யெகோவா கொடுத்திருக்கும் உட்பார்வை
“ஜனங்களில் உட்பார்வை உள்ளவர்கள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்.”—தானியேல் 11:33, NW.
1, 2. (எ) இஸ்ரவேலர்கள் கடவுளின் அன்பான தயவை அனுபவித்திருந்தபோதிலும், ஏன் கலகத்தனமாக நடந்துகொண்டனர்? (பி) பலனளிக்கக்கூடிய எதை நாம் செய்யலாம்? (எரேமியா 51:10)
பூர்வீக இஸ்ரவேல் ஜனங்கள் யெகோவாதான் ஒரே மெய் தேவன் என்று அறிந்திருந்தார்கள். தங்களுடைய முற்பிதாக்களுடன் அவர் கொண்டிருந்த செயல்தொடர்பைப் பற்றி சொல்லக்கேட்டிருந்தனர், மேலும் தனிப்பட்ட விதத்தில் அவருடைய அன்புள்ள தயவை அனுபவித்திருந்தனர். ஆனால் ஒன்றிற்கும் மேற்பட்ட சமயங்களில், அவர்கள் அதிக அளவு உட்பார்வை அற்றவர்களாக நடந்திருக்கின்றனர். அவர்கள் யெகோவாவிடமும் அவருடைய பிரதிநிதிகளிடமும் “கலகம் பண்ணினார்கள்.” ஏன்? ஏனென்றால் அவர் அவர்களுக்குச் செய்தவைகளை மறந்தார்கள்.” (சங்கீதம் 106:7, 13) அவர்கள் இந்தக் காரியங்களை அறியாததினால் அல்ல; அவர்கள் போற்றுதலோடு அவற்றின்மேல் சிந்தையாயிருக்கத் தவறினார்கள். அதன் விளைவாக அவர்கள் “பொல்லாங்கானவைகளை இச்சிக்கும் ஆட்களாக” நிரூபித்தனர்.—1 கொரிந்தியர் 10:6.
2 நம்முடைய நாளில், யெகோவா தம்முடைய சாட்சிகளை மிகப் பெரிய விதத்தில் தனிப்பட்ட ஜனமாக பிரித்து வைத்திருப்பது தம்முடைய காணக்கூடிய அமைப்பின் மூலமாக கொடுத்திருக்கும் உட்பார்வையின் மூலமாகும். அப்படிப்பட்ட உட்பார்வையின் சில உதாரணங்களை மறுபரிசீலனை செய்வதன் மூலமாக யெகோவா தம்முடைய ஜனத்தை வழிநடத்தும் விதத்தின் பேரில் நம்முடைய சொந்த போற்றுதலானது பலப்படுத்தப்படலாம். அவைகளில் ஒன்று நம்முடைய நம்பிக்கையின் நடுமையத்தை உட்படுத்துகிறது—கடவுளாகிய அவரை அடையாளங் கண்டுகொள்ளுதலையே.
கடவுள் ஒரு திரித்துவமா?
3. ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக யெகோவாவின் ஊழியர்கள், கடவுளுடைய அடையாளத்தைப் பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்வதற்கு எது உதவியது? (1 கொரிந்தியர் 8:5, 6)
3 திரித்துவத்தை நம்பாதவர்கள் மாறுபட்ட கருத்தை உடையவர்கள் என்பதாக கிறிஸ்தவ மண்டலம் பிடிவாதமாக நிலைநிறுத்தி வந்திருக்கிறது. ஆனால் மனிதர்களுக்குப் பயப்படாமல், ஏவப்படாத மனிதர்களின் பாரம்பரியமும் மதநம்பிக்கையும் அல்லாமல் பரிசுத்த வேதாகமமே சத்தியத்தை அறிந்துகொள்ளுவதற்கான தராதரத்தைக் கொடுக்கிறது என்பதை யெகோவாவின் ஊழியர்கள் அறிந்துகொண்டனர். இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டியவர்களாக, சில காலத்திற்கு முன்பு 1882-ல் இந்த ஒப்புக்கொடுத்த பைபிள் மாணாக்கர்கள் காவற்கோபுரத்திலே தெளிவாக இவ்வாறு குறிப்பிட்டனர்: “நாங்கள் யெகோவா தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் மேலும் பரிசுத்த ஆவியையும் நம்பிய போதிலும் வேதப்பூர்வமல்லாத போதனையாகிய, இவர்கள் ஒரே ஆளாக இருக்கும் மூன்று கடவுட்கள் என்பதை, அல்லது சிலர் சொல்லுவது போல் மூன்று ஆட்களில் ஒரு கடவுள் என்ற கருத்தை நாங்கள் மறுக்கிறோம் என்பதை எங்களுடைய வாசகர்கள் அறிந்திருக்கின்றனர்.”—யோவான் 5:19; 14:28; 20:17
4. (எ) யெகோவாவின் ஜனங்கள் மேலோட்டமாக அல்லாமல் ஆழமாக ஆராய்ந்து பார்த்ததனால் திரித்துவ போதனையின் அடிப்படை என்ன என்பதாகவும், இந்தப் போதனையின் விளைவு என்ன என்பதாகவும் அறிந்துகொண்டனர்? (பி) யெகோவா தமது ஊழியர்களுக்கு அப்படிப்பட்ட உட்பார்வையை ஏன் கொடுத்தார்?
