யெகோவா விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளிக்கிறார்
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.” —தானியேல் 3:17.
சர்வலேராக பேரரசராகிய யெகோவா தேவன் உலக அரசர்களுக்குத் தம்முடைய அரசதிகாரத்தின் சம்பந்தமாக முக்கிய பாடங்களைக் கற்பித்திருக்கிறார். முந்தையக் கட்டுரையில் தானியேல் புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் இது எத்தனை உண்மையாக இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஆவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளுக்கிசைவாக இவைகளிலிருந்து நாம் என்னத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்பதைக் காண இதே பதிவுகளை நாம் இப்பொழுது மறு ஆய்வு செய்வோம்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”—ரோமர் 15:4.
2 பொ.ச.மு. 617-ம் ஆண்டில் யோயாக்கீமின் குமாரனாகிய யோயாக்கீனின் குறுகிய கால ஆட்சியின் போதுதானே, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், மிக நேர்த்தியானவர்களும் சகல ஞானத்திலும் தேறினவர்களுமான வாலிபர்களில் சிலரை பாபிலோனுக்குக் கொண்டுவரும்படியாக கட்டளையிட்டான். இவர்களில் தானியேலும், அனனியாவும், மீஷாவேலும் அசரியாவும் இருந்தார்கள்.—தானியேல் 1:3, 4, 6.
3 அவர்களுடைய பெயர்களை வைத்து மதிப்பிடுகையில், யூதாவில் அந்தச் சமயத்தில் நிலவி வந்த அக்கிரமமான நிலைமைகளின் மத்தியிலும், இந்த நான்கு எபிரெய வாலிபர்களுக்குக் கடவுள் பயமுள்ள பெற்றோர் இருந்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. “தானியேல்” என்பதன் பொருள் “தேவன் என் நியாயாதிபதி”. அனனியா என்ற பெயரின் பொருள் “யெகோவா தயவைக் காட்டியிருக்கிறார்; யெகோவா கிருபையுள்ளவராக இருந்திருக்கிறார்”. மிஷாவேல் என்ற பெயரின் பொருள், “தேவனைப் போல் இருப்பது யார்?” அல்லது “தேவனுக்குரியவர் யார்?” அசரியா என்ற பெயரின் பொருள் “யெகோவா உதவியிருக்கிறார்”. அவர்களுடைய பெயர்களே, ஒரே மெய்க்கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பதற்குப் பெரிதளவில் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பெயர்களுக்குப் பதிலாக கல்தேயர்கள் இந்த நான்கு எபிரெய வாலிபர்களுக்கு பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்று பெயரிட்டிருந்தார்கள். அந்நிய ஆட்சியில் அடிமைகளாக, அவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், சிறை கொண்டுப் போனவர்கள் பயன்படுத்தியப் பெயர்களைப் பற்றியதில் இவர்களுக்குத் தெரிவு செய்ய எதுவுமில்லை.—தானியேல் 1:7.
விசுவாசமும் தைரியமும் சோதிக்கப்படுகிறது
4 இந்த நான்கு எபிரெயர்களுக்கு அவர்களுடைய கடவுள் பயமுள்ள பெற்றோர், அவர்களுக்கு வைத்தப் பெயரின் மூலமாக, வாழ்க்கையில் ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்ததுமட்டுமல்லாமல் உணவு சம்பந்தப்பட்ட அம்சங்கள் உட்பட மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின்படி கண்டிப்புடனும் அவர்களை வளர்த்திருக்க வேண்டும். யெகோவா தேவன் தாமேயும் இவைகளை அத்தனை முக்கியமானவைகளாக கருதியதால் தடை செய்யப்பட்டிருக்கும் அநேக காரியங்களை வரிசையாக கூறிய பின்பு அவர் சொன்னதாவது: “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.”—லேவியராகமம் 11:44, 45.
5 இந்த நான்கு எபிரெயர்களின் மிக நேர்த்தியான வளர்ப்பு, வெகுவிரைவில் சோதனைக்குட்படுத்தப்பட்டது. எவ்விதமாக? ஏனென்றால் அவர்களுக்கு “ராஜா தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை நியமித்”திருந்தான். (தானியேல் 1:5) மோசேயின் நியாயப்பிரமாணம் தடைவிதித்திருந்தவற்றில், பன்றிகள், முயல்கள், சிப்பிகள், விலாங்கு மீன்கள் போன்ற உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். நியாயப்பிரமாணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மாம்சமுங்கூட பாபிலோனிய அரண்மனையில் சந்தேகத்துக்குரியவையாக இருந்தது. ஏனென்றால், அவற்றில் இரத்தம் சரியாக சிந்தப்பட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள எந்த வழியுமிருக்கவில்லை. இப்படிப்பட்ட மாம்சம் புறமத சடங்குகளால் கறைப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.—லேவியராகமம் 3:16, 17.
6 அந்த நான்கு எபிரெயர்கள் என்ன செய்யக்கூடும்? தானியேல்—மற்ற மூவரும்கூட—இப்படிப்பட்ட உணவுப் பொருட்களினால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளாதிருக்க தங்கள் இருதயத்தில் தீர்மானமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே ராஜா உண்ணும் போஜனத்துக்குப் பதிலாக வெறும் மரக்கறிகளையும் திராட்சரசத்துக்குப் பதிலாக தண்ணீரையும் கொடுக்குமாறு தானியேல் “தயவாக” கேட்டுக்கொண்டேயிருந்தான். எது அதிக சுவையுள்ளது என்பது பற்றிய காரியம் அவர்களுடைய மனதில் தோன்றவில்லை. இந்த விஷயத்தை வற்புறுத்துவதற்கு நிச்சயமாகவே விசுவாசமும் தைரியமும் தேவைப்பட்டது. ஆம், யெகோவா இந்த நான்கு வாலிபர்களில் அக்கறையுள்ளவராக இருந்தபடியினால், பிரதானியின் தலைவன், தானியேலின் விருப்பப்படி செய்யுமாறு செய்தார். என்றபோதிலும், இப்படிப்பட்ட ஓர் உணவு தானியேலுடைய ஆரோக்கியத்தின் மீது கொண்டுவரக்கூடிய பாதிப்பை முன்னிட்டு பயந்தவனாய் தானியேலின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள இந்தப் பிரதானி அஞ்சினான். ஆகவே தானியேல் பத்து நாள் வரைக்கும் இந்த உணவை சாப்பிட்டு பார்க்கும்படி அனுமதி கேட்டான். கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதல் அவனுக்கு நல்மனசாட்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் அது பிரயோஜனமாயிருக்கும் என்பதில் அவனுக்குப் பலமான விசுவாசம் இருந்தது. அவர்களுடைய நிலைநிற்கையின் விளைவாக, அந்த நான்கு எபிரெயர்களும் அதிகமான பரிகாசத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருந்ததில் சந்தேகமில்லை.—தானியேல் 1:8-14; ஏசாயா 48:17, 18.
7 அந்த நான்கு எபிரெயர்களுக்கும் அவர்களுடைய உணவை விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக செய்வதற்கு விசுவாசமும் தைரியமும் தேவைப்பட்டது. ஆனால், அவ்விதமாக செய்ததற்காக அவர்கள் எவ்விதமாக பலனளிக்கப்பட்டார்கள்! ஏனென்றால், பத்து நாள் சென்ற போது, மற்ற எவரைக் காட்டிலும் அவர்களுடைய முகம் களையுள்ளதாயும் சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. யெகோவா அவர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் ஞானத்தையும் கொடுத்து வந்தபடியால், அவர்களுடைய மூன்று ஆண்டு கால பயிற்சியின் முடிவில் இவர்கள் ராஜசமுகத்தில் வந்து நின்ற போது, “ராஜா இவர்களை தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.”—தானியேல் 1:20.
