கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
“அவிசுவாசியோ சாமானியமானவனோ உள்ளே வரும்போது . . . அவன் இருதய அந்தரங்கங்களும் வெளியாகும்; அவன் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்துகொள்”வான்.—1 கொரிந்தியர் 14:24, 25, தி.மொ.
அப்போஸ்தலன் பவுல், தன்னுடைய இரண்டாவது மிஷனெரி பயணத்தின்போது, கொரிந்து பட்டணத்தில் ஒன்றரை ஆண்டுகள் தங்கினான். அங்கே அவன்: “திடசாட்சி பகரும்படி திருவசனம் அவன் மனதை நெருக்கினது.” இதன் பலன் என்ன? “கொரிந்தியரில் அநேகரும் கேட்டு நம்பி ஞானஸ்நானம் பெற்று [முழுக்காட்டப்பட்டு] வந்தார்கள்.” (அப்போஸ்தலர் 18:5-11, தி.மொ.) அவர்கள் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயும்” ஆனார்கள்.—1 கொரிந்தியர் 1:2.
2 பின்னால் அப்பொல்லோ கொரிந்துவுக்கு வந்தான். முன்னால் பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாளும் அவனுக்கு முழுக்காட்டுதலின் காரியம் உட்பட “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் [திருத்தமாய், NW]” விளங்கிக்கொள்ள உதவிசெய்திருந்தார்கள். இவ்வாறு அவன் கடவுளுடைய நற்பிரியத்தை, அல்லது அங்கீகாரத்தைக் கொண்ட கிறிஸ்தவனானான். (அப்போஸ்தலர் 18:24—19:7) அப்பொல்லோ தன்முறையாக, ஒருகாலத்தில் ‘ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தின’ கொரிந்தியருக்கு உதவிசெய்தான். (1 கொரிந்தியர் 12:2) இந்த ஆட்களுக்குப் பெரும்பாலும் அவர்களுடைய வீடுகளில் பைபிள் போதனை கொடுத்திருக்கலாம்; மேலும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதன்மூலமும் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.—அப்போஸ்தலர் 20:20; 1 கொரிந்தியர் 14:22-24.
3 இத்தகைய போதகத்தின் பலன் என்னவெனில், முந்திய ‘அவிசுவாசிகளும் சாமானியமான ஆட்களும்’ உண்மையான வணக்கத்துக்கு இழுக்கப்படலானார்கள். ஆண்களும் பெண்களும் முழுக்காட்டுதலையும் கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெறுவதை நோக்கி படிப்படியாய் முன்னேறுவதைக் காண்பது எவ்வளவு மனத்திருப்தியைக் கொடுத்திருக்கவேண்டும்! இப்போதும் அவ்வாறே மனத்திருப்தியைக் கொடுக்கிறது.
‘அவிசுவாசிகளுக்கும் சாமானியமான ஆட்களுக்கும்’ உதவிசெய்தல்
4 இன்று யெகோவாவின் சாட்சிகளும் “சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கி, அவர்களை முழுக்காட்டுங்கள்,” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (மத்தேயு 28:19, 20, NW) ஏற்கும் பாங்குள்ள இருதயங்களில் சத்தியத்தின் விதைகளை நட்ட பின்பு, அவர்கள் திரும்பிச் சென்று அவற்றிற்கு நீர்ப்பாய்ச்சுகிறார்கள். (1 கொரிந்தியர் 3:5-9; மத்தேயு 13:19, 23) ஆட்கள் தங்கள் கேள்விகளுக்குப் பதிலைப் பெற்று பைபிள் சத்தியங்களை கற்றுக்கொள்ளும்படி சாட்சிகள் வாராந்தர இலவச பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு முன்வருகின்றனர். இத்தகைய ஆட்கள், கொரிந்துவில் “அவிசுவாசிகள்” செய்ததைப்போல், அவ்விடத்து யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு வரும்படியும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பைபிள் படித்துக்கொண்டும் கூட்டங்களுக்கு வந்துகொண்டுமிருக்கும் ஆட்களை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கருதவேண்டும்?
5 அவர்கள் கடவுளிடம் நெருங்கிவருவதைக் காண்பதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எனினும், அவர்கள் இன்னும் முழுக்காட்டப்பட்ட விசுவாசிகள் அல்லர் என்பதை நாம் மனதில் வைக்கிறோம். முன்வந்தக் கட்டுரையில் ஆதாரங்கொண்ட இரண்டு பாடங்களையும் மனதில் வையுங்கள். (1) கடவுளுடைய ஜனங்களைச் சுற்றியிருந்து சில சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோதிலும், யூதமதம் மாறிய விருத்தசேதனஞ் செய்யப்பட்டவர்களாயிராத, வணக்கத்தில் சகோதரராயிராத அந்நிய குடியிருப்பாளர்களிடம் இஸ்ரவேலர் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். (2) கொரிந்திய கிறிஸ்தவர்கள், ‘அவிசுவாசிகளும் சாமானியமான ஆட்களுமான’வர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்கையில், பவுல் பின்வருமாறு சொன்ன வார்த்தைகளினிமித்தம், எச்சரிக்கையுடன் இருந்தனர்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?”—2 கொரிந்தியர் 6:14.