4 பைபிள் சத்தியத்தினிடம் விருப்பம் கொண்ட இவர்கள், மேலோட்டமாக அல்லாமல், ஆழமாக ஊடுருவிச் சென்று திரித்துவ நம்பிக்கையின் அடிவேர் கிறிஸ்தவமல்லாத மதங்களிலிருந்து வந்தது என்பதைக் கண்டனர். வேத வசனங்களை கவனத்தோடு படித்துப் பார்த்தபோது, அவர்கள் சில பைபிள் வசனங்கள் திரித்துவ கோட்பாட்டிற்கு துணை செய்வதாக தோன்றினாலும், அவை பைபிள் மொழிபெயர்ப்பாளரின் ஒருபட்ச நோக்கினால் ஏற்பட்டதேயொழிய, மூல பாஷையில் எழுதப்பட்ட மிகப்பழைய எழுத்து பிரதிகளில் காணப்பட்டதனால் அல்ல என்பதையும் அறிந்து கொண்டனர். இந்தப் போதகம் இயேசு கிறிஸ்துவை கனப்படுத்துவதுபோல தோன்றினாலும் உண்மையில் அவருடைய போதனைகளுக்கு முரண்பட்டதாயிருந்து அதன் மூலம் யெகோவாவை கனவீனப்படுத்தியது என்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இவ்வாறாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவற்கோபுரமானது சொன்னது: “அது நம்மை சத்தியத்தைத் தேடுவதற்கு தகுதியுள்ளவர்களாக, நம்மோடும் நம்மை உண்மையில் ஞானமுள்ளவர்களாக ஆக்கக்கூடிய நம்முடைய பிதாவின் வார்த்தையோடும் நேர்மையோடு கையாளச் செய்கிறது. ஆகவே பாரம்பரியத்தினாலும் மத நம்பிக்கையினாலும் ஏவப்படாத மனிதர்களால் கறைபடுத்தப்பட்ட ஒழுங்குமுறையைப் புறக்கணித்து, நம்முடைய ஆண்டவரிடத்திலிருந்தும் அப்போஸ்தலர்களிடத்திலிருந்தும் பெற்றுக்கொண்ட திடமான வார்த்தைகளை நாம் உறுதியாக பற்றிக்கொள்வோமாக.” அவர்கள் சத்தியத்தின் மீது உண்மையிலேயே அன்பு செலுத்தியதன் காரணமாகவும், ஒருசில பிடித்தமான பைபிள் வசனங்களுக்கு மட்டுமல்லாமல் கடவுளுடைய வார்த்தைக்கு முழுவதுமாக தங்களுடைய கவனத்தைச் செலுத்தியதன் காரணமாகவும், கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து அவர்களைத் தனிப்படுத்தி காட்டும் விதமாக யெகோவா தேவன் அவர்களுக்கு உட்பார்வையைக் கொடுத்தார்.—2 தீமோத்தேயு 3:16, 17; புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், பக்கம் 1580, பிரிவு 6B பார்க்கவும்.
கடவுளுடைய நாமத்திற்கு சரியான இடம்
5. பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து கடவுளுடைய தனிப்பட்ட பெயரை விட்டுவிடுவதைக் குறித்த விதத்தின் பின்னால் இருந்தது என்ன? (வெளிப்படுத்துதல் 22:18, 19)
5 இரண்டாவது உதாரணத்தைக் கவனிக்கவும்: எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளின் சொந்த பெயரை மறைத்த அல்லது முழுவதுமாக விட்டுவிட்டபோது, காவற்கோபுர சங்கம் அந்தப் பெயரின் முக்கியத்துவத்தை குறித்ததில் பெருமளவில் வலியுறுத்தியது. யெகோவா என்ற பெயரை நீக்குவது வேதாகமத்திற்கு அதிக சர்வலோக கவர்ச்சியை கொடுத்தது என்று கிறிஸ்தவ மண்டலம் வாதாடியது, ஆனால் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் எல்லாவற்றையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பெயரை பரிசுத்த வேதாமத்திலிருந்து நீக்குவதற்கு யார் அந்தத் திட்டத்திற்குப் பின்னால் இருந்தது என்று பகுத்துணர்ந்தார்கள். (எரேமியா 23:27-ஐ ஒப்பிடுக.) மனித ஞாபகத்திலிருந்து கடவுளின் உண்மை, பெயரை நீக்குவதற்கு சாத்தான் மூலமாக தூண்டுதல் கொடுக்கப்பட்டது என்று கடவுளின் ஜனங்கள் உணர்ந்தார்கள்.
6. கிறிஸ்தவமண்டல போக்கிற்கு மாறாக, கடவுளுடைய மெய்யான ஊழியர்கள் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக என்ன செய்தனர்? (அப்போஸ்தலர் 15:14)
6 கிறிஸ்தவ மண்டலத்தால் தொடர்ச்சியாக பின்பற்றிவரும் இந்தக் காரியத்திற்கு வித்தியாசமாக காவற்கோபுரம் அதனுடைய முதல் வருட வெளியீட்டிலிருந்தே (1879) யெகோவா என்ற தெய்வீக பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து. 1926-ல் இந்தப் பத்திரிகை “யார் யெகோவாவுக்கு கனம் செலுத்துவார்?” என்ற கட்டுரையைக் கொண்டிருந்தது. (சங்கீதம் 135:21) 1931-ல் காவற்கோபுர சங்கத்துடன் கூட்டுறவு கொண்டிருந்த பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைத் தழுவினார்கள். (ஏசாயா 43:10-12) மேலும் அவர்கள் யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும் மகா முக்கியத்துவத்தை அதிக முழுமையாக போற்ற ஆரம்பித்தனர். (ஏசாயா 12:4, 5) 1944-ல் அவர்கள் 6,800 தடவைக்கு மேல் யெகோவாவின் பெயரை உள்ளடங்கிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் பைபிளை வெளியிட ஆரம்பித்தார்கள். இருந்தபோதிலும் பைபிள் பிரசுரிப்பு குறித்ததில், அதிக மேலோங்கி இருப்பதானது, 1950-லிருந்து அச்சிடப்பட்டுவரும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளாகும். அது எபிரெய மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் தெய்வீக நாமத்திற்கு சரியான இடத்தைக் கொடுக்கிறது.
7. கடவுளுடைய நாமத்தின் மீது வைக்கப்படும் அழுத்தமும் அதோடு தொடர்புள்ள மற்ற எல்லாமும் எவ்விதமாக அநேக ஜனங்களை பலன்தரக்கூடிய விதத்தில் பாதித்திருக்கிறது?
7 கடவுளுடைய தனிப்பட்ட பெயரின் மீது கொடுக்கப்பட்ட முக்கியத்துவமானது பூலோகமுழுவதுமுள்ள நீதியை நேசிக்கும் இலட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மெய்த் தேவனை ஓர் ஆளாக போற்ற அது அவர்களுக்கு உதவி செய்தது. மேலும் அவருடைய வழிகளை அவர்கள் அறிந்துகொள்ள வந்ததினாலே, அவர்கள் விவேகமாக அல்லது உட்பார்வையோடு தங்களை நடத்திக்கொள்ள முடிந்தது.—மீகா 4:2, 5.
மனித ஆத்துமா அழியாததா?
8. அவர்களுடைய நவீனகால சரித்திரத்தின் துவக்கக் கட்டத்திலே யெகோவாவின் சாட்சிகள் ஆத்துமாவைப் பற்றியும் மரித்தோரின் நிலையைக் குறித்தும் என்ன அறிந்து கொண்டனர்?
