்து வரும்? அவர் அதற்கு சற்று முன்பு சொன்னார்: “குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.” தம்மை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களுக்குப் பிதாவை வெளிப்படுத்துவதன் மூலம் இயேசு ஆவிக்குரிய இளைப்பாறுதல் அளிப்பார் என்பதை இது குறிப்பிடுகிறது. ஆனால் அவரோடே கூட்டுறவு கொள்வதன் மூலமும் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதையும் இயேசுவின் குறிப்புகள் சுட்டிக் காட்டின. ஏனென்றால் அவர் “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்தார்.—மத்தேயு 11:25-30.
இளைப்பாறுதலளிக்கும் கணவர்களாகவும் தகப்பன்மார்களாகவும் இருப்பதெப்படி
8. ஒரு கணவரும் தந்தையுமாயிருப்பவர்கள் எவ்விதத்தில் இளைப்பாறுதலளிப்பவராக இருக்கலாம்?
8 ஒரு கிறிஸ்தவ கணவன் தன் குடும்பத்துக்கு ஆவிக்குரிய விதத்திலும் தனிப்பட்ட காரியங்களிலும் இளைப்பாறுதளிப்பவனாக இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காணச் செய்கிறது. தன்னுடைய சாந்தமான முன்மாதிரியினாலும் போதனையாலும், பரம பிதாவை நன்றாக அறிய வருவதற்கு அவன் தன் குடும்பத்தினருக்கு உதவி செய்யவேண்டும். அவனுடைய நடத்தை கடவுளுடைய குமாரனின் மனதையும் செய்கைகளையும் பிரதிபலிக்க வேண்டும். (யோவான் 15:8-10; 1 கொரிந்தியர் 2:16) அப்படிப்பட்ட ஒரு மனிதனுடன் கூட்டுறவு கொள்வது குடும்பம் முழுவதுக்கும் இளைப்பாறுதலாயிருக்கும், ஏனென்றால் அவன் ஓர் அன்புள்ள கணவனும் தகப்பனும் நண்பனுமாயிருக்கிறான். அவன் பிறர் அணுகுவதற்கு ஏற்றவனாகவும், ஏதாவது காரியங்கள் விசாரிக்கப்படுவதற்கு அதிக வேலையாக இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். ஆம், வெறுமென கேட்கிறவனாக அல்ல, ஆனால் எப்படி செவிகொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.—யாக்கோபு 1:19.
9. சபையிலுள்ள மூப்பர்களைச் சில சமயங்களில் பாதிக்கும் பிரச்னை என்ன?
9 இது சில சமயங்களில் சபை மூப்பர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் பாதிக்கும் ஒரு பிரச்னையை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. ஒரு மூப்பர் பொதுவாக சபையின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனிப்பதில் அதிக வேலையாக இருக்கிறார். கிறிஸ்தவ கூட்டங்கள், ஊழியம் மற்றும் மேய்க்கும் வேலை சம்பந்தமாக அவன் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். (எபிரெயர் 13:7, 17) என்றபோதிலும் சில மூப்பர்கள் சபைக்காகத் தங்களை வறுத்தியிருக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது அவர்கள் தங்கள் குடும்பத்தை அசட்டை செய்திருக்கிறார்கள், சில சமயங்களில் வேதனையூட்டும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய சொந்த மகனுடன் படிக்க முடியாதளவுக்கு ஒரு மூப்பர் அதிக வேலையாக இருந்தார். அதைச் செய்ய இன்னொருவரை ஏற்பாடு செய்திருந்தார்!
10. சபையிலும் வீட்டிலும் தலைமை ஸ்தானம் வகிப்பதில் மூப்பர்கள் எவ்விதம் சமநிலையாக இருக்கலாம்?
