பெற்றோர்களே—உங்கள் பிள்ளையின் இருதயத்தை சிறுபிராயம் முதல் சென்றெட்டுங்கள்
“கர்த்தருக்கேற்ற [யெகோவாவுக்கேற்ற, NW] சிட்சையிலும் போதனையிலும் அவர்களை [பிள்ளைகளை] வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, இரண்டு சந்தர்ப்பங்களில், இயேசு, தாம் அந்த பட்டணத்தில் அநேக பாடுகளை அனுபவித்து கொல்லப்படுவார் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லியிருந்தார். (மாற்கு 8:31; 9:31) இயேசுவுக்கு விசேஷமாக அதிக இக்கட்டான இந்த சமயத்தின்போது, ஜனங்கள் “குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்” என்று பைபிள் விவரம் கூறுகிறது.—லூக்கா 18:15.
2 இதற்கு என்ன பிரதிபலிப்பு இருந்தது? சீஷர்கள் ஜனங்களை அதட்டி, அவர்களை அனுப்பிவிட முயன்றனர். சந்தேகமில்லாமல் அவ்வாறு செய்வதன் மூலம் அந்நேரத்தில் அவருக்கு அனாவசியமான தொந்தரவும் அழுத்தமும் இராதபடிக்கு தாங்கள் கவனித்துக்கொள்ளலாம் என்று நம்பியே சீஷர்கள் அவ்வாறு செய்தார்கள். ஆனால் இயேசு சீஷர்கள் பேரில் கோபித்து, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் . . . என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். (மாற்கு 10:13-16) ஆம், தம் மனதிலும் இருதயத்திலும் இருந்த பாரமான எல்லாவற்றிற்கு மத்தியிலும், இயேசு சிறு பிள்ளைகளுக்காக நேரத்தை எடுத்துக்கொண்டார்.
இதில் பெற்றோருக்கு என்ன பாடம்?
3 பெற்றோருக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது: உங்களுடைய மற்றெல்லா கடமைகளின் மத்தியிலும் அல்லது நீங்கள் எதிர்ப்படும் எல்லா துன்பங்கள் மத்தியிலும், பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கும் காரியத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒன்றாக செலவிடும் நேரம், உங்கள் பிள்ளைகளின் இருதயத்தை பாதுகாத்து, அவர்களை சரியான பாதையில் துவக்கிவைக்கும் ஆவிக்குரிய மதிப்புகளை அவர்களில் ஆழமாக பதியவைக்கச்செய்ய அனுமதிக்கும். (உபாகமம் 6:4-9; நீதிமொழிகள் 4:23-27) தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாளும் பாட்டியாகிய லோவிசாளும் அவனுடைய இருதயத்தை சென்றெட்டும் போதனையை கொடுக்க நேரத்தை செலவிட்டு, அவன் கடவுள் பக்தியுள்ள ஊழியனாக வளரும்படியாக அவனுடைய வாழ்க்கையை உருபடுத்தினார்கள்.—2 தீமோத்தேயு 1:5; 3:15.
4 கிறிஸ்தவ பெற்றோர் யெகோவா தேவன் தங்களுக்கு அளித்திருக்கும் குழந்தைகளை அலட்சியப்படுத்திட முடியாது. ஆம், குழந்தைகள் யெகோவாவால் வரும் சுதந்தரம். (சங்கீதம் 127:3) ஆகையால், தீமோத்தேயுவின் அம்மாவும், பாட்டியும் முன்மாதிரியாய் இருந்ததுபோல குழந்தைகளோடு நேரத்தை செலவழியுங்கள்—அவர்களுடைய இருதயத்தை சென்றெட்டுங்கள். உங்கள் பிள்ளைகளின் நடத்தையைப் பற்றி அவர்களிடம் பேசும்போதும் அவர்களை சிட்சிக்கும்போதும் மட்டுமே அவர்களோடு பேசுபவர்களாய் இராமல், நீங்கள் அவர்களோடு சாப்பிடவும், படிக்கவும், விளையாடவும் வேண்டும், மற்றும் இரவில் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதற்கு உதவுவதற்கும் நேரம் செலவழிக்க வேண்டும். உங்கள் குழந்தையோடு செலவழிக்கும் இந்த நேரமெல்லாம் அவசியமானது.