6 ஆகவே ‘அவிசுவாசிகளையும் சாமானியமான ஆட்களையும்’ நாம் வரவேற்கையில், அவர்கள் இன்னும் கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்தி செய்தில்லை என்ற உணர்வுடனிருக்கிறோம். 1 கொரிந்தியர் 14:24, 25-ல் பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி இத்தகையோர் தாங்கள் கற்கும் காரியங்களால் ‘நுட்பமாய் ஆராயப்படவும்’ மேலும் ‘கண்டிக்கப்படவும்.’ தேவைப்படலாம். இத்தகைய கண்டனம் நீதிவிசாரணை வகையானதல்ல; அவர்கள் இன்னும் சபையின் முழுக்காட்டப்பட்ட உறுப்பினரல்லாததனால் அவர்கள் சபையின் நீதிவிசாரணைக் குழுவுக்குமுன் அழைக்கப்படுகிறதில்லை. அதற்கு மாறாக, தாங்கள் கற்பவற்றின் பலனாக, எந்தத் தன்னல மற்றும் ஒழுக்கக்கேட்டு வழிகளையும் கடவுள் கண்டனஞ் செய்கிறார் என்று இந்தப் புதியவர்கள் உறுதியுடன் நம்புவோராகின்றனர்.
7 முழுக்காட்டப்படாதப் பலர், காலப்போக்கில், அக்கறைகாட்டும் கற்றுக்கொள்வோராக வெறுமென கூட்டங்களுக்கு வருவதற்கும் மேலாகச் செல்ல விரும்பலாம். இதற்குக் காரணத்தை இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் காட்டுகின்றன: “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் [பரிபூரணமாய்க் கற்பிக்கப்பட்ட, NW] எவனும் தன் குருவைப்போலிருப்பான்.” (லூக்கா 6:40) தனக்குக் கற்பிப்பவர் வெளி ஊழியத்தை இன்றியமையாததாகக் கருதுவதையும் அதிலிருந்து மகிழ்ச்சியடைவதையும் பைபிள் மாணாக்கன் காண முடிகிறது. (மத்தேயு 24:14) ஆகவே, பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்டும் கூட்டங்களுக்கு வந்துகொண்டுமிருப்பவரின் விசுவாசம் வளருகையில் பின்வரும் வார்த்தைகளைத் தன் இருதயத்தில் ஏற்கலாம்: “நற்செய்தியை அறிவித்துச் சமாதானத்தைக்கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து ரட்சிப்பைத் தெரியப்படுத்தி . . . சொல்லுகிறவனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” (ஏசாயா 52:7; ரோமர் 10:13-15) முழுக்காட்டப்படாதபோதிலும், தான் யெகோவாவின் சாட்சிகளின் சபையுடன் தன்னை இணைத்துக்கொண்டு ராஜ்ய பிரஸ்தாபியாவதற்கு அவர் ஒருவேளை விரும்பலாம்.
8 மாணாக்கர் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள விரும்புவதை பைபிள் படிப்பு நடத்துபவர் காண்கையில், நடத்தும் கண்காணியுடன் இந்தக் காரியத்தை அவர் கலந்துபேசலாம், அவர் அந்தப் பைபிள் மாணாக்கருடனும் அவருக்குக் கற்பிப்பவருடனும் சந்தித்துப் பேச இரண்டு மூப்பர்களை ஏற்பாடு செய்வார். புதிய ஒருவர் கடவுளைச் சேவிக்க விரும்புகையில் மூப்பர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். முழுக்காட்டப்பட்டு சத்தியத்தில் மேலும் முன்னேறியிருப்போரிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது, அத்தகையோர் கொண்டிருக்கும் அளவான அறிவை இவர் கொண்டிருக்கும்படி அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். எனினும், புதியவர் சபையுடன் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்குமுன் பைபிள் போதகங்களைப் பற்றி ஓரளவு அறிவைக் கொண்டிருக்கவும், அவர் தன் வாழ்க்கையைக் கடவுளுடைய நியமங்களுக்கு ஒத்திருக்கச் செய்திருப்பதையும் காண மூப்பர்கள் விரும்புவார்கள். ஆகவே நல்லக் காரணங்களினிமித்தமே இரண்டு மூப்பர்கள் எதிர்கால பிரஸ்தாபியுடனும் அந்தப் படிப்பை நடத்தும் சாட்சியுடனும் சந்தித்துப் பேசுகிறார்கள்.a
9 மாணாக்கர் வெளி ஊழியத்துக்குத் தகுதிபெற்று அதில் பங்குகொள்கையில், அவர் வெளி ஊழிய அறிக்கையைப் போடலாமெனவும், சபையின் பிரஸ்தாபி பதிவு அட்டை அவருடைய பெயரில் தயாரித்து வைக்கப்படுமெனவும் அந்த இரண்டு மூப்பர்கள் மாணாக்கருக்குத் தெரிவிப்பார்கள். இது யெகோவாவின் சாட்சிகளின் தேவாட்சிக்கடுத்த அமைப்புடன் அவருடைய இணைப்புக்கும் அதற்கு அவர் கீழ்ப்படிவதற்கும் அத்தாட்சியாயிருக்கும். (வெளி ஊழிய அறிக்கைகள் போடும் மற்ற எல்லாரைக் குறித்தும் அவ்வாறே இருக்கும்.) நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல்b புத்தகத்தின் 98, 99-ம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதைப் போன்ற பைபிள் அறிவுரையும் இந்தக் கலந்துபேசுதலில் உட்பட்டிருக்க வேண்டும். ஆகையால், இது மாணாக்கர் தனக்கென்று இந்தப் புத்தகத்தின் பிரதியைப் பெறுவதற்குப் பொருத்தமான காலமாயிருக்கும்.
10 நற்செய்தியை அறிவிக்கும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகத் தகுதிபெற்ற ஒருவர் ‘நற்பிரிய மனிதர்’ ஆகும் திசையில் முன்னேறியிருக்கிறார்.c (லூக்கா 2:14) அவர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படாவிடினும், இப்பொழுது ‘கடவுளின் வார்த்தையை அறிவித்து வரும்’ பூமியெங்குமுள்ள சுறுசுறுப்பாய்ச் செயல்படும் இலட்சக்கணக்கானோருடன்கூட தன் சாட்சிவேலையை அறிக்கை செய்யலாம். (அப்போஸ்தலர் 13:5, தி.மொ.; 17:3; 26:22, 23) அவர் முழுக்காட்டப்படாதப் புதிய பிரஸ்தாபி என்ற ஓர் அறிவிப்பு சபைக்குச் செய்யப்படலாம். அவர் தொடர்ந்து பைபிளைப் படித்தும், கூட்டங்களில் பங்குகொண்டும், தான் கற்பவற்றைப் பொருத்திப் பயன்படுத்திக்கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டும் வரவேண்டும். சீக்கிரத்தில், அவரும் கிறிஸ்தவ முழுக்காட்டுதலின் படியை எடுத்து, இவ்வாறு கடவுளின் அங்கீகாரம் பெற்று, இரட்சிப்புக்காக ‘அடையாளம்’ போடப்பட்டவராகும்படி விரும்புவார்.—எசேக்கியேல் 9:4-6.
தவறுசெய்வோருக்கு உதவி
11 வினைமையான பாவஞ்செய்துவிடும் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் ஒருவருக்கு உதவிசெய்ய சபையின் ஏற்பாடுகளைப் பற்றி முந்தின கட்டுரையில் நாம் விவாதித்தாராய்ந்தோம். (எபிரெயர் 12:9-13) முழுக்காட்டப்பட்டவர் தவறுசெய்து மனந்திரும்பாதிருந்தால், சபை அவரை சபைநீக்கம் செய்யவேண்டியிருக்கலாம், அதன்பின் அவரோடு எந்த நட்புக்கலப்பையும் தவிர்க்கவேண்டுமென பைபிளிலிருந்து நாம் கண்டோம். (1 கொரிந்தியர் 5:11-13; 2 யோவான் 9-11; 2 தெசலோனிக்கேயர் 2:11, 12) எனினும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி வினைமையான தவறு அல்லது பாவஞ்செய்தால் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?
12 சந்தேகங்களை வளர்த்துவந்திருந்த அல்லது மாம்ச பாவங்களுக்குள் வீழ்ந்துவிட்டிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மனந்திரும்பினால் அவர்களுக்கு இரக்கங்காட்டும்படி யூதா கூறினான். (யூதா 22, 23; 2 கொரிந்தியர் 7:10-ஐயும் பாருங்கள்.) அப்படியானால், பாவஞ்செய்துவிட்ட முழுக்காட்டப்படாதவர் மனந்திரும்புதலைக் காட்டினால் அவருக்கு இரக்கங்காட்டுவது அதைவிட அதிகப் பொருத்தமாயிருக்குமல்லவா? (அப்போஸ்தலர் 3:19) ஆம், ஏனெனில் அவருடைய ஆவிக்குரிய அஸ்திபாரம் அவர்களுடையதைப்போல் அவ்வளவு உறுதியாயில்லை, மேலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் அவருடைய அனுபவமும் அதிக மட்டுப்பட்டதாயிருக்கிறது. சில காரியங்களில் கடவுளுடைய சிந்தனையை அவர் ஒருவேளை கற்றிருக்கமாட்டார். முழுக்காட்டுதலுக்கு முன்பாக மூப்பர்கள் தொடர்ச்சியாக நடத்தும் பைபிள் கலந்தாலோசிப்பு வகுப்புகளுக்கு அவர் சென்றில்லை, தண்ணீர் முழுக்காட்டின் முக்கிய படிக்குத் தன்னை உட்படுத்தவுமில்லை. மேலும், “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்,” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:48) ஆகையால், முழுக்காட்டப்பட்டவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் அதிகரிக்கப்பட்ட அறிவோடும் ஆசீர்வாதங்களோடும் கணக்கு ஒப்புவிக்கும் தனி பொறுப்பையும் கொண்டிருக்கிறார்கள்.—யாக்கோபு 4:17; லூக்கா 15:1-7; 1 கொரிந்தியர் 13:11.
13 பவுலின் அறிவுரைக்கு ஒப்ப, ஆவிக்குரிய தகுதிபெற்ற சகோதரர்கள், தான் அறிவதற்கு முன்பாகத் தவறான படியெடுத்துவிடுகிற முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி எவருக்கும் உதவிசெய்யும்படி விரும்புவார்கள். (கலாத்தியர் 6:1-ஐ ஒத்துப்பாருங்கள்.) தவறினவர் தனக்கு உதவிசெய்வதை விரும்பினால், மூப்பர்கள் தங்கள் எண்ணிக்கையில் இருவரை (ஒருவேளை முன்பு அவரோடு சந்தித்துப் பேசினவர்களையே) அவரைத் திரும்ப சீர்பொருந்த செய்யும்படி முயற்சி செய்ய கேட்பார்கள். அவர்கள், கடுமையாய்க் கண்டிக்கும் விருப்பத்தோடல்ல, ஆனால் இரக்கமான முறையிலும் சாந்த ஆவியிலும் அவ்வாறு செய்வார்கள். (சங்கீதம் 130:3) பெரும்பான்மையரின் காரியங்களில், வேதப்பூர்வ அறிவுரையும் நடைமுறை ஆலோசனைகளும் மனந்திரும்புதலை உண்டுபண்ணி அவரைச் சரியான பாதையில் வைக்கப் போதுமானவையாயிருக்கும்.
14 அந்த இரு மூப்பர்களும், தவறுசெய்த அந்த முழுக்காட்டப்படாதவரின் சூழ்நிலைமைக்குப் பொருத்தமான வழிநடத்துதல்களை அளிப்பார்கள். சிலர் காரியங்களில், தவறுசெய்தவர், ஓரளவான காலத்துக்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இராதபடி அல்லது கூட்டங்களில் குறிப்பு சொல்லாதபடி அவர்கள் ஏற்பாடு செய்யலாம். அல்லது அவர் மேலுமதிக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யும் வரையில் சபையுடன் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள வேண்டாமென அவர்கள் ஒருவேளை கட்டளையிடலாம். பின்பு அவர் வெளி ஊழியத்தில் மறுபடியும் பங்குகொள்ளலாமென அவர்கள் அவருக்குச் சொல்லலாம். அந்தத் தவறு நிந்தையைக் கொண்டுவராமலும் மந்தையின் சுத்தத்துக்கு அபாயத்தை உண்டுபண்ணாமலும் இருந்தால், எந்த அறிவிப்பினாலும் சபையை எச்சரிக்க வேண்டியதில்லை.
15 அந்த ஆள் உண்மையில் மனந்திரும்பியிருப்பதாக அந்த இரு மூப்பர்களும் காண்கிறார்கள், ஆனால் அந்தத் தவறு விரிவாய் அறியப்பட்டிருந்தால் என்ன செய்வது? அல்லது அந்தத் தவறு பின்னால் விரிவாய் அறியப்பட்டதாகிறதென்றால் என்ன செய்வது? இந்த இரு காரியங்களிலும், அவர்கள் சபை சேவை குழுவுக்கு அதைத் தெரிவிக்கலாம், அவர்கள், பின்வருவதைப்போன்ற சுருக்கமான ஓர் அறிவிப்பைச் செய்ய ஏற்பாடு செய்வார்கள்: “ . . . உட்பட்ட ஒரு காரியம் கையாளப்பட்டது, அவர் [அவள்] சபையுடன் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகத் தொடர்ந்து சேவிக்கிறார்.” இத்தகைய எல்லாக் காரியங்களிலும் இருப்பதுபோல், மூப்பர் குழு, எதிர்காலத்தில் ஒரு சமயத்தில் இவ்வகை தவறுசெய்தலின்பேரில் அறிவுரை கொண்ட வேதப்பூர்வ பேச்சு கொடுப்பது தேவையாவென்பதைத் தீர்மானிக்கலாம்.
16 தவறுசெய்த முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி, தனக்குக் கொடுக்கப்படும் அன்புள்ள உதவிக்கு, எப்போதாவது ஆதரவாய்ப் பிரதிபலிக்கமாட்டார். அல்லது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஒருவர், தான் முழுக்காட்டுதலை நோக்கித் தொடர்ந்து முன்னேற விரும்புகிறதில்லையென தீர்மானித்து, தான் ஒரு பிரஸ்தாபியாகக் கருதப்பட விரும்புகிறதில்லையென மூப்பர்களுக்குத் தெரிவிக்கலாம். அப்பொழுது என்ன செய்வது? உண்மையில் கடவுள் அங்கீகரித்தவராகாத இத்தகையோரைக் குறித்து சபைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்படுகிறதில்லை. தவறு செய்து மனந்திரும்பாதவர்களைச் சபைநீக்கம் செய்வதன் ஏற்பாடு ‘சகோதரரெனப்படுகிற’ முழுக்காட்டப்பட்டவர்களுக்கே பொருந்துகிறது. (1 கொரிந்தியர் 5:11) எனினும், தவறு கவனியாமற் விடப்படுகிறதென இது கருத்துக்கொள்ளுகிறதா? இல்லை.
17 மூப்பர்கள் ‘தங்கள் கவனிப்பிலுள்ள கடவுளின் மந்தையை மேய்த்து’ வரவேண்டிய பொறுப்புடையோராயிருக்கின்றனர். (1 பேதுரு 5:2) தவறுசெய்த முழுக்காட்டப்படாதவர் மனந்திரும்பாமலும் பிரஸ்தாபியாயிருக்கத் தகுதியற்றவருமாயிருக்கிறாரென உதவிதரும் அந்த இரு மூப்பர்கள் தீர்மானித்தால், அவர்கள் அதை அந்த நபருக்குத் தெரிவிப்பார்கள்.d அல்லது முழுக்காட்டப்படாத எவராவது, தான் இனிமேலும் ஒரு பிரஸ்தாபியாக எண்ணப்பட விரும்புகிறதில்லையென மூப்பர்களிடம் சொன்னால், அவருடைய தீர்மானத்தை அவர்கள் ஏற்பார்கள். இந்த இரு காரியத்திலும், சபை ஊழிய ஆலோசனைக் குழு, “ . . . இனிமேலும் நற்செய்தியின் பிரஸ்தாபியாக இல்லை,” என்ற ஒரு சுருக்கமான அறிவிப்பைப் பொருத்தமான சமயத்தில் செய்வது தகுதியானது.
18 அதன்பின் சாட்சிகள் இந்த ஆளை எவ்வாறு கருதுவார்கள்? முன்பு ஒரு சமயம் அவர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்த ‘அவிசுவாசி’யாக இருந்தார். பின்னால் அவர் நற்செய்தியின் பிரஸ்தாபியாக விரும்பினார் அதற்குத் தகுதியும் பெற்றிருந்தார். இனிமேலும் அவ்வாறில்லை, ஆகையால் அவர் மறுபடியும் இவ்வுலகத்துக்குரிய ஓர் ஆள். சாட்சிகள் அவருடன் பேசுவதைத் தவிர்க்கவேண்டுமென பைபிள் கட்டளையிடுவதில்லை, ஏனெனில் அவர் சபைநீக்கம் செய்யப்படவில்லை.e இருப்பினும், விருத்தசேதனஞ் செய்யப்படாத அந்நிய குடியிருப்பாளரைக் குறித்து இஸ்ரவேலர் எச்சரிக்கையாயிருந்ததுபோலவே, யெகோவாவை வணங்காத இவ்வுலகத்தைச் சார்ந்த இத்தகைய ஆளைக் குறித்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையுடனிருப்பார்கள். இவ்வாறு எச்சரிக்கையாயிருப்பது “கொஞ்சம் புளித்தமா,” அல்லது கெடுக்கும் பொருளிலிருந்து சபையைப் பாதுகாத்து வைக்க உதவிசெய்கிறது. (1 கொரிந்தியர் 5:6) பின்னால் ஒரு சமயம் அவர், தன்னுடன் பைபிள் படிப்பு நடத்தவேண்டுமென உண்மையான ஆவலை வெளிப்படுத்தி, அது தகுதியாக மூப்பர்களுக்குத் தோன்றினால், யெகோவாவை அவருடைய ஜனங்களுடன்சேர்ந்து வணங்குவது எத்தகைய சிலாக்கியமென மறுபடியும் மதித்துணர அது ஒருவேளை அவருக்கு உதவிசெய்யலாம்.—சங்கீதம் 100.
19 இவ்வகையான குறிப்பிட்ட ஒருவர் மந்தைக்கு அசாதாரணமான பயமுறுத்தலாக இருப்பதை மூப்பர்கள் கண்டால், தீமைக்காளாகக்கூடிய நிலையிலிருப்போரை அவர்கள் தனிமையில் எச்சரிக்கலாம். உதாரணமாக, முந்நாள் பிரஸ்தாபி ஒருவேளை குடிவெறிக்கோ ஒழுக்கக்கேட்டுக்கோ உடன்படும் இளைஞனாயிருக்கலாம். அவன் இனிமேலும் முழுக்காட்டப்படாதப் பிரஸ்தாபியல்லவென அறிவிப்பு செய்தும், சபையிலுள்ள இளைஞரோடு நட்புக்கலப்பு வைத்துக்கொள்ள முயற்சிசெய்யலாம். இந்தச் சந்தர்ப்பத்தில், மூப்பர்கள் அபாயத்திலிருப்போரின் பெற்றோரிடமும், ஒருவேளை அந்த இளைஞர்களிடமுங்கூட தனிமையில் பேசுவார்கள். (எபிரெயர் 12:15, 16; அப்போஸ்தலர் 20:28-30) வெகு அரிதாகவே ஏற்படும் காரியமாய், ஒருவன் வன்மை அல்லது மானக்கேடு உண்டாக்கும் வண்ணம் அபாயகரமாயிருந்தால், அவனுக்குக் கூட்டங்களில் வரவேற்பு இல்லையெனவும் உட்பிரவேசிப்பதற்கு முயற்சி செய்தால் அது குற்றமாகக் கருதப்படுமெனவும் அவனிடம் நேரடியாகச் சொல்லிவிடலாம்.
வயதுவராத சிறுவர்கள் கடவுளை வணங்க உதவிசெய்தல்
20 பிள்ளைகளைத் தெய்வீகச் சத்திய பாதையில் கற்பித்து நடத்துவதற்கான பொறுப்பை பைபிள் பெற்றோக்குக் கொடுக்கிறது. (உபாகமம் 6:4-9; 31:12, 13) இதற்கிசைய, கிறிஸ்தவ குடும்பங்கள் வாராந்தர பைபிள் படிப்பு நடத்தும்படி யெகோவாவின் சாட்சிகள் வெகு காலம் ஊக்கப்படுத்தி வந்திருக்கின்றனர். கிறிஸ்தவ பெற்றோர், தங்கள் சிறுவர்கள் ஒப்புக்கொடுத்தலையும் முழுக்காட்டுதலையும் நோக்கிப் படிப்படியாய் முன்னேறி இவ்வாறு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறும்படி ஊக்கப்படுத்தவேண்டும். (நீதிமொழிகள் 4:1-7) இதன் மகிழ்ச்சிகரமான பலனை—அதாவது, யெகோவாவை நேசித்து அவரை என்றென்றும் வணங்க ஆவல்கொண்டுள்ள முன்மாதிரியான இலட்சக்கணக்கான இளைஞரை சபைகளில் நாம் காண்கிறோம்.
21 மேலும் தங்கள் பிள்ளைகளைக் கண்டித்துப் பயிற்றுவித்து, தேவையென தாங்கள் கருதும் கட்டுப்பாடுகளை அல்லது அன்புள்ள தண்டனைகளை அவர்களுக்குக் கொடுக்கும்படியான முதன்மை பொறுப்பும் கிறிஸ்தவ பெற்றோருக்கு உண்டு. (எபேசியர் 6:4; எபிரெயர் 12:8, 9; நீதிமொழிகள் 3:11, 12; 22:15) எனினும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக சபையுடன் கூட்டுறவுகொள்ளும் வயதுவராத பிள்ளை வினைமையான தவறில் உட்பட்டவனானால், அது, மந்தையின் ‘ஆத்துமாக்களின்பேரில் காவல்காக்கும்’ மூப்பர்களின் அக்கறைக்குரியதாகிறது.—எபிரெயர் 13:17.
22 அடிப்படையாய், இத்தகைய தவறுசெய்தல், இந்தக் கட்டுரையில் முன்னால் குறிப்பிட்டபடி கவனிக்கப்படவேண்டும். இந்தக் காரியத்தை விசாரணைசெய்ய இரு மூப்பர்கள் நியமிக்கப்படலாம். அவர்கள், உதாரணமாக, முதலாவது பெற்றோருடன் (அல்லது பெற்றோர் ஒருவருடன்) என்ன நடந்தது, பிள்ளையின் மனப்பான்மை என்ன, மற்றும் திருத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பவற்றைக் கலந்துபேசலாம். (உபாகமம் 21:18-21-ஐ ஒத்துப்பாருங்கள்.) அந்நிலைமையைப் பெற்றோர் சரியாய்க் கையாண்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தால், மூப்பர்கள் வெறுமென அவ்வப்போது அவர்களிடம் முன்னேற்றத்தைப் பற்றிக் கேட்டு உதவியான அறிவுரையையும், ஆலோசனைகளையும், அன்புள்ள ஊக்கமூட்டுதலையும் கொடுத்துவரலாம்.
23 எனினும், சிலசமயங்களில், பெற்றோருடன் கலந்துபேசுவது, மூப்பர்களே அந்தத் தாறுமாறாய் நடந்த வயதுவராத பிள்ளையுடனும் அந்தப் பெற்றோருடனும் சந்தித்துப் பேசுவது சிறந்ததென காட்டுகிறது. இளைஞரின் கட்டுப்பாடுகளையும் மனச்சாய்வுகளையும் மனதில் கொண்டு கண்காணிகள், அந்த முழுக்காட்டப்படாத இளம் பிரஸ்தாபிக்குச் சாந்தமாய் அறிவுரை கொடுக்கப் பிரயாசப்படுவார்கள். (2 தீமோத்தேயு 2:22-26) சிலருடைய காரியங்களில், அவன் பிரஸ்தாபியாக இருக்க இனிமேலும் தகுதியுள்ளவனாயில்லை எனவும் பொருத்தமான அறிவிப்பு செய்யப்படவேண்டுமெனவும் தெளிவாய்த் தெரியலாம்.