10 இந்த உதாரணம் நமக்கு எதை அறிவுறுத்துகிறது? ஒரு மனிதன் சபை உத்தரவாதங்களுக்கும் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துக்கும் இடையே சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது. உதாரணமாகக் கூட்டங்கள் முடிந்த பின்னர் மூப்பர்கள் பொதுவாகப் பிரச்னைகளைக் கையாளுவதிலும் கலந்துபேசுவதிலும் அதிக வேலையாக இருந்துவிடுகிறார்கள். கூடுமானால், நடைமுறையாக இருக்குமானால் அப்படிப்பட்ட ஒரு மூப்பர் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் ராஜ்ய மன்றத்தில் மணிக்கணக்காய்க் காத்திருக்கச் செய்வதற்குப் பதிலாக, அவர்களை வீட்டில் சேர்த்திட வேறொருவரை ஏற்பாடு செய்வது இளைப்பாறுதலளிப்பதாக இருக்குமல்லவா? பைபிள் தகுதிகளின்படி ‘மேய்க்கும் வேலை வீட்டில் ஆரம்பிக்கிறது’ என்று சொல்லப்படலாம். ஒரு மூப்பர் தன்னுடைய குடும்பத்தைக் கவனியாமற் போவாரானால், தன்னுடைய நியமனத்தை இடருக்குள்ளாக்கிவிடக்கூடும். எனவே மூப்பர்களே, கரிசனையுள்ளவர்களாயிருங்கள், உங்களுடைய குடும்பத்தின் உணர்ச்சி சம்பந்தமான, ஆவிக்குரிய மற்றும் வேறு தேவைகளையும் கணக்கில் கொள்ளுங்கள்.—1 தீமோத்தேயு 3:4, 5; தீத்து 1:5, 6.
11, 12. ஒரு கிறிஸ்தவ கணவன் தன் குடும்பத்தின் ஆதரவை எப்படிப் பெறலாம்? ஒவ்வொரு கணவனும் தன்னைத்தானே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
11 இளைப்பாறுதலளிக்கும் ஒரு கணவன் வன்மையானவனாகவும் அல்லது கொடுங்கோலனாகவும் இருக்க மாட்டான். தன்னுடைய குடும்பத்தைக் கலந்தாலோசியாமல் தீர்மானங்களை எடுக்க மாட்டான். ஒருவேளை வேலை மாற்றம் அல்லது வீடு மாற்றம் அல்லது குடும்பத்துக்கான பொழுதுபோக்கு போன்ற சாதாரண விஷயங்களிலுங்கூட தீர்மானமெடுக்க வேண்டியதாய் இருக்கலாம். குடும்பத்தின் எல்லா அங்கத்தினரும் பாதிக்கப்படுவார்களாதலால், அவர்கள் எல்லாரையுமே கலந்தாலோசிப்பது ஞானமான காரியமாய் இருக்காதா? அவர்களுடைய அபிப்பிராயங்கள் ஒரு ஞானமான அதிகக் கரிசனையான முடிவுக்கு வர அவனுக்கு உதவியாக இருக்கும். அப்பொழுது குடும்பத்திலுள்ள அனைவருமே அவனுக்கு ஆதரவாயிருப்பதை மிக எளிதாக்கிடும்.—நீதிமொழிகள் 15:22-ஐ ஒப்பிடவும்.
12 மேற்குறிப்பிடப்பட்டதைக் கவனிக்கும்போது, ஒரு கிறிஸ்தவ கணவனும் தந்தையுமாயிருப்பவன் வீட்டில் வெறும் ஒரு சிட்சிக்கும் நபரல்ல. அவன் இளைப்பாறுதலளிப்பவனாகவும் இருக்க வேண்டும். கணவரும் தந்தையுமாக இருப்பவர்களே, நீங்கள் கிறிஸ்துவைப் போன்றிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்துக்கு இளைப்பாறுதலளிப்பவராக இருக்கிறீர்களா?—எபேசியர் 6:4; கொலோசேயர் 3:21.
விவேகத்தோடு வாழ்வது
13. பேதுரு கணவர்மாருக்கு என்ன அருமையான ஆலோசனை கொடுக்கிறார்?