5 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாறிய மிகப் பிரசித்திப்பெற்ற வியாபாரி ஒருவர் இந்த உண்மையை மதித்துணர்ந்தார். “தன் குடும்பத்துடன் இருப்பதற்காக, ஜப்பானின் தேசீய ரயில் ஸ்தாபனத்தின் உயர் அதிகாரி ராஜனாமா செய்கிறார்” என்ற தலைப்பின் கீழ், பிப்ரவரி 10, 1986-ன் மாய்நிச்சி டெய்லி நியூஸ் இவ்வாறு அறிக்கைச் செய்தது: “ஜப்பானின் தேசீய ரயில் ஸ்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர், தன் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு பதிலாக, வேலையிலிருந்து ராஜினாமா செய்யத் தெரிந்துகொண்டார். தாமூரா கூறுகிறார்: ‘நிர்வாக மேல் அதிகாரியின் ஸ்தானத்தை எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் என் பிள்ளைகளுக்கு தகப்பனாக நான் மட்டுமே இருக்கிறேன்.’” பெற்றோராக நீங்கள் உங்கள் உத்தரவாதத்தை இவ்வளவு கருத்தோடு ஏற்று நிறைவேற்றுகிறீர்களா?
ஏன் இப்பொழுது விசேஷ முயற்சி தேவைப்படுகிறது
6 கடவுளுடைய வார்த்தை போதிக்கும் வழியில், “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” குழந்தைகளை வளர்ப்பது மனித சரித்திரத்தில் ஒருபோதும் இவ்வளவு கடினமானதாயில்லை. (எபேசியர் 6:4) இது ஏனென்றால், நாம் “கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” மேலும் சாத்தானும் அவனுடைய பேய்களும் தங்களுக்குக் கொஞ்சக் காலமேயிருக்கிறது என்பதை அறிந்து கோபமாக இருப்பதனால் அதிகமான துன்பத்தைக் கொண்டுவருகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 12:7-12) இப்படியாக, குழந்தைகளைக் கடவுளுடைய வழியில் வளர்க்க பெற்றோர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சாத்தானால் அதிகாரம் செலுத்தப்படும் அடையாளப்பூர்வமான இந்தக் “காற்றால்” நாசமாக்கப்படுகின்றன. சுயநலத்தின், கீழ்ப்படியாமையின் இந்தக் “காற்று,” அல்லது ஆவி நாம் சுவாசிக்கும் காற்று எப்படி ஊடுருவி பரவுகிறதோ அப்படியே பரவுகிறது.—எபேசியர் 2:2.
7 குறிப்பாக, டெலிவிஷன் “இந்த உலகத்தின் ஆவியை,” நச்சுத்தன்மை வாய்ந்த இந்தக் “காற்றை” வீட்டினுள் கொண்டுவருகிறது. (1 கொரிந்தியர் 2:12) உண்மையில் டெலிவிஷனில் வருபவை, ஒழுக்கக்கேடான பகுதியைக் கொண்ட பொழுதுபோக்கு அம்சங்களால் அதிகமாக செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. (ரோமர் 1:24-32) சொல்லர்த்தமான காற்றின் தூய்மைக்கேட்டினால் பாதிக்கப்படுவதுபோலவே, உங்கள் பிள்ளைகள் முக்கியமாக, கடவுள் பக்தியற்ற சிந்தனைகளாலும் ஆபாசமான ஒழுக்கக்கேட்டாலும் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அநேக பெற்றோர் என்ன செய்கிறார்கள்?
8 அவர்கள் பிள்ளையைக் கவனித்துக்கொள்வதற்கு டெலிவிஷனை உபயோகிக்கிறார்கள். “என் அன்பே இப்பொழுது அல்ல, நான் வேலையாயிருக்கிறேன். போய் டெலிவிஷன் பார்,” என்று அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள். “இவை அநேக அமெரிக்க வீடுகளில் அடிக்கடி பேசப்படும் வார்த்தைகள்” என்பதாக ஒரு பிரபலமான டெலிவிஷன் அறிவிப்பாளர் சொல்கிறார். இருப்பினும், டெலிவிஷனில் காண்பிக்கப்படுவது எதுவானாலும், அவற்றைப் பார்க்க குழந்தைகளை அனுப்புவதானது அவர்களைக் கட்டுப்பாடில்லாமல் விடுவதற்கு ஒப்பாகும். (நீதிமொழிகள் 29:15) வருந்தத்தக்க காரியம் என்னவென்றால், இது பெற்றோர் தங்கள் பொறுப்புகளை அலட்சியப்படுத்துவதை உட்படுத்துகிறது. இந்தச் செய்தி அறிவிப்பாளர் குழந்தைகளை வளர்ப்பது குறித்து சொல்கிறார்: “பெற்றோராக இருப்பது நேரத்தை உட்படுத்துகிறது, அது ஒரு பெரிய பொறுப்பு. இதை நிச்சயமாக டெலிவிஷன் பெட்டிக்கு ஒப்படைத்துவிட முடியாது.”