8 இன்று யெகோவா தேவனின் ஊழியர்கள் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் இருக்கிறது. அந்த எபிரெய வாலிபர்கள் மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் உணவு சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகள், குறைந்தபட்சம் பத்து கற்பனைகளோடு அல்லது பலிகளோடு அல்லது வருடாந்தர பண்டிகைகளில் சம்பந்தப்பட்ட சட்டங்களோடு ஒப்பிட, அவ்வளவு முக்கியமற்றவை என்பதாக விவாதித்திருக்கக்கூடும். ஆனால் இல்லை, அந்த உண்மைத்தவறாத எபிரெயர்கள், கடவுளுடைய சட்டத்தின் எல்லா அம்சங்களையும் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வதில் அக்கறையுள்ளவர்களாயிருந்தனர். இது, லூக்கா 16:10ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசு கொடுத்த நியமத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.”—மத்தேயு 23:23 ஒப்பிடவும்.
9 அநேக சமயங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மாவட்ட மாநாட்டுக்குப் போக தங்கள் முதலாளிகளிடம் விடுப்புக் கேட்கும் சமயங்கள் வரும்போது இதே போன்ற விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பிக்கிறார்கள். அடிக்கடி இவர்களுடைய காரியத்தில் ஒரு விதிவிலக்காக, விசேஷ அனுமதி கொடுக்கப்படுகிறது. பயனியர் அணியைச் சேர்ந்துகொள்ள அல்லது துணைப்பயனியராக விரும்பும் சாட்சிகள், பகுதி நேர வேலைக்கான அவர்களுடைய விருப்பத்தை வற்புறுத்தி அடிக்கடி இந்தச் சிலாக்கியமளிக்கப்பட்டுமிருக்கிறார்கள்.
10 அந்த நான்கு எபிரெய வாலிபர்களின் தெளிவான பயிற்றுவிப்பிலிருந்து இன்று கடவுள் பயமுள்ள பெற்றோர் என்ன நேர்த்தியான பாடத்தை கற்றுக் கொள்ளமுடியும்! கிறிஸ்தவ பெற்றோர் உண்மையாகவே, தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய அக்கறைகளை இருதயத்தில் கொண்டிருக்கும் போது, மத்தேயு 6:33-க்கிசைவாக அவர்கள் இவைகளை தங்களுடைய சொந்த வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் தங்களுடைய பிள்ளைகள் பிறந்த நாட்களை அல்லது திருநாட்களைக் கொண்டாடுவதற்கு, அல்லது வேதாகம நியமங்களை மற்ற வழிகளில் மீறுவதற்கு ஒத்த வயதினரிடமிருந்தும் பள்ளி ஆசிரியர்களிடமிருந்தும் வரும் சோதனைகளையும் அழுத்தங்களையும் எதிர்த்து நிற்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவ்விதமாக இந்த கடவுள் பயமுள்ள பெற்றோர்கள் நீதிமொழிகள் 22:6 உண்மையாயிருப்பதை நிரூபிக்கிறார்கள்.
நேபுகாத்நேச்சாரின் சொப்பனங்களுக்குப் பயமில்லாமல் அர்த்தஞ்சொல்லுதல்
11 தானியேல் இரண்டாம் அதிகாரம், விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் மற்றொரு உதாரணத்தை நமக்குத் தருகிறது. ராஜா தான் கண்ட சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தனக்குச் சொல்லக் கூடாமற் போனதற்காக பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளும் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டபோது அதைப்பற்றிக் கேள்விப்பட்ட தானியேலும் அவனுடைய மூன்று தோழர்களும் கலக்கமடைந்தார்களா? நிச்சயமாக இல்லை! மாறாக, ராஜா தெரிந்துகொள்ள விரும்பிய தகவலை யெகோவா தேவன் தனக்குக் கொடுப்பார் என்ற உன்னதமான விசுவாசத்தோடு தானியேல், அரசனுக்கு முன்பாகப் போய் பதிலளிக்க தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணி, இதற்கு ஒப்புதலைப் பெற்றுக் கொண்டான். பின்னர் தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் இதற்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். தேவையான தகவலை அவர்களுக்கு தருவதன் மூலம் யெகோவா அவர்களுடைய விசுவாசத்துக்குப் பலனளித்தார். அதற்குப் பின்பு தானியேல் இருதயப்பூர்வமான ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி செலுத்தினான். (தானியேல் 2:23) நான்காம் அதிகாரத்தில் சொப்பனத்துக்கு அர்த்தஞ்சொல்லுகையில் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காட்டுமிருகங்களோடே ஒரு மிருகமாக ஏழு வருடங்களைச் செலவழிப்பான் என்பதை அவனுக்குத் தெரிவிப்பது தேவையாக இருந்தது. இதற்கு விசுவாசமும் தைரியமும் தேவைப்பட்டது. கடவுளுடைய ஜனங்கள் இன்று சாத்தானுடைய உலகுக்கு எதிராக அவருடைய பழிவாங்குதலைப் பற்றிய கடுமையான செய்தியை அறிவிக்கையில் அதேவிதமான விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்ட வேண்டும்.
‘அக்கினியின் உக்கிரத்தை அவித்தல்’
12 தானியேல் மூன்றாம் அதிகாரம், யெகோவா எவ்விதமாக மூன்று எபிரெய ஊழியர்களின் வியப்பூட்டும் விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளித்தார் என்பதைக் காண்பிக்கும் பைபிள் பதிவின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தூரா சமவெளியில் பாபிலோனின் உயர் பதவியாளர்கள் அனைவரும் கூடிவந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் சுமார் 90 அடி உயரமும் 9 அடி அகலமுமுள்ள ஒரு பொற்சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய உணர்ச்சிகளுக்குக் கவர்ச்சியூட்டுவதற்காக ராஜா வாத்திய குழு ஒன்றை தயாராக வைத்திருக்கிறார். அவர்கள் கீதவாக்கியங்களின் சத்தத்தைக் கேட்கும் போது ‘தாழ விழுந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ள வேண்டும். எவனாகிலும் தாழ விழுந்து அதை பணிந்துக்கொள்ளாமற் போனால் அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான்.’—தானியேல் 3:5, 6.
13 அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது அதிகமான விசுவாசத்தையும் தைரியத்தையும் தேவைப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ‘கொஞ்சத்திலே உண்மையுள்ளவர்’களாயிருந்ததன் காரணமாக ‘அநேகத்திலும் உண்மையுள்ளவர்’களாயிருக்க இது அவர்களைத் தயார் செய்தது. தங்களுடைய நிலைநிற்கை மற்ற யூதர்களையும் ஆபத்துக்குள்ளாக்கக்கூடும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் தாழ விழுந்து சிலையை பணிந்துகொள்ள மாட்டார்கள். வெளிப்படையாக அவர்கள் பணிந்துகொள்ள மறுத்ததை பொறாமையுள்ளம் படைத்த அவர்களுடைய கூட்டாளிகள் கவனிக்க, இதைக் குறித்து உடனடியாக ராஜாவிடம் புகார் செய்யப்பட்டது.
14 நேபுகாத்நேச்சார் “உக்கிர கோபத்தில்” அந்த மூன்று எபிரெயர்களைத் தன்னிடம் அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். “மெய்தானா?” என்ற அவனுடைய கேள்வி, பொற்சிலையை தாழவிழுந்து பணிந்துகொள்ள அவர்கள் மறுப்பது அவனால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததை காண்பிக்கிறது. அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பைக் கொடுக்க அவன் மனமுள்ளவனாக இருந்தான். ஆனால் அப்பொழுதும் அவர்கள் மறுப்பார்களேயானால், அவர்கள் எரிகிற அக்கினிச்சூளையிலே தூக்கி எறியப்படுவார்கள். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார்?” என்றான் அகந்தையுள்ள பாபிலோனிய பேரரசன். மெய்யான தைரியத்தோடும் யெகோவாவில் விசுவாசத்தோடும் மூன்று எபிரெயர்களும் ராஜாவிடம் மரியாதையுடன் சொன்னதாவது: “இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும் . . . நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற் போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”—தானியேல் 3:13–18.