13 ஏற்கனவே குறிப்பிடப்பட்டபடி, விவாகமான தம்பதிகளுக்குப் பேதுருவும் பவுலும் நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கின்றனர். விவாகமானவனாக இருந்ததால் பேதுருவின் ஆலோசனை இரட்டிப்பு நன்மையுடையதாய் இருக்கிறது—அனுபவமும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலும். (மத்தேயு 8:14) எல்லாக் கணவர்மார்களுக்கும் அவர் குறிப்பாக ஆலோசனை கொடுக்கிறார். அவர் சொல்வதாவது: “புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியால், . . . நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” J.W.C. வாண்டு என்பவருடைய தொகுப்புரை மொழிபெயர்ப்பு இப்படியாக வாசிக்கிறது: “அதுபோல கணவன்மார்கள் தங்களுடைய மனைவிகளுடனிருக்கும் உறவில் கிறிஸ்தவ நியமங்களைப் புத்திக்கூர்மையோடு பொருத்திப் பிரயோகிக்க வேண்டும்.—1 பேதுரு 3:7.
14. இப்பொழுது என்ன கேள்விகள் எழும்புகின்றன?
14 மனைவியுடன் “விவேகத்தோடு” அல்லது “கிறிஸ்த நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பவர்களாய்” வாழ்வது என்பதன் கருத்து என்ன? ஒரு கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கனத்தை எப்படிச் செய்யலாம்? ஆம், பேதுருவின் ஆலோசனையை ஒரு கிறிஸ்தவ கணவன் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
15. (எ) சில விவாகங்கள் ஏன் தோல்வியுறுகின்றன? (பி) ஒரு விவாகத்தில் உண்மையாயிருக்கும் அந்தச் சவால் என்ன?
15 அநேக விவாகங்கள் வெறுமென உடல் அம்சங்கள் அல்லது பாலுறவுக் கவர்ச்சியின் அடிப்படையிலானவை. என்றபோதிலும் நிலையான ஒரு விவாகத்துக்கு நல்ல உடற்கட்டு அல்லது தோற்றம் உத்தரவாதமாயிருக்க முடியாது, ஏனென்றால் அவை நிலையற்றவை. விவாகமாகி பல வருடங்களானவர்களை எப்படியும் நரையும் தோல் சுருக்கங்களும் பாதிக்கின்றன. ஆனால் விவாகம் என்பது இரண்டு மனங்களை, இரண்டு ஆள்தன்மைகளை, இரண்டு பின்னணிகளை மற்றும் ஆவிக்குரிய மதிப்பீடுகளையும் இரண்டு நாவுகளையும் ஒன்று சேர்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இது ஒரு சவாலை முன்வைக்கிறது! என்றபோதிலும், இதைப் புரிந்துகொள்வது மகிழ்ச்சியுள்ள ஒரு விவாக வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.—நீதிமொழிகள் 17:1; 21:9.
16. ‘அவளோடே விவேகத்தோடு வாழ்வது’ எதை உட்படுத்துகிறது?