9 இருப்பினும், நாம் வாழும் காலத்தின் அழுத்தங்களின் காரணமாக, இயேசுவின் சீஷர்கள் செய்ததுபோல, நீங்கள் பிள்ளைகளை ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு அதிமுக்கியமாக கருதும் உங்கள் அலுவலைச் செய்ய உங்கள் மனம் சாயலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளைவிட அதிமுக்கியமானது எது? அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆபத்திலிருக்கிறது! 1986-ம் ஆண்டு சோவியத் யூனியனில் செர்நோபில் அணு விபத்து நடந்தபோது தூய்மைக்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக, குழந்தைகள் அந்தப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அதுபோலேவே நீங்கள் உங்கள் குழந்தைகளின் ஆவிக்குரிய நலத்தை பாதுகாக்கவேண்டுமானால், நீங்கள் டெலிவிஷன் மூலமாக அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வுலகின் நச்சுத்தன்மை வாய்ந்த “காற்றி”லிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.—நீதிமொழிகள் 13:20.
10 என்றாலும் நச்சுத்தன்மை வாய்ந்த “காற்று”க்கு வேறு ஊற்றுமூலங்களும் உண்டு, இவை ஒழுக்க தராதரங்களைக் கெடுக்கக்கூடும், மேலும் இளைய மனதை கடினப்படுத்திவிடும். வீட்டிற்கு அருகிலும் பள்ளியிலும் குழந்தைகளின் தகாத கூட்டுறவு பிஞ்சு மனதில் நடப்பட்ட பைபிள் சத்தியங்களை நெருக்கி அழித்துவிடும். (1 கொரிந்தியர் 15:33) “தேசத்துப் பெண்களைப் பார்க்கச் சென்ற” யாக்கோபின் இளைய மகள் தீனாள் ஓர் இளைஞனால் கற்பழிக்கப்பட்டாள். இவ்விஷயத்திலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். (ஆதியாகமம் 34:1, 2) முன்பிருந்ததைவிட மிகவும் தரக்குறைவான ஒழுக்க தராதரங்களுடைய இன்றைய உலகின் படுகுழியை தவிர்க்க குழந்தைகள் நன்கு போதிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
ஏன் குழந்தைப்பருவத்திலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும்?
11 பெற்றோரின் பயிற்றுவிப்பு எப்பொழுது தொடங்க வேண்டும்? தீமோத்தேயு “குழந்தைப் பருவத்திலிருந்தே” பயிற்றுவிப்பைப் பெற்றான் என்று பைபிள் சொல்லுகிறது. (2 தீமோத்தேயு 3:15) அக்கறைக்குரிய விதமாக, இவ்விடத்தில் ப்ரேபோஸ் என்ற கிரேக்க வார்த்தை லூக்கா 1:41, 44-ல் இருப்பது போல அடிக்கடி, பிறவாத குழந்தையை குறிப்பிட உபயோகிக்கப்படுகிறது. அங்கு சிசுவாக இருந்த யோவான் தன் தாயின் வயிற்றில் துள்ளுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ப்ரேபோஸ் என்ற பதம், மோசே பிறந்த சமயத்தில் எகிப்தில் புதிதாக பிறந்த, தங்கள் உயிர் ஆபத்திலிருந்த இஸ்ரவேல குழந்தைகளைக் குறிக்க உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 7:19, 20) தீமோத்தேயுவின் விஷயத்தில் இவ்வார்த்தை வெறும் ஒரு சிறு பிள்ளையை அல்ல, ஆனால் மிகவும் தெளிவாக ஒரு குழந்தையை அல்லது கைக்குழந்தையை குறிக்கிறது. தீமோத்தேயு குழந்தையாயிருந்தபோது, காரியங்களை ஞாபகத்தில் வைக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே பரிசுத்த எழுத்துக்களிலிருந்து போதிக்கப்பட்டான். என்ன நல்ல விளைவுகளை இது கொடுத்தது! (பிலிப்பியர் 2:19-22) இருப்பினும், புதிதாக பிறந்த குழந்தைகள் இவ்வளவு சீக்கிரமாக கொடுக்கப்படும் போதனையிலிருந்து நன்மையடைய முடியுமா?
12 “குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனின் பேரில் இப்பொழுதுள்ள ஒரு புதிய கருத்தே மனோதத்துவ துறையில் உள்ள ஆச்சரியமான முன்னேற்றங்களில் தலைசிறந்ததாயிருக்கிறது,” என்று 1984-ல் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராயிருந்த டாக்டர் எட்வர்ட் சிக்லர் அறிக்கையிடுகிறார். “புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிப்பதன் பிரகாரம் கர்ப்பத்திலிருக்கும் சிசுவால் பார்க்கவும், கேட்கவும், ருசிக்கவும்—மற்றும் உணர்ச்சிகளை ‘உணரவும்’ முடியும்,” என்று ஹெல்த் பத்திரிகை கூறுகிறது. தெளிவாகவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வெகு சீக்கிரமாகவே போதனையைக் கொடுக்க துவங்கிவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. (உபாகமம் 31:12) அவர்கள் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலுள்ள படங்களைக் காட்டியும், கதை சொல்லியும் போதிக்கத் தொடங்கலாம். பாலர்கல்வி மிகவும் தாமதமானது என்ற புத்தகத்தின் ஆசிரியர் மாசாரு இபுக்கா, “முதல் மூன்று ஆண்டுகளை, தீர்வுக்குரிய ஆண்டுகள்,” என சொல்கிறார். இது ஏனென்றால், பிஞ்சு மனது மிருதுவானது, தகவல்களை வெகு எளிதாக கிரகித்துக்கொள்ளும் திறமையுடையது. இது ஒரு குழந்தை விரைவாக ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதிலிருந்து தெளிவாகிறது. “குழந்தைகள் பிறந்து, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டு வந்த உடனேயே, பெற்றோர் அவர்களுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்!” என்று நியு யார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஆரம்பகால குழந்தை கல்வியின் பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்.
13 கானடாவிலுள்ள ஒரு தாய் தன் பிள்ளையின் கற்றுக்கொள்ளும் திறனைப் பற்றி எழுதுகிறாள்: “என்னுடைய நான்கரை வயது சிறுவன் ஷானுக்கு, என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து நான் ஒருநாள் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் ஓர் இடத்தில் சற்று நிறுத்தினபோது, அவன் பைபிள் கதைகள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டபடியே வார்த்தைக்கு வார்த்தை சொல்ல ஆரம்பித்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். . . . நான் மற்றொரு கதையை கொண்டு பரிசோதித்து பார்த்தேன், அவன் ஒவ்வொரு கதையையும் அவ்வாறே மனப்பாடம் செய்திருந்தான். . . . அவன் உண்மையில், முதல் 33 கதைகளை, கடினமான இடங்களின் பெயர்களையும் ஆட்களின் பெயர்களையும் உட்பட, வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்திருக்கிறான்.”a
14 சிறு குழந்தைகளுடைய கற்றுக்கொள்ளும் திறனை நன்கு அறிந்தவர்கள் குழந்தைகளின் இத்தகைய அருஞ்செயல்களைக் கண்டு ஆச்சரியப்படுவதில்லை. நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்குப் பதிலாக, குழந்தைகளுக்குக் கற்பித்தோமானால், இவ்வுலகம் ஐன்ஸ்டீன், ஷேக்ஸ்ஃபியர், பெத்தோவன் லியோனார்டோ டா வின்சி போன்ற அறிவில் பேறாற்றல் வாய்ந்தவர்களால் இவ்வுலகம் நிறைந்திருக்கும்” என்பதாக மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலை எட்டுவதற்கான ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியாகிய டாக்டர் கிலென் டாமன் என்பவர் கூறுகிறார். நிச்சயமாகவே, கிறிஸ்தவ பெற்றோரின் இலக்கு அறிவியல் பேறாற்றல் வாய்ந்தவர்களை உண்டு பண்ணவேண்டுமென்பதல்ல, ஆனால் பிள்ளைகள் கடவுளை சேவிப்பதிலிருந்து ஒருபோதும் விலகாமல் இருக்க அவர்களுடைய இருதயத்தை சென்றெட்ட வேண்டுமென்பதே அவர்களுடைய இலக்கு. (நீதிமொழிகள் 22:6) பள்ளிக்கூடத்தில் சந்திக்கக்கூடிய சோதனைகளை எதிர்ப்பட பிள்ளை ஆயத்தமாயிருக்கும்படி, பள்ளிக்குச் செல்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே இந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, பாலர்கல்வி அல்லது நாள்பொழுது பிள்ளையை கவனிக்கும் இடங்கள், பிறந்தநாட்கள், விடுமுறை தினங்கள் ஆகியவற்றின்போது பிள்ளைகளை மகிழ்விக்க கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ஆகவே, பிள்ளையானவன் யெகோவாவின் சாட்சிகள் ஏன் இவற்றில் பங்குகொள்வதில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும். அல்லது அவன் தன் பெற்றோரின் மதத்தை வெறுப்பவனாய் வளரக்கூடும்.
