வத்திக்கன் கையெழுத்துச் சுவடியின் இரகசியம்
கோடெக்ஸ் வத்திகனஸ் 1209, வத்திக்கன் நூலகத்தில் 1475-ல் தயாரிக்கப்பட்ட நூல்களின் பட்டியல் வரிசையில் முதலிடத்தில் தோன்றுகிறது. இது அங்கு எப்படி வந்தது என்பது எவருக்கும் தெரியாது. இது இன்று வரையாக எஞ்சியிருக்கும் மூன்று பெரிய கிரேக்க கையெழுத்துச் சுவடிகளில் ஒன்றாகும். இது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த சினாய்டிகஸ் கையெழுத்துச் சுவடி, ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டிரினஸ் கையெழுத்துச் சுவடி வரிசையில் அதேக் காலப்பகுதியைச் சேர்ந்ததாகும்.
இந்த வத்திக்கன் கையெழுத்துப் பிரதியின் முக்கியத்துவம் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பண்டிதர்களுக்கு நன்கு அறியப்பட்டதாயிருந்த போதிலும் அதை எவரும் ஆராய அனுமதிக்கப்படவில்லை. 1669-ல் வத்திக்கன் பல்வேறு கையெழுத்துப் பிரதிகளின் வாசகப் பேதங்களைப் பற்றிய ஓர் ஒப்பாய்வைத் தயாரித்த போது இது காணாமற்போனது. 1819 வரையாக அது மீண்டும் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது.
ஃபிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் 1809-ல் ரோமைக் கைப்பற்றி பெருமதிப்புள்ள கையெழுத்துப் பிரதியை பாரிஸுக்கு கொண்டு சென்றான். இங்கே லியோனார்ட் ஹக் என்ற ஒரு பேர்பெற்ற பண்டிதர் ஆராய்ந்து பார்த்தார். ஆனால் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கையெழுத்துச் சுவடி 1815-ல் வத்திக்கனுக்குத் திரும்பித்தரப்பட்டது. அடுத்த 75 ஆண்டுகளுக்கு அது மறுபடியுமாக வத்திக்கனால் மறைத்துவைக்கப்பட்ட ஓர் இரகசியமாகவே இருந்தது.
உலகின் மிகப் பெரிய கையெழுத்துப் பிரதி பண்டிதர்களில் ஒருவரான கான்ஸ்டான்டின் வான் டிஷன்டார்ஃப், பல மாதங்கள் காத்திருக்கும்படி செய்யப்பட்ட பின்பு, 1843-ல் வெறுமென ஆறு மணிநேரங்களுக்கு அதை ஆராய்ந்து பார்க்க அனுமதிக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பண்டிதர் டாக்டர் S.P. ட்ரெகில்லஸ், கையெழுத்துச் சுவடியைப் படிக்க அல்ல, ஆனால் பார்க்க அனுமதிக்கப்பட்டார். அவர் சொன்னார்: “கையெழுத்துப் பிரதியை நான் அடிக்கடி பார்த்தது உண்மைதான், ஆனால் அதை பயன்படுத்த அவர்கள் அனுமதி கொடுக்க மறுத்தனர். என்னுடைய பாக்கெட்டுகளை ஆராய்ந்து பார்க்காமலும், பேனாவையும் மையையும் பேப்பரையும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளாமலும் என்னை அதைத் திறக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அதே சமயம் இரண்டு மதகுருமார் தொடர்ந்து என்னோடு லத்தீனில் சம்பாஷித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு பகுதியை நான் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தால், என் கையிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கிவிடுவார்கள்.”
ரோமன் கத்தோலிக்க சர்ச், ஏன் தனது விலைமதியா கையெழுத்துப் பிரதியை உலகுக்குக் காண்பிக்க இவ்வளவாகத் தயங்கியது?
ஏன் மறைத்துவைக்கப்பட்டது?
ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேதாகமத்தின் லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பே “ஒப்புயர்வற்ற அதிகாரப்பூர்வமான” மொழிபெயர்ப்பாக இருந்து வருகிறது. 1943-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 12-ம் பயஸ் போப்பாண்டவரின் சுற்றுக்கடிதத்தின்படி, (Divino Afflante Spiritu) ஜெரோமின் இந்த நான்காவது நூற்றாண்டு லத்தீன் மொழிபெயர்ப்பு “விசுவாசம் மற்றும் ஒழுக்க விஷயங்கள் எந்தப் பிழையிலிருந்தும் முழுமையாக விடுபட்டதாகவும்கூட” கருதப்படுகிறது. வல்கேட் எந்த எபிரெய மற்றும் கிரேக்க வாசகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதோ அந்த வாசகத்தைப் பற்றி என்ன? இவை வல்கேட்டின் அதிகாரத்தை ‘உறுதி செய்ய’ மாத்திரமே மதிப்புள்ளதாக இருப்பதாக போண்பாண்டவரின் சுற்றுக்கடிதம் சொல்லுகிறது. ஆகவே எந்த ஒரு கிரேக்க கையெழுத்துப் பிரதியும், வத்திக்கன் கையெழுத்துச் சுவடியும்கூட லத்தீன் வல்கேட்டைப் போல அத்தனை அதிகாரம் பெற்றதாக ஒருபோதும் கருதப்படவில்லை. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் இந்த நிலைநிற்கை இயல்பாகவே பிரச்னைகளை உண்டுபண்ணியிருக்கின்றன.
உதாரணமாக 16-ம் நூற்றாண்டு பண்டிதர் ஈராஸ்மஸ் அவருடைய கிரேக்க “புதிய ஏற்பாட்டை” மொழிபெயர்த்த போது, 1 யோவான் அதிகாரம் 5 வசனங்கள் 7 மற்றும் 8-லுள்ள பிழையான வார்த்தைகளை வத்திக்கன் கையெழுத்துச் சுவடியில் சேர்க்காதுவிடும்படி கேட்டுக்கொண்டார். ஈராஸ்மஸ் சரியாகவேச் சொன்னார். என்றபோதிலும் 1897 வரையாக பதின்மூன்றாவது போப் லியோ, வல்கேட்டின் பிழையான லத்தீன் வாசகத்தைப் பற்றியதில் விடாப்பிடியாக இருந்தார். நவீன ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டப் பின்தானே இந்த வாசகப் பிழை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகிற்கு சினாய்டிகஸ் கையெழுத்துப் பிரதிகள் வெளிப்படுத்தப்பட்டபோது, ரோமன் கத்தோலிக்க அதிகாரிகள், தங்களுடைய கையெழுத்துச் சுவடியின் (கோடெக்ஸ் வத்திகனஸ்) புகழ் மறைந்துவிடும் ஆபத்திலிருப்பதை உணர ஆரம்பித்தார்கள். நூற்றாண்டின் திருப்பத்தில், கடைசியாக அவைகளின் நல்ல நிழற்படங்கள் கிடைக்கக்கூடினவாக இருந்தன.
கையெழுத்துப் பிரதி 759 பக்கங்களைக் கொண்டது. இதில் ஆதியாகமத்தின் பெரும் பகுதியும் ஒரு சில சங்கீதங்களும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இறுதிப் பகுதிகளும் இல்லை. இது மானினத்தினுடையதாகக் கருதப்படும் மிக அழகான மெல்லிய தோலின் மீது, எளிய நேர்த்தியான பாணியில் எழுதப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அதன் பெயர் கோடெக்ஸ் B ஆகும். இதை இன்று வத்திக்கன் நூலகத்தில் காணமுடியும். இது இனிமேலும் மறைத்து வைக்கப்படாமல், அதன் மதிப்பு கடைசியாக புரிந்துகொள்ளப்பட்டு உலகம் முழுவதிலும் போற்றப்படுகிறது. (w89 5/1)
[பக்கம் 29-ன் படம்]
முக்கியமான கோடெக்ஸ் வத்திக்கனஸ் 1209, வத்திக்கனால் பல நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது