கழுகுகளா அல்லது பிணந்தின்னிக் கழுகுகளா?
அந்த அடையாளம்
“பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்துகூடும்.” (மத்தேயு 24:28) இந்த உவமையிலிருந்து கற்றுக்கொள்வதற்கு மாறாக சிலர் அதில் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். கழுகுகள் (eagles) தனியே வேட்டையாடுபவை, அவை உயிருள்ளவற்றையே உணவாகக் கொள்கின்றன, இறந்தவற்றை அல்ல என்று சிலர் கூறுகின்றனர். இப்படியாக சில பைபிள்கள் “பிணந்தின்னிக் கழுகுகள்” [Vultures] என்று பயன்படுத்துகின்றன. ஆனால் கேள்விக்குட்பட்ட கிரேக்க வார்த்தை எய்டாஸ் சரியாகக் “கழுகு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேயலில் காணப்படும் ஒரு கழுகு இனம் பழப்பு மஞ்சள் நிற கழுகாகும். “மாம்சப் பட்சினிப் பறவைகள் பலவற்றைப் போல பழுப்பு மஞ்சள் நிற கழுகு அழுகும் பிணம் தின்ன விரும்பாதவை அல்ல, ஏதாவது ஒன்று கொல்லப்பட்டிருக்குமானால் அந்த இடத்திற்கு முதல் விஜயம் செய்பவையாக இருப்பவை பெரும்பாலும் இந்தக் கழுகுதான்,” என்று ஜான் சின்க்ளேர் மற்றும் ஜான் மென்டல்சான் கூறுகின்றனர். மற்றொரு பார்வையாளர் கொடுத்த அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவின் காலஹாரி பாலைவன பிரதேசத்தில் 60 குறுவால் ஆப்பிரிக்கக் கழுகுகளும் பழுப்பு மஞ்சள் நிற கழுகுகளும் ஒன்றுகூடின. அவர் தொடர்ந்து கூறியதாவது: “பழுப்பு மஞ்சள் நிறக் கழுகுகள் ஒரு பிணத்தைத் தின்ன கூடும்போது மேலோங்கி விளங்குகிறது. அநேக சமயங்களில் இரண்டு கழுகுகள், பெரும்பாலும் ஒரு ஜோடி கழுகுகள் கொல்லப்பட்ட ஒன்றையும் பகிர்ந்து கொள்வதைக் கண்டிருக்கின்றனர்.”
மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் கடற் கழுகுகள் பொதுவாகக் காணப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் கடற்கழுகுகளும் நிலக் கழுகுகளும் போரில் மாண்ட குதிரைகளின் மாம்சத்தைப் புசித்தன. “அவை அந்த நோக்கத்துடன் யுத்த சேனைகளைப் பின்தொடர்ந்தது . . . நன்கு அறியப்பட்ட காரியம்,” என்று மக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங் அவர்களின் சைக்ளோபீடியா கூறுகிறது.
அதிவேகமாக செயல்படக்கூடியதும் கூரிய பார்வைகொண்டதுமான கழுகுகள் அப்பொழுதுதானே செத்திருக்கும் ஒரு பிணத்தை விஜயம் செய்யும் முதற் பறவைகளாகும். தன்னைத் தாழ்த்திட செய்த இந்தக் கேள்வியை யெகோவா தேவன் யோபுவைக் கேட்டது குறித்த அந்த விவரத்தை இயேசு நன்கு அறிந்திருந்தார்: “உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? . . . அது கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். . . . பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்.”—யோபு 39:27-30.
இப்படியாக, அடையாள அர்த்தத்தில் கழுகு பார்வை உடையவர்கள் மட்டுமே அந்த அடையாளத்திலிருந்து நன்மையடைவார்கள். (w88 10⁄15)