நீங்கள் புதிய கருத்துக்களை ஏற்கும் பண்புடையவரா?
சிலர் எந்த ஒரு புதிய கருத்துக்கும் தங்கள் மனதை மூடிக் கொண்டுவிடுகின்றனர். அவர்கள் தங்களுடைய கருத்திலிருந்து வித்தியாசப்படுகிறது என்ற காரணத்துக்காக அதை தள்ளிவிடலாம். உதாரணமாக, டென்மார்க்கிலுள்ள ஒரு பெண், ஹிமெட் என்ற வார பத்திரிகைக்கு இவ்விதமாக எழுதி அனுப்பினாள்: “யெகோவாவின் சாட்சிகள் ஓயாது எங்கள் கதவண்டைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அவர்களை வெளியேற்றுவது எவ்வாறு என்று எனக்குத் தெரியவில்லை. . . . சட்டத்தின் மூலமாக அவர்களுடைய தொந்தரவு தவிர்க்கப்பட முடியாதா?”
19-வது நூற்றாண்டின் மத்திபத்தில் வாழ்ந்து வந்த ஜப்பானியர்களுக்கு, மேற்கத்திய நாட்டவர் அவர்களுடைய கதவைத் தட்டியதும்கூட “தொந்தரவாகவே” கருதப்பட்டது. அவர்களில் அநேகருடைய பார்வையில், அழையாமல் வரும் ஒருவரோடு சம்பந்தப்பட்ட அனைத்துமே பயனற்றதாக அல்லது தீங்கிழைப்பதாகவும்கூட இருந்தது. கிழக்கத்திய பழமொழி ஒன்று சொல்வது போல், “மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.” கடற்படைத் தளபதி பெர்ரியை அவர்கள் வரைந்து காட்டிய சித்திரத்திலிருந்து அநேக ஜப்பானியர்களின் மனநிலை நன்றாக விளங்கிக் கொள்ளப்பட்டது. மீதமிருக்கும் சுமார் 50 படங்களில், 2 அல்லது 3 மாத்திரமே அவரை அமெரிக்க கடற்படை அதிகாரியாகச் சுட்டிக் காட்டுகின்றன. மற்றவை, அவரை இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளபடி நீண்ட மூக்கினையுடைய ஒரு பூதமாக அல்லது வெளிறிய முகமுடைய ஒரு கொடியவனாக காண்பிக்கின்றன.
ஆனால் அவர்களுடைய தேசம் திறக்கப்பட்டபோது, திறந்த மனமுள்ள ஜப்பானியர்கள், அயல்நாட்டவர் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை உணரலானார்கள். அமெரிக்காவுக்குச் சென்ற முதல் ஜப்பானிய தூது குழுவிலிருந்த சிலரின் விஷயத்தில், மேற்கத்திய கலாச்சாரம் மிக நேர்த்தியாக இருப்பதைக் கண்டபோது அவர்களுடைய கண்கள் தெளிவடைந்தது போன்றிருந்தது. ஜப்பானிய நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் அமெரிக்கர்கள் எத்தனை மரியாதையற்றவர்கள் என்பதாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து குறைகூறிக்கொண்டே இருந்தனர். ஆனால் இளையத்தலைமுறையோ, புதிய கலாச்சாரத்தை அதிக சமநிலையோடு மதிப்பிட்டனர்.
உயர் அதிகாரி ஒருவரின் 19-வயது பணியாளர் ஒருவர் எழுதினார்: “இந்தத் தூதுக் குழுவிலிருந்த 70 ஜப்பானியர்களில் பெரும்பாலானோர் [அமெரிக்க நாட்டவரை] எதிர்க்கிறவர்களாக அல்லது பகைக்கிறவர்களாக இருந்தனர். என்றபோதிலும் உண்மை நிலையை நேரில் கண்டபோது எங்களில் சில தனிநபர்கள், அவர்களுடைய தப்பெண்ணத்தை உணர்ந்து இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்ததுக் குறித்து வருந்தினோம். அயல் நாட்டவரை நாய்கள் அல்லது குதிரைகள் போல் அத்தனை கீழானவர்களாக இருப்பதாக நினைத்து அவர்களை அவமதிப்பதனால் நாம் இரக்கமற்றவர்களாகவும் அநீதியாகவும் இருப்பதாக மாத்திரமே அவர்களிடமிருந்து பெயர் பெற்றுக் கொள்வோம்.” இந்த இளம் பணியாளனுக்கிருந்ததைப் போன்று தப்பெண்ணமற்ற மனநிலையோடு புதிய கருத்துக்களை நோக்க நீங்கள் போதிய அளவு திறந்த மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?