15 நேபுகாத்நேச்சார் முன்னால் கோபமாயிருந்தானென்றால் இப்பொழுது கடுங்கோபமாயிருந்தான். ஏனென்றால் மூன்று எபிரெயர்களுக்கு விரோதமாய் “அவனுடைய முகம் வேறுபட்டது” என்பதாக நாம் வாசிக்கிறோம். (தானியேல் 3:19) சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி அவன் உத்தரவிட்டது அவனுடைய கோபத்தைக் காண்பித்தது. பின்பு அவனுடைய இராணுவத்தில் பலசாலிகளாயிருந்த புருஷர்கள் அவர்களைக் கட்டி எரிகிற அக்கினிச் சூளையிலே போட்டார்கள். சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போன புருஷரை அது கொன்று போட்டது.
16 வெறுமென மூவர் மட்டுமல்ல, ஆனால் நாலுபேர் அக்கினியின் நடுவிலே ஒரு சேதமுமில்லாமல் உலாவுகிறதைக் கண்டபோது ராஜா எத்தனை பிரமித்துப் போனான்! ராஜா அந்த மூன்று எபிரெயர்களை வெளியே வரும்படியாக அழைத்த போது அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அக்கினியின் மணம் அவர்களுடைய சால்வைகளில் வீசாமலும் இருந்ததைக் கண்டான். அவர்களுடைய விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் எத்தனைப் பெரிதாக யெகோவா பலனளித்தார்! மேகம் போன்ற திரளான சாட்சிகளை வரிசைப்படுத்தி “அக்கினியின் உக்கிரத்தை அவித்தவர்களைப்”பற்றி சொன்ன போது அப்போஸ்தலனாகிய பவுலின் மனதில் இவர்களுடைய முன்மாதிரியே இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (எபிரெயர் 11:34) அப்போதிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும் இவர்கள் என்னே ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்!
17 இன்று, யெகோவாவின் ஊழியர்கள், சொல்லர்த்தமான அக்கினிச்சூளையின் ஆபத்தை எதிர்பட்டுக்கொண்டில்லை. ஆனால் தேசீய சின்னங்களுக்கு வணக்கத்துக்குரிய மரியாதை செலுத்துவது வரும் போது, மிக அநேகருடைய உத்தமத்தன்மை மிகக் கடுமையாக சோதிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சி அட்டைகள் வாங்குவது அல்லது இராணுவப் படைகளில் சேருவது போன்றவற்றில் மற்றவர்களுடைய உத்தமத்தன்மை சோதிக்கப்பட்டிருக்கிறது. யெகோவா இப்படிப்பட்ட ஆட்கள் அனைவரையும் காத்து அவர்களுடைய உத்தமத்தன்மையின் சவாலை வெற்றிகரமாக எதிர்பட உதவியிருப்பதால் இவ்விதமாக பிசாசை பொய்யனாகவும் யெகோவாவை மெய்க் கடவுளாகவும் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் மற்றொரு உதாரணம்
18 விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் இன்னும் ஒரு உதாரணம் தானியேல் புத்தகத்தின் 5-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் பரிசுத்த குலைச்சல் செய்து ஆடம்பரமான ஒரு விருந்தை அவனுடைய பிரபுக்களோடும் தன் மனைவிகளோடும் தன் வைப்பாட்டிகளோடும் அனுபவித்துக் கொண்டிருந்தான். திடீரென்று விநோதமான எழுத்துக்கள் சுவரின் மேல் காணப்பட்டன. இது ராஜாவை அவ்வளவாக கலங்கச் செய்ததன் காரணமாக அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்து, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. மறுபடியுமாக மெய்க் கடவுளின் ஊழியனாகிய தானியேல் அர்த்தஞ்சொல்வதற்கு அழைக்கப்பட்டான். ஏனென்றால் பாபிலோனின் ஞானிகள் அனைவரும் குழப்பமடைந்துவிட்டார்கள்.