16 ஒரு கிறிஸ்தவ கணவன் தன்னுடைய மனைவியோடே “விவேகத்தோடு” வாழ்வது குறித்திடும் மற்ற காரியங்களில் ஒன்று அவன் அவளுடைய தேவைகளை உண்மையிலேயே புரிந்துகொண்டவனாய் இருக்க வேண்டும். இது அவளுடைய சரீர தேவைகள் மட்டுமல்ல, ஆனால் அதைவிட முக்கியமாக அவளுடைய உணர்ச்சி, மனம் மற்றும் ஆவிக்குரிய தேவைகளாகும். அவன் ‘அவளோடு விவேகத்துடன் வாழ்வானானால்’, கடவுள் அவனுக்குக் கொடுத்திருக்கும் ஸ்தானத்தை அவன் புரிந்தவனாக இருப்பான். அவளுடைய பெண்மையையும் மதிக்கிறான் என்பதையும் அது அர்த்தப்படுத்தும். பேதுருவின் நாட்களிலிருந்த சில சமரச மறையில் கோட்பாட்டாளர் கொண்டிருந்த கருத்துக்கு இது முற்றிலும் எதிர்மாறானது. அவர்களிடையே “பெண்கள் தாழ்ந்தவர்களாயும், வெறுமென உடலின்பத்துக்குரியவர்களாயும் மற்றும் அசுத்தமான வர்க்கத்தினராயியுமிருந்தனர்.” (தி ஆங்க்கர் பைபிள் [The Anchor Bible]) ஒரு நவீன ஸ்பானிய மொழிபெயர்ப்பு பேதுருவின் வார்த்தைகளை இப்படியாக அமைத்துள்ளது: “கணவன்மார்களைக் குறித்ததில்: நீங்கள் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கையில் பெண்ணுக்குரிய கரிசனையைக் காண்பிப்பவர்களாய் சாதுரியத்தைக் கையாளுங்கள், ஏனென்றால் அவள் அதிக நொய்மையான அமைப்புடையவள்.” (நூவா பிப்ளியா எஸ்பனோலா [Nueva Biblia Espanola]) சில சமயங்களில் கணவர்மார்கள் மறந்துவிடும் ஓர் அருமையான குறிப்பை இது கூறுகிறது.
17. (எ) மற்ற அம்சங்களில், ‘பலவீனமான பெண் பாண்டத்தின்’ “நொய்மையான அமைப்பில்” என்ன உட்பட்டிருக்கிறது? (பி) மனைவியின் உண்மையான மதிப்புக்கு கணவன் எந்த ஒரு விதத்தில் மதிப்பு காண்பிக்கலாம்?
17 மனைவி ஏன் “அதிக நொய்மையான அமைப்புடையவள்”? மற்ற காரணங்களில் ஒன்று அவளிடமிருக்கும் பிறப்பிக்கும் ஈவு. பிள்ளைகளைப் பிறப்பிக்கும் தன்மையுடைய அவளது வாழ்க்கை மாதவிடாய்ச் சுற்றுமுறைக்கு உட்பட்டது. இது சில சமயங்களில் பல நாட்களை உட்படுத்தும் ஒரு காலப்பகுதியைக் கொண்டிருக்கக்கூடும். அந்தச் சமயங்களில் அவன் பெலத்தில் குன்றியவளாக அல்லது நலிவுற்றவளாக உணரக்கூடும். இதனைக் கணவன் கருத்தில்கொள்ள தவறி, மாதத்தின் ஒவ்வொரு நாளும் அதே கடமைகளை வற்புறுத்துவானானால், அவளுடைய உண்மையான மதிப்புக்கு மரியாதைக் காட்டத் தவறுகிறான். அப்படியிருக்க தான் அவளுடன் விவேகத்தோடே வாழ்வதற்கு மாறாகத் தன்னலத்துடன் கூடிய அறியாமையோடே வாழ்கிறான் என்பதைக் காட்டுகிறான்.—லேவியராகமம் 18:19; 1 கொரிந்தியர் 7:5.