பிள்ளையின் இருதயத்தை எப்படி சென்றெட்டுவது
15 பெற்றோர் குழந்தைகளின் இருதயத்தை எட்டுவதற்கு பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் போன்ற வெளியீடுகள் யெகோவாவின் சாட்சிகளால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம், “பிறந்தநாள் கொண்டாடின இருவர்” என்ற அதிகாரத்தில் விருந்துகளைப் பற்றியும் “அவை எப்படி விளையாட்டாக இருக்கும்” என்பது பற்றியும் பேசுகிறது. எனினும் பைபிளில் இரண்டே இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யெகோவாவை வணங்காத புறமதத்தார் கொண்டாடிய பிறந்தநாள் விருந்துகள் பற்றியும், அந்த ஒவ்வொரு விருந்திலும் ‘ஒருவனின் தலை வெட்டப்பட்டது’ பற்றியும் அந்த அதிகாரம் விளக்குகிறது. (மாற்கு 6:17-29; ஆதியாகமம் 40:20-22) உங்கள் குழந்தையின் இருதயத்தை எட்ட நீங்கள் இந்தத் தகவலை எப்படி பயன்படுத்தலாம்?
16 பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மனதைக் கவரும் முறையை பின்வருமாறு சொல்வதன் மூலம் நீங்கள் உபயோகிக்கலாம்: “பைபிளில் இருக்கிற ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறது என்று நமக்குத் தெரியும்.” பிறகு கேளுங்கள்: “ஆகவே பிறந்தநாள் விருந்துகள் பற்றி கடவுள் நமக்கு என்ன சொல்லுகிறார் என்று நீ நினைக்கிறாய்?” இப்படியாக, உங்கள் குழந்தைகள் காரியங்களை நியாயமாக காரணங்களுடன் விவாதித்து, சரியான தீர்மானங்களை எடுக்கவும் உதவப்படுகிறார்கள். பெரிய போதகர் புத்தகம் தவிர, பெற்றோர் பயன்படுத்துவதற்கு என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் மற்றும் காவற்கோபுரம் பத்திரிகையில் 1986 ஜனவரி முதல் வரும் “இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்” என்ற தொடர் கட்டுரை போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ளவும் இந்தக் கட்டுரைகளைப் பயன்படுத்தி வருகிறீர்களா?
17 நீங்கள், உங்களுடைய பிள்ளைகளோடு, அவர்கள் பள்ளியில் எதிர்ப்படப்போகும் பிரச்னைகளையும், நிலைமைகளையும் குறித்து மீண்டும், மீண்டும் கலந்து பேசவேண்டும். நீங்களிருவரும் கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளை தெரிந்திருக்கட்டும். (ரோமர் 14:12) குழந்தையின் சிறிய நெஞ்சம் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பும்படிக்கு அவனுடன், யெகோவா நமக்குச் செய்திருக்கும் நல்ல காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். (அப்போஸ்தலர் 14:17) படிக்கும் சமயங்களை சந்தோஷமுள்ளதாக்குங்கள். குழந்தைகள் கதைகளை விரும்புவார்கள், ஆகவே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது உற்சாகமூட்டும் விதத்தில் அதைச் செய்ய முன்கூட்டியே தயாரித்து, குழந்தையின் இருதயத்தை எட்டுங்கள். இப்படிப்பட்ட சமயங்களுக்கான அற்புதமான வாய்ப்பை ஒழுங்காக எல்லாரும் சேர்ந்து சாப்பிடாததன் காரணமாக அநேக குடும்பங்கள் தவறவிடுகின்றனர். நீங்கள் குடும்பமாக சேர்ந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியில்லையென்றால் நீங்கள் நிலைமையை சரிசெய்யமுடியுமா?—அப்போஸ்தலர் 2:42, 46, 47-ஒப்பிடவும்.