19 அந்த ஆடம்பரமான எதிர்ப்பான சூழ்நிலைமையில் தனிமையாக நின்று கொண்டிருந்தது தானியேலை மிதமிஞ்சி பயமடையச் செய்யவோ, அவனுடைய செய்தியின் வலிமையை குறைக்கவோ அல்லது விவாதத்தை மறந்துவிடவோ செய்யவில்லை. சமநிலையோடும் அமைதியாகவும் தெளிவாக கண்ணியமான வார்த்தைகளில் கடவுளைப் பற்றிய ஒரு சாட்சியை அவன் கொடுத்தான். வெறுமென கையெழுத்துக்கு அர்த்தஞ் சொல்வதில் திருப்தியடையாமல் தானியேல், யெகோவா தேவன் அவனுடைய பாட்டனை தாழ்த்தியதை ராஜாவுக்கு நினைப்பூட்டினான். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் என்பதை அவன் உணருமட்டும் வெளியின் மிருகமாக அவனை வாழும்படி செய்வதன் மூலம் அதைச் செய்ததை நினைப்பூட்டினான். “இதையெல்லாம் அறிந்திருந்தும்”, ‘நீர் உம்மைத் தாழ்த்தாமல் யெகோவாவினுடைய ஆலயத்தின் பாத்திரங்களை அசுத்தமாக்கி, காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களை புகழ்ந்தீர். ஆனால் உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமான தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை. ஆகவே, இந்த ஆணை அவரிடமிருந்து அனுப்பப்படுகிறது. நீர் தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டிருக்கிறீர். உம்முடைய ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது.’ ஆம், மறுபடியுமாக விசுவாசத்திலும் தைரியத்திலும் இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு தானியேல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான்.—தானியேல் 5:22-28.
20 தானியேல் 6-ம் அதிகாரத்துக்கு வருகையில், விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் இன்னும் ஒரு சிறந்த முன்மாதிரியை நாம் காண்கிறோம். தரியு ராஜா இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருந்தான். தானியேல் ராஜ்யத்தின் மூன்று பிரதானிகளில் ஒருவனாயிருந்தான். தானியேல் மீது பொறாமைக் கொண்ட மற்றவர்கள் முப்பது நாள் வரைக்கும் ராஜாவைத் தவிர வேறு எவரிடமும் யாரும் விண்ணப்பம் பண்ணக்கூடாது என்ற கட்டளையை பேரரசன் பிறப்பிக்கும்படி செய்தார்கள். தானியேலைக் குற்றப்படுத்த இதுவே ஒரே வழி என்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவன் கட்டளையை அசட்டை செய்து தன் மேலறையில் எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க அங்கே தான் முன் செய்து வந்தபடியே ஜெபம் செய்தான். ராஜாவின் கட்டளையை மீறிய குற்றமுடையவனாயிருந்தபடியால் கட்டளைப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தபடி, அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டான். மறுபடியுமாக கடவுள் தானியேலின் விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளித்தார். எவ்விதமாக? எபிரெயர் 11:33 சொல்கிறவிதமாக, யெகோவா “சிங்கங்களின் வாய்களை அடைத்தார்.”
21 தானியேல் அதிகாரங்கள் 1-6 விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்ன சம்பவங்களை எல்லாம் விவரிக்கின்றன! விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தவர்களுக்கு யெகோவா தேவன் எவ்வளவு பெரிதாக பலனளித்தார்! ஒரு பக்கத்தில், அவர்கள் உயர்த்தப்படுவதன் மூலம் இது நடந்தது. மறுபக்கத்தில் அவர்கள் அற்புதமாக விடுவிக்கப்படுவதை அனுபவிப்பதன் மூலம் இது நடந்தது. உண்மையாக சோதனைகளை எதிர்படுகையில் இந்த உண்மையுள்ள சாட்சிகளின் அனுபவங்களிலிருந்து நான் ஆறுதலையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொள்ளலாம். ஏன், இதற்காகவே உண்மையில் இந்தக் காரியங்கள் பதிவு செய்யப்பட்டன! ஆகவே இப்படிப்பட்ட விசுவாசத்தையும் தைரியத்தையும் சிறந்த வகையில் பின்பற்ற நாம் தீர்மானமாயிருப்போமாக.—ரோமர் 15:4; எபிரெயர் 6:12. (w88 2⁄1)
விமர்சனக் கேள்விகள்
◻ நான்கு எபிரெய வாலிபர்களின் பெயர்கள், அவர்களுடைய வளர்ப்பைக் குறித்து தெரிவிப்பது என்ன?
◻ உணவு சம்பந்தமாக எபிரெயர்கள் எதிர்பட்ட சோதனையில் நமக்கு என்ன பாடமிருக்கிறது?