பெண் பாண்டத்துக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்துங்கள்
18. (எ) சில துணைவர்கள் என்ன எதிர்மறையான பழக்கத்திற்குள் விழுந்துவிடுகிறார்கள்? (பி) ஒரு கிறிஸ்தவ கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
18 ஒரு கணவன் தன்னுடைய மனைவியிடம் அன்பும் மதிப்பும் காண்பிப்பதற்குரிய மற்றொரு வழி அவளுக்கும் அவளுடைய குணங்களுக்கும் போற்றுதல் காண்பித்து அதை வெளிப்படுத்துவதாகும். ஒரு கணவன் தன்னுடைய மனைவியைப் பற்றி தாழ்வாகப் பேசுவது அல்லது தன் ஏளனத்துக்கு இலக்காகக் கொண்டிருக்கும் பழக்கத்திற்குள் வந்துவிடக்கூடும். இப்படிச் செய்வது தன்னைப் பிறருடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்று அப்படிப்பட்ட கணவன் நினைக்கக்கூடும். உண்மையில் பார்க்கப்போனால், எதிர்மாறான விளைவுதான் ஏற்படுகிறது. ஏனென்றால், தன்னுடைய மனைவியை ஒரு பேதையாகவே காணப்படச் செய்வானெனில், கேள்வி என்னவெனில், அப்படிப்பட்ட பேதை மனைவியை இவன் ஏன் விவாகம் செய்துகொண்டான்? உண்மையில் நிலையற்ற கணவன்தானே அப்படிப்பட்ட முறைகளைக் கையாளுகிறான். அன்புள்ள ஒரு கணவனோ தன் மனைவியை மதிக்கிறான்.—நீதிமொழிகள் 12:18; 1 கொரிந்தியர் 13:4-8.
19. ஒரு கணவன் தன் மனைவியைத் தரக்குறைவாகக் கருதுவது ஏன் சரியல்ல?
19 சில நாடுகளில், அடக்கமென தோன்றும் ஒரு முறையில் தங்கள் மனைவிகளைத் தரக்குறைவாக குறிப்பிடும் ஒரு பழக்கமும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு ஜப்பானிய கணவன் தன் மனைவியை அறிமுகம் செய்யும்போது “குசாய்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவான். அப்படியென்றால் ‘முட்டாள் அல்லது பேதை மனைவி’ என்பது பொருள். இப்படிக் குறிப்பிடுவதன் நோக்கம், அந்த மற்ற நபர் அதை ஈடுசெய்யும் வகையில் பெண்ணைக் குறித்து போற்றுதல் குறிப்பு கொடுப்பார். ஒரு கிறிஸ்தவ கணவன் இப்படிப்பட்ட ஓர் அறிமுக முறையைக் கையாளும்போது, பேதுருவின் ஆலோசனைப்படி அவன் உண்மையிலேயே தன்னுடைய மனைவிக்குக் ‘கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுக்கிறானா’? காரியத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, அவன் தன்னுடைய அயலகத்தாரிடம் உண்மை பேசுகிறானா? தன்னுடைய மனைவி ஒரு பேதை அல்லது முட்டாள் என்று அவன் உண்மையிலேயே நம்புகிறானா?—எபேசியர் 4:15, 25; 5:28, 29.
20. (எ) ஒரு கணவனுக்கும் மனைவிக்குமிடையே என்ன முரணான நிலைமை உருவாகக்கூடும்? (பி) அதைத் தவிர்ப்பது எப்படி?
20 தன்னுடைய மனைவி ராஜ்ய மன்றத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் மற்ற எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரு கிறிஸ்தவ சகோதரி என்பதை மறந்துவிடுவதன் மூலம் அன்பும் மதிப்பும் காண்பிப்பதில் ஒரு கணவன் குறைவுபடுகிறான். ராஜ்ய மன்றத்தில் தயவாகவும் பண்புடன் நடந்துகொண்டு வீட்டில் முரட்டுத்தனமாகவும் எரிந்து விழுகிறவனாகவும் நடப்பது எவ்வளவு இலேசானது! எனவே பவுலின் ஆலோசனை எவ்வளவு பொருத்தமானது! அவன் எழுதினான்: “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்தி விருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக் கடவோம்.” “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்தி விருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.” (ரோமர் 14:19; 15:2) ஒரு கணவர் அல்லது மனைவியைவிட அதிக நெருங்கிய அயலார் இருக்கமுடியாது.
21. தங்களுடைய மனைவிகளை உற்சாகப்படுத்தக் கணவர்மார்கள் என்ன செய்யலாம்?