18 பிள்ளையின் வயதிற்கேற்ப படிக்கும் சமயங்கள் சரிசெய்து கொள்ளப்படவேண்டும். ஒரு குழந்தையால் குறுகிய காலமே கவனம் செலுத்தமுடியுமாதலால், தினமும் பல தடவைகள் கொஞ்சம் நேரம் படியுங்கள். பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்து சிந்திக்கப்படும் காரியங்களைக் கூட்டுங்கள். உங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்க ஒழுங்கான நேரத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை எவ்வளவு அழுத்திக்கூறினும் மிகையாகாது. (ஆதியாகமம் 18:19; உபாகமம் 11:18-21) எழுபதுக்கு மேற்பட்ட வயதையுடைய ஒரு தகப்பன் தன்னுடைய மகனை வளர்ப்பதில் நல்ல முன்மாதிரியை வைத்தார், இப்பொழுது அவன் ஒரு கிறிஸ்தவ மூப்பனாக இருக்கிறான். அவர் பின்பற்றிய திட்டத்தை பல வருடங்களுக்கு முன்பு இவ்வாறு விளக்குகிறார்:
19 “எங்களுடைய மகன் ஒரு வயதாயிருக்கையில் படுக்கைக்குச் செல்லும்போது பைபிள் கதைகளை சொல்லத் துவங்கினேன், அவற்றை விரிவாக்கி, அவனுடைய மனதைக் கவரும் விதத்தில் அதை எடுத்துரைத்தேன். இரண்டு வயதாகையில் அவன் பேச துவங்கியபோது, படுக்கையண்டை முழங்காற்படியிட்டு ‘கர்த்தருடைய ஜெபத்தை’ ஒவ்வொரு வார்த்தையாக எனக்குப் பின் சொல்லும்படி செய்வதுண்டு. . . . அவன் மூன்று வயதுள்ளவனாயிருக்கையில் ஒழுங்காக அவனுடன் ஒரு வேதப்படிப்பை நடத்தினேன் . . . அவன் தன்னுடைய புத்தகத்தில் பார்த்து, வாய்விட்டு வார்த்தைகளை எனக்குப் பின் சொல்லுவான். இப்படியாக, அவன் வார்த்தைகளை உச்சரிக்கவும் பெரிய வார்த்தைகளையும்கூட சரியாக சொல்லவும் கற்றுக்கொண்டான். . . . பைபிள் சத்தியங்கள் அவனுடைய இருதயத்தில் ஆழமாக பதியவைக்க உதவுவதற்கு, மூன்று வயதாயிருக்கையில் அவன் சுலபமான பைபிள் வசனங்களை மனப்படம் செய்ய நான் கற்றுக்கொடுத்தேன். அவன் பாலர்பள்ளிக்குச் செல்லுமுன் முப்பது வசனங்களை அறிந்திருந்தான், கடந்த செப்டம்பர் மாதம் அவன் முதல் வகுப்பு துவங்கும்போது எழுபது வசனங்களை மனப்பாடம் செய்திருந்தான். . . . படுக்கைக்கு அவன் செல்வதற்கு முன்பு அவன் மனப்பாடம் செய்த சில வேதவசனங்களை சொல்ல வைப்பேன். அதே விதமாக, காலையில் எழுந்திருக்கையில், அன்றைய தினத்தின் வாழ்த்துதலோடுகூட அவன் சில வசனங்களை சொல்ல வைத்தேன்.”