◻ மூன்று எபிரெயர்களுடையதைப் போல, இன்று யெகோவாவின் ஊழியர்களுடைய உத்தமத்தன்மை எவ்விதமாக பரீட்சிக்கப்பட்டிருக்கிறது?
◻ பெல்ஷாத்சாரிடம் சாட்சிக் கொடுக்கையில் தானியேல் எவ்விதமாக விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தான்?
[கேள்விகள்]
1. முந்தையக் கட்டுரையில் உயர்த்திக் காண்பிக்கப்பட்ட பாடம் என்ன? சம்பவங்களை மறு ஆய்வு செய்வது ஏன் பிரயோஜனமாயிருக்கும்?
2, 3. நேபுகாத்நேச்சாரால் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் மத்தியில் யார் இருந்தார்கள்? அவர்களுடைய பெயர்களின் பொருள்களிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
4. சுத்தம் மற்றும் அசுத்தமான மிருகங்களின் சம்பந்தமாக தம்முடைய சட்டங்களைத் தம்முடைய ஜனங்கள் முக்கியமானதாக கருதவேண்டும் என்று யெகோவா விரும்பியதை எது சுட்டிக் காண்பிக்கிறது?
5. நான்கு எபிரெய வாலிபர்களின் நேர்த்தியான வளர்ப்பு எவ்விதமாக சோதனைக்குட்படுத்தப்பட்டது?
6. சோதனைக்கு நான்கு எபிரெயர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்?
7. எபிரெய வாலிபர்கள் அவர்களுடைய தைரியமான நிலைநிற்கைக்காக எவ்விதமாக பலனளிக்கப்பட்டார்கள்?
8. இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு இதில் என்ன பாடம் இருக்கிறது?
9. சில சாட்சிகள் இன்று எவ்விதமாக அதே போன்ற தைரியத்தைக் காண்பித்திருக்கிறார்கள்?
10. இவை அனைத்திலும் சாட்சிகளாயிருக்கும் பெற்றோர்களுக்கு என்ன பாடமிருக்கிறது?
11. தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் வைத்த முன்மாதிரியை நாம் எவ்விதமாக பின்பற்றக்கூடும்?
12, 13. தானியேல் 3-ம் அதிகாரம், தானியேலின் மூன்று நண்பர்கள் எதிர்ப்பட்ட என்ன சோதனையைப் பற்றி விவரிக்கிறது?
14. அவர்கள் பணிந்துகொள்ள மறுத்தபோது நேபுகாத்நேச்சார் எவ்விதமாக பிரதிபலித்தான்? அவனுடைய முடிவான தீர்மானத்துக்கு அவர்கள் எவ்விதமாக பதிலளித்தார்கள்?
15. நேபுகாத்நேச்சார் என்ன நடவடிக்கை எடுத்தான்?
16. மூன்று எபிரெயர்களின் விசுவாசம் எவ்விதமாக பலனளிக்கப்பட்டது?
17. அதைப் போன்ற என்ன சிறந்த முன்மாதிரிகள் இன்று நமக்கு இருக்கின்றன?
18. தானியேல் 5-ம் அதிகாரம் வசனங்கள் 3, 4-ல் பதிவு செய்யப்பட்டபடி பெல்ஷாத்சார் யூதர்களின் கடவுளாகிய யெகோவாவை எவ்விதமாக அவமதித்தான்?
19. தானியேல் சுவரின் மீதிருந்த கையெழுத்துக்கு அர்த்தஞ்சொல்லுகையில் எது குறிப்பிடத்தக்கதாக இருந்தது?
20. தரியுவின் ஆட்சிக் காலத்தின் போது தானியேல் பெரும் விசுவாசத்தின் வேறு என்ன முன்மாதிரியை வைத்தான்?
21. விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் சிறந்த முன்மாதிரிகள் தானியேல் புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டுப் பார்க்கையில் நம்முடைய உறுதியான தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 22-ன் படம்]
தானியேலும் அவனுடைய மூன்று தோழர்களும் ‘செய்ய முடியாது’ என்று சொல்ல கற்றுக்கொண்டார்கள்