8 இப்போது, மூன்றாவது உதாரணம்: நவீனகால யெகோவாவின் ஊழியர்களின் சரித்திரத்தின் துவக்கக் கட்டத்திலே, கடவுளுடைய வார்த்தையின் மீதான அன்பு, மற்ற முக்கிய சத்தியங்களைக் காண அவர்களது கண்களைத் திறந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்கள்” சரியாகவே ஆத்துமா என்பது, புத்திக்கூர்மை வாய்ந்த மனிதனுக்குள் குடியிருக்கும் பிரிந்திருக்கக்கூடிய ஓர் ஆவியாக இல்லை என்றும் அது அந்த மனிதன்தானே என்றும் அறிந்துகொண்டனர். (மத்தேயு 24:45-47) 1880-ல் காவற்கோபுரம் பைபிளின் மூல பாஷையில் இருந்த வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்து, ‘ஷியோல்’ மற்றும் ‘ஹேடீஸ்’ என்னும் அந்த வார்த்தைகள் கல்லறையை குறிப்பிடுகின்றன என்றும் முடிவு செய்தனர். மேலுமாக கெஹென்னாவிற்கு குறிக்கப்பட்டுள்ளவர்கள் அழிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் வதைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.—புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், பக்கங்கள் 1573-5-ஐயும் பார்க்கவும்.
9. 1894-ல் காவற்கோபுரம் மனித ஆத்துமா இயல்பாக அழியாமையுள்ளது என்ற போதகத்தின் துவக்கத்தைக் குறித்து என்ன சொல்லிற்று?
9 1894-ல் காவற்கோபுரம், “எல்லா மனிதர்களும் அழியாமையை, இயற்கை தன்மையாகவே மற்றும் தேவையான பாகமாகவே கொண்டிருக்கின்றனர் என்ற பிரபலமான எண்ணம் எங்கேயிருந்து வந்தது?” என்ற கேள்வியை எழுப்பியது. உட்பார்வையோடு அது பதிலளித்தது: “சரித்திரத்தின் பக்கங்களை கவனத்துடன் ஆராய்ந்து பார்க்கும்போது, மனிதனின் அழியாமை என்ற கொள்கையானது கடவுளுடைய ஏவப்பட்ட சாட்சிகளால் போதிக்கப்படாத போதிலும் அது பொய் மதங்களின் சாராம்சமாக இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். . . . ஆகவே சாக்ரடிஸும் பிளேட்டோவும் இந்தக் கொள்கையை முதலாவதாக போதித்தனர் என்பது உண்மையல்ல; அவர்கள் இருவருக்கும் முன்பே அவர்களைவிட அதிக வலிமை வாய்ந்த ஒரு போதகரை அது கொண்டிருந்தது. இருந்தபோதிலும் அவர்கள் அந்தக் கொள்கையை பிரகாசிக்கச் செய்து . . . அதிலிருந்து ஒரு தத்துவத்தை ஏற்படுத்தி, இவ்வாறாக அவர்களுடைய நாள் முதல் இந்தாள் வரையாக நாகரிகமான பிரிவினரை அதிகமாக கெடுத்து அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனர். இந்தப் பொய்ப் போதனையைப் பற்றிய முதல் பதிவு மனிதனால் அறியப்பட்டிருக்கும் மிகப் பழமையான சரித்திரப் பதிவில் காணப்படுகிறது—பைபிளில். பொய்ப் போதகன் சாத்தானாக இருந்தான்.”a
10. ஆத்துமாவைப் பற்றியும், இறந்தவர்களின் நிலையைப் பற்றியுமான மதங்களின் பொய்யினால் என்ன கெட்ட விளைவுகள் ஏற்பட்டன, ஆனால் நியாயமான மக்களுக்கு உதவி செய்யும்படி என்ன செய்யப்பட்டது?
10 மனிதர்கள் அழியாத ஆத்துமாவைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் துன்மார்க்கர் என்றென்றுமாக நரக அக்கினியில் வாதிக்கப்படுவார்கள் போன்ற பொய்யான போதகத்தை பரவச்செய்வதன் மூலம் சாத்தான் கடவுளைத் தவறாக வெளிப்படுத்திக் காட்டி, அவருடைய நாமத்தை தூஷித்திருக்கிறான். காவற்கோபுரத்தின் முதல் பதிப்பாசிரியர் சி.டி. ரஸல் இதை உணர்ந்தார். என்றென்றுமாக வாதனை என்ற கருத்தைப் புத்திக்கூர்மை வாய்ந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அவர் கண்டார், ஆனால், விசனகரமாக அந்த நியாயமில்லாத கொள்கைக்குப் பைபிள்தானே ஊற்றுமூலமாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்து பைபிளை ஏற்றக்கொள்ள மறுத்ததையும் அவர் கண்டார். அவர் சொன்னதுபோல, நியாயமான மக்களின் மனதிலிருந்து இருண்ட சகாப்தத்தின் புகையை நீக்குவதற்காக, சகோதரர் ரஸல் “நரகத்திற்கும் அங்கிருந்து திரும்புதலும்! அங்கு யார் இருக்கிறார்கள்” என்ற கவனத்தைக் கவரும் பொதுப்பேச்சைக் கொடுத்தார்.
11. (எ) ஆவியுலகத் தொடர்பு முன்னுக்கு வந்தபோது ‘உத்தம அடிமை’ வகுப்பினரால் என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டது? (பி) இந்த எச்சரிப்பினால் யார் பலனடைந்தனர்? எவ்வாறு?
11 அதுதானே ஆவியுலகத் தொடர்பு முன்னுக்கு வந்த காலமாயிருந்தது. ஆனால் யெகோவா தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் சாத்தியமாக்கிய உட்பார்வையின் காரணமாக “உத்தம அடிமை” வகுப்பினர், ஜனங்கள் தொடர்பு கொண்டிருந்த இறந்தவர்களிடமிருந்து பிரிந்து வந்த ஆவிகள் என்று கருதப்பட்டவைகள் பிசாசுகள் என்பதாகப் புரிந்துகொண்டனர். உண்மை மனமுள்ளவர்கள் ஆவி சம்பந்தமான பழக்கத்தில் ஈடுபடுவதனால் வரும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளாமலிருக்க அவர்களது கண்களைத் திறக்கும்படிக்கு சக்திவாய்ந்த வேதாகம விவாதங்கள் பொதுப்பேச்சின் மூலமும் எழுத்து வடிவிலும் கொடுக்கப்பட்டன. (உபாகமம் 18:10-12; ஏசாயா 8:19) யெகோவா தேவன் தனது ஊழியர்களுக்குக் கொடுத்த இந்த உட்பார்வையின் விளைவாக பூமி முழுவதிலுமுள்ள பல ஆயிரக்கணக்கான ஆட்கள் இறந்தவர்களைப் பற்றிய பயத்திலிருந்தும், ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களிலிருந்தும், ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட கீழ்த்தரமான பழக்கவழக்கங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டனர்.
குழப்பமான உலகத்திலே கிறிஸ்தவ நடத்தை
12, 13. (எ) தானியேல் 11:32, 33-ஐ விளக்கவும். (பி) ‘உட்பார்வை உடையவர்களால்’ கொடுக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலுக்கு ஆதாரமாக உள்ள சில அடிப்படை பைபிள் சத்தியங்கள் யாவை?
12 தீர்க்கதரிசியாகிய தானியேல் கடவுளுடைய ஊழியர்கள் உட்பார்வையை வெளிப்படுத்தக்கூடிய இன்னொரு நான்காவது காரியத்தையும் குறிப்பிட்டுள்ளான், ஒரு முக்கிய விவாதம்—நடுநிலைமை. உலகிலுள்ள பிரதான அரசியல் பிரிவினைக்குள்ளான போராட்டத்தை முழுவதுமாக விவரித்த பின்னர், தானியேல் 11:32, 33 சொல்லுகிறது: “உடன்படிக்கைக்கு துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப் பேச்சுகளினால் கள்ள மார்க்கத்தாராக்குவான்.” அதாவது, சர்வாதிகார வடதேசத்து ராஜா, கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டி, ஆனால் உலகத்தின் மீது அன்புகூர்ந்து, அதனுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறவர்களை விசுவாச துரோகத்தில் வழிநடத்தி, இயேசு கிறிஸ்து பூமி முழுவதும் ஆளப்போகும் ராஜ்யத்திற்கான யெகோவாவின் உடன்படிக்கையை அலட்சியம் செய்யக்கூடியவனாக இருப்பான். “ஆனால்,” தானியேல் தொடர்வதாவது, “தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு அதற்கேற்றபடி செய்வார்கள். ஜனங்களில் உட்பார்வை உள்ளவர்கள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்.”
13 அடிப்படை பைபிள் சத்தியங்களுக்குப் போற்றுதல் தெரிவிப்பதால், நம்மை சுற்றியுள்ள குழப்பமான நிலைமைகளை ஞானத்தோடு கையாளுவதற்கான தேவையான உட்பார்வையைக் கண்டடைய முடியும். யெகோவாவின் வழி நடத்தலோடு “உத்தம அடிமை” வகுப்பினர் இந்தச் சத்தியங்களைத் தெளிவாக புரிந்துகொண்டனர். அந்த உண்மைகளிலே ஒன்று, இயேசு குறித்துக் காட்டிய விதமாக, இவ்வுலகத்து காணக்கூடாத அதிபதியாகிய பிசாசாகிய சாத்தான் இருக்கிறான் என்பதாகும். (லூக்கா 4:5-8; யோவான் 12:31) இந்தச் சத்தியத்திற்கு இணங்க 1 யோவான் 5:19 மேலுமாக கூறுவதாவது ஒரு பகுதியோ அல்லது மற்றொன்றோ மட்டுமல்லாமல், இந்த “உலகம் முழுவதும் (மெய்க் கிறிஸ்தவ சபைக்கு வெளியே உள்ள எல்லா மனிதவர்க்கம்) பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (வெளிப்படுத்துதல் 12:9) எனவே இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள் “உலகத்தார் அல்ல” என்று சொன்னது, இது கிறிஸ்தவ நடுநிலையை அவர்கள் பங்கிலிருந்து கேட்கக்கூடியதாயிருந்தது.—யோவான் 17:16.
14. (எ) 1939 மற்றும் 1941-ல் என்ன காலத்திற்கேற்ற காரியங்களுக்கு யெகோவாவின் ஊழியர்களின் கவனம் திருப்பப்பட்டது? (பி) யெகோவாவின் சாட்சிகள் ஞானமாக நடந்துகொள்ளுவதற்கு அப்படிப்பட்ட உட்பார்வை எவ்வாறு உதவியது?
14 ஆகவே இரண்டாவது உலக யுத்தத்தின் மேகங்கள் ஐரோப்பாவை இருட்டாக்கினபோது, நடுநிலைமை பற்றிய விவாதம் நவம்பர் 1, 1939 காவற்கோபுர வெளியீட்டில் முக்கிய குறிப்பாக உயர்த்திக் காண்பிக்கப்பட்டது அந்த நேரத்திற்கு பொருத்தமாக இருந்தது. இந்தப் பொருளுக்கு இசைவான இன்னொரு அடிப்படை உண்மையானது—உலகளாவிய அரசுரிமைப் பற்றிய விவாதத்தின் முக்கியத்துவமும் இந்த விவாதத்திற்கு முடிவு காணும் மேசியானிய ராஜ்யத்தின் பங்கும். பொருத்தமாகவே, 1941-ல் இந்த விவாதமானது அமெரிக்க ஐக்கிய மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ், மிசெளரி என்ற இடத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டில் விசேஷித்த அம்சமாக எடுத்துக் காட்டப்பட்டதோடு, அடுத்த வருடத்தில் புதிய உலகம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றது. பிளவுபட்ட, சண்டைகள் நிறைந்த இவ்வுலகில் யெகோவாவின் ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட கடவுளுக்கு உகந்த உட்பார்வையானது எப்பேர்ப்பட்ட பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது! கிறிஸ்தவ மண்டல மத ஒழுங்குமுறையானது தங்களை சர்வதேச விவகாரங்களில் ஈடுபடுத்தி கலவரங்களை உண்டாக்குவதிலும், கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கங்களை கவிழ்ப்பதன் மூலமும் பல பிரிவுகளாக இருந்தபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் எல்லாத் தேசங்களிலும் ஒற்றுமையாக தொடர்ந்து கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்திற்கு ஒரே நம்பிக்கை என்பதைக் குறித்து பிரஸ்தாபிப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயேசு முன்னறிவித்து கூறியதுபோல், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும்.” இவர்கள் ஜீவனைக் காக்கும் வேலையில் தங்களைச் சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.—மத்தேயு 24:14.
பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம்
15. யெகோவாவின் ஊழியர்கள் ஏன் உட்பார்வையைக் கொண்டிருக்கின்றனர்?
15 ஏன் யெகோவாவின் ஊழியர்கள் அந்த உட்பார்வையை உடையவர்களாக இருக்கிறார்கள்? ஏனென்றால் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையில் அவர்கள் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள், அதற்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள், மேலும் யெகோவாவின் ஆவி அவர்கள் மேல் இருக்கிறது. இது அவர்களுக்குப் பைபிளின் முக்கியமான தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவி அளித்திருக்கிறது. இந்த ஐந்தாவது குறிப்பையே இப்பொழுது நாம் சிந்திக்கப் போகிறோம்.
16 உலக சரித்திர ஆசிரியர்கள், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில துண்டுகள் கொடுத்த விளக்கங்களின் பேரில் சார்ந்தவர்களாக, பொ.ச.மு. 464 அர்தசஷ்டா லோங்கிமானஸ் ராஜ்யபாரத்தின் முதல் வருடம் என்றும், பொ.ச.மு. 604 இரண்டாவது நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரத்தின் முதல் வருடம் என்றும் முடிவெடுத்தனர். அது உண்மையாக இருக்குமேயானால், அர்தசஷ்டாவின் 20-வது வருடமானது பொ.ச.மு. 445-ல் தொடங்கி இருக்கலாம், மேலும் எருசலேம் பாபிலோனியர்களால் (நேபுகாத்நேச்சாரின் 18-வது வருடத்தில்) பாழ்க்கடிக்கப்பட்ட தேதி பொ.ச.மு. 587-ஆக இருக்கலாம். ஆனால், பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை ஒரு பைபிள் மாணாக்கன் இந்தத் தேதியின் அடிப்படையில் கணக்கிடுவானேயாகில், அது அவனை குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
17 புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் காரியங்கள் பைபிளின் கருத்துக்களுக்கு ஒத்திசைவாக இருப்பதினால், யெகோவாவின் சாட்சிகள் அதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாயிருக்கிறார்கள். என்றபோதிலும், அந்தக் கண்டுபிடிப்புகள் பைபிளின் தெளிவான விளக்கங்களுக்குப் புறம்பாக இருக்கும்போது, அது காலக்கணக்கீடு முறையைக் குறித்ததாக இருந்தாலும்சரி, வேறு எந்தப் பொருளின்பேரில் சார்ந்ததாக இருந்தாலும்சரி, நாம் நம்பிக்கையோடு பைபிள் என்ன கூறுகிறதோ அதையே ஒப்புக்கொள்கிறோம். இதன் பலனாக, யெகோவாவின் ஊழியர்கள் அந்தத் தீர்க்கதரிசன காலமானது அர்தசஷ்டாவின் 20-வது வருடத்திலிருந்து ஆரம்பமானது. அதாவது பொ.ச.மு. 455-லிருந்து கணக்கிடப்படுகிறது என்றும், இவ்வாறாக தானியேல் 9:24-27 நம்பத்தகுந்த முறையில் பொ.ச. 29 இளவேனிற் காலத்தில் இயேசு கிறிஸ்து மேசியாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதை குறிப்பிட்டு காட்டுவதை வெகு முன்பாகவே அறிந்து கொண்டனர்.b இதே காரணத்தின் நிமித்தமாகவே, தானியேல் 4-வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட “ஏழு காலங்கள்” பொ.ச.மு. 607-606-லிருந்து ஆரம்பித்தது என்றும், பொ.ச. 1914-ஐ குறிப்பிட்டு இளவேனிற் காலமான அந்த வருடத்தில் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டார் என்றும், அதுமுதல் இந்த உலகமானது முடிவான காலத்திற்குள் உட்பிரவேசிக்கக்கூடியதாக இருந்தது என்பதையும் உணர்ந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.c ஆனால் வேத வசனத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையானது அசைக்கப்பட்டு இருந்ததானால் அவர்களால் இந்த உணர்ச்சியைத் தூண்டக்கூடிய தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை பகுத்துணர்ந்து இருக்கமுடியாது. இவ்வாறாக, அவர்கள் காண்பித்த அந்த உட்பார்வை, கடவுளுடைய வார்த்தையின் மேல் சார்ந்திருக்கும் அவர்களுடைய நேரடித் தொடர்பைக் காட்டியது.