21 எனவே, அன்புள்ள ஒரு கிறிஸ்தவ கணவன் தன்னுடைய மனைவிக்குச் சொல்லிலும் செயலிலும் போற்றுதலை வெளிப்படுத்துவான். பெயர் அறியப்பட விரும்பாத ஆங்கிலக் கவிஞர் ஒருவர் இப்படியாகப் பாடினார்:
“விவாகப் பூசல்களின் கவலைகள் மத்தியிலும்
வியாபார வாழ்க்கையின் கடும் உழைப்பின் மிகுதியிலும்,
அன்பு மனைவியை உயர்வாய் மதித்திட்டால் நீங்கள்—
அதனை அவளிடம் சொல்லுங்கள்! . . .
அவளுக்கு மட்டுமே சொந்தம், அவளுக்கே நீங்கள்;
அவள் உங்களுக்கே முற்றும் சொந்தம் என்றறிவீர்கள்;
அதனைக் கல்லில் செதுக்கிட காத்திராதீர்கள்—
அதனை அவளிடம் சொல்லுங்கள்!”
இந்த உணர்ச்சிகள் பூர்வீக அரசனாகிய லேமுவேலின் தாயால் தெளிவாக ஆதரிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு மனைவியை அவர் விளக்கிடும் வார்த்தைகளில் ஒரு பகுதி: “அவளுடைய பிள்ளைகள் எழும்பி அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.” (நீதிமொழிகள் 31:1, 28, 29) கணவர்களே, உங்கள் மனைவியைத் தவறாமல் போற்றுகிறீர்களா, அல்லது விவாக நோக்குடம் அவளோடு பழகும்போது மட்டுதான் அப்படிச் செய்தீர்களா?
22, 23. வெற்றிகரமான விவாகம் எதன்பேரில் சார்ந்திருக்கிறது?
22 இந்தச் சுருக்கமான கலந்தாலோசிப்பிலிருந்து தெளிவுபடுவது என்னவென்றால், தன் விவாக வாழ்க்கையில் அன்பும் மதிப்பும் காண்பிப்பதற்கு அவன் வெறுமென சம்பாதித்து வருபவனாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. வெற்றிகரமான ஒரு விவாகம் அன்பு, உண்மைத் தவறாமை மற்றும் கரிசனையுள்ள உறவு ஆகியவற்றின்பேரில் சார்ந்தது. (1 பேதுரு 3:8, 9) வருடங்கள் கடந்து செல்ல செல்ல, கணவனும் மனைவியும் ஒருவரிலொருவர் காணும் கற்புக்குரிய தன்மைகளையும் பலமான அம்சங்களையும் போற்றி, ஒருவரிலொருவர் வெளிப்படும் பலவீனங்களைக் கவனியாது மன்னிக்கக் கற்றுக்கொள்ளும்போது அவர்களுக்கிடையிலுள்ள இந்த உறவு ஆழமாகச் செல்ல வேண்டும்.—எபேசியர் 4:32; கொலோசேயர் 3:12-14.
23 அன்பும் மதிப்பும் காண்பிப்பதில் கணவன் முன்னிலையில் இருப்பானானால், முழு குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். ஆனால் மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பத்தில் கிறிஸ்தவ மனைவி வகிக்கும் பாகம் என்ன? எமது ஏப்ரல் இதழ் அந்தக் காரியத்தையும் அது சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கலந்தாராயும். (w89 5/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மகிழ்ச்சியுள்ள ஒரு விவாகத்தில் முக்கிய பாகம் யாருடையது? ஏன்?
◻ கணவர்மார்கள் எவ்விதத்தில் கிறிஸ்துவின் இளைப்பாறுதலளிக்கும் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
◻ சபை மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையே என்ன சமநிலை தேவைப்படுகிறது?
◻ ஒரு கணவன் எப்படி ‘தன்னுடைய மனைவியோடு விவேகத்தோடே’ வாழலாம்?
◻ ‘மனைவியானவள் பலவீன பாண்டமாயிருக்க அவளுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்வது’ என்பதன் அர்த்தம் என்ன?
[பக்கம் 11-ன் படம்]