கோடெக்ஸ் சைனாய்டிகஸ் சுவடியை மீட்டல்
கோடெக்ஸ் சைனாய்டிகஸ் (Codex Sinaiticus) என்ற சீனாய்ச் சுவடி “இப்பொழுது இருக்கும் புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமான, கிளர்ச்சியுறச்செய்யும் மதிப்பு மிகுந்த நூல்” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. அது ஏறக்குறைய 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல் என்பதால் மட்டுமல்ல, பைபிள் மூலப் பிரதிகளின் நம்முடைய பட்டியலில் அது ஒரு முக்கிய இணைப்பாக இருக்கிறது. அது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் டிஷன்டார்ஃப் என்பவரால் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டதுதானே ஒரு விந்தையான கதையாகும்.
கான்ஸ்டான்டின் வான் டிஷன்டார்ஃப் வட ஐரோப்பாவில் சாக்ஸொனி என்ற இடத்தில் 1815-ல் பிறந்தார். லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கிரேக்க மொழியில் கல்வி கற்றார். தன்னுடைய படிப்புப் பருவத்தின்போது, பைபிளைக் குறித்து குறைகூறும் ஆய்வுகள் இவருக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் எழுத்துரிமைச் சான்றற்றது என்ற கருத்தை அப்பொழுது பிரபலமாயிருந்த ஜெர்மன் இறைமையியலர் தெரிவித்துவந்தனர். என்றபோதிலும் பைபிளின் ஆரம்ப சுவடிகளின் ஓர் ஆய்வு அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் என்பதை டிஷன்டார்ஃப் உறுதியாய் நம்பினார். எனவே அவர் கிடைக்கக்கூடிய எல்லா மூலப் பிரதிகளையும் ஆராய்ச்சி செய்ய தீர்மானித்தார். தன்னுடைய பயணத்தின்போது, மற்றவற்றையும் கண்டுபிடிக்க எதிர்பார்த்தார்.
ஐரோப்பாவின் மிக அருமையான நூலகங்கள் ஒன்றில் நான்கு ஆண்டு ஆராய்ச்சியை மேற்கொண்ட பின்னர், டிஷன்டார்ஃப், மே 1844-ல் சீனாயில் செங்கடல் மட்டத்துக்கு 4,500 அடி உயரத்திலுள்ள புனித கேத்தரின் மடத்தை வந்து சேர்ந்தார். மடத்தினரின் அரண் போன்ற தனி இடத்துக்குச் செல்லுதல் சுவற்றில் ஒரு சிறிய துவாரத்தின் வழியே விடப்பட்டிருந்த ஒரு கயிற்றில் தொங்கும் ஒரு கூடை மூலமாகவே இருந்தது.
பயனுள்ள கண்டுபிடிப்புகள்
ஒரு சில நாட்களுக்கு அவர்களுடைய மூன்று நூலகங்களிலும் தேடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் பலனில்லை. ஒரு நாள் அவர் திரும்பிவிடும் தருவாயில் இருக்கும்போது, அவர் தேடிக்கொண்டிருந்தது கண்களில் பட்டது—அந்தப் பூர்வீகச் சுவடிகள்! அந்த நூலகத்தின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த கூடத்தில் அவை ஒரு பெரிய கூடையில் நிரப்பப்பட்டிருந்தது. அவை எரிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்றும், ஏற்கெனவே இரண்டு கூடைகள் எறிக்கப்பட்டுவிட்டன என்றும் அந்த நூலகர் கூறினார். அந்தத் தோல் ஏடுகளின் மத்தியில் தான் இதுவரை பார்த்திராத மிகப் பழைய ஏடுகளில் 129 பக்கங்களைப் பார்த்து டிஷன்டார்ஃப் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். இது எபிரெய வேதாகமப் பகுதிகளின் ஒரு கிரேக்க மொழிபெயர்ப்பு. அவரிடம் 43 பக்கங்கள்தான் கொடுக்கப்பட்டன, மற்றவை மறுக்கப்பட்டன.
டிஷன்டார்ஃப் அந்த மடத்திற்கு மறுபடியும் 1853-ல் விஜயம் செய்தார். அப்பொழுது அதே நான்காவது நூற்றாண்டு ஏடுகளிலிருந்து ஆதியாகமத்தின் ஒரு பகுதியை அவர் கண்டெடுத்தார். “அந்த ஏடு முதலில் முழு பழைய ஏற்பாட்டையும் உள்ளடக்கியதாக இருந்தது என்றும், அதன் பெரும்பகுதி வெகு காலத்துக்கு முன்பே அழிக்கப்பட்டாயிற்று என்றும்” அவர் உறுதியாய் நம்பினார். அந்த முழு ஏடும் அநேகமாய் 730 பக்கங்களைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். அது செம்மறியாட்டின் மற்றும் வெள்ளாட்டின் மென்மையான தோலில் கிரேக்கு மொழியிலே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், டிஷன்டார்ஃப், மூன்றாம் முறையாக அந்தச் சீனாய் மலையில் வசித்துவந்த மடத் துறவிகளைச் சந்திக்கச் சென்றார். தான் அங்கிருந்து புறப்படும் அந்த நாளின் மாலை வேளை வந்த போது, அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தீயிலிருந்து மீட்ட அந்த ஏடுகள் அவரிடம் காண்பிக்கப்பட்டதுமட்டுமின்றி, வேறு சில பகுதிகளும் காண்பிக்கப்பட்டன. அவை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முழு பகுதியையும், எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாயிருந்தது.
டிஷன்டார்ஃப் அந்தப் பிரதியை நகல் எடுப்பதற்காக எகிப்திலுள்ள கெய்ரோவுக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டார். அது மட்டுமின்றி, அதை ரஷ்யாவின் பேரரசருக்கு மடத்தாரின் வெகுமதியாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டார். இன்று அது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸ் பக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் கண்டெடுக்கப்பட்ட 43 பக்கங்கள் ஜெர்மன் குடியரசில் லீப்ஸிக் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருக்கிறது.
டிஷன்டார்ஃப் தன்னுடைய வாழ்க்கையையும் திறமையையும் பைபிளின் பூர்வீக ஏடுகளைத் தேடிப்பார்ப்பதிலும், விசேஷமாக அந்த மதிப்புமிக்க கோடெக்ஸ் சைனாய்டிகஸ் என்ற சீனாய்ச் சுவடி அழிக்கப்பட்டுப்போவதிலிருந்து அதை மீட்டதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் தம்முடைய வார்த்தை இன்று நம்முடைய நன்மைக்காகத் திருத்தமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்ட யெகோவா தேவன் தாமே நம்முடைய மிகுந்த நன்றிக்குப் பாத்திரர். (w88 10/15)
[பக்கம் 30-ன் பெட்டி]
கோடெக்ஸை உபயோகித்தல்
கோடெக்ஸ் சைனாய்டிகஸ் என்ற சீனாய்ச் சுவடியைக் குறிப்பிடும் குறி எபிரெய எழுத்தாகிய א. இந்தக் கோடெக்ஸ் அவற்றைவிட அண்மையான பைபிளின் நாணற்புல் தாள் ஏடுக்களின் திருத்தமான தன்மையை உறுதிப்படுத்துகிறது. அது பின்னால் எடுக்கப்பட்ட நகல்களில் நுழைந்திருக்கும் தவறுகளைக் குறிப்பாய்க் காட்டவும் நவீன நாளைய பைபிள் அறிஞர்களுக்கு உதவுகிறது.
உதாரணமாக, யோவான் 1:18 [NW] வாசிக்கிறது: “கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவுடன் அவருடைய மடியிலிருக்கிற ஒரே பேறான கடவுளே அவரை விளக்கியிருக்கிறார்.” “ஒரே பேறான குமாரன்” என்ற மறு கூற்றுக்குப் பதிலாக “ஒரே பேறான கடவுள்” என்பது கோடெக்ஸ் சைனாய்டிகஸ் மற்றும் பல பழைய பிரதிகளால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது என்று “புதிய உலக மொழிபெயர்ப்பு மேற்கோள் பைபிள்” [ஆங்கிலம்] அடிக்குறிப்பு வெளிப்படுத்துகிறது. அந்த அடிக்குறிப்பின் மேற்கோள் אc, “அந்த ஒரே பேறான கடவுள்” என்று அக்கூற்றில் சுட்டுச் சொல்லைத் திரும்ப நிலைநாட்டியிருப்பதை ஆதரிக்க இந்தக் கோடெக்ஸின் திருத்தக் குறிப்பையும் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் ஸ்தானம், இந்த வேதவசனம் காண்பிப்பதற்கிசைய தனித்தன்மை வாய்ந்தது.
[பக்கம் 31-ன் படம்]
சீனாய் மலையடிவாரத்தில் புனித கேத்தரின் மடம். [உட்படம்] அதன் தற்போதைய நூலகம்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]
Courtesy of the British Museum, London