18 கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கும் அதே சமயம் தனிப்பட்டவர்களாகவும், ஒரு குழுவாகவும் அப்போதைக்கு சிறந்து விளங்கும் காரியத்திற்காக வேத வசனங்களை புறக்கணிப்பவர்களுக்கும் இடையே ஆவிக்குரிய நிலையில் உள்ள வேறுபாட்டை யெகோவா தேவன் பின்வரும் வேத வசனத்தில் கூறுகிறார், “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள். நீங்களோ, வெட்கப்படுவீர்கள். இதோ, என் ஊழியக்காரர் மன மகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.”—ஏசாயா 65:13, 14.
19 இந்தச் சிறிய சரித்திரப்பூர்வமான கலந்தாலோசிப்பு காட்டுவதானது, காவற்கோபுர பத்திரிகையின் மூலமாய் அடிப்படை வேத உண்மையின் விளக்கங்களை நமக்கு யெகோவாவின் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்” அளிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். காவற்கோபுர பத்திரிகையை அடிப்படை கருவியாக இந்த “அடிமை” வகுப்பார் உபயோகித்து ஆவிக்குரிய உணவைப் பகிர்ந்து கொடுக்கிறார்கள். நீங்கள் இதிலிருந்து முழுவதுமாக பயன்பெறுகிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு வெளியீட்டையும் படிக்கிறீர்களா? மேலும் உங்கள் படிப்பு அட்டவணையில், வெறுமென குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் எடுத்துரைக்கப்படாத, வசனங்களை எடுத்துப் பார்ப்பதை சேர்த்துக்கொள்கிறீர்களா? மேலும் நீங்கள் படித்த காரியத்தின் பேரில் ஆழ்ந்த சிந்தனை செலுத்தி, அதற்கு நன்றியறிதலை வளர்த்து, அவை உங்களுடைய எண்ணங்களையும் உங்களுடைய விருப்பங்களையும், உங்கள் அன்றாட செயல்களையும், உங்கள் வாழ்க்கையின் இலக்குகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்று சிந்தனை செய்வதை நீங்கள் பழக்கமாக ஆக்கிக் கொள்கிறீர்களா? நீங்கள் இப்படிச் செய்வதானது, யெகோவா ஒருவர் மட்டுமே அளித்திருக்கும் உட்பார்வையின் பேரில் சார்ந்த தீர்மானங்களைச் செய்வதில் ஒரு பெரிய காரியமாக இருக்கும். (w89 3⁄15)
[அடிக்குறிப்புகள்]
a சாத்தான், ஏவாளை அவள் மாம்சத்தில் மரிக்கமாட்டாள் என்பதாக அவளை நம்பும்படி செய்தான். (ஆதியாகமம் 3:1-5) ஆகவே பிற்பாடு அவன், மனிதர்களின் உடல் இறந்தப் பிறகும்கூட எப்போதும் உயிர்வாழும் அழியாத ஆத்துமாவை கொண்டுள்ளனர் என்ற பொய்ப் போதகத்தை துவக்கி வைத்தான்.—ஆங்கில காவற்கோபுரம் செப்டம்பர் 15, 1957, பக்கம் 575 பார்க்கவும்.
b வேதவசனங்களின் பேரில் உட்பார்வை, புத்தகம் 2, பக்கங்கள் 614-16, 899-901.
c “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பக்கங்கள் 186-9.
நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதென்ன
◻ கடவுள் ஒரு திருத்துவமா? நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
◻ கடவுளுடைய பெயர் எங்கே இருக்கவேண்டியது சரியாகவே உரியதாயிருக்கிறது?
◻ மனித ஆத்துமா அழியாமையுள்ளதா?
◻ கொந்தளிப்பு மிகுந்த உலகத்திலே கிறிஸ்தவநடத்தை சம்பந்தமாக என்ன உட்பார்வையை யெகோவாகொடுத்தார்?
◻ பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றும் சம்பந்தமாக என்ன உட்பார்வையை யெகோவாவின் சாட்சிகள் பெற்றுக்கொண்டனர்?
[பக்கம் 8-ன் படங்கள்]
காவற்கோபுரத்தின் மூலம் ”உண்மையும் விவேகமும்முள்ள” ஊழியக்காரர், வேதாகமத்தின் அர்த்தத்தையும் நம்முடைய நாளுக்கு அதன் பொருத்தத்தையும் குறித்த உட்பார்வையைக் கொடுக்கிறார்கள்