தெய்வீக பாதுகாப்பின் சான்றுமூலம்
தேவனுடைய ஏவப்பட்ட வார்த்தையானது நமக்குத் துல்லியமாகக் கடத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய அதிசயமான பாதுகாப்பிற்காக நாம் முதன்மையாக பைபிளின் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எபிரெய வேத வாக்கியங்கள் முழுவதுமாக அல்லது அதன் பகுதியாக 6,000 கையெழுத்துப் பிரதிகளும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் 5,000 கையெழுத்துப் பிரதிகளும் ஒருவேளை இருக்கின்றன.
“யெகோவாவுடைய வசனம் என்றென்றைக்கும் நிலைநிற்கும்.” (1 பேதுரு 1:25, NW) ஆனால் நவீன கால ஆராய்ச்சி அவருடைய பரிசுத்த வார்த்தையின் பாதுகாப்பைக் குறித்து எதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது?
அந்த வசனம் எவ்வளவு நம்பகமானது?
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் வசனம் எவ்வளவு நம்பத்தகுந்தவை? நிச்சயமாகவே மிகவும் நம்பத்தகுந்தவை, பழங்காலத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ள மற்ற எழுத்துக்களைக் கருத்தில் கொள்கையில், ஒப்பிட முடியாத அளவுக்கு இவை நம்பத்தகுந்தவை. இந்த உண்மை கெர்ராட் க்ரால் என்பவரால் ஆஃப்டென் ஸ்ப்யூரென் ஜெசு (இயேசுவின் அடிச்சுவடுகளில்) என்ற புத்தகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. பொ.ச. பத்தாம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதன் பிறகு தேதியிட்ட கிரேக்கத் தத்துவ மேதை அரிஸ்டாட்டிலின் (பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு) எழுத்துக்களைக் கொண்ட ஆறு பாப்பிரஸ் காகிதங்கள் மட்டுமே காக்கப்பட்டுள்ளன என்பதை உதாரணமாக ஆசிரியர் காட்டினார். பிளேட்டோவின் (பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு) எழுத்துக்கள் சற்று பரவாயில்லை. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பு தேதியிட்ட எழுத்துக்களைக் கொண்ட பத்து கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. (பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு) ஏரோதுத்தஸ் என்பவருடைய விஷயத்தில், பொ.ச. முதல் நூற்றாண்டும் அதற்குப் பிறகும் தேதியிட்ட 20 பப்பைரஸ் காகிதத் துண்டுகள் இருக்கின்றன. அவருடைய எழுத்துக்களின் முழுமையான கையெழுத்துப் பிரதிகள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதற்கும் முந்திய ஜோசிஃபஸின் எழுத்துக்கள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இதற்கு எதிர்மாறாக, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் எழுத்துக்கள் (பொ.ச. முதல் நூற்றாண்டில் முடிக்கப்பட்டது) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையான பிரதிகளாலும் உண்மையென சான்றளிக்கப்படுகிறது. க்ராலின்படி, 2-ம் நூற்றாண்டு முதல் 7-ம் நூற்றாண்டு வரையுள்ள 81 பப்பைரஸ் காகிதங்களும், 4-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரையுள்ள 266 பெரிய தனி எழுத்துக்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகளும், 9-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரையுள்ள 2,754 சிறிய கூட்டெழுத்துக்களும் மேலும் 2,135 வேத வாசிப்புப் பகுதிகளும் உள்ளன. இவை அனைத்தும் கிறிஸ்துவ கிரேக்க வேதாகம எழுத்துக்களை உறுதிப்படுத்த உதவுகின்றன. ஆகவே, அது நிச்சயமாகவே நன்றாகச் சான்றளிக்கப்பட்டதாக இருக்கிறது.
யோவான் எழுதிய சுவிசேஷத்தின் ஒரு முக்கியமான துண்டு
ஒரு மதிப்புள்ள பைபிள் கையெழுத்துப் பிரதியின் பாகம் ஒரு குப்பைக் குவியலில் இருப்பதை எவர் எதிர்பார்ப்பார்? ஆகிலும், பொக்கிஷமாகிய யோவானின் சுவிசேஷத்தின் 18-ம் அதிகாரத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்ட இடம் அதுதான். இப்போது அது ஜான் ரைலண்ட்ஸ் பப்பைரஸ் 457 (p52) என்று அறியப்படுகிறது, அது இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் பாதுகாக்கப்படுகிறது. அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? அது ஏன் அவ்வளவு முக்கியமானது?
நூற்றாண்டின் திருப்புக் கட்டத்தில், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தில் எல்ஃபையம் மாவட்டத்தில் உள்ள ஆக்ஸிர்ஹின்கஸ் என்ற நகருக்கு வெளியே மொத்தமான அநேக பப்பைரஸ் துண்டுகளைத் தோண்டி எடுத்தனர், இவற்றில் கடிதங்கள், ரசீதுகள், மனுக்கள் மற்றும் மக்கட்தொகைக் கணக்கு ஆதாரச் சான்றுகள் உட்பட மற்ற எழுத்துக்களும் இருந்தன. அவை பெரும்பாலும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. அவை எல்லாம் உலர்ந்த மணலில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பப்பைரஸ் காகிதத்தின் ஒரு தொகுப்பு 1920-ம் வருடத்தில் ஜான் ரைலாண்ட்ஸ் மான்செஸ்டர் நூல் நிலையத்தால் பெறப்பட்டது. பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, சில துண்டுகளை வகைப்படுத்துகையில், மாணாக்கர் C.H. ராபட்ஸ் தனக்கு ஏற்கெனவே அறிந்திருந்ததாகத் தோன்றிய சில எழுத்துக்களைக் கண்டார். அதில் யோவான் 18-ம் அதிகாரத்தில் உள்ள 31 முதல் 33 வசனங்களின் பகுதி அத்துண்டின் ஒரு பக்கத்திலும், 37 மற்றும் 38 வசனங்களின் பகுதி மற்றொரு (இடப்பக்கம்) பக்கத்திலும் இருந்ததை அவர் உணர்ந்தபோது அவர் எப்படிப் பரவசம் அடைந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இதுவரை கண்டுபிடித்துள்ள கிறிஸ்தவ கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலேயே மிகப் பழமையான பகுதியாக இந்தப் பப்பைரஸ் துண்டு நிரூபித்துள்ளது. அன்ஷல்ஸ் என்றழைக்கப்படும் பெரிய தனி எழுத்துக்களால் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. அது நம்முடைய பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் முதற்பாதியில் முதன்முதல் எழுதப்பட்டதாய் இருந்தது.
இத்துண்டு 3.5-க்கு 2.5 அங்குல அளவே உள்ளது. இந்தப் பப்பைரஸ் துண்டின் காலத்தை அவ்வளவு துல்லியமாக மதிப்பிடுவது எப்படிக் கூடிய காரியமாய் இருக்கிறது? முக்கியமாக பாலியோகிராஃபி என்று அறியப்படுகின்ற, அதன் எழுத்து நடையை பரீட்சிப்பதனால் அது கூடியகாரியமாய் இருக்கிறது. எல்லாக் கையெழுத்தும் வருடங்களினூடே படிப்படியாக மாறுகிறது. இந்த மாறுதல்கள்தான் முன்னும் பின்னும் சில வருடங்கள் வித்தியாசத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி எவ்வளவு பழமையானது என்பதைக் குறிக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் துண்டு, முழுமையான கையெழுத்துப் பிரதியின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். அப்படியானால், அது யோவானாலேயே எழுதப்பட்ட மூல சுவிசேஷத்தின் காலத்திற்கு வெகு அண்மையில் நகல் எடுக்கப்பட்ட முழுமையான கையெழுத்துப் பிரதியாகும். அதுபோலவே, இடைவெளியும் 30 அல்லது 40 வருடங்கள் மட்டுமே ஆகும். யோவானின் சுவிசேஷம் பின்னால் வாழ்ந்த வேதபாரகரால் குறிப்பிடத்தகுந்த விதத்தில் மாற்றப்படவில்லை என்றும் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஏனெனில் அத்துண்டின் வாக்கியம் அதைவிட வெகு பிந்தி கண்டெடுக்கப்பட்ட பிற்காலக் கையெழுத்துப் பிரதியுடன் துல்லியமாக ஒத்திருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பிற்கு முன்னதாக, யோவானின் சுவிசேஷம் இயேசுவின் அப்போஸ்தலனுடைய உண்மை எழுத்து அல்ல என்றும், சில காலத்திற்குப் பிறகு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருந்தது என்றும் நுட்பப்பிழை காண்போர் விவாதித்திருந்தனர். அதற்கு முரணாக, இந்தத் துண்டிலிருந்து, யோவானின் சுவிசேஷம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் முதற்பாதியில் எகிப்தில், சுருள் வடிவத்தில் அல்ல, ஆனால் கோடெக்ஸ் என்ற புத்தக வடிவில் இருந்தது இப்போது தெளிவாகியுள்ளது. பார்வையில் முக்கியமாகத் தோன்றாத அத்தகைய ஒரு பப்பைரஸ் துண்டு, நுட்பப்பிழை காண்போரை அத்தனை சக்திவாய்ந்த வகையில் அமைதியுறச் செய்யக்கூடியதை அறிவது எவ்வளவு பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது! (w88 11/15)
[பக்கம் 31-ன் பெட்டி]
பப்பைரஸ்
பப்பைரஸ் என்பது நைல் நதி போன்ற மெதுவாக ஓடும் நதிகளின் கரைகளிலும், ஆழமற்ற தேங்கி நிற்கும் நீர்நிலைகளிலும் அல்லது சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு தாவரமாகும். (யோபு 8:11) பப்பைரஸ் காகிதங்கள் ஆபிரகாம் வாழ்ந்து வந்த பழங்காலத்திலிருந்தே எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளாக இருந்திருக்கலாம். பிறகு, அதைத் தயாரிப்பது பூர்வ எகிப்தியரின் முக்கியத் தொழிலாகவே ஆகிவிட்டது. அதைத் தயாரிப்பதில் அவர்கள் ஓர் எளிய முறையையே பின்பற்றினர். தாவரத்தின் மைய இழைமத்தை நீளமாக எடுத்து, பிறகு மெல்லிய சிறு நூல்களாகச் சீவி, அவை அருகருகே கிடத்தப்படுகின்றன. பிசின் தடவப்பட்ட சிறு துண்டுகள் அதற்குக் குறுக்காக வைக்கப்பட்டு ஒட்டப்படுகிறது. இது அழுத்தப்பட்டு, ஒரு தகடாக உருட்டப்பட்டு, சூரிய வெப்பத்தில் உலர்த்தப்படுகிறது. அதற்குப் பிறகு மாக்கல், ஓடுகள் அல்லது தந்தம் இவற்றால் மெருகூட்டப்படுகிறது. தகடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, ஒரு சுருள் வடிவில் தயாரிக்கப்படக்கூடும். அச்சுருளின் சராசரி நீளம் 14 அடிக்கும் 20 அடிக்கும் இடையேயுள்ளது. ஆயினும் 133 அடி நீளமுள்ள ஒரு தகடுகூட பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்று முறையாக, பக்கங்கள் ஒரு புத்தக வடிவில் கோடெக்ஸ்-ஐப் போன்று மடித்து வைக்கப்படலாம். அதுதான் ஆரம்பக் கிறிஸ்தவர்களிடையே அவ்வளவு பிரபலமாய் இருந்த கையெழுத்துப் பிரதியின் வடிவமாகும்.
[பக்கம் 31-ன் பெட்டி]
தோல் காகிதமும் பதனிட்ட மெல்லிய தோல் காகிதமும்
முதன் முதலில் முழு பைபிளையும் அடக்கிய ஐந்தாம் நூற்றாண்டு அலெக்ஸாந்திரின் கோடெக்ஸ் என்பது மெல்லிய தோலின்மேல் எழுதப்பட்டதாகும். இந்தப் பொருள் எதுவாக இருக்கிறது, இது தோல் காகிதத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?
ஆரம்ப காலத்திலிருந்து, செம்மறி ஆட்டுத் தோல், வெள்ளாட்டுத் தோல் அல்லது கன்றுக்குட்டித் தோல் இவற்றிலிருந்து தோல் காகிதம் செய்யப்பட்டது. கழுவப்பட்ட தோல்களிலிருந்து மயிரைச் சுரண்டிய பிறகு, உலர்த்தும் பொருட்டு சட்டங்களில் நீட்டப்படுவதன் மூலம் அது தயாரிக்கப்பட்டது. (2 தீமோத்தேயு 4:13-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) நம்முடைய பொது சகாப்தம் மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில், பொருளின் தரங்களில் ஒரு வேறுபாடு இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரடான பொருள், தோல் காகிதம் எனவும், மென்மையான பொருள் மெல்லிய தோல் காகிதம் எனவும் அறியப்பட்டன. மெல்லியதோல் காகிதத்திற்காக, பிறவாத கன்றுக்குட்டிகள் அல்லது செம்மறி ஆட்டுக்குட்டிகளின் மிருதுவான தோல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அச்சுமுறைக்குப் பொருத்தமான காகிதமே மலிவானதாகவும் சற்று நன்றாகவும் இருக்கையில், அச்சுமுறை கண்டுபிடிக்கப்படும் வரையிலும், முக்கியமான புத்தகங்களுக்காக மெல்லிய, மிருதுவான, மற்றும் கிட்டத்தட்ட வெள்ளைநிற எழுது பொருளை அவர்கள் தயாரித்தனர்.