24 அதன்பின், பெற்றோர், தவறுசெய்யும் தங்கள் வயதுவராதப் பிள்ளைக்காக என்ன செய்வார்கள்? தங்கள் பிள்ளை முழுக்காட்டப்படாதப் பிரஸ்தாபியாக இருக்கத் தகுதியற்றவனென தீர்க்கப்பட்டபோதிலும் அல்லது அவன் முழுக்காட்டப்பட்டபின் தவறுசெய்ததால் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலுங்கூட, அவர்கள் இன்னும் தங்கள் பிள்ளைக்குப் பொறுப்புடையவர்கள். அவர்கள் அவனுக்குத் தொடர்ந்து உணவும், உடையும், தங்க இடமும் அளித்து வருவதைப்போலவே, கடவுளுடைய வார்த்தைக்குப் பொருந்த அவர்கள் அவனைக் கற்பித்து சிட்சித்துப் பயிற்றுவிக்கவேண்டும். (நீதிமொழிகள் 6:20-22; 29:17) அவன் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலுங்கூட அன்புள்ள பெற்றோர் அவனோடு வீட்டு பைபிள் படிப்பு நடத்த இவ்வாறு ஏற்பாடு செய்வார்கள்.f அவர்கள் தனியே அவனோடு படிப்பதிலிருந்து அவன் மிக அதிக அளவில் சீர்திருத்தும் நன்மையைப் பெறலாம். அல்லது குடும்பப் படிப்பு ஏற்பாட்டில் அவன் தொடர்ந்து பங்குகொள்ளலாமெனவும் அவர்கள் தீர்மானிக்கலாம். அவன் வழிதவறிபோய்விட்டபோதிலும், இயேசுவின் உவமையிலிருந்த கெட்ட குமாரன் செய்ததைப்போல், அவன் யெகோவாவிடம் திரும்பிவருவதைக் காண அவர்கள் விரும்புகிறார்கள்.—லூக்கா 15:11-24.
25 உண்மையான கடவுளின் மகிழ்ச்சிநிறைந்த வணக்கத்தாராகும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்பதே நம்முடைய பிரசங்க மற்றும் கற்பிக்கும் வேலையின் இலக்காகும். கொரிந்துவிலிருந்த ‘அவிசுவாசிகளும் சமானியமான ஆட்களும்’ “முகங்குப்புற விழுந்த கடவுளைப் பணிந்துகொண்டு கடவுள் மெய்யாகவே உங்களுக்குள் இருக்கிறாரென்று அறிக்கையிடு”ம்படி இருதயம் கனிவிக்கப்பட்டார்கள். (1 கொரிந்தியர் 14:25, தி.மொ.) இன்று மேலும் மேலும் அதிகமான ஆட்கள் கடவுளை வணங்கும்படி வந்துகொண்டிருப்பது எத்தகைய மகிழ்ச்சியைத் தருகிறது! இது தேவதூதர் பின்வருமாறு அறிவித்ததன் மகிமையான நிறைவேற்றமாகும்: “மேலே உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை, பூமியின்மேல் நற்பிரிய மனிதருக்குள் [அல்லது, கடவுளின் அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் மனிதருக்குள்] சமாதானம்.”—லூக்கா 2:14. (w88 11⁄15)
1-3. கடவுளின் அங்கீகாரத்தைப் பெற கொரிந்துவிலிருந்த பலர் எவ்வாறு உதவிசெய்யப்பட்டனர்?
4. கொரிந்துவிலிருந்தவர்களுக்கு உதவிசெய்ததைப்போல் இன்று பலருக்கு எம்முறைகளில் உதவிசெய்யப்படுகிறது?
5. குறிப்பிட்ட சில ஆட்களோடு தொடர்புகொள்கையில் எச்சரிக்கையாயிருப்பதற்கு என்ன வேதப்பூர்வ ஆதாரம் இருக்கிறது?
6. “அவிசுவாசிகள்” எவ்வாறு கூட்டங்களால் ‘கண்டிக்கப்படலாம்’? அத்தகைய கண்டித்தலின் இயல்பு என்ன?
7. மேலுமான என்ன முன்னேற்றஞ்செய்ய மாணாக்கர் பலர் விரும்புவர்? ஏன்?
8, 9. (எ) பைபிள் படிப்பவர் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள விரும்புகையில் என்ன செய்யவேண்டும்? (பி) எதிர்கால பிரஸ்தாபியுடன் இரு மூப்பர்களும் அவருக்குக் கற்பித்தவரும் சந்திக்கையில், அவர்கள் என்ன செய்வார்கள்? (சி) புதிய பிரஸ்தாபி என்ன பொறுப்பை மேற்கொள்கிறார்?
10. (எ) முழுக்காட்டப்படாதப் பிரஸ்தாபி எவ்வாறு தொடர்ந்து முன்னேற முடியும்? (பி) “அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளி” என்றக் கூற்றுத்தொடர் ஏன் திருத்தியமைக்கப்படுகிறது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
11. முழுக்காட்டப்பட்டவராயிருந்து தவறுசெய்வோரைச் சபை எவ்வாறு கையாளுகிறது?
12. (எ) பாவஞ்செய்யும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளுக்கும் இரக்கமான உதவி ஏன் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது? (பி) லூக்கா 12:48-ல் கொடுத்துள்ள நியமம் தவறுசெய்ததற்கு பதில்சொல்லும் பொறுப்புடன் எவ்வாறு சம்பந்தப்படக்கூடும்?
13. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி தவறு செய்தால், உதவிசெய்ய மூப்பர்கள் என்ன செய்வார்கள்?
14, 15. (எ) தவறுசெய்தவர் உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பினால் என்ன செய்யலாம்? (பி) சிலருடைய காரியங்களில் என்ன மட்டுப்பட்ட தெளிவுடைய குறிப்பு செய்யப்படலாம்?
16, 17. (எ) வேறுபட்ட அறிவிப்பு செய்வதற்கு எந்த இரண்டு நிலைமைகள் ஆதாரமாயிருக்கலாம்? (பி) இந்த அறிவிப்பின் இயல்பு என்ன?
18. (எ) இத்தகைய அறிவிப்புக்குப் பின், எவ்வாறு நடப்பதென்று தாங்கள்தாமே தீர்மானிப்பதில் கிறிஸ்தவர்கள் எதை மனதில் வைப்பார்கள்? (பி) சென்ற காலத்தில் தவறுசெய்தக் குற்றமுள்ள முழுக்காட்டப்படாதவர்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியமா?
19. சிலருடைய காரியங்களில் மூப்பர்கள் எவ்வாறு தனிமையில் மேலுமான உதவி அளிக்கலாம்?
20. கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன உதவி செய்கிறார்கள், இதன் பலன் என்ன?
21-23. (எ) முதற்படியாக, வயதுவராத ஒரு பிள்ளை தவறுசெய்தது எவ்வாறு கையாளப்படுகிறது? (பி) இத்தகைய சந்தர்ப்பங்களில் சபை மூப்பர்கள் என்ன பங்கை வகிக்கிறார்கள்?
24. (எ) வயதுவராதப் பிள்ளை வினைமையான தவறில் பங்குகொண்டிருந்தாலுங்கூட, பெற்றோர் என்ன செய்வது தகுதியாயிருக்கிறது? இதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றலாம்? (பி) சபைநீக்கம் செய்யப்பட்ட வயதுவராதப் பிள்ளையின் காரியத்தில் இது எவ்வாறு பொருந்தும்?
25. இன்று ஏன் “அவிசுவாசிகளுக்கு” அன்புள்ள அக்கறையும் உதவியும் செலுத்தப்படுகிறது?
இன்னும் முழுக்காட்டப்படாதிருப்பினும் பிரஸ்தாபியாவது, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கிய ஒரு முக்கிய மற்றும் பொறுப்புள்ள படியாகும்
a மூப்பர்களில் ஒருவர் சபை ஊழிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராயிருக்க வேண்டும். மற்றவர், சபை புத்தகப் படிப்பு நடத்துபவரைப்போன்று, மாணாக்கருக்கு அல்லது அவருக்குக் கற்பித்தவருக்கு மிகப் பழக்கமான மூப்பராயிருக்கலாம்,
b இந்தியாவில் 1987-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
c முன்னால், வெளி ஊழியத்தில் பங்குகொள்ள தகுதிபெற்ற முழுக்காட்டப்படாத ஒருவர் “அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளி” என குறிப்பிடப்பட்டார். எனினும், “முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி” என்பது அதிகத் திருத்தமான சுட்டுப்பெயர், முக்கியமாய், நேர்மையான ஒப்புக்கொடுத்தலின் மற்றும் கிறிஸ்தவ முழுக்காட்டுதலின் பலனாகவே கடவுளுடைய அங்கீகாரம் கிடைக்கிறதென பைபிள் குறிப்பிட்டுக் காட்டுவதைக் கருதுகையில் அவ்வாறிருக்கிறது.
d இந்த முடிவு அந்த நபருக்குத் திருப்தி தருகிறதில்லையெனில், அவர் (ஏழு நாட்களுக்குள்) அந்தக் காரியம் திரும்பக் கருதப்படும்படி வேண்டுகோள் செய்யலாம்.
e பாவஞ்செய்து மனந்திரும்பாத முழுக்காட்டப்படாதவர்கள், முன்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டார்கள். மேலே திருத்தியமைக்கப்பட்டதுபோல், இது தேவைப்படுகிறதில்லையெனினும், 1 கொரிந்தியர் 15:33-ல் கொடுத்துள்ள அறிவுரையை இன்னும் பின்பற்றவேண்டும்.
f வீட்டுக்கு வெளியில் வாழும் சபைநீக்கம் செய்யப்பட்டுள்ள உறவினர், ஆங்கில காவற்கோபுர பிரதிகள் ஏப்ரல் 15, 1988, பக்கங்கள் 26-31, (தமிழில் அக்டோபர் 1, 1988 பக்கங்கள் 21-25); செப்டம்பர் 15, 1981, பக்கங்கள் 26-31, (தமிழில் பிப்ரவரி 1, 1982 பக்கங்கள் 12-18) ஆகியவற்றில் தர்க்கிக்கப்பட்டுள்ள வேதப்பூர்வ அறிவுரையின்படி கையாளப்படவேண்டும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻கூட்டங்களுக்கு வரும் ‘அவிசுவாசிகளிடம்’ கிறிஸ்தவர்களின் நோக்குநிலை என்ன?
◻பைபிள் படிப்பவர் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள விரும்புகையில், மூப்பர்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றனர்? அந்த மாணாக்கர் என்ன பொறுப்பை ஏற்கிறார்?
◻முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி வினைமையான பாவம் செய்துவிட்டால் என்ன செய்யப்படுகிறது?
◻பெற்றோரும் மூப்பர்களும், வீட்டில் வாழும் வயதுவராத பிள்ளைகளுக்கு, அத்தகைய இளைஞர் வினைமையாய்த் தவறுசெய்துவிட்டாலுங்கூட, எவ்வாறு உதவிசெய்யலாம்?