பெரோயா பட்டணத்தாரின் முன்மாதிரி
பொ.ச. முதல் நூற்றாண்டில், அநேக யூதர்கள் கிறிஸ்தவ போதகங்களுக்கு எதிராக நியாயமற்ற தப்பெண்ணத்துக்கு இடமளித்திருந்தார்கள். சில விதங்களில் அது, வெளி உலகத் தொடர்பின்றி தனியே ஒதுங்கியிருந்த ஜப்பானியர் வெளி உலகத்துக்கு எதிராகக் கொண்டிருந்த தப்பெண்ணத்தை ஒத்திருந்தது. “எங்கும் இந்த [கிறிஸ்தவம்] விரோதமாய்ப் பேச”ப்படுகிறது என்பதாக பூர்வ ரோமிலிருந்த யூதர்கள் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 28:22) தெசலோனிக்கேயாப் பட்டணத்திலிருந்த ஒரு சில கிறிஸ்தவர்களைக் குறித்து, தப்பெண்ணங் கொண்ட யூதர்கள், “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்” என்றார்கள்.—அப்போஸ்தலர் 17:6.
என்றபோதிலும், தங்கள் தப்பெண்ணங்களுக்கு மறுபுறமாகப் பார்க்க மனமுள்ளவர்களாயிருந்த ஜனங்கள் இருந்தார்கள். உதாரணமாக பவுலாலும் அவனுடைய கூட்டாளியான சீலாவினாலும் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்திக்கு பெரோயா பட்டணத்தார் எவ்விதமாகப் பிரதிபலித்தார்கள்? பெரோயாப் பட்டணத்தாரைக் குறித்து பைபிள் எழுத்தாளன் லூக்கா சொன்னதாவது: “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணாசாலி”களாயிருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 17:11) பெரோயாப் பட்டணத்தாரைப் போல நீங்கள் “நற்குணசாலி”களாயிருக்கிறீர்களா?
மசாஜியின் விஷயத்தைத் தயவு செய்து கவனியுங்கள். ஒரு சமயத்தில் கிறிஸ்தவத்தை அவன் கடுமையாக எதிர்த்தான். ஜப்பான் திறக்கப்படுவதை எதிர்த்த ஆட்களைப் போல அவன் இருந்தான். அவன் மனைவி சச்சிக்கோ பைபிளைப் படிக்க ஆரம்பித்த போது அவன் வன்மையாக அவளை எதிர்த்தான். குடும்பத்தாரைக் கொன்றுவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினான். அவன் செய்த கொடுமையின் காரணமாக, அவனுடைய குடும்பம் வடஜப்பானிலிருந்த சச்சிக்கோவின் மூத்த சகோதரனுடைய வீட்டுக்கு ஓடிப் போக நேர்ந்தது.
கடைசியாக மசாஜி தன் மனதை சற்றே திறக்கவும் அவனுடைய மனைவியின் மதத்தை ஆராயவும் தீர்மானித்தான். ஒரு சில பைபிள் பிரசுரங்களை வாசித்தப்பின், மாற்றங்கள் செய்வதற்குரிய அவசியத்தை அவன் கண்டான். அவன் வேதாகமத்தைப் படித்தபோது, அவனுடைய வன்முறையான மனநிலை, கடவுளுடைய ஆவியின் கனியைப் பிரதிபலித்த ஒன்றாக மாறியது. (கலாத்தியர் 5:22, 23) மசாஜி யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்லத் தயங்கினான். ஏனென்றால், சாட்சிகள் அவர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட வன்முறைக்குப் பழிவாங்கிவிடுவார்களோ என்று பயந்தான். ஆனால் கடைசியாக ஒரு ராஜ்ய மன்றத்துக்குச் சென்ற போது, அவன் அத்தனை அனலோடு வரவேற்கப்பட்ட போது அவன் அழுதேவிட்டான்.
ஆம், தப்பெண்ணத்தை மேற்கொண்டு புதிய கருத்துக்களை ஆராய்வது நம்முடைய அறிவெல்லையை விரிவாக்கி, மற்ற வழிகளில் நமக்குப் பிரயோஜனமாயிருக்கக்கூடும். என்றபோதிலும், நாம் எதிர்ப்படும் ஒவ்வொரு புதிய கருத்தையும் ஏற்கும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா?
தெரிந்தெடுக்கிறவர்களாயிருங்கள்!