20 பெற்றோரின் சரியான முன்மாதிரியும் முரண்பாடில்லாத சிட்சை பொருத்தப்படுவதும் அடங்கிய, தொடர்ந்து படிப்படியாக கற்பிக்கும் இத்தகைய திட்டம், உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் சரியான ஆரம்பத்தைக் கொடுக்கும், இதற்கு அவன் எப்பொழுதும் நன்றியுள்ளவனாயிருப்பான். (நீதிமொழிகள் 22:15; 23:13, 14) சிறு வயதுமுதல் வெளி ஊழியத்தில் பயிற்றுவிப்பது திட்டத்தின் இன்றியமையாத ஒரு பாகமாகும். அதில் அர்த்தமுள்ள ஒரு பங்கை கொண்டிருக்க உங்கள் குழந்தையை சரியாக தயாரித்து ஊழியத்தை ஒரு சந்தோஷமான அனுபவமாக்கிடுங்கள். மேலே குறிப்பிட்ட அந்தத் தகப்பன் தன்னுடைய மகனைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “வசனங்களை மேற்கோள்காட்டும் அவனுடைய திறன் அவனை வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் திறமையுள்ளவனாக இருக்கச் செய்கிறது, இதனால் அநேக வீட்டுக்காரர்கள் வியந்து, அவர்களால் அவன் அளிக்கும் பைபிள் பத்திரிகைகளை வாங்காமலிருக்க முடியவில்லை. இந்தக் கிறிஸ்தவ ஊழியத்தில் அவன் மூன்று வயது முதல் பங்கு கொள்கிறான், இப்பொழுது [6 வயதில்] பைபிள் பிரசுரங்களை அளிப்பதில் என் மனைவியைவிடவும் என்னைவிடவும் அதிக திறம்பட்டவனாக இருக்கிறான்.”—ஆங்கில விழித்தெழு!, ஜனவரி 22, 1965, பக்கங்கள் 3-4.
21 உண்மையாகவே, கிறிஸ்தவ பெற்றோர் அற்புதமான ஒரு சொத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிய அறிவையும் அதோடுகூட புதிய உலகத்தில் முடிவில்லா வாழ்வும், சமாதானமும், சந்தோஷமுமுள்ள ஒரு எதிர்பார்ப்பையும் கொடுப்பதாகும். (நீதிமொழிகள் 3:1-6, 13-18; 13:22) இவையெல்லாவற்றையும்விட, உங்கள் குழந்தையின் இருதயத்தில் அந்த மகத்தான எதிர்காலத்தில் நம்பிக்கையையும், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கட்டுங்கள். மெய் வணக்கத்தை அவர்களுக்கு இயற்கையான, சந்தோஷமான ஓர் அனுபவமாக்குங்கள். (1 தீமோத்தேயு 1:11) குழந்தைப் பருவத்திலேயே யெகோவாவின்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும் என்பதை மனதில் பதியவையுங்கள். ஒருபோதும், ஆம், ஒருபோதும் அவர்களோடு ஒழுங்காக படிக்கும் சமயங்களை அலட்சியப்படுத்தாதேயுங்கள்! இவற்றிற்கு உங்களுடைய முதல் முக்கியத்துவத்தைக் கொடுங்கள். உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதை திரும்பத் திரும்ப ஆராய்ந்து, அவற்றால் உங்கள் குழந்தையின் இருதயத்தை எவ்வாறு அடையலாம் என்பதைப் பாருங்கள். நீங்கள் எப்பொழுதும் வேலையாயிருக்கிறீர்கள், அழுத்தத்தின் கீழும் இருக்கிறீர்கள்; உங்களை இந்நிலையில் வைத்திருக்க சாத்தானும் அவனுடைய உலகமும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இயேசுவின் முன்மாதிரியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! உங்கள் பிள்ளைகளோடு ஒழுங்காக படிக்க முடியாதளவுக்கு அதிக வேலையாக இராதேயுங்கள்! (w88 8⁄1)
[அடிக்குறிப்புகள்]
a அவன் வாசிக்க கற்றுக்கொள்வதற்கு அதிக நாட்களுக்கு முன்பே வெறுமென புத்தகத்தின் பதிவு செய்யப்பட்ட டேப்புகளைக் கேட்பதன் மூலம் அந்தக் கதைகளைக் கற்றுக்கொண்டிருந்தான்.
நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்?
◻ பிள்ளைகளின் தேவைகளுக்கு பெற்றோர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று எந்த பைபிள் அத்தாட்சி காட்டுகிறது?
◻ பிள்ளைகளை பாதுகாக்க ஏன் இப்பொழுது பெற்றோரின் விசேஷ முயற்சிகள் தேவையாக இருக்கிறது?
◻ பிள்ளைகள் குழந்தை பருவம் முதற்கொண்டு பயிற்றுவிக்கப்படுவது ஏன் மிக முக்கியம்?
◻ பிள்ளையின் இருதயத்தை எட்டுவதற்கு பெற்றோருக்கு கொடுக்கப்படும் சில நடைமுறையான ஆலோசனைகள் என்ன?
◻ கிறிஸ்தவ பெற்றோர் எதை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது?
