வெற்றி அடைவதற்கான அழுத்தம்
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தி “வெற்றி காணுங்கள். முக்கியமானவராக இருங்கள்,” என்று நைஜீரிய மக்களை ஊக்குவித்தது. ஒருவர் முக்கியமானவராக ஆக அடிப்படை பற்பசை அல்ல என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததே என்றாலும், மக்கள் “வெற்றி” என்ற பட்டியைக் கொண்ட பொருட்களுடன் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர் என்பதை விளம்பரதாரர் காண்பிக்கின்றனர்.
வெற்றிபெற்றிட வேண்டும், மற்றவர்கள் தங்களை அறிந்திருக்க வேண்டும் போன்ற ஆசை ஒருவருக்கு இருப்பது இயல்பானதே. என்றபோதிலும் ஆண்களும் பெண்களும் மனித சாதனைகளுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதால் “பிறருக்குச் சரிசமமாக வாழவேண்டும்” என்பதற்காகத் தங்களை வருத்திக்கொள்கிறார்கள். இது ஆபத்தானதாக இருக்கக்கூடுமா? அது உங்களை பாதிக்கக்கூடுமா?
மக்கள் எதிர்ப்படும் அழுத்தங்கள்
பணக்காரராக வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசை அழுத்தத்தைக் கூட்டக்கூடும். அநேகர் “ஜீவனத்தின் பெருமை” கொள்ள, சமுதாய அந்தஸ்தும் மேன்மையும் கொண்டிருக்க விரும்புகின்றனர்.—1 யோவான் 2:16.
குடும்பம் அழுத்தத்தைக் கூட்டக்கூடும். குடும்பத்தின் சமுதாய அந்தஸ்தை உயர்த்துவதற்காக அநேக வீடுகளில் கணவர் தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிடவும் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அல்லது மனைவி வாழ்க்கைப் பணியில் வெற்றிகரமான ஒரு பெண்ணாக இருக்க கடினமாக உழைத்துக் கொண்டிருக்கலாம். பிள்ளைகள் பள்ளி படிப்புகளில் அளவுகடந்த சாதனை காட்டும்படி வற்புறுத்தப்படக்கூடும். ஒருவன் தன்னுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்துவதற்கான திறவுகோல் உயர் கல்விதான் என்று அநேகர் நம்பும் வளரும் தேசங்களில் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாக இருக்கிறது.
உயர் கல்வி, சொத்து, மதிப்பும் செல்வாக்கும் கொண்ட பதவி ஆகியவற்றை இலட்சியமாகக் கொள்ளும்படி சமுதாயம் ஒருவன்மீது அழுத்தத்தைக் கூட்டக்கூடும். பணத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் வெற்றி சாதாரணமாக புகழ், போற்றுதல், மதிப்பு ஆகியவற்றிற்கு வழிநடத்தக்கூடும். நைஜீரியாவின் டெய்லி டைம்ஸ் (Daily Times) என்ற பத்திரிகையில் ஆசிரியரின் கருத்துப்பகுதி கூறியதாவது: “ஒருவருடைய குணங்கள் எவ்வளவுதான் சிறந்தவையாகவும் கவர்ச்சியானவையாகவும் இருந்தாலும், அவரிடம் பணம் இல்லையென்றால் அநேகர் அவரை மதிப்பதில்லை.”
விளைவு என்னவாக இருக்கக்கூடும்?
அப்படிப்பட்ட உலகப்பிரகாரமான வெற்றி ஓரளவு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தாலும், அதற்கு கொடுக்கப்படும் உயர்ந்த விலையைக் கவனியுங்கள். செய்தித்தாளில் கட்டுரை வழங்கும் அச்சிக் ஒக்காபோ பின்வருமாறு எழுதினார்: “நிலையான குடும்பங்கள் . . . ஒவ்வொரு நாளும் முறிந்துகொண்டிருக்கின்றன, இதற்கு முக்கிய காரணம் பணமும் பணம் என்ன வாங்கக்கூடும் என்பதும். . . . இணைந்துவாழ முடிந்த வாழ்க்கைத் துணைவர்களுங்கூட பெற்றோராகத் தங்களுடைய கடமைகள் குறித்து பேசுவது அரிதாக இருக்கிறது . . . காரணம் அவர்கள் எல்லாருமே பொருள் சம்பந்தமான நலனை நாடுவதில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருக்கிறார்கள்.” இத்துடன்கூட போதை மருந்துகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் திரும்பும் பிள்ளைகள் அல்லது வீட்டைவிட்டு ஓடிவிடும் கவனிக்கப்படாத பிள்ளைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கப்படும் விலை மிகவும் உயர்ந்துவிடுகிறது.
வெற்றி காண்பதற்காகக் கொடுக்கப்படும் அழுத்தம் பேராசை மிகுந்தவர்களை நேர்மையின்மையிலும் ஒழுக்கக்கேட்டிலும் தள்ளிவிடுகிறது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் வேலை பெறுவதற்காகவும் இளம் பெண்கள் தங்களுடைய கற்பையும் விற்கின்றனர். கனத்துக்குரிய விதத்தில் வெற்றி கிட்டினாலும், செழித்தோங்கும் ஆட்கள் வெற்றி பெறுவதில் பின்தங்கிய நிலையிலிருப்பவர்களின் பொறாமைக்கும் வெறுப்புக்கும் ஆளாகக்கூடும், மற்றும் பணத்தாலும் மதிப்பாலும் கவர்ச்சிக்கப்படும் “நண்பர்களின்” மாய்மாலத்தை எதிர்ப்படக்கூடும். (பிரசங்கி 5:11) இதுதான் உண்மையான வெற்றியா?
பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தை எழுதிய ஞானி இல்லை என்று விடையளிக்கிறான். தனக்கிருந்த ஏராளமான சொத்து, அதிகாரம், மதிப்பு மற்றும் இவை தனக்களித்த சந்தோஷத்தையெல்லாம் பார்வையிட்டு அவன் வந்த முடிவு, இவை எல்லாமே “மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது.”—பிரசங்கி 2:3–11.
வாழ்க்கையில் எதைத் தொடர்ந்தாலும் அது மாயை என்று இது அர்த்தமாகுமா? அல்லது பலனுள்ள ஒரு வாழ்க்கைப் பணியை விருத்திசெய்வதில் சரியான சமநிலை என்று ஒன்று உண்டா? மிகுந்த பலனுள்ள இலட்சியமாக நிரூபிக்கும் காரியம் குறித்து அனுபவம் என்ன காண்பிக்கிறது? (w88 8⁄15)