ஜப்பானின் தனித்திருக்கும் கொள்கை கைவிடப்பட்டபோது, புதிய கருத்துக்கள் ஜப்பானை ஏராளமாக வந்தடைந்தன. இவைகளில் சில ஜப்பானியர்களுக்குப் பிரயோஜனமாயிருந்தன, ஆனால் மற்றவை இல்லாமல் அவர்கள் மேம்பட்ட நிலையில் இருந்திருக்கக்கூடும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜப்பான் சரணடைந்ததை ஏற்றுக் கொண்ட சமயத்தில், ஐக்கிய மாகாணங்களின் தளபதி டக்லஸ் மேக் ஆர்த்தர், “கப்பற்படைத் தளபதி பெர்ரியின் நோக்கங்களுக்கு மாறாக, ஜப்பான் மேலைநாடுகளின் அறிவை, ஒடுக்குதலுக்கும் அடிமைத்தனத்துக்கும் ஒரு கருவியாக மாற்றியது” என்றார். அவளுடைய மேற்கத்திய ஆசானைப் பின்பற்றி ஜப்பான் தொடர்ச்சியாக பல போர்களுக்கு வழிநடத்திய ஒரு பாதையில் இறங்கினாள். இவை இரண்டாம் உலகப்போரில் உச்சக்கட்டத்தை அடைந்தன. இதன் முடிவில் ஜப்பானிய பிராந்தியத்தில் இரண்டு அணுகுண்டுகள் போடப்பட்டன.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வது குறித்து நாம் தெரிந்தெடுப்புச் செய்கிறர்களாக இருக்க வேண்டும். “[பவுலால் போதிக்கப்பட்ட] காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த” பெரோயாப் பட்டணத்தாரை நாம் பின்பற்றுவது நலமாயிருக்கும். (அப்போஸ்தலர் 17:11) இங்கே “ஆராய்ந்து” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “வழக்கு மன்ற நடவடிக்கைகளில் செய்வது போன்று கவனமாகவும் துல்லியமாகவும் பரிசீலனைச் செய்வதை” அர்த்தப்படுத்துகிறது. (A. T. ராபர்ட்சன் எழுதிய புதிய ஏற்பாட்டில் வார்த்தை வருணனை) நம்மிடம் சொல்லப்படும் ஒவ்வொரு புதிய கருத்தையும் குருட்டுப்போக்காக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை விசாரிக்கையில் ஒரு நீதிபதி செய்வது போல நாம் கவனமாகவும் துல்லியமாகவும் ஆராய்ச்சி செய்வது அவசியமாகும்.
நாம் தெரிந்தெடுக்கிறர்களாக இருப்போமானால், உண்மையில் தீங்கிழைப்பதாக இருக்கும் கடந்து போகின்ற ஒவ்வொரு கொள்கையினாலும் புதிய கருத்துக்களினாலும் நாம் அலைக்கழிக்கப்பட மாட்டோம். உதாரணமாக 1960-களில் புதிய ஒழுக்கம் என்றழைக்கப்பட்டது சிலருக்கு கவர்ச்சியான புதிய கருத்தாகத் தோன்றியது. ஆனால் இது புதிய பெயரின் கீழ் தீங்கிழைக்கும் பழைய ஒழுக்கயீனமே என்பதை கவனமான ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும். மேலுமாக, பொருளாதாரத்தில் குழப்பத்திலிருந்த 1920-களில், அநேகர் நாசிக் கொள்கையை கிளர்ச்சியூட்டும் புதிய கருத்தாகக் கருதினர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், என்னே வேதனையை அது உண்டுபண்ணியது!
புதிய கருத்துக்களை பரிசோதிக்க பயன்படுத்தக்கூடிய உரைக்கல்லை கடவுள் அளித்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. அது அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளாகும். அதனுடைய வழிகாட்டி நியமங்களைக் குடும்ப வாழ்க்கையிலும் மனித உறவுகளிலும் பின்பற்றுவது, மனித இன வளர்ச்சி ஆய்வாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், இன்னும் இத்துறைகளில் நிபுணர்களென உரிமைப் பாராட்டும் மற்றவர்களிடமிருந்து இன்று நாம் கேட்கும் புது கருத்துக்கள் பலவற்றை ஒப்பிட்டு சரிபார்க்க நமக்கு உதவி செய்யும். (எபேசியர் 5:21–6:4; கொலோசெயர் 3:5–14.) கடவுளோடும் அயலாரோடும் நம்முடைய உறவின் சம்பந்தமாக பைபிள் புத்திமதி, மதத்தின் பொருளில் இப்பொழுது பரப்பப்பட்டுவரும் அநேக புதிய கருத்துக்களை ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கு உதவி செய்கிறது. (மாற்கு 12:28–31) திருத்தமான பைபிள் அறிவு, ஒரு புதிய கருத்து உண்மையில் மதிப்புள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவிசெய்யும். அப்பொழுது நாம், “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளக்”கூடியவர்களாயிருப்போம்.—1 தெசலோனிக்கேயர் 5:21.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அயலாரை பைபிளைப் பற்றி கற்றறிவதற்கு ஊக்குவித்து இவ்விதமாகப் புதிய கருத்துக்களை சரியாக நிதானிக்கக்கூடியவர்களாக இருப்பதற்காக அவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். சாட்சிகள் அநேகருக்குப் புதியவையாக இருக்கும் பைபிள் கருத்துக்களையும்கூட சுட்டிக் காண்பிக்கிறார்கள். இவைகளில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களைப் பற்றிய உண்மையும், மனிதவர்க்கத்துக்காக எதிர்காலம் உண்மையில் எதைக் கொண்டிருக்கிறது என்பதும் அடங்கும். (மத்தேயு 24:3–44; 2 தீமோத்தேயு 3:1–5; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆகவே சாட்சிகள் உங்களை சந்திக்க வீட்டுக்கு வரும்போது தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டிராதேயுங்கள். மாறாக, உங்கள் கதவைத் திறந்து அவர்கள் சொல்வதை ஏன் செவிகொடுத்துக் கேட்கக்கூடாது? உங்களுக்கு நித்தியமாக நன்மை விளைவிக்கக்கூடிய கருத்துக்களுக்கு உங்கள் மனதை மூடிக்கொள்ளாதேயுங்கள். (w89 1/15)