[கேள்விகள்]
1. குறிப்பாக இயேசுவின் வாழ்க்கையின் ஒரு இக்கட்டான சமயத்தில் என்ன ஒரு சம்பவம் நடந்தது?
2. (எ) சீஷர்கள் ஏன் ஜனங்களை அனுப்பிவிட முற்பட்டிருக்கக்கூடும்? (பி) அந்தச் சந்தர்ப்பத்திற்கு இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்?
3. இந்த நிகழ்ச்சியிலிருந்து பெற்றோர் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
4. பிள்ளைகள் எவ்வளவு அருமையானவர்கள், அவர்களை தாங்கள் மதித்துணருகிறார்கள் என்பதை பெற்றோர் எவ்வாறு காட்டவேண்டும்?
5. பெற்றோராக தன்னுடைய உத்தரவாதத்தை மதித்த ஒரு தகப்பனின் முன்மாதிரியை கொடுக்கவும்.
6. பிள்ளைகளை சரியான விதத்தில் வளர்ப்பது இன்று ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
7, 8. (எ) டெலிவிஷன் வீட்டிற்குள் எதைக் கொண்டுவரும்? அப்படியிருந்தும் பெற்றோரில் அநேகர் என்ன செய்கிறார்கள்? (பி) குழந்தையை கவனிப்பதற்கு டெலிவிஷனை பயன்படுத்துவது, ஏன் வருந்தத்தக்க விதத்தில் பெற்றோர் தங்கள் உத்தரவாதத்தை அலட்சியம் பண்ணுவதாக இருக்கிறது?
9. எந்த நச்சுப்பொருளிலிருந்து பிள்ளைகளுக்கு விசேஷமாக பாதுகாப்பு தேவையாக இருக்கிறது?
10. நச்சுத்தன்மை வாய்ந்த “காற்றின்” வேறு எந்த ஊற்றுமூலங்களும் பிள்ளைகளுக்கு ஆபத்தானவை? எந்த பைபிள் உதாரணம் இதை விளக்குகிறது?
11. (எ) பெற்றோர் கொடுக்கும் பயிற்றுவித்தல் எப்பொழுது துவங்க வேண்டும்? (பி) என்ன சிறந்த விளைவுகள் எதிர்பார்க்கப்படலாம்?
12. (எ) சிறு குழந்தைகள் எப்பொழுது காரியங்களை கிரகித்து விளங்கிக்கொள்ள துவங்கக்கூடும்? (பி) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய போதனையை எப்பொழுது, எப்படி கொடுக்கத் துவங்க வேண்டும்?
13. சிறு குழந்தைகள் கற்றுக்கொள்ள திறமையுடையவர்கள் என்பதை எது விளக்குகிறது?
14. (எ) சிறு குழந்தைகளின் சாதனைகளைக் குறித்து யார் ஆச்சரியப்படுவதில்லை? (பி) கிறிஸ்தவ பெற்றோரின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? (சி) பிள்ளைகள் எதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும், ஏன்?
15, 16. பிள்ளைகளின் இருதயத்தை சென்றெட்டுவதற்கு பெற்றோர் எதை உபயோகிக்கலாம்? இந்த ஏற்பாடுகள் திறம்பட்ட முறையில் எவ்வாறு பயன்படுத்தப்படக்கூடும்?
17. பெற்றோருக்கு இங்கே என்ன நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன?
18, 19. (எ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தலை எவ்வாறு அட்டவணையிட வேண்டும்? எதன் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறுவது மிகையாகாது? (பி) நவீன கால பெற்றோர் ஒருவரின் முன்மாதிரியின் என்ன அம்சங்கள் உங்கள் மனதைக் கவருகிறது? பெற்றோர் அவற்றை பின்பற்றினால் என்ன விளைவுகளைப் பெறலாம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
20. கற்பிக்கும் திட்டத்தில் எது சேர்க்கப்பட வேண்டும்? வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் ஒரு பிள்ளை எப்படி மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும்?
21. (எ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லக்கூடிய மிக மகத்தான பரிசு என்ன? (பி) பெற்றோருக்கு என்ன புத்திமதி கொடுக்கப்படுகிறது? சிறு பிள்ளைகளை உடைய எல்லா பெற்றோரும் எதை கொண்டிருக்க வேண்டும்?
[பக்கம் 12-ன் படம்]
பெற்றோர் வெகு சீக்கிரமாகவே போதனையைக் கொடுக்க துவங